வால்மீகி ராமாயணத்தில் விஸ்வாமித்திர முனிவர் ராம, லட்சுமணர்களுக்குச் சொல்லுவதாய் அமைந்த பல புராணங்களில் இந்த ஸ்கந்த புராணமும் ஒன்று. இதைக் குறித்து விஸ்வாமித்திரர் ராமரிடம் மிதிலைக்குச் செல்லும் வழியில் கூறியதாக வருகின்றது. கங்கை நதியின் வரலாற்றை ராமர் ஆவலுடன் கேட்க அதற்குப் பதிலளிக்கும் விதமாய் விஸ்வாமித்திரர் கூறுவதில் ஸ்கந்த புராணம், அல்லது குமார சம்பவம் அடங்குகின்றது. கங்கையும், உமையும் மலையரசன் ஆன இமவானின் மகள்கள் ஆவார்கள். இதில் மூத்தவள் ஆன கங்கையை தேவலோகத்தில் தேவர்களின் நலனுக்காகவும், மூவுலகுக்குத் தொண்டுகள் செய்யவும் கங்கையை இமவான் தேவர்களுக்கு அளிக்க அவள் நதி உருவில் தேவலோகத்தை அடைகின்றாள்.
உமையவளோ பலவிதமாய்க் கடுந்தவம் புரிந்து ருத்ரனை மணக்கின்றாள். அந்தச் சமயம் அசுரர்களின் தொல்லை கட்டுக்கடங்காமல் போகவே ஈசன் தன் நெற்றிக்கண்ணில் இருந்தும், மற்ற கண்களில் இருந்தும் ஆறு அக்னிப் பொறிகளை மிக்க வீர்யத்துடன் உண்டாக்க, அதன் வெம்மை தாங்காமல் உமையவள் பதறி ஓட, அதைத் தாங்க கங்கை முன்வந்தாள். எனினும் அவளாலும் அந்த வெம்மையைத் தாங்க முடியாமல் போகவே அவள் அதை மிகுந்த கஷ்டத்தோடு தாங்கிக் கொண்டு வந்து இமயமலை அடிவாரத்தில் பொய்கை ஒன்றில் விட, அந்த அக்னிப்பொறிகளில் இருந்து தோன்றினான் சிவகுமாரன். அந்தக் குமாரனை வளர்க்கும் பொறுப்பைக் கார்த்திகைப் பெண்களிடம் தேவர்கள் ஒப்படைக்க, குமாரனும் கார்த்திகப் பெண்களால் வளர்க்கப் படுகின்றான்.
ஆறு பெண்களால் வளர்க்கப் பட்டதால் ஆறு முகங்களை உடையவன் ஆன அவன் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டதால் கார்த்திகேயன் என்ற பெயரையும் பெற்றான். ஆறுமுகங்கள் உள்ள அவன் ஷண்முகன் எனவும் அழைக்கப் பட்டான். குழந்தையாக இருந்த அவனைக் கண்ட உமையவள் ஆவலுடன் ஆறு குழந்தைகளையும் ஒருசேர எடுத்து அணைக்க, ஒன்று திரட்டப் பட்டதாலும், ஈசனின் வீரம் முழுதும் கலந்து பிறந்த காரணத்தாலும் ஸ்கந்தன் எனவும் அழைக்கப் பட்டான்.
இந்தக் குமாரனின் ஆறுமுகங்களும் ஒவ்வொரு யோகவடிவைக் குறிப்பிடக் கூடியது. மூலாதாரத்தில் இருந்து ஸஹஸ்ராரம் வரை உள்ள ஒவ்வொரு யோகநிலைக்கும் இவனே நம்மை வழிநடத்திச் செல்கின்றான். அன்னைக்கு நவராத்திரி, சிவனுக்கு ஒரு ராத்திரியான சிவராத்திரி, சிவகுமாரனுக்கோ ஆறு நாட்கள் விரதம் அனுஷ்டிக்கப் படுகின்றது.
ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் இருந்து ஆரம்பித்து சஷ்டி வரையில் உள்ள ஆறு நாட்களும் கந்தனுக்கு உரிய நாட்களாய்க் கருதப் பட்டு விரதம் மிகத் தூய்மையுடனும், ஒருமித்த மனத்துடனும் கடைப்பிடிக்கப் படுகின்றது. ஆறு முகங்களை உடைய இவனுக்கு உரிய நாளும் ஆறாவது நாளான சஷ்டியாகும். முருகன் தமிழ்க்கடவுள் என்றும் சொல்லப் படுகின்றான். என்றாலும் முதல் காவியம் என்று சொல்லப் படும் வால்மீகி ராமாயணத்திலேயே இவன் கதை குறிப்பிடப் பட்டிருக்கின்றது. தேவர்களுக்கு உதவியாக இவன் போர் புரிந்த காரணத்தால் தேவ சேனாதிபதி எனவும் அழைக்கப் படுகின்றான். இவனுக்கு உரிய படைவீடுகளும் ஆறு. "வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்!" என்கின்றார் பாரதியார். வீரம் என்றால் எப்படிப் பட்ட வீரம்??
பகைவனைக் கொன்று அழிக்கும் வீரம் அல்ல இது. பகைவனை மாற்றும் வீரம். பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்பதற்கொப்ப தன் அவதாரத்தின் நோக்கமே இந்த பத்மாசுரனை அழிப்பதே என்று உணர்ந்து அவனை அழிக்காமல் அவனின் ஆணவத்தை மட்டுமே அழித்தான் கந்தன். கருணைக்கடல் அவன். ஆறுமுகங்களும், பதினெட்டுக் கண்களால் அருளைப் பொழிகின்றன. தொல்காப்பியத்தில் தெய்வ வழிபாடு என்னும் தலைப்பில் கீழே உள்ளவை காணப்படுகின்றன. "சேயோன்" என இவனைக் குறிப்பிட்டுப் பாடப் பட்டிருக்கின்றது.
தொல்காப்பியமும் இறைநெறியும் என்னும் தலைப்பில்
தொல்காப்பியத்தில்,
மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை யுலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே
என ஒவ்வொரு நிலத்தையும் கருப்பொருளுள் ஒன்றாகிய தெய்வத்தொடு இணைத்துக் கூறக் காணலாம். பால்வரை தெய்வம், வழிபடு தெய்வம் என்பவற்றையும் தொல்காப்பியம் குறிக்கின்றது. இங்கே சேயோன் எனக் குறிப்பிட்டிருப்பது முருகனையே குறிக்கும் என்கின்றனர் ஆன்றோர்.
இந்தப் பத்மாசுரன் என்னும் சூரபத்மனே கந்தனின் அவதாரத்துக்குப் பலவகையிலும் காரணம். இவன் தான் முன் பிறவியில் தட்சனாக இருந்து, சிவனை மாப்பிள்ளையாகப் பெற்றும் அவரை அவமதித்தவன். இவனுடைய யாக குண்டத்திலேயே தாட்சாயணி ஆகிய சக்தி தன் உடலை ஆகுதி ஆக்குகின்றாள். இந்த தட்சனை அழிக்க ஈசன் வீரபத்திரரை ஏவ வீரபத்திரரும் தட்சனை அழிக்கின்றார். என்றாலும் இன்னொரு பிறவி எடுத்து ஈசனை அழிக்கவேண்டும் என்று காச்யபருக்கும், அதிதிக்கும் மகனாய்ப் பிறக்கின்றான் தட்சன். பத்மாசுரன் என்ற பெயருடன் வளர்ந்து வருகின்றான். இவனுக்கு மூன்று சகோதரர்கள். கஜமுகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசுரன் ஆகிய மூவருடன் சேர்ந்து பத்மாசுரன் செய்த அக்கிரமங்களுக்கு அளவே இல்லை.
இவை சுமார் பனிரண்டு வருடங்கள் முன்னர் கந்த சஷ்டியை ஒட்டி எழுதிய பதிவுகள். இந்த வருட சஷ்டியை ஒட்டி அவற்றை மீள் பதிவாய்க் கொடுக்கிறேன்.
படங்களுக்கு நன்றி கூகிளார்
தொடரும்.
கந்தசஷ்டி பகிர்வை தொடர்கிறேன் நன்றி.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Deleteஉங்களுக்கு சஷ்டி விரதம் உண்டா?
ReplyDeleteமீள் பதிவைப் படித்தேன். நிறைய உழைத்து எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்
நன்றி நெல்லைத் தமிழரே! கந்த சஷ்டி விரதம்னு எல்லாம் இருந்தது இல்லை. ஆனால் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தேன். கிருத்திகை விரதம் இருந்தேன். ஒரு சமயம் செவ்வாய்க்கிழமை விரதம், கிருத்திகை விரதம் இரண்டும் அடுத்தடுத்து வர உடம்பு முடியாமல் போச்சு. மருத்துவர் விரதம் இருக்கக் கூடாதுனு சொல்லிட்டார். என்னோட விரதம் உப்பில்லாமல் சாப்பிடுவது. :)))) இப்போ விரதம்னு எல்லாம் இல்லை. என்றாலும் கூடியவரை முருகனை நினைத்துக் கொண்டு உணவு எடுத்துக் கொள்ளலாம் என எண்ணம்.
Deleteமிக நன்றி கீதாமா.
ReplyDeleteஐப்பசி விசாகம் எங்க பெரிய பையன் நக்ஷத்திரம்.
அவனும் தீபாவளி அமாவாசை கடந்து பிரதமையில்
பிறந்தததால்,
திருப்பரங்குன்றம் கோவில் அழைத்துக் கொண்டு சென்றோம்.
உங்கள் பதிவு படிக்கப்
படிக்க இனிமை. நல்ல வழியில் உலகக் கொண்டு போக முருகன் துணை.
நன்றி ரேவதி. எங்க பையர் தீபாவளி அன்றே பிறந்தார்.
Deleteநெல்லை சொல்லி இருப்பதுபோல் அருமையான விவரங்கள். விவரங்கள் தேடித்தர உங்களுக்குத் சொல்லியா தரவேண்டும்? "முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே..."
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்.
Deleteஇமவான் மகள் என்று சொன்னதும் வரமணியின் பாடல் ஒன்றும் நினைவுக்கு வருகிறது... எனையாளும் நாயகியும் இவள் மகமாயி...
ReplyDelete-----------------------------------------------------
--------------------------------------------------
உமையவள் அவளே... இமவான் மகளே...
ஶ்ரீராம், வீரமணி தானே? இங்கே வரமணி எனப் பதிவாகி உள்ளது?
Deleteஎப்போதும் போல் முருகன் அருளால் ஸ்ரீ கந்தபுராணம் படிக்க ஆரம்பித்து விட்டேன் நேற்று .
ReplyDeleteஆறு நாளில் படித்து நிறைவு செய்ய இறைவன் அருள வேண்டும்.
நேற்று என் மாமனார் 1951ல் கோவை இரத்தினவிநாயகர் திருக்கோயிலில் கந்தர்சஷ்டி விழாவில் கந்தபுரணத் தொடர்சொற்பொழிவு ஆற்றியதை தன் முகநூலில் பகிர்ந்தார்கள் சார்.
நீங்கள் மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள் .
ஈசன் திருமுகத்தின் நெற்றிக் கண்களினின்றும் பேரொளி பிழம்பான அருட்சுடர்களை தோன்ற செய்தார்.
வாயுதேவனுக்கும் , அக்னித் தேவனுக்கும் அருட்சுடர்களை கங்கையில் கொண்டு சேர்க்க வல்லமையை கொடுத்தார் ஈசன். கங்கைக்கு அக்னிபொறிகளை தாங்கி சரவணப் பொய்கையில் கொண்டு சேர்க்க அருளினார் என்று கச்சியப்பர் சொன்னதை படிக்கும் போது அவன் அருள் இருந்தால் எல்லாம் நடக்கும் என்ற எண்ணம் வரும் எல்லோருக்கும்.
கந்தசஷ்டி விரதம் , மாத சஷ்டிகள் விரதம் இருந்தோம் இப்போது இல்லை. சூரசம்ஹாரம் மட்டும் இருக்கிறேன்
இன்று சோமாவார விரதம் அந்த விரதம் சிறு வயதிலிருந்து இருப்பதால் அது மட்டும் கடைபிடிக்கிறேன். அதுவும் இறையருளால் நடக்க வேண்டும்.
பதிவும், படங்களும் அருமை.
உங்கள் பதிவை தொடர்கிறேன்.
வாங்க கோமதி, உங்கள் வரவை எதிர்பார்த்தேன். மிக்க நன்றி. விரிவான கருத்துரைக்கு! நானும் முன்னர் சிறு வயதில் சஷ்டி விரதம் எல்லாம் இருந்திருக்கேன். செவ்வாய்க்கிழமை உப்புச் சேர்க்காமல் விரதம் இருந்தேன். இப்போ எதுவும் இல்லை. பதிவைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅருமையான பதிவு. படிக்க படிக்க மனது பக்தி பரவாசமாகிறது. ஸ்கந்தன் வரலாற்றை இவ்வளவு விரிவாக படிக்க நாங்களும் தவம் செய்திருக்க வேண்டும். நீங்கள் மிகவும் அழகாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
பத்மாஸுரனை அழிப்பது அவன் நோக்கமல்ல..! அவனுள் இருக்கும் அகந்தை என்ற அசுரனை அழித்து அவனுக்கு மேலும் புகழை தந்திடவே கந்தன் அவதரித்தான். ஆகா... எத்தனை தத்துவம் இதனுள் அடங்கியுள்ளது. அவன் கருணையை நினைத்து மெய்சிலிர்ப்பு உண்டாகிறது. மானிடர்களின் மனதில் இருக்கும் "தான்" என்ற அகங்காரத்தையும் அவன் புகழ் பாடப்பாட அவன் திருநாமம் என்ற வேல் கொண்டு அதை அவன் களைய வேண்டும். பதிவை மிகவும் ரசித்தேன் சகோதரி. அடுத்ததையும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, உங்கள் விரிவான கருத்துரைக்கூ நன்றி. ஆம் கந்தனின் சம்ஹாரம் அழிப்பது அல்ல. அதில் இருந்து ஒரு நல்லதை உருவாக்குவதே ஆகும். வேறே வதங்களில் எல்லாம் அந்த அசுரர்களே அழிந்திருப்பார்கள். இங்கே கந்தனோ எனில் அதிலும் ஓர் புதுமையைக் கடைப்பிடிக்கிறான்.
Deleteகந்தசஷ்டி படித்து மகிழ்ந்தேன்.
ReplyDelete