எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, December 11, 2019

கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி!

கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி!

அருணாசல மலையின் தத்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே போய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் கலங்கித் துன்பம் அடையும்போது ஆறுதலை அளிக்கும் ஆத்மாவாய்ச் சொல்லப் படுகிறது. புத்தியும், அகங்காரமும் பிரம்மனாயும், விஷ்ணுவாயும் செயல்பட்டு நம் உள்ளே ஒளிரும் உள்ளொளியைக் காண முடியாமல் அல்லல் படுகின்றனர். புத்தியிலே ஆணவம் அதிகம் ஆவதால் பிரம்மனால் காண முடியவில்லை. ஆனால் விஷ்ணுவோ சரணாகதி எனத் திருவடிகளைச் சரணடைவதால் அவருக்குக் காண முடியாவிட்டாலும் ஈசனின் அருள் கிடைக்கிறது.

நம் உள்ளத்தினுள்ளே இதயம் என்று நாம் சொல்வது, லப் டப் லப் டப் னு துடிச்சுக்குதே அது இல்லை ,நம் மார்பில் நட்ட நடுவில் ஒரு சின்னப் பொறியாக நம் கண்ணுக்கே தெரியாமல் சின்னத் துவாரமாக இருக்கிறது. மிக மிக சூக்ஷ்மமாகச் சின்ன துவாரத்தில் பொறியாக இருக்கும் அந்த அக்னி தான் நாம் நம்மை உணரும்போது ஆத்மதரிசனமாய்த் தெரிகிறது. இந்த உடலே நான் என்று நினைப்பதை அகற்றி உள்முக திருஷ்டியில் மனதைத் திருப்பி உள் ஒளியைக்காணுவதெ அருணாசல மலையின் சிகரத்தில் ஏற்றப்படும் ஜோதியின் தத்துவம் ஆகும். அதுவே ஜோதி தரிசனமும் ஆகும். பழங்காலத்தில் இறைவனை ஜோதி வடிவிலேயே வணங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் நாளா வட்டத்தில் ஞானமும், யோகமும் மங்கிப்போக இறைவன் என்ற ஒரு வடிவத்தை உண்டாக்கிக் கொண்டனர்.

இந்த அற்புதமான அருணாசல மலையே ஜோதி சொரூபம் என்கிறார்கள். இது தோன்றிய நாளாக மார்கழித் திருவாதிரை நன்னாளைச் சொல்கிறது அருணாசல மஹாத்மியம். இங்கே ஜோதி உருவில் தோன்றிய ஈசனை தேவாதி தேவர்களும், பிரம்மா, விஷ்ணுவும் வழிபட்டு வணங்கிய நாள் மாசி மகா சிவராத்திரி என்றும் சொல்கிறது அருணாசல மஹாத்மியம். அன்று தான் லிங்கோத்பவர் உற்பத்தி என்றும் கூறுவார்கள்.




திருக்கைலை மலை. ஐயனும் அன்னையும் தனிமையில். ஐயன் அன்னைக்குப் பிரணவப்பொருள் உரைக்க அன்னையோ விளையாட்டாக இறைவன் கண்களைப் பொத்த, அகில உலகமும் நிலை தடுமாறுகிறது. சூரிய, சந்திரர்களாக இருகண்களும், நெற்றிக்கண் அக்னியாகவும் விளங்கியவற்றைப்பொத்தவும் எங்கும் இருள் சூழ்ந்தது. அஞ்சிய அம்பிகை தன் கைகளை எடுக்க உலகில் மீண்டும் ஒளி பிறந்தது. ஜோதி வடிவான ஈசனைத் தான் மறைத்ததுதான் காரணம் எனப் புரிந்துகொண்டாள் அன்னை. அந்த ஒரு கணம் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் காரணம் தெரியாமல் துன்பத்தில் ஆழ்ந்தன. ஆகையால் அன்னையைப் பாவம் சூழ்ந்துகொள்ள ஈசனை வேண்டினாள்.

பூவுலகம் சென்று அங்கே தம்மை மணலால் லிங்கமாய்ப் பிடித்து வைத்து வழிபடச் சொன்னார் ஐயன். அன்னையும் காஞ்சீபுரம் வந்து மணலால் லிங்கம் பிடித்து வழிபட்டுத் தவமும் புரிந்தாள். அன்னையின் தவத்தைக் கலைக்கச் செய்த முயற்சிகள் அனைத்தும் பலனற்றுப் போக அன்னைக்கு அருள் வழங்கினார் ஈசன். மேலும் திருவண்ணாமலைக்கும் வந்து தவம் இயற்றினால் தம் இடப்பாகத்தைப் பெறலாம் எனவும் கூறினார். ஆகையால் அன்னை அங்கே வந்து ஈசனின் திருவுருவமாகிய லிங்கத்தை அங்கிருந்த நதிக்கரையில் எழுந்தருளச் செய்து வழிபட்டாள். கார்த்திகை மாதம் பரணி நக்ஷத்திரம் கூடிய தினத்தில் ஐயனை ஜோதிவடிவாய்க் கண்டாள். மலையின் மேலும் ஜோதியாய்த் தெரிய ஐயனை வேண்டித் துதித்து அவரின் இடப்பாகத்தைப் பெற்றாள். முதலில் மலைமேல் தீபம் ஏற்றியது அன்னைதான் என்று ஒரு ஐதீகம். மேலும் இடப்பாகம் அடையவேண்டி இறைவன் மலையாக அமர்ந்திருக்கையில் அதைச் சுற்றித் தலைமேல் கைகூப்பியவண்ணம் அன்னை வலம் வந்ததாயும், அதனாலேயே இன்றும் கிரிவலம் வந்தால் கணவன், மனைவி ஒற்றுமை சிறக்கும் என்பதும் ஒரு கூற்று..
சென்ற வருடத் திருக்கார்த்திகை தீபத் திருநாளன்று எங்கள் வீட்டில் ஏற்றிய விளக்குகள் ஒரு சிறு பகுதி மட்டும்.

திருக்கார்த்திகை தீபம் பிரமனுக்கும், மாலுக்கும் ஏற்பட்ட போட்டியின் காரணம் மற்றுமில்லாமல் அம்பிகையானவள் கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தன்று மாலை நேரம் வழிபாடுகள் செய்து திருவண்ணாமலை உச்சியில் ஈசனை ஜோதி வடிவாகப் பார்த்ததாக ஐதீகம் என்பதாலும் கொண்டாடப் படுகிறது. அப்போது தான் முதல் முதல் அம்பிகை திருவண்ணாமலையை கிரிவலமும் வந்து சிவபெருமானின் இடப்பாகத்தையும் வேண்டி பெற்றாள். திருவண்ணாமலை உச்சியில் தீப தரிசனம் செய்வது பற்றி அருணாசல புராணம் கூறுவதாவது:

கார்த்திகைக்குக் கார்த்திகை நாளொரு சோதி
மலை நுனியில் காட்டா நிற்போம்
வாய்த்த அந்தச் சுடர் காணில் பசி பிணி
இல்லாது உலகில் மன்னி வாழ்வார்
பார்த்திவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு
தவிரும் இது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு
முத்திவரம் கொடுப்போம் என்றார்.

என்று சொல்கிறது. தாய் வழிப் பத்துத் தலைமுறையும் தந்தை வழிப் பத்துத் தலைமுறையும் நம்முடைய தலைமுறையும் சேர்ந்து இருபத்தி ஒன்று ஆகும். அல்லது தாய்வழி ஏழு, தந்தை வழி, நம் வழி ஏழு எனவும் கொள்ளலாம். இது மிகப் பழங்காலம் தொட்டே கொண்டாடிய ஒரு புராதனமான விழா என்பது திருஞானசம்பந்தரின் பதிகம் ஒன்றிலிருந்து தெரியவருகிறது. மயிலையில் வாழ்ந்து வந்த சிவநேசர் என்பவர் தம் மகள் பூம்பாவையைத் திருஞானசம்பந்தருக்கு மணமுடிக்க எண்ணி இருந்தார். ஆனால் பூம்பாவையோ பாம்பு தீண்டி இறந்துவிட்டாள். மகளின் எலும்புகளை ஒரு குடத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார் சிவநேசர். திருஞானசம்பந்தர் மயிலை வந்தபோது இந்த விஷயத்தைக் கேள்விப் பட்டு அந்தக் குடத்தை எடுத்து வரச் செய்தார்.

கபாலீஸ்வரர் திருமுன்னே அந்தக் குடத்தை வைத்து பதிகம் பாடி, எலும்பாய் இருந்த பூம்பாவையை உயிர்த்து எழச் செய்தார். அப்போது பாடிய பதிகம் ஒன்றில்,

"தொல் கார்த்திகை நாள்
தளத்தேந்து இளமுலையார்
தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே
போதியோ பூம்பாவாய்!" என்று கார்த்திகைத் திருநாள் தொல் கார்த்திகை என்று குறிப்பிட்டுச் சொல்லி இருப்பதில் இருந்து அது மிகவும் புராதனமான ஒன்று என்று தெளிவாகிறது. மேலும் ஈசனின் அட்ட வீரட்டானங்களில் ஒன்றான திரிபுர சம்ஹாரம் நடந்ததும் கார்த்திகை மாசம் என்றும் கூறுவார்கள். ஆகவே திரிபுரத்தை ஈசன் எரித்ததை நினைவூட்டும் விதமாய் முன் காலத்தில் எல்லாச் சிவன் கோயில்களிலும் பனை ஓலைகளால் கூடு அல்லது கோபுரம்போல் கட்டி அதைக்கொளுத்துவார்கள். இதைச் சொக்கர் பனை என்று சொல்லி வந்தது நாளடைவில் சொக்கப் பானை என்று மாறிவிட்டது. சொர்க்கத்தில் இருந்த அரக்கர்களை எரித்ததே சொர்க்கப் பனை என்பது சொக்கப் பானை என்று மாறிவிட்டதாயும் தெரியவருகிறது.

சிவன் இப்படின்னா விஷ்ணுவுக்கும் கார்த்திகை முக்கியம் தானே. மஹாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தில் அவர் மஹாபலிச் சக்கரவர்த்தியிடம் யாசகம் கேட்கச் சென்ற போது மஹாபலிச் சக்கரவர்த்தி தீபங்களால் தன் மாளிகையை அலங்கரித்து இருந்தானாம். அதன் பின்னர் அவருக்கு மோக்ஷம் கிட்டியதும், அவர் இருந்த இடம் அசுரர்களால் தூய்மை இழந்ததால் எரிக்கப் பட்டதாயும், பின்னர் மஹாபலியின் வேண்டுகோளின்படி அவர் செய்தது போலவே நாடெங்கும் தீபங்களை ஏற்றி வழிபடவேண்டும் என மஹாவிஷ்ணு அருள் பாலித்ததாயும் ஒரு கூற்று. அன்று சிறுவர்கள் தங்கள் கைகளில் நெருப்பால் ஆன சக்கரம் போன்றதைச் சுழற்றிக்கொண்டே தீப்பொறி விழும்படி செய்துகொண்டே, "கார்த்திகையோ, கார்த்திகை, மாவலியோ மாவலி!" என்று குரல் எழுப்பிக்கொண்டே ஆடுவார்கள். இப்போதைய தலைமுறைக்கு இதெல்லாம் தெரிந்திருக்காது! :(


இன்று இந்தியாவில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடும் அனைத்து நண்பர்களுக்கும் என் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள். என்னோட பதிவுகளில் முன்னர் எழுதியவற்றிலிருந்து சில பத்திகளைத் தொகுத்து அளித்திருக்கிறேன். மீள் பதிவுக்கு மன்னிக்கவும். நன்றி.

கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி!  முன்னர் போட்ட பதிவின் சுட்டி இங்கே!

ஆரம்ப காலங்களில் கார்த்திகை தீபத்திருநாளுக்குப் போட்ட பதிவுகளில் இருந்து சிலவற்றை 2011 ஆம் ஆண்டில் அம்பேரிக்கா வந்திருந்தப்போப்போட்டேன். இன்னிக்கு அதையே மறுபடி மீள், மீள் பதிவாய்க் கொடுத்திருக்கேன்.

நேற்று இங்கே திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டத்தின் சில படங்கள். காலையிலிருந்து மழை, குளிர், காற்று. வெளியே விளக்கு வைக்கப் போனால் குளிர்காற்று. விளக்குகள் அணைகின்றன. எப்படியோ வைச்சோம். ஆனால் குளிர் தாங்கலை! இன்னிக்கும் இருக்கும் என்கிறார்கள்.










16 comments:

  1. இனிய கார்த்திகைத் திரு நாள் வாழ்த்துகள். கீதா மா.
    நம் ஊரிலியே கார்த்திகை அன்னிக்கு காற்று அடிக்குமே.
    சிகாகோவில் இன்று சொல்ல முடியாத குளிராம்.
    கவனமாக இருக்கவும்.
    தீபங்கள் அழகாக இருக்கவும்.
    மாவலிக் கதை கேட்காத ஒன்று.
    சொக்கப் பனையும் சக்கரம் சுற்றுவதும் எனக்கு மறக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, நம்ம ஊரிலும் காற்றடிக்கும் என்றாலும் இம்மாதிரிக் குளிர் காற்று இல்லை. ஆச்சு! கார்த்திகை முடிஞ்சது. இனிமேலே ஜனவரி 10 திருவாதிரை அப்புறமாப் பொங்கல் தான்! அதுக்குள்ளே ஊருக்குத் திரும்ப முடியுமானு இவர் யோசிக்கிறார். தம்பியை வேறே பார்க்கணும்னு எண்ணம். ஆனால் பிள்ளை விடமாட்டேன்னு சொல்லிக் கொண்டிருக்கார். டிக்கெட்டெல்லாம் வேறே விலை அதிகமா இருக்கும்.

      Delete
  2. இனிய கார்திகைத் திருநாள் வாழ்த்துகள்.

    கட்டுரை வெகு சிறப்பு - வழக்கம்போல்.  மீள்பதிவாயினும் நான் புதிதாகவே படித்தேன்.   இதயம் பற்றிய குறிப்புகள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம், தொடராகச் சில பதிவுகள் போட்டிருந்தேன். அவற்றைச் சுருக்கிப் போட்டது இது!

      Delete
  3. கார்த்திகை விளக்கம் நிறைய விடயங்கள் அறிந்தேன் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  4. வணக்கம் சகோதரி

    அழகான கார்த்திகை தீபத்திருநாளை அருமையாக உணர்த்திய பகிர்வு.

    அருணாசலேஷ்வரத்தின் பெருமைகளை குறித்து விளக்கமாக சொன்னது நன்றாக இருந்தது. அருணாசல புராணமும் பக்தியோடு படித்து தெரிந்து கொண்டேன். மாவலி கதை அறியாதது. நன்றாக உள்ளது. படித்து ரசித்தேன்.

    தங்கள் வீட்டில் ஏற்றிய தீபங்கள் மிக அழகு. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபத் திருநாள் வாழ்த்துக்கள். இது மீள் பதிவு என்றாலும் நானும் இப்போதுதான் படித்து அனைத்தையும் அறிந்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா, இதெல்லாம் சுமார் பத்து வருஷங்களுக்கும் முன்னர் எழுதியவற்றிலிருந்து தொகுத்தவை. இப்போப் புதுசா ஏதும் எழுதுவது இல்லை. தீபங்கள் இங்கே இந்தியக்கடைகளில் கிடைக்கும். ஸ்வாமிநாராயண் கோயில் மாதிரிக் கோயில்களிலும் கிடைக்கும்.

      Delete
  5. //அன்று சிறுவர்கள் தங்கள் கைகளில் நெருப்பால் ஆன சக்கரம் போன்றதைச் சுழற்றிக்கொண்டே தீப்பொறி விழும்படி செய்துகொண்டே, "கார்த்திகையோ, கார்த்திகை, மாவலியோ மாவலி!" என்று குரல் எழுப்பிக்கொண்டே ஆடுவார்கள். இப்போதைய தலைமுறைக்கு இதெல்லாம் தெரிந்திருக்காது! :(//

    ஆண் பனை பூவை காய வைத்து எரித்து அதை பொடி செய்து ஒரு பழைய தூனியில் போட்டு சுருட்டி கட்டுகிறார்கள். பனை ஒலையின் தண்டை நான்காய் பிளந்து அதில் அந்த துணி சுருளை வைத்து கட்டுகிறார்கள். சூடனை வைத்து கொளுத்தி சுத்தும் போது அதிலிருந்து அழகிய தீப்பொறி பறக்கிறது.
    சுற்றுப்புறத்தை பாதிக்காத வாணம் என்று சொல்கிறார்கள். அதை சக்கரம் போல் சுற்றுவார்களாம் படித்தேன்.

    நிறைய செய்திகளுடன் அருமையான பதிவு.

    கார்த்திகை தீப படங்களில் குடத்துக்குள் விளக்கா? அழகு.


    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, அதைக் குடம் மாதிரி வடிவமைத்திருக்கிறார்கள். இதே போல் அகல்கள் ஸ்ரீரங்கத்தில் நான் ஒரு நவராத்திரிக்கு வாங்கிக் கொடுத்திருக்கேன்.கைவேலைப்பாடு என்பதால் விலையும் அதிகம் தான்.

      Delete
  6. உங்களுடையது அழகான தீபங்கள், அவை என்ன மண் பானைகளோ? ரொம்ப அழகு...

    ReplyDelete
    Replies
    1. வாங தியாகத் திலகமே! என்ன சுருக்கமான பதில்! ரொம்ப பிசி, பிசினு சொல்லிக்கொண்டே நல்லாக் குறட்டை விட்டுத் தூங்கறீங்க போல!

      Delete
    2. இந்தப் பதிவு சுத்தமா போணியே ஆகலை! ஏன்????????????????????????????????

      Delete
  7. சன்னிதியில் வைத்திருக்கும் சின்னக் குடங்கள் மிக அழகாக இருக்கின்றன.

    ஆமாம் பக்கெட் நிறைய இருப்பது புளியோதரையா?

    தீபம் பற்றி விளக்கமா எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
  8. நேரமில்லாததால் இதற்கு முன்பு வர முடியவில்லை. காரணம் சொல்றேன்.

    ReplyDelete
  9. திருகார்திகை விளக்கமும் தீபங்களும் அழகு.

    ReplyDelete