எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, December 19, 2019

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்-3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

 வாமனன் க்கான பட முடிவு   மீன் கோலம் க்கான பட முடிவு

இன்றைய தினம் பசுக்களுக்கும், மற்ற கால்நடைச் செல்வங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக காமதேனுக் கோலம் போடலாம். அல்லது மீன் கோலம் போடலாம். 

வாமனன் க்கான பட முடிவு

வாமனனாக வந்து அவதரித்த மாயவன், திரிவிக்கிரமனாக மூவுலகையும் தன் பாதங்களால் அளந்தவன் பெயரைச் சொல்லிப் போற்றிப் பாடினோம் ஆனால், கீழ்க்கண்ட நன்மைகள் விளையும் என்கிறாள் ஆண்டாள். மாதம் மும்மாரி பொழிவதோடு காலத்தே பெய்யும் மழையால் செந்நெல் செழித்து வளர்வதோடு மீன்களும் நீர் நிறைந்த வயலுக்குள்ளே புகுந்துவிளையாடும். பசுக்கள் பாலைப் பொழியும்.  பொறிவண்டு எனப்படும் புள்ளி போட்ட வண்டுகள் குவளை மலர்களில் வந்து தேனை உண்டு மயங்கிக் கிடக்கும். இப்படி அனைவருக்கும் ஏற்றத்தைக் கொடுக்கும் நாமம் நாராயணா என்னும் நாமம்.  முதல் பாடலில் கிருஷ்ணாவதாரத்தைக் குறித்துச் சொன்ன ஆண்டாள் இங்கே உத்தமன் என்னும் பெயரால் வாமன அவதாரத்தையும், திரிவிக்கிரம அவதாரத்தையும் குறிப்பிடுகிறாள். அத்தகைய உத்தமனின் பாதம் பட மஹாபலி எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்!

அருமையான பாடல். வைணவர்களின் கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகளிலும், கோயில்களிலும் வாழ்த்திப்பாடும்போது இந்தப்பாடல் தவறாமல் பாடப்படும். அத்தகையதொரு உலகளாவிய நன்மைக்கான வேண்டுதல் இந்தப் பாடலிலே அடங்கி இருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே ஆண்டாள் பரமனை ஓங்கி உலகளந்த உத்தமன் என்று அழைக்கிறாள். மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் அறிவோம். ஒவ்வொரு அவதாரத்திலேயும் ஒவ்வொருத்தரை மஹாவிஷ்ணு அழித்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அந்த அரக்கர்களைக் கொல்லவென்றே அவதாரம் செய்திருக்கிறார். ஆனால் வாமன அவதாரம் அப்படி அல்ல. என்ன ஆச்சரியமா இருக்கா? ஆமாம், அப்படித்தான். மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம அவதாரங்களில் அதுவும் அந்த நரசிம்ம அவதாரத்தில் எதிர் எதிர் சிந்தனைகளான + - ஒன்று சேரவும் ஈசன் தோன்றி நரசிம்மனை அழித்தான். கடுமையான கோபம் கொண்ட அவதாரம், மஹாலக்ஷ்மியே பக்கத்தில் போக அஞ்சினாளாம்.

வாமனன் க்கான பட முடிவு

அதுக்கடுத்து இந்த வாமன அவதாரம். சின்னஞ்சிறு பிரமசரியப் பிள்ளை. பிரமசரிய விரதம் இருக்கிறது. பிரமசாரி ய விரதத்தில் பிக்ஷை எடுத்துத் தான் சாப்பிடணும். இந்தப் பிள்ளையும் வந்து பிக்ஷை கேட்கிறது. மஹாபலிச் சக்கரவர்த்தி யாகங்கள் செய்து இந்திர பதவியை அடையப் போகிறான். இதுவோ கடைசி யாகம், இதை முடித்தால் இந்திரனை விடவும் உயர்ந்த பதவியை அடையலாம். ஆனால் அவனுக்கோ மோக்ஷம் காத்திருக்கிறது. சிரஞ்சீவி பதவி காத்திருக்கிறது. ஆகவே யாகத்துக்கான முன்னேற்பாடுகளாய் தானங்கள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டான் மஹாபலி. எல்லாம் முடிஞ்சாச்சுனு நிச்சயமாத் தெரிஞ்சுண்டு சாவகாசமா நம்ம ஆள் போறார் நமட்டுச் சிரிப்போடு. சின்னத் தாழங்குடையைப்பிடிச்சுண்டு, காலிலே கட்டைச் செருப்போடு வரும் சின்னப் பிள்ளையைப் பார்த்த பலிக்கு சந்தோஷம், ஆகா, இந்தப் பிள்ளையின் தேஜஸ் என்ன?? யாரோட பிள்ளை இவன்??

அதுக்குள்ளே சுக்ராசாரியாருக்கு மூக்கிலே வேர்க்க அவரோ பலியிடம் எச்சரிக்கிறார். அப்பா, உன் யாகத்தைக் கெடுக்க வந்த பிள்ளை இவன். காசியபரின் புத்திரன் என்ற பெயரில் வந்திருக்கும் இவன் வேறு யாரும் இல்லை. சாட்சாத் அந்த மஹாவிஷ்ணுவே. நீ பாட்டுக்கு அவசரப் பட்டு வாக்குக் கொடுத்துவிடாதேனு சொல்றார். ஆனால் மஹாபலியோ , "குருவே, மஹாவிஷ்ணுவே வந்து கேட்கும்போது கேட்பதைக் கொடுப்பது என் அரச தர்மம். அரச தர்மத்தை நான் மீற மாட்டேன்." என்று சொல்லிவிடுகிறான். வந்துட்டார் வாமனனும். யாசகமும் கேட்டாச்சு.
"குழந்தாய், என்னப்பா வேண்டும்?"

அரசே, என் காலடியால் மூன்றடி மண் கொடுத்தால் போதும்!" குழந்தை தானே? தன் சின்னஞ்சிறு காலைக் காட்டுகிறது. அது பென்னம்பெரிய காலாகப் போறதுனு பலி கண்டானா? ஆனால் சுக்ராசாரியார் கண்டுவிட்டார். குறுக்கே போக, பலியோ வாக்குக் கொடுக்கிறான். பூமி தானம் சும்மா சரினு சம்மதிக்கிறதோடு போயிடாது. சாஸ்திரோக்தமா தாரையும் வார்க்கிறான் பலி. அப்போவும் சுக்ராசாரியார் வண்டாய் மாறி நீர் விடும் கெண்டியின் கண்ணை அடைத்துக்கொள்ள, ஒரு தர்ப்பைக்குச்சியால் அவர்கண்ணையே குத்துகிறான் வாமனச் சிறுவன். பின்னர் தாரையும் வார்த்து, சின்னஞ்சிறு கால் பென்னம்பெரிய காலாக ஆகிறது. ஒரு கால் மேலே, மேலே, மேலே போக, அங்கே தேவாதிதேவர்கள் அந்தக் கால் விஷ்ணுவின் கால்னு தெரிஞ்சு பாதபூஜை செய்ய அந்த நீர்தான் , அழகர் மலையில்,"நூபுரகங்கை"னு வந்துட்டு இருக்கு. எங்கே இருந்து எங்கேயோ போயிட்டேன்?? அட?? திருப்பாவை எங்கே போச்ச்ச்ச்???????

ம்ம் பிடிச்சாச்ச். இங்கே பலியை வாமனன் சம்ஹாரம் செய்யவில்லை. அவனைப் பாதாளத்துக்கு அதிபதியாக்கிச் சிரஞ்சீவியாக வாழ வழி செய்கிறான். அதனால் இங்கே வாமனனை ஓங்கி உலகளந்த உத்தமன்னு ஆண்டாள் சொல்கிறாள். அதோட பகவான் மூன்றடி எடுத்து வைத்ததில் சகலவிதமான ஜீவராசிகளுக்கும் அவரது ஸ்பரிசம் கிடைத்திருக்கிறது. எப்படி பிட்டுக்கு அடிவாங்கிய பரமனின் அடி ஒவ்வொரு ஜீவராசிக்கும் பட்டதோ அப்படியே. அப்பாடி ஒருவழியா விட்ட இடத்தைப் பிடிச்சாச்ச்..
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்= நதிக்கரையில் பாவை நோன்புக்கு என அம்மனைப் பிடித்து வைத்து வழிபடுவார்கள். அந்த அப் பாவைக்கு மலர்கள் சாற்றி வழிபடுவதற்காக நீராடிவிட்டு வரவேண்டும். அதற்காக நாம் நீராடச் செல்வோம் தோழியரே. இந்த அருமையான பாவை நோன்பை நாம் நூற்பதால்,

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து= நாட்டிலே தீமை என்பதே இராமல் அனைத்தும் ஒழிந்து போய் ஒவ்வொரு மாதமும் மூன்று முறை முறையே மழை பெய்து நீர் வளம், சிறந்து, அதன் மூலம் நில வளமும் செழிக்கும்.

ஓங்கு  பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள்= செந்நெல் செழுத்து ஓங்கி வளரும், வயலில் பாய்ச்சி இருக்கும் நீரில் குளத்து நீரோ என மயக்கம் கொண்ட மீன்கள் பாய்ந்தோடி மகிழ்ந்து விளையாடும்.

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப= குவளைப் பூக்களின் மகரந்தத்தில் {போது=மகரந்தம்) வண்ண விசித்திரமான வண்டுகள் தேன் குடிக்க வந்து கண்கள் செருகி
மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி =தயங்காமல் வந்து செழிப்பான கறவைப்பசுக்களின் பெருத்த மடியில் இருந்து இரு கைகளாலும் பாலைக் கறக்கக் கறக்க அவையும் வஞ்சனை என்பதே இல்லாமல் வள்ளலைப் போல் குடங்களை நிறைத்துக்கொண்டே இருக்குமாம். ஆகவே என்றும் வற்றாத நிறைந்த செல்வத்தைத் தரும் இந்த விரதத்தை நாம் அனைவரும் கடைப்பிடிக்கலாம் வாருங்கள் பெண்களே.

இதை பட்டத்திரி, கூறுவதை வேறொரு கோணத்தில் பார்க்கலாம். இங்கே ஆண்டாள் கூறி இருப்பது நாடு செழித்து இருப்பது குறித்து. பட்டத்திரியோ, நிலையற்ற செல்வத்தை நாடுவதை விட, பகவான் திருநாமத்தைப் போற்றுவதே நிலையான செல்வம் என்று கூறுகிறார்.

"நம்ராணாம் ஸந்நிதத்தே ஸததமபி புரஸ்தை ரநப்யர்த்திதாந்
அப்யர்த்தாந் காமாநஜஸ்ரம் விதரதி பர்மாநந்த ஸாந்த்ராம் கதிஞ்ச
இத்தம் நிஸ் ஸேஷலப்ப்யோ நிரவதிக பல; பாரிஜாதோ ஹரே த்வம்
க்ஷுத்ரம் தம் சக்ரவாடீ த்ருமம் அபிலஷதி வ்யர்த்த மர்த்தி வ்ரஜோயம்

மக்கள் தங்கள் மனோ ரதங்கள் ஈடேற அதுவேணும் இது வேணும்னு கேட்கிறார்கள்; அதோடு சொர்க்கத்தில் இருக்கும் கற்பக விருக்ஷம் மாதிரி இருந்தால் நல்லதுனு நினைக்கிறார்கள். ஆனால் ஸ்ரீஹரி, நீரோ அந்த கற்பக விருக்ஷத்தை விடவும் உயர்ந்தவர் அன்றோ. உம்மை வணங்கியவர்களுக்கு அள்ளி அள்ளிக் கருணை என்னும் செல்வத்தை வாரி வழங்கும் வள்ளல் அன்றோ நீர். வேண்டியதற்கு மேல் பரம ஆநந்தத்தையும், முக்தியையும் கொடுக்கும் வள்லல் நீர். மேலும் உம்மை அனைவரும் எளிதில் அடைய முடியும். எல்லையற்ற பலன்களை அள்ளித்தருபவர் நீர். இங்கே செல்வமாக அவர் குறிப்பிடுவது பகவானையே. மேலும் பகவான் என்ற சொல்லுக்கு உள்ள விசேஷ குணங்களாக, ஐச்வர்யம், தேஜஸ், கீர்த்தி, லக்ஷ்மீகரம், ஞாநம், வைராக்யம் ஆகிய ஆறுகுணங்களும் நிரம்பியவர்கள் எனப்பொருள்.

27 comments:

 1. சிறப்பு.  வாமன அவதாரத்தின் மகிமைகள் படித்தேன்.  நூபுர கங்கை நீர் பின்னணி பற்றி இன்றே அறிந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம், நான் அழகர்கோயில் போனது எனக்குக் கல்யாணம் ஆனப்புறமா, ரங்க்ஸோட! அதுவரைக்கும் அப்பா அனுமதிக்கவே இல்லை. ஆனால் நூபுரகங்கை பற்றி அதுக்கு முன்னாடியே கேள்விப் பட்டிருக்கேன்.

   Delete
 2. கெளரவம் படத்தில் ஒரு பாடலில் வரும் வரி..   "மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே...   மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே..."

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், நினைவில் இருக்கு. கௌரவம் படம் வந்ததுமே எங்க அம்பத்தூர் அசோசியேஷன் மூலமாச் சிறப்புக் காட்சி காட்டியதில் பார்த்தோம். அதன் பின்னர் அலுத்துப் போகும்படிக்குப் பார்த்தாச்சு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

   Delete
 3. உலகளந்த பெருமாளின் சிறப்பையும் ...வேண்டியதற்கு மேல் ஆனந்தையும் நல்கும் அந்த எம்பெருமானின் சிறப்பையும் அறிந்துக் கொண்டேன் ...

  மிக அருமை ...

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனு, ரொம்ப நாட்கள் கழிச்சு வருகைக்கும், (அதுவும் தொடர் வருகை)கருத்துக்கும் நன்றி.

   Delete
 4. தினத்திற்கேற்ற கோலம். சிறப்பு.

  ReplyDelete
 5. அரிய விடயங்கள் தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி!

   Delete
 6. அருமையான விளக்கங்கள் கீதாமா.
  நரசிம்மரை ஈசன் அழித்தாரா. இது செய்தி எனக்கு.

  ப்ரஹ்லாதன் அருகில் சென்றதும் ந்ருசிம்ஹன் அருகில் சென்றதும்
  உக்ரம் தணிந்ததாகக் கூறுவார்கள்.

  ஓங்கி உலகளந்த உத்தமன் உன்னதமான பாடல்.
  அந்தப் பாடலுடன் நாமும் உயர்வோம்.

  ReplyDelete
  Replies
  1. சரபபட்சியாக வந்து சிவபெருமான் வந்து நரசிம்மரின் கோபத்தை அழித்தார்.
   அவரை சாந்த படுத்தினார்.
   திருபுவனம் என்ற ஊரில் கம்பஹரஸ்வரர் ஸ்வாமி பேர் கோபம் வரும் போது நம் உடல் நடுங்கும் இல்லையா? அந்த நடுக்கத்தை தீர்த்தவர். கோவிலில் சரபேஸ்வரர் தனி சன்னதியில் இருக்கிறார்.

   Delete
  2. அக்கா, நரசிம்மரின் கோபத்தை அழித்து சாந்த படுத்தினார் நடுக்கத்தை தீர்த்தார்.

   Delete
  3. வாங்க வல்லி, நான் பதில் கொடுக்க நினைச்சு தாமதம் ஆனதால் கோமதி சொல்லி இருக்காங்க. சரபர் அவதாரமே நரசிம்ஹரின் கோபத்தைத் தணிக்க என்பார்கள். அதைப் பற்றி விரிவாக முன்னர் எழுதினேன். சுட்டியைத் தேடி எடுத்துப் போடுகிறேன்.

   Delete
 7. இந்த அவதாரங்களில் சொல்லப்படாத ஒன்று அந்த அவதாரங்கள் எல்லாம் டார்வின் தீயரியைச்சொல்வது போல் இருக்கும் மனித எவொலூஷன் சொல்லப்பட்டிருக்கும்
  நீர்வாழ் உயிரினமாக மீன் வடிவம் ,பின்
  நீர்நில உயிரினம் என்றாகும் ஆமையுருவம்
  அதன் பின்னே மண்ணில் வாழ் மிருகம் பன்றி,
  உருவமேடுத்தவர் சீறும் சிங்க முகம் கொண்ட
  நரனாக நான்காம் அவதாரம் ,அதன் பின்னெடுத்த
  அவதாரங்களும் பரிணாமத்தின் நிலை மாற்றங்களோ
  என்ற என் எண்ணம் சரியோ தவறோ தெளிந்தவனில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா! நவராத்திரி கொலு வைப்பதே இந்த அடிப்படையில் தானே!

   Delete
 8. அருமையான, அரிய தகவல்கள்!

  ReplyDelete
 9. அம்பேரிக்காவில இருந்து டெய்லி நேரடி வர்ணனையோ கீசாக்கா.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க தியாகத்திலகம்! என்ன சுருக்கமாச் சொல்லிட்டுப் போயிட்டீங்க? :))))

   Delete
 10. //நிலையற்ற செல்வத்தை நாடுவதை விட, பகவான் திருநாமத்தைப் போற்றுவதே நிலையான செல்வம் என்று கூறுகிறார்.//
  உணமையான செல்வம் பகவான் திருநாமம்தான்.

  பகவான் திருநாமம் தருமே எல்லாம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், கோமதி, இங்கே பதிவுப் பக்கத்தின் தலைப்பிலே கூட அதைத் தானே சொல்லி இருக்கேன். (Not a penny is he going) என ஆரம்பிப்பது!

   Delete
 11. படங்களும், பாடல் விளக்கமும் அருமை.

  //பகவான் என்ற சொல்லுக்கு உள்ள விசேஷ குணங்களாக, ஐச்வர்யம், தேஜஸ், கீர்த்தி, லக்ஷ்மீகரம், ஞாநம், வைராக்யம் ஆகிய ஆறுகுணங்களும் நிரம்பியவர்கள் எனப்பொருள்.//

  இறைவனின் விசேஷ குணங்களை புரிந்து கொண்டால் வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும் !

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான். இறைவனின் விசேஷங்கள் தெரிந்தால் போதுமானது!

   Delete
 12. //மக்கள் தங்கள் மனோ ரதங்கள் ஈடேற அதுவேணும் இது வேணும்னு கேட்கிறார்கள்; அதோடு சொர்க்கத்தில் இருக்கும் கற்பக விருக்ஷம் மாதிரி இருந்தால் நல்லதுனு நினைக்கிறார்கள். //

  அனைத்தையும் தரவல்லவர் இறைவன், அவரை நாடினால் போதும். வியாபாரிகள் மக்களின் ம்னோரதங்கள் ஈடேற இதை வாங்கி வைத்துக் கொண்டால் எல்லாம் கிடைக்கும் என்று நாள்தோறும் தொலைக்காட்சிகளில் சொல்லி வருகிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தொலைக்காட்சி தான் எப்போவோ "தொல்லை"க்காட்சியாகி விட்டதே! நாங்க இம்மாதிரி நிகழ்ச்சிகள் பக்கமே போவதில்லை! :))))

   Delete