உழவர் ஓதை, மதகு ஓதை
உடைநீர் ஓதை, தண்பதம் கொள்,
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய் வாழி காவேரி!
காவிரியில் தண்ணீர் வரத்துவங்கியதும் எடுத்த படங்களை முன்னர் பார்த்தீர்கள். இது ஓரளவுக்குத் தண்ணீர் ஓடுவதால் இன்று காலை எடுத்த படங்கள். அதுவும் நேற்று மேலும் பனிரண்டாயிரம் கன அடி தண்ணீர் திறந்திருப்பதாகச் செய்தியில் பார்த்ததும் இன்று போய் எடுத்து வந்தேன். ஒரு வாரமாகக் காமிராவை எடுத்து வைச்சுட்டு பாட்டரியை சார்ஜ் பண்ணவே இல்லை. ஒரு வழியா நேற்று சார்ஜ் பண்ணிட்டு இன்று காலை போய்ப் படங்கள் எடுத்தேன். அதிகாலையில் எடுக்க நினைச்சேன். ஆனால் வெளிச்சம் வேண்டும் என்பதால் கொஞ்சம் விடிந்தும் விடியாமலும் இருக்கும் ஐந்தே முக்கால் மணிக்கு எடுத்தேன்.
அரங்கன் கோபுரம். தெற்கு கோபுரம்/ராஜ கோபுரம். விளக்கு அலங்காரத்துடன் இன்று காலைக் காட்சி. தினமும் விளக்கு அலங்காரம் உண்டு. எங்க வீட்டுப் பகுதியில் வடக்கே உள்ள ஓர் அறைச் சாளரத்தின் மூலமும் கண்டு களிக்கலாம். எங்க படுக்கை அறையைத் திறந்து கொண்டு வரும்போதே கோபுர தரிசனம் செய்து கொண்டே வரலாம். அரங்கன் தெற்கே பார்த்துக் கொண்டு இருப்பதால் அவன் கண் பார்வையில் இருக்கிறோம் என்னும் ஆறுதல்/திருப்தி!
இது மேற்கே இருந்து காவிரி திரும்பும் இடம். வீடுகள் மறைக்கின்றன. முன்னெல்லாம் இங்கே தோப்புக்களாக இருந்தனவாம். சமீப காலங்களில் வீடுகள் பெருகி விட்டன. எங்க குடியிருப்புக்குப் பக்கத்திலேயே ஒரு தோப்பை அழித்துவிட்டுக் கல்யாண மண்டபம் வந்து விட்டது. இப்போத் தான் இரண்டு வருடங்களாகச் செயல்படுகிறது. இன்னொரு வீட்டை இடித்துவிட்டுக் குடியிருப்புக் கட்டப் போறாங்களாம். கபிஸ்தலக்காரர்கள். ஒருவேளை மூப்பனாருக்குச் சொந்தமாக இருக்கலாமோ என நினைப்போம்.
காவிரி மேற்கிலிருந்து தென் கிழக்காய்த் திரும்புகிறாள். பின்னாடி தெருவின் வீடுகள் எல்லாம் காவிரிக்கரையிலேயே அமைந்துள்ளன. அங்கே அவங்க அவங்க வீட்டு மொட்டை மாடியில் காவிரியைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து காற்று வாங்கலாம். நாங்க அப்படி ஒரு வீட்டைத் தான் தேடினோம். ஒரு குடியிருப்புக் கிடைச்சது. ஆனால் வாங்க முடியலை. தட்டிப் போய்விட்டது.
கொஞ்சம் கிழக்கே வந்துவிட்டாள். அங்கே நீளமாகப் பாலம் போல் தெரிவது குடி தண்ணீருக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் செக் டாம். இங்கே பல படங்கள் ஷூட்டிங் எடுத்திருக்கிறார்கள். அஞ்சலி என்னும் நடிகை கூட யாரோ ஒருத்தருடன் இந்த இடத்தில் பேசுவது போல் எடுத்திருக்கின்றனர். படத்தில் பேருந்து விபத்து நேரும் என நினைக்கிறேன். அந்தப் படமா இல்லைனா வேறே ஏதோ படமா நினைவில் இல்லை.
இதுவும் அதே தான். கொஞ்சம் ஜூம் செய்து எடுத்தேன். இஃகி, இஃகி,இஃகி, தொ.நு.நி. ஆயிட்டேனோ?
கிழக்கே திரும்பிய தண்ணீர். நேற்றிலிருந்து பனிரண்டாயிரம் கன அடி கூடத் தண்ணீர் வருது. அதனால் 2 நாட்களில் இன்னும் கூடவே தண்ணீர் போகும். தண்ணீர் வரலைனால் அடிச்சுப்பாங்க. எல்லாத்துக்கும் மோதி தான் காரணம், அவர் தான் கையை வைச்சுத் தடுத்து நிறுத்திட்டதாச் சொல்வாங்க. இப்போத் தண்ணீர் வந்திருப்பதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கலை யாரும். இதிலே விவசாயிங்க போராட்டம் வேறே நடத்தப் போறாங்களாம். முன்னர் தில்லியிலே போய்ப் போராடினாங்களே அவங்களே தான். இப்போவும் தொடரப் போறோம்னு சொல்லி இருக்காங்க.
கீழிருக்கும் இரு படங்களும் கிட்டக்க செக்டாமைக் காட்டுது. எதிர்க்கரையில் இன்னமும் மிச்சம், மீதித் தோப்புக்கள் இருக்கின்றன. இங்கே விடத் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் பரவாயில்லை. காவிரிக்கரையில் இன்னமும் பசுமை மீதம் இருக்கு அங்கெல்லாம்.
இது சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இன்னொரு கோணத்தில் எடுத்தது. அம்புடுதேன். தொ.நு.நி.ன்னா கோணம் எல்லாம் பார்த்துக் கோணலாக எடுக்க வேண்டாமோ! என்ன நான் சொல்றது?
திரும்பிடுச்சுப்பா, திரும்பிடுச்சு! கிழக்கே போயிட்டிருக்கு!
இன்னும் கொஞ்சம் தள்ள்ள்ள்ளி
நல்லாக் கரை ஓர வீடுகள் மட்டுமே தெரியும் வண்ணம் வந்திருக்கு பாருங்க!
அங்கே நம்ம பக்கத்துக் கரை இல்லை அது! வீடுகள் சில தெரிகின்றன. தென்னை மரங்கள் மறைக்குது. தூரத்தில் தெரியும் சர்ச் உ.பி.கோயில் பக்கம் இருப்பது தான். பழைய சர்ச் அது! ஜூம் பண்ணி எடுக்கலை.
இங்கே நம்ம உ.பி.யை ஜூம் பண்ணி எடுத்திருக்கேன் ஓரளவுக்கு. என்றாலும் இன்னமும் பண்ணி இருக்கலாமோ? அவர் எதிர்க்கரையில் திருச்சியில் இருக்கார்.
முடிஞ்சவரை ஜூம் பண்ணி எடுத்ததில் இவ்வளவு தான் உ.பி. வந்தார். இடுக்கில் கொஞ்சம் போலக் காவிரி தெரியுது.
இது நம்ம வீட்டுப் பிரபலமான ஜன்னல். லிஃப்ட் பக்கத்தில் இருக்கும். நம்ம எ.பி. ஸ்ரீராம் எடுத்துப் போட்டிருக்கார். நானும் எடுத்துப் போட்டிருந்தேன். ராமலக்ஷ்மிக்கு நினைவிருக்கும். ஆனால் அப்போ மாதிரி இப்போக் காவிரி அவ்வளவு தெரியலை. படத்தைக் கொஞ்சம் பெரிது பண்ணித் தான் காவிரியைப் பார்க்கணும். முன்னைக்கு இப்போ வீடுகள் வந்துவிட்டன. ஆகவே முன் போல் தெரியறதில்லை.