படத்துக்கு நன்றி கூகிளார்!
கந்த சஷ்டி கவசம் விமரிசனத்துக்கு ஆளானபோதே பலரும் பிராமணர்களைத் தான் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தனர். பிராமணர்கள் முருகனைக் கும்பிடுவதில்லை என்றும், முருகன் என்று பெயர் வைக்க மாட்டார்கள் எனவும், குலதெய்வமாக முருகனைப் போற்ற மாட்டார்கள் எனவும் சொன்னார்கள். இதற்கெல்லாம் அப்போவே பதில் சொன்னாலும் மீண்டும் இந்தக் குற்றச்சாட்டை இப்போச் சொல்லி இருப்பதும் ஒரு முருகன் தான். பிஜேபி கட்சிக்காரரான முருகன் ரத யாத்திரை செய்கிறார் அல்லவா? அப்போச் சொல்லி இருக்கார் எனக் கேள்விப் பட்டேன். ஒரு சிலர் இதைக் குறித்து எழுதி இருப்பதையும் பார்த்தேன். மற்றபடி தினசரிகளில் வரவில்லை என்றே நினைக்கிறேன். இதற்கெல்லாம் பதில் சொல்லணும்னு கட்டாயம் இல்லை தான். ஆனாலும் முருகனைக் கும்பிடுபவர்கள் பலருக்கும் அவனைப் போற்றிப் பாடிய பல பிராமணர்களைத் தெரியவில்லை. இது பிராமணர்களுக்காக வக்காலத்து வாங்கும் பதிவல்ல. தெரிந்த உண்மையைச் சுட்டிக் காட்டவே இந்தப் பதிவு.
திருமுருகாற்றுப்படை இயற்றிய நக்கீரர் ஓர் பிராமணரே. திருப்புகழை எழுதிய அருணகிரிநாதர் ஓர் அந்தணர் எனில் அதைப் பரப்பிய வள்ளிமலை ஸ்வாமிகளும் ஓர் பிராமணரே. திருப்புகழ்ப்பாடல்கள் உலகம் முழுதும் பரவப் பெருமளவு பாடுபட்டவர் குருஜி திரு ராகவன் என்னும் டெல்லியைச் சேர்ந்த பிராமணரே. உள்ளம் உருகுதையா என்று பாடகர் திரு டி.எம்.எஸ்ஸால் பிரபலப்படுத்தப்பட்ட முருகனைக் குறித்த பாடலை உண்மையில் எழுதியவர் தன்னை "ஆண்டவன் பிச்சி/பிச்சை" என அழைத்துக்கொண்ட பிராமணப் பெண்மணியான மரகதவல்லி அம்மாள். இவரின் பாடல்களைப் பிரபலமாக்கியவர் "திருப்புகழ் மணி" என அந்நாட்களில் அழைக்கப்பட்ட பெரியவர் ஆவார். இப்படி நிறைய பிராமணர்கள் முருகன் பால் வசப்பட்டு அவனைத் தொழுது கொண்டு இருந்திருக்கிறார்கள். இனி குலதெய்வம் முருகன் இருப்பானா என்னும் கேள்விக்குப் பதில்.
என் தாத்தாவும் (அம்மாவின் அப்பா) அந்தக் காலத்தில் சேதுபதி ராஜாவின் திவானாகவும் இருந்த திரு பி.எஸ். சுப்ரமணியம் அவர்களின் குலதெய்வம் அங்கேயே பரமக்குடிக்கும், தென்னவராயன் புதுக்கோட்டை எனப்படும் ஊருக்கும் அருகிலுள்ள ஓர் முருகன் தலம் தான். தாத்தா தினம் வேல் வைத்து வழிபாடுகள் நியம, நிஷ்டைகளோடு செய்து விரதம் இருந்து ஒரே வேளை உணவு உண்டு வாழ்ந்தவர். வேல் வைத்து பூஜை செய்து வந்ததால் அதிகமான ஆசாரங்களைக் கடைப்பிடிப்பார். கிட்டத்தட்ட 1969 ஆம் வருஷம் வரை இந்த வேல் பூஜையைத் தொடர்ந்து செய்துவந்தார். அப்போது என் பெரிய மாமா திடீரென இறக்கவும் ஏற்பட்ட புத்ரசோகத்தில் படுத்த படுக்கையாகி வேல் பூஜை நின்றது. மற்ற மாமாக்கள் தொடரவில்லை. ஆனால் பிற்காலத்தில் அவர்களுக்கே முருகன் வேறு உருவில் வந்து சொல்லி எல்லா மாமாக்களும் வேல் பூஜையை இப்போது தனித்தனியாகத் தொடர்ந்திருக்கிறார்கள். மாமாக்களின் பிள்ளைகளும் அந்த வழியிலேயே தொடர்கிறார்கள். எல்லோர் வீட்டிலும் பூஜை அறையில் வேல் உண்டு. குலதெய்வமும் அந்த முருகன் தான்.
எங்க பெண் வீட்டிலும் அவங்களுக்கு வைத்தீஸ்வரன் கோயில் முத்துக்குமார ஸ்வாமி தான் குலதெய்வம். மாவிளக்குப் போடுவதும் அவனுக்கே! குழந்தைக்கு முதல் முடி எடுப்பதும் அவனுக்கே. இம்மாதிரிப் பல பிராமணர்கள் வீடுகளில் முருகன் குல தெய்வமாக இருந்து வருகிறான். பலருக்கும் இஷ்ட தெய்வமும் அவனே. என்னுடைய ஒரு மாமாவின் மைத்துனருக்குப் பெயர் முருகன் என்பதே! அவருக்குக் கிட்டத்தட்ட இப்போது 70,72 வயது இருக்கலாம். அந்தக் காலத்திலேயே இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள். இது போல் பல உறவினர்கள் வீடுகளிலும் முருகன் குல தெய்வமாக இருந்தால் பிள்ளைக்கு முருகன் எனவும் பெண்ணுக்கு வள்ளி எனவும் பெயர் வைப்பார்கள். செந்தில் என்றும் சிலர் வீடுகளில் மகனுக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். ஆகவே முருகன் என்னமோ பிராமணர்களுக்குச் சொந்தம் இல்லை என்று சொல்லுபவர்கள் விபரம் தெரியாதவர்கள் என்றே சொல்வேன்.
முருகனைப் பற்றிப் பல பாடல்கள் பாடிய "பெண்"களூர் ரமணி அம்மாள் ஓர் பிராமணப் பெண்மணியே! அந்தக் காலத்தில் மடிசார் கட்டிக் கொண்டு மேடைகளில் அவர் பாடியது மிகப் பிரபலமான ஒன்று. இன்னும் சொல்லப் போனால் பல வைணவர்களுக்கும் முருகன் இஷ்ட தெய்வம். மாமனை வணங்குபவர்கள் மருமகனை வணங்காமல் இருப்பார்களா? முருகன் எல்லோருக்கும் பொதுவானவன். நான் எங்கே சென்றாலும் எனக்கு வழித்துணை கந்த சஷ்டி கவசமும், "காக்க, காக்க, கனகவேல் காக்க!" என்னும் வரிகளும் தான்! அன்றும், இன்றும் என்றும் காத்து வருவது அந்த வேல் தான்!
ஹா... ஹா... ஹா... ஹா...
ReplyDeleteநன்றி திரு தனபாலன்.
Deleteஹா,,, ஹா,,, ஹா,,, ஹா,,,
ReplyDeleteமீண்டும் நன்றி.
Delete// எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே! //
ReplyDeleteநூல் போட்டவரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
மிக்க நன்றி. வணங்கிக்கிறேன். _/\_
Deleteஅறுபத்து மூவருள் ஒருவரின் திருப்பெயர் முருக நாயனார்.. அவர் அந்தணர்...
ReplyDeleteஅபிராமி அந்தாதி பாடியவர்
சுப்ரமண்ய பட்டர்...
ஆமாம், துரை, நினைவு இருந்தது. ஆனால் நண்பர் ஒருத்தர் அனுப்பிய மடலில் இதைப் பற்றி மட்டும் என்னளவில் விளக்கம் கொடுக்கக் கோரி இருந்ததால் அவ்வளவோடு நிறுத்திக் கொண்டேன். இன்னும் எத்தனையோ இருக்கிறது தான்.
Deleteஇதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்கணுமா? நாம் என்ன செய்கிறோம் என்று யாருக்கும் விளக்கம் அளிக்கத் தேவை இல்லை. அதை வைத்து வசைபாட ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கும்.
ReplyDeleteயாருக்கும் பதில் சொல்லவில்லை ஶ்ரீராம். ஒருத்தரின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து பதில் சொன்னேன்.
Deleteகீதாக்கா நான் சொல்ல வந்ததை ஸ்ரீராம் சொல்லிவிட்டார் உங்க பதிலும் பார்த்துவிட்டேன். சென்சேஷனல் விஷயங்களைத் தவிர்ப்பது நல்லதுதான் கீதாக்கா.
Deleteகீதா
இது உணர்ச்சிகரமான விஷயம் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை தி/கீதா. கீழே முனைவர் அவர்கள் சொல்லி இருப்பது போல் பலருக்கும் தெரியாதவற்றைத் தெரியப்படுத்துவதற்காகவே இந்தப் பதிவு. ஒருத்தருக்குப் போனாலும் போதும்!
DeletePeople are just saying things to draw attention maami, this is happening for years
ReplyDeleteநன்றி ஏடிஎம்.
Deleteஎன்ன என்னவோ விளக்கம் எழுதறீங்க.
ReplyDeleteஇதைப் பற்றித் தெரிஞ்சவங்களுக்கு விளக்கம் தேவையில்லை.
தெரியாத மாதிரி நடிக்கறவங்களுக்கு என்ன எழுதியும் புண்ணியம் இல்லை.
தெரிஞ்சவங்களுக்காக எழுதலை. உங்களோட நிலைப்பாடு பற்றிச் சொல்லுங்கனு கேட்டதால் விளைந்த பதிவு. யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவை இல்லையே!
Deleteதமிழ்த்தாத்தாவின் பெயரான சுவாமிநாதன், சுப்ரமணி ஐயர், வெங்கடசுப்பையர் என்பதெல்லாம் நடைமுறையில் உள்ள பெயர்கள்தானே. ஒவ்வொரு சமூகத்திலும் சில பெயர்கள் வைப்பாங்க. கந்தமாறன், கந்தன், முருகன், தேவசேனாபதி என்றெல்லாம் பிற சமூகங்களில் பெயர் வைப்பார்கள். கணபதி என்று பிராமணர்களில் பெயர் வைப்பார்கள். ஆனையப்பன், பிள்ளையார் என்று பிற சமூகங்களில் வைப்பார்கள். அது சமூக நடைமுறையைப் பொருத்தது.
ReplyDeleteகணபதி என்னும் பெயரில் எனக்கு ஒரு பெண் சிநேகிதி உண்டு நெல்லை! கேட்க ஆச்சரியமா இருக்கும். ஆனால் அவங்க வீட்டில் பெண் பிறக்க வேண்டிக்கொண்டு "கணபதி" என்னும் பெயரை வைத்தார்கள். எனக்கு நெருக்கமான சிநேகிதி! ஆனால் பிராமணப் பெண்ணெல்லாம் இல்லை. அவள் என் வீட்டில் சாப்பிட்டிருக்கிறாள். நான் அவங்க வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன். திருமணம் ஆகி நான்கு வருடங்கள் தொடர்பில் இருந்தோம். நாங்கள் ராஜஸ்தான் போனதும் விட்டுப் போனது.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநல்ல விளக்கமான பதிவு. இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவன் அவன் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. என் ஒன்று விட்ட மைத்துனருக்கு திருச்செந்தூர் சுப்பிரமணியன்தான் கண்கண்ட தெய்வம் அவர் பெயரும் அதுதான். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. இப்போதெல்லாம் ஆதர்ஷ், சுரேஷ், சதீஷ், ரமேஷ், ஆதித்யா, சுஹாசினி, சுகிர்தா, ஸ்பூர்த்தி, ஸ்ருதிகா என்றெல்லாம் பெரும்பாலும் வடமொழிப் பெயர்களையே தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறதைப் பார்க்கிறோம். ஆனால் "முருகன்" என பிராமணர்கள் வைக்க மாட்டார்கள் என்கின்றனர். அப்படி இல்லை என்பதைத் தான் சொன்னேன். :)))))
Deleteஅருமையான பதிவு கீதாமா.
ReplyDeleteஎனக்கும் வேல் வைத்துப் பூஜை செய்யும் பல குடும்பத்தை
அறிந்திருக்கிறேன்.
இங்கேயே நிறைய பெண்கள்,அவர்களுடைய
கணவர்கள், வேல் நிறுவி வழிபடுகிறார்கள்.
அது தீமை களையும் ,நன்மை பெருக்கும் சக்தி.
எனக்கு அதில் மிக நம்பிக்கை உண்டு.
வாழ்க முருகன் நாமம்.
காப்பான் கந்தன்.
எங்கள் மாமாவின் குடும்பம் இப்போதும் வேல் வழிபாடு தினமும் செய்து வருகின்றனர். இதைச் சொல்லணும்னு அவசியம் இல்லை தான்! ஆனால் முருகனைக் குலதெய்வமாகக் கொள்பவர்களோ, பெயரை வைத்துக் கொள்பவர்களோ இல்லை என்பதால் சொல்ல நேர்ந்தது.
Deleteபிறருக்கு மறுமொழி கூறுவது போல இருந்தாலும், அரிய பல செய்திகளை இப்பதிவு மூலமாக அறிந்தேன்.
ReplyDeleteநன்றி முனைவரே! பதிவு போட்டதின் நோக்கமே இது தான். யாரானும் ஒருத்தராவது புரிந்து கொள்ள வேண்டும் என்பதே! மிக்க நன்றி.
Deleteஎன் கணவரின் பாட்டி பேர் கணபதி(அம்மாவின் அம்மா) அவர்கள் பெயரை சின்னமாமியார் வீட்டில் அவர்கள் பெண்ணுக்கு வைத்து இருக்கிறார்கள்.
ReplyDeleteஎன் கணவரின் அத்தை (மாமனாரின் அக்கா ) வேல்வைத்து பூஜை செய்வார்கள்.
நீங்கள் சொல்வது போல் இப்போது வடமொழி பேர்கள் பேருக்கு அர்த்தம் சொல்லி அதனால் வைத்தோம் என்கிறார்கள்.
வாங்க கோமதி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எனக்குத் தெரிந்து பல பெண்களுக்கு கணபதி அம்மாள் என்னும் பெயர் தென் தமிழகத்தில் உண்டு. வேல் வைத்து வழிபடுதலும் பல குடும்பங்களில் பார்த்திருக்கேன். இப்போதெல்லாம் வடமொழிப் பெயர்களே ஆதிக்கத்தில் இருக்கின்றன. வீட்டுப் பெரியவர்கள் பெயரை வைப்பது என்பது குறைந்து வருகிறது.
Delete