எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, December 27, 2019

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 11

கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழிய சென்றுசெருச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே போதராய்!
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்!

 கொடி கோலம், க்கான பட முடிவு  காமதேனு கோலம் க்கான பட முடிவு

 மயில் கோலம் க்கான பட முடிவு

பசுக்களைக் குறித்துச் சொல்லி இருப்பதால் காமதேனுக் கோலம் போடலாம். கொடிக் கோலமும் போடலாம்.  கொடிக்கோலம் கிடைக்கலை. மயில் கோலமும் போடலாம்.

திருப்பாவை படங்கள் க்கான பட முடிவு


மிக முயற்சி செய்து தன் தோழியை எழுப்புகிறாள் ஆண்டாள்.  ஏன் அவள் மட்டும் இருக்கிறவங்களோட போகக் கூடாதா? இல்லை; மனசு வரலை. சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்து நின்று கொண்டு தோழியின் முற்றத்தில் கூடி நின்று முகில்வண்ணனாகிய பெருமானின் புகழைப் பாடுகிறார்கள்.  அப்படி எல்லாம் நடந்தும் இன்னமும் மாயையாகிய உறக்கத்திலேயே ஆழ்ந்து கிடக்கிறாளே!  இவ்வுலகத்து நித்திரை மட்டுமின்றி மாயை என்னும் உறக்கத்திலிருந்தும் தோழியை எழுப்பி பெருமான் பால் அவள் மனதைத் திருப்புகிறாள் ஆண்டாள்.


கற்றுக்கறவை கணங்கள் பல கறந்து= கற்றுக்கறவை இங்கே இளங்கன்றுடன் கூடிய பசு மாட்டைக் குறிக்கும். பசுமாடு மிகச் சின்ன வயசிலேயே கன்றை ஈன்று பால் கொடுக்குமாம். அத்தகைய கற்றுக்கறவையில் இருந்து இன்னும் வயது அதிகம் ஆன பல பசுக்கள், அதுவும் எப்படி கணங்கள்னு சொல்கிறாள் ஆண்டாள். இங்கே கூட்டம் னு பொருள் கொள்ளலாம். அத்தகைய பசுக்கள் நிரம்பிய கூட்டங்கள், எண்ணிப்பார்க்கமுடியாத அளவுக்குப் பசுக்கள். அப்படிப்பட்ட பசுக்களிடம் இருக்கும் பாலையெல்லாம் கறக்கும் ஒரு கோபனின் பெண்ணைப் பார்த்து இந்தப் பாடலைப் பாடுகிறாள் ஆண்டாள்.

அந்த கோபன் பசுக்களிடம் பால் தாராளமாய் இருக்கிறதேனு கறக்கவில்லை. கன்று குடிச்சும் பால் மடியில் நிரம்பிப் பால் கட்டிக்குமாம் பசுக்களுக்கு. அது அவற்றுக்குத் தரும் துன்பத்தை நீக்கவே பாலைக் கறக்கிறானாம்.

செற்றார் திறலழிய சென்றுசெருச் செய்யும்= செற்றார் இங்கே அசுரர்களைக் குறிக்கும். பொதுவாய் எதிரிகள் என்று கூறினாலும் இங்கே அந்த கோபருக்கு எதிரிகள் யார்னு கேட்டால் கண்ணனை அழிக்க வரும் அசுரர்களே எதிரிகள் ஆவார்கள். ஆகவே தேடித் தேடிக் கண்ணனின் எதிரிகளை அழிக்க இவரும் கிளம்பிடுவாராம். கண்ணனின் எதிரிகள்னு தெரிஞ்சாலே போதுமாம், அவர்களை அழிக்கக் கிளம்பிடுவாராம்.

குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே= அத்தகைய நற்குணங்கள் நிரம்பிய குற்றம் ஒன்றுமே கூறமுடியாத அளவுக்குக் கடமை வீரராய் இருந்து கண்ணன் தொண்டே நம் முதற்கடமை என்றிருக்கும் கோபனின் பெண்ணாகிய கொடி போன்ற பெண்ணரசியே, இங்கே கொடியைக் குறிப்பிட்டிருப்பது மேலாகப் பார்த்தால் மெல்லிய தேகத்தைச் சுட்டுவதாக இருந்தாலும், கண்ணன் என்ற நாமத்தைச் சொன்னாலேயே இவள் உயிர்வாழ்கிறாளன்றி அவன் நாமம் இல்லையெனில் இவள் கொழுகொம்பில்லாத கொடிபோல் வாடுகிறாள் என்பதையும் கூறும்.

புற்றர வல்குல் புனமயிலே போதராய்= புற்றரவு அல்குல் =இடுப்பிலே மேகலை, ஒட்டியாணம் போன்ற ஆபரணங்கள் தரிக்கும் இடம், தொப்புள் னும் சொல்லலாம். அது எப்படி இருக்கிறது என்றால் பாம்பு புகுந்து புறப்படும் புற்றைப் போல் சிறுத்து இருக்கிறதாம். இங்கே சிறுத்து இருப்பது இடையைனு நேரடி அர்த்தம் வந்தாலும் கண்ணன் நாமத்தைச் சொல்பவர்களுக்கு ஆசைகளும் சிறுத்துக் கண்ணனின் நாமம் ஒன்றே பெரும் செல்வம் என்ற எண்ணம் வரவேண்டும் என்பதையும் குறிக்கும். பொதுவாய் பெண்களின் உடற்கூறுகளைப் பற்றிய இந்தக் குறிப்புக்கள் உள்ளார்ந்த அர்த்தம் பொதிந்தவை என்பதை மனதில் கொண்டு படிக்கவேண்டும்.

அடுத்துப் புனமயிலே போதராய்= மயில் தோகை விரிந்தாற்போல் விரிந்த கூந்தலை உடைய பெண்ணே

சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட= இங்கே இருக்கும் நம் சுற்றம், நண்பர் வட்டம் அனைத்துத் தோழிகளும் சேர்ந்து வந்து உன் வீட்டு முற்றத்தில் இந்தக் குளிரில் பனியில் நின்று கண்ணனின் புகழைப் பாடிக்கொண்டிருக்கிறோமே, உன் காதில் விழவில்லையா?? இங்கே நாங்கள் கண்ணன் பேரைச் சொல்லிப் பாடிக்கொண்டிருக்க உள்ளே நீ அதைக் கேட்டு ஆநந்தித்துக்கொண்டு இருந்த இடத்தை விட்டு நகராமல் இருக்கிறாயே?


சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்!= என்னடி இது பெண்ணே, இப்படியும் ஒரு பெண் இருப்பாளா?? செல்வம் நிறைந்த பிராட்டியாக நீ இருந்தால் எங்களுக்கு என்ன வந்தது?? இதுதான் கண்ணனிடம் நீ வைத்திருக்கும் பக்திக்கு அழகா? இது அத்தனையையுமா கேட்டுக்கொண்டு இன்னமுமா நீ உறங்குகிறாய்? சீக்கிரமாய் வா பெண்ணே!

மேலே கூறியது பாகவத லக்ஷணங்கள் என்று கூறலாம். கண்ணனை நினையாத மனமும், கண்ணனுக்காக உருகாத உள்ளமும், கண்ணனுக்காக ஒழிக்காத ஆசையும் எதற்கு என ஆண்டாள் கேட்கிறாள். அதையே நாராயண பட்டத்திரி எவ்வாறு கூறுகிறார் எனில்,

நாராயணீயம் க்கான பட முடிவு

தாரம் அந்தர் அநுசிந்த்ய ஸந்ததம் ப்ராணவாயும் அபியம்ய நிர்மலா
இந்த்ரியாணி விஷயாத் அதாபஹ்ருத்யாஸ்மஹே பவத் உபாஸ்நோந்முகா:

இங்கே பட்டத்ரி குறிப்பிடுவது ப்ராணாயாமம் பற்றி. சாதாரணமாய் அன்றாடம் செய்யும் மூச்சுப் பயிற்சிக்கும் இதுக்கும் வேறுபாடு உண்டு. என்றாலும் அன்றாட முறையான மூச்சுப் பயிற்சியின் மூலம் இதையும் பழக்கத்துக்குக் கொண்டு வரலாம். பிரானாயாமம் என்பது வெறும் சுவாசக் காற்று மட்டுமல்ல, அது நம் பிராணனைக் கட்டுப்படுத்தி அக ஆற்றலையும் மேம்படுத்தும் பிரபஞ்ச நுட்பமானதொரு தத்துவம். அத்தகைய பிராணாயாமம் செய்கையில் பிரணவ மந்திரத்தை, (பிரணவ மந்திரத்துக்கு இந்தப் பெயர் ஏன் வந்ததுனு இப்போப் புரியுதா?) உள்ளுக்கு ஸ்மரித்து, அதாவது நினைத்துக்கொண்டு (இதுதான் அஜபா மந்திரம்னும் சொல்லலாம், இதோடு கூடச் சொல்லும் மந்திரமும் இருக்கிறது, குருமூலம் உபதேசம் கேட்டுக்கணும்) நம் உள்ளத்து மாசுக்களைத் தீயிலிட்டுப் பொசுக்குவது போல் பொசுக்கிக்கொண்டு நம் பஞ்ச இந்திரியங்களையும், அதாங்க, கண், காது, மூக்கு, வாய்னு எல்லாம் இருக்கே அதுங்களையும் அதன் மூலம் கட்டுப்படுத்தி இவ்வுலகத்து அநுபவங்களிலிருந்து அவற்றை மெல்ல மெல்ல விலக்கி, பகவானின் நாமத்தை மனதுக்குள் உச்சரிப்பது ஒன்றையே குறிக்கோளாய்க் கொண்டு பக்தி செலுத்துவோம். இந்தப் பிராணாயாமத்தைத் தினசரி செய்து வந்தாலே மனதில் தன்னடக்கமும், உடலில் நலனும் வந்து சேரும்.






    

10 comments:

  1. வணக்கம் சகோதரி

    11வது பாசுர பாடலும், அதன் தெளிவான பொருளும் மிக அருமை. ஸ்ரீ கோதை நாச்சியார் பக்தியில் தினமும் மடை திறந்த வெள்ளமாக இயற்றிப் பாடிய அழகான வார்த்தைகளுக்குள்ளும், எவ்வளவு அழமான கருத்துக்கள். அத்தனையும் மெய்யுருக படித்து ரசித்தேன்.

    பிராணாயாமம் பற்றிய விரிவுரைகளும் அருமை.
    /பகவானின் நாமத்தை மனதுக்குள் உச்சரிப்பது ஒன்றையே குறிக்கோளாய்க் கொண்டு பக்தி செலுத்துவோம். இந்தப் பிராணாயாமத்தைத் தினசரி செய்து வந்தாலே மனதில் தன்னடக்கமும், உடலில் நலனும் வந்து சேரும்./

    உண்மை.. உண்மை.. அந்த அருள் ஒன்றே போதும்.. ஸ்ரீ நாராயணா என்ற மந்திர உச்சாடனமே நம் வியாதிகளை போக்கி தேக திடத்தை அளிக்கவல்லது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, நீங்க கேட்ட பத்தாம் பாசுரத்தின் விளக்கமும், கொடுத்திருந்தேன். பார்க்கலை போல! வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      Delete
  2. தொடர்கிறேன் நன்று...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, நன்றி.

      Delete
  3. நல்ல விரிவான விளக்கம். வரிகளுக்கு வரி இனிமை.
    நன்றி கீதா.
    நாராயணீயம் படிக்கும் வேளை நன்மைகள்
    சேரட்டும்.

    திருப்பாவை அமுதம் நம் எல்லோரையும் ஒன்று சேர்க்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, நாராயணீயம் படிச்சாலே வியாதிகள் மறையும் என்பார்கள். அப்படி வியாதியானும் போகட்டும்.

      Delete
  4. நீங்கள் கோலம் போடுவீர்களா

    ReplyDelete
    Replies
    1. நல்ல கேள்வி கேட்டீங்க! சின்ன வயசில் அக்கம்பக்கமெல்லாம் கோலம் போட என்னை அழைப்பார்கள். முக்கியமாய் மணைக்கோலம்/மாக்கோலம் (அரிசிமாவை ஊற வைத்து அரைத்துப் போடும் கோலம்) போட நிறையப் பேர் வீட்டில் கூப்பிடுவாங்க. புள்ளி வைத்துப் பெரிய கோலங்களும் பல வருடங்கள் போட்டிருக்கேன். அவற்றில் வண்ணங்கள் நிரப்பியும் போட்டது உண்டு. கிறிஸ்துமஸுக்கு சான்டாவைக் கோலத்தில் வரைந்திருக்கேன். 2010/11 வரை நிறையக் கோலங்கள் முடிஞ்சதைப் போட்டிருக்கேன். இங்கே ஸ்ரீரங்கம் வந்ததும் தான் வீட்டு வாசல் மனித மனதைப் போல் குறுகி விட்டதால் சுமாரான அளவில் கோலங்கள்.

      Delete
  5. சிறப்பான விளக்கங்கள்.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், நீண்ட நாட்களுக்குப்பின்னர் வருகை தந்ததுக்கு நன்றி.

      Delete