எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, November 17, 2020

ஆறுபடை வீடு கொண்ட வேல் முருகா! கந்த சஷ்டிப் பதிவுகள்! 3

 ஒரு ஆண்மகன் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாய்த் திகழ்ந்தான் கந்தவேள்! சூரன் மாமரமாய் மாறி நடுக்கடலில் நின்று எதிர்த்தபோதும் அதை இரு கூறாகவே வீழ்த்தினான். வீரம் மட்டும் இருந்தால் போதுமா?? அருளும் இருக்கவேண்டும் அல்லவா?? அருள் இல்லாத வீரம் மட்டுமே இருந்ததால் அன்றோ சூரனை அழிக்க நேர்ந்தது. கருணக் கடலாம் கந்தன் அவனுக்கு அருள வேண்டும் எனத் திருவுளம் கொண்டான்.



ஆனால் அந்த மாமரமோ சேவலாகவும், மயிலாகவும் மாறிக் கந்தனைத் தாக்க வர அவன் பேராற்றலோடும், பெருங்கருணையோடும் அவற்றைத் தடுத்தாட்கொண்டான் அல்லவா? பேரருளாளன் ஆன கந்தனின் கருணையால் சூரன் சேவலாக ஆகி அவன் கொடியிலும், மயிலாக மாறி அவனுக்கு வாகனமாகவும் ஆனான். இதற்கு முன்னால் ஷண்முகனுக்கு வாகனம் இல்லையா என்ன? மயிலேறும் வடிவேலன் மயிலேறித் தானே போருக்கே வந்தான் அல்லவா? கொடியிலும் சேவல் தானே இருந்தது? 

படங்களுக்கு நன்றி கூகிளார்.

அந்த மயில் வேறு யாரும் இல்லை. சூரனின் கொடுமைதாங்காமல் ஒளிந்திருந்த இந்திரன் தான் மயில்வாகனமாக முன் வந்தான். அக்னியானவன் சேவல் வடிவில் வந்து கொடியாக உதவினான். காக்கவேண்டியவனையும், காத்து, தண்டிக்கவேண்டியவனையும் காத்து இருவருக்கும் தன் கருணையால் அருள் மழை பொழிந்தான் கந்தவேள். கல்லார்க்கும், கற்றவர்க்கும் களிப்பருளும் அந்தக் களிப்பான ஷண்முகனுக்குப் பரிசு கொடுக்க வேண்டாமா?? தேவேந்திரன் தன் அருமை மகளைத் திருமணம் புரிவித்தான் ஆறுமுகனுக்கு. மேன்மை வாய்ந்த குமாரனுக்குத் தன் மேன்மை வாய்ந்த மகளைத் தந்து தானும் மேன்மை பெற்றான் தேவேந்திரன். ஆனால் இன்னொரு பெண்ணையும் கந்தன் மணந்தானே? இந்தப் பெண் யார்?/ தேவானையின் சகோதரியே அவள். இருவரும் தேவலோகப் பெண்களே, முருகனை மணக்கவேண்டித் தவம் இருக்க ஒருத்தி தேவேந்திரனின் மகளாகவும் இன்னொருத்தி வேடுவர் குலத் தலைவனாலும் வளர்க்கப் பட்டாள். ஏன் இந்த வித்தியாசம்? இருவருமே திருமாலின் மக்கள் தானே? இங்கே தான் கந்தனின் அருள் புலன் ஆகின்றது. 


தெய்வானையை மணந்தது மேன்மை என்றால் எளிய வேடுவனின் மகளையும் மணந்தது கந்தனின் எளிமையைக் காட்டுகின்றது அல்லவா?? கந்தனின் மந்திரமும் ஆறு எழுத்து. அவனுக்கு முகங்களும் ஆறு. "ஷரவண பவ" "குமாராய நம:" எந்த இந்த ஆறெழுத்து மந்திரத்தைப் பற்றி திருமுருகாற்றுப் படையில் வந்திருப்பதாய் அறிகின்றோம். குமாரன்= அக்ஞான இருளை அழிப்பவன் என்று பொருள் கொள்ள வேண்டும். ஷரவண பவ என்றால் குமாரன் தோன்றிய நாணற்காட்டையும் குறிக்கும், குமாரனைப் போற்றிப் பாடினால் ஆரோக்கிய வாழ்வு சித்திக்கும் என்றும் குறிக்கும். ஆறுமுகங்களும் ஆறு திசைகளைக் குறிக்கும். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மேல், கீழ் என ஆறு திசைகளையும் காட்டுகின்றது இது. சூரனை அழித்த சினம் அடங்காமல் முருகன் இருக்கப் போகின்றானே என்றே எண்ணி அவனுக்கு வள்ளி, தெய்வானை இருவரையும் மணமுடிக்கின்றனரோ??


அதனால் தான் நக்கீரர் அவனை ஆற்றுப் படுத்த ஆற்றுப்படை பாடினாரோ?? இந்த ஆற்றுப் படைகளில் குறிப்பிடும் இடங்களே ஆறுபடை வீடு என இன்று மாறி உள்ளது. திருப்பரங்குன்றத்தில் தரையிலும், திருப்போரூரில் விண்ணிலும், திருச்செந்தூரில் கடலிலும் போரிட்டான் சிவ குமாரன். இவனின் ஆறுபடை வீடுகளையும் அவற்றின் தத்துவங்கள் பற்றியும் பார்ப்போமா?? மேலும் சிக்கலில் குடிகொண்ட சிங்காரவேலன், எட்டுக்குடி வேலவன், எண்கண் ஷண்முகன் மூவரையும் செய்த சிற்பியைப் பற்றியும் அறிவோமா??? கதை வேணுங்கறவங்க கையைத் தூக்குங்கப்பா!அப்போத் தான் கதை சொல்லுவேன். இல்லாட்டி ஒண்ணும் கிடையாது! :P


படங்களுக்கு நன்றி கூகிளார்!

17 comments:

  1. சூர சம்ஹாரம் முடிந்து , தெய்வானை கல்யாணம், வள்ளி கல்யாணம் எல்லாம் சிறப்பாக நட்ந்து விட்டது.
    நன்றாக சுருக்கமாய் கந்தவேளைப்பற்றி சொல்லி விட்டீர்கள் அழகாய்.
    வாழ்த்துக்கள்.

    //திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே
    திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்//
    ஸ்கந்தகுரு கவசத்தில் சொல்வது
    போல் முருகன் திருவருளை எண்ணி இருப்போம்.

    கையை தூக்கி விட்டேன், கதை சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி. வாழ்த்துகளுக்கு நன்றி, துரை கதையே ஒரு கட்டுக்கதை என்கிறார். ஆனால் அங்கே எல்லாக் கோயில்களிலும் இதைக் கல்லில் வடித்திருக்கிறார்கள். எண்கண்ணில் சில்பா சில்பியின் அதிஷ்டானம்/சமாதி/ஞானக்கோயில் என்பது உள்ளது. பல முறை ஆலோசித்துப் பலரையும் கேட்டுக் கொண்டே முன்னரும் இதை எழுதினேன்.

      Delete
  2. அறுபடைவீடு எதிலிருந்து மருவி வந்தது என்று தெரிந்துகொண்டேன்! நான் கையைத் தூக்கி விட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. முன்னரும் எல்லோரும் கையைத் தூக்கினாங்க! கதையை எப்படியும் சொல்லத் தான் போறேன். பார்ப்போம்.

      Delete
  3. மூவரையும் செய்த சிற்பி பற்றிய கதையா? கேள்விப்பட்டதில்லையே.. சொல்லுங்கள்.

    அறுமுகத்துக்குப் புது விளக்கம், திசைகளோடு சேர்த்தது.

    ReplyDelete
    Replies
    1. இந்த unknown நாந்தான்.

      Delete
    2. நீங்களாகத் தான் இருக்குமோ என நினைத்தேன். உறுதியாத் தெரியலை. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  4. இதோ என் கை!!!!கதை வேண்டும் கீதாமா.
    உங்களை மாதிரி யார் சொல்வார்கள்.
    இந்திரன்,மயில்,
    மயில் ,சேவல் சூரபத்மன் எல்லாமே இனிமை.

    திருப்பரங்குன்ற முருகனைத் தரிசித்த பின்
    தான் மகளுக்கு, மாப்பிள்ளையின் ஜாதகம்
    வந்தது.
    பின் பழமுதிர்ச்சோலையும் சென்று வந்தோம்.
    நன்றி கீதாமா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, கதையைச் சொல்லிடறேன். பின்னர் நீங்களே சரியா/தப்பா என நிர்ணயித்துக் கொள்ளுங்கள். நான் மதுரையிலேயே பிறந்து வளர்ந்து திருப்பரங்குன்றம் பதினைந்து வயதிலே மாமா வீட்டிலேருந்து (டிவிஎஸ் நகர், நடந்தே போகலாம்.)முதல் முதலாப் போனேன். பழமுதிர்ச்சோலையோ கல்யாணம் ஆகி மறுவீடூ வந்தப்போப் போனோம். ஆனால் அப்போ உண்மையான சோலையாகவே இரூந்தது. இப்போ சமீபத்தில் 2014 ஆம் ஆண்டில் பார்க்கையில் ந"ர"(க)(ர)க மயமாகி விட்டது.

      Delete
  5. கந்த புராணம் அருமை..

    ஒரே கந்த புராணத்தை பற்பல விதமாக மெருகூட்டி வழங்கும் ஸ்ரீ வாரியார் ஸ்வாமிகள் நினைவுக்கு வருகின்றார்கள்..

    கந்தா சரணம்.. கடம்பா சரணம்..
    கார்த்திகை மைந்தா சரணம்.. சரணம்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, வாரியாரின் கந்தபுராணச் சொற்பொழிவு பல முறைகள் கேட்டிருக்கேன். மதுரையை விட்டுப் போனதும் எல்லாமும் போயிற்று! :(அப்போதைய நினைவுகள், சொற்பொழிவுகளில் இருந்து எழுதி வைத்த குறிப்புக்கள் என அவ்வப்போது எடுத்துப் பார்த்து நினைவூட்டிக் கொள்ளுவேன்.

      Delete
  6. சிக்கல், எட்டுக்குடி, எண்கண் - திருக்கோயில் முருகன் திருமேனிகளைப் பற்றிய செய்திகள் தவறானவை..

    எதற்கோ யாராலோ சொல்லப்பட்டது பெரிது படுத்தப்பட்டு அதுவே உண்மையென்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்..

    இப்போது கூட தஞ்சைப் பெரிய கோயிலை ஏலியன்கள் கட்டினார்கள் என்று யூடிப்பில் பினாத்திக் கொண்டிருக்கின்றார்கள்..

    சிறிய வயதில் எங்களுக்குக் கதை சொன்னார்கள் - பூதம் வந்து ஒரே ராத்திரியில் திருஷ்டிச்சது!.. என்று..

    இன்னும் பெரிய நந்தி இரவில் எழுந்து மேயச் செல்கிறது என்பாரும் உள்ளனர்..

    சோழராஜா பெரிய நந்தியைச் செய்ததும் அன்றைய இரவில் உயிர் பெற்று மேயச் சென்றதாம்... பயிர் பச்சைகள் சேதமானதும் மக்கள் முறையிட்டார்களாம்..

    உடனே சித்த வயத்தில் நந்தியைப் பிடித்துக் கட்டி வைத்து விட்டார்களாம்..

    ஆனால் இன்றைக்குச் சொல்கிறார்கள் -
    பெரிய நந்திக்கும் சோழனுக்கும் சம்பந்தம் இல்லை என்று...

    ReplyDelete
    Replies
    1. துரை, தஞ்சைக்கோயில் பற்றிய செய்திகள் புதுசு. கேள்விப் படவே இல்லை. ஆனால் இந்த முருகன் கோயில்களின் திருமேனிகளைப் பற்றி அந்த அந்தக் கோயிலிலேயே சொல்கின்றனர். எப்படியோ நான் கதையைச் சொல்லிடறேன். அவங்க அவங்க முடிவு செய்துக்கட்டும்.

      Delete
    2. அந்தந்தக் கோயில்களிலும் அதையே சொல்லும்படியான சூழ்நிலையை உருவாக்கி விட்டார்கள்... அர்ச்சகர்கள் உண்மையைச் சொன்னால் பக்தர்களாகிய இவர்கள் ஒத்துக் கொள்வதில்லை...

      இதற்கு நிறைய சொல்லலாம்.. என்னுடைய அனுபவத்திலேயே கண்டிருக்கின்றேன்... பேச்ப் போக வம்பு வளர்ந்திருக்கிறது..

      சில தினங்களுக்கு முன் குருப்பெயர்ச்சி ஆனது.. குரு எனப்பட்டது வியாழன் ஆகிய பிரகஸ்பதி...

      சிவாம்சமாகிய ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்த்திரமும் கொண்டைக் கடலையும் ஏன்?..

      வியாழனுக்கு தேவதை பிரம்மா..
      அதி தேவதை இந்திரன்...

      சிவாச்சாரியார்களுக்கு இதெல்லாம்
      தெரியாதா!...

      எடுத்துச் சொன்னால் அந்தக் கோயிலின் ஐயர் ரொம்பப் பேசுகிறார் - என்பார்கள்..

      குருப்பெயர்ச்சி என்றால் ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி பெட்டி படுக்கையுடன் சொய்ங் என்று அடுத்த ராசிக்குப் போவது போல ஆன்மீக (!) வியாபார ஊடகங்கள் படங்களை வேறு போட்டு மக்களை மயக்கி விடுகின்றார்கள்..

      இன்னும் நிறைய சொல்லலாம்...

      Delete
    3. துரை, நேற்றுக் கூட என் தம்பியோடு தக்ஷிணாமூர்த்தி/குரு பற்றிய விவாதம். தக்ஷிணாமூர்த்திக்கும் குருப்பெயர்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை என்றால் அவர் கேட்கவில்லை. ஆலங்குடி தக்ஷிணாமூர்த்தி அபிஷேஹப் படம், வீடியோ அனுப்பி வைக்கிறார். :( குரு என்னும் கிரஹம் தான் பெயர்ச்சி என்று எத்தனையோ முறை சொல்லியாச்சு. ஆனால் யாரும் கேட்கமாட்டேன் என்று அடம்.

      Delete
  7. தங்களது பதிவில் குறையேதும் இல்லை..

    ஆன்மீக தல புராணங்களில் தெளிவில்லாமல் இருக்கின்றார்களே.. என்ற ஆதங்கத்தில் எனது கருத்தைச் சொல்லி இருக்கிறேன்... அவ்வளவுதான்..

    நன்றி..

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் துரை. தல புராணங்கள் பலவும் இப்படித்தான் இருக்கின்றன. உண்மையான தல புராணங்களை சில வருடங்கள் முன்னர் மரபு விக்கிக்காக வலை ஏற்றினேன்.

      Delete