எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, October 13, 2021

சௌந்தர்ய லஹரி 7! நவராத்திரியில் அம்பிகை வழிபாடு!

 அம்பிகையின் பாதாரவிந்தங்களைச் சரணடைவது குறித்துப்பார்த்தோம். அவள் பாத தூளியால் சிருஷ்டிகளும், வையத்தைக் காப்பதும் , அழிப்பதும் என அனைத்துத் தொழில்களும் சிறப்பாக நடைபெற்று வருவதையும் பார்த்தோம். அந்தப் பாததூளி எத்தகைய மஹிமை வாய்ந்தது எனில் அனைவருக்கும் முக்தியைக் கொடுக்க வல்லது. நம் மனத்தின் இருளைப் போக்கி நம்பிக்கையாகிய சூரியனைப் பிரகாசிக்கச் செய்யும் வல்லமை கொண்டது.

 அவித்யானா-மந்தஸ்திமிர-மிஹிர-த்வீப-நகூரீ

 ஜடானாம் சைதன்ய-ஸ்தபக-மகரந்த-ஸ்ருதிஜரீ

 தரித்ராணாம் சிந்தாமணி-குணநிகா ஜன்மஜலதெள்

 நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு-வரஹஸ்ய பவதி 

அறிவிலர்க்ககு இதய திமிரம் மீரும்

 அளவற்ற ஆதவர் அளப்பிலா 

எறி-கதி-ப்ரபை குழைத்து இழைத்தனைய

தீ இயாமளை நினைப்பிலார் 

செறி மதிக்-கிணரின் ஒழுகு தேன் அருவி 

தெறுகலிக்கு அருள் மணிக்குழாம் 

பிறவி மைக்கடல் விழாது எடுப்பது ஒரு 

பெருவராக-வெண் மருப்பு அரோ. 

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் 

அவித்யா என்பது அக்ஞானம் எனப்படும் மூடத்தனம், மடமை என்றும் சொல்லலாம். நம்முள்ளே நாம் தான் அனைத்தும் செய்கிறோம் என்றதொரு எண்ணம் எப்போதும் இருந்து வருகிறது. இந்த “நான்” என்பது நம்முள்ளே உறைந்து எப்போதும் கோயில் கொண்டிருக்கும் ஜோதிரூபமான ஆன்மாவை நம்மால் உணரமுடியாதபடிக்குச் செய்துவிடுகிறது. மனமென்னும் காட்டிலே நினைவுகளென்னும் விருக்ஷங்கள், எண்ணற்றவை முளைத்துப் படர்ந்து மனம் முழுதையும் இருட்டாக்கி ஞான சூரியனின் கிரணங்கள் சிறிதளவு கூட உள்ளே வராமல் செய்து இருட்டாக்கி விடுகிறது. அந்தக் காட்டின் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி, ஒரு சின்ன அகலை ஏற்றுவது போல் அம்பாளின் பாத கமலங்களை இறுகப் பற்ற வேண்டும் என்றொரு எண்ணமாகிய அகலை ஏற்றிக்கொண்டு இருந்தால், நாளடைவில் அந்த அகலின் வெளிச்சம் கோடி சூரியப் பிரகாசமாகி நமக்கு ஜோதிமயமான ஆன்மாவுடன் ஒன்றிப் போகச் செய்யும். இந்த அக்ஞானம் சாமானிய மனிதருக்கு மட்டுமல்லாமல், புத்திமான்கள், வித்தை தெரிந்த அதிமேதாவிகள், கெட்டிக்காரர்கள் என அனைவரையுமே பீடித்திருக்கும். இவர்களைப் பீடித்திருக்கும் அக்ஞானம் அகந்தையாகும். இன்னும் சிலருக்கு என்ன சொன்னாலும் தெரியாது; தானாயும் தெரிந்து கொள்ள மாட்டார்கள்; சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்களை ஜடம் என்றே சொல்லலாம். 

அப்படிப்பட்டவர்களுக்கு புத்தியின் தேஜஸ் அதிகரிக்கவும் அம்பாளின் பாத தூளி பயன்படும். அடுத்தது தரித்திரம் பிடிப்பது; யாருக்குத் தான் செல்வம் சேர்க்க ஆசையில்லை. செல்வம் சேர்ப்பதில் அடங்கா ஆசையும் உண்டு; அதே சமயம் செல்வந்தர்களைக் கண்டாலே வெறுப்பவர்களும் உண்டு. ஆனாலும் நினைத்ததை நடத்தித் தரும் சிந்தாமணி என்னும் மணியானது தெய்வாம்சமுள்ள மணியானது கிடைத்தால் எப்படி இருக்கும்?? நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் தந்துவிடுமே சிந்தாமணி. அப்படிப் பட்ட சிந்தாமணி தரும் செல்வத்தை எல்லாம் அம்பிகையின் பாததூளி தந்துவிடும்.

கவனிக்க; இங்கே அனைத்துச் செல்வங்களும் கிடைத்துவிடும் என்று வருவதால் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் எனப் பொருள் கொள்வதை விட, இம்மாதிரி அம்பாளின் நாமத்தைப் பாடி அவள் பாததூளியைப் பிரசாதமாகப் பெற்றுக்கொண்டால், நமக்குச் சிந்தாமணியின் மூலம் கிடைக்கும் பெளதிக சம்பந்தமான சொத்துக்களை விட மேன்மையான பெரும் செல்வம் கிட்டும் என்பதே உள்ளார்ந்த பொருளாகும். இதைக் கடைசி வரி விளக்குகிறது. ஹிரண்யாக்ஷன் அபகரித்துக்கொண்ட பூமிதேவியை மஹாவிஷ்ணு வராஹ அவதாரம் செய்து தன் கோரைப்பற்களில் தூக்கிக்கொண்டு வருவார். பாதாளத்துள்ளே இருந்த பூமிதேவியை எவ்வாறு விஷ்ணு அவ்விதம் மேலே தூக்கி வந்து கொண்டுசேர்த்தாரோ அவ்வாறே அம்பிகையின் பாததூளியானது இந்த சம்சார சாகரத்தில அழுந்தி மூழ்கி, மூச்சுத் திணறும் நம்மையும் தன் கருணா சாகரத்தில் கொண்டு சேர்த்து நம்மை ஆனந்தக் கடலில் வாசம் செய்யும்படி செய்யும். 

தேவி மஹாத்மியத்தில் மது, கைடபர் என்னும் இரு அரக்கர்களை மஹாவிஷ்ணு வதம் செய்வார். இந்த இரு அரக்கர்களும் அடங்கா ஆசைக்கும், அடங்கா வெறுப்புக்கும் உதாரணமாவார்கள். இவற்றை வெல்வதையே மது, கைடபர்களின் அழிவு சுட்டுகிறது. நம் மனதில் உள்ள ஆசையையும், வெறுப்பையும் மற்ற எதிர்மறைச் சிந்தனைகளையும் அழித்து ஒழிப்பதையே இது சுட்டிக் காட்டுகிறது. நம்மை நாமே பூரணமாக அறிந்து கொண்டு, நம்மிடம் உள்ள “நான்” என்னும் சுயப் பெருமையை ஒழித்து நம்மை முழுதும் கடவுளின் பாதத்தில் ஐக்கியமடைய வைப்பதே நவராத்திரியின் முக்கியத் தத்துவம் ஆகும். நம்மில் பலரும் ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு மாதிரி இருக்கிறோம்; இன்று சந்தோஷமாக இருந்தால் நாளை எழுந்திருக்கும்போதே வருத்தம் தாங்காது. இன்னொரு நாள் கோபம், எரிச்சல் வரும். ஒரு நாளைப் போல் இன்னொரு நாள் இருக்கட்டும். ஏனென்றே சொல்லமுடியாத கோபமும் வரும். இதற்குக் காரணம் நம் முன்னோர்கள் ஒருபக்கம் எனில் இன்னொரு பக்கம் நம் முன் ஜென்மவினையும் ஆகும். இது குறித்து நாளை பார்ப்போமா! 

மேற்கண்ட ஸ்லோகத்தின் பொருளிலேயே அபிராமி பட்டர் கூறி இருப்பது என்னவென்றால்,

 நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;

 என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின் 

ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து 

அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

 ரிஷி, முனிவர்களால் உணர்ந்து அறியப்பட்டு ஓதப்படுவதான வேதத்தின் பொருளாக இருப்பவளே அம்பிகைதான் என்கிறார் பட்டர். அவள் வேதப் பொருள் மட்டுமல்லாமல் அதன் பொருள் உணர்ந்து ஓதுவோர்க்கு அருளுபவளும் ஆவாள். எல்லாம் வல்ல அந்த ஈசனையே இயக்கும் மாபெரும் சக்தியான அம்பிகையானவள் இமவானுக்கு நன்மை செய்யும்பொருட்டு அவன் மகளாகப்பிறந்தாள். அழியாத முத்தியைத் தன்னை வணங்குபவர்களுக்கு அளித்து வருகிறாள்; அத்தகைய அம்பிகையை நான் நின்று கொண்டிருந்தாலும், நடந்து கொண்டிருந்தாலும், அமர்ந்து கொண்டிருந்தாலும், கீழே கிடந்தாலும் எந்நேரமும் அவளையன்றி வேறொருவரை நினைப்பது என்னால் கூடுமோ! அவள் மலர்ச்சேவடியைத் தவிர வேறொன்றையும் நான் வணங்குவேனோ! அம்பிகையின் திருவடித்தாமரைக்கும், அவள் பாத தூளிகளுக்கும் மோக்ஷம் தரும் வல்லமை உள்ளது என்பதே இதன் உட்கருத்தாகும்.




15 comments:

  1. புத்தியின் தேஜஸ்  வளரவேண்டும் என்பது என் நீண்ட நாள் பிரார்த்தனை.  பக்தியில் குறை.  புத்தியிலும் குறை!

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் இல்லை ஶ்ரீராம். அவரவருக்கு முடிந்த வகையிலேயே பக்தி செலுத்த முடியும். லௌகிக வாழ்க்கையில் இத்தனையே பெரிய விஷயம்.

      Delete
    2. கீதாக்கா இந்த பதிலை ரசித்ததுடன் டிட்டோவும் செய்கிறேன்.

      கீதா

      Delete
  2. தெய்வீகமான பதிவு...

    அம்பிகையின் அருளுக்கு அழகான விளக்கம்.. முன்பே ஓரளவுக்கு அறிந்திருந்தாலும் மேலும் படிக்கையில மனதுக்கு மகிழ்ச்சி..

    ஓம் சக்தி ஓம்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை. உங்களுக்குத் தெரியாதது இல்லை. நீங்களும் இதைப் பற்றி ஓரளவுக்கு எழுதினால் இன்னமும் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்.

      Delete
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. அம்மன் படங்களும் மிக அழகாக இருக்கின்றன. நவராத்திரி சிறப்பு பதிவாக நீங்கள் இன்று தந்திருக்கும் விஷயங்களை படிக்கும் போது மனதுக்கு இனிமையாக உள்ளது. ஸ்லோகம் நன்றாக உள்ளது. இந்த நவராத்திரி சிறப்பு நாட்களில் அம்பாளின் மேல் எப்படி பக்தி செலுத்த வேண்டுமென நீங்கள் அளித்துள்ள விளக்கம் அருமையாக உள்ளது. மெய்யுருகி படித்தேன்."நான்" எனும் அகந்தையை நீக்கி அவள் பாத கமலங்களை இடைவிடாது சதா சர்வ காலமும் நினைக்கும் சக்தியை அவள் தந்தருள வேண்டும். அது நமக்கு எத்தனையாவது பிறவியிலோ சாசுவதமாக, உறுதியாக கிடைத்தாலும், இந்தப்பிறவியிலிருந்தே அதற்கான முயற்சியில் ஈடுபடும் அனுக்கிரஹத்தை நமக்கு அன்னை அருள் கூர்ந்து தர வேண்டும். உங்களது முந்தைய 6 பதிவுகளையும் பின்னர் அவசியம் படிப்பேன்.தங்களுக்கு சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா! உங்கள் பேத்தி உடல்நலம் தேவலையா? உங்கள் உடல் நலமும் பரவாயில்லையா? உங்களுக்குத் தான் எத்தனை சோதனைகள் அடுத்தடுத்து! உங்கள் மனோபலம் வியக்க வைக்கிறது. அம்பிகை மேன்மேலும் உங்களுக்கு மனோபலத்தை அருளித் தரப் பிரார்த்திக்கிறேன். மெதுவாக வந்து படியுங்கள். உங்களுக்கும் தாமதமான சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வாழ்த்துகள்.

      Delete
  4. நவராத்திரி நல்வாழ்த்துகள் மா. அற்புதமான

    சக்தியின் ஸ்லோகங்கள் மீண்டும்மீண்டும்
    நம்மை வளம் பெறச் செய்யும். உங்கள் கொலு
    படங்கள் பார்க்கவில்லை அம்மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரேவதி. நான் எங்கள் ப்ளாக் வாட்சப் குழுமத்தில் கொலு வைத்ததும் படம் எடுத்துப் போட்டிருந்தேன். நீங்கள் பார்க்கவில்லை போல! ஆனால் உங்களுக்கும் வாட்சப்பில் அனுப்பின நினைவு. இல்லைனா இப்போ சரஸ்வதி பூஜை படம் எடுத்து அனுப்பி இருக்கேன், உங்களுக்கு நேற்றே அனுப்பினேன். அதில் எங்க வீட்டுக் கொலுவையும் பார்க்கலாம்.

      Delete
  5. மிக சிறப்பான பதிவு.
    அம்பிகையின் பாதாதுளி நம் மேல் பட வேண்டும்.
    அம்பிகையை சரண் அடைவோம். நலம் யாவும் பெறுவோம்.

    நின்றும் இருந்தும் கிடந்தும் நடத்தும் நினைப்ப (து)உன்னை
    என்றும் வணகுவ(து) உன்மலர்த் தாள் எழு தாமறையின்
    ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமையத்(து)
    அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே.

    ஆனந்தம் தர துதிப்போம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி! அம்பிகையைச் சரண் அடைந்தால் நலங்களை அள்ளித் தருவாள். உங்கள் பதிவுகளுக்கு வரணும். முடியலை. 2,3 நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் தான் வரணும். :(

      Delete
  6. சக்தி இல்லையேல் சிவனில்லை என்பதுமட்டுமல்ல, நாமும் இல்லை!

    கீதா

    ReplyDelete
  7. தொடர்ந்து வாசித்து வந்ததில் மனம் மகிழ்ச்சி அடைந்தது.

    அன்னையின் அருள் இருந்திட்டால் அன்னையும் அவள் உறைந்திருக்கும் சிவனது அருளும் கிடைக்கப்பெற்றால் அதை விட வேறொன்றும் அவசியமில்லைதானே!

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குப் பதிவுகள் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி துளசிதரன். மிக்க நன்றி.

      Delete