ஶ்ரீதேவியின் மரணச் செய்தி கொடுத்த அதிர்ச்சி இன்னும் தீரவில்லை. பாவப்பட்ட ஜன்மம். பிறருக்காகவே உழைத்தவர். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் திரை உலகில் கோலோச்சியவர். மர்மமான முறையில் இறந்து விட்டார். அவர் சம்பாதித்த பணத்தை எல்லாம் அவர் அனுபவிக்கவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவர் விரும்பியதை உண்ண முடிந்ததா என்பதே சந்தேகம்! ஆனாலும் எதையும் வெளிக்காட்டாமல் எப்போதும் சிரித்த முகத்துடனே காட்சி அளித்து அனைவரையும் தன் நடிப்பால் மகிழ்வித்து வந்தார். பிறந்த இடம், புகுந்த இடம் இரண்டிலும் ஒதுக்கப்பட்டவர். அவர் மனதில் இதற்கெல்லாம் வேதனைகள் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் இரு பெண்களுக்காகவே வாழ்ந்தார். அதிலும் மூத்த மகளைத் திரை உலகுக்கு அறிமுகம் செய்து வைக்க மிகவும் உழைத்தார். வெற்றி பெறும் நேரம் அவர் இவ்வுலகிலேயே இல்லை! :(
*********************************************************************************
காஞ்சி மடத்தின் பீடாதிபதியான ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு வயதும் ஆகிவிட்டது. உடலும் நோயால் தளர்ந்து விட்டது. எனினும் அவர் தான் நன்றாக இருக்கும் காலத்தில் இருந்தே அடித்தட்டு மக்களுக்காக மிகவும் பாடுபட்டவர். இந்த விஷயத்தில் தன் குருவின் எச்சரிக்கையையும் மீறிச் செயல்பட்டார். அதனாலேயே இருவருக்கும் மனக்கசப்பு வந்து சில நாட்கள் பிரிந்தும் இருந்தார். பின்னர் சமாதானம் செய்யப்பட்டுத் திரும்ப வந்தார். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரிப் பேசினாலும் உண்மையான காரணம் அவர் மடத்தின் நியதிகளை, ஆசாரங்களை மீறிக் கடைநிலை மக்களுக்கும் சேவை செய்தது தான் முக்கியக் காரணம்.
ஜாதி வித்தியாசம், மத வித்தியாசம் பார்க்காமல் எல்லோருடனும் நல்லமுறையில் பழகினவர். அயோத்தி பிரச்னையில் ஒரு தீர்வு காண அவரால் இயன்றவரை முயன்றார். அதனாலேயே பல்வேறுவிதமான சங்கடங்களுக்கும், கஷ்டங்களுக்கும் ஆளானார். மத்திய, மாநில அரசுகளால் கீழ்த்தரமாக நடத்தப்பட்டபோதும் அவர் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசினவர் இல்லை. எல்லா அவமானங்களையும் பொறுமையாக ஏற்றுக் கொண்டார். எங்கோ வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த டாக்டர் பத்ரிநாத் இவர் வேண்டுகோளின்படி இந்தியா வந்து சென்னை, நுங்கம்பாக்கத்தில் சங்கர நேத்ராலயா ஆரம்பித்து இப்போது வெற்றிகரமாகச் செயல்படுவதோடு எத்தனையோ கண் மருத்துவர்களுக்குப் பயிற்சியும் கொடுத்து வருகிறது.
அதே போல் நுங்கம்பாக்கத்தில் குழந்தைகளுக்கென ஒரு தனி மருத்துவமனையும் ஶ்ரீமடத்தால் நிர்வகிக்கப்படுகிறது. தாம்பரம் ஹிந்து மிஷன் மருத்துவமனையும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சேவைகளைச் செய்து வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள் போன்றவையும் ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். விளம்பரம் இல்லாமல் சேவைகள் செய்து வருவதால் பலருக்கும் இது புரிவது இல்லை. அதிலும் அடித்தட்டு மக்களுக்குச் சேவை செய்ததில் இவரைப் போல் மடாதிபதிகளைக் காண்பது அரிது. ஏழைப் பெண்களுக்கும் தேவையானால் ஆண்களுக்கும் இலவசத் தையல் பயிற்சி அளித்தும் வந்தார். இவர் ஆலோசனையின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட "நந்தனார் சேவாஸ்ரமம் ட்ரஸ்ட்" என்னும் அமைப்பின் மூலம் அரியலூர், பெரம்பலூர், கடலூர் போன்ற ஊர்களின் ஏழை இளம்பெண்களுக்காகத் தையல் இயந்திரங்கள் வாங்கிக் கொடுத்துத் தையல் பயிற்சி அளிக்க வைத்து ஊக்கம் கொடுத்தார். பிற்படுத்த மக்களுக்காக அவர்கள் வாழ்வின் தரத்தை உயர்த்த மிகவும் பாடுபட்டார். ஜன் கல்யாண் என்னும் திட்டத்தின் மூலம் இவற்றைச் சேரிகளில் சென்று செயல்படுத்தி வந்தார். இதற்குப் பல எதிர்ப்புகள் இருந்தாலும் அதைக் குறித்துக் கவலைப்படாமல் தன் குறிக்கோளிலே குறியாக இருந்தார்.
மாணவர்கள் உயர்கல்வி பெறவும் உதவிகள் பல செய்தார். ஶ்ரீமடத்திலேயே சிலருக்கு இவர் நடவடிக்கைகள் பிடிக்காமல், "சேரி சாமியார்" என்று அழைத்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மக்களுக்குத் தொண்டு செய்து வந்தார். இவரின் செல்வாக்குத் தென் மாநிலங்களில் மட்டுமில்லாமல் வட மாநிலங்களுக்கும் பரவியது. ஆனாலும் அரசியல்வாதிகளின் திட்டமிட்ட சதிகளை எதிர்கொள்ள முடியாமல் தோற்றுப் போனார். தீராப்பழியைச் சுமந்து கொள்ள நேர்ந்தது. என்றாலும் உண்மை பக்தர்கள் அவர் மேல் வைத்த நம்பிக்கையை இழக்கவில்லை. அடுத்ததாகப் பொறுப்பேற்கும் விஜயேந்திரர் இவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து பொறுப்பேற்றுக்கொண்டு சரிவரச் செய்ய வேண்டும்.
எவ்வளவு புகழ், செல்வாக்குப் படைத்தவர்கள் ஆனாலும் மரணம் நிச்சயம்! அவர்கள் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம் இது! யாரும் நிரந்தரம் அல்ல! இருக்கும்வரை நல்லதையே நினைப்போம்! நல்லதையே செய்வோம்! நல்லதையே சொல்வோம்!
ஜெயேந்திரர்பற்றி...
ReplyDeleteஅறியாத விடயங்கள் பகிர்வுக்கு நன்றி.
ஸ்ரீதேவிபற்றி...
தனது வாழ்வில் பட்ட கஷ்டங்கள் அறிந்தும் அதில் தன் மகளையும் திணிக்க நினைத்தது தவறில்லையா ?
வாங்க கில்லர்ஜி! கருத்துக்கு நன்றி. ஶ்ரீதேவி தெரிந்தே இந்த முடிவு எடுத்திருக்கலாம். பணம் தானே முக்கியக் காரணம்! அவர் சம்பாதித்துக் கணவனை திவால் நிலையிலிருந்து மேலே கொண்டு வந்தார். மகளையும் அப்படியே பழக்க நினைத்திருக்கலாம்! :( நாம் எப்படிச் சொல்லமுடியும்? :(
Deleteஸ்வாமிகளைப் பற்றிய தகவல்களைத் தனிப்பதிவாகத் தந்திருக்கலாம்....
ReplyDeleteஹர ஹர சங்கர..
ஜய ஜய சங்கர!..
வாங்க துரை சார். அப்படியா? எனக்கு என்னமோ தோணலை! இருவேறு நிலைகளில் பிறருக்காக உழைத்த இருவர் அடுத்தடுத்து மரணம் அடைந்தது பற்றி மட்டுமே யோசித்தேன். ஸ்வாமிகள் பொதுமக்களுக்காகப் பெருமளவில் கடைசி வரை பாடுபட்டார். ஶ்ரீதேவி குடும்பத்துக்காகப் பாடு பட்டார்! :(
Deleteஸ்வாமிகளைப் பற்றிய தகவல்களைத் தனிப்பதிவாகத் தந்திருக்கலாம்....
ReplyDeleteஹர ஹர சங்கர..
ஜய ஜய சங்கர!..
இன்னும் எழுத நினைத்தேன். ஓரள்வு விரிவாக! என்றாலும் தவிர்த்து விட்டேன். தனிப்பதிவாகக் கொடுத்திருக்கலாமோ என்றே இப்போது தோன்றுகிறது. :(
Deleteஇரண்டு மரணங்கள் - துரை செல்வராஜூ ஐயா சொல்வது தான் எனக்கும் தோன்றியது.
ReplyDeleteவாங்க வெங்கட்! தோன்றவில்லை! :(
Deleteஸ்ரீதேவியின் மரணம் ம்ம்ம்...அவர் மகளின் சினிமா துறை என்ட்ரி நீங்கள் சொன்னதும். நான் சொல்ல நினைத்ததை....கீழே முதல் கமென்டாக கில்லர்ஜியின் கேள்வி என் கண்ணில் பட்டுவிட்டது...ஆம் தன் கஷ்டம் தெரிந்தும் மகளை ஏன் நுழைக்க வேண்டும்..தெரியவில்லை.
ReplyDeleteஜெயேந்திரர் சேரி மக்களுக்கும் உதவியதால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியதும் அறிந்திருக்கிறேன். சில அறிந்திராதவையும் அறிய முடிந்தது கீதாக்கா
கீதா
வாங்க தி.கீதா, என்ன நிர்ப்பந்தமோ மகளைத் திரைத்துறையில் நுழைக்க! நமக்கு என்ன தெரியும்!
Deleteஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எண்ணற்ற பணிகள் புரிந்திருக்கிறார். பல மருத்துவர்கள், ஆடிட்டர்கள், வக்கீல்கள், தொழிலதிபர்கள் உதவியுடன் சமூகப் பணிகளில் நேரடியாகக் களம் இறங்கினார்!
ஸ்ரீதேவி பற்றிய ஒரு வாட்ஸப் செய்தியில் அவர் இளமையைக் கூட்ட நிறைய உடல் சிகிச்சைகள் செய்து கொண்டதாகத் தெரிகிறது வயதானாலும் இளமையாய்த் தெரிய கட்டாயமும் இருந்திருக்கலாம்
ReplyDeleteஜெயேந்திரர் பற்றி நினைக்கும் போது அவர் ஒரு முறை காணாமல் போனதும் சங்கரராமன் வழக்கில் சிக்கியதும் நினைக்காமல் இருக்க முடியவில்லை மடத்தின் மூன்று தலைவர்களையும் ஒரே இடத்தில் காஞ்சியில் சந்தித்ததும் நினைவுக்கு வருகிறது
வாங்க ஜிஎம்பி ஐயா! ஜெயேந்திரர் வழக்கில் சிக்கினார் என்பதை விட சிக்கவைக்கப்பட்டார் என்பதே சரியாக இருக்கும்.
Deleteஇது குறித்து முகநூலில் கூட வந்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் குமார் முகர்ஜியின் புத்தகத்தில் அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதைப் படித்தால் புரியும்! புத்தகம் ஏற்கெனவே வந்துவிட்டது என்றாலும் இந்த விஷயம் பெரிசாக ஊடகங்களால் பேசப்படுவதில்லை. வழக்கம்போல் மௌனம் காக்கும் மோசமான ஊடகங்கள்! :(
Deleteஜெயேந்திரர் ஸ்வாமிகளுக்கு அஞ்சலிகள் .சங்கர நேத்ராலயா பெரியவர் மூலம் உருவானது பற்றிய தகவல் நான் அறியாதது இங்கே அறிந்துகொண்டேன் .ஆனால் அங்கு எத்த்னையோ ஏழைகள் இயலாதோருக்கு கண் சிகிச்சை நடைபெற்றது அவர்கள் பலனடைந்தது கேள்விப்பட்டிருக்கிறேன் .
ReplyDeleteமற்றும் நிறைய அறியாத தகவல்களுக்கும் நன்றிக்கா .
ஸ்ரீதேவி :( பாவம் .ஒரு பேட்டியில் தான் பள்ளி கல்லூரி வாழ்க்கையெல்லாம் மிஸ் பண்ணதா சொன்னார் .அவருக்கு செல்வத்துக்கு குறைவில்லை ஆனாலும் மகளை இப்படி திரைத்துறைக்கே அறியதாக வயதில் நுழைத்தது வருத்தமான விஷயம் .
//யாரும் நிரந்தரம் அல்ல! இருக்கும்வரை நல்லதையே நினைப்போம்! நல்லதையே செய்வோம்! நல்லதையே சொல்வோம்!//
மிக சரியா சொன்னிங்க .
வாங்க ஏஞ்சல், ஆமாம், நிறைய ஏழைகள், இல்லாதோருக்கு இலவச அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கு இலவச மருத்துவம், இலவசக் கல்வி போன்றவை ஶ்ரீமடத்தின் செலவுகளில் செய்யப்பட்டு வருகின்றது. பொது வாழ்வில் ஈடுபட்ட துறவிகளில் இவர் அனைவருக்கும் ஓர் முன்னோடி! இவரைக் குறித்து திமுக ஆதரவாளரான யுவகிருஷ்ணா கூட மிகவும் பாராட்டி அஞ்சலி எழுதி இருக்கிறார். அது ஓன்றே போதுமே இவரின் பெருமையைச் சொல்ல! :( என்றாலும்சிலர் தேவையில்லாமல் தேவையில்லாதவற்றையே நினைவு கூர்கிறார்கள்.
Deleteகீசாக்காஆஆஆஆஆஆஆஆ ஸ்ரீதேவியின் எத்தனையோ அழகுமிகும் படங்கள் இருக்க:) இப்படம்தானா உங்களைக் கவர்ந்தது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
ReplyDeleteஅட அதிரடி, ஏதோ கையில் கிடைச்சதைப் போட்டேன்! புதசெவி!
Deleteஸ்வாமிகள் பற்றி துரை அண்ணனின் போஸ்ட் மூலம் தெரிஞ்சு கொண்டேன்.. தலைப்பைப் பார்த்து உங்கள் ஜொந்தக் கதைகளாக்கும்.. அதுக்காகத்தான் கீசாக்கா லீவில போனவவாக்கும்.. மரணத்துக்கு போகும்போதுமா லீவேஏஏஏஏஏ எனக் கத்திக் கொண்டு போவா எண்டெல்லாம் ஒரு கணம் டப்பா:) நினைச்சுட்டேன்ன்ன்:))
ReplyDeleteஹிஹிஹி, அதிரடி, ஏமாந்தீங்களா? நல்லா வேணும்! வேணுங்கட்டிக்கூ வேணும், வெங்கலங்கட்டிக்கு வேணும்! :)
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:) நீங்க இன்னும் நேசறியிலயே இருக்கிறீங்கபோல:) நல்ல வேளை ஹைஸ் ஸ்கூல் க்கு வந்திருந்தா கெட்ட வார்த்தையில திட்டியிருப்பீங்க:) ஹா ஹா ஹா:)..
Deleteஅதிரடி, மீ குட்டிப்பாப்பாவாக்கும்! பனிரண்டு வருஷமா ஒரே ஒரு குழந்தைத் தலைவியாக இணையத்தில் வெற்றி உலா வரேன்! தெரிஞ்சுக்குங்க! :))))) நர்சரிப் பாட்டுப் பாடினா என்னவாம்? குழந்தை பாடுதேனு சந்தோஷப்படாமல்!
Deleteஇரண்டு மரணங்களும் மனதைப்பாதித்த மறைவுகள். வேதனையான நிகழ்வுகள்.
ReplyDeleteஆமாம் ஶ்ரீராம். கருத்துக்கு நன்றி.
Deleteஸ்வாமிகளின் சிரித்த முகம் பெரிய பாசிடிவ்.
ReplyDeleteஅவரைப் பற்றிய இத்தனை தகவல்களில் பாதி அறியாதது.
உண்மை மரணம் எப்பொழுது யாரைத்தாக்கும் என்பதில் நியதி இல்லை.
வாங்க வல்லி. அயோத்திப் பிரச்னைக்குத் தீர்வு காண முயன்று அதில் ஓரளவு வெற்றி கண்ட சமயம் அவரால் அரசியல்வாதிகளை எதிர்கொள்ள முடியாமல் போயிற்று. :(
Deleteஇருமரணத்திற்கும் அஞ்சலிகள்.
ReplyDeleteஇருவரைப் பற்றியும் நல்ல கெட்ட செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது.
நீங்கள் நல்லதை பகிர்ந்த விதம் அருமை.
வாங்க கோமதி அரசு. மிக்க நன்றி.
Deleteஎன் மனதில் உள்ளதை அப்படியே எழுதி இருக்கிறீர்கள்.
ReplyDeleteநன்றி பானுமதி. உங்கள் பதிவை நானும் எதிர்பார்த்தேன்.
Deleteசம்பந்தமில்லாத இரண்டு நிகழ்வுகளை, எதை வைத்து சேர்த்து ஒரு இடுகையாக்கினீர்கள்?
ReplyDeleteஸ்ரீதேவி செய்தது, சாதாரணமாக யாரும் செய்யக்கூடியது. தன் குடும்பத்துக்காக உழைப்பது, தான் விரும்பிய வாழ்க்கை வாழ்ந்தது என்று. அதில் நெறி போன்றவற்றை எதிர்பார்க்கவேண்டிய அவசியமில்லை. என்ன.. குறைந்த வயதில் மரணம். ஆனாலும் புகழ் வெளிச்சத்தில்தானே இருந்தார்.
ஆனால் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் இரு பாதைகள் இருந்தன. ஒன்று டிரெடிஷனல் பாதை, இன்னொன்று புதிய பாதை (இதில் எல்லோரையும் அரவணைப்பதும், மடத்துக்கான நிதி ஆதாரங்களைக் கவனிப்பதும்). கடினமான பாதையை அவர் தேர்ந்தெடுத்தார். அதன் விளைவுகளையும் அவர் ஏற்றுக்கொண்டார். இதனை தனி இடுகையாகப் போட்டிருந்தீர்களென்றால் கௌரவமாக இருந்திருக்கும்.
வாங்க நெ.த. பொதுவான விஷயம் இருப்பதாக நினைக்கலையே! இருவரும் புகழ் வாய்ந்தவர்கள் அவரவர் வழியில். ஶ்ரீதேவி இறப்பு மர்மம்! இவர் இறப்பு மூப்பு, நோய் காரணம். அவ்வளவே! மற்றபடி இருவருமே ஒரு வகையில் தியாகம் செய்தவர்கள். என்னதான் குடும்பத்துக்காகச் செய்தாலும் அவர் தனக்கென வாழவே இல்லை. ஒரு வேளை நீங்கள் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் புரிந்திருக்குமோ?
Deleteஜெயேந்திரர் குறித்த தகவல்களை வெகு காலமாகப் பகிர எண்ணிப் பகிர முடியாமல் போனது! இப்போ சமயம் வாய்க்கவே போட்டேன். தனித்தனியாகப் போடணும்னு தோணலை!
Deleteஒரு வேளை நீங்கள் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் புரிந்திருக்குமோ? - இருக்கலாம். ஒரு சம்பவத்தைப் பற்றி நான் எண்ணுவதற்கும், என் மனைவி சொல்வதற்கும் வித்தியாசத்தை நான் கண்டிருக்கிறேன். அவள், பெண் பக்கம் (Ladies side) பரிந்து பேசுவதாக எனக்குத் தோன்றும்.
Deleteஇருந்தாலும், ஸ்ரீதேவி, தான் விரும்பிய வாழ்க்கை வாழ்ந்தார். அதில் அவருக்கு ஏற்பட்ட எல்லா நிர்ப்பந்தங்களும் அவர் விரும்பிப் போன வாழ்க்கை கொடுத்தது. அவர் தன் வாழ்கைப் பாதையில் நிறைய ஏமாற்றங்களைச் சந்தித்திருக்கலாம், ஆழ் மனதில் சந்தோஷமாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்த வாழ்க்கையை அவர் விரும்பி ஏற்றுக்கொண்டு நல்லாத்தான் வாழ்ந்தார். இப்போ அமலா, ஏற்கனவே திருமணமான நாகார்ஜுனாவைத் திருமணம் செய்துகொண்டு வாழ்கிறார். நடிகைகள் லைம் லைட்டில் இருக்கிறார்கள். ஒரு பக்கம் ரசிகர், புகழ் வெளிச்சம். அதற்குப் பின்னால் மன வருத்தம், காம்பிரமைஸ், தன் உழைப்பை உறிஞ்சி வாழும் குடும்பம் (ஸ்ரீவித்யா, ராஜகுமாரி, காஞ்சனா-உங்கள் காஞ்சனா, நயனதாரா, தேவிகா இன்று இந்த லிஸ்டுக்கு முடிவே கிடையாது) தியாகம் செய்யாத ஒரு மனிதப் பிறப்பு சுட்டிக் காட்டுங்கள் பார்க்கலாம். எல்லோரும் ஏதாவது ஒரு வகையில் தியாகம் செய்தவர்கள்தாம்.
ஆனால் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் செய்தது, சமூகத்திற்கான பங்களிப்பு. அது தனித்துவம் உடையது.
//ஆனால் அந்த வாழ்க்கையை அவர் விரும்பி ஏற்றுக்கொண்டு நல்லாத்தான் வாழ்ந்தார்// இல்லை! :( விடுங்க! போயாச்சு! இனிமே என்ன!
Delete1) தென் கோடியில் பிறந்து இந்தியாவில் திரையுலகில் தனி முத்திரை பதித்தவர். சிலராலேயே இது சாத்தியப்படும்.2) இவரைப் பற்றிய சாதனைகள் அதிகம் கூறப்பட்டாலும் இடையே சில காலம் இவர் தன் பாதை மாறி வெளியே சென்றதை நினைக்கும்போது சற்றே நெருடுகிறது.
ReplyDeleteவாங்க முனைவர் ஐயா! முதலுக்குச் சொன்ன கருத்துக்கு நன்றி.
Deleteஇரண்டாவதுக்கு ரொம்ப விரிவாக எழுதணும் என்றாலும் மரபுகளை மீறிய ஒரு மனிதராக உண்மையான ஏழைப்பங்காளராக, பட்டி, தொட்டியெல்லாம் தங்கள் சேவை போய்ச் சேர வேண்டும் என்ற முனைப்பு உள்ளவராக இருந்தார். அது மடத்தில் உள்ளவர்களுக்கே நெருடல் தான்! ஆகவே தான் தனியாகப் போய் இருந்து கொண்டு தொண்டுகளைத் தொடரலாம் என நினைத்தே வெளியே சென்றார். பாதை எல்லாம் மாறவில்லை. அவர் பாதையில் போவதற்காகவே தனியே சென்றார். பின்னால் அப்போதைய குடியரசுத் தலைவர்(?) ஆர்.வெங்கட்ராமன் தலையீட்டில் மீண்டும் மடத்துக்கு வந்தார். ஆனால் தன் காரியங்களை எப்போவும் போல் தொடருவேன் என்னும் நிபந்தனையோடு தான். அப்போது தான் அவசரம் அவசரமாக அவர் இடத்துக்கு விஜயேந்திரர் தேர்வு செய்யப்பட்டார். பெரியவருடனான நிகழ்வுகள், விழாக்கள், விசேஷங்களில் பல ஆண்டுகள் ஜெயேந்திரர் பங்கு கொள்ளாமலே இருந்து வந்தார். இன்னும் எழுதப் போனால் பெரிதாகிவிடும். மடத்தின் ஆசாரங்களைக் கடைப்பிடிப்பதில் ஏற்றத் தாழ்வுகளை மறுத்தவர் ஜெயேந்திரர்!
ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பற்றிய சுருக்கமான ஆனால் தகவல் நிறைந்த பதிவுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteஊடகங்களில் ஜெயேந்திரர் மறைவுக்கு பலரும் இரங்கல்/வருத்தம் தெரிவிப்பது எதற்காக என்று புரியவில்லை. அப்படி செய்வது மகான்களையும் மற்ற சாதாரண மனிதர்கள் போல நினைப்பதையே காட்டுகிறது. மகான்கள் இறப்பதில்லை. ஸ்தூல ரூபத்தை விட்டு சூக்ஷும ரூபத்திற்கு சென்று நம்மை வழிநடத்துகிறார்கள்.