எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 01, 2016

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை!


1. சுமார் 25% சதவித இடங்களை பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் ஒதுக்க வேண்டும். மத்திய அரசு அதற்கான உரிய தொகையை வழங்கும்.

இதன் மூலம் நலிந்த மாணவர்களும் பயன்பெறலாம். எல்லோருக்கும் கல்வி என்பது நிறைவேற்ற முதற்படி இது. தமிழ்நாடு மற்ற மாநிலங்களைப் பார்க்கையில் பரவாயில்லைனு சொல்லலாம். உ.பி, பிஹார் போன்ற மாநிலங்களில் கல்வியின் தரம் அதளபாதாளம் என்பதோடு அங்கே படிப்பறிவு பெற்றவர்களும் குறைவே! நல்ல தரமான பள்ளிகள் கிடைத்தால் கட்டணமும் கட்டுபடியானால் ஏழைக் குழந்தைகள் படிக்க முன்வருவார்கள்.

2. 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை இந்தியா முழுமைக்கும் ஒரே கல்வி திட்டம். இணையங்களிலும் இந்த பாடங்கள் நடத்தப்படும்.

இதன் மூலம் இந்திய மாணவர்கள் அனைவரும் மத்திய அரசுப் பாடத்திட்டத்தின் மூலம் உலக அளவில் போட்டியிடத் தகுதி பெறுவார்கள். இந்தியாவிலேயே நடக்கும் நுழைவுத் தேர்வுகளில் அச்சமின்றிக் கலந்து கொள்ள முடியும்! தகுதியுள்ள மாணவர்களுக்குத் தகுதி உள்ள இடங்கள் கிடைக்கும்.

3. ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வுகளை மத்திய அரசே நடத்தி வேலைக்கு அமர்த்தும்.

ஆசிரியர் தகுதி வாய்ந்தவராக அமைந்தால் மாணவர்களுக்கு அதிர்ஷ்டம் தானே! தகுதி பெற வேண்டும்; தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற முனைப்புடன் ஆசிரியர்கள் செயல்படுவார்கள். கல்வியின் தரம் நிச்சயமாய் உயரும்.

4. எல்லாப் பள்ளிகளும் தேவையான வசதிகளுடன் இருக்க வேண்டும். இல்லையேல் பள்ளிகள் தகுதி நீக்கம் செய்யப்படும்.

இது ரொம்பவே முக்கியமானது. பல பள்ளிகளும் சரியான கட்டிடங்கள் இல்லாமல் மேலே கூரையுடனோ அல்லது அஸ்பெஸ்டாஸ் ஷீட்டால் மூடப்பட்டோ காட்சி அளிக்கிறது. மேலும் கழிவறைகள் என்பதே பல பள்ளிகளில் இல்லை. பயிற்சிக் கூடங்கள் கிடையாது! மத்திய அரசின் நிதி உதவியுடன் கிராமத்துப் பள்ளிகளும் இதன் மூலம் பயன்பெறும்.

5. ஒரு கிளாஸ் யோகா , நல் ஒழுக்கம் சொல்லி கொடுக்கப்படும் ,,

இவை இரண்டுமே மனக்கட்டுப்பாடுக்கு உதவும் ஒரு விஷயம். சுமார் 40, 50 வருடங்கள் முன்னர் நீதி போதனை, உடல் பயிற்சி போன்றவை கட்டாயப்பாடமாக இருந்தன. இப்போது எதுவும் இல்லை. ஆகவே நீதி போதனை வகுப்புகள் நிச்சயம் தேவை. அதோடு யோகாசனம் கற்பதன் மூலம் மாணவ, மாணவிகளின் மனம் ஒருமைப்படும். திடமான மனதும் எதற்கும் கலங்காத உறுதியும் ஏற்படும். மனம் தீங்கான விஷயங்களை நினைக்காது!

6. சமஸ்கிருதம் , படிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் படிக்கலாம்

இது ஏற்கெனவே பல பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ள ஒன்றே. புதிது அல்ல. இன்னும் சொல்லப் போனால் காங்கிரஸ் கட்சி ஆண்டு வந்த காலங்களிலேயே இது இருந்து தான் வந்தது. இப்போது புதிதாக அறிமுகம் செய்யவில்லை. மேலும் விருப்பம் உள்ளவர்கள் தானே படிக்கப் போகின்றனர்! அனைவரும் இல்லையே! ஏற்கெனவே அஹோபிலம் மடம் பள்ளிகளில் சம்ஸ்கிருதம் ஒரு மொழிப்பாடமாக வைக்கப்பட்டு அதில் முஸ்லீம் மாணவர்கள் கூட நல்ல மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் வந்திருக்கின்றனர்.

மேலும் ஏதேனும் தொழில் கல்வி கற்றுக்கொடுக்கப் போவதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் விருப்பம் உள்ளவர்கள் தான் கற்பார்கள். அனைவரும் கற்கப் போவதில்லை. இதன் மூலம் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கோ அல்லது படிப்பு முடிவடைந்தும் வேலை வாய்ப்புக் கிடைக்காத மாணவர்களுக்கோக் கொஞ்ச காலமாவது இந்தத் தொழிலின் மூலம் பிழைப்புக்கு வழி கிடைக்கும். இப்போதெல்லாம் இந்தத் தொழில் கல்வி சொல்லிக் கொடுப்பதில்லை.

ஆனால் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் என் அப்பா வேலை பார்த்தபோது அங்கே தச்சுத் தொழில், நெசவுத் தொழில் கற்றுக் கொடுத்து வந்தனர். எனக்குத் தெரிந்து எண்பதுகள் வரை அவை இருந்தன. விரும்பிய மாணவர்களே கற்றனர். நெசவுத் தொழில் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் இருவரும் பிராமணர்கள் என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று. மறைந்து வரும் பல தொன்மையான தொழில்களை இதன் மூலம் மீட்டெடுக்கலாம். ஒரு பக்கம் மறைந்து வருகின்றன என்று சொல்வோம். இன்னொரு பக்கம் அதைக் கற்க அரசு ஏற்பாடு செய்தால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்போம். இது தான் எல்லாவற்றிலும் நம் நிலை!

பாலிய விவாஹம் என்றால் எதிர்ப்போம். ஆனால் பள்ளி மாணவ, மாணவியர் படிக்கையிலேயே காதலித்தால் அதை ஆதரித்து கோஷம் போடுவோம். அந்தக் காதல் நிறைவேற வேண்டும் என்று சொல்வோம். எதிர்ப்பவர்களைக் கண்டிப்போம். பள்ளி மாணவ, மாணவியர் காதலைக் குறித்துத் திரைப்படங்கள் எடுத்து மகிழ்வோம். :(  இதே போல் தான் குழந்தைத் தொழிலாளர் விஷயமும்! ஒரு பக்கம் படிக்கையிலேயே வேலை செய்வதைப் பாராட்டி எழுதுவோம். இன்னொரு பக்கம் குழந்தைத் தொழிலாளி என்போம். தீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகள் வேலை செய்கின்றன என்றால் அதன் மூலம் அவங்க கல்விக்குத் தானே பணம் சேர்க்கிறார்கள்! இதை மறந்துவிடுவோம்.

ஆனால் இங்கே நகரங்களில் பேப்பர் போட்டு, பால் போட்டுப் பணம் சேர்த்துப் படிப்பதை வரவேற்போம். நகரத்துக் குழந்தைகள் இம்மாதிரி சம்பாதித்தால் கிராமத்துக் குழந்தைகள் தங்களுக்குத் தெரிந்த வகையில் சம்பாதிக்கிறார்கள். குடும்பத்துக்கு உதவுகிறார்கள். தங்கள் கல்விச் செலவை ஈடுகட்ட முயல்கிறார்கள். இதை நாம் புரிந்து கொள்வோமா?  அமெரிக்காவில் பத்தாம் வகுப்பு முடித்ததுமே வேலைக்குச் செல்ல ஆரம்பிக்கின்றனர். இப்போது எங்கள் பேத்தியும் அங்கே வேலை செய்து கொண்டு தான் இருக்கிறாள். அவளுடைய சம்பளப் பணம் அவளுடைய கல்விச் செலவுக்காகச் சேமிக்கிறாள். இதை அங்கே யாரும் குழந்தைத் தொழிலாளர் என்று சொல்வதில்லை. பத்து வயதுக்குக் கீழ்ப்பட்ட குழந்தைகள் வேலை செய்தால் தான் தவறு.

இன்னும் இது போன்று பல நல் விஷயங்கள்.. இது குறித்துத் தமிழ்நாட்டுக் கல்வியாளர்களின் கருத்தையும் மத்திய அரசு கேட்டிருக்கிறது. அந்த அந்த மாவட்டத் தலைவர்களிடமும் கல்வியாளர்களோடு கலந்து ஆலோசனை செய்து தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுமாறு மத்திய அரசு கேட்டிருக்கிறது. ஆனால் ஒரு சில மாவட்டத் தலைவர்கள் தவிர மற்றவர்கள் வருவாய்த் துறையின் வேலைகளில் மும்முரமாக இருந்தபடியால் கலந்தாலோசனைக் கூட்டமே நடைபெறவில்லை! நம் கருத்தையும் பதிவு செய்ய முடியவில்லை.  இது மிகவும் வருந்தத்தக்க ஒரு விஷயம்!

நவோதயா பள்ளிகளைத் தான் வரவிடவில்லை. ஆனால் குறைந்த பட்சமாக இந்தக் கல்வித் திட்டத்தையாவது மாநில அரசு ஏற்க வேண்டும். மாநில அரசின் சுமை பெருமளவு குறையும்! மற்ற நலத்திட்டங்களில் கவனம் செலுத்தலாம். இன்னும் நிறையச் சொல்லணும்னு தான்! ஆனால் ஏற்கெனவே பத்து வருடங்களாக இதைக் குறித்துப் பேசி வருகிறேன். ஆகவே இது போதும்னு நினைக்கிறேன்.

16 comments:

  1. அதெல்லாம் ஒத்துக்க மாட்டோம். மோடி அரசு எது பண்ணாலும் தப்பாத்தான் இருக்கும். ஒத்துழைப்பும் கொடுக்க மாட்டோம்; கண்மூடித்தனமா எதிர்க்கவும் செய்வோம்! அக்காங்!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி,செய்ங்க, தம்பி, செய்ங்க!

      Delete
  2. 1. சுமார் 25% சதவித இடங்களை பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் ஒதுக்க வேண்டும். மத்திய அரசு அதற்கான உரிய தொகையை வழங்கும்.

    ஏன் தனியாருக்கு மானியம் கொடுக்க வேண்டும். தனியார் பள்ளிகள் அனுமதிக்காமலிருக்கலாம். அல்லது மானவர்களுக்கு இந்தத் தொகையை உபகாரச் சம்பளமாக அனுமதிக்கலாம். அல்லது இந்த மானியத் தொகையைக் கொண்டு அரசே புதிய பள்ளிகளை நிறுவிடலாமே. இப்போது தான் புரிகிறது. Education Cess பெயரில் வாங்கும் வரி முழுதும் தனியார் மானியம் ஆகிறது என்பது.

    2. 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை இந்தியா முழுமைக்கும் ஒரே கல்வி திட்டம். இணையங்களிலும் இந்த பாடங்கள் நடத்தப்படும்.
    தற்போது CBSE பள்ளிகள் அதைத் தானே செய்கின்றன.

    3. ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வுகளை மத்திய அரசே நடத்தி வேலைக்கு அமர்த்தும்.

    தகுதித் தேர்வு பெண்டுமானால் நடத்தலாம். ஆனால் ஒவ்வொரு பள்ளிக்கும் நியமனம் செய்வது என்பது மத்திய அரசால் இயலாத காரியம்.

    4. எல்லாப் பள்ளிகளும் தேவையான வசதிகளுடன் இருக்க வேண்டும். இல்லையேல் பள்ளிகள் தகுதி நீக்கம் செய்யப்படும்.

    இதைச் செயல்படுத்தினால் 50% அரசு பள்ளிகளை மூட வேண்டி வரும்.

    5. ஒரு கிளாஸ் யோகா , நல் ஒழுக்கம் சொல்லி கொடுக்கப்படும் ,,
    கற்றுத் தரட்டும்.ஆனால் கட்டாய படுத்தக்கூடாது. இது கார்பொரேட் சாமியார்கள் பிழைக்க ஒரு வழி என்றே தொன்று கிறது.
    6. சமஸ்கிருதம் , படிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் படிக்கலாம்

    இது ஏற்கெனவே பல பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ள ஒன்றே. புதிது அல்ல.

    புதிது அல்ல என்று சொல்லிவிட்டு மீண்டும் ஏன் அதை சொல்லவேண்டும். சமஸ்கிருதம் படிப்பதால் நன்மை என்றால் மாணவர்களே தாமாக முன் வருவார்கள்.

    திரு நடன சபாபதி அவர்கள் அவருடைய வலைதளத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு பற்றி விவரமாக எழுதியதை படித்துப் பாருங்கள்.

    இந்தியா என்றுமே முழுமையான ஆட்சியின் கீழ் இருந்ததில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் 525 மன்னர் ஆட்சி பிரதேசங்கள் இருந்தன என்பது தெரியும் அல்லவா? சுதந்திரம் பெற்றபின் constitution என்ற சட்ட அமைப்பில் மத்திய அரசு, மாநில அரசு, நகர அரசு, பஞ்சகாயத்துகள், கிராமங்கள் என்று அரசு முறையைப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு துறையில் சட்டங்கள் இயற்ற உரிமை கொடுத்தனர். இதனால் தான் மொழி மதம் இனம் என்று வேறு பட்டவர்களாகிய நாம் இந்தியா என்ற ஒருமைப் பாட்டின் கீழ் வருகிறோம்.

    கல்வியை மேம்படுத்திக்கிறோம் என்ற பெயரில் மத்திய அரசு உள்ள உரிமையைப் பறிக்க நினைக்கும்போது எந்த மாநில அரசு உரிமையை வீட்டுக் கொடுக்கும்?

    இவ்வாறு மத்திய அரசு எதேச்சதிகாரமாக மாநிலங்களின் உரிமையைப் பறித்தால் பிரிவினை கோரிக்கைகள் தலை எடுக்கும், ஒவ்வொரு மாநிலமும் காஸ்மீர் ஆகி விடும்.

    மோடிக்கு கொடி பிடியுங்கள்.

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. சிபிஎஸ்சி பள்ளிகள் மட்டும் தான் ஒரே பாடத்திட்டம். மற்ற மாநிலப் பள்ளிகள்? அவையும் மத்திய அரசு பாடத்திட்டத்தைக் கடைப்பிடித்தால் எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்கும். அதோடு சம்ஸ்கிருதம் ஏற்கெனவே இருந்து வருவது தான். சென்னை க்வீன் மேரீஸ் கல்லூரியில் எங்க பொண்ணு சம்ஸ்கிருதம் பி.ஏ. தான் படித்தாள். இப்போது சமீபத்தில் எல்லாம் இல்லை! தொண்ணூறுகளில்! இது ஒன்றும் யதேச்சாதிகாரமும் அல்ல. மாநிலங்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டன. அனைத்து மாநிலங்களிலும் கருத்துக் கணிப்புகள் மத்திய அரசோடு பகிரப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் நடக்கவில்லை! மேலும் ஹிந்தியும் திணிப்பதில்லை. இப்போதும் பல தனியார் பள்ளிகளில் தமிழ்நாட்டில் ஹிந்தியும், சம்ஸ்கிருதமும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தான் எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு! கண்மூடித்தனமான எதிர்ப்பு!

      அடுத்து யோகா கார்ப்பொரேட் சாமியார்களுக்கு உரியது அல்ல! சாமானிய மக்களுக்கு உரியதே! எனக்கு யோகா சொல்லிக் கொடுத்தவர் எங்களைப் போன்ற நடுத்தர வர்க்கத்து ஆசாமி தான்! எங்கள் பெண் சென்னை கேந்திரிய வித்யாலயாவில் படித்தபோது யோகாவுக்கு எனத் தனியாக ஆசிரியர் இருந்தார். அப்போது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தார். அவர் தான் யோகாவை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அறிமுகம் செய்து வைத்தார். அது பரவாயில்லையா? மோதி கொண்டு வந்தால் மட்டும் தப்பா? இப்போது கர்நாடகாவில் ஒரு வாரமாக அடுத்தடுத்தப் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கையே ஸ்தம்பித்துள்ளது. அங்கேயும் தலித்துகள் வன்முறைக்கு ஆளாகி இருக்கின்றனர். ஆனால் அங்கே ராகுல் காந்தியோ, மாயாவதியோ, முலாயம்சிங்கோ, அர்விந்த் கெஜ்ரிவாலோ ஏன் போகவில்லை? கேரளாவில் தலித் பெண் கொலைசெய்யப்பட்டபோது இவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள்? பிஹாரில் தலித்துகள் வன்முறைக்கு ஆளானபோது ஏன் யாரும் போகவில்லை? தமிழ்நாட்டில் தலித் பையர் கொல்லப்பட்டபோது ஏன் யாரும் வரவில்லை? காஷ்மீர் முழுவதும் போராட்டம் நடக்கவும் இல்லை! போராட்டம் நடக்கும் இடம் நம்ம விழுப்புரம் அளவுக்கான பரப்பளவு உள்ள இடம் தான்! ஊடகங்கள் அதைப் பெரிதாகப் பேசுகின்றன. ஏனெனில் அங்கே பிஜேபியும் சேர்ந்த கூட்டாட்சி நடக்கிறது. ஆகையால் பேசுகின்றன. இதுவே காங்கிரஸ் என்றால் ஊடகங்கள் கவனித்திருக்கவே கவனித்திருக்காது.

      Delete
  3. நான் எதேச்சதிகாரம் என்று சொன்னது மாநிலங்களின் உரிமையைப் பறிப்பதில் காட்டும் தீவிரம்.

    ​எல்லோருக்கும் ஒரே மாதிரி கல்வி என்பது சாத்தியமில்லை. தற்போது நாட்டுக்கு நாடு கல்வி முறை வேறுபடவில்லையா? அது போன்று கல்வித் திட்டங்கள் மாநிலங்களில் வேறு பட்டால் என்ன? ஒரே பாடத்திட்டம் என்று ஒரே மொழி வழியில் தான் பாடங்கள் படிக்கவேண்டும் தாய் மொழியில் பாடங்கள் கூடாது என்றெல்லாம் பின்னர் சொல்வார்கள். எதற்க்காக இந்த கல்வி சீர்திருத்தம் என்பதே புரியவில்லை. ​

    நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலாக நீங்கள் வேறு என்னவோ சொல்கிறீர்கள்.

    என்னுடைய கேள்வி.

    எதற்க்காக ஒரே பாடமுறைத்திட்டம் நடைபெற வேண்டும்?

    எதற்காக தனியாருக்கு மானியம் கொடுக்க வேண்டும்?

    ஏன் மத்திய அரசே ஆசிரியர்கள் தேர்வு நடத்த வேண்டும்?

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. இந்தியா முழுமைக்கும் ஒரே கல்விக் கொள்கை இருப்பது மாநிலங்களின் உரிமையைப் பறிப்பது ஆகி விட்டாது. ஏற்கெனவே கேந்திரிய வித்யாலயாவில் இது இருந்து வருகிறது. அதனால் எந்த மாநிலத்தின் உரிமை பறி போயிற்று? தாய்மொழியைத் தள்ள வேண்டும் என்றும் சொல்லவில்லை. ஒரே பாடத்திட்டம் என்றால் அதன்மூலம் நுழைவுத் தேர்வு எழுதக் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கும் தகுதி கிடைக்கும். இப்போது நுழைவுத் தேர்வுகளை எழுதினால் இங்குள்ள கிராமப்புற மாணாக்கர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தானே எதிர்க்கிறார்கள்? அந்த எதிர்ப்பு ஒரே பாடத்திட்டத்தில் படிப்பதில் மறையும். தனியாருக்கு மானியங்கள் கொடுக்காத அரசு எது? எந்தத் தனியார் பள்ளியோ, கல்லூரியோ அரசின் மானிய உதவி இல்லாமல் கல்லூரிகளையும், பள்ளிகளையும் நடத்துகிறது? இது புதுசும் அல்ல. இங்குள்ள தனியார் பள்ளிகளின் பயமே வேறு! அவங்க சார்ந்துள்ள மதக் கொள்கைகள் இடம்பெறாமல் போய்விடுமோ என்னும் பயம் அவங்களுக்கு! கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கிறாங்க. ஹிந்தி எதிர்ப்பு என்று நீங்கள் குறிப்பிட்டதால் ஹிந்தி படிக்கும் மாணவர்கள் வருடா வருடம் அதிகமாகி வருவதைச் சுட்டிக் காட்டினேன். அதே போல் தான் சமஸ்கிருதத்துக்கும்! எதிர்ப்பு இருந்தால் அதைப் படிக்க மாணவர்களே முன்வரமாட்டார்களே!

      Delete
    2. ஆயுர்வேதம் படித்தாலோ, பரத நாட்டியம் கற்றாலோ, ஸ்தபதியாகச் சிற்பக் கலை பயின்றாலோ சம்ஸ்கிருதம் தெரியாமல் இவை எதுவும் படிக்க முடியாது. அதுவும் குஜராத்தில் ஜாம்நகர் ஆயுர்வேதப் பல்கலைக் கழகத்தில் ஜப்பான், மலேசியா, சிங்கப்பூரில் இருந்து எல்லாம் மாணவர்கள் வந்து படிக்கிறார்கள். அனைவரும் சம்ஸ்கிருதம் கற்றுக் கொண்டே படிக்கிறார்கள். நாம் என்ன செய்வோம் என்றால் ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், சீன, ஜப்பானிய மொழி, ஜெர்மன் மொழி போன்றவை கற்க எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டோம். இந்திய மொழியான சமஸ்கிருதமும், ஹிந்தியும் கற்றால் தமிழ் அழிந்து போய்விடும் என்று கூப்பாடு போடுவோம்! தொன்மையான மொழி, உலகின் முதல் மொழி எனப்படும் தமிழ் அவ்வளவு பலஹீனமாகவா இருக்கிறது? ஆந்திர மொழி, கர்நாடக, மலையாள மொழிகளில் சமஸ்கிருதக் கலப்பு இருந்தும் இன்று உலகிலேயே அதிக அளவில் பேசப்படும் மொழிகளாக அவை உள்ளன. நாம் தமிழ் வளரவேண்டுமெனில் தமிழர் தமிழிலேயே பேசிக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்வதில்லை! நான் ஒன்பதாம் வகுப்பு வரை தமிழ் மீடியம் தான் படித்தேன். அதன் பின்னர் சிறப்புப்பாடமாக செக்ரடேரியல் கோர்ஸ் எடுத்ததால் கட்டாய ஆங்கில மீடியம்! எட்டாம் வகுப்பு வரை ஹிந்தியும் உண்டு!

      Delete
  4. கல்விக் கொள்கைகள் கட்டாயம் மாற்றப்பட வேண்டும். தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். சாத்திய அசாத்தியங்கள் ஆராயப்பட்டு அவனுடயம் சரியாகச் செயல்படுத்தப்படவேண்டும். எந்த ஒரு செயலுக்கும் எதிர்ப்பு என்பது இருக்கத்தான் செய்யும். அவர்கள் எதிர்ப்பில் இருக்கும் காரணங்களை ஆராய்ந்து, அரசின் திட்டங்களில் பலவீனமாக எடுத்துச் சொல்லப்படுபவற்றை நீக்கி, திட்டத்தை அவர்களையும் ஏற்க வைக்க வேண்டும். நீதி போதனை போன்ற கல்வி முறைகள் இன்றைய கால கட்டத்துக்கு ஆரம்பப் பள்ளி வகுப்புகளிலிருந்தே சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.

    நேற்று திறக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம் தனது மாணவர்களுக்கு சில புதிய (ஏற்கெனவே இருந்தவைதான் அவையும்) கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. நல்ல விஷயம். ஆனால் பின்பற்றப்பட வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. சீர் கெட்டு வரும் சமுதாயம் உருவாகக் காரணமே இந்தக் கல்விக் கொள்கைதான்! ஆசிரியர்களிடமும் தகுதி இல்லை. மாணாக்கர்களும் தகுதிகளை வளர்த்துக் கொள்ளவில்லை! எதிர்ப்பின் காரணங்களைத் தான் தமிழக அரசிடம் கேட்டிருக்கிறது மத்திய அரசு. தமிழ்நாட்டிலிருந்து இன்னமும் பதில் போகவில்லை. அண்ணா பல்கலைக் கழகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் கடுமையாகக் கடைப்பிடிக்கவேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்துகளே இல்லை!

      Delete
  5. முதலில் கல்வி concurrent subject என்பது மாறவேண்டும் மத்திய அரசே கல்விக்குப் பொறுப்பு ஏற்கவேண்டும் ஆனால் கல்வி மூலம் ஹிந்துத்துவா பரப்பப் படக் கூடாது யோகா என்பது உடற்கூறு பயிற்சி அதையே சாமியார்கள் நலம் பெற ஏற்பாடாக்கக் கூடாது இந்தியா ஒரு டைவெர்ஸ் நேஷன் பல வேற்றுக் கருத்துகள் இருக்கும் அரசே அனைவருக்கும் சமகல்வி மற்றும் இலவசக் கல்வி வழங்கவேண்டும் முக்கியமாக எந்த விஷயத்தையும் திணிப்பது தவறு தமிழ் படிக்காமலேயே பள்ளி இறுதிவரை தமிழ் நாட்டில்தான் படிக்க முடியும் என்னும் கருத்தை வே நடனசபாபதி சொல்லி இருக்கிறார் இப்போது அரசு மேற்கொள்ள இருக்கும் இந்தப்பதிவில் இருப்பது போல் மாற்றங்களைக் கொண்டு வந்தால் மத்திய அரசின் கொள்கை மீது நம்பிக்கை போய்விடும் அரசே கல்வியை உடைமை ஆக்க கான்ஸ்டிட்யூஷனில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் அப்போது இதன் நிறை குறைகள் எல்லாம் விவாதிக்கப்படும் எதிர்க்கட்சியினரை எதிரிக்கட்சியினராக எண்ணக் கூடாது

    ReplyDelete
    Replies
    1. யோகா என்றாலே ஏன் சாமியார்களை நினைக்கவேண்டும் என்பதே புரியறதில்லை. இந்துத்துவா என்றால் என்ன? மத்திய அரசின் கொள்கைகள் தெளிவாகவே இருக்கின்றன. இதன் நிறை, குறைகள் விவாதிக்கப்பட்டு மற்ற மாநிலங்கள் கொள்கை அளவில் ஏற்றும் கொண்டிருக்கின்றன. இங்கே தான் எல்லாவற்றிற்கும் எதிர்ப்பு! :)

      Delete
  6. தங்களது மாறுபட்ட கண்ணோட்டத்தில் அலசிய விதம் நன்று.

    ReplyDelete
    Replies
    1. இதைக் குறித்து இன்னமும் நிறையத் தகவல்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகத் தான் சொல்ல வேண்டும்.

      Delete
  7. இந்தியா முழுமைக்கும் ஒரேவிதமான கல்வி என்ற திட்டம் நடைமுறைக்கு ஒத்துவரும் என்று தெரியவில்லை! தனியார் பள்ளிகளில் நலிவடைந்தோருக்கு இட ஒதுக்கீடு என்பதை விட அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்துவதே சிறப்பாக அமையும். மொழிகளை திணிப்பதை விட ஆர்வத்துடன் கற்க வழிவகுப்பதே சிறப்பு!

    ReplyDelete
    Replies
    1. ஒன்பதாம் வகுப்பில் இருந்து தானே ஒரே பாடத் திட்டம். இதனால் விளையும் நன்மைகளை நினைத்துப் பார்க்க வேண்டும். கிராமத்தில் இருக்கும் குப்பனுக்கும், சுப்பனுக்கும் மத்திய அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் வாய்ப்பு இப்படியானும் கிடைக்கும். அதனால் அவர்கள் கல்வியின் தரம் உயர்வதோடு மருத்துவ, பொறியியல், மேலாண்மை மற்றும் குடிமைப் பயிற்சி நுழைவுத் தேர்வுகள் அனைத்திலும் தைரியமாகக் கலந்து கொள்ள இயலும். ஏனெனில் இந்த நுழைவுத் தேர்வுகள் பொது நுழைவுத் தேர்வு என்பதால் அனைத்தும் மத்திய அரசுப் பாடத்திட்டத்தை ஒட்டியே கேள்விகள் வருகின்றன. அதை மாணாக்கர்கள் தைரியமாக எதிர்கொள்ளலாம். எந்த மொழியையும் திணிக்கவும் இல்லை. ஏற்கெனவே பல பள்ளிகளில் குறிப்பாகத் தனியார் பள்ளிகளில் ஹிந்தியும் சம்ஸ்கிருதமும் கற்றுக் கொடுக்கப்படும்போது அவற்றை அனுமதிக்கும்போது மத்திய அரசுப் பள்ளிகளில் இவை ஏன் இருக்கக் கூடாது? அதை ஏன் எதிர்க்க வேண்டும்? இவற்றை எதிர்ப்பவர்களால் தனியார் பள்ளிகளில் ஹிந்தி, சம்ஸ்கிருதம் கற்றுக் கொடுக்கக் கூடாது என்று எதிர்க்க முடியுமா? அங்கே உள்ள மாணவர்கள் அவர்கள் விருப்பம்போல் படிக்கலாம் என்றால் அது எல்லா மாணவருக்கும் பொருந்தும் தானே! மேலும் இது ஒன்றும் கட்டாயப்பாடமும் இல்லை! அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் திட்டமும் இருக்கிறது. ஆனால் இந்தப் பாடத்திட்டங்கள் தான் மாநில அரசுக்கு ஏற்புடையதாக இருக்குமா என்று தெரியவில்லை. :)

      Delete
  8. கல்வித்திட்டம் மாற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நண்பர் ஸ்ரீராம் சொல்லியிருக்கும் கருத்தினை வழிமொழிகின்றோம். பொதுவாக பின்னூட்டம் இடும் முன் பிற பின்னூட்டங்களை வாசிக்காமல் எங்கள் கருத்தை இட்டுவிட்டுச் சில சமயங்களில் வாசிப்பதுண்டு. ஆனால் கல்வி பற்றியது என்பதால் ரெப்பட்டிஷன் வேண்டாம் என்று வாசித்தோம்...

    ReplyDelete