எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, October 24, 2020

நவராத்திரி ஒன்பதாம் நாள்

சக்திகள் நால்வரைப் பார்த்தோம். இனி மற்றவர்கள்.


படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக தினமலர்

நாராயணி: இவளை வைஷ்ணவி என்றும் சொல்லுவார்கள். சங்கு, சக்கரங்களை ஏந்திய வண்ணம் முன்னிரு கரங்களால் அபய ஹஸ்தம் காட்டிப் பசுமை நிறத்தவளாய்ப் பரந்தாமனின் அனைத்து அம்சங்களுடனும் கருட வாஹனத்தில் காட்சி தருவாள். அனைவரையும் பாதுகாக்கும் இவளிடம் நலமும், வளமும் பெற வேண்டிக் கொள்ளலாம்.


படத்துக்கு நன்றி கௌமாரி

கௌமாரி: கந்தனின் அம்சமான இவள் அவன் பெயராலேயே கௌமாரி என அழைக்கப்படுகிறாள். கந்தனைப் போலவே மயில் வாஹனத்தில் ஜடாமகுடம் தரித்து நான்கு கரங்களுடன் சக்தி ஆயுதம், வஜ்ராயுதம் தாங்கிக் காட்சி தருவாள்.


படத்துக்கு நன்றி கூகிளார்

சாமுண்டி கிட்டத்தட்டக் காளி/காலியின் அம்சமான இவள் கரிய நிறத்தவள். சண்டனையும் முண்டனையும் அழிக்க அன்னையால் தோற்றுவிக்கப்பட்டவள். முக்கண் உடையவள். புலித்தோலை ஆடையாக அணிந்திருப்பாள்.கத்தி, சூலம், கபாலம் ஆகியவற்றை மூன்று கரங்களில் ஏந்தி ஒரு கையால் அபய ஹஸ்தம் காட்டுவாள். எத்தகைய கொடிய துன்பத்தையும் அழித்துப் போக்க வல்லவள்.

இன்றைய தினம் அம்பிகையை “சுபத்ரா” வாகப் பாவித்து வணங்க வேண்டும். இன்னும் சிலர் காமேஸ்வரியாகவும் வழிபடுவார்கள். 


காமேஸ்வரி படத்துக்கு நன்றி கூகிளார்

ஆயுதங்களால் ஆன கோலத்தைப் போட வேண்டும். வாசனை திரவியங்களாலும் ஆயுதக் கோலம் போடலாம். கோலமாவினாலும் போடலாம்.  பத்து வயதுப் பெண் குழந்தையை “சுபத்ரா”வாகப் பாவித்து அலங்கரித்து வழிபட்டுப் பாத பூஜை செய்து வெண்ணிற மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். மல்லிகை, நந்தியாவட்டை ஆகிய பூக்கள் உகந்தவை. வாசனையை அள்ளித்தரும் மரிக்கொழுந்தும், துளசியும் கூட இன்றைய தினத்துக்கு உகந்தவை. குழந்தைக்குப் பிடித்தமான ஆடை, ஆபரணங்களை வாங்கிக் கொடுக்கலாம். லலிதா நவரத்ன மாலை, சரஸ்வதி துதி ஆகியவற்றால் துதித்து லக்ஷ்மி அஷ்டோத்திரத்தால் அர்ச்சனை செய்யலாம். இன்றைய தினம் புத்தகங்கள், ஆயுதங்கள் தவிர இசைக்கருவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மோட்டார் கார், சைகிள், இரு சக்கர வாஹனங்கள் அனைத்தும் வழிபாடு செய்யப்படும். சிலர் மறுநாள் விஜயதசமி அன்றும் செய்வார்கள். முக்கியமாக இன்றே சரஸ்வதிக்கு உரிய நாளாகக் கருதி சரஸ்வதி பூஜை செய்வதால், புத்தகம், படிப்பு, எழுத்து சம்பந்தப்பட்ட பொருட்களுக்குச் சந்தனம், குங்குமம் இட்டுப் பட்டுத்துணி சுற்றிப் பூஜையில் வைத்து மறுநாள் விஜயதசமி அன்று காலை எடுத்து நல்ல நேரம் பார்த்துக் கற்பூர ஆரத்தி காட்டிப் படிப்பார்கள். ஒன்பதாம் நாளான சரஸ்வதி பூஜையன்று காலை நிவேதனத்தில் பருப்புப் பாயசம், அல்லது தேங்காய்ப் பாயசம், சுகியம், அப்பம், உளுந்து வடை ஆகியன முக்கியமானவை. சிலர் எள்ளுருண்டையும் பண்ணுவார்கள். மாலைக் கறுப்புக் கொண்டைக்கடலைச் சுண்டல்.

பாயச வகைகள் முன்னர் எழுதி இருக்கேன். அவற்றில் உள்ளபடி ஏதேனும் ஒரு பாயசம் பண்ணலாம். 

சுகியம்  இதற்கு அரிசி மாவைப் பொடியாகத் தயார் செய்து கொள்ள வேண்டும். ஒரு சின்னக் கிண்ணம் அரிசி மாவிற்கு ஒரு கிண்ணம் உளுத்தம்பருப்பு. களைந்து ஊற வைத்துக் கொடகொடவென இட்லிக்கு அரைப்பது போல் அரைத்துக் கொண்டு அரிசி மாவைப் போட்டு உப்புச் சேர்த்து அரை மணி நேரம் வைத்து விடவும்.

தேங்காய்த் துருவலில் வெல்லம் சேர்த்துக் கிளறி ஏலப்பொடி சேர்த்துத் தேங்காய்ப் பூரணம் பண்ணவும். பூரணத்தைத் தேவைக்கு ஏற்பக் குறைந்தது ஒரு பெரிய நெல்லிக்காய் அளவுக்காவது உருட்டி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்துக் கொண்டு உருட்டிய பூரணத்தைத் தயாராக இருக்கும் மாவில் போட்டு நாலாபக்கமும் மாவு பூசினாற்போல் இருக்கும்படி செய்து அதை எடுத்துக் கொதிக்கும் எண்ணெயில் போடவும். எண்ணெய் ரொம்பக் காய்ந்தால் சீராக வேகாது என்பதால் எண்ணெய் காய்ந்ததுமே அடுப்பைத் தணித்துக் கொள்ளவும். இம்மாதிரி எல்லாவற்றையும் போட்டு எடுக்கவும்.

அப்பம்: பச்சரிசி+கடலைப்பருப்பு ஒரு மேஜைக்கரண்டி+கோதுமை ரவை ஒரு மேஜைக்கரண்டி. கழுவி ஊற வைக்கவும். மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும். அரைக்கையிலேயே வெல்லத்தூள், ஏலக்காய்ப்பொடி சேர்க்கலாம். பின்னர் எடுத்து ஒரு பாத்திரத்தில் மாற்றி விட்டு நன்கு கனிந்த வாழைப்பழம் இருந்தால் அதைப் போட்டு மாவை நன்கு கலக்கவும். பின்னர் அப்பக்காரையில் எண்ணெய் விட்டு அதை அடுப்பில் வைத்துச் சூடு பண்ணி ஒவ்வொரு குழியிலும் மாவை விட்டு இருபக்கமும் வேகவிட்டு எடுக்க வேண்டும். அப்பக்காரை இல்லை எனில் மாவை சுகியம் செய்த எண்ணெயிலேயே போட்டு எடுக்கலாம். ஒரு சின்னக்குழிக்கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் ஒவ்வொன்றாகப் போட்டு இரு பக்கமும் சிவக்க வெந்ததும் எடுக்கலாம்.

உளுந்து வடை: கால்கிலோ உளுத்தம்பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு, இரண்டு தேக்கரண்டி கடலைப்பருப்பு ஆகியவற்றைக் கழுவி ஊற வைக்கவும். பொதுவாகப் பண்டிகைகளுக்கு முப்பருப்பு வடை தான் பண்ணுவார்கள். தனி உளுந்து வடை பண்ணுவதில்லை. ஸ்ராத்தம் போன்ற அபர காரியங்களிலேயே தனி உளுந்து வடை பண்ணுவார்கள். பருப்புக்களை ஊற வைத்துக்கொண்டு பச்சை மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் அவரவர் காரத்துக்கு ஏற்பச் சேர்த்துக் கொண்டு உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொண்டு வடையாகத் தட்டவேண்டும். இந்தக் காரம் வேண்டாம் மிளகு காரம் தான் வேண்டுமெனில் முதலில் உளுந்தை நன்கு அரைத்த பின்னர் மிளகு பொடி, உப்புச் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். இந்த மாவில் பெருங்காயம், கருகப்பிலை சேர்க்க வேண்டாம். மிளகாய் போட்டு அரைத்த மாவில் பெருங்காயம், கருகப்பிலை சேர்க்கலாம். எண்ணெயைக் காய வைத்துக் கொண்டு ஒரு வாழை இலையில் மாவை உருட்டிப் போட்டுத் தட்டை போலத் தட்டி நடுவில் ஓட்டை போட்டுக் கொண்டு எண்ணெயில் போட்டு இருபக்கம் சிவக்க வேகவிட்டு எடுக்க வேண்டும்.

கறுப்புக் கொண்டைக்கடலைச் சுண்டல்: கொண்டைக்கடலையை முதல்நாளே ஊற வைக்க வேண்டும் மறுநாள் நாலைந்து முறை கழுவி விட்டுக் குக்கரிலே உப்புச் சேர்த்துக் குழைய வேகவிடவும். பின்னர் வடிகட்டி வைக்கவும். ஓர் வாணலியில் நல்லெண்ணெய் விட்டுக் கொண்டு காயந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், பெருங்காயப் பொடி, கருகப்பிலை போட்டுப் பொரித்துக் கொண்டு வெந்த கொண்டைக் கடலையைப் போட்டுக் கிளறவும். இதற்குக் கட்டாயமாய் மி.வத்தல்+கொத்துமல்லி வறுத்து அரைத்த பொடியைச் சேர்க்கவும். தேங்காய்த் துருவல் போடவும். அல்லது தேங்காயைக் கீறிச் சேர்க்கவும். நன்கு கலந்ததும் சுண்டல் விநியோகத்துக்குத் தயார்.


6 comments:

  1. சக்தியின் வடிவங்களையும், பெருமைகளையும் தொடர்ந்து கண்டு மகிழ்ந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவர் ஐயா. இந்தப் பதிவை யாரும் பார்க்கவில்லை. உடனே அடுத்த நாள் பதிவு வந்து விட்டதாலோ?

      Delete
  2. ஒவ்வொரு பதிவிலும் சுண்டல் விபரங்களையும் சொன்னது சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி, தொடர்ந்து எல்லாப் பதிவுகளிலும் கருத்துச் சொன்னதுக்கு நன்றி.

      Delete
  3. பத்து நாளும் பிரசாதம் வைக்காதவர்களும் ஒன்பதாம் நாள் பலவித பிரசாதங்களும் செய்து படைப்பது இங்கு வழக்கம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, எங்கள் வீடுகளில் கடைசி மூன்று நாட்கள் செய்வார்கள். எப்படியோ வழிபாடு இல்லாமல் இருக்காது.

      Delete