மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்!
மலர் தூவி எம்பெருமானைத் தொழப் போவதால் மலர்க்கோலம் பொருத்தம்.
மலர் தூவி எம்பெருமானைத் தொழச் சொல்லுகிறாள் ஆண்டாள். ஆயர் குலத்தின் அணி விளக்கைத் தன் பிறப்பின் மூலம் தேவகியின் கருவறையில் பத்துமாதங்கள் இருந்ததால் அதன் மூலம் அவளைப் பெருமைப் படுத்தியவனும், பின்னர் கோகுலம் வந்து யசோதையிடம் வளர்ந்தவனுமான கண்ணனின் புகழை நாம் எப்போதும் வாயினால் பாடுவதோடு மட்டுமில்லாமல் மனதில் வேறு சிந்தனை இல்லாமல் கண்ணனைக் குறித்தே சிந்திக்க வேண்டும் என்கிறாள்.
ஆண்டாள் இந்தப் பாடல்களை எல்லாம் கோகுலத்துப் பெண்களை நோக்கியே பாடுவதாக அமைந்திருக்கிறது. தான் வாழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரையே ஆண்டாள் கோகுலமாய் நினைத்திருக்கலாம். என்றாலும் கண்ணன் இடைக்குலம் என்பதால் தன்னையும் ஒரு இடைப்பெண்ணாக நினைத்துக்கொண்ட ஆண்டாள் இன்னொரு இடைப்பெண்ணின் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையில் இந்தப்பாடல் உள்ளது.
அந்த இடைப்பெண்ணோ மிகச் சாதாரணமானவள். தத்துவங்களோ, வேதமோ, வேதாந்தமோ, எதுவுமே தெரியாது. சாஸ்திர சம்பிரதாயங்கள் சரிவரத் தெரியாது, புரியாது. நமக்குத் தெரிந்ததெல்லாம் நம்முடைய பாப, புண்ணியங்களுக்கு ஏற்றாற்போல் அனைத்தும் நடக்கிறது என்பதே. அப்படி இருக்கையில் இத்தகைய விரதங்கள் இருப்பதால் என்ன பயன்?? பிழையுள்ள நமக்கு இதனால் தடை ஏதும் ஏற்படாதா? நம் கர்மவினை நம்மைச் சும்மாவிட்டுவிடுமா?? என்றெல்லாம் கேட்கிறாள். அதற்கு ஆண்டாள் அளிக்கும் விடையே இந்தப்பாடல் ஆகும்.
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை= மாயன் ஆன அந்த ஸ்ரீமந்நாராயணனை வடமதுரையின் மைந்தனை,
கண்ணன் பிறந்தது வடமதுரையில் அன்றோ. ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே இருந்த மதுரை தென்மதுரை. ஆகவே வடமதுரை எனக் குறிப்பிட்டுச் சொல்கிறாள் ஆண்டாள். வடமதுரையில் பிறந்த வசுதேவனின் மைந்தன் ஆன கண்ணன்,
தூயபெருநீர் யமுனைத் துறைவனை= புனிதம் நிறைந்த யமுனைக்கரையில் பிறந்தவனை
யமுனைக்கரையில் பிறந்ததோடு ஆயிற்றா?? அந்த யமுனையைக் கடந்து கோகுலத்துக்கு அல்லவோ வந்தான்??
ஆகவே அடுத்த வரியில் கண்ணன் கோகுலத்துக்கு வந்ததைச் சொல்கிறாள்.
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை= யமுனையைக் கடந்து தகப்பன் தலையின் மேலே ஒரு கூடையில் வைத்துக் கொண்டு வந்து ஆயர் குலத்தினரிடம் நம்பிக்கையோடு தன் குலவிளக்கை ஒப்படைக்கிறான் வசுதேவன். எல்லாம் வல்ல அந்தப் பரந்தாமனுக்கே என்ன ஒரு நிலை!
பிறந்தது சிறையில். பிறந்ததுமே தாயைப்பிரிந்தான். சில மணி நேரத்திலே தந்தையையும் பிரிந்தான். ஆனால் அதனால் தாயும், தந்தையும் இன்னொரு குடும்பத்தில் அல்லவோ விளக்கேற்றிவிட்டனர்? ஆயர்குலத்தில் அவர்களின் ஒளிவிளக்காய்த் தோன்றிய கண்ணனை
தாயைக்குடல்விளக்கம் செய்த தாமோதரனை= தேவகி பெருமைப்படும்படியாக அவள் வயிற்றில் பிறந்திருந்தாலும் கண்ணனின் லீலைகள் அனைத்தும் கோகுலத்திலே யசோதையே கண்டு அநுபவிக்கிறாள் அல்லவா?? தேவகித் தாயின் கர்ப்பத்தைப் பெருமைப்படுத்தும்படியாகப் பிறந்திருந்தாலும், ஆயர்குலத்தில் வளர்ந்து அங்கே யசோதை கையால் கட்டுண்டு கிடந்தவன் அன்றோ! கண்ணனின் விஷமம் பொறுக்கமாட்டாமல் கண்ணனைக் கட்டிவிடுகிறாள் யசோதை. அதனால் கண்ணனின் உதரம்=வயிற்றுப்பாகம் வடுவிழுந்துவிடுகிறதாம். அதனால் அவன் தாமோதரன். யசோதை கட்டினால் தான் என்ன?? அவனால் விடுவித்துக்கொள்ள இயலாதா? எனினும்தன் சக்தியை மறைத்துக்கொண்டல்லவோ இங்கே குழந்தையாய்க் காட்சி தருகிறான் கண்ணன்.
இத்தகைய எளிமையான கண்ணனை நாம்
தூயோமாய் வந்து நாம் தூமலர்கள் தூவித் தொழுது= இங்கே தூயோம் என்பது குளித்து நீராடி வருவதையும் குறிக்கும் அதே சமயம் மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல் சுத்தமாய்க் கண்ணனை மட்டுமே மனதினால் கண்ணனை ஒருமுகமாய்ச் சிந்திப்பதையும் கூறும்.
வாயினால் பாடி மனதினால் சிந்திக்கப்= நம் மனம், வாக்கு, காயம் என அனைத்தினாலும் கண்ணன் ஒருவனையே சிந்திப்போம், அவனையே தொழுவோம், என்றும் கொள்ளலாம், அல்லது நம் கைகளால் மலர் தூவி அர்ச்சித்து, வாயினால் இனிய கீர்த்தனைகளைப் பாடி, மனதினால்கண்ணனை நினைக்கலாம் என்றும் கொள்ளலாம். ஆனால் இவற்றில் எதைப் பின்பற்றினாலும் அனைத்தும் கண்ணனுக்கே என்ற அர்ப்பணிப்பு உணர்வோடு செய்யவேண்டும். பூசலார் நாயனார் மனதிலேயே ஈசனுக்குக் கோயில் கட்டினார். கோயில் கட்டியதோடு மட்டுமின்றிக் கும்பாபிஷேஹமும் செய்ய நாளை நிச்சயித்தார். அதே நாள் பல்லவனும் கோயில் ஒன்றை உண்மையாகவே கட்டிக் கும்பாபிஷேஹம் செய்ய நாள் நிச்சயித்தான். ஈசனோ மன்னன் கனவிலே சென்று , "பூசலாரின் கோயில் கும்பாபிஷேஹத்திலேயே தான் உறையப் போவதால் மன்னனின் கும்பாபிஷேஹத்துக்கு வர இயலாது." என்று கூறுகிறார். மன்னன் திகைத்துப்பூசலாரின் கோயிலைத் தேடிப் போக ஏழையான அவர் பொருளில்லாமல் மனக் கோயில் கட்டியது தெரியவருகிறது. அப்போது தான் மன்னனுக்கு உண்மையான பக்தி என்ன என்பதும் புரியவருகிறது. அப்படி நாமும் கண்ணனைத் தவிர வேறு சிந்தனை இல்லாமல் இருக்கவேண்டும்.
போயப் பிழையும் புகுதருவான் நின்றனவும்= இத்தனையும் செய்தால் நம் பிழைகள் எல்லாம் போன இடம் தெரியாமல் போய்விடுமே. குழப்பமே அடைய வேண்டாம். எத்தனையோ ஜென்மங்களில் சேர்த்த பாவங்கள் அனைத்துமே தொலைந்து போம். அதுக்காகப் பாவம் செய்துட்டே இருக்கணும்னு அர்த்தம் இல்லை. எப்போப் பாவம் பண்ணி இருக்கோம், இது கர்மவினைனு புரிஞ்சுக்க ஆரம்பிக்கிறோமோ அப்போவே இறைவன் மேல்நிலைக்கு அழைத்துச் செல்ல முன் வந்துவிடுவான். பாவங்களைத் தொலைக்கவும் அவனே வழிகாட்டுவான். அவனை நினைத்தால் பாவங்கள் தொலைந்தும் போகும். அதுவும் எப்படி?
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்= தீயில் இட்ட தூசைப் போல ஆகும், பெண்ணே. ஆகவே நீ சீக்கிரம் வா, நாம் பாவை நோன்பை ஆரம்பிக்கலாம்.
இங்கே ஆண்டாள் கூறும் பக்தி யோகத்தையே பட்டத்திரி கூறுவது எவ்வாறெனில்,
"ஏவம் பூத மநோஜ்ஞதா நவஸுதா நிஷ்யந்த ஸந்தோஹநம்
த்வத்ரூபம் பரசித் ரஸாயநமயம் சேதோஹரம் ஸருண்வதாம்
ஸத்யா ப்ரேரயதே மதிம் மதயதே ரோமாஞயத்யங்ககம்
வ்யாஸிஞ்சத்யபி ஸீதபாஷ்ப விஸரை: ஆநந்த மூர்ச்சோத்பவை:"
பரமனின் அழகான செளந்தர்யமான ரூபம் என்றும் புத்தம்புதியதாய் கண்ணுக்கு இனியதாய் அமுதத்தைச் சொரியும் தன்மையோடு கூடியதாய் விளங்குகிறது. அந்த திவ்யமங்கள சொரூபத்தைப் பற்றிக் கேட்டால் மேலும் கேட்கத் தூண்டும், மனம் எல்லையற்ற ஆநந்த பரவசநிலையை அடைகிறது. உடல் சிலிர்த்து, கண்கள் ஆநந்தக் கண்ணீரைச் சொரிய மனமும் மட்டுமின்றி உடலும் குளிர்கிறது.
ஏவம் பூததயா ஹி பக்த்யபிஹிதோ யோக: ஸயோகத்வயாத்
கர்மஜ்ஞாந மயாத் ப்ருஸோத்தமதரோ யோகீஸ்வரைர் கீயதே
ஸெளந்தர்யைக ரஸாத்மகே த்வயி கலு ப்ரேனப்ரகர்ஷாத்மிகா
பக்திர் நிஸ்ரமமேவ விஸ்வ புர்ஷைர்லப்யா ரமாவல்லப"
ஆகவே பக்தியோகமானது கர்ம யோகத்தையும், ஞாந யோகத்தையும் விடச் சிறந்து விளங்குவதோடு அல்லாமல், பலரும் பாராட்டவும் செய்கின்றனர். ஏ, ரமாகாந்தனே, இவ்வுலகத்து அழகெல்லாம் உள்ள நீர் உம்மிடத்தில் அடியார்கள் காட்டும் ப்ரேமையான இந்த பக்தியை அனைவரும் எளிதாக அடையும்படியல்லவோ செய்திருக்கிறீர்!
//எத்தனையோ ஜென்மங்களில் சேர்த்த பாவங்கள் அனைத்துமே தொலைந்து போம். //
ReplyDelete'என்னி ஜென்மமுல சேஸின பாபமு ஈ ஜென்மமுதோ விடு நன்னா' என்கிற பத்ராச்சலர் வரிகள் நினைவுக்கு வந்தன.
ஸ்ரீராம், பத்ராசல ராமதாசரை அடிக்கடி சொல்லிப் பார்க்கிறேன். எனக்குக் கொஞ்சம் இல்லை நிறையவே வெட்கமாக இருக்கும். பத்ராசல ராமதாசரைப் பற்றித் தெரிஞ்சிருந்தாலும் அவரது கீர்த்தனைகள் குறித்து அவ்வளவு படிக்கலை. அதனால் நீங்க சொல்லும்போது கேட்டுப்பேன்.
Deleteஅப்போ நான் உங்களை பார்த்து எவ்வளவு வெட்கப்படணும்?எனக்குத் தெரிந்த ஒரு விவரம்- தூவும் அரைகுறையாக - குறித்து நீங்கள் சொல்கிறீர்கள். நீங்களோ ஆன்மீகத்தில் கடலளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள். எனக்கு வெட்கமாக இருக்கிறதோ இல்லையோ, பொறாமையையாக இருக்கிறது.
Delete!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Deleteநமக்குத் தெரியாத சில விவரங்கள், அறிவுகளை நண்பர்கள் அறிந்திருந்தால், ப்ளூ டூத்தில் செல் டு செல் தகவல் கடத்துவது போல அந்த அறிவை அவர்கள் மூளையிலிருந்து நம் (என்)மூளைக்கு மாற்றிக்கொள்ளும் டெக்னாலஜி எப்போது வருமோ? வரும் என்கிற நம்பிக்கையில் மூளையில் நிறைய காலி இடம் வைத்திருக்கிறேன்! இதுபற்றி எப்போதோ எங்கள் தளத்திலும் எழுதி இருக்கிறேன்.
ReplyDeleteஸ்ரீராம், அறிவைக் கடத்த முடிந்திருந்தால் முதல்லே நான் பாட்டுப் பாடும் திறமையை யாரிடமிருந்தாவது கடத்தி இருப்பேன்.
Deleteநன்று தொடர்ந்து வருகிறேன்...
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Deleteஅன்பு கீதாமா,
ReplyDeleteஅருமையான விளக்கங்களுடன்
மாயனைக் கொடுத்திருக்கிறீர்கள். உடனே சென்று பூக்களைத் தூவ ஆசையாக இருக்கிறது.
இன்னும் நிறைவாகப் பட்டத்திரியின்
பாடல்கள்.
இந்தப் பக்தி ஒன்றுதான் நம்மை உய்விக்கும். பத்ராசல ராமதாசர்
பாடல்களை பாலமுரளி கிருஷ்ணா பாடியதைக்
கேட்டே பல வேதனைகளைக் கடந்திருக்கிறேன்.
காதுகளும் கண்களும் ,மொழியும் நன்றாக இயங்க
அவனே அருள வேண்டும். மிக மிக நன்றி மா.
நன்றி ரேவதி. நான் அதிகம் பத்ராசலம் ராமதாஸர் பாடல்கள் கேட்டதில்லை. உங்கள் ரசனைக்கும் பாராடுக்கும் மிக்க நன்றி.
Deleteவிளக்கம் அருமை.
ReplyDeleteகோல தேர்வு அருமை.
நம் மனம், வாக்கு, காயம் என அனைத்தினாலும் கண்ணன் ஒருவனையே சிந்திப்போம், அவனையே தொழுவோம்.
காணுகின்ற காட்சி எல்லாம் நீயே கண்ணா!
கண்ணன் திருவடி எண்ணி இரு மனமே!
நன்றி கோமதி. கண்ணன் அருள் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்தனைகள். கைக்காயம் ஆறி வருவது குறித்து மகிழ்ச்சி.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஇன்றைய அழகான பாடலுக்கு மிக மிக அழகாக அருமையாய் விளக்கங்கள் தந்துள்ளீர்கள். படிக்கும் போதே பக்தியில் திளைத்து மூழ்க வேண்டும் போல் உள்ளது. ஆனால் கடமையை செய்ய மனதை திருப்பும் போது பந்த பாசங்கள் கட்டிப் போட்டு வதைக்கின்றன. இவையெல்லாம் எப்போது விடப் போகிறோமோ என நினைக்கும் சமயம் அதற்கும் பரந்தாமனின் பூரண அருள் வேண்டுமே.! என்ற எண்ணமும் வருகிறது. தங்கள் பதிவை படிக்கும் போது மனது நெகிழ்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். தினமும் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, ஒவ்வொரு வரியையும் மிக அருமையாக ரசித்து எழுதுவதற்கு நன்றி. தற்சமயம் நமக்குக் கடமைகளும், பாசமும் தான் கட்டிப் போடுகிறது. இறைவனை மறக்காமல் இருக்கோமே அதுவே பெரிய விஷயம் இல்லையா!
Deleteஐந்தாம் நாள் பாடல் அடிகள், பொருள், விளக்கம் அருமை. புகைப்படங்கள் சிறப்பு. பொரூளின் சில கூறுகளைப் பார்க்கும்போது சைவ சித்தாந்தம் நினைவிற்கு வருகிறது.
ReplyDeleteநன்றி முனைவரே! அரியும், சிவனும் ஒண்ணுதானே! எல்லா சித்தாந்தங்களும் சொல்லுவதும் ஒன்றே அல்லவா!
Deleteஆகா! தொடர்கிறேன்.
ReplyDelete