எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 20, 2016

சடங்குகள் செய்வது குறித்து ஒரு பார்வை!

தெளிவு
 பிரதிலிபியில் கண்ணன் எஸ். அவர்களின் இந்தக் கதையைப் படிக்க நேரிட்டது. அவர் கதைகள் எனக்குப் பிடிக்கும். இயல்பான ஓட்டத்துடன் இருப்பதால் ரசிப்பேன். இந்தக் கதை மூடநம்பிக்கை என்று ஆசிரியர் நினைப்பதைச் சாடுவதாக வந்துள்ளது. மூட நம்பிக்கை என்று ஆசிரியர் எதைக் குறிப்பிடுகிறார் எனில் பித்ருக்களுக்கு அதாவது இறந்தவர்களுக்கு வருடா வருடம் கொடுக்கும் திதியையும் அப்போது அனுஷ்டிக்கப்படும் ஒரு சில கட்டுப்பாடுகளையும் தான். ஆனால் அந்தக் கட்டுப்பாடுகள் குழந்தைகளாக இருந்த அவர்கள் மேலும் திணிக்கப்பட்டிருக்கிறது. அது தான் கொடுமை. ஒருவேளை அவருடைய பெற்றோர் பார்வை அப்படி இருக்கலாம்.

ஆனால் நான் அறிந்தவரை எங்கள் வீடுகளில் அப்படி எல்லாம் இல்லை. என் மாமியார் கடுமையாக ஆசாரங்களைக் கடைப்பிடிப்பவர் தான். சிராத்தம் வருவதற்கு ஒரு மாதம் முன்னிருந்தே மாமியார், மாமனார் இருவரைத் தவிர நான், என் கணவர், எங்கள் இரு குழந்தைகள் ஆகிய அனைவருமே வெங்காயம், மசாலாப் பொருட்கள் சாப்பிட முடியாது. சமைக்கவும் முடியாது. குழந்தைகளுக்கு மட்டும் என என் பிறந்த வீட்டில் செய்வார்கள். அப்படியும் செய்ய முடியாது. ஆனாலும் சிராத்தம் அன்று என் கணவர், குழந்தைகள் காலை ஆகாரம் செய்வார்கள். அதை வீட்டிலேயே செய்து கொடுத்ததும் உண்டு. ஹோட்டலில் வாங்கியும் சாப்பிட்டது உண்டு. சிராத்தக் காரியங்களில் நான் பங்கேற்பதால் எனக்குச் சாப்பிட அனுமதி இல்லை. அவ்வளவே. அதுவே என் மைத்துனர்கள், ஓரகத்தி, நாத்தனார் ஆகியோர் ஹோட்டலில் வாங்கிச் சாப்பிடுவார்கள். அவர்களுக்குத் தடை இருந்தது இல்லை. சிராத்தம் ஆரம்பித்ததும் தான் யாரும் எதுவும் சாப்பிடக் கூடாது என்பார்கள். காக்கைக்கு உணவளிக்கும் வரை நீர் கூட அருந்த முடியாது. அது மிஞ்சிப் போனால் இரண்டு மணி நேரம் தான் ஆகும்.  ஆனால் இங்கே ஆசிரியர் குழந்தைகளான அவர்களும் சேர்ந்து சிராத்தம் முடியும் 2 மணி வரை பட்டினி கிடந்ததாகவும், புரோகிதர் அனுமதித்த பின்னரே சாப்பிட முடிந்தது என்றும் சொல்கிறார்.

அதோடு இல்லாமல் தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும் என்று பயமுறுத்தியும் வளர்க்கப்பட்டிருக்கிறார். தப்பு ஏன் செய்யக் கூடாது என்னும் மூல காரணம் சொல்லிக் கொடுக்கப்படவில்லை! இது துரதிர்ஷ்டவசமானது தான். இதனால் பலருக்கும் உண்மையான தாத்பரியம் புரியாமல் மூட நம்பிக்கை என்றே சொல்கின்றனர். நாத்திகவாதிகளாக மாறுகின்றனர். இன்னும் சிலர் இப்படியும் போகமுடியாமல் அப்படியும் போகமுடியாமல் திண்டாடுகின்றனர். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எந்தக் கடவுளும் நம்மை அழிப்பதில்லை. மனிதரை மனிதரே அழிக்கின்றனர். நாம் செய்வது தப்பு என்பதை நாம் உணர்ந்து கொண்டு விட்டால் திருத்திக் கொள்ள முடியும். அதற்கான தண்டனையை நம் மனசாட்சியே நமக்குக் கொடுத்துவிடும்! அதைவிடச் சிறந்த தண்டனையை வேறு எவராலும் கொடுக்க முடியாது. மூட நம்பிக்கைகள் கூடாது என்பது வேறு. அதற்காக சிராத்தம் போன்ற திதிகள் கொடுக்காமல் அநாதை ஆசிரமம், முதியோர் இல்லம்னு அன்னதானம் செய்தால் போதும் என்பது வேறு.

இன்னும் சிலர் காசிக்குப் போய்விட்டு வந்தால் சிராத்தமே செய்ய வேண்டாம் என்றும் பிரசாரம் செய்கின்றனர். காசிக்குச் சென்று கர்மாக்கள் செய்வது என்பது நம் பணத்தை சேமிப்பை நிரந்தர வைப்பில் போடுவது போலத் தான். அது நீண்ட பலனை அளிக்கும். ஆனால் வருடா வருடம் திதி செய்வது என்பது வேறு! இப்போ இரண்டு நாட்கள் முன்னர் வந்த ஆவணி அவிட்டத்தன்று வடை, பாயசத்துடன் சாப்பிட்டிருப்போம். அதுக்காக நேத்து சமைக்காமலோ, சாப்பிடாமலோ இருந்தோமா? இன்று சமைப்போம் அல்லவா? ஒரு நாள் விதரணையாகச் சாப்பிட்டு விட்டதற்காக மற்ற நாட்கள் நம்மைப் பட்டினியா போட்டுக்கறோம். அது போலத் தான் வருடா வருடம் திதிகள் செய்வது, முன்னோர்களுக்குத் திதி கொடுக்காமல் இருப்பது மிகவும் தவறு. இப்போது நாம் நன்றாக இருப்பது போல் தெரிந்தாலும் பின்னால் வரும் சந்ததிகளுக்குப் பாதிப்பு ஏற்படும். இது கண்கூடாகப் பார்த்த ஒன்று.

எப்போதுமே புரோகிதர்கள் அனுமதி கொடுத்தப்புறமாக் குழந்தைகள் சாப்பிடலாம்னு சொல்லிப் பார்க்கவும் இல்லை. பிராமணார்த்தம் சாப்பிட்டவர்கள் சிறிது நேரம் சிரமப்பரிகாரம் செய்து கொள்வார்கள் தான். ஆனால் அவர்கள் எவ்விதக் கட்டளைகளும் இட்டதில்லை. பிராமணர்கள் சாப்பிட்டு முடிந்த பின்னர் பிண்டப் பிரதானம் என்ற ஒன்றும் அதன் பிறகு திதி கொடுப்பவர் செய்யும் தர்ப்பணமும் முடிந்த பின்னரே சாப்பிட வேண்டும் என்பது நடைமுறை, சாஸ்திர ரீதியானதும் கூட. ஆனாலும் பிண்டப் பிரதானம் ஆகிவிட்டால் குழந்தைகளுக்கு பட்சணம் சாப்பிடக் கொடுப்பார்கள். அதற்காகக் காத்திருந்த நாட்கள் இப்போதும் நினைவில் இருக்கின்றன.

மற்றபடி இந்த ஏழைகளுக்கு உதவுதல், இல்லாதவர்களைப் படிக்க வைத்தல் போன்றவை எப்போதுமே நம் நாட்டில் குறிப்பாகத் தமிழ் நாட்டில் உண்டு.  கடுமையாகக் கட்டுப்பாடுகளுடன் சிராத்தம் செய்பவர்கள் மனதில் ஈரமே இருக்காது, ஏழை, பாழைகளுக்கு உதவ மாட்டார்கள் என்னும் ஓர் எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது. என் பெரியப்பா கடுமையாக ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பார். வெளியே எங்கும் சாப்பிட மாட்டார். கூடிய வரை எங்கு சென்றாலும் நடந்தே செல்வார். பிரமசாரி என்பதால் நாலு முழ வேட்டி தான். பாரத ஸ்டேட் வங்கியில் பெரிய பதவி வகித்தவர். ஆனாலும் மிக எளிமையாக இருப்பார். அந்தப் பெரியப்பா பலரைக் கைதூக்கி விட்டிருக்கிறார் ஜாதி வித்தியாசம் இல்லாமல்! இதற்கும் சடங்குகளைக் கடுமையாகக் கடைப்பிடிப்பதற்கும், சாஸ்திரங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடுமையாகக் கடைப்பிடிப்பவர்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலர் இப்படிக் கடுமையாக நடக்கலாம்; நடந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் பெரும்பாலும் அப்படி இல்லை என்றே எண்ணுகிறேன்.


கோவில்கள் கட்டியதும், கோவில்களுக்குச் செல்வதும் சோம்பேறித்தனம் என்றும் சொல்கிறார். இதுவும் முழுத் தவறு.  அந்தக்காலத்து மக்கள் சோம்பேறிகளாக இருந்திருந்தால் அப்போதைய இந்தியாவின் முன்னேற்றத்தையும், செழிப்பையும் பார்த்துவிட்டு மெக்காலே வியந்திருக்கவே மாட்டார். மக்கள் ஒருநாளும் சோம்பேறிகளாக இல்லை. சோம்பேறி மக்களா இப்படிப்பட்ட கலை உணர்வு செறிந்த, தொழில்நுட்பங்களில் சிறந்த கலைப் பொக்கிஷங்களை உருவாக்கினார்கள்? அவற்றில் ஒரு சிறு பகுதியையாவது அப்போது போல் இப்போது நம்மால் உருவாக்க முடியுமா? இத்தனைக்கும் நாம் தொழில் நுட்பத்தில் முன்னேறியதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.


குறிப்பிட்ட சில தினங்கள் மட்டும் மூலவர் மேல் வெயில் கிரணங்கள் படும்படி கர்பகிரஹத்தைக் கணக்குப் பண்ணிக் கட்டி இருப்பது சோம்பேறி மக்களா? அப்படி ஒரு கர்பகிரஹத்தை நம்மால் இன்றுள்ள தொழில் நுட்பத்தால் கட்டமுடியுமா? ஆசிரியர் செய்திருப்பது நல்ல அலசல் தான். ஆனால் ஒரு சில கருத்து வேறுபாடுகளும் உண்டு! :) முக்கியமாகக் கடவுளைப் பொல்லாதவர், கண்ணைக் குத்திடுவார்னு சொல்லி எல்லாம் எங்களை வளர்க்கலை! தப்புப் பண்ணாதே, பொய் சொல்லாதே, கடவுள் நம்பிக்கை முக்கியம்னு தான் சொன்னாங்க! அதோடு முன்னோர்களின் சிராத்தம் நடக்கையில் குழந்தைகளைப் பட்டினி போட்டதில்லை. இன்னும் சொல்லப் போனால் ஹோட்டல் இட்லியிலிருந்து வீட்டில் மிகுந்திருக்கும் பழைய சாதம் வரை சாப்பிட அனுமதி உண்டு!

இப்போதும் அநாதை இல்லங்களுக்கு உதவுவதை நிறுத்தியதில்லை. அதே போல் சிராத்தம் போன்ற சடங்குகளைச் செய்வதில் இருந்தும் பின்வாங்கியதில்லை, இது வேறு, அது வேறு! :) இரண்டிற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்!


கடவுள் புரியாதவர் அல்ல! உணர்ந்து அறிய வேண்டியவர். மற்றபடி இதிலுள்ள ராமாயண, மஹாபாரதக் கதைகளைக் குறித்த விமரிசனங்களுக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தால் பெரியதொரு கட்டுரையாகி விடும்! :) தவறாக நினைக்க வேண்டாம். இந்த விமரிசனத்தை ஆக்கபூர்வமாகப் புரிந்து கொள்வீர்கள் என்னும் நம்பிக்கையுடன் கொடுத்திருக்கிறேன். மற்றபடி நான் எஸ்.கண்ணனின் பரம விசிறி! அவருடைய பல கதைகளை பிரதிலிபி மூலம் தொடர்ந்து படித்து வருகிறேன்


இதிலே எந்த உள் குத்தும் இல்லை. அவங்க வீட்டுப் பெரியவங்களோட புரிதல் மாறுபட்டிருக்கு! நல்லவேளையா எங்களுக்கெல்லாம் காரண, காரியங்களோடு ஒவ்வொன்றையும் புரிய வைத்திருக்கின்றனர். இப்படிப் புரிதல் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுவதை என் புக்ககத்தில் கண்கூடாகக் கண்டு வியந்திருக்கிறேன். என் மாமியாரும் சுவாமி கண்ணைக் குத்திடுவார், தண்டனை கொடுப்பார் என்ற ரகம் தான்! இன்னும் பலவேறு மூட நம்பிக்கைகளும் உண்டு! ஆகவே இது ஒவ்வொருத்தரின் புரிதலைக் குறித்தே அமைகிறது. அவங்க வளர்ந்த சூழ்நிலை அப்படி. என்றாலும் அவங்களுக்குப் புரியற மாதிரி எடுத்துச் சொல்வோம். மூட நம்பிக்கை என்றும் சுட்டிக் காட்டி இருக்கோம்.

திரு கண்ணன் அவர் கோணத்திலிருந்து பார்த்தவைகளைச் சொல்லுகிறார். இன்று பலருக்கும் பல சடங்குகளை ஏன் செய்கிறோம் என்பதே தெரியாமல் தானே செய்கின்றனர்? ஆனால் அமாவாசை அன்றோ மற்ற தர்ப்பண தினங்களிலோ செய்யும்  நம் தர்ப்பணங்களில் கூடக் கடைசியாக  உலக க்ஷேமத்துக்காகவும் உலகில் வாரிசுகளற்ற அநாதைகளுக்காகவும் நற்கதி கிடைக்க வேண்டிக் கொண்டு  ஜாதி, மத பேதமில்லாமல் எள்ளும் தண்ணீரும் விடுவார்கள். அதே போல் காசிக்குச் செல்பவர்களும் கயாவில் அப்படிப்பட்டதொரு தர்ப்பணம் செய்வதைப் பார்த்திருக்கலாம். அதில் நம் வீட்டுச் செல்லங்களுக்குக் கூட எள்ளும் தண்ணீரும் விடுவது உண்டு. எங்க மோதிக்கு நாங்க கொடுத்தோம். பகைவன், எதிரியாக இருந்தாலும், வேறு ஜாதி, சமயத்தைச் சேர்ந்தவரானாலும் கயாவில் அவர்களுக்குத் தர்ப்பணம் செய்யலாம். செய்திருக்கோம்.  அப்படிப்பட்ட உயர்ந்த பல தத்துவங்களைக் கொண்டது இந்த சநாதன தர்மம். இதற்கு ஒரு நாளும் அழிவில்லை! :)

55 comments:

 1. நீங்கள் சொல்லும் கதையை நான் படிக்கவில்லை. என்றாலும் இதில் எனக்குத் தோன்றும் ஒரு முக்கியமான விஷயம், கதை என்று ஒரு படைப்பைத் தரும்போது அது எழுதுவரின் சொந்தக் கருத்தாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. கதைக்குத் தேவையான ஒரு முடிச்சு கிடைத்ததும், அதை வைத்துப் புனையப்படுவது. அப்படி இல்லா விட்டால் கதைகள் யாவும் வெறும் பிரசாரங்களாக மாறி விடும்.

  நீங்கள் எழுதுவரின் கருத்ததற்காக நினைத்து பதில் சொல்லாமல் அந்தக் கதையில் இருக்கும் கேரக்டர்களுக்கு பதில் சொல்லி இருக்கலாம். உங்கள் பார்வையில் இது சில தவறான வழிகாட்டுதல்களை படிப்பவர்களுக்கு கொடுக்கிறது என்று தோன்றுகிறது. படிப்பவர்களின் பாதிப்பேர் இதை ஒரு வித்தியாசமான முயற்சி என்று கடந்து போய்விடுவார்கள். தாங்கள் என்ன நினைக்கிறார்களோ அதில் மாறாமல் இருப்பது பெரும்பான்மை மனித சுபாவம்.

  ReplyDelete
  Replies
  1. முக்கியமாக அவர் தன்னிலைப் படுத்திக் கொண்டு எழுதி இருந்தது தான் காரணம். இது அவர் கருத்தாகவே இருப்பதாக அங்கே கருத்துச் சொல்லி இருக்கும் அனைவரின் எண்ணமும் கூட! பலரும் சொந்தக் கருத்துகளையே, சொந்த அனுபவங்களையே கொஞ்சம் சீராட்டிப் பாராட்டிச் செதுக்கி எழுதுகின்றனர் என்பதை நான் அறிவேன். என் சித்தப்பாவே இதற்கு ஒரு உதாரணம். அந்தக் கதையில் வரும் நபர்கள் இந்தக் கதாநாயகன் தன்னிலைப் படுத்தி எழுதியவர் மட்டுமே! மற்றபடி அப்பாவை எல்லாம் குறியீடாகவே சொல்லி இருக்கார். இது தவறான வழிகாட்டுதல்களை எப்படி ஏற்படுத்தும் என்றே எனக்குப் புரியவில்லை. இன்று வரை அம்மாதிரி எழுதியது இல்லை. இது ஒரு வித்தியாசமான முயற்சியும் அல்ல. இன்று பெரும்பான்மையோரின் கருத்தே இது தான். இதற்கு எங்கள் வீட்டிலேயே உதாரணங்கள் உண்டு. ஆசிரியர் சொந்தக் கருத்தாகத் தான் எழுதி இருப்பதாகத் தெரிகிறது.

   Delete
  2. எந்த இடத்தில் தவறான வழிகாட்டுதலைச் செய்திருக்கிறேன் என்று குறிப்பிட முடியுமா? கடவுளைக் குறித்து அவர் எழுதி இருப்பது தவறான வழிகாட்டுதலா அல்லது நான் குறிப்பிட்டிருப்பதா? சிராத்தம் போன்ற சடங்குகளின் போது நடப்பதைக் குறித்து நான் எழுதி இருப்பதா? அல்லது அவர் சொல்லி இருப்பதா? சடங்குகள் குறித்தும் சம்பிரதாயங்கள் குறித்தும் நன்கு அறியாதோர் இதைப் படித்தால் இப்படித் தான் நடக்கும் என்றே எண்ணிக்கொள்வார்கள்! இது தவறா அல்லது அப்படி இல்லை என்று பொதுவான நடைமுறையை வைத்திருக்கும் நான் சொல்வது தவறா? கோயில்களைச் சோம்பேறிகளின் மடம் என்று சொல்லாமல் அவர் சொல்லி இருப்பது தவறா அல்லது கோயில்களின் கட்டுமானங்களையும் இறை உணர்வையும் குறித்து நான் சொல்லி இருப்பது தவறான வழிகாட்டுதலா? எந்த இடம் எனக் குறிப்பிடவும். உங்களுக்குப் புரியவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்? புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்வார்கள்! அது போதும்!

   Delete
 2. இந்தக் காலத்தில் சிராத்தம், மரணச் சடங்குக்குள் முதலியவற்றில் சிரத்தை குறைகிறது என்பது என் வேதனையும். "குழந்தைகள் பொறுக்க மாட்டார்கள்... குழந்தைகளுக்கு இவ்வகை உணவுகள் பிடிக்காது... அவர்கள் பீட்ஸா போன்றவைதான் சாப்பிடுவார்கள்.. அவர்களுக்கு மட்டும்.." என்று பேசிய பெண்ணிடம் நான் சொன்னது. "நம்முடைய கலாச்சாரங்கள் விஞ்ஞான அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. குழந்தைகள் நாளை பெரியவர்கள் ஆனதும் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்ல நம்முடைய கலாச்சாரம் என்ன என்றாவது தெரிய வேண்டும். அப்படித் தெரிய வேண்டுமானால் அதற்கு அவர்களை பழக்க வேண்டும். அது ஒன்றும் கேடு இல்லையே? பின்னாளில் அவர்கள் இஷ்டப்படி நடந்து கொள்ளட்டும்" என்று சொன்னேன்.

  அதைச் சொன்னால் மனிதர்கள் 'ஆ.. எனக்குத் தெரியும்' என்று அலட்சியம் காட்டுவார்கள் என்றே ஆன்மீகத்துடன் கலந்து சொன்னார்கள். துளசி வைத்தால் வீட்டுக்கு நல்லது என்று சொன்னார்கள். அரச மரத்தை வெட்டினால் குடும்பத்துக்கு ஆகாது என்று சொன்னார்கள். 'இவை இரண்டுமே நல்ல பிராண வாயுவைக் கொடுக்கும் உங்கள் வாழ்வுக்கு நல்லது' என்று மட்டும் சொன்னால் மனிதர்கள் மதிப்பார்களா?

  ReplyDelete
  Replies
  1. இன்றைய இளைய தலைமுறையினரிடம் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் இந்த பிட்சா, பர்கர் சாப்பிடும் கலாசாரம் குழந்தைகளிடம் மட்டும் ஒழிந்தால் போதாது. பெற்றோர்களும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். சில வருடங்கள் முன்னர் ஐடியில் ஆட்குறைப்பு நடந்தபோது பெண்களூரில் உள்ள ஓர் பெண் என் குழந்தைக்கு பிட்சா, பர்கர்னே பழக்கப்படுத்தி இருந்தேன். இப்போ அதெல்லாம் வாங்க முடியலை! ரசம் சாதம் கொடுத்தால் சாப்பிடுவதில்லை! என்று புலம்பி இருந்தார். இதற்கு யார் காரணம்? பிட்சா, பர்கரெல்லாம் நம் உணவில்லை! இது தான் நம் உணவு என்று அந்தப் பெண் பழக்கப் படுத்தி இருக்க வேண்டாமா? தப்பைத் தன் மேல் வைத்துக் கொண்டு பிறரைக் குற்றம் சொல்வது என்ன நியாயம்?

   Delete
  2. //உங்கள் பார்வையில் இது சில தவறான வழிகாட்டுதல்களை படிப்பவர்களுக்கு கொடுக்கிறது என்று தோன்றுகிறது//

   இந்த வரிதான் உங்களைக் குழப்பி இருக்கிறது. நீங்கள் "இந்தக் கதையானது படிப்பவர்களுக்கு கதையின் கருத்து ஒரு தவறான வழிகாட்டுதலைக் கொடுத்துவிடும்" என்று சொல்ல வருகிறீர்கள் என்று எனக்குப் புரிகிறது என்பதையே இந்த வரிகளில் சொல்ல முயன்றிருக்கிறேன். நீங்கள் தவறான வழிகாட்டுதல்களைக் கொடுக்கிறீர்கள் என்று சொல்லவில்லை!!!!!

   Delete
  3. கதாசிரியர்கள் தன்னிலையில் எழுதுவது எல்லாம் சொந்தக் கருத்தாகவும் நான் (நான்) சொல்ல மாட்டேன். அதுவும் கதை சொல்வதில் ஒரு உத்தி. மேலும் சம்பவங்களையும், கேரக்டர் உருவங்களையும் நாம் பார்த்தவர்களில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவை அவர்களை சொல்வதாக ஆகாது என்பதும் என் (என்னுடைய) கருத்து. சிவாஜி திருவருட்செல்வர் படத்தில் அப்பராக நடிக்க மனா உருவகமாக மஹாப்பெரியவரை கொண்டிருந்தார் என்று சொல்லி இருக்கிறார்.

   Delete
  4. 'அந்த'ச் சடங்குகள் செய்யப்பட்டு, இளையவர்களிடமும் அது சென்றடைய வேண்டும் என்கிற கருத்தில் நான் சொல்லியிருக்கும் இரண்டாவது பின்னூட்டமும் சரியான புரிதலைத் தரும்படி நான் எழுதவில்லை என்று தெரிகிறது! அந்த விஷயங்களில் உங்கள் கருத்துடன் எனக்கு முழுச் சம்மதம்!

   குழந்தைகள் பழக வேண்டும் என்றால் பெரியவர்களும் அந்த நாளில் கண்டிப்பாக ஒரு முன் உதாரணமாக இருந்துதான் ஆகவேண்டும்!

   Delete
  5. மறுபடி, மறுபடி நீங்கள் சொல்வதையேதான் நானும், நான் சொல்ல விரும்புவதையே நீங்களும் சொல்கிறோம். ஆனால்வரிகளின் குழப்பங்களால் குழப்பிக் கொள்கிறோம்! என் மாறுபாடு கதையில் வருவது கதாசிரியரின் சொந்தக் கருத்தாக எல்லா நேரங்களிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதில் மட்டுமே. (எல்லா நேரங்களிலும் என்பதை அடிக்கோடிட விரும்புகிறேன். சமயங்களில் சொந்தக் கருத்தாகவும் இருக்கலாம். சம்பந்தப் பட்டவரை நாம் தனிப்பட்ட முறையிலும் அறிவோம் என்றால் அவரின் குணநலன்கள் அவரை நமக்கு உணர்த்தும்)

   Delete
  6. கதாசிரியர் அவர் அனுபவத்தை எழுதி இருந்தாலும் சரி, மற்றொருவர் அனுபவத்தைக் கேட்டு எழுத் இருந்தாலும் சரி! அவருடைய கருத்தும் இதை ஒட்டி இருப்பதால் தான் அவர் இப்படி ஒரு கருவைத் தேர்ந்தெடுத்து எழுதி உள்ளார். இந்தக் கருத்தை அவர் ஆதரிப்பதாலேயே அதைக் கடிந்தும் எழுதி இருக்கிறார் என்பது என் முடிவு! :)

   Delete
 3. கதை என்று எப்பொழுது சொல்லிவிடுகிறோமோ அதை
  கதையாகத் தான் பார்க்கவேண்டும் என்று ஸ்ரீராம் சொல்வதை
  அப்படியே ஆமாம் போடுகிறேன்.

  கதையில்" நான்" என்று எழுதுவதால் கதை ஆசிரியர் கதையின் ஒரு பாத்திரம் என்று நினைத்து அவரை நாடுவதும் சாடுவதும் சரியல்ல.
  ரைட் தான்.

  கதை லிங்க் கொடுத்தீர்கள் என்றால் படிக்கலாம்.

  அந்த காலத்தில் கோவில் கட்டினார்கள், குளம் வெட்டினார்கள், மரம் நட்டார்கள், என்றால் அதெல்லாம் எகனாமிக் ஆக்டிவிடீஸ்.
  ஒரு கோவில் கட்டுவதின் மூலம் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு வருகிறது. கொத்து வேலை, தச்சு வேலை, சிற்ப வேலை, .
  கோவில் திருவிழா என்றால் பூ விற்பவர்கள், தேர் செலுத்துபவர்கள், ராட்டினம் சுழற்றுபவர்கள்,

  அந்தக் காலத்தில் எல்லாம் வேலை உற்பத்திக் க்கான உபாயங்கள் இவை.

  ReplyDelete
  Replies
  1. சு.தா. பதிவின் தலைப்புக்குக் கீழ் தெளிவு என்னும் எழுத்தில் சொடுக்குங்கள். பிரதிலிபியின் பக்கம் வரும்.

   Delete
 4. குழந்தைகளுக்குப் பல சமயங்களில் தெளிவாக விளக்குவது கடினமாக இருக்கும்போதோ, அல்லது அதை விளக்கச் சோம்பல்படும்போதோ, இதுமாதிரி 'பெருமாள் கண்ணைக் குத்துவார்' என்று சொல்லிச் சென்றுவிடுவது வழக்கம்தான். என் சின்ன வயதில் எங்க அம்மா, 'பெண்களைத் தொட்டுப் பேசினால் காது அறுந்துவிடும்' என்று சொல்லுவார். நானும் நம்பியிருக்கிறேன்.

  சிரார்த்தம் வருடத்திற்கு ஒரு முறை (அல்லது இரு முறை) தன் தாய் தந்தையர்களுக்குச் செய்வது. நியாயமாக சிரார்த்தம் பண்ணும்போது (அந்தக் காலத்தில்), குழந்தைகளுக்கு முந்தின நாள் மோர் சாதம், ஊறுகாய் போட்டு ஸ்கூலுக்கு விரட்டிவிடுவார்கள். 4 மணிக்குத் தான் சிரார்த்தம் முடியும். அதன்பின்புதான் சிரார்த்தம் செய்பவரும் அவர் ஃபேமிலியும் சாப்பிட முடியும். இரவுக்கு பட்சணங்கள்தான். வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. இப்போது பெரும்பாலும், காபி குடிப்பது சாஸ்திரிகளுக்கும், சிரார்த்தம் செய்பவர்களுக்கும் அனுமதிக்கப்படுவதாக அவர்களே மாறிவிட்டார்கள். அப்புறம் குழந்தைகள் வெளியில் சாப்பிடுவதும் நடக்கும். (இப்போதும் சமையலறியில் பண்ண முடியாது. சிரார்த்தத்துக்காக சமையலறை தயார் செய்யப்பட்டிருப்பதால்). காலத்துக்கேற்ப மாறுதல்கள் வந்தாலும், கான்செப்ட் மாறக்கூடாது, கீதா மேடம் சொல்லியிருப்பதுபோல்.

  ஏழைகளுக்கு உதவுதலும் நல்லது. கீதா மேடம் சொல்லியிருப்பதுபோல், இது வேறு, நம் நியம நிஷ்டைகள் வேறு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், என் மாமியாரும் சொல்லுவார். நான் சுவாமி கண்ணையும் குத்தமாட்டார், தண்டனையும் கொடுக்க மாட்டார் என்று வாதாடுவேன். அதனாலேயே அதிகப் பிரசங்கி, வாயாடி என்றெல்லாம் பெயர் கிடைத்திருக்கிறது. மூட நம்பிக்கைகளுடன் வளர்ந்த ஒரு சிலர் தங்கள் குழந்தைகளையும் அப்படியே வளர்க்கின்றனர். சொன்னாலும் புரிந்து கொள்வதில்லை. ஆண் குழந்தைகளைத் தொட்டுப் பேசினாலும் காது அறுந்துவிடும் என்று எனக்குச் சொன்னதுண்டு. ஆனால் நான் நம்பியதில்லை என்பதோடு சிரிக்கவும் செய்வேன். கிட்டத்தட்ட ஒரு புரட்சிக்காரியாகவே என்னைப் பார்ப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் கந்த சஷ்டி கவசம், திருப்பாவை, திருவெம்பாவை சொல்வதற்கே எதிர்ப்பு இருந்தது.துளசிக்குப் பூஜை செய்ய முடியாது! இப்போது எல்லோரையும் சொல்ல வைச்சாச்சு! எல்லோரையும் துளசி பூஜை செய்ய வைச்சாச்சு! :)

   Delete
  2. பல சமயங்களிலும் பழைய சாதம் இல்லைனால் எங்க வீட்டில் இட்லி வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். பள்ளிக்கும் அதே எடுத்துச் செல்லுவோம். எங்க வீட்டில் எல்லாம் நாலு மணி வரை சிராத்தம் ஆனதில்லை. சுமார் பத்து மணிக்கு ஆரம்பித்தால் ஒரு மணியோடு முடியும். அதன் பின்னர் தர்ப்பணம் போன்றவைகள் முடிந்து சாப்பிட இரண்டு மணி சில சமயங்களில் ஒன்றரை மணிக்கு ஆகும். இந்தப் பித்ருசேஷ பட்சணங்களைக் குழந்தைகள் வேணா இரவோ, மறுநாளோ எடுத்துக்கலாம். சிராத்தம் பண்ணும் கர்த்தாக்கள் அதைச் சாப்பிடக் கூடாது என்பதே சரியானது. நாங்க சாப்பிடுவதில்லை. ஆகவே இப்போதெல்லாம் நாங்க ரெண்டே பேர் தான் என்பதால் மிகக் குறைவாகவே செய்கிறோம். மிச்சமெல்லாம் வைப்பதில்லை! தினசரிச் சாப்பாடே மிஞ்சாமல் செய்ய வேண்டி இருக்கு! சிராத்தம் செய்பவர்கள், சடங்குகள், சம்பிரதாயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள், இறை பக்தி நிரம்பியவர்கள், ஆன்மிகத்தில் செல்பவர்கள் ஆகியோர் எல்லாம் மற்றவர்களுக்கு உதவ மாட்டார்கள் என்னும் ஒரு பிரசாரமே நடந்து வருகிறது. நன்கு கவனித்துப் பார்த்தால் இவர்கள் தான் வெளியே தெரியாமல் அதிகம் உதவிகள் செய்கிறார்கள். இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

   Delete
 5. கொடுத்திருக்கும் லிங்க் போய் பிரதிலிபியில் கண்ணனின் பதிவைப் படித்தேன் சுயமாக சிந்திக்கும் ஒரு மனிதனின் எண்ணங்கள் அநேகமாக எல்லாவற்றுடனும் உடன்படுகிறேன் நம்மில் பலரும் சிறு வயதில் நிறையவே மூளைச் சலவை செய்யப்படுகிறோம் வெகு சிலரே வளர்ந்தபின் சுயமாக சிந்திக்கத் துவங்குகிறார்கள் காலம் காலமாக பின்பற்றப்பட்டுவரும் சில கருத்துகளுக்கு நீங்கள் வக்காலத்து வாங்காமல் இருந்தால்தான் ஆச்சரியம் பல இடங்களிலும் அவை பின்பற்றப் படுவதில்லை என்றே உங்கள் பதிவும் கூறுகிறது ஒருவர் கதை என்று எழுதும்போதும் அவரது சொந்தக் கருத்துகளுக்கு எதிராக எழுதுவது இயலாதது என்றே நினைக்கிறென் இன்றும் பல சடங்குகளும் பின்பற்றப்படாவிட்டால் ஏதோகுற்றம் இழைப்பது போன்ற பின்னணியிலேயே செய்யப்படுகின்றன. சடங்குகள் செய்வது அவரவர் பின்னணியைப் பொறுத்தது சொன்னபடி ( யார் சொன்னபடி.?)பின்பற்றபடுவதெல்லாம் அப்படிச் செய்யாவிட்டால் ஏதோ குற்றம் இழைத்து விடுவோமோ என்னும்பயத்தின் அடிப்படையிலேயே செய்யப் படுகிறது என் அப்பா இறந்து 58 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது இதுநாள்வரை நான் எந்தச் சடங்கையும் செய்ததில்லை, செய்யவில்லையே எனும் குற்ற உணர்வும் இல்லை கண்ணன் போல் சிந்திப்பவர்கள் பெருகிக் கொண்டு வருகிறார்கள் ஏனோ முன் வந்து சொல்லத் தயங்குகிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. சடங்குகள், சம்பிரதாயங்கள் செய்பவர்கள் சுயமாகச் சிந்திக்க மாட்டார்களா என்ன? எங்கள் வீட்டிலேயே நாத்திகவாதிகளும், சடங்கு, சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாதவர்களும் உண்டு. அவர்களில் சிலர் வெவ்வேறு சம்பவங்களின் தாக்கத்தால் பின்னாட்களில் முற்றிலும் மாறி இருக்கின்றனர். இன்னும் சிலர் குடும்பத்தில் மனைவியின் விருப்பம் என்ற பெயரில் இவற்றில் கலந்து கொள்கிறார்கள். ஆக எங்கும் எதிலும் இரட்டை நிலை என்பதே காணப்படுகிறது. சடங்குகளைச் செய்யாதவர்கள் தாங்கள் குற்றம் செய்யவில்லை என்று நம்பினால் நம்பட்டுமே! அதனால் என்ன? ஏனெனில் உடனடியாக அதன் தாக்கம் அவர்களுக்குத் தெரியப் போவதில்லை. நீங்கள் எதுவும் செய்யவில்லை எனில் அதன் பலாபலன்கள் உங்கள் குடும்பத்திற்குத் தான்! எனக்கு அதில் ஒன்றும் லாபமோ நஷ்டமோ இல்லை. யாரும் முன் வந்து சொல்லத் தயங்குகிறார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. சொல்பவர்கள் சொல்கின்றனர். கேட்பவர்கள் கேட்கின்றனர். மற்றபடி நாங்கள் எந்தவிதமான பயத்திலும் இறை வழிபாடோ, பித்ருக்களுக்கான சடங்குகளோ செய்வதில்லை. யாருடைய கட்டாயத்தின் பேரிலும் செய்வதில்லை. எங்கள் குழந்தைகளையும் எதற்கும் வற்புறுத்துவதில்லை. அவர்களாகவே கேட்டுக் கொண்டு செய்வார்கள். எங்கள் வீடுகளிலும் சிராத்தம், சம்பிரதாயத்தின் பேரில் நம்பிக்கை இல்லாதவர்கள் உண்டு. அது அவரவர் விருப்பம் என்று நாங்கள் எதுவும் சொல்ல மாட்டோம்.

   Delete
  2. நான் சுயமாகச் சிந்தித்து வந்ததால் தான் எது மூட நம்பிக்கை, எது நல்ல நம்பிக்கை, சிராத்த மந்திரங்களின் பொருள், அவற்றில் என்ன என்ன வேண்டுகிறார்கள், தர்ப்பணத்தில் என்ன என்ன சொல்கிறார்கள் என்பதை எல்லாம் ஆராய்ந்து பார்த்துத் தெளிவு செய்து கொள்ள முடிந்திருக்கிறது. இல்லை எனில் நானும் செம்மறியாடு போலச் சொன்னதைச் செய்பவளாகவே இருந்திருப்பேன். அகில உலக க்ஷேமத்துக்காகவும் பிரார்த்தனைகளை உள்ளடக்கியது நம் சிராத்த மந்திரங்களும், தர்ப்பண மந்திரங்களுமே ஆகும். சர்வே ஜனோ சுகினோபவந்து என்றும் லோகாஸ் ஸமஸ்தாஸ் சுகினோ பவந்து என்றும் பிரார்த்தித்துக்கொள்ளும் தர்மம் சநாதன தர்மம்!

   Delete
  3. தப்பு செய்தால் தான் பயப்படணும். கடவுளிடம் ஏன் பயப்படணும் என்பது எப்போதுமே என் கருத்து. அதனால் தான் என்னால் இறைவனை, நண்பராக, தோழராக, இன்னும் சில சமயங்களில் உரிமையுடன் சண்டை போடுபவளாக எல்லாம் பார்க்க முடிகிறது. இது இந்த சநாதன தர்மம் எனக்கு மட்டுமின்றி நம் அனைவருக்கும் கொடுத்திருக்கும் ஓர் சுதந்திரம், உரிமை! அவன், இவன் என்றெல்லாம் சொல்லலாம். எந்த சாமியும் கோவிச்சுக்கப் போறதில்லை!

   Delete
 6. ரொம்பவும் சிம்பிளாக இந்த விஷயத்தைப் பார்க்கலாம்.

  நாம் நம் தாய், தந்தையிடமிருந்து வந்தவர்கள். எல்லோருக்கும் இது உடன்பாடே. அவர்கள் இப்பொழுது இவ்வுலகில் இல்லை இறந்து விட்டார்காள் என்றால் அவர்கள் இறந்த மாதம், பட்சம், சிரார்த்த திதி நாளில் அவர்களை நம் இடத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு ஒரு வேளை உணவை இட்டு அதன் மூலம் உயிரோடு இல்லாத அவர்களுக்கு உணவை இட்ட திருப்தியும் அதன் மூலம் நாமும் நம் சந்ததிகளும் அவர்கள் ஆசிர்வாதத்தில் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் பெற்று நல்லபடி வாழ்வோம் என்றும் ஒரு நம்பிக்கை.

  ReplyDelete
 7. ரொம்ப சரி. நம்மைப் பெற்று, வளர்த்து, ஆளாகியவர்களுக்கு வருஷத்தில் அவர் இறந்த திதியில் உணவிடுவது ஒரு நன்றிக்கடன் தான். அதெல்லாம் சரி தான். ஆனால் அவர்கள் தான் உயிரோடு இல்லையே? எப்படி அவர்களுக்கு உணவிட முடியும்?.. அவர்களுக்கு உணவிட்ட திருப்தியை எப்படிப் பெற முடியும்? -- என்பது அடுத்த கேள்வி. நியாயமான கேள்வி தான்.

  ஹோமத்தீ வளர்த்து, மந்திரங்கள் சொல்லி அவர்களை வரவழைப்பதாக ஐதீகம். அவர்கள் அப்படி வரலாம். இல்லை, வராமலும் இருக்கலாம். அது முக்கியமில்லை. அவர்கள் வருவதாகவும், திவச சாப்பாடைச் சாப்பிடுவதாகவும் நம்பி உணவிடும் சந்ததியினர் மனசார நம்பினால் போதும். அவ்வளவு தானே விஷயம்?

  பிரதட்சயமாக நம் கண் முன்னேயே இறந்து போன நம் தாய், அல்லது தந்தையாக ஒருவரை பாவித்து (அவருக்கு மந்திரங்கள் மூலம் அந்த அந்தஸ்த்தை அந்த நேரத்திற்கு கொடுப்பாத பாவித்து) உணவிடுகிறோம்.
  அவர் சிரார்த்தம் செய்பவரை விட வயதில் குறைவாக இருக்கலாம். அவரின் பாதங்கள் அலம்பி, சந்தனம், எள் வைத்து நீரிட்டு, அந்த நீரை தானும் தன் மனைவியும் ப்ரோஷித்துக் கொண்டு அப்படியே அந்த நேரத்திற்கு அவரை இறந்து போன தாயாகவோ, தந்தையாகவோ ப்ரார்த்திக்கிறோம். பாவிக்கிறோம் அவ்வளவு தான்.
  இறந்து போனவருக்கு உணவிடுவது இயலாத காரியம். எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான். ஆனால் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு உணவிட்டு வருஷத்திற்கு ஒரு முறையேனும் அந்த மனத்திருப்தியை அடைகிறோமே அதான் முக்கியம். அந்தத் திருப்தியை அடைய வைப்பதான ஒரு சடங்கே சிரார்த்தம்.

  ReplyDelete
 8. பொதுவாக நாம் ஒரு விருந்தாளியை சாப்பிட வீட்டுக்கு அழைத்திருந்தால் கூட அவரோடு சேர்ந்து சாப்பிடுவதைத் தான் மரியாதையாகக் கொண்டிருக்கிறோம். இந்த சிரார்த்த விஷயத்தில் உயிரோடேயே இல்லாதவர் வருவதாக நம்புவதால், பயபக்தியோடு அவர் சாப்பிட்டு நாம் சாப்பிடலாம் என்று காத்திருக்கிறோம் அவ்வளவு தான். இரத்த அழுத்தக்காரர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் பட்டினி கியடப்பதை விட உபாயமாக வய்ற்றுக்கு ஏதாவது போடுவதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். ஆனால் சிரார்த்தம் செய்யும் கர்த்தாவுக்கு ஒரு கடமையை செய்கிற உளப்பாங்கு தன்னாலேயே அமைந்து விடுவதால்
  சிரத்தையுடன் செய்ய எடுத்துக் கொண்ட அந்த வேக்லை முடியற வரை பசிக்கவே பசிக்காது என்பது உளவியல் ரீதியான ஒரு உண்மை.

  ReplyDelete
 9. இந்த சிரார்த்தம் பற்றி நிறைய நண்பர்களிடம் நான் பேசியிருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம். அதில் சில:

  1) பெரிய கடைத் தெருவில் மளிகைக் கடை வைத்திருக்கிரார் ஒரு நண்பர். கடையில் கல்லாவுக்குப் பின்னால் இறந்து போன அவர் தந்தையின் பெரிய புகைப்படம் குங்குமம், சந்தனம் வைத்து மாலையிட்டிருக்கும். தினம் கடை திறந்தவுடன் சூடம், சாம்பிராணி எல்லாம் காட்டி மனசார வணங்கிய பின் தான் எந்த வியாபாரத்தையும் ஆரம்பிப்பார் அவர். வெள்ளிக்கிழமை மாலை தேங்காய் உடைத்து இறந்து போன தந்தைக்கு விசேஷ பிரார்த்தனையெல்லாம் உண்டு. வெள்ளிக்கிழமை மட்டும் அந்த மாலை மட்டும் அவர் விரதம்.

  ஒரு நாள் அவரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது அகஸ்மாத்தாக சொன்னார். "எங்கப்பா ஒரு தெய்வம்ப்பா. சல்லிக்காசு இல்லாம இந்த ஊருக்கு வந்தவர். வாயை வயிற்றைக் கட்டி எப்படியோ கடைத்தெருவில் சின்ன பெட்டிக்கடையா இந்தக் கடையை ஆரம்பித்தவர். ரொம்பவும் நாணயஸ்தர். நியாயமான வியாபாரத்திற்கு பெயர் போனவர். இன்னிக்கும் எங்கப்பா பேரைச் சொல்லித்தான் இந்தக் கடையே நடக்கிறது. ஒரு வெள்ளிக்கிழமைலே தான் அவர் போனார். அதான் வெள்ளிக்கிழமைனா அவர் நினைவா விரதம். இந்த அந்தஸ்து, கடை, பேர், புகழ், பணம் எல்லாம் அவர் போட்ட பிச்சை. ஏன் இப்படி விரதம்ன்னு கேட்டே. இது கூட எங்கப்பாக்கு நான் செய்யலேனா எப்படி?.. என்று கண் கலங்கினார்.

  ஆக, பொதுவாகவே உயிர் கொடுத்து, வளர்த்து ஆளாக்கி தன்னை வாழவைத்த பெற்றோர்களுக்கு யார் எதைச் சொன்னாலும் ஏதாவது செய்யணும் என்று விரும்புகிறார்கள். (இந்த திதி போன்றதும் அதில் ஒன்று) 'அட, தப்பா இருக்கட்டும், இல்லே ஏமாத்து வேலையாகவே இருக்கட்டும். எங்கப்பாருக்குத் தானே?,, இதைச் செய்யறதிலே நான் என்ன குறைந்து போவேன்?' என்பது என் நண்பர் ஒருவரின் தன்னிலை விளக்கம்.

  ReplyDelete
 10. இன்னொரு நண்பர்: "இரண்டு பொண்டாட்டிக்காரர் எங்கப்பா. எங்கம்மா தான் மூத்தவங்க. ரெண்டாம் தாரம் கட்டிகிட்டதும் எங்கம்மா அவருக்கு, அவரோடு இளைய சம்சாரத்துக்கு எல்லாம் எங்கம்மா ரொம்பவும் இளப்பமா போயிட்டாங்க. சொல்லப் போனா வீட்டு வேலைக்காரியைப் போலத் தான் காலத்தைக் கடத்தியிருக்காங்க.. எனக்கு பாட புஸ்தகம் வாங்கித் தரணும்ன்னா கூட ஆயிரம் நொட்டு நொசுக்கு சொல்லுவாரு. ஆனா எங்க சித்தி பையனுக்குன்னா பள்ளிக்கூடம் படிக்கையிலேயே கையிலே ரிஸ்ட் வாட்ச் அது இதுன்னு ஏக சொகுசு தான். எங்கம்மா நாள் கிழமைன்னா ஒரு நல்ல சேலை கூட வாங்கித் தராத மகானுபாவன் அந்த ஆளு. 'மூத்தவன், நீ தாண்டா திதில்லாம் அவருக்குச் செய்யணும்'ன்னாங்க.. 'அட, போங்கய்யா.. வேறே வேலை இல்லே?'ன்னு அத்தனை பேர் மூஞ்சிலே அடிச்ச மாதிரி சொல்லிட்டேன்.."

  ReplyDelete
 11. இன்னொருத்தர். தன் தந்தையைப் பார்த்ததே இல்லை. அவரின் ஒரு வயதிலேயே அவர் தந்தை இறந்து விட்டார். அந்தக்காலத்தில் ஃபோட்டோ எடுப்பதெல்லாம் சில குடும்பங்களில் ரொம்பவும் குறைச்சல். அதனால் அவர் அப்பா இப்படி இருப்பார் என்று தெரிந்து கொள்வதற்குக் கூட வீட்டில் ஒரு புகைப்படம் இல்லை.

  இவர் தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய தவறியதே இல்லை. யாரானும் ஏதானும் கேட்டா, 'எங்கப்பாடா! நான் சிரார்த்தம் செய்யாம இன்னொருத்தனா வந்து செய்வான்?.. என்ன கேள்வி கேக்கறேடா!" என்பார்.

  இன்னொருத்தர். "எனக்கு இன்ஷியலே கொடுத்தவர்டா.. அவர் பேரோட மொதல் எழுத்தை எழுத்திட்டுத் தான் சம்பளப்பட்டியலே கையெழுத்து போட்டு மாசாமாசம் சம்பளம் வாங்கறேன்.. அவருக்கு திதி செய்யலேனா எப்படிடா.."

  மற்றொருவர்: "இந்தக் காலத்லே ஒரு சிரார்த்தம் செய்யணும்ன்னா, கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆகறது.. எனக்கு இருக்கற கஷ்டத்திலே என்ன செய்ய முடியும்?.. அதான், எங்க அண்ணன் செய்யறானே? அது போதும்ன்னு இருந்திடறேன்.."

  "அப்போ உங்கப்பா சிரார்த்தம் அன்னிக்கு உங்கண்ணன் வீட்டுக்குப் போய் கலந்திப்பீங்களா?"

  "அண்ணனுக்கு விருப்பம் தான். அனா அண்ணி ஒரு மாதிரி.. குழந்தை குட்டிகளோட படை திரட்டிக்கிட்டு வந்திட்டாங்களாக்கும், என்று நினைப்பாங்க.. அதனாலே போர்றதில்லே.. எங்க வீட்லே அப்பா போட்டோ வைச்சு சாமி கும்பற மாதிரி கும்புட்டுப்போம்.. ஆனா, அன்னிக்கு வாழைக்கா கறி பண்ணி சாதம் வைச்சு காக்காய்க்கு போடறது மட்டும் கண்டிப்பா செஞ்சிடுவோம்.."

  எத்தனை பேர்?.. எத்தனை விதமா?.. இதிலிருந்து ஏதாவது தெரிஞ்சா அதான் இந்த சிரார்த்தம், சம்பிரதாயம், சடங்கு எல்லாம்!

  ReplyDelete
  Replies
  1. இதிலெல்லாம் யாரும், யாரையும் கட்டாயப்படுத்த முடியாது! அவரவர் விருப்பம் தான். ஆகவே சாகும்வரையிலும் பெற்றோரைக் கவனிக்காத மகன் செத்தபின்னர் தன் சந்ததிகளுக்குத் தீங்கு நேரிடுமோ என்னும் அச்சத்தால் ஈமச்சடங்குகளையும், வருடாந்திரத் திதியையும் அமர்க்களமாகச் செய்வதையும் கண்டு வருகிறேன். என்னைப் பொறுத்தவரை பெற்றோரையும் கவனிக்க வேண்டும், சடங்குகளையும் முடிந்தவரை செய்ய வேண்டும், அதோடு இது சிராத்தம் தான். "சிரா"ர்"த்தம் அல்ல. நடுவில் "ர்" தேவையில்லை. சிரத்தையுடன் செய்வது சிராத்தம் என்றானது.

   Delete
 12. / நீங்கள் எதுவும் செய்யவில்லை எனில் அதன் பலாபலன்கள் உங்கள் குடும்பத்திற்குத் தான்!/ இதுவும் ஒருவகை பயமுறுத்தல்தான் சாமி கண்ணைக் குத்தும் என்பது போல

  ReplyDelete
  Replies
  1. நம்பிக்கை உள்ளவர்கள் தான் பயப்படுவார்கள் என்பது உங்கள் கருத்து. உங்களுக்கோ இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. ஆகவே நான் பயமுறுத்துவதாகச் சொல்வது அபத்தம்! பல குடும்பங்களிலும் நடைபெறுவதைச் சொன்னேன். ஏற்பதும், ஏற்காததும் உங்கள் விருப்பம். நான் யாரையும் கட்டாயப்படுத்த வில்லை!

   Delete
 13. என்னை பயமுறுத்துவதாகச் சொல்லவில்லைநம்பிக்கை கொண்டு வர உபயோகிக்கப்படும் பயமுறுத்தல்யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது பதிவைப் படிக்கும் போது எழும் எண்ணங்கள் தனிமனிதரைக் குறி வைத்தல்ல

  ReplyDelete
 14. "எத்தனை பேர்?.. எத்தனை விதமா?.. இதிலிருந்து ஏதாவது தெரிஞ்சா அதான் இந்த சிரார்த்தம், சம்பிரதாயம், சடங்கு எல்லாம்!" - மிகவும் சரி ..
  " / நீங்கள் எதுவும் செய்யவில்லை எனில் அதன் பலாபலன்கள் உங்கள் குடும்பத்திற்குத் தான்!/ இதுவும் ஒருவகை பயமுறுத்தல்தான் சாமி கண்ணைக் குத்தும் என்பது போல "
  இதுவும் மிகவும் சரியே !

  " நீ தப்பு செய்தால் தண்டனை உண்டு என்றாவது நம்புகிறாயா "- தப்போ சரியோ இரண்டையுமே செய்யும் '" சுதந்திரம் " எனக்கு கிடையாது ..நான் செய்வாதெல்லாம் இறைவன் சங்கல்பப்படியே ..அவன் சங்கல்பப்படி அவனே ( என் மூலம் ) நடத்திக் கொள்வதிற்கு அவன்
  எப்படி தண்டனையோ ,வெகுமதியோ கொடுப்பது ?

  மாலி

  ReplyDelete
  Replies
  1. நம் காரியங்களுக்கு நாமே பொறுப்பு என்பதை மறக்கக் கூடாது. கடவுள் நமக்கு வழி தான் காட்டுகிறார். ஒரு கொலைகாரன் கொலை செய்து விட்டு பின்னர் இறைவன் சங்கல்பப்படியே கொலை செய்தேன் என்று கூறி விட்டுத் தப்பிக்கலாமா? சொல்வதே அபத்தமாக இல்லையா? நமக்கு மூளை, சிந்திக்கும் திறன், நல்லது, கெட்டதை எடைபோட்டுப் பார்க்கும் திறன் அனைத்தையும் கடவுள் இலவசமாகக் கொடுத்திருக்கிறார். அதைப் பயன்படுத்துவதில் தான் நம் திறமை, சாமர்த்தியம் வெளிப்படும்! இறைவனிடம் பரிபூரண சரணாகதி என்பதையே பலரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. என்ன செய்தாலும் இறைவன் ஏற்றுக் கொள்வான்; அதற்கு தண்டனையோ வெகுமதியோ அவன் கொடுக்க மாட்டான் என்று நினைப்பது சரியல்ல! ஒரு விஷயம் கவனத்தில் வைக்கணும். நாம் நல்லது செய்தால் இறைவனிடமிருந்து வெகுமதி கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது போல் தவறு செய்தாலும் அவன் தண்டனை கொடுப்பான் என்றும் எதிர்பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் செய்த தவறுகளை இறைவன் சுட்டிக் காட்டி இருக்கிறான். வருந்த வைத்திருக்கிறான். அதன் பின் விளைவுகளையே நான் அதற்கான தண்டனையாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இதெல்லாம் அவரவர் மனப் பக்குவத்தைப் பொறுத்தது.

   Delete
  2. ஒரு பக்கம் கடவுள் இல்லைனு சொல்ல வேண்டியது; இன்னொரு பக்கம் அனைத்தும் இறைவன் சங்கல்பப்படி நடக்கிறது என்பது! :)))) கடவுள் இல்லைனால் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நாம் நடத்துவது தானே. அதன் விளைவுகளுக்கு நாம் தானே பொறுப்பு. கடவுள் இருப்பதை உண்மையாக நம்புபவன் தான் தான் செய்யும் செயல்களுக்கான பொறுப்பைக் கடவுள் மேல் சுமத்துவான்; சுமத்த முடியும்! நம்பாதவர்கள் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் கடவுளின் இருப்பை அவர்கள் ஏற்றுக் கொண்டதாகத் தான் ஆகும்.

   Delete
  3. அனைவருக்கும் தெரிந்த ஓர் கதை! ஓர் ஏழை பிராமணன், மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான். மஹாவிஷ்ணுவும், மஹாலக்ஷ்மியும் அத்தகைய கஷ்டத்தில் கூட அவனின் பக்தியை நினைத்து நினைத்து மகிழ்ச்சி கொண்டிருந்தார்கள். ஆகவே தேவிக்கு அவனுக்கு எவ்வகையிலாவது உதவ வேண்டும் என்னும் எண்ணம். உதவ நினைத்தாள். விஷ்ணு தடுத்தார்! அவனுக்கு இந்தப் பிறவியில் இந்தக் கஷ்டத்தைப் பட்டாக வேண்டும் என்பது விதி! விதிக்கு மாறாக ஏதும் செய்ய முடியாது! என்று லக்ஷ்மி தேவியோ நான் மாற்றிக் காட்டுகிறேன் என்று சொன்னாள். ஒரு நாள் அவன் கோயிலுக்குச் சென்று வரும் வழியில் தங்கக் காசுகள் நிறைந்த ஓர் மூட்டையைப் போட்டாள். அவனும் கோயிலுக்குச் சென்றான். திரும்பி வரும் வழியில் ஓர் குருடனைப் பார்த்தான். அவன் நடப்பதைப் பார்த்த இந்த ஏழைக்குத் தானும் அவன் மாதிரி நடக்க முயற்சிக்க வேண்டும், தன்னால் முடிகிறதா என்னும் விபரீத ஆசை தோன்ற அப்படியே நடந்தவன் அந்தத் தங்கக் காசுகள் நிறைந்த மூட்டையைத் தாண்டிச் சென்று விட்டான். :)

   Delete
 15. The ( My ) message is valid, only if you do everything without ' do-er-ship ' " AHAM KAARA VIMOOTAATHMAA KARTAAHAMITHI MANYATHE " CHAP.iii-27.

  ReplyDelete
  Replies
  1. மாலி சார், மேலே நீங்கள் சொல்லியிருப்பதை தமிழில் சொல்லுங்களேன். என் தளத்தில் நீங்கள் கேட்டிருப்பதற்கு பதில் சொல்ல உபய்யோகமாக இருக்கும்.

   Delete
 16. ​​
  அப்பாடா. எல்லோரும் கமெண்ட் போட்டு விட்டார்கள். நான் மட்டும் போடவில்லை என்பது உறுத்துகிறது.

  அவரவர் கருத்துக்கள் அவரவருக்கு. ஒன்று மட்டும் நிச்சயம். இந்த சிராத்தம் காயத்ரி போன்றவை வர்ணாசிரம தர்மத்தின்படி பிராமணன் என்று வகைப் படுத்தவர்களுக்கு மட்டுமே. மற்றவர்களுக்கு இல்லாமல் இருந்தது. முன்னோர் வழிபாடு என்பது பிராமணர் அல்லாதார் "இந்து மதம்" என்பதைக் கடைப்பிடிக்கத் துவங்கும் முன்பே அவர்கள் வழக்கத்தில் இருந்தது. பிராமணர் அல்லாதவர் தற்போதுதான் இந்த பித்ரு தர்ப்பணம் போன்றவற்றை பிராமணர்களைக் கொண்டு செய்கிறார்கள்.

  சம்பிரதாயம், சடங்கு, வழிபாடு என்பவை எல்லாம் ஒரு நம்பிக்கையின் பேரால் செய்யப்படுவது. ஒருவருடைய நம்பிக்கை மற்றவர்க்கு மூட நம்பிக்கை ஆக இருக்கலாம். எது எப்படி ஆயினும் நான் சொல்வதும் செய்வதும் மட்டுமே சரி, சிறந்தது என்று "முயலுக்கு மூன்று கால் என்று சாதிப்பது சரியல்ல".

  --
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. யாரும் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. அவரவர் விருப்பம் போல் நடந்து கொள்ளலாம். ஆனால் கதாசிரியரின் கருத்துச் சரியில்லை என்பதைச் சுட்டவே எழுதப்பட்ட பதிவு இது. எல்லாவற்றிற்கும் இன்னொரு கோணம் உண்டு. அதைத் தான் சொல்லி இருக்கிறேன். நான் சொல்வதும், செய்வதுமே சிறந்தது என்னும் நினைப்பு என்னுள் இருந்தால் எங்க வீட்டிலேயே எல்லோரையும் கட்டாயப்படுத்தி மாற்றி இருக்க வேண்டும். என்னளவில் தான் நான் எல்லாவற்றையும் கடைப்பிடிப்பது. மற்றபடி சொந்த மகனாகவே இருந்தாலும் வற்புறுத்துவது என்பதே இல்லை! :) கேட்டால் தான் சொல்லுவேன். இங்கே பகிர்ந்தது எங்கானும் ஓர் மூலையில் இருப்பவர்க்காவது அவர்களுக்காவது இதன் தாத்பரியம் போய்ச் சேரட்டும். புரிந்து கொண்டு செயலாற்றட்டும் என்பதற்காகத் தான்.

   Delete
  2. வர்ணாசிரமம் குறித்த புரிதலே பலருக்கும் சரியாக இல்லையோ? ஏனெனில் வர்ணாசிரமத்தில் எங்கேயும் பிராமணனுக்கு மட்டுமே சடங்குகள், சிராத்தம், காயத்ரி என்று இருந்ததில்லை. ஶ்ரீராமர் தன் தகப்பனுக்கு ஈமச் சடங்குகள் செய்திருக்கிறார். ஶ்ரீகிருஷ்ணன் தன் தாய், தகப்பனுக்குச் செய்திருக்கிறார். குஜராத்தில் ஶ்ரீகிருஷ்ணன் தன் தாய்க்கு ஈமச்சடங்குகள் செய்த இடம் மாத்ருகயா என்னும் பெயரில் இன்றளவும் பலரும் அங்கே சென்று தங்கள் தாய்க்கான ஈமச் சடங்குகளைச் செய்யும் இடமாக இருந்து வருகிறது. பஞ்சபாண்டவர்கள் போர் முடிந்ததும் இறந்த கௌரவர்கள் அனைவருக்கும் எள்ளும் தண்ணீரும் விட்டனர். பீஷ்ம பிதாமஹருக்காக இந்தியாவில் பீஷ்மாஷ்டமி சமயம் (ரதசப்தமிக்கு மறுநாள் தை மாதம்) ஆண், பெண் உள்பட நம்பிக்கை உள்ள சகலமானோரும் பீஷ்மருக்கு எள்ளும், தண்ணீரும் விட்டு வருகின்றனர். பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளிலேயே வர்ணாசிரமத்தின் உண்மையான கோட்பாடுகள் அழிய ஆரம்பித்து ஜாதிப் பிரச்னைகள் தலை தூக்க ஆரம்பித்துப் பதினெட்டு, பத்தொன்பதில் முழு வேகத்துடன் செயல்பட ஆரம்பித்து விட்டது. இன்றளவும் தொடர்கிறது வருத்தமான விஷயம்!

   Delete
  3. //பிராமணர் அல்லாதவர் தற்போதுதான் இந்த பித்ரு தர்ப்பணம் போன்றவற்றை பிராமணர்களைக் கொண்டு செய்கிறார்கள்.//

   காசியில் போய்ப் பார்த்தால் பிராமணர் அல்லாதவர்கள் ஈமச்சடங்குகள் செய்வதற்கான மடங்கள் பல நூறு ஆண்டுகளாக அங்கே இருந்து தொண்டாற்றி வருவதைப் பார்க்க முடியும். அதில் பிரபலமானது திருப்பனந்தாள் மடம், நாட்டுக்கோட்டை நகரத்தார் மடம், ஆதி சைவ மடம் போன்றவை! இந்து மதம் என்ற ஒன்று அந்நியர்களால் பெயர் சூட்டப்பட்ட ஒன்று! ஆகவே அதை எல்லோரும் எப்போதும் கடைப்பிடித்தே வந்தார்கள். தொல்காப்பியர் காலத்திலேயே கண்ணனை மாயோன் என்று குறிப்பிட்டு வந்திருக்கின்றனர். முருகப் பெருமான் வழிபடப் பட்டிருக்கிறான். சிவனை வழிபட்டிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன.

   Delete
 17. நான் செய்கிறவன் என்ற எண்ணம் இல்லாமல் -என் செய்கைகளில்
  நான் ஆட்டுவிக்கப்படுகிறேன் என்ற அனுபூதி நிலையில் செயல் படும்
  நிலையில் மட்டுமே --


  "The ball no question makes , but Right or Left as strikes the Player it goes , And He who tossed thee into the Field ,He knows about it all,He ,He knows,
  The mooving finger writes and having writ mooves on,nor all thy wit or piety
  shall lure it to cancell half a line, nor all thy tears shall wash out a word of it.."

  என்பது போல் ..

  ReplyDelete
  Replies
  1. ஐயா, நீங்கள் சொல்வது அனுபூதி நிலையில் செயல்படுவது என்பது எத்தனை உயர்ந்த நிலை. என் போன்ற சாமானியர்களால் அடைய முடியுமா? நான் என்ன ஆவுடையக்காளா? சக்கரத்தம்மாளா? அனுபூதி நிலையை அடைந்தவர்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லைதான்! ஆனால் என் போன்ற சாமானியர்களுக்கு இதிலெல்லாம் அனுபூதி நிலையை அடைந்தாற்போல் நடந்து கொள்ள முடியாது என்பதே உண்மை!

   Delete
  2. ஜீவி சாரின் பதிவில் உங்கள் மேலதிக விளக்கம் குறித்து மீண்டும் அறிந்தேன். அத்தகைய நிலையை என்னால் எல்லாம் இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல, இன்னும் ஜென்மங்கள் இருந்தாலும் அடைய முடியுமா என்பது சந்தேகமே! "தான்" "நான்" அற்றுப் போவது எத்தகையதொரு உயர்ந்த நிலை. யோகிகளுக்கும், சித்தர்களுக்கும், ஞானிகளுக்குமே லபிக்கக் கூடிய ஒன்றல்லவோ! நானெல்லாம் கீழே தான் நிற்கிறேன். பக்தி நிலையில் கூட படிகளுக்குக் கீழேயே தரையில் நின்று கொண்டு தான் எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கேன். படியில் கால் வைக்கும் தைரியம் கூட எனக்கில்லை! :(

   Delete
  3. கீதா மேடம்.. உங்களுடைய பின்னூட்டம் நன்றாக இருக்கு. 'அனுபூதி 'நிலைக்கு எட்டுவதற்கே எத்தனை பிறப்புகள் இருக்கிறதோ..

   Delete
  4. உண்மையை ஒத்துக் கொண்டு தானே ஆகவேண்டும். :)

   Delete
 18. கும்பகர்ணனை மறந்து விட்டீர்களே!

  "என்னோடு வந்து விடு" என்று கும்பகர்ணன் அழைக்கும் பொழுது, "உன்னோடு வந்து விட்டால், நம் அண்ணன் இராவண்னுக்கு "எள் நீர் இறைத்து கடன் கழிப்பாரைக் காட்டாய்" என்கிறானே!

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம், ஆமாம், இப்படி நிறையப் பேரைச் சொல்லலாம் தான்! :) ஆனால் இது என்னமோ பிராமணர்கள் மட்டுமே செய்யக் கூடிய சடங்காகவும், அவங்க தான் மற்றவர்களை வற்புறுத்திச் செய்ய வைப்பதாகவும் தோற்றம் அளிக்கிறது! தென்புலத்தோர் குறித்து வள்ளுவர் எழுதாததா?

   Delete
  2. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
   ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

   Delete
  3. பிரதிலிபியில் கண்ணனின் இந்தக் கதைக்கு என்னுடைய பின்னூட்டங்களைக் காணலாம். :)

   Delete
 19. சிரார்த்தம் குறித்து விரிவாக பதிவிலும் பின்னூட்டங்களிலும் படித்து பல விஷயங்கள் அறிந்து கொண்டேன். சிரார்த்த காரியங்களின் போது குழந்தைகள் சாப்பிட தடை இல்லை! வெளி உணவாக இருந்தாலும் சிரார்த்த சமையல் ஆரம்பிக்கும் முன் சாப்பிட்டுவிட்டு அந்த இடத்தை சுத்தப்படுத்திவிட வேண்டும். அதுபோல பிராமணார்த்தம் இருந்தவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் பிண்டம் போட்டவுடன் பட்சணங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். அதில் கட்டுப்பாடுகள் யாரும் விதிப்பது இல்லை! நல்லதொரு பதிவு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுரேஷ், நீங்க சொல்வதே தான் நான் சொல்வதும்! சரியான புரிதல் இல்லாமல் எல்லாவற்றையும் தவறாகவே பார்ப்பதால் வரும் பிரச்னைகள் இதெல்லாம்.

   Delete
  2. இன்னும் சொல்லப் போனால் மற்ற மதத்தவர்களும் தங்கள் முன்னோர் இறந்த நாளில் நினைவு நாளாக அனுஷ்டிப்பதோடு கல்லறைகளுக்கோ அடக்கம் செய்த இடங்களுக்கோ சென்று பூக்களை அவர்களுக்குப் பிடித்த உணவு, உடைகளை வைத்து வணங்குகின்றனர். ஆகவே இது மக்கள் அனைவருக்கும் பொதுவாக உள்ள ஒரு நியதி தான்! இந்தியர்களுக்கு மட்டுமல்ல. செய்யும் முறை தான் மாறுபட்டிருக்கிறது.

   Delete
 20. //சிரார்த்தம் குறித்து விரிவாக பதிவிலும் பின்னூட்டங்களிலும் படித்து//

  ஹிஹிஹி..... சுரேஷ்... பின்னூட்டத்தில் படித்திருந்தால் ர் சேர்த்திருக்கக் கூடாதே....

  ReplyDelete
  Replies
  1. ஆமா, இல்ல! ஹிஹிஹிஹி எல்லோருமே சிரா"ர்"த்தம் என்றே எழுதுகின்றனர், சொல்கின்றனர். இன்னும் சிலர் நான் சிராத்தம் என்று சொன்னால் அழுத்தம் திருத்தமாக "சிரா"ர்"த்தம்" என்று சொல்லிவிட்டுக் கொஞ்சம் பெருமையுடன் என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள். :))))))

   Delete
 21. கதையைப் படித்தேன். பின்னூட்டங்களை படிக்க முடியவில்லை.

  ReplyDelete