மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!
முதல்நாள் நோன்பு ஆரம்பிக்கையில் அழகாக தீபக் கோலம் போட்டு ஆரம்பிக்கலாம். ஆண்டாளின் காலத்தில் முழுநிலா வீசும் நாளில் ஆரம்பித்தித்திருக்கிறது. காலம் செல்லச் செல்லப் பருவங்கள் மாறுபட மாறுபட இதுவும் மாறி இருக்கிறது.
மதிநிறைந்த நன்னாளில் நீராடித் தூய்மையுடன் நந்தகோபன் குமாரன் ஆன அந்தப் பரந்தாமனை, சூரியனைப் போன்ற ஒளி பொருந்திய முகத்துடையானைப் போற்றிப் பாடினால் அவன் நமக்கு அந்த வைகுண்டப் பதவியையே கொடுத்துவிடுவான் என்கிறாள் ஆண்டாள்.
பட்டர்பிரான் பெற்றெடுத்த பெண்பிள்ளையான ஆண்டாள், கண்ணனோடு இரண்டறக் கலக்கவேண்டி பாவை நோன்பு ஆரம்பிக்கிறாள். நாள், நக்ஷத்திரம் எல்லாமும் பார்த்து ஆரம்பிக்கிறாள்.
மார்கழி மாதம், பூரணச் சந்திரன் நிறைந்து தோன்றும் நன்னாளாம் அது. அனைவரையும் நதியில் நீராடிப் பாவை நோன்பை ஆரம்பிக்கலாம் என அழைக்கிறாள். ஆய்பாடியின் செல்வச் சிறுமிகளை அழைக்கும் ஆண்டாள் நந்தகோபனைக் கூர்வேல் கொடுந்தொழிலன் என்று கூறுகிறாள். கொடுந்தொழிலன் என்பது இங்கே கொடுமையான தொழிலைச் செய்பவன் என்ற பொருளில் வராது. கொடுக்கின்றவன் என்ற பொருளிலேயே நான் பார்க்கிறேன். கூர்வேலால் காளைகளையும், மாடுகளையும் அடக்கி ஆளும் நந்தகோபன் தன் ஈகைத் தன்மையால் சிறந்து விளங்குவதை ஆண்டாள் இங்கே சுட்டிக்காட்டுகிறாள். அத்தகைய நந்தகோபனின் குமாரன் ஆன கண்ணன், ஏரார்ந்த கண்ணியான யசோதையின் இளம் சிங்கம் என்றும் கூறுகிறாள்.
ஏரார்ந்த என்றால் வடிவான, அழகிய கண்களை உடைய அல்லது அழகிய தோற்றத்தை உடைய என்று பொருள் கொள்ளவேண்டும்.
அந்தக் கண்ணனின் நிறமோ கார்மேனி. கண்களோ எனில் சிவந்த வரிகளையுடைய செங்கண்கள் அவை மலர்ந்து நம்மைப் பார்க்கும்போது செந்தாமரையோ எனத் தோற்றுகிறது. முகமோ எனில் கோடி சூரியப் பிரகாசத்தை ஒத்திருக்கிறது. இத்தகைய முகத்தை உடைய கண்ணன், நாராயணன் என்ற பெயர் கொண்டவன் அவன் நமக்கு நாம் விரும்புவதைக் கொடுப்பான்; பறை தருவான் என்பது மோக்ஷம் என்பதை நேரடியாகக் குறிக்காமல் விரும்புவதைக் கொடுப்பது என்றே வரும். இங்கே நாம் என்ன விரும்பப் போகிறோம்? முக்தியைத் தானே?
இந்தப் பாரெல்லாம் புகழ்ந்து போற்றும் கண்ணனைப் பாடித் துதித்தால் அவன் நமக்கு ஞானமாகிய முக்தியைக் கொடுப்பான்.
இப்போது நாரயணீயத்தில் பட்டத்திரி கூறுவதைப் பார்க்கும் முன் பட்டத்திரி பற்றிய ஒரு சிறு அறிமுகம். கேரளத்தைச் சேர்ந்த மேல்புத்தூர் நாராயண பட்டத்திரி தனது குருவான அச்சுத பிஷாரடிக்கு வந்திருக்கும் வாத நோயைத் தனக்கு அளிக்குமாறு விரும்பிப் பெற்றுக்கொண்டவர் . பின்னர் நோயின் கடுமை தாங்காமல் குருவாயூரில் இறைவன் சந்நிதியில் 100 நாட்கள் தங்கி ஒரு நாளை ஒரு தசகம் வீதம் 1036 ஸ்லோகங்களை இயற்றினார். ஆரம்பிக்கும் முன்னர் எதில் ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது என்பது புரியாமல் இருந்தவரைத் துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர் "மச்சம் தொட்டு உண்" என்று கூற எழுத்தச்சனின் கல்வி ஞானத்தையும் எல்லாவற்றுக்கும் மேல் அவரின் பக்தியையும் அறிந்திருந்த பட்டத்திரி முதலில் குழம்பினாலும் பின்னர் தெளிந்தார்.
பகவானின் மச்சாவதாரம் அவர் மனக்கண்களில் தோன்றியது . பத்து அவதாரங்களையும் பூரணமாக எழுதி நிறைவு செய்ய எண்ணம் கொண்டு முதலில் தன் பிரார்த்தனைகளை பகவத் வைபவம், செளந்தர்யம்,பக்தி லக்ஷணம் ஆகிய முறைகளில் தெரிவித்து விட்டு ஆரம்பிக்கிறார். முழுதும் அத்வைதக் கருத்துக்களாகவே காணப்படும் இந்த நாராயணீயம் மிக உயர்ந்ததொரு வேதாந்தமாகக் கருதப் படுகிறது. மேலும் இது முடிவடைந்த நூறாம் நாள் பட்டத்திரியின் வாத நோயும் நீங்கி ஆண்டவனும் தலையசைத்து இவரின் கவிதைகளைப் பாராட்டி திவ்ய தரிசனமும் அளித்தான்.
இதையே நாராயண பட்டத்திரி நாராயணீயத்தில் கூறுவது எப்படி எனில்,
"படந்தோ நாமாநி ப்ரமதபர ஸிந்த்தெள நிபதிதா:
ஸ்மரந்தோ ரூபம் தே வரத கதயந்தோ குணகதா
சரந்தோ யே பக்தாஸ்த்வயி கலு ரமந்தே பரமமூந்
அஹம் தந்யாந்மந்யே ஸமதிகத ஸரவாபிலஷிதாந்"
அந்தப்பரம்பொருளான பகவான் வேண்டும் வரங்களை அருளும் அருளாளனாக இருக்கிறார். அவருடைய பக்தர்கள் பகவானின் திவ்ய நாமங்களைப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் பேரழகு வாய்ந்த அற்புதத் திருமேனியை தியானம் செய்து கொண்டும் ஆனந்தமாக இருக்கின்றார்கள். பகவானின் குணாதிசயங்களை வர்ணிக்கும் திய்வ நாம சரித்திரங்களைப் பற்றிப் பேசுகிறார்கள்.
இத்தகைய ஆநந்தமயமான வாழ்க்கையில் அவர்களுக்கு எதுவும்பொருட்டன்று. ஆசைகளே அற்ற பாக்கியசாலிகள் அவர்கள் என்கிறார்.
ஒரு அசட்டுத் தனமான முயற்சி. திருப்பாவைக்கும் பட்டத்திரியின் நாராயணீயத்துக்கும் ஒப்பிட்டு எழுத முடியவில்லை என்றாலும், ஓரளவுக்கு அந்தப்பொருள் வரும் நாராயணீயப் பாடல்களாய்த் தேடி எடுத்திருக்கேன். இதற்கு எந்த அளவு வரவேற்பு இருக்கிறது என்பதைப் பொறுத்து மேலே தொடரும். நன்றி.
கோலத்துக்கு நன்றி. கூகிளார். என்னோட மூலப் பதிவில் வேறே கோலம் இருக்கும். அது முன்னால் மின் தமிழ்க் குழுமத்தில் திரு உதயனின் கோலங்களைப் பதிந்தபோது எழுதியது. சுமார் பத்து வருஷம் முன்னால் 2010 ஆம் வருஷங்களில் எழுதியவற்றைத் தொகுத்திருக்கேன். இது மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்னும் மின்னூலாகவும் வெளி வந்துள்ளது.
மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாள் மின்னூலுக்கான சுட்டி
மிக விரிவான தகவல்களுடன் மார்கழியின் தொடக்கம்...
ReplyDeleteவாழ்க நலம்....
நன்றி துரை. ரொம்பக் கஷ்டப்பட்டு இதைப் பதிய வேண்டி இருந்தது. பிடிஎஃபில் இருந்து எடுக்கையில் ஃபான்ட்ஸ் பிரச்னை. அப்புறமா கூகிள் டிரைவில் போய் மாற்றி எடுத்துக் காப்பி, பேஸ்ட் செய்தேன். அதில் தான் கோலமும் மாற்ற வேண்டி வந்தது.
Deleteமார்கழி முதல் நாள் இடுகை நன்றாக வந்திருக்கிறது. ஒவ்வொன்றாகப் படிக்கிறேன்.
ReplyDelete//முகமோ எனில் கோடி சூரியப் பிரகாசத்தை ஒத்திருக்கிறது.// - கதிர் மதியம் போல் முகத்தான். அவன் முகம் சூரியனைப் போன்று பிரகாசமாகவும், சந்திரனைப் போன்று குளிர்ச்சியாகவும் இருக்கின்றது என்று பொருள். பொதுவா பெருமாளின் ஒரு கண் சூரியனாகவும், ஒரு கண் சந்திரனாகவும் உருவகப்படுத்தப்படுகிறது.
இதைத்தான் பாரதி, 'சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா.. சூரிய சந்திரரோ' என்று பாடுகிறான்.
விஷ்ணு சஹஸ்ரநாம தியான ஸ்லோகத்தில், "சந்த்ர சூர்யெளச நேத்ரே' என்று வரும். அவன் கண்கள் சந்திரனும் சூரியனும் சேர்ந்ததுபோன்றது.
"செங்கண்" - இதனை பல ப்ரபந்தங்கள் இறைவனின் கண் செந்தாமரையப்போன்று சிவந்த நிறமுள்ளது என்று குறிக்கின்றது. (திருமாலை - சிக்கெனச் செங்கண் மாலே, அமலனாதிபிரான் பாசுரம், 'மிளிர்ந்த செவ்வரி ஓடிய நீண்ட அப் பெரியவாய கண்கள்... இதுபோல பல உதாரணங்கள் சொல்லலாம்)
நன்றி திரு நெல்லைத்தமிழரே! நான் அறிந்தவரையில் விளக்கங்களைச் சொல்லி இருக்கேன். பிரபந்தங்களை உங்களைப் போன்று ஆழமாகப் படித்தது இல்லை.
Delete"நந்தகோபனைக் கூர்வேல் கொடுந்தொழிலன்" - இதற்குப் பொருள், கூரிய வேலைக் கொண்டு, தன் மக்களை, சமூகத்தைக் காக்கும் தொழிலைக் கொண்டுள்ள நந்தகோபன் என்று பொருள். காவல் காப்பது ஏன் கொடும் தொழில்? அதன் கடுமை, அதன் விளைவு-சில சமயம் துன்புறுத்துவது போல அமையும், இதனால் கொடுந்தொழில் என்று பொருள். அதனால்தான் அரசர்களுக்கு ஒரு நாழிகையாவது நரக வாழ்வு உண்டு என்று சொல்வர். அரசர்கள் இறைவனைப்போன்று எல்லாம் அறிந்தவர்கள் அல்லர், கிடைக்கும் ஆதாரங்கள், பிறர் சொல்வது இவற்றை வைத்து முடிவெடுக்கின்றனர். அதில் தவறு வரும் வாய்ப்பு உண்டு என்பதால். (நிறைய உதாரணங்கள் உண்டு)
ReplyDeleteநன்றி திரு நெல்லைத்தமிழரே!
Delete"ஆய்பாடியின் செல்வச் சிறுமிகளை " - ஏன் ஆயர்பாடியில் உள்ள சிறுமிகளை 'செல்வச் சிறுமீர்கள்' என்று அழைக்கவேண்டும்? எல்லோரும் பணக்காரர்களா? யோசித்துச் சொல்லுங்கள்.
ReplyDeleteசெல்வச் சிறுமீர் என்பது இங்கே அருமையான என்ற பொருளில் நான் எடுத்துக் கொண்டேன். பணத்தை செல்வச் சிறப்பைக் குறிக்கும் பொருளில் இங்கே வராது என்பதை ஓரளவுக்கு அறிந்திருக்கிறேன்.
Delete//திய்வ நாம// - தட்டச்சுப் பிழை. //ஆய்பாடியின்// - ஆயர்பாடி அல்லது ஆய்ப்பாடி என்று வரணும்
ReplyDeleteநன்றி திரு நெல்லைத்தமிழரே!
Deleteஇரண்டும் மிகச் சரியாக பொருந்தாவிட்டாலும், நீங்கள் திருப்பாவையின் ஒரு பாசுரமும், நாராயணீயத்தின் ஒரு பாசுரமுமாக எழுதலாம். இரண்டும் பொருந்தணும் என்று அவசியம் இல்லை. நல்லது ஒன்றைத் தெரிந்துகொண்டது போல ஆகும்.
ReplyDeleteநல்ல இடுகை இது.
நன்றி திரு நெல்லைத்தமிழரே!
Deleteமிக அருமை மா ...வித்தியாசமாக திருப்பாவைக்கும் பட்டத்திரியின் நாராயணீயத்துக்கும் ஒப்பிட்டு உங்கள் வரிகள் ...
ReplyDeleteதொடர்கிறேன் ..
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
நன்றி Anuprem
Deleteமார்கழி பிறந்தது. பதிவும் வந்தது! மின்னூலும் போட்டிருக்கிறீர்கள் ஏற்கனவே. வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி திரு ஏகாந்தன், இம்மாதிரி ஏதாவது எழுதித் தான் உங்களை வரவழைக்க வேண்டி இருக்கிறது! :))))
Delete//அந்தப்பரம்பொருளான பகவான் வேண்டும் வரங்களை அருளும் அருளாளனாக இருக்கிறார். அவருடைய பக்தர்கள் பகவானின் திவ்ய நாமங்களைப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் பேரழகு வாய்ந்த அற்புதத் திருமேனியை தியானம் செய்து கொண்டும் ஆனந்தமாக இருக்கின்றார்கள். பகவானின் குணாதிசயங்களை வர்ணிக்கும் திய்வ நாம சரித்திரங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். //
ReplyDeleteஇதைவிட வேறு என்ன வேண்டும்.
எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அவர் புகழை பாடி கொண்டு இருக்கும் வரம் தந்தால் போதும்.
அருமையான பதிவு.
நன்றி கோமதி, இதுவும் மீள் பதிவுதான் என்றாலும் மின்னூலுக்காகச் சில பதிவுகளின் முக்கிய விஷயங்களைத் தொகுத்தது. ஆகவே இதுவும் ஒரு மீள் பதிவு தான்.
Deleteமார்கழி ஒன்றுக்கு அழகான பதிவு நீங்களும் போட்டு விட்டீர்கள்.
ReplyDeleteசுமார் பத்து வருஷங்கள் தொடர்ந்து பிள்ளையார் சதுர்த்தியில் ஆரம்பிச்சு எல்லாப் பண்டிகைகள், விசேஷங்களுக்கும் பதிவுகள் போட்டிருக்கேன். அப்போ நீங்கல்லாம் வலை உலகிலேயே இல்லை! :)))))) அதனால் இப்போப் போட்டிருப்பது புதுசாத் தெரியுது!
Deleteநாராயண பட்டத்திரியைப் பற்றி இன்னொறு விதமாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். அறிவில் சிறந்த அவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஒரு முறை பகவதி சேவை நடந்து கொண்டிருந்த பொழுது பாதியில் எழுந்திருந்து வெளியே சென்ற அவர் தன் கால்களால் பகவதியாக ஆவாஹனம் செய்யப்பட்டிருந்த விளக்கை தட்டி விட்டு விடுகிறார். அதனால் அவருடைய குரு," நீ எத்தனை படித்திருந்தாலும், அடிப்படை விநயம் உனக்கு இல்லை. விளக்கை தட்டி விட்டதோடல்லாமல், அதைப்பற்றி கவலை கூட படவில்லை. இதன் பலனை நீ அனுபவிப்பாய்." என்று சபிக்கிறார். அதனால் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார். இந்த வேதனையிலிருந்து மீள குருவாயூரப்பனை தஞ்சமடைகிறார். குருவாயூரப்பன் அவர் கனவில் வந்து தன்னைப் பற்றி பாடச் சொல்கிறார். இதில் தொடங்குவது என்று அவர் திகைக்க, மீனைத் தொட்டு தொடங்கச் சொல்கிறார். நாராயண பட்டத்திரி அடிப்படையில் பகுத்தறிவுவாதியாக இருந்ததால், பாகவதத்தில் தனக்கு சந்தேகம் தோன்றிய இடத்திலெல்லாம்," இது நிஜமாகவே இப்படி நடந்ததா?" என்று குருவாயூரப்பனை கேட்பாராம், குருவாயரப்பனும் அவருக்கு அந்த நிகழ்ச்சிகளை அவர் கண் முன்னே நடத்தி காண்பிப்பாராம்(வைகுண்ட தரிசனம்,காளிங்க நர்த்தனம், நரசிம்ம அவதாரம் போன்றவைகளை அவர் பார்த்து உறுதி செய்து கொண்ட பின்னரே எழுதினாராம்).இவை ஜெயராம சர்மா அவர்கள் கதையில் கேட்டவை.
ReplyDeleteநன்றி பானுமதி, நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். மேலதிகத் தகவலுக்கு நன்றி.
Deleteஅபூர்வமாக சில வருடங்களில் மார்கழி முதல் தேதியில் பௌர்ணமி வரும். (1992 அல்லது 1993 அப்படி வந்தது என்று நினைவு). ஆண்டாள் பாவை நோன்பு நோற்ற வருடம் அப்படி வந்திருக்கலாம் என்றும் எந்த வருடங்களில் இது நிகழும் என்று கணிப்பதன் மூலம் ஆண்டாள் பிறந்த வருடத்தை கண்டு பிடிக்க முடியும் என்றும் கூறுவார்கள்.
ReplyDeleteபொதுவாக இந்தப் பாவை நோன்பே "தைந்நீராடல்" என்னும் பெயரில் செய்து வந்திருக்காங்க. ஆண்டாள் காலத்தில் மார்கழிக்கு மாறிவிட்டதுனு நினைக்கிறேன். தை மாதம் கன்னிப்பெண்கள் "பாவை நோன்பு" அல்லது காத்யாயினி நோன்பைச் செய்து வந்ததாகப் பரிபாடல் குறிப்பிடும். அதுவே ஆண்டாள் காலத்திலும் நடந்திருக்கிறது.
Deleteஆண்டாள் பிறந்த வருடம் அவரின் திருப்பாவை மூலமே கணிக்க முடியும். வியாழம் உறங்கிற்று. வெள்ளி எழுந்தது! என்னும் 13 ஆவது பாடலில் இருந்தே கண்டு பிடித்திருக்கிறார்கள்.
Deleteமார்கழி வந்தாலும் வந்தது வலைத்தளங்களில் எல்லாம் திருப்பாவை திருவெம்பாவை மயமாய் இருக்கும்
ReplyDeleteவாங்க ஜிஎம்பி ஐயா, அதனாலேயே கடந்த சில வருடங்களாக எதுவும் போடாமல் இருந்து வந்தேன். இந்த வருடம் துரை கேட்டுக்கொண்டதால் போட ஆரம்பித்தேன்.
Deleteநிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றி.
ReplyDeleteவாங்க கில்லர்ஜி, நன்றி.
Deleteமார்கழி திங்கள் விளக்கங்களுடன் அருமை. தொடர்கிறேன்.
ReplyDelete