எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, November 10, 2020

புளியோதரையும் சோறு! வெகு பொருத்தமான சாம்பாரு!

இந்த அமெரிக்கத் தேர்தலில் கமலா ஹாரிஸ் என்னும் பெண்மணி ஜெயித்தாலும் ஜெயித்தார். நம்ம ஊர் ஆட்கள், ஓர் அமைச்சர் உட்பட(?) குதியோனு குதிக்கிறாங்க. தமிழ்ப் பெண்மணியாம்! அவங்களுக்குத் தமிழிலே "அ,ஆ, இ,ஈ" உண்டுனு தெரியுமானே ஜந்தேகம்! :) அதோட அவங்க தன்னை இந்திய வம்சாவளினு எங்கேயும் எப்போதும் சொன்னதாயும் தெரியலை. ஆனாலும் எல்லோரும் குதிக்கிறதைப் பார்த்தாச் சிப்புச் சிப்பாவருது! அவங்களுக்காக யாகம் என்ன, வழிபாடுகள் என்னனு அவங்க அம்மாவோட அப்பாவின் குலதெய்வக் கோயிலில் கொண்டாட்டம் தான்! அது சரி, அவங்களைத் தமிழச்சினு சொல்றவங்க கமலா ஹாரிஸின் அம்மாவும், தாத்தா, பாட்டியும் பிராமணர்கள் என்பதை ஏத்துக்கறாங்க போல இருக்கேனு ஆச்சரியமா இருக்கு! தமிழிலேயே அவங்களுக்குக் கடிதம் "ட்வீட்" எல்லாம் கொடுக்கிறாங்க! இன்னொரு பக்கம் ஆன்மிக அன்பர்கள் ஹரிகதா காலட்சேபம் பண்ணும் விசாகா ஹரியின் படத்தில் அவங்க தலையை எடுத்துட்டு கமலா ஹாரிஸின் தலையை ஃபோட்டோ ஷாப் மூலம் ஒட்ட வைத்து சந்தோஷப்பட்டுக்கறாங்க. இதை எல்லாம் பார்த்துத் தலையில் அடிச்சுக்கறதா வேண்டாமானு யோசிக்கிறேன். கமலா ஹாரிஸ்னு எழுதக் கூடாதாம் சில தமிழறிஞர்களுக்கு. நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கக்காரங்கனு நினைக்கிறேன். நியூ செர்சி தமிழ்ச்சங்கம் கமலா ஆரிசுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாகச் சொல்லி இருக்காங்க! :))))) விவிசி, விவிசி, விவிசி

*************************************************************************************

இரண்டு வருடம் முன்னர் அக்கி வந்து சிரமப்பட்டப்போ மருத்துவர் வீட்டு வேலைகளைக் கொஞ்ச நாட்கள் நிறுத்திட்டு முழு ஒய்வு எடுங்கனு சொன்னதாலே அப்போத் தான் வீட்டு வேலைகளான வீடு பெருக்குதல், வீடு துடைத்தல், பாத்திரம் கழுவறதுனு எல்லாத்துக்கும் ஓர் பெண்மணியை வேலைக்கு வைச்சோம். அது வரை எல்லா வேலைகளும் நான் தான் செய்துட்டு இருந்தேன். அந்தச் சமயம் தான் சாப்பாடும் சாதம் மட்டும் வைத்துக் கொண்டு சாம்பார்/குழம்பு/மோர்க்குழம்பு, ரசம், கறி, கூட்டு என வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தோம். இரு வகையில் எனக்கு அது வசதியாகத் தெரிந்தது. காலையிலேயே சாப்பிட்டதும் எல்லாம் தீர்ந்துடும். மிஞ்சாது. இன்னொரு பக்கம் நம்ம ரங்க்ஸ் காய்கறிச் சந்தைக்குப் போய்க் காய்களை அள்ளிக் கொண்டு வந்தது தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது.  இல்லைனா நான் திண்டாடிட்டு இருப்பேன். தினுசு தினுசா வெண்டைக்காய், கத்திரிக்காயில் 3 தினுசு, நீட்டு அவரை கொஞ்சம், பட்டை அவரை கொஞ்சம்னு! ஆனால் அப்புறமா அம்பேரிக்கா போனதும் அங்கே ஆறு மாசமும் நானே சமைச்சதும் ஓர் வரலாறு! இஃகி,இஃகி,இஃகி, மருமகள் மாலை வேலைகளைப் பார்த்துக் கொள்ள நான் காலைச் சமையலைக் கைவிடவில்லை.

***********************************************************************************

அங்கேருந்து வந்ததும் பழைய காடரர் கிட்டேப் பத்துப் பதினைந்து நாட்கள் சாப்பாடு வாங்கினோம். காரம் அதிகமாய்த் தெரிந்தது. அவரிடம் சொல்லிக் கொண்டே இருக்கையிலேயே லாக் டவுன் வந்து அவர் சமையலறையை மூடிட்டதாய்ச் சொல்லிட்டார். 2 மாசங்கள் நான் தான் சமைச்சுட்டு இருந்தேன். திடீர்னு நம்மவருக்கு மசக்கை மாதிரிக் காடரிங் சமையல் மேல் ஆசை வர மறுபடி அவங்க கொடுப்பதாகச் சொல்லவும் வாங்க ஆரம்பித்தோம்.. இம்முறை விலையும் ஏற்றி விட்டு அளவையும் குறைச்சுட்டாங்க. முன்னாடி கொடுத்தப்போ ஒருத்தருக்குக் கொடுப்பதே நாங்க இரண்டு பேர் சாப்பிடறாப்போல் இருந்தது. ஆனால் லாக் டவுன் முடிஞ்சு ஆரம்பிச்சப்போ எல்லாம் மாறி விட்டது.  காய்கள் வேறே நம்மவரால் சாப்பிட முடியாத பீட்ரூட், முட்டைக்கோஸ், சௌசௌ என இருக்கும். அப்போ வேறே காய் வீட்டில் பண்ணிக்கறாப்போல் ஆயிடும். ரசமும் இரண்டு பேருக்குக் காணாமல் இருந்தது. மேற்கொண்டு எதையானும் சேர்த்து ரசத்தைக் கூட வைத்து விட்டுக்கணும்.  குழம்பெல்லாம் நான் ஒரு கரண்டி, அரைக்கரண்டி தான் விட்டுப்பேன் என்பதால் பிரச்னை இல்லை. ரசமில்லாமல் ரசமாகவே இல்லை. சரினு நிறுத்திட்டு நானே மறுபடி சமைக்க ஆரம்பித்தால் நம்மவர் மறுபடி எனக்கு உதவினு நினைச்சுட்டு வேறொருத்தரிடம் வாங்கலாம்னு முடிவு பண்ணிச் சொல்லிட்டார்.முதல்லே இரண்டு நாட்கள் அவங்க கொடுத்தது நல்லாவும் இருந்தது. சரியாவும் இருந்தது. அதுக்கப்புறமாக் குழம்பு தீர்ந்துடுத்துன்னா பருப்பு ஜலத்தில் வேக வைச்ச தான் எதையானும் போட்டு அடி ரசமண்டியை விட்டுக் கலக்கிக் கொடுத்துடுவாங்க. மோர்க்குழம்புன்னா மோரை விட்டு விளாவி இருப்பாங்க. ரசமோ ஏற்கெனவே விளாவித் தான் இருக்கும். எனக்கு அது ஊசல் வாசனை வராப்போல் ஓர் எண்ணம். குழம்பும் ரசமும் கொஞ்சம் போல் சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை எல்லாம் நம்ம வீட்டில் வேலை செய்யும் பெண்மணிக்குக் கொடுத்தால் அவங்களும் இதே சொன்னாங்க. நீங்க சமைக்கிறாப்போல் இல்லை மாமி என்றார் அந்தப் பெண்மணி. இஃகி.இஃகி.இஃகி. 

உப்பு, புளி அடையாளம் தெரிஞ்சு போட்டால் போதும், சமையல் வந்துடும்னு நினைப்பாங்க போல! இன்னொருத்தர் பத்தரை மணிக்கே கொடுப்பேன்னு சொல்லிட்டுப் பதினோரு மணி வரை வரவே இல்லை. ஒரு வழியாப் பதினொன்றே முக்காலுக்கு வந்தார். புடலங்காய்க் கூட்டாம். புடலங்காய் தனியாகவும், கூட்டில் போட்ட பருப்புத் தனியாகவும், அரைச்சு விட்டது தண்ணியாக ஓடிக் கொண்டும் இருந்தது. அதையும் ப்ளாஸ்டிக் கவரில் போட்டுச் சுடச்சுடப் பாக்கிங் செய்திருந்தார். குழம்பு, ரசம் எல்லாமும் அப்படித்தான். இதற்குத் தொண்ணூறு ரூபாய் வேறே வாங்கினார். ஒரு உணவுக்கு ரூபாய் 30. தரமே இல்லை.  அதை எப்படிச் சாப்பிடறது? அன்னிக்கு நல்லவேளையா வீட்டில் மிளகு குழம்பு இருந்தது. அவசரமாக ஓர் ரசத்தை வைத்து அப்பளத்தைச் சுட்டுப் போட்டுக்கொண்டு சாப்பிட்டு விட்டு வாங்கின சாப்பாடை யாருக்கும் கொடுக்க முடியாத நிலையில் தூர எறிந்தோம். இத்தனை பரிசோதனை பண்ணியாச்சு, முதியோர் இல்லம் போனாலோ அங்கே வாசம் செய்தாலோ எனக்கோ அவருக்கோ ஒத்துக்கப் போறதில்லை.  ஏனெனில் அங்கேயும் சமையல் எப்படி இருக்கோ? சொல்லப் போனால் பத்து நாட்களாக இந்தச் சாப்பாடு ஒத்துக்காமல் எனக்கு வயிறு சரியில்லை. சாப்பிடுகையிலேயே வயிற்றில் வலி வந்து விடுகிறது. மோர் சாதம் மட்டும் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு எழுந்துடுவேன். அவருக்கும் பிடிக்கலை. போட்டுக்கொண்டு எல்லாவற்றையும் எறிந்து விடுவார். ஆகவே இனிமேல் ஒரு ரசம் வைச்சாலும் போதும், நானே சமைக்கிறேன், விஷப் பரிட்சை வேண்டாம்னு சொல்லிட்டேன். போதும்டா சாமினு ஆகிவிட்டது.

இந்த அழகில் காடரிங் காரங்க தீபாவளி பக்ஷணம் வேறே போடறாங்க. இனிப்பு வகைகள் கிலோ 500 ரூபாயாம். கார வகைகள் கிலோ 400 ரூபாயாம். சிலர் 550/450 என வைச்சிருக்காங்க. சென்னையில் சிலரோட விலைப்பட்டியலைப் பார்த்தால் இனிப்பு 300 ரூபாயாகவும், காரம் 250 ரூபாயாகவும் தான் இருக்கிறது. அதே போல் சாப்பாடு கொடுப்பதும் 100 ரூபாய்க்கு நன்றாக இருவேளையும் வராப்போல் கொடுப்பதாக அம்பத்தூரில் என் நாத்தனார் சொன்னார். இந்த விஷயத்தில் சென்னை தான் விலை மலிவு, நன்றாகவும் கிடைக்கும். இங்கே திருச்சியில்/ஶ்ரீரங்கத்தில் வீட்டு வாடகையும் அதிகம். இம்மாதிரி விஷயங்களிலும் வசதி பத்தாது. கல்யாணங்களிலேயே சாப்பிட்டுப் பார்த்தவரை சென்னையை அடிச்சுக்க இங்கே ஒரு காடரரும் இல்லை.  நமக்கோ இந்த வருஷம் பண்டிகை இல்லை. அதனால் சும்ம்ம்ம்மாச் சாப்பிடவெனக் கொஞ்சம் போல் தேன்குழல் மட்டும் பண்ணி வைக்கலாம்னு இருக்கேன். மத்ததெல்லாம் பிழைச்சுக் கிடந்தால் அடுத்த வருஷம் பார்த்துக்கலாம். இதை எல்லாம் எதுக்குச் சொல்றேன்னு கேட்டால் வெளியே சாப்பாடு வாங்கிச் சாப்பிடும் முன்னர் பல முறை யோசிங்க! வேறே வழியே இல்லைனா வாங்குங்க! இல்லைனா வேண்டாம். மோர்சாதமாக வீட்டிலேயே சாப்பிட்டுக்கலாம். பசிக்குத் தான் உணவு, ஆனால் அது வயிற்றுக்கும் ஒத்துக்கணும். 

இதெல்லாம் ஒரு பதிவானு கேட்கிறவங்களுக்கு! கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு விஷயம் என்பதால் சொல்கிறேன். :)))))))

62 comments:

 1. மோர் சாதம் சாப்பிட்டாலும் வீட்டில் செய்து சாப்பிடுவதே சொர்கம். தரமான வெளிச்சாப்பாடு என்றால் ஓகே...ஆனால் நமக்கு ஒத்துவராத போது நீங்க கடைசில சொல்லிருப்பதுதான் உத்தமம்...//ஒரு ரசம் வைச்சாலும்// அது கண்டிப்பாக ரசமா இருக்கும்!!!! தன் கையே தனக்குதவிதான் கூடியவரை பெஸ்ட்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி/கீதா, நீங்க நம்ம ரகம் போல! பந்திக்கு முந்திட்டீங்களே! இஃகி,இஃகி, நீங்க சொல்வது தான் சரி.

   Delete
 2. வெளியில் ஸ்வீட்ஸ், காரம் வாங்குவதும் கூட யோசிக்க வேண்டும். வீட்டில் முடிந்தால் செய்யலாம் இல்லையா வேண்டவே வேண்டாம் என்று இருப்பது நம் வீட்டு வழக்கம். அதைச் சாப்பிட்டு வேண்டாததை வரவழைத்துக் கொண்டு...கமர்ஷியல் என்று வரும் போது தரமாக இருப்பது நல்ல நெய், எண்ணை பயன்படுத்துவார்கள் என்பதைச் சொல்ல இயலாது.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தி.கீதா, கை முறுக்கோ ஜிலேபி என்ற ஜாங்கிரியோ நான் வீட்டில் தான் பண்ணுவேன். இப்போத் தான் மாமாவுக்கு சர்க்கரைத் தொழிற்சாலையே உடம்பில் இருப்பதால் எதுவும் பண்ணுவதே இல்லை. தேன்குழல், ஓமப்பொடி, முறுக்கு போன்ற உப்புப் போட்டவை மட்டும் அவ்வப்போது பண்ணி வைப்பேன். வெளியில் எதுவும் வாங்கக் கூடாது என ஒரு 144 தடை உத்தரவே போட்டாச்சு இந்தக் கொரோனாவுக்குப் பின்னர்.

   Delete
 3. அன்பு கீதாமா,
  சென்னையில் இருக்கும்போது நான் அனுபவித்திருக்கிறேன்.
  நாத்தனார் சொன்னாரேன்னு ஒரு இடத்தில்
  டிஃபன் காரியருடன் சாப்பாடு வாங்கிப் பார்த்தோம்.

  நல்ல நாளிலேயே இவருக்கு வெளி சாப்பாடு பிடிக்காது.
  சமையல் மாமியும் உடல் முடியாத நிலை நின்று விட்டார்.

  அந்த காரியர் சாப்பாடு இருவருக்கும் நெஞ்செரிச்சல் தான் கொடுத்தது.

  சப்பாத்தி வாங்கிக் கொண்டு உ.கி வறுத்து சில நாடள் ஓட்டினேன்.
  வெண்டைக்காய் ,பீன்ஸ், கத்திரிக்காய்,உ.கி மட்டும் தான் சமைக்கணும்.

  இறுதியில் தன் கையே தனக்கு உதவிங்கற நிலைமைக்கு வந்தோம்.
  உங்களுக்கும் இதே போல சரியாகிடும்.
  காய்கறி யாராவது வாங்கி வந்தால் தேவலை.
  மாமா அலையாமல் இருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, சமையல் மாமிக்கு மாசம் ஆறாயிரம் கேட்கிறாங்க என்பதோடு இரவுக்கும் சேர்த்துக் காலம்பரவே பண்ணிட்டுப் போயிடுவாங்களாம். அதோடு அதன் பின்னர் சமையலறையைச் சுத்தம் செய்யும் வேலை, போதும், போதும்னு ஆயிடும். :)))) நாம தான் ரொம்பவே நொடிப்போமே! ஒத்து வராத ஒன்று சமையல் மாமி வருவதெல்லாம். மாமா அலையல்லாம் வேண்டாம். கீழேயே ஒரு அண்ணாச்சி கடை இருக்கு. அங்கே வாங்கிக்கலாம். ஆனால் இவர் பூ வாங்கணும், வாழை இலை வாங்கணும்னு சாத்தாரத் தெருப் பக்கம் போவார். அதான் எனக்குக் கொஞ்சம் இல்லை நிறையவே பயம், கவலை.

   Delete
 4. தலைப்பு பார்த்து ஆஹா இங்கு புளியோதரை கீதாக்கா தராங்க போல நாம முந்திக்க வேண்டும் அதுவும் நெல்லையை அல்லிராணியை எல்லாம் முந்திக் கொண்டு அப்புறம் நமக்குக் கிடைக்காமப் போச்சுன்னு நினைச்சு வந்தா உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, தி/கீதா, வெங்கடேஷ் பட் செய்முறையில் புளிக்காய்ச்சல் காய்ச்சினது இன்னமும் கொஞ்சம் மிச்சம் இருக்கு. மோர் சாதத்துக்குத் தொட்டுக்க அவ்வளவு நல்லா இருக்கு. விரைவில் செய்முறை போடணும்னு நினைச்சுட்டு இருக்கேன். பார்ப்போம்.

   Delete
  2. கீசா மேடம்...நீங்க சொன்னதுக்கு அப்புறம் வெங்கடேஷ் பட் செய்முறைல வெண்பொங்கல் செய்தேன் (நானே நல்லாப் பண்ணுவேன்...). ரொம்ப சூப்பரா இருந்தது. ஒவ்வொரு வீட்டுல மாதிரித்தான், இங்க பெண் ரொம்ப சூப்பர்னா, ஹோட்டல் மாதிரியே இருக்குன்னா, பையன் -எதுக்கு எப்போவும் பண்ணற மெதட்டை மாத்தறீங்க..அதுவே நல்லா இருக்கும்னான், இதுல நெய் ரொம்பவே ஜாஸ்தியாம். அன்னைக்கு நான் செய்தது கொஞ்சம்கூட மிஞ்சலை, எனக்கு ரொம்ப ஹாப்பி.

   இப்போ புளிக்காய்ச்சல் செய்துபார்க்கிறேன்.

   Delete
  3. செய்ங்க! நெல்லை. உடனே போட்டுடுவீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   Delete
 5. கமலா ஹாரிஸ் - நல்ல நகைச்சுவை. அந்தம்மா, இந்திய வம்சாவளி வாக்குகளுக்காக, ஆசிய வாக்குகளுக்காக ஆசியன் என்றும், கறுப்பின வாக்குகளுக்காக தான் கறுப்பினத்தவர் என்றும் சொல்லியிருக்காங்க. நம்ம ஊர் ஆட்களுக்கு வேறு வேலையில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லை, கமலா ஆரிசு (இஃகி, இஃகி) ஜெயிச்சுட்டாங்கனு இங்கே ஸ்வீட் எல்லாம் விநியோகம் பண்ணி ஒரே அமர்க்களம் போங்க! அவங்க என்னமோ இந்தியர்களை அவங்க அமெரிக்காவில் வாழ்பவர்கள் ஆனாலும் சரி, லட்சியமே பண்ணுவதில்லை. இங்கே கிடந்து குதிக்கிறாங்க.

   Delete
 6. //நான் காலைச் சமையலைக் கைவிடவில்லை// - உங்க காலைச் சமையல் கஞ்சிதானே. இல்லை அம்பேரிக்கா போய், டயட்லாம் சுத்தமா மாத்திட்டீங்களா?

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், காலை உணவு பல வருடங்களாகக் கஞ்சி தான். இப்போக் கறுப்புக் கவுனி அரிசிக்கு மாறி இருக்கோம். மற்றபடி காலைச் சமையல்னா ஒன்பது, பத்து மணிக்குள் ஆரம்பிச்சுப் பத்தரைக்குள் முடிப்பது. பதினொன்றரைக்குள் சாப்பிடுவோம். இந்தக் காடரிங் காரங்க அவங்க இஷ்டத்துக்குப் பதினொன்றே முக்கால்/பனிரண்டு என்றெல்லாம் வருவாங்க. ஒரு வாரமாச் சாப்பாடு பனிரண்டரைக்குத் தான். அவங்க கொண்டு வருவதை நான் திரும்பவும் ஏதானும் பண்ணிச் சாப்பிடும்படி செய்யணுமே! :( இன்னியோட தொல்லை விட்டது.

   Delete
 7. வெளிச் சாப்பாடு பற்றி நீங்க எழுதியதில் உண்மை இருக்கு. முந்தி மாதிரி (30 வருடங்களுக்கு முந்தி) மெஸ் என்று சுத்தமாக இப்போதெல்லாம் கிடையாது. நான் பார்த்தவரை காய்கறியைச் சுத்தம் செய்து கட் பண்ணி நான் வெளியில் பெரும்பாலும் பார்த்ததில்லை. கல்யாண சமையல் செய்யறவங்களும் இதே கதைதான். (கட் பண்ண ஆட்களை வச்சிருப்பாங்க. அவங்க வேலை சுத்தமா இல்லையா என்று பார்க்காமல் கண்ணை மூடிக்கிட்டு கட் பண்ணிக்கிட்டிருப்பாங்க).

  நாங்க பஹ்ரைன்ல இருந்தபோது அங்க ஒரு நம்பூதிரி மெஸ் நடத்தினார். ஒரு சாப்பாடு 120 ரூபாய். ஆனால் அதை2-3 பேர் நல்லாவே சாப்பிடலாம். அங்க போய்ச் சாப்பிட்டாலும், கேட்டுக் கேட்டு சாப்பாடு போடுவார்.

  எதுக்கும் நல்ல கேடரர் இருக்கான்னு தேடிப் பாருங்க. அவசரத்துக்கு உதவும். அப்படி இல்லைனாக்கூட, குழம்பு, காய் மட்டுமாவது கிடைக்குமான்னு பாருங்க.

  ReplyDelete
  Replies
  1. நெல்லையாரே, பதிவை ஒரு முறை ஒழுங்காப் படிங்க. இத்தனை நாட்களாகக் குழம்பு, ரசம், காய் தான் வாங்கிண்டு இருந்தோம். அது தான் சரியாக் கொடுக்கலைனு சொல்லிட்டு இருக்கேன். பீட்ரூட் வாரம் 3 நாட்கள் எந்த விதத்திலாவது வந்துடும். அடுத்தது முட்டைக்கோஸ். சில சமயங்களில் பீட்ரூட் கறி/கூட்டு, முட்டைக்கோஸ் கறி/கூட்டு என மாறி மாறி வரும். உருளைக்கிழங்கை வெங்காயம் போட்டுக் கூட்டுச் சாப்பாட்டுக்குத் தொட்டுக்கப் பண்ணுவாங்க. அதெல்லாம் பிடிக்கிறதில்லை. மற்றபடி இங்கே வேறே எந்தக் காடரரும் நல்ல சாப்பாடு கொடுக்கவில்லை எங்களுக்குத் தெரிந்து.

   Delete
  2. நல்லாத்தான் படிச்சேன். அதுவும் தவிர, சாதம் நீங்க வீட்டுல பண்ணிப்பீங்க என்று எத்தனை தடவை எழுதியிருக்கீங்க. மறக்குமா?

   பொதுவா காடரர்ஸ் சுலபமான, குறைந்த விலையுள்ள காய்களைத்தான் உபயோகிப்பாங்க. அதுனால கோஸ் கரேமது, உருளை கறி, பீட்ரூட், பூசணி/பறங்கி இவையெல்லாம் அடிக்கடி வரத்தான் செய்யும் ஹாஹா

   Delete
  3. இங்கே அப்படி ஒண்ணும் காய்கள் விலை அதிகமா இல்லை. அது வரை நிச்சயம் சொல்வேன். அதிலும் எங்க காடரர்(வாடிக்கையாய்க் கொடுப்பவர்) மொத்தமாக வாங்குவதாய்ச் சொன்னார். அப்போ விலை இன்னமும் குறையும். பூஷணி, பறங்கி ஓகே. பறங்கிப் பழமாகவா வாங்கறது? பச்சைப் பறங்கியே கிடைக்கும். அதோட இல்லாமல் பறங்கிக்காயில் மோர்க்கூட்டாம். அதுவும் கடலைப்பருப்பெல்லாம் போட்டு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   Delete
 8. வணக்கம் சகோதரி

  நல்ல கதம்பம். முதல் செய்தியை நல்ல சுவைபட சொல்லியுள்ளீர்கள். அவர் திறமைக்கு பதவி கிடைத்திருப்பது அவரின் அதிர்ஷ்டம். அதை இங்கு மிகைபடுத்துவதாகத்தான் தெரிகிறது.

  வெளியில் வாங்கும் உணவு பற்றி இப்போதைக்கு என்க்கு ஏதும் தெரியவில்லை. ஏனெனில் இதுவரை அந்த மாதிரி தினசரியாக உணவு வாங்கியதில்லை. ஒரு நூறு, ஐம்பது பேருக்கு மேல் வீட்டில் வரும் விஷேடங்களுக்கென (வளைகாப்பு, குழந்தைகளுக்கு முதல் வருட ஆண்டு நிறைவு) ஒரிரு முறைக்கும் மேலாக சில வருடங்களுக்கு முன்பு வாங்கியுள்ளோம் ஒரு இலைக்கு இவ்வளவு ரூபாய் எனப் பேசி வாங்கியுள்ளோம்.சமையல் எல்லாமே சிம்பிளாகத்தான் வரும். அதில் போளியும், கோசம்பரியும் நாம் சொல்லாமலே இங்கு கட்டாயம் உண்டு.ஒரு தேங்காய் போட்ட கறி,(அது சிலசமயம் மரத்தில்தான் இருப்பேனென்று அடம் பிடித்து விடும் போலும்..:)) காரக்கறி, வடை அப்பளம் என உண்டு. கூட்டெல்லாம் கிடையாது. நாம்தான் விளக்கிச் சொல்லி செய்யச் சொல்லி வரவழைக்க வேண்டும். பாயாசம் கெட்டியாக கொண்டு வருவார்கள். (வீட்டில் ஞாபகமாக நிறைய பால் கண்டிப்பாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் பாயாசம் இலையில் விட முடியாது... போட வேண்டும்.:)) இப்படியும் சிலரை சந்தித்திருக்கிறோம்.

  உங்கள் வீட்டுக்கு ரெகுலராக ஒருவரை ஏற்பாடு செய்து வாங்கலாமே..! ஆனால் இரண்டு பேருக்கு என்னும் போது கண்டிப்பாக உணவு இரவுக்கும். மிஞ்சும். இரவு டிபனெனில், மதியம் சாதத்திற்கு தேவையானவை அவசியமில்லாமல் போய் விடும். கஸ்டந்தான்.. எங்கள் வீட்டிலும் இதுபற்றி பேச்சு அடிக்கடி அடிபடும். நான் விடாமல் மூன்று வேளையும் ஏதோ செய்து வருகிறேன். பார்க்கலாம்..! நீங்கள் சொல்வது போல் மோர் சாதமே வீட்டில் செய்வது பரவாயில்லையென சமயத்தில் உடம்பு ரொம்ப படுத்தும் போது எனக்கும் தோன்றும். ஆனால், அப்போதுதான் வீட்டில் அனைவருக்கும் மசக்கை விதவிதமான ரூபங்களில் அவர்கள் மனதுக்குள் தோன்றும். என்ன செய்வது.?. அவரவர் ஆசைகளை நிறைவேற்றித்தான் ஆக வேண்டும்.

  உங்கள் பதிவு மனம் விட்டு பேசுவது போன்று நன்றாக இருந்தது. அதனால் நானும் மனம் விட்டு கருததுக்கள் தெரிவித்து கொண்டேயுள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, கடந்த இரு வருடங்களாக வாடிக்கையாக ஒருத்தரைத் தான் ஏற்பாடு செய்து சாப்பாடு வாங்கினோம். அவங்க கொடுப்பது தான் 2 வேளைக்கு இல்லை, காலம்பரத்துக்கு ஒரு வேளைக்கே போதாமல் இருக்கும். யாரானும் ஒருத்தர் தான் சாப்பிடலாம், அதுவும் கொஞ்சமாய்க் குழம்பு, ரசம் சாப்பிடுகிறவர்கள் எனில் அது போதும். இரவுக்கெல்லாம் நினைச்சே பார்க்க முடியாது. நானும் அக்கி வந்து கஷ்டப்பட்டதால் தான் வாங்க ஆரம்பித்தேன். இதற்கு முன்னால் எண்பதுகளில் அக்கி வந்து ரொம்பக் கஷ்டப்பட்டப்போக் கூட சுமார் 20 பேர்களுக்கு நான் ஒருத்தி மட்டும் சமைத்துப் போட்டிருக்கேன் மூன்று வேளையும். அப்போது வயதும் குறைவு. மனோ திடமும் இருந்தது. இப்போ முடியலை. இனி வேண்டாம்னு வைச்சுட்டோம்.

   Delete
 9. கமலா ஆரிசுக்கே அரண்டா எப்படி. சோ பைடன் தெரியுமா? சோ ராமசாமிக்கு தம்பி!!

  இது போறாதுன்னு San Francisco Bay Area Tamil Manram என்பதை சான் ஃபிரான்சிஸ்கோ (ஸ் இருக்கு) வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம்ன்னு மொழிமாற்றி இருக்காங்க. வளைகுடான்னா Gulf (Gulf nations - வளைகுடா நாடுகள்) விரிகுடான்னா Bay (Bay of Bengal - வங்காள விரிகுடா). இது கூடத் தெரியலை. ஆனா தமிழ் மன்றம், தமிழ் பள்ளிக்கூடம். ஏந்தான் நம்ம கண்ணில் பட்டுத் தொலைக்குதோ..

  ReplyDelete
  Replies
  1. வாங்க கொத்து, நீங்க சொல்லி இருக்கும் விஷயங்களை ஃபேஸ்புக்கிலும் பார்த்து ரசித்தேன்.வேண்டாத கொண்டாட்டங்களுக்கு நம்மவர்களை மிஞ்ச ஆளில்லை.

   Delete
 10. வேறு கூத்தடிக்க நல்ல சந்தர்ப்பம் கிட்டும்வரை கமலா ஆரிஸ் (!) கூத்து நடக்கும்!  இதிலேயே சீக்கிரமே மக்கள் யு டர்ன் எடுத்துத் திட்டத்தொடங்கும் நாளும் வெகு தூரத்தில் இல்லை.  அப்போது பிராமண துவேஷம் பார்க்கப்படும்!

  ReplyDelete
  Replies
  1. ஆமம், ஶ்ரீராம், விரைவில் கமலா ஹாரிஸ் ஓரம் கட்டப்படுவார் என எதிர்பார்ப்போம். அவர் பிராமணரே இல்லை. :(

   Delete
 11. ஒரே மாதிரி இல்லாமல் ஒரு மாறுதல்.  அவ்வளவுதான்.  எங்கிருந்து குழம்பு கூட்டு எல்லாம் வாங்குகிறீர்கள்?  எப்படி இருக்கிறது?  நாம் செய்வது பழகிவிட்ட நாக்குக்கு அயல் சுவை ஒத்துவராதே...   பரவாயில்லையா?

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதான் விலாவரியா எழுதி இருக்கேனே ஒண்ணுமே நல்லா இல்லைனு! ரெகுலர் காடரர் தவிர்த்து 3 பேரிடம் வாங்கிப் பார்த்தாச்சு! என் சமையல் உண்மையிலேயே ருசியாகத்தான் இருக்குனு ரொம்ப நாட்கள் கழிச்சு இன்னிக்கு எனக்கே புரிஞ்சது! :)))

   Delete
  2. எனக்கு இன்னும் புரியலையே... எப்போ வரலாம் சாப்பிட்டுப்பார்க்க (மதியச் சமையல்தான்)

   Delete
  3. வாங்க நெல்லை. எப்போ வேணாலும். இனிமேல் ஜன்மத்துக்கும் காடரர் கிட்டே வாங்குவோம்னு நினைக்கறீங்க? :))))))

   Delete
 12. தொடர்ந்து படிக்கும்போது எப்படி இருந்தது என்பதையும் சொல்லி இருக்கிறீர்கள் என்பது தெரிந்தது!  அதற்குள் முந்தைய கமெண்ட்!  நாங்கள் கொரோனா தனிமையில் இருந்தபோது என் (ஒன்றுவிட்ட) மச்சினன் ஒரு கேடரரை ஏற்பாடு செய்திருந்தான்.  அவர் வயதானவர்.  சோளிங்கரில் ஆயிரம்பேருக்கு அன்னதானச் சமையல் சமைப்பவர்.  மூன்று வேலையும் சரியான நேரத்துக்கு அரைமணி, ஒருமணி முன்னதாகவே வந்து விடும்.  அவருக்கு நாங்கள் எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஶ்ரீராம், அம்மாதிரி இக்கட்டான நிலைமையில் ஒருத்தர் தருவதே பெரிய விஷயம். அதிலும் வயதானவர்! இந்த மட்டும் செய்திருக்காரே!

   Delete
 13. ஆனால் அதே சமயம், சுவை?  கொரோனா காரணத்தால் வாய்க்குப் பிடிக்காமல் இருந்தாலும் அவர் சமையல் அப்படி இப்படிதான் இருந்தது.  நீங்கள் சொல்லி இருக்கும் லட்சணங்கள் இதிலும் உண்டு.  இன்னொன்று, குக்கர் சாதத்துக்குப் பழகிவிட்ட எங்களுக்கு வடித்த சாதம் பிடிக்கவில்லை.  பட்டைசாதம் போல இருந்த அதை வடித்த சாதம் என்றுதான் நாங்கள் எண்ணிக்கொண்டோம்!  எது குழம்பு, எது ரசம் என்று கண்டுபிடிக்கவேண்டும்.  இதில் என் சின்னப்பையனைச் சொல்லவேண்டும்.  அவன்தான் அவற்றை ரிஸீவ் செய்து, சில்வர் தாள் பாக்கெட்டில் அடைபட்டிருக்கும் குழம்பு, ரசங்களைப் பிரித்து, இனம் கண்டுபிடித்து அவரவர்களுக்கு ஒரு பாக்கெட் அறை வாசலில் வைப்பான்.  குழம்புக்கு ரசத்துக்கு அடையாளம் எப்படிக் கண்டுபிடிச்சே என்று கேட்டால் தக்காளியை வைத்து என்றான்!

  ReplyDelete
  Replies
  1. இங்கே நான் வடிப்பது உதிர் உதிராகத் தான் வரும் ஶ்ரீராம். எங்களுக்குக் குக்கரும் பழக்கம் இருந்ததால் ஒண்ணும் பிரச்னை இல்லை. வடித்துத் தான் அநேகமாக! எப்போவானும் குக்கர்! உங்கள் பையருக்கு ரொம்பவே பொறுமை. இங்கே தக்காளி சமயத்தில் சாம்பார்/இவங்க பிட்லைனுசொல்றாங்க. போடுவதால் அடையாளம் கண்டு பிடிக்க ரசம் நீர்க்க்க்க்க்க்க்க்க இருக்கும். குழம்பு கொஞ்சம் கெட்டியாக இருக்கும். :(

   Delete
  2. பல தடவை, கடைகளில் வாங்கிய மதிய உணவு பாக்கெட்டில், எது கூட்டு, எது குழம்பு, எது பாயசம் என்று கண்டுபிடிக்க நான் ரொம்பவே சிரமப்பட்டிருக்கேன். கடை உணவு எப்போதுமே வெகு சுமார்தான்.

   பத்து நிமிஷம் மெனெக்கெட்டா, சுடச் சுட சாதம், வெந்தயக் குழம்பு போதும்.

   Delete
  3. நாங்க எந்தக் கடைகளிலும் மதிய உணவு பாக்கெட்டில் வாங்கினதே இல்லை, நல்லவேளையா! என்னிடம் எப்போதும் புளிக்காய்ச்சல், மிளகு குழம்பு ஏதேனும் ஒன்று இருக்கும். ஆகவே ஒரு பக்கம் அடுப்பில் சாதம், இன்னொரு பக்கம் ரசம் வைத்துவிட்டு, இன்னொரு பக்கம் அப்பளம் சுட்டோ, பொரித்தோ வைத்தால் சுடச் சுடச் சாப்பிட்டுடலாம்.

   Delete
 14. வெளியில் வாங்கிச் சாப்பிடுவது அழுத்துதான் விட்டது என்றாலும் சிலசமயங்களில் தவிர்க்க முடியவில்லை.  பாஸுக்கு இன்னமும் சில உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கின்றன.  அவரால் முடியாதபோது நானும் கைகொடுக்கிறேன்.  நேற்று கூட வெளியில் வாங்கிவிடலாமா என்று கேட்டபோது அவசரமாக ஒரு கத்தரிக்காய் வெந்தயக்குழம்பும், ஒரு ரசமும் வைத்தேன்.  என் மாமியார் வெந்தயக்குழம்பின் வாசனையைச் சொல்லிக் கொண்டே இருந்தார்.
  இந்தச் சந்தர்ப்பங்களையும் மீறி வெளியிலும் வாங்கவேண்டிதான் வருகிறது.  காசு கூட...  தரம் கம்மி...   சுவையும் பிடிப்பதில்லை!

  ReplyDelete
  Replies
  1. நாங்க தவிர்க்கலாம்னே என்னோட எண்ணம் ஸ்ரீராம், அதிலும் அந்தக் காய்களை அவங்க பண்ணும் கொலை! இப்படி எல்லாம் மோசமாகக் காய்களைச் சமைப்பாங்க என்பதெ எனக்கு இப்போத் தான் தெரியும். எனக்கு இப்போல்லாம் காய்கள் சாப்பிடவே பிடிப்பதில்லை.

   Delete
 15. ஹாஹா :)))) கீதாக்கா   விவிசி  அதென்னா ஆரிஸ் :))) அப்போ மிஸ்டர் ஹாரிஸை ஆரிசு  நா கூப்பிடுவாங்க :))))) இவங்க மொழிப்பற்றுக்கு அளவில்லையா ??? 
  இன்னொரு வாட்சப் செய்தி வந்து அதாவது கமலாம்மாவின் அப்பா கோபாலன் இலங்கை மானிப்பாய் பக்கத்துக்காரர்னு ..எ .கொ .இ கீதாக்கா :))))))))உண்மையில் கமலா அவர்கள் பொதுவான வேட்பாளர் பிரதிநிதி அமெரிக்க மக்களுக்கு .தமிழர்களுக்கு இல்லை அப்படி பிராண்ட் செய்வதை அவர் விரும்பவில்லை என்றே தோணுது . நாட்டின் vice president  முதல் பெண்மணி என்பதற்க்காக மனதார பாராட்ட வேண்டும்  அதைவிட்டுட்டு நம் மக்களின் செய்கைகள் டூ மாக் 

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஏஞ்சல், மொழிப்பற்று அதிகமாகி நியூ ஜெர்சியையும் நியூ செர்சினு சொல்லிட்டுத் திரியறாங்க. ஒருத்தருக்கானும் தொல்காப்பியம் பற்றித் தெரிஞ்சிருக்காது. அதில் எத்தனை வடமொழி எழுத்துக்கள் இருக்குனும் தெரியாது. அந்தக் காலக் கல்வெட்டுக்களில் கிரந்தம் கலந்தே எழுதி இருப்பாங்க. எந்த ராஜாவும் ஆக்ஷேபணை தெரிவிச்சதாய்த் தெரியலை. வடமொழியில் இருந்து வந்தது தானே குண்டலகேசியும், வளையாபதியும்.சீவக சிந்தாமணியும் வடமொழியில் இருந்து தான் தமிழுக்கே வந்தனவென்று அறியாதிருப்பார்கள். அதிலும் சீவக சிந்தாமணி "க்ஷத்திர சூடாமணி" என்னும் நூலைப் பின்பற்றியே எழுதப்பட்டது. சமண சமய நூல். மற்றவை இரண்டு பௌத்த சமய நூல்.

   இதெல்லாம் இப்படி இருக்கும்போது இங்கே உள்ளவங்க கமலா ஹாரிசுக்கு (ஆரிசுக்கு) தமிழில் கடிதம் எழுதுகின்றனர். ஒரே கொண்டாட்டம் தான். கமலாவின் தாத்தா தான் கோபாலன். அப்பா இல்லை. கமலா ஹாரிஸின் அம்மா சியாமளா கோபாலன் மணந்து கொண்டவர் தான் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த ஹாரிஸ் என்பவர். இவர் தான் கமலா ஹாரிஸின் தந்தை!

   Delete
  2. நியூ ??? இது இங்கிலீஷ்தானே அப்போ அதையும் தமிழுக்கு மாத்திட சொல்லுங்க ஹஹஹஹ :)))))இவங்க அட்டகாசம் தாங்கமுடில .ஆங் கோபாலன் தாத்தாவா !! எனக்கு இவ்ளோ விவரம்லாம் தெரியல .இல்லை எனக்கொரு டவுட் கமலா அவர்களின் கணவர் யூத வழிமுறைபின்பற்றுபவர்னு நினைக்கிறன் ஆனா அந்நாட்டுக்கார்கள் இதுவரைக்கும் எங்க நாட்டு மருமகள்னு நம்மூர்க்காரங்களைமாதிரி அலட்டலை .இது மட்டுமில்லை எங்க  பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி பஞ்சாபியர் அப்போவே நம் நாட்டு ஊடகங்கள் அவரை எங்கள் நாட்டு மருமகன்னு ஓவரா புகழ்ந்தாங்க கடைசில அவர் அவங்களை பிரிஞ்சி இப்போ வேறொருவர் இப்போ வாயே திறக்கமாட்டாங்க .joe biden பற்றியும் எதோ அரசல்புரசலா அவர் தாத்தா சென்னை வாசினு புரட்சி சேசே புரளி கிளம்பினாங்க எங்கேயோ ஹெட்லைன்ஸ் பார்த்து கடந்துட்டேன் ஹையோ நம்ம மக்களை நினைச்சா வேதனையா இருக்கு .  பத்மலக்ஷ்மி ருஷ்டிலாம் கண்ணுமுன்னாடி வந்து போறாங்க நான்  ஓடிடறேன் ஹாஹ்ஹா 

   Delete
  3. ஹா ஹா ஹா மானிப்பாய் என்பது யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரு ஊர், அதுதான் எங்கள் அப்பாவின் சொந்த ஊர்.

   இந்தக் கமலா ஆன்ரியை வச்சே ஜாதிக்கலவரத்தை மூட்டிவிடப் பார்க்கிறா கீசாக்கா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
  4. கீசாக்கா 2 வது பந்தியில் நீங்கள் சொல்ல வந்தது என்னவோ?:)).. இப்போ மாமா சந்தைக்குப் போவது கோபமா? அதிகம் காய்கறி வாங்கிவருவது கோபமா? வீட்டுவேலைக்கு வச்ச ஆளை நிறுத்தியது கோபமா? அம்பேரிக்காவில போய் காலைச் சாப்பாட்டைச் சமைச்சது கோபமா?:)))... வட் இஸ் யுவ புரொப்ளம் கீசாக்கா?:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
  5. அதுதானே இதெல்லாம் ஒரு பதிவோ?:)) ஹா ஹா ஹா இது கீசாக்காவின் மைண்ட் வொயிஸ்:)).. இடைக்கிடை இப்பூடித்தான் ஜத்தமாக ஜிந்திப்பா ஹா ஹா ஹா:))... தீபாவளிக்கென தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கும் சுவீட் குடுக்கினம்.. 200 கிராம் தான் ஒரு பக்கட்டில் உண்டாம்.. ஒவ்வொன்றினதும் விலை.. 450 தொடங்கி 650 ரூபாய்வரை போகிறது,.. இதில் அனுப்புக்கூலியும் வேறு குடுக்க வேண்டும்...

   Delete
  6. கொஞ்சம் மெதுவா வந்து மறுமொழி சொல்றேன். தாமதத்துக்கு மன்னிக்கவும். @ஏஞ்சல், @அதிரடி

   Delete
  7. நியூ ஆங்கிலம் தான் ஏஞ்சல். ஆனால் அது ஒண்ணும் பிரச்னை இல்லை அவங்களுக்கு. ஜெர்சினு வரக்கூடாது. ஜெ அங்கே போடக் கூடாது. முன்னாள் முதலமைச்சர் அவர்களை செயலலிதா எனச் சொல்பவர்கள், எழுதுபவர்கள் உண்டு. அவ்வளவு தமிழ்ப் பற்று. ஜோ பைடன் சின்ன வயசில் ராணுவப் பயிற்சி (அம்பேரிக்காவில் கட்டாயமாச்சே) செய்கையில் சென்னையில் இருந்தாராம். உடனே அவரைத் தூக்கிப் பிடிக்கிறாங்க. :))))) இப்போப் பாருங்க, பைடன் அமைத்திருக்கும் மருத்துவக் கவுன்சிலில் இரண்டு இந்திய வம்சாவளி மருத்துவர்கள் இடம் பெற்றிருப்பதால் முதலமைச்சரில் இருந்து எல்லாக் கட்சிக்காரங்களும் வாழ்த்துத் தெரிவிச்ச வண்ணம் இருக்காங்க! :(

   Delete
  8. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரடி, ஜாதிக்கலவரத்தைத் தூண்டி விடுவது அரசியல்வியாதிங்க, நானில்லை. அநியாயமா இருக்கே! :D

   Delete
  9. நாங்கல்லாம் வெளியிலே எதுவுமே வாங்கறதில்லை அதிரடி. வீட்டில் செய்வது தான்.

   Delete
 16. கேட்டரிங் வெளி சாப்பாடு பற்றி  சொல்ல மறந்துட்டேன் ..இந்த pandamic காரணத்தால் மகிழும் கணவரும் வெளியில் ஆர்டர் கொடுத்து 9 மாதங்கள் ஆகுது :) நானா எப்பவும் வீட்டு சாப்பாடு விரும்பி வெளி சாப்டுலாம் ஒத்துக்காது .ஒரு ரசம் கொஞ்சம் அப்பளம் அது போதும் எனக்கு :)  

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் ரசம் சுட்ட அப்பளம் போதும் ஏஞ்சல். மாமாவுக்கு நினைப்பு எனக்கு உதவி செய்யறோம்னு! அது கடைசியிலே உபத்திரவமாப் போயிடுது.

   Delete
 17. இந்த கமலா காரிஸ் விவகாரங்களில் எல்லாம் நான் விருப்பம் காட்டுவதே இல்லை..

  அங்கே இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கப்படுமேயானால் இங்கே வெடிக்கப் பட்ட வெடிகளின் குப்பைகளைப் பொறுக்கிக் கொள்ள வேண்டியது தான்...

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, துரை, நீங்க சொல்வது சரிதான். :))) இங்கே உள்ளவங்க புரிஞ்சுக்கணுமே!

   Delete
 18. எப்படியோ உணவின் தரத்தையும் ருசியையும் ஒழித்துக் கட்டிய பெருமை பெரும்பாலான கேடரர்களுக்கு உரித்தாகின்றது...

  ReplyDelete
  Replies
  1. உண்மை. உப்பு, புளி, பருப்பு வகைகள் அடையாளம் தெரிஞ்சாலே போதும்னு நினைக்கிறாங்க.

   Delete
 19. நம் நாட்டில் இருக்கும் பெண்களை விட்டு விடுவார்கள், சம்பந்தமே இல்லாமல் யாரையோ பிடித்துக் கொண்டு தொங்குவார்கள். 
  எழுபது வயதிற்கு மேல் இருக்கும் பலருக்கும் வரும் பிரச்சனைதான் வீட்டு சமையலா? கேட்டரிங் சாப்பாடா என்பது. முடிந்த வரை நாமே சமைத்து சாப்பிடுவதுதான் நல்லது. 

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி, நீங்க சொல்லுவது உண்மை. நிர்மலா சீதாராமனை இங்கே யாருக்குமே பிடிக்காது. ஊறுகாய் மாமினு கிண்டல் பண்ணுவாங்க. ஆனால் வெளிநாட்டில் உள்ள பெண்மணியின் தாத்தாவோ கொள்ளுத்தாத்தாவோ தமிழர் என்பதால் கொண்டாடுவாங்க.

   சமையல் வெளியே வாங்குவது இளம் வயதினர் தான் அதிகம் பானுமதி. இதை நான் சென்னையிலேயே நிறையப் பார்த்திருக்கேன். மாலை அலுவலகம் விட்டு வரும்போது வழியிலேயே காடரரிடம் டிஃபன் வாங்கிக் கொண்டு வீடு செல்லும் பல பெண்களைப் பார்த்திருக்கேன். அதே போல் காலையிலும் ஏழரைக்குள்ளாகச் சாப்பாடு சமைக்கவேண்டும் என்பவர்கள் காடரரிடம் சாம்பார், ரசம், கறி, கூட்டு வாங்கிச் செல்வதையும் பார்த்திருக்கேன்.இங்கேயும் அப்படியே. கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் தான் அதிகம் காடரிங் சாப்பாடு வாங்குகிறார்கள். எங்க வீட்டில் என் உடல்நிலை 2 வருடங்கள் முன்னர் மோசமாக இருந்ததால் வாங்க ஆரம்பித்தோம். பின்னர் அம்பேரிக்கா போயிட்டோம். வந்து கொஞ்ச நாட்கள் தான் வாங்கினோம். காடரரை மாற்றினார். வயிறே கன்னாபின்னாவென மாறிவிட்டது. இப்போத் தான் 3 நாட்களாகக் கொஞ்சம் அமைதி காக்கிறது.

   Delete
 20. அன்புள்ள கீதா சாம்பசிவம் அவர்களேஉங்களுக்கும் , உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
  இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
  எல்லாம் கைகூடி வந்து
  என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
  தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், நண்பரே! அதே போல் உங்கள் குடும்பத்தினரும் உடல் ஆரோக்கியத்துடனும் மன மகிழ்ச்சியுடனும் அனைத்து விருப்பங்களும் கை கூடி மகிழ்வான வாழ்க்கை வாழப் பிரார்த்தனைகள், வாழ்த்துகள்.

   Delete
 21. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி மனோ சாமிநாதன், உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

   Delete
 22. அன்பின் இனிய
  தீபாவளி நல்வாழ்த்துகளுடன்...

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் இனிய வாழ்த்துகள் தம்பி. விரைவில் குடும்பத்தினருடன் சேர்ந்து பண்டிகைகள் கொண்டாடும்படி சூழ்நிலை அமையவும் பிரார்த்திக்கிறேன். உங்கள் மனைவியின் உடல் நலம் பரவாயில்லையா?

   Delete
 23. நியூ செர்சி தமிள்ப்பசங்க, கமலா ஆரிசின் கணவர் பெயரை மொளி பெயர்க்காமலிருந்தால் செரி..!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, வாங்க ஏகாந்தன், முழியைப் பெயர்க்காமல் இருந்தால் சரி! :)

   Delete