எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 30, 2017

மாதங்களில் நான் மார்கழி!

வருஷா வருஷம் மார்கழி மாசப் பதிவுகள் போடுவேன். இந்த வருஷம் 15 தேதி ஆகியும் எதுவும் போடலை! ஏற்கெனவே போட்டதை மீள் பதிவாகப் போட மனம் ஒப்பவில்லை. மற்ற எல்லோரும் முகநூலிலும், தனிப்பதிவாகவும் போட்டு வருவதைப் படித்து வருகிறேன். முகநூலில் ஓவியர் கேஷவ் வெங்கட்ராகவன் வரையும் ஓவியங்களைப் பார்த்து பிரமித்து வருகிறேன். தூக்கத்திலிருந்து ஆண்டாள் எழுப்புவது உண்மையில் அஞ்ஞானம் என்னும் மாயை ஆகிய தூக்கத்தில்  நாம் ஆழ்ந்திருப்பதிலிருந்து நம்மை வெளியே கொண்டு வந்து இறைவனின் அண்மையை உணரச் செய்து அவனைக் குறித்து நினைக்கவும், அவனோடு ஐக்கியமாகவும் தான் என்பதை அனைவரும் அறிவோம்.  இவ்வுலக விவகாரங்களில் நாம் ஆழ்ந்து போய் விடாமல் நம்மைத் தட்டி எழுப்பி நம் உள்ளொளியை நமக்குக் காட்டி அதன் மூலம் இறைவனுடன் ஐக்கியம் அடைய வைப்பதே திருப்பாவையின் மையக் கருத்து. இங்கே தோழியர் நமது ஐம்புலன்களே ஆவார்கள். ஐம்புலன்களையும் தட்டி எழுப்பி மனதை இறைவன் பால்  திருப்பச் சொல்கிறாள் ஆண்டாள்.

அதிலும் முதல் பாடலிலேயே வைகுண்டத்தை அடைய வேண்டுமெனில் யசோதையின் இளஞ்சிங்கமான கார்மேனிச் செங்கண் உடைய கண்ணனை அடைந்தோமெனில் அந்த நாராயணன் நமக்கே "பறை" தருவான். ஆகவே அவனைப் பாரோர் புகழப் பாடி ஆடுவோம் வாருங்கள் என அழைக்கிறாள். இந்த இடத்தில் பறை என்பது இறைவனின் அருளைச் சுட்டுகிறது என்பது என் கருத்து. 108 ஆவது திருப்பதியான வைகுண்டத்தை அடைய வேண்டுமெனில் நமக்கு அந்தப் பறை= அருள் கிட்டவேண்டுமெனில் பரந்தாமனுடன் நாம் கலக்க வேண்டுமெனில் நம் மனதை இறைவன் பால் திருப்பி அவன் புகழைப் பாடி உய்வோம் என்பதே திருப்பாவையின் உட்கருத்து!

அதிலும் கோவிந்த நாமம் தனிச் சிறப்பு வாய்ந்தது. இந்த கோவிந்தா என்னும் பெயர் கண்ணனுக்கு எப்போது ஏற்பட்டது தெரியுமா?  கண்ணன் கோகுலத்தில் குழந்தையாக இருந்த சமயம்! இந்திரனுக்குத் தன்னால் தான் மழை பொழிகிறது என்னும் கர்வம்.  ஆகவே மழையை ஒரு சமயம் அதிகமாகப் பொழிய விட்டும், ஒரு சமயம் பொழியாமலும் வேடிக்கைகள் செய்து வந்தான். இந்திரனுடைய கர்வத்தை அறிந்து கொண்ட கண்ணனோ, மழை இயற்கையாகப் பொழிவது! இதில் இந்திரனின் தனித்தன்மை ஏதும் இல்லை என்பதை அவனுக்குப் புரிய வைப்பதற்காக, எப்போதும் கோகுலத்தில் நடைபெற்று வந்த இந்திர வழிபாட்டை நிறுத்திவிட்டு மலைகளும், செடி, கொடிகளும், மரங்களும் செழிப்பாக இருந்தாலே மழை பொழியும் என கோகுலத்து மக்களுக்கு எடுத்துச் சொல்லி கோவர்த்தனகிரிக்கு வழிபாடுகளை நடத்தச் சொல்லித் தானே முன்னின்று நடத்தியும் வைத்தான்.

கோவர்த்தன கிரி க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்

தனக்குரிய மரியாதைகளும், வழிபாடுகளும் நிறுத்தப்பட்டதைக் கண்ட இந்திரன் கோபம் கொண்டான். பேய்மழையைப் பொழிவித்தான் கோகுலத்தில் அனைவரும் கண்ணனைச் சரணாகதி அடைந்தனர். கண்ணன் தன்னைச் சரணடைந்த அடியார்களைக் கைவிடுவானா?  கோவர்த்தனகிரியையே குடையாக மாற்றித் தூக்கிப் பிடித்து கோகுலத்தின் சர்வ ஜந்துக்களையும் ஆடு, மாடுகள், பசு, பக்ஷிகள், மனிதர்கள் உட்பட அனைவரையும் பாதுகாத்தான். பொதுவாக "கோ" என்றால் பசு என்று மட்டும் பொருள் அல்ல.  எல்லா ஜீவராசிகளையும் குறிக்கும் சொல். மழை பொழிவித்தும் கண்ணனைச் சரண் அடைந்தோர் காப்பாற்றப்பட்டதை அறிந்த இந்திரன் களைப்புடன் அவனும் கண்ணனைச் சரண் அடைந்தான். சகல ஜீவராசிகளையும் காத்து அருள் புரிந்ததால் கண்ணனுக்கு "கோவிந்தன்" என்னும் பெயரைச் சூட்டி கோவிந்த பட்டாபிஷேஹம் செய்வித்தான்.  கோ எனில் பசுக்கள் மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளையும் குறிப்பது. விந்த எனில் கண்ணனை நாடிச் செல்வது! அனைத்து ஜீவராசிகளும் கண்ணனை நாடி அவனைச் சரண் அடைந்ததால்  மேலும் கோ என்னும் சொல் ஐம்பூதங்களையும், மனிதர்களின் ஐம்புலன்களையும் சேர்த்தே குறிப்பதால் நாமெல்லாம் தேடி அடையும் கடைசி லட்சியம் பரந்தாமனே என்பதால் கோவிந்தன் என்னும் பெயரை அவன் பெற்றான்.

சர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம், கோவிந்தா, கோவிந்தா!

திருவெம்பாவையும் நாயகன், நாயகி பாவத்தில் மாணிக்கவாசகர் பாடல்களைப் பாடி இருக்கிறார். உமை அம்மையின் அருளை வியந்து போற்றி அதை மழையாக உருவகப்படுத்தி இருப்பார். கன்னிப் பெண்கள் நல்ல கணவனைப் பெற்று நல்லதொரு அறம் நிரம்பிய இல்வாழ்க்கை வாழ்ந்தாலே சமூகம் தழைக்கும். சமூகம் சிறப்புற்றால் தான் நகரம், நாடு போன்றவை சிறக்கும். நாடு, நகரம் சிறப்புற்றால் இவ்வுலகே சிறப்புறும். எங்கும் அருளாட்சி நிலவும். ஆகவே சக்திக்கு நிகரான பெண்கள் நல்ல கணவனைப் பெறுவதற்குச் செய்யும் பிரார்த்தனைகளையே திருவெம்பாவையில் முக்கியமாய்ச் சொல்லப்படுகிறது. திருவெம்பாவையே பெண்களைச் சக்தியாக நினைத்து சக்தியை வியந்து பாராட்டும் வண்ணம் அமைந்துள்ளது.

நடராஜர் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்

இறைவனின் திருவடியே சக்தி எனப்படுகிறது என்பார் ஒரு சாரார்.  அந்தத் திருவடியின் மூலமே இறைவனின் ஐந்தொழில்களும் நடைபெறுவதாக ஐதிகம்.  இறைவனின் ஐந்தொழில்கள் இல்லை எனில் உயிர்கள் பாசம் நீங்கி வீடு பேறு அடைவது எங்கனம்? இதைத் திருவெம்பாவையின் கடைசிப்பாடல் சொல்லுகிறது.

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் (படைத்தல்)
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்    (காத்தல்)
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்  (எல்லா உயிர்களும் கடைசியில் வந்து சேரும் இடம், ஈசனின் பொற்பாதம் என்பதால் அழித்தல்)
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்  (இங்கே ஈசன் தன் அடி, முடியை மறைத்து அருளினார். ஈசன் எல்லையற்றவன் என்பதை அடி, முடி காணமுடியாவண்ணம் மறைத்து அருளினார்! ஆகவே இங்கே மறைத்தலை இவ்வரிகள் குறிக்கும்.)
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் (இறைவனிடம் நாம் சரணாகதி அடைந்தால் நாம் உய்வதற்கெனவே அவன் நம்மைத் தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டு ஆட்கொண்டு அருள்கிறான். அவன் பாதங்களையே சரணம் என்று நம்பிக்கையுடன் இருந்தால் நமக்கு வீடு பேறு நிச்சயம்! பிறப்பற்ற நிலை தருவான்!)
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்!
ஆகவே அவன் நினைவுகளுடன் நாம் இந்த மார்கழியில் நீராடி அவனுடன் ஐக்கியமாவோம் என்பதே திருவெம்பாவையின் உட்கருத்து!

21 comments:

  1. மார்கழியில் சிறப்பான பகிர்வு.

    கோவிந்தன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட், உங்களுக்கு பதில் சொல்ல விட்டுப் போயிருக்கு. கருத்துக்கு நன்றி.

      Delete
  2. மார்கழி சிறப்பு பதிவுக்கு நன்றி.
    இறையருள் உண்டாகட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, என்ன ஒண்ணுமே போடலைனு சிலர் கேட்டாங்க! திரும்பத் திரும்ப திருப்பாவை, திருவெம்பாவை விளக்கங்களையே கொடுக்கணுமேனு யோசனை! அதோட இப்போத் தான் ஒரு வாரமாக் கணினியில் மதியம் உட்கார முடிகிறது! :)

      Delete
  3. சிறப்பான விளக்கங்கள்.

    ReplyDelete
  4. புலம்பல் என்று சொன்னவுடன் ரோஷம் வந்துட்டதாக்கும். இது போல அர்த்தமுள்ள பதிவுகள் எழுதுங்கள் யாரும் பின்னூட்டம் போட மாட்டார்கள்.

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ஜேகே அண்ணா, ஒருத்தர் சொன்னதுக்காக எல்லாம் மாத்திக்கிற டைப்பே இல்லை நான்! பிரச்னையே அதான்! :) இது ஏற்கெனவே எழுத ஆரம்பிச்சது! ஆரம்பத்தில் உள்ளவற்றை மட்டும் இன்று சேர்த்துப் படங்களையும் சேர்த்துப் போட்டேன். இதை எல்லாம் யோசிக்கும் அளவுக்குத் தெம்போ, மனநிலையோ இப்போத் தான் வந்திருக்கு! :) அதோட நான் பின்னூட்டமே யாரும் போடலைன்னாலும் கவலைப்படறதில்லை. தெரிஞ்சவங்க வரலைனா என்னனு கேட்டுப்பேன்.

      Delete
  5. /
    மழை கொடுக்கும் இந்திரனுக்கு வேள்வி ஏன்,
    மரம் நிறைந்த மலைக்கன்றோ பலி கொடுக்க வேண்டும்
    எனக் கூறிய கோபாலன்பால் கோபமுற்ற இந்திரன்,
    பெருமழையுடன் இடியும் கூட்டிஇ டர் கொடுக்கக் கோவர்தன
    மலையைத் தூக்கி இடையரின் இடர் துடைத்துக் காத்த
    கண்ணன் முன் செறுக்கழிந்து நின்றான் தேவர்கோன்./ பார்க்க கிருஷ்ணாயணம்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, ஏற்கெனவே படிச்சிருக்கேனே கிருஷ்ணாயணம்! :)

      Delete
  6. மார்கழிக்கேற்ற அருமையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவர் ஐயா!

      Delete

  7. எனக்கு பிடித்த கண்ணனை பற்றிய சிறப்பான பதிவு( எனக்கு கண்ணண் பிள்ளையார் மற்றும் முருகனை அதிகம் பிடிக்கும் )

    ReplyDelete
    Replies
    1. நன்றி அவர்கள் உண்மைகள். என்ன ஆச்சரியம்னா நான் எதிர்பார்க்கும் பதிவுகளுக்கு உங்கள் கருத்து வருவதில்லை. இதுக்கு வந்து சொல்லி இருக்கீங்க! பொதுவா இம்மாதிரி பக்தி, ஆன்மிகம் கலந்த பதிவுகள்னா யாரும் கருத்துச் சொல்ல வருவதில்லை! :) பார்த்துட்டுப் போயிடுவாங்க! :))))) என்னோட மொக்கைப் பதிவுகளுக்குத் தான் எப்போவும் கூட்டம்! :)))))

      Delete
  8. மார்கழி பனி ! அதிகாலை தண்ணீர் தெளித்து கோலமிட்ட வீடுகள் ! எங்க பகுதி கோயிலில் ஒலிக்கும் ஆயர் பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் பாட்டு அப்புறம் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாட்டு !! அக்கா மாதங்களில் மார்கழி தெய்வீகமான மாதம் ..பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்கிறேன் எவ்வளவு இனிமையான காலங்கள் நம்ம ஊரில் வாழ்ந்த காலம் .

    ReplyDelete
    Replies
    1. வாங்க பேப்பர் க்ராஃப்ட்ஸ், இங்கே இன்னமும் மார்கழிக் கோலங்களைப் பார்க்க முடியும். என்றாலும் பெரும்பாலானவர்கள் இப்போல்லாம் சாயங்காலமே போட்டுடறாங்க! :( அதான்! ஆனால் பனியில் வெறும் தலையுடன் கோலம் போட வாசலுக்கு வந்தால் உடல் நலம் கெட்டு விடுகிறது என்பதாலும் இப்படிச் செய்வார்கள்.

      Delete
  9. மார்கழி மாதச் சிறப்பு உள்ளத்தைத் தொடுகிறது

    இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
    எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
    அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி காசிராஜலிங்கம். வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்.

      Delete
  10. மார்கழிப் பதிவு நன்று. 'பறை' என்பதற்கு வாத்தியம் என்ற பொருள் மட்டுமல்லாமல், ஒருவேளை 'வாக்கு' என்ற பொருளில் வந்திருக்குமோ? 'அருள்' என்பதைவிட, 'வீடுபேறு' என்பது இன்னும் சரியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. இன்னும் விரிவான கருத்தை எதிர்பார்த்தேன். வீடுபேறு என்பது சரியாக இருக்கும் என்றே எனக்கும் தோன்றியது! ஆனால் அது எல்லோராலும் ஏற்கப்படுமானு சந்தேகம். ஆகவே பொதுவாக அருள் என எழுதிட்டேன். இன்னும் கொஞ்சம் ஆதாரங்களையும், எடுத்துக்காட்டுகளையும் பார்த்துப் படிச்சிருக்கணும். நினைவில் இருந்து எழுதிட்டேன். :)

      Delete
    2. அது சரி, நெ.த. புதினா பிடிக்காது என்பதால் புதினா ரைஸ் சாப்பிட வரலையா? :))))

      Delete