கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பறந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்! கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம்சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய்!
கோவிலை நினைவூட்டும் வண்ணம் கோபுரக் கோலம் போடலாம். அல்லது மணைக்கோலம் போட்டு கோபுரம் போல் அழகு செய்யலாம்.
கீழ்வானம் வெளுத்ததோடு அல்லாமல் எருமைகள் கூடக் கறக்கப்பட்டு மேய்ச்சலுக்கும் போய் விட்டன. ஆனால் இந்தப் பெண்ணரசி இன்னமும் எழுந்திருக்கவில்லை. இங்கு கூடியுள்ளவர்களோ அவள் வரும்போது வரட்டும் நாம் போய் விட்டு வரலாம்னு அவசரப் படுத்துகிறார்கள். அவர்களைச் சமாதானம் செய்து நிறுத்தி வைத்திருக்கிறேன். தேவாதி தேவனாகிய எம்பெருமானைச் சென்று சேவித்தால், ஆஹா, இத்தனை பேரும் வந்திருக்கிறார்களே என எண்ணிக் கொண்டு அவன் நமக்கு அருள் பாலிப்பான் என்கிறாள் ஆண்டாள். இங்கே தேவாதி தேவன் என்றும் மாவாய் பிளந்தான் எனவும் மல்லரை மாட்டியவன் என்றும் கூறி இருப்பது குதிரை வடிவில் வந்த கேசியைக் கொன்றதையும், கம்சனின் படைவீரர்களான மல்லர்கள் முஷ்டிகன் ஆகியோரைக் கொன்றதையும் குறிக்கும். இவ்வளவு வீரம் நிறைந்த செயல்களைச் செய்ததால் பெருமானை தேவாதி தேவன் என அழைக்கிறாள் ஆண்டாள்.
இப்போ வானமோ வெளுத்துவிட்டது. எருமைமாடுகளும் கறவை முடிந்து மேயக்கிளம்பிவிட்டன. நீ இன்னுமா எழுந்திருக்கவில்லை என்கிறாள் ஆண்டாள்.
அவள் அழைக்கும் பெண்ணோ கண்ணன் மனதுக்கு நெருங்கியவளாய் இருக்கணும். அதனால் அவளைக் கோதூகலமுடைய பாவாய் என அழைக்கிறாள்.
கோதூகலமுடைய பாவாய், கீழ்வானம் வெளுத்து எருமைகள் எல்லாம் புல் மேயக் கிளம்பிவிட்டனவே. நீ என்ன இன்னும் எழுந்திருக்கவே இல்லையா? இங்கே வானம் என்பது ஆகாயத்தைக் குறித்தாலும் நம் உள்ளத்தையும் குறித்துச் சொல்லப் பட்டிருக்கலாம். நம் உள்ளம் தூய்மையாக வெளுத்து எந்தவிதமான தோஷங்களும் இல்லாமல் நிர்மலமாய் இருத்தலையே இங்கே சொல்லி இருக்கவேண்டும். அதேபோல் எருமையும் இங்கே நம் அறியாமையைக் குறிப்பதாய் இருக்கவேண்டும். அறியாமையில் மூழ்கி மூழ்கி நாம் ஆங்காங்கே தடங்கித் தடங்கி மெல்ல மெல்ல இறைவன் திருவடியை நோக்கிப் பயணிக்கிறோம். எருமை மாடுகள் மேயப் போனாலும் மேய்ச்சல் நிலத்துக்கு நேராய்ப் போவதில்லை அல்லவா? அதே போல்! வழியில் அதுபாட்டுக்குப் படுத்துக்கும், நிற்கும், தண்ணீரைக் கண்டால் வாலால் அடித்துச் சேற்றைக் குழப்பும். இப்படியே நாமும் அந்த எருமை மாட்டைப் போலவே வாழ்க்கையின் அனைத்து ரசங்களிலும் ஆழ்ந்து போய் மிகவும் தாமதமாகவே இறைவனைத் தேட ஆரம்பிக்கிறோம்.
(இது எல்லாமே என்னையே சுட்டுவது போல் இருக்கே! )
மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னை= ஆனால் இங்கே வந்திருப்பதோ பரமனுக்குப் ப்ரீதியான பிள்ளைகள் அன்றோ, அவன் மனதுக்கு அண்மையில் இருப்பவர்கள் அன்றோ. இவர்கள் வெகுவிரைவில் அவர்கள் போகவேண்டிய இடத்துக்குச் சென்றுவிடுவார்களே, அதுவரையிலும் அவர்களைப் போகாமல் உனக்காகத் தடுத்து நிறுத்தி உள்ளேன்.
கூவுவான் வந்து நின்றோம்!
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம்சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய்! =
பெண்ணே, நீ கண்ணனுக்கு மிகவும் பிடித்தவள் அன்றோ? நாங்கள் முன்னாலேயே இது இது செய்யவேண்டும் என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம். இப்போது உன்னை இங்கேயே விட்டு விட்டுச் சென்றால் கண்ணன் நீ வந்திருக்கிறாயா எனக் கேட்டால்?? என்ன சொல்வோம் பெண்ணே! கண்ணனைப் பாடி அவன் புகழைப் பாடி வாழ்த்துவோம். கண்ணன் கம்சன் சபையில் மல்லர்களை வென்றான், கேசி என்ற அசுரனை வென்றான். பகாசுரன் என்னும் கொக்கசுரனை வென்றான். இப்படி அனைத்து அரக்கர்களையும் வென்ற தேவாதிதேவனாகிய கண்ணனின் திருவடியை நாம் போற்றிப் பாடினால் , "ஆஹா, நாம் நம் அடியார்களைத் தேடிப்போகவேண்டியதிருக்க அவர்களே இங்கு வந்துவிட்டார்களா?" என்று கண்ணன் நமக்கு அவன் அருளை மழையாகப் பொழிவான்.
இதையே நாராயண பட்டத்திரி கண்ணனின் மகிமைகளை எடுத்துச் சொல்லும் விதமாய்க் கூறுகிறார். பரப்ரம்மம் என்பது எல்லையைக் கடந்து நிலை பெற்றிருப்பது என்கிறார். மேலே ஆண்டாள் அவன் மனதுக்குப் ப்ரீதியானவர்களை எவ்விதம் விட்டுச் செல்வது என அனைவரையும் கூட வருமாறு அழைக்கிறாள். பட்டத்திரியோ நிறைந்திருக்கும் இந்தப் பரம்பொருள் சகலமாகவும் இருக்கிறானே என ஆச்சரியப் படுகிறார்.
"நிஷ்கம்பே நித்யபூர்ணே நிரவதி பரமாநந்த பீயூஷரூபே
நிர்லீநாநேக முக்தாவலி ஸுபகதமே நிர்மல ப்ரஹ்மஸிந்தெள
கல்லோலோல்லாஸ துல்யம் கலு விமலதரம் ஸத்வமாஹூஸ் ததாத்மா
கஸ்மாந்தோ நிஷ்கலஸ்த்வம் ஸகல இதி வசஸ்த்வத் கலாஸ்வேவ பூமந்
தெளிந்த கடல் போன்ற ஆழமான எங்கேயும் நிறைந்திருக்கும் எல்லைகளே இல்லாத பரப்ரும்மம் ஆனது பரமாநந்தம் என்னும் அமுதக் கடலாகும். அசைவற்றிருக்கும் இது ஒரு சமயம் அசையவும் செய்யும். ஆழ்கடலில் அடியில் காணப்படும் நல்முத்துக்களைப் போல இங்கே பக்தர்கள் இந்த அமுதக் கடலில் மூழ்கித் தங்களை மறந்து பகவத் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்து கிடக்கிறார்கள். எல்லா நலன்களையும் தன்னில் மூழ்கிய பக்தர்களுக்குத் தரும் இந்தக் கடலில் பகவானுடைய திவ்ய மங்கள விக்ரஹம் ஓர் பேரலையைப் போல் தோன்றுகிறது. பக்தர்கள் அதைக் கண்டு பரவசம் அடைகின்றனர்.
படங்களுக்கும் கோலத்துக்கும் நன்றி கூகிள்!
படித்தேன், ரசித்தேன்.
ReplyDeleteThanks Sriram.
Deleteஆனாலும்
ReplyDeleteஅந்த எருமைகளுக்குள் வேறு வேறு பொருள்களும் இருப்பதாகத் தோன்றுகிறது...
விடியலில் இறைவனைச் சிந்திப்பது
எவ்வளவு சந்தோஷமாக் இருக்கிறது!...
//அந்த எருமைகளுக்குள் வேறு வேறு பொருள்களும் இருப்பதாகத் தோன்றுகிறது...//
Deleteஆமாம், துரை, வேளுக்குடி சொன்னாரோ? அப்படித்தான் நினைவு. எதுக்கும் தேடியும் பார்க்கணும்.
கோலப் படங்கள் மிக ஜோர்.
ReplyDeleteஅருமையான விளக்கம். அவன் எப்போதும் காத்திருக்கிறான். நாம் தான் சட்டென்று அவனைக் காணப்போவதில்லை.
ஆண்டாள் அழகாகத் தான் சொல்லி இருக்கிறாள்.
பட்டத்ரிக்குக் கிருஷ்ணனைத் தவிர வேறொன்றும்
கண்ணில் படுவதில்லை. என்ன ஒரு பக்தி.!
நன்றாக இருந்தது கீதா மா.!
ஆமாம் வல்லி, அவன் காத்திருப்பது தெரியாமல் நாம் எங்கெல்லாமோ தேடுகிறோம்.
Deleteபாடலின் விளக்கமும், படத்தேர்வுகளும் மிக அருமை.
ReplyDelete//கண்ணனின் திருவடியை நாம் போற்றிப் பாடினால் , "ஆஹா, நாம் நம் அடியார்களைத் தேடிப்போகவேண்டியதிருக்க அவர்களே இங்கு வந்துவிட்டார்களா?" என்று கண்ணன் நமக்கு அவன் அருளை மழையாகப் பொழிவான்.//
எல்லோருக்கும் அருள் மழை பொழியட்டும் கண்ணன்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி கோமதி!
Deleteபோன பாசுரத்தில் ஆனைச்சாத்தானின் படத்தைப் போட்டு தெளிவுபடுத்தினீர்கள். ஆனைமுகப் பறவையும் இருந்திருக்குமோ அந்தகாலத்தில் என எண்ணியிருந்தேன்.
ReplyDeleteநாராயண பட்டத்திரியின் க்ருஷ்ணபக்திப் பாடல்களும், அதற்கான விளக்கமும் கூடவே அழகாகப் பயணிக்கிறது.
நன்றி ஏகாந்தன், திருப்பாவையும், ஆண்டாளும் உங்களை இங்கே வர வைத்திருக்கிறார்கள்.
Deleteஅனைவருக்கும் பகவத் பக்தி கிடைக்கட்டும்.
ReplyDelete