எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 16, 2017

சமையல், சமையல்! சாப்பிடலாம் வாங்க!

வாலு போச்சு, கத்தி வந்தது கதையா, இப்போ நான்கு நாட்கள் முன்னர் gastroenteritis வந்து விட்டது. உடனடியாக ஆரோரூட் மாவு வாங்கி வந்து கஞ்சி வச்சுச் சாப்பிட்டுவிட்டு ஆன்டி பயாடிக்கும் எடுத்துக் கொண்டேன். நாளைக்குத் தான் மாத்திரைகள் முடியும். இம்முறை நீண்ட நாட்கள் உடம்புப் படுத்தல்!  நடுவில் வியாழன், வெள்ளி மாமியாரின் மாதாந்திரத் திதிகள் வேறே வர சமையலுக்கு ஆளை ஏற்பாடு செய்தோம். பொதுவாக நானே இரண்டு நாளும் சமைத்து விடுவேன். ஆனால் கடந்த இரண்டு, மூன்று முறையாக உடல் நலம் கருதி ஆள் ஏற்பாடு செய்து விடுகிறோம். வழக்கமாக வரும் மாமி இங்கேயே பக்கத்தில் தான் இருக்கிறார். அவர் சமையல் சாப்பிடும்படி இருக்கும். என்ன ஒண்ணு இனிப்புக்கெல்லாம் ஏலக்காயே சேர்க்க மாட்டார். இத்தனைக்கும் நான் எப்போவும் ஏலக்காயைத் தூள் செய்து தயாராக வைத்துவிடுவேன். ஆனால் அவருக்கு என்னமோ ஏலக்காய் அலர்ஜி போல! மத்தபடி சமையல், பக்ஷணம் வகையறா ஓக்கேயாக இருக்கும். ரொம்ப நல்லா இருக்குனு சொல்ல முடியாட்டியும் தூக்கிக் கொட்ட வேண்டாம். சாப்பிடும்படி இருக்கும். அவங்களுக்கு வீட்டில் விருந்தினர் வந்ததால் இரண்டு முறையாக வர முடியவில்லை.

போனமுறை ஒரு மாமியைப் புதுசாக ஏற்பாடு செய்தோம். அந்த மாமி நான் வந்து காயெல்லாம் நறுக்கிக்கறேன்னு சொன்னதாலே நறுக்காமல் வைச்சிருந்தோம். அதோடு அப்போத் தான் ஆஸ்த்மா அட்டாக் உச்சத்தில் இருந்தது. இல்லைனால் காய்களை எல்லாம் நறுக்கியே வைச்சுடுவோம். அந்த மாமியே காய்களை நறுக்கிண்டாங்க. சமையலையும் ஒன்பதரை பத்துக்குள்ளாக முடிச்சுட்டாங்க. அப்போத் தான் ஸ்ராத்தமே ஆரம்பம்! எனக்கோ இருமல் துளைச்சு எடுக்குது! மூச்சு விட முடியவில்லை! எப்படிப் பரிமாறுவேன்? ஒண்ணுமே புரியலை! ஆனால் அவங்க பரிமாறணும்னா அதுக்குத் தனியாக் காசு கேட்டாங்க! அதோடு இல்லாமல் என்னால் இருக்க முடியாதுனும் சொல்லிட்டுக் கிளம்பிட்டாங்க! வேறொரு இடத்தில்  வேலை ஒத்துண்டாங்க போல! சரினு சிராத்தம் முடிந்து நாங்க சாப்பிட உட்கார்ந்தால் அவரைக்காயில் நாரை நீக்கவே இல்லை என்பதோடு அதை இரண்டு, மூன்றாக இஷ்டத்துக்குக் கிள்ளிப் போட்டுட்டார். வாழைத் தண்டு கொத்துக் கொத்தாகக் கன்னங்கறுக்க! பாயசம் அதுக்கும் மேலே! வடை, அதிரசம் எல்லாம் மேலே வெந்திருந்தது. உள்ளே ஒரே மாவு! அல்வா பாதிக்கும் மேல் உருளியில்! அதோடு தேய்க்கப் போட்டிருக்காங்க. என்னாலோ எதையும் கவனிக்க முடியலை! பரிமாறுவதே ரங்க்ஸ் தான் பரிமாறினார். என்னால் முடியலை!  எள்ளுருண்டை எள்ளைத் தண்ணியிலே நனைச்சுட்டு அப்படியே வெல்லத்தைப் போட்டுக் கலந்தாப்போல் உதிர் உதிராக இருந்தது. எல்லாத்தையும் அப்படியே தூக்கி எறிந்தோம். சாதம், தயிர், ஊறுகாயை வைத்துக் கொண்டு சாப்பிட்டோம்.

இம்முறை அந்த மாமி வேண்டாம்னு புதுசா ஒருத்தரைக் கூப்பிட்டிருந்தோம். சின்ன வயசுக்காரங்க! அதாவது என்னை விடச் சின்னவங்க. ஹிஹி. 50,52 வயசுக்குள் தான் இருக்கும். சரி, நல்லாச் சமைப்பாங்க போலனு நினைச்சேன். இம்முறையும் வயிற்றுக் கோளாறால் என்னால் சரியாக் கவனிக்க முடியலை. இருந்தாலும் அத்தனை உடல் நலத்திலும் முதல் நாளே புளிக்காய்ச்சல் காய்ச்சி, ஊறுகாய் போட்டு ஸ்வீட்டும் பண்ணி வைச்சுட்டேன். வந்த மாமி சமையலும், வடை தட்டுவதும் தான்! அன்னிக்கு சமையல் ஓக்கே! அதோடு இல்லாமல் எங்களை உட்கார வைச்சுச் சாப்பாடும் பரிமாறினாங்க. அடுப்பை எல்லாம் சுத்தம் செய்து தரேன்னும் சொன்னாங்க. மிக்சியைச் சுத்தம் செய்து, ஜாரை எல்லாம் அலம்பி எல்லாம் நல்லாச் செய்தாங்க. சரி நல்ல மாதிரியா இருக்காங்கனு நேத்திக்கு வேலைக்கும் அவங்களே வரச் சொல்லி இருந்தோம். வந்தாங்க! வெல்லப் பாகு வைக்கத் தெரியாதுனு சொல்லக் கூடாதா? எள்ளுருண்டை கமர்க்கட்டை விட மோசம். அதிரசம் அடித்தால் காயம் படும். அதன் மொறு மொறு பாகங்களை வாயில் போட்டால் கிழித்து விடும். ரத்தம் வரும்! வடை எட்டு, ஒன்பது எனப் பலவிதமான வடிவங்களில். அல்வா மட்டும் நான் கொஞ்சம் கிட்டே இருந்ததால் சாப்பிடும்படி இருந்தது.
அதிரசம் க்கான பட முடிவு       வடை க்கான பட முடிவு
மற்றபடி சமையல் ஓகே! இப்போத் தான் 2,3 வருஷமாக இந்தத் தொழிலுக்கு வராங்களாம். பக்ஷணம் எதுவும் பண்ணத் தெரியாது. சமையல் மட்டும் தான் பண்ணுவேன்னு சொல்லி இருக்கக் கூடாதோ! வறுவல் வகையறா எல்லாமும் கன்னங்கறுக்க! பொதுவா எல்லோருமே எண்ணெயை அடுப்பில் வைத்துப் பலகாரங்கள் செய்கையில் அடுப்பைப் பெரிசா எரிய விடறாங்க. நான் எண்ணெய் காய்ந்ததும் அடுப்பைத் தணித்து விடுவேன். அந்தச் சூட்டிலேயே எல்லாவற்றையும் பண்ணி எடுப்பேன். தேவைன்னா சிறிது நேரம் அடுப்பைப் பெரிசா வைச்சுக்கலாம். அதோடு சுட்ட எண்ணெயைத் திரும்பப் பயன்படுத்த மாட்டேன். ஆகையால் எண்ணெயைக் கூடிய வரை கொஞ்சமாக வைத்துச் செய்து கொள்வேன். இது செய்ய வேண்டியதும் கொஞ்சம் கொஞ்சம் தான்! அதையே சரியாப் பண்ணலை.

ஆனால் நேத்திக்குச் சாப்பிட்டதும் ரொம்ப முடியாமல் போனதால் நான் போய்ப் படுத்துட்டேன். அவங்க சமையலறையைச் சுத்தம் செய்து கொடுத்துட்டுப் போயிருக்காங்க! அடுப்பை எல்லாம் அலம்பித் துடைத்து வைச்சிருந்தாங்க. அந்த வரைக்கும் நல்லாத் தான் இருக்கு. ஆனால் வேலை தெரியலை. பொதுவாக இப்போல்லாம் கொஞ்சம் சமைக்கத் தெரிந்தாலே உடனே காடரிங் செர்விஸ் னு ஆரம்பிக்கிறாங்க. இங்கே பக்கத்திலே ஒரு பெண் இப்படித் தான் சமைச்சுக் கொடுக்கிறாங்க. நேரிலே போய்ப் பார்த்துப் பேசிட்டுக் காலை குழம்பு, ரசம், கறி, கூட்டுக்கு ஏற்பாடு செய்தோம். அவரைக்காய்க் கறி, முருங்கைக்கீரைக் கூட்டு(தினம் ஒரு கீரை சேர்ப்பேனாக்கும் என்றார் அந்தப் பெண்) வெண்டைக்காய் சாம்பார், ரசம் இதான் மெனு. பதினொன்றரைக்கு ரெடியாயிடும்னு சொல்லி இருந்தார். நம்ம ரங்க்ஸ் பதினொண்ணே முக்காலுக்குப் போனால் அப்போத் தான் காயே நறுக்கிட்டு இருக்காங்களாம்! சரியாப் போச்சு போனு நினைச்சால் இருந்து வாங்கிட்டுப் போயிடுங்கனு சொன்னாங்களாம். வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுத்தால் ஒரு ஐடத்துக்குப் பத்து ரூபாய் அதிகம்! சரினு அங்கேயே இருந்து வாங்கிக் கொண்டு பனிரண்டரை மணியோடு வந்து சேர்ந்தார்.

அவங்களுக்கும் காய் நறுக்கத் தெரியலை. முருங்கைக்கீரையை ஆயவே இல்லை! குச்சிகளெல்லாம் தொண்டையில் மாட்டிக் கொண்டு அவஸ்தை. அவரைக்காயில் நாரே நீக்கவில்லை! யாருமே நீக்க மாட்டாங்களோனு நினைக்கிறேன். உப்புச் சப்பில்லாமல் சாம்பார், ரசம்! சாயந்திரம் சப்பாத்தி, தால் கொடுக்கிறதாச் சொன்னாங்க! சரினு ஆறு சப்பாத்தியும் தாலும் வாங்கி வந்தால் சப்பாத்தி தமிழ்நாட்டு முறையில் தோசை மாதிரி எண்ணெய் விட்டுப் பண்ணி இருக்காங்க! அதுவும் வேகவே இல்லை பல இடங்களில். தால் ஒரு பக்கம், தண்ணீர் ஒரு பக்கம், தக்காளி இன்னொரு பக்கம்னு ஓடுது! வேறே வழியில்லை! அன்னிக்கு அதைத் தான் சாப்பிட்டாகணும்! வாயிலே மாவு ஒட்டிக்கிறது.  தூக்கி எறிஞ்சுடலாமானு வந்தது. ஆனால் அவங்கல்லாம் தங்கள் சமையலைப் பற்றிப் பெருமையாப் பேசிக்கிறதைப் பார்த்தால் self appraisal ரொம்ப அதிகமோனு தோணுது!

என்னமோ எனக்குத் தான் இப்படி எல்லாம் நடக்குதோ! அல்லது எனக்குக் குற்றம் சொல்லும் மனப்பான்மையா? ஆனால் பாருங்க அந்த அதிரசம், அதான் நேத்திக்குச் செய்ததைக் காக்கை, குருவிகளுக்குப் போட்டால் அதுங்க கூட உடைக்க முடியாமல் கஷ்டப்படுதுங்க! :(  நல்லா சமைக்கிறவங்க மத்தவங்க சமைக்கிறதை ஏத்துக்க மாட்டாங்கனு ஒரு பேச்சு உண்டு. ஆனால் நான் சாப்பாடு நல்லா இருக்கையில் பாராட்டத் தான் செய்கிறேன். கொஞ்ச நாட்கள் முன்னாடி கூட ஒரு கிரஹப்பிரவேசச் சாப்பாடைப் புகழ்ந்திருந்தேன். ஆக மொத்தம் தப்பு யார் மேல்? என் மேலா? அவங்க மேலா?

இதைக் கண்டித்தும் பாராட்டியும் இதோடு ஒத்துக் கொண்டும் வரப் போகும் கருத்துகளுக்காகக் காத்திருக்கேன். முதல்லே இதெல்லாம் எழுதலாமானு யோசனை! ஆனால் இதன் மூலம் நல்லாச் சமைக்கிறவங்க யாரானும் தெரிய நேர்ந்தால் ஓர் அவசரத்துக்கு உதவுமே!  மேலும் எல்லா இடங்களிலும் எல்லோருக்கும் இதே அனுபவமா என்பதையும் தெரிஞ்சுக்கலாம்.


27 comments:

 1. அதிரசத்தை காக்கைகூட சாப்பிடவில்ஸையா ? அதிசயம்தான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி! அதிரசம் ஷேப்பைப் படம் எடுத்துப் போட்டிருக்கணுமோனு நினைக்கிறேன். ஏனெனில் எல்லோருக்குமே நான் குற்றம் சொல்வதாகத் தெரியுது! :)

   Delete
 2. பட்சணங்கள் செய்வது கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பேர்கள் சரியாகச் செய்வதில்லைதான். சமையல் ஓரளவு செய்து விடுகிறார்கள். நம்மால் முடியவில்லை என்பதால் வெளியாள் வைக்கிறோம். ஏதோ அன்றைய பொழுது சிரமம் இல்லாமல், அதே சமயம் செய்யவில்லை என்கிற குறை வைக்காமல் ஓடியது என்று விட்டு விடுவோம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், நீங்களாவது ஒத்துக் கொண்டீர்களே! நானும் அவங்க கிட்டே எல்லாம் குற்றம், குறை சொல்வதில்லை. இங்கே தான் பொது வெளியில் புலம்பி இருக்கேன். என்ன அவ்வளவு காசு கொடுத்து வாங்கிப் பண்டங்கள் சாப்பிட முடியாமல் தூக்கிக் கொட்டும்போது மனது வேதனைப் படுகிறது. :(

   Delete
 3. கீதாக்கா.. உங்க வீட்டு சமையல்கதை:).. உங்க வீட்டு இண்டநெட் கதையை விடப் பெரிசா இருக்கே... ஹா ஹா ஹா.

  எனக்கும் ஏலக்காய் ---இனிப்புக்களுக்குப் போடுவது மட்டும் ஏனோ பிடிக்காது, ரீக்கு.. கறிகளுக்கு எல்லாம் விரும்பிப் போடுவேன்.

  உங்கள் போஸ்ட்டையும் புலம்பலையும் பார்க்க, எனக்கு என்னமோ உங்கள் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாக இருப்பதைப்போல தோணுது... நாம் சமைப்பதைப்போலவே எல்லோரும் இருப்பார்கள் என நினைப்பது கொஞ்சம் தப்புத்தானே, உடம்பு முடியாதபோது சமையலுக்கு ஆள் கிடைப்பதே பெரிய விசயம்.

  எனக்கு தெரிந்த இந்திய தம்பதி ஒருவரும் சொல்வார்கள்.. இப்போ எல்லாம், கொஞ்சம் பழகியவுடன், எனக்குச் சமைக்கத் தெரியும் என வருகிறார்களாம், ஆனா சமைக்கவே தெரியாமல் இருக்கு அவர்களுக்கு என... அதிகம் பேர் காசுக்காகத்தானே.. ஆனா வாங்கும் பணத்துக்கு வேலை செய்வோமே என நினைப்பதில்லை... ஒரு நாளில் 5 வீடு கொன்றக்ட் எடுத்துப் போட்டு... அடுப்பை நல்ல ஃபுல்லில் எரிய விட்டு டக்குப் பக்கென ஒரு மணியில் அவிச்சு இறக்கி வச்சிட்டு ஓடுகிறார்களாம்.

  இதை விட உடம்பு முடியாத நேரங்களில் ஒரு ரசம், சோறு என இருந்தால்கூட மனதுக்கு எரிச்சல் வராது...

  ReplyDelete
  Replies
  1. வாங்க கம்பபாரதி அதிரா! அந்த அதிரசத்தையும், வடையையும் உங்களுக்குப் பார்சலில் அனுப்பித் திங்க வைச்சிருக்கணும்! அப்போச் சொல்லுவீங்க என்னோட எதிர்பார்ப்பு என்னனு! :( க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சமையல் வரை ஓகேனு சொல்லிட்டேனே! இரண்டு நாட்களும் குழம்பு, கறி, ரசம், கூட்டு எல்லாமும் நன்றாகவே பண்ணி இருந்தாங்க! பக்ஷணம் தான் சொதப்பல்! முதல் நாள் நான் பண்ணி வைச்சுட்டதாலே பிழைச்சது! :)

   Delete
 4. எங்க அப்பா சிராத்தத்துக்கு வாத்தியார் மாமாவே ஆளை ஏற்பாடு செஞ்சுடறால். 3 வெவ்வேறு நபர்கள் over the period of 7 years. எல்லோரும் நன்னாத்தான் பண்ணினா. (ஆண்கள்... அதுனால இருக்குமோ? :-) )

  அவசரத்துக்கு ஒரு ஆள் கிடைச்சதுன்னு எடுத்துக்க வேண்டியதுதான். (ஒருவேளை ஆம்பிளைகள் பொதுவா இப்படிக் குறை சொல்லறதில்லையோ? :-)

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. எங்க மாமனாரின் காரியங்களுக்கும் மும்பையில் ஓர் ஆண் சமையல்காரர் தான் வந்து செய்து கொடுத்தார். அருமையான சமையல்! இப்போவும் நினைவில் இருக்கு! அதுவும் அந்த தோசையும், சாம்பாரும், சட்னியும் அருமை! இத்தனைக்கும் கிரைண்டரோ, கல்லுரலோ இல்லை. மிக்சியில் தான் அரைச்சுப் பண்ணினார். ஆம்பிளைகள் குறை சொல்வதில்லையா? சரியாப் போச்சு போங்க! நம்ம ரங்க்ஸோட எனக்கு தினமும் யுத்தம் தான்! எப்படிப் பண்ணினாலும் ஆயிரம் குற்றம் சொல்லுவார். உப்பு ஜாஸ்தி, உப்பு வேணும், காரம் அதிகம், புளி தூக்கல்னு! பொதுவாக நான் சமைக்கவரவங்க பிழைப்புக்காக வராங்க என்பதால் குற்றம், குறை சொன்னதில்லை. சொல்லவும் மாட்டேன். இவங்க ரொம்பவே மோசம் என்பதால் சொல்லும்படி ஆச்சு! :)

   Delete

 5. நல்லா சமைக்கிற என்னை கூப்பிடாமல் இப்ப்டி வெளியாட்களை கூப்பிட்டால் இப்படிதான் ஆகும். அடுத்த தடவை சமைக்க ஆள் தேவைப்படும் போது என்னை கண்டிப்பாக கூப்பிடுங்க........ ஆனால் என்ன போக்குவரத்து செலவையும் நீங்கதான் ஏற்றுக் கொள்ளனும்

  ReplyDelete
  Replies
  1. அவர்கள் உண்மைகள்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க சமைக்கறதுக்கு நான் ஒன்றரை லட்சம் செலவு செய்யணுமா? நல்ல கதை! :)))))

   Delete
 6. திருச்சியில் சமையல்காரர்களுக்கு அவ்வளவு தட்டுப்பாடா? ஆச்சர்யமாக இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. நீங்க வேறே! பாபு, முதல் வரவா? இங்கே சமையல் பொதுவாகவே சுமார் தான்! நாங்களும் சங்கம் ஓட்டலில் இருந்து, ஏழாம் சுவை வரை சாப்பிட்டுப் பார்த்துட்டோம்! :) திருவானைக்கா பார்த்தசாரதி ஓட்டல் நெய்தோசை என்பார்கள். வாயில் வைத்தால் குமட்டும். டால்டா ஊற்றி வார்த்திருப்பார்கள்! :( எப்போவோ ஒரு காலத்தில் நெய் தோசை போட்டிருக்கலாம்!

   Delete
 7. உண்மைதான்க்கா ..இப்போ கொஞ்சம் சமைக்க தெரிஞ்சாலும் எல்லாரும் உடனே கேட்டரிங் சர்வீஸ் செய்ய ஆரம்பிச்டறாங்க ..இது ஊரில் தங்கச்சியும் சொன்னா .கடையில் வாங்கும் சாப்பாடு பொருளும் அதோட வெளியிடங்களில் சாப்பிட்டாலும் நம் கைப்பக்குவம்தான் அந்த சுவைதான் துடுக்குன்னு முன்னாடி நிக்கும் ரெடியா கம்பேரிசனுக்கு :) போன வருஷம் உறவினர் வரங்கன்னு பக்கத்து பஞ்சாபி ரெஸ்டாரண்டில் சப்பாத்தி ஆர்டர் கொடுத்தோம் வாயில் வைக்க முடில ..மூணு வேளையும் கொடுத்தாலும் சப்பாத்தி சாப்பிடற என் மகளே தொடலை அந்த சப்பாத்திங்களை :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சலின், எங்க மாப்பிள்ளை சொல்லுவார், மாமி காடரிங் செர்விஸ் ஆரம்பிச்சால் பிய்த்துக் கொண்டு போகும்னு! ஹெஹெஹெ! நம்ம முகராசிக்கு எல்லோரும் காசு கொடுக்காமல் சாப்பிட்டுப் போவாங்கனு சொல்லுவேன்! ஏதோ அடுப்பைப் பற்ற வைக்கத் தெரிஞ்சால் சமையல் வரும்னு வந்துடறாங்க. ஆனால் நேற்று வந்த மாமி தனக்கு இப்போத் தான் 2,3 வருஷமாப் பழக்கம்னு சொல்லி இருந்தாங்க. என்றாலும் நான் திருநெல்வேலிக்காரங்க என்பதால் வடை, அதிரசம், அல்வா எல்லாம் நல்லாப் பண்ணுவாங்கனு எதிர்பார்த்தேன். :)

   Delete
 8. சென்னையில் தேவலை கீதா மா.
  இத்தனை கஷ்டப் பட வேண்டாம். இரண்டு ஆட்களாக வந்து
  முடித்துவிட்டுப் போகிறார்கள். அது வருஷாப்திகத்துக்கு சரி. மாச
  மாசத்துக்கு ஒவ்வொரு வேதனையா இருக்கே உங்களுக்கு. நன்றாக இருந்தால் குறை சொல்வோமா.
  இன்னும் ஒரு மாதம் பாக்கி இருக்கிறதா.
  உடல் நலம் சரியாக என் பிரார்த்தனைகள்.

  ReplyDelete
  Replies
  1. இங்கேயும் சில சமயம் இரண்டு பேராக வராங்க வல்லி! மாசாமாசம் தான் பிரச்னை! உடம்பு வேறே ரொம்பப் படுத்தல்!

   Delete
 9. இப்போதுதான் உங்களுடைய மாமியார் குணம் வெளியில் வருகிறது. இயலாமை, நோய், ஆற்றாமை, நிர்ப்பந்தம் எல்லாம் சேரும்போது எதுவுமே பிடிக்காது தான்.

  நோயுற்ற போதும் விசேஷங்களை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. பட்சணங்கள் அதிரசம், எள்ளுருண்டை, வடை போன்றவற்றை வீட்டில் தான் செய்யவேண்டும் என்பதை விட்டு வெளியில் வாங்கி இருக்கலாம். சாப்பாடு போன்றவற்றை எளிதான பருப்பு கறி, ரசம், மோர், வாழைக்காய் பொரியல், வெண்டைக்காய் தயிர் பச்சடி போன்றவற்றை வைத்து இருக்கலாம்.

  உலகம் , இந்தியா பூராவும் சுற்றி விட்டு எதுஎதையோ சாப்பிட்ட சமாளித்த நீங்கள் தற்போது குற்றம் காண்பது மேற்கூறிய .இயலாமையால் தான்.

  வரப்போகும் கஷ்டங்களுக்கு தற்போது உள்ளது சாம்பிள் தான். புலம்பல்கள்
  தீர்வாகாது.

  அறிவுரைகள் அக்கறையால் வந்தவை. பொறுத்துக் கொள்ளுங்கள்.

  நோய் நொடி நீங்கி பூர்ண ஆரோக்கியமும் நல்ல சாப்பாடும் கிடைக்க கடவுளை வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜேகே அண்ணா! இந்தியா பூரா சுற்றினாலும், உலகம் சுற்றினாலும் எது எதையோ சாப்பிடும்படியான சந்தர்ப்பம் இது வரை நேரவில்லை. விமானப் பயணங்களில் கூட அதிகமாய் ஜூஸ் பிஸ்கட், பழங்கள்னு வாங்கிப்போம். ஏதோ ஒரு வேளை ஏவிஎம் எல் வாங்கிப்போம். விமானப் பணிப்பெண்கள் தொந்திரவு செய்வாங்க! அப்போக் கூட வேண்டாம் தான்.

   Delete
  2. இந்தியாவில் சுற்றும்போது பெரும்பாலும் நான் மதிய உணவைத் தவிர்த்து விடுவேன். இதைப் பல முறை எழுதி இருக்கேன். மதியம் பெரும்பாலும் ஜூஸ் தான். பழச்சாறு எனில் பழங்களில் இருந்து நேரடியாக எடுக்கப்படுபவை! டின்களில் அடைத்தது இல்லை! இந்த விஷயத்தில் வடமாநிலங்களில் பயணம் செய்கையில் நம் விருப்பத்துக்கு ஏற்பப் பழச்சாறு கிடைக்கும். அன்னாசிப் பழச்சாறு எனில் அதோடு பம்ப்ளிமாஸையும் போட்டுப் பிழிந்து நம் கண்ணெதிரே பழச்சாறு எடுத்துப் பெரிய கண்ணாடி தம்பளரில் தருவாங்க. குறைந்த பட்ச விலை 15 ரூ. பெரிய தம்பளர் எனில் 25 ரூ! ஆனால் அது மாலை வரை தாங்கும். மாலையும் ஃபுல்கா ரொட்டி, தால்! அல்லது சாஸ் எனப்படும் மோர் அல்லது லஸ்ஸி. உணவு விஷயத்தில் கவனமாக இல்லைனால் பயணம் செய்வது கடினம். அதுவும் எனக்கு ஜிஆர்டி சிஸ்ட், அமீபயாஸிஸ் எல்லாமும் குடி இருக்கு! ஆகவே கையில் மாத்திரை, மருந்துகள் இவற்றோடு நல்ல ஓட்டலாகப் பார்த்துத் தான் சாப்பிடவும் சாப்பிடுவோம். தமிழ்நாட்டில் சுற்றும்போதும் இதே தான். காலையில் பொங்கல் அல்லது இரண்டு இட்லி. மத்தியானம் பழச்சாறு. இரவும் அப்படியே இரண்டு இட்லி!

   Delete
 10. ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சமையலும் அப்படியே...

  சிலர் சமையல் ரொம்பவே நன்றாக இருக்கும். சிலர் சமையல் ஏண்டா சாப்பிட்டோம் என்று! உங்கள் உடல் நலம் சரியில்லாத போது இப்படி வெளி ஆட்கள் சமையல் தான் - வேறு வழியில்லை என்று போக வேண்டியது தான். அடுத்த முறை வேறு யாரையாவது முயற்சி செய்யலாம் விடுங்கள். திருவரங்கத்தில் சமைக்க நிறைய ஆட்கள் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், ஏதோ உப்பு, புளி சேர்க்கத் தெரிந்து கொண்டதும் பத்துப் பேருக்குச் சமைக்கிறேன்னு கிளம்பறாங்க! அதைப் பார்த்தால் சிரிப்பு வருது! எனக்குத் தெரிந்து ஶ்ரீரங்கத்தில் சமையலுக்கு மாமி கிடைப்பது சிரமமாக இருக்கிறது.

   Delete
 11. அவங்கல்லாம் தங்கள் சமையலைப் பற்றிப் பெருமையாப் பேசிக்கிறதைப் பார்த்தால் self appraisal ரொம்ப அதிகமோனு தோணுது!// உண்மைதான் கீதாக்கா ரொம்பவே அதிகம்தான்....

  எங்கள் வீட்டில் ஆண்கள் தான் ஸ்ரார்த்த சமையல் சமைக்க வருவார்கள். மாமி காய் கட் பண்ணித் தர என்று. இதுவரை சமையல் நன்றாகவே இருக்கிறது.

  நம்மால் முடியாத போது என்ன செய்ய முடியும்...கடந்து செல்ல வேண்டியதுதான்...ஸ்ரீரங்கத்திலுமா ஆட்களுக்குப் பஞ்சம் ஆச்சரியம் தான்...வேறு யாரேனும் கிடைக்கிறாங்களா பாருங்க.....கீதாக்கா..

  உடல் நலத்தையும் பார்த்துக்கங்க..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா, வைணவர்களில் ஆண்கள் தான் சமைக்கின்றனர். சம்ப்ரோக்ஷணம் செய்துக்கலைனாப் பெண்கள் சமைக்கக் கூடாதுனோ அல்லது சமையலில் உதவக் கூடாதுனோ கேள்விப் பட்டிருக்கேன். வழக்கமா வர மாமி சமையல், பக்ஷணம் சுமாராக இருக்கும். சாப்பிட முடியும். அவங்களுக்கும் என்னை மாதிரி வீசிங் பிரச்னை! அதான் இரண்டு முறையாக வர முடியலை!

   Delete
 12. படத்தில் வடையும் அதிரசமும் நன்றாய்த்தானே இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி ஐயா, கூகிளார் கொடுத்த படத்தில் நன்றாக இருப்பதைத் தானே போடுவார்கள்?

   Delete
 13. ஆட்டுக்கு தாடி.. கண்டுபிடிப்பை மறுபடியும் ஆரம்பித்து வைத்து விடுவார்கள் என்பதை நம்பலாம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜீவி சார், புரியலை! என்ன கண்டுபிடிப்பு? ஆட்டுக்கு தாடி? குழப்பம்!

   Delete