எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, December 20, 2019

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்! 4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகர்ந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

 வில் கோலம் க்கான பட முடிவு  சங்கு கோலம், க்கான பட முடிவு

வில் கோலம் அல்லது சங்குக் கோலம்,  வலம்புரிச் சங்கைக் குறிப்பிட்டிருப்பதால் சங்குக் கோலம் பொருத்தம்.

சங்கு கோலம், க்கான பட முடிவு   சங்கு கோலம், க்கான பட முடிவு


சக்கரக் கோலம் க்கான பட முடிவு

அல்லது சக்கரமும் சங்கும் சேர்ந்த கோலமும் பொருத்தம். மழைப் பிறப்பைக் குறித்து அந்தக் காலத்திலேயே கூறி இருக்கும் ஆண்டாள் இங்கே கண்ணனை அழைக்கிறாளா, மேகத்துக்கு அதிபதியான இந்திரனை அழைக்கிறாளா என்பது குறித்துக் கருத்து வேறுபாடு இருந்தாலும் எல்லாவற்றிலும் கண்ணனின் கரிய திருவுருவையே கண்ட ஆண்டாள் மழையைப் பொழிவிக்கும் கருமேகக் கூட்டங்களிலும் கண்ணனையே காண்கிறாள். ஆகவே கண்ணனின் கைச்சக்கரம் போலவும், அவன் ஊதும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் போலவும் இடியையும் மின்னலையும் ஒப்பு நோக்குகிறாள்.  சக்கரம் மின்னுவதைப் போன்ற மின்னலும் பாஞ்சஜன்யத்தின் ஒலியைப் போன்ற இடி முழக்கமும் கேட்கும்படி மழையைப் பொழிவித்து இவ்வுலகின் நீராதாரத்தைப் பெருக்கி அனைவரையும் வாழ வைப்போம் என்கிறாள் ஆண்டாள்.


       vishnu god க்கான பட முடிவு   vishnu god க்கான பட முடிவு


ஆழி மழைக்கண்ணா= ஆழி இங்கே கடலையும் குறிக்கும், வருணனையும் குறிக்கும், பரமன் கைச்சக்கரத்தையும் குறிக்கும். ஆனால் இந்த முதல் ஆழி என்பது வருணனைக் குறிக்கிறது. நாட்டில் மழை சரிவரப் பருவம் தப்பாமல் பொழிந்தாலே நிலவளம் செழிக்கும். அதற்கு மழை பொழிய வேண்டுமெனில் எப்படி?? பள்ளியிலே படிச்சதை ஆண்டாள் சர்வ சாதாரணமாக அப்போவே சொல்லிட்டுப்போயிட்டாள். கடல் நீர்தான் ஆவியாக மாறி மேகங்களுக்குள் புகுந்து மழையாகப்பொழிகிறது என்பதைச் சின்ன வயசிலேயே படிச்சிருக்கோம் இல்லையா?? அதனால் முதல் ஆழியை வருணன் என எடுத்துக்கொள்ள வேண்டும், அடுத்த ஆழியைக் கடல் என எடுத்துக்கணும்."ஆழி மழைக்கண்ணா!" வருணணைக் கூப்பிட்டு = இங்கே ஏன் கண்ணா என்கிறாள் என்றால் மழை பொழியும்போது வருணன் கண்ணனின் அருள் மழையை நினைவூட்டுவதாயும் கொள்ளலாம். கண்ணனின் கரியநிறத்தைப் போன்ற மேகங்கள் அவன் நிறத்தை நினைவூட்டுதலையும் கொள்ளலாம். ஆண்டாளே வேண்டுகிறாள் இதே பாடலில், "ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து" என.

ஒன்று நீ கை கரவேல்= ஏ, வருண பகவானே, உன் கருணையை நிறுத்திவிடாதே. என்கிறாள்.

அந்த ஆழி மழை எப்படிப் பொழிகிறது? ஆழியுள் புக்கு முகர்ந்து கொடு ஆர்த்தேறி= கடலினுள் புகுந்து மேலெழும்பி ஆவியாக மாறி மேகங்களுக்குள் புகுந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சத்தமாய் இடியோசையுடன் வேகமான பெருமழையாகப்பொழிந்து எங்கள் மேல் பொழிவாயாக.
வருணனை மழைபொழியுமாறு வேண்டும் ஆண்டாள் அதற்கு அவனை எவ்வாறு இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறாள். மழைமேகங்கள் கருத்து இருப்பவை கண்ணனின் நிறத்தைக் குறிக்கின்றன. கண்ணனின் சங்கு இடியோசை போல் எழுந்து தீமைகளை ஒழித்து அடியார்களுக்குக் கருணை என்னும் மழையைப் பொழிகிறது. அவன் கைச்சக்கரமோ தீயவற்றை வேரோடு அறுத்துத் தள்ளுகிறது. அந்தச் சங்கையும் சக்கரத்தையும் போல் வருணனின் இடியும், மின்னலும் இருக்கவேண்டுமாம். இடியோசையும், மின்னலும் அவன் கைச் சக்கரத்தையும், சங்கையும் குறிக்கும். இந்த மழைமேகங்களையும் அவை நீருண்டு கன்னங்கரேல் எனக் கருத்து இருப்பதையும் பார்க்கும் ஆண்டாளுக்குக்கண்ணன் உருவமும் அவன் கரிய திருமேனியும் நினைவில் வருகின்றன.

ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கருத்து= மஹா பிரளயத்துக்கும் முந்தையவனாய் ஆதி முதல்வனாய் இருக்கும் அந்த நாராயணனைப் போலவே அவனுடைய நிறம் போலவே நீயும் கருமை வண்ணத்தோடு வருவாய் என்பது இங்கே பொருள்,

பாழியம்தோளுடைய பற்பநாபன் கையில்= அழகான தோள்களை உடைய பத்மநாபன் என்று பொருள். பரமன் தன் நாபியிலிருந்து பிரம்மாவை சிருஷ்டிக்கிறான். அதுவும் பத்மம் என்னும் தாமரை மலரில் தோன்றச் செய்து அதில் பிறப்பிக்கிறான். அந்தப்பிள்ளையைத் தன் திருத்தோள்களால் ரக்ஷிக்கவும் செய்கிறான். அத்தகைய பற்பநாபன் கைகளில்

ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து= ஆழி இங்கே சக்கரம் என்னும் பொருளில் வரும். நாராயணனின் கைச்சக்கரம் எப்படி மின்னுகிறது?? அத்தகைய சக்கரத்தைப் போல் ஏ, வருணனே, நீயும் உன் மின்னலை மின்னச் செய்வாயாக. அவனுடைய வலம்புரிச்சங்கின் நாதம் எவ்வாறு ,பூம்ம்ம்ம்ம்ம்ம்ம் என வருகிறதோ அதே போல் இடியை இடிக்கச் செய்வாயாக.


தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்= சார்ங்கம் இங்கே வில்லைக் குறிக்கும். சிவன் கையில் இருப்பது சாரங்கம். விஷ்ணுவிற்கோ சார்ங்கம். இரண்டுக்கும் ஒரு சின்னப் புள்ளியில் வேறுபாடு என்பதையும் கவனிக்கவும். இங்கே சார்ங்கம் என்பது வில். வில்லை ஏந்தியவன் ஸ்ரீராமன். ஸ்ரீராமனின் வில்லானது அம்பை மழையாகப் பொழியும். பகைவரை அழிக்கும். ஸ்ரீராமனின் வில்லில் இருந்து வரும் சரமழைபோல் அப்படி மழையை நீயும் பொழியச் செய்வாய் வருணனே என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.

அடுத்தது பிரார்த்தனை, தனக்கு மட்டுமா?? அனைவரும் வாழப் பிரார்த்திக்கிறாள்.

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

நாங்களும் வாழ உலகினில் பெய்திடமாட்டாயா வருணனே.

இப்போது நாங்கள் மார்கழி நீராடி மகிழ்ந்து எம்பிரானைக் கும்பிட்டுப் பிரார்த்தனைகள் செய்கிறோம். உன் கொடையை எண்ணி நாங்களும் மகிழ்வோம் என்கிறாள் ஆண்டாள். ஆண்டவனின் உதார குணத்தை இங்கே சுட்டுகிறாள் ஆண்டாள். பரமனைத் தஞ்சமடைந்தால் அவன் கருணை மழை நமக்குக் கிடைக்கும். குறைவில்லாது காத்து ரக்ஷிப்பான். குறைவில்லா அனுகிரஹம் செய்யக் கூடிய பெருமானை வழிபட்டால் அனைத்துத் துன்பங்களும் நீங்கி இன்ப மழை வர்ஷிக்கும்.

இதற்கு பட்டத்திரி கூறுவது என்னவென்றால், சகல செளபாக்கியங்களையும் கொண்ட பகவானை நாம் வழிபட்டால் பக்தர்களுக்கு அவன் தன்னையே கொடுப்பான் என்பதுவே.

"காருண்யாத் காம மந்யம் தததி கலு பரே ஸ்வாத்மதஸ்த்த்வம் விஸேஷா
ஐஸ்வர்யாதீஸதேந்யே ஜகதி பரஜநே ஸ்வாத்மநோபீஸ்வரஸ்த்வம்
த்வய்யுச்சை ராரமந்தி ப்ரதிபத மதுரே சேதநா: ஸ்ப்பீத பாக்யா:
த்வம் சாத்மாராம ஏவேத்யதுல குணகணாதார ஸெளரே நமஸ்தே.

அனைத்துக் கல்யாண குணங்களையும் கொண்ட பரமனை வழிபட்டால் அவன் தன் பக்தர்களுக்குத் தன்னையே கொடுத்துவிடுகிறான். இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான நிலையற்ற செல்வங்களை மட்டும் அவன் கொடுப்பதில்லை. வெறும் ஐச்வரியங்களை மட்டும் அளிப்பதில்லை. ஐஸ்வரியங்களின் மூலம் பக்தர்கள் மனதையும் ஆள்வதில்லை. மேலான தன்னையே கொடுத்து பக்தர்களை ஆட்கொள்கிறான். பக்தர்களின் பாக்கியம் தான் என்ன?? அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய ஆநந்தம் தான் என்ன?? ஆஹா இதைவிடவும் உயர்ந்ததொரு ஆநந்தம் தேவையா பக்தர்களுக்கு?? பகவானே ஆநந்த ஸ்வரூபி, அவனே ஆட்கொண்டுவிட்டால் அதைவிடவும் உயர்ந்ததொரு பாக்கியம் எது இருக்க முடியும். ஆனால் நாமோ நிலையற்ற செல்வத்துக்காகத் தான் ஆலாய்ப் பறக்கிறோம்.

11 comments:

  1. படிப்படியான விளக்கங்களை ரசித்தேன்.

    ReplyDelete
  2. //பரமனைத் தஞ்சமடைந்தால் அவன் கருணை மழை நமக்குக் கிடைக்கும். குறைவில்லாது காத்து ரக்ஷிப்பான். குறைவில்லா அனுகிரஹம் செய்யக் கூடிய பெருமானை வழிபட்டால் அனைத்துத் துன்பங்களும் நீங்கி இன்ப மழை வர்ஷிக்கும்.//


    அது போதும் அது போதும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி, தீக்காயங்கள் ஆறி வரப் பிரார்த்திக்கிறேன்.

      Delete
    2. ஆறி வருகிறது.
      நன்றி.

      Delete
  3. //பகவானே ஆநந்த ஸ்வரூபி, அவனே ஆட்கொண்டுவிட்டால் அதைவிடவும் உயர்ந்ததொரு பாக்கியம் எது இருக்க முடியும். ஆனால் நாமோ நிலையற்ற செல்வத்துக்காகத் தான் ஆலாய்ப் பறக்கிறோம்.//

    ஆமாம், அவன் ஆட்கொண்டு விட்டால் நாம் தான் பாக்கியவான்கள்.
    பறக்காமல், ஓடாமல், அவனை நாடுவோம், முயற்சி செய்வோம்.

    ReplyDelete
    Replies
    1. ஆட்கொண்டிருக்கானா என்பதே தெரியறதில்லை நமக்கு! எதையும் ஸ்தூலமாகப் புரிந்து கொண்டே பழகி விட்டது.

      Delete
  4. விளக்கங்கள் நன்று...

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  5. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. பாடலின் கருத்தை புரிந்து கொள்ளும் படியாக ஒவ்வொரு வரிக்கும் அழகான விமர்சனம் தந்து எழுதியுள்ளீர்கள். விளக்கங்கள் மிக மிக அருமையாக உள்ளது. மிகவும ரசித்தேன்.

    /பகவானே ஆநந்த ஸ்வரூபி, அவனே ஆட்கொண்டுவிட்டால் அதைவிடவும் உயர்ந்ததொரு பாக்கியம் எது இருக்க முடியும். ஆனால் நாமோ நிலையற்ற செல்வத்துக்காகத் தான் ஆலாய்ப் பறக்கிறோம்./

    உண்மை. உண்மை... அவனையே நினைத்து அவனருளுக்காகவே மட்டும் காத்திருந்து எப்போது அவனிடம் சென்று ஐக்கியமாகப் போகிறாம் என்றுதான் ஒவ்வொரு பொழுதும் எண்ணம் வருகிறது. அதற்கு இன்னும் எத்தனைப் பிறவிகள் தவமாய் தவமிருந்து காத்திருக்க வேண்டுமோ? பகிர்வத்தனைக்கும் மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, ஒவ்வொரு வரியாக ரசித்து எழுதி இருப்பதற்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

      Delete
  6. மிகவும் அருமை.

    ReplyDelete