எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 23, 2020

தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்! கந்த சஷ்டிப் பதிவுகள்! 9

நண்பர் ஒருவர் வள்ளி திருமணத்தைத் தான் எழுதச் சொல்லிக் கேட்டிருந்தார். ஆனால் நான் முதலில் தெய்வானை திருமணத்தை எழுதிட்டே அப்புறமா வள்ளி திருமணத்துக்கு வரலாம் என்று இருக்கிறேன். என்ன இது?? இறைவனுக்குத் திருமணம்ங்கறாங்க? அதுவும் இரண்டு திருமணமாமே? அப்படினு பேசிக்கிறவங்களுக்கு எல்லாம் இது இறை தத்துவத்தைப் பாமரனுக்கும் புரியும் வண்ணம் எளிமைப் படுத்திச் சொல்வதற்கென்றே ஏற்பட்ட ஒன்று. திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று இறைவன் கேட்கவில்லை. ஆனாலும் நாம் தானே செய்து வைக்கின்றோம். அவன் திருமணம் செய்து கொண்டதாய்ப் பாடி, ஆடியும் மகிழ்கின்றோம் இல்லையா? ஆன்மாக்கள் இறைவனைச் சென்றடைவது ஒன்றே வாழ்க்கைத் தத்துவம். என்றாலும் எப்போதும் இப்படித் தத்துவார்த்தமாய் அனைவராலும் சிந்திக்க முடியாது. அப்படிப் பட்டவர்களுக்கென இம்மாதிரி எளிய சம்பிரதாயங்கள், வழக்கங்கள் மூலம் இறைவனைச் சென்றடையும் வழியைக் காட்டுவதே இந்த அவசர யுகத்திற்கென ஏற்பட்டது ஆகும். 

இங்கே தெய்வானை முருகனுக்கு இடப்புறமாய் இருக்கும் இடகலைச் சக்தியாவாள். வள்ளியோ வலப்பக்கம் இருக்கும் பிங்கலை சக்தி. இந்த இரு சக்திகளும் நம் உடலில் எவ்வாறு இயங்குகின்றதோ அவ்வாறே தெய்வானையும், வள்ளியும் முருகனோடு இணைந்த ஐக்கியமாக நமக்கு யோகத்தையும், அருளையும் போதிக்கின்றனர். நம் உடலின் இரு சுவாசங்களே, ஆறுமுகனின் இரு மனைவியராக உணரப் படுகின்றனர். இந்த சுவாசம் இல்லையேல் நாம் எங்கே? ஓகே, ஓகே,  இதோ கதை! தத்துவத்தை நிறுத்திக்கிறேன். இப்போது இவர்கள் எவ்வாறு தோன்றினார்கள் என்ற வழிவழியாக வரும் புராணக் கதையைப் பார்ப்போமா? *********************************************************************************** தில்லைக் கூத்தனின் நடனத்தைக் கண்ட மஹாவிஷ்ணுவின் ஆனந்தப் பரவச நிலையில் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரிலிருந்து தோன்றிய இரு மங்கையரே அமிர்தவல்லி, சுந்தரவல்லி. இருவரும் கந்தனை மணக்க விரும்ப, கந்தனோ, தன் அவதார நோக்கம் நிறைவேறும் வரையில் திருமணம் இல்லை எனவும் அது வரையில் இருவரையும், ஒருத்தியை விண்ணிலும், மற்றொருத்தியை மண்ணிலும் பிறந்து தவத்தில் ஈடுபடும்படியும் சொல்லுகின்றான். விண்ணில் பிறந்த குழந்தையான தெய்வானையை தேவேந்திரனின் யானையான ஐராவதம் வளர்த்து வருகின்றது. யானைக் கூட்டத்துக்கே இயல்பாக உள்ள பாச உணர்ச்சியால், தாயில்லாக் குழந்தையான தெய்வானை யானையால் பாசத்துடன் வளர்க்கப் பட்டு தெய்வானை ஆகின்றாள். முருகனை இப்பிறவியிலும் மறவாது மணம் புரியவேண்டி தவம் இருக்கின்றாள். 

அவள் தவம் நிறைவேற வேண்டியும், தன் அன்பு மகளின் மனோரதம் நிறைவேறவும், தேவர்களுக்குச் சேனாபதியாக வந்த தேவசேனாபதிக்குத் தன் மகளைத் தர நிச்சயிக்கின்றான், தேவேந்திரன். திருமணம் நிச்சயிக்கப் பட்டு வேத முறைப்படி, வேள்விச் சடங்குகளைப் பிரம்மா நிறைவேற்ற, தேவேந்திரன் தாரை வார்த்துத் தர முறைப்ப்படி நடக்கின்றது. தவமிருந்த தெய்வானையாகிய ஆன்மா இறையைத் தேடி மண்ணுக்குவந்து மண்ணுலகில் திருப்பரங்குன்றத்தில் இறையோடு ஒன்றாய்க் கலப்பதே தேவ குஞ்சரியின் திருமணம் ஆகும். விண்ணுலக அருள் சக்தியான தெய்வானை முக்தியை முருகன் அருளுகின்றான் என்பதை விளக்க ஏற்பட்டதே தெய்வானை திருமணமாம் திருப்பரங்குன்றம் என ஏற்பட்டது.


அடுத்து முருகன் தமிழ்க் குறத்தி ஆன வள்ளியைத் திருமணம் செய்து கொண்டது. வள்ளியம்மையை இச்சா சக்தி என்பார்கள். இவளை முருகன் இச்சை கொண்டானா அல்லது இவள் முருகனிடம் இச்சை கொண்டாளா என்பதை அறிதல் கடினம். ஆனால் தானே தமிழ், தமிழே தானாகிய கந்தன் ஒரு பெண்ணை மணந்தது போதாது என நினைத்து, மற்றொரு பெண்ணையும் மணக்க நினைத்தான். அதுவும் ஒரு வேடுவப் பெண்ணை. எப்படித் திருமணம் புரிந்தான்? தெய்வானைக்குத் தெரியாமல் களவு மணம் புரிகின்றான் இவளை. ஆஹா, தெய்வானை சும்மாவா இருந்தாள்??? முதலில் வள்ளி பிறந்ததைப் பார்ப்போமா?? *********************************************************************************** வள்ளி திருமணம் பற்றி எழுதும்போது இயல்பாகவே காவடிச் சிந்து நினைப்பிலே வருது.அதுவும் விஜய் சிவா குரலிலே கேட்பதென்றால் தனி சுகமே. ஊனும் உருகும், உள்ளம் குழையும் வண்ணம் அற்புதமான குரலிலே பாடுவார். இந்தப் பாடல்களுக்கென்றே அவர் குரல் அத்தனை இனிமையா, அல்லது பாடல் இனிமையானு தெரியாத அளவுக்கு உணர்வுகள் ஒத்துப் போகும். வள்ளிதிருமணம் பற்றிய நாட்டுப் பாடல்கள் பலவற்றையும் அதிகம் பாடி வந்திருப்பது குமரி மாவட்டத்திலே உள்ள மக்களே ஆகும்.ஆனால் அவர்களில் பலரும் இன்று கூண்டோடு மாறி விட்டதால் அவர்களால் அரங்கேற்றப் பட்ட களியலாட்டக்கலையின் முக்கிய அம்சம் ஆன வள்ளி திருமணம், வள்ளியடவு போன்ற பாடல்களை ஆய்வாளர்கள் மிகவும் சிரமப் பட்டே கண்டெடுத்திருக்கின்றனர். 

கேரள எல்லைக் கிராமங்களில் ஒரு சில இடங்களில் குறத்திக்களி என்ற பெயரில் வழங்கும் சில பாடல்களில் மலையாளமும் கலந்து இருப்பதாகவும் சொல்கின்றனர். நமக்கெல்லாம் தெரிந்த கதையான வள்ளி கதையில் நம்பிராஜனின் மகளாய்ப் பிறக்கின்றாள் என்று ஒரு கதையும், நம்பிராஜன் கண்டெடுக்கின்றான் என இன்னொரு வகையும் உண்டு. ஆனால் இந்தக் குமரி மாவட்டக் கதைப் பாடல்களில் சொல்லுவதே வேறே. அவங்க சொல்லுவது என்னவென்றால்.ரிஷ்ய சிருங்கருக்கும், மற்றொரு பெண் மான் உருவில் இருந்த பெண்ணிற்கும் பிறந்த குழந்தையே வள்ளி. நம்பிராஜன் வேளி மலை அரசன். இவன் மனைவி மோகினி. இவன் வேட்டைக்குச் செல்லும்போது வள்ளிக் கிழங்குகள் சூழ்ந்த தோட்டத்தில் இந்தப் பெண் குழந்தையைக் கண்டெடுத்து வளர்த்து வருகின்றான். இந்தக் குழந்தையைச் சீரோடும், சிறப்போடும் வளர்த்து வருகின்றனர் நம்பிராஜன் குடும்பத்தில். 

குழந்தை அழுதால் பாடும் பாட்டெனச் சொல்லுவது, 

"மானே நீ போட்ட சத்தம் 

மலக்குறவன் ஓடி வந்து 

ஓடி வந்து வள்ளி தனை 

வளைத்துமே எடுத்தானே 

வளைத்துமே எடுத்தானே 

பெண்பிள்ளை பிள்ளையல்லோ 

பிள்ளையே ஆயிப்போச்சு 

ஆமணக்கு தண்டு வெட்டி 

அது நிறையத் தேனடச்சு 

தேனடச்சு அமுது பெறும் 

நேரமெல்லாம் அமுது பசி அடக்கிவிட்டு

 குச்சு போய்ச் சேர்ந்தார்கள்." 

என்ற இவ்வாறு ஓடி வந்து வள்ளியாகிய குழந்தையின் அழுகையை அடக்குகின்றார்களாம், குறவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்து. நம்பிராஜனுக்கு மகன்கள் நிறையப் பேர். அனைவரும் வள்ளியைத் தங்கள் சொந்த சகோதரி போலவே எண்ணிப் பாசமுடனும், நேசமுடனும் வளர்த்து வந்தார்கள். தினைப்புலத்தில் தினை அறுவடைக்குக் காத்து நின்றது. அங்கே பட்சிகள் வந்து செய்யும் இம்சை தாங்க முடியவில்லை. தன் மருமகள்கள் ஒவ்வொருவரையும் வேண்டுகின்றாள் நம்பிராஜன் மனைவியான மோகினி. ஒவ்வொருத்திக்கு ஒவ்வொரு காரணம். மறுக்கின்றார்கள். 

ஒருத்திக்குக் குழந்தைக்குப் பால் கொடுக்கணும், ஒருத்திக்குக் குழந்தை பிறக்கப் போகின்றது. இன்னொருத்திக்குத் தலை நோவு. இப்படிச் சொல்ல, அங்கே மெல்ல, மெல்ல மாமியார், மருமகள் சண்டை உதயம் ஆகும்போல் சூழ்நிலை உருவெடுக்கின்றது. பார்த்தாள் வள்ளி, தானே தினைப்புலம் காவல்காப்பதாய்ச் சொல்லிக் கிளம்புகின்றாள். பதறுகின்றாள் மோகினி. ஆஹா, பொன்னைப் போல் போற்றி வளர்த்த பெண்ணாயிற்றே. எப்படி அனுப்புவது?? தயங்கினாள் மோகினி. அன்னையைத் தேற்றி விட்டுப் புறப்படுகின்றாள் வள்ளி. கூடவே துணைக்குத் தோழிப் பெண்களை அனுப்பினாள் மோகினி. தோழிகள் புடை சூழ தினைப்புலம் வந்து, அங்கே மரத்தின் உச்சியில் தங்குவதற்குக் கட்டி இருக்கும் இடத்தில் தங்கிக் கொண்டு, கையில் ஒரு குச்சியையும் வைத்துக் கொண்டு வரும் பட்சிகளை விரட்டுகின்றாள் வள்ளி.. 

ஆலோலம், ஆலோலம், ஆலோலம் 

என்று பாடுகின்றாள் வள்ளி. அவள் ஆலோல சப்தம் கேட்டுப் பட்சிகள் பறந்தனவா? அவளைத் தூக்கிச் செல்ல கந்த பட்சி பறந்து வந்ததா??

 நாட்டுப் பாடல்கள் உதவி= கலைமகள் தீபாவளி மலர், கல்கி தீபாவளி மலர்கள்.

23 comments:

  1. எப்படி கம்பைல் பண்ணி எழுதியிருக்கீங்க என்று வியக்கிறேன்.

    பழைய காலத்தில் தெருக்கூத்து பிறகு நாடகங்களுக்கு 'வள்ளி தெய்வானை' கதைதானே பிரதானமா இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. இதற்காகப் பல புத்தகங்களை அப்போது படித்திருந்தேன். இப்போப் புத்தகம் படிப்பதே குறைந்து விட்டது! :( முடியலை!

      Delete
  2. வள்ளிகணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும் உள்ளம் குளிருதடிகிளியே ஊனும் உருகுதடி என் அப்பா ரசித்து பாடுவார்

    ReplyDelete
  3. நல்ல விரிவான பதிவு...விவரங்கள் பலவற்றை அறிந்து கொண்டேன்...

    வடிவேலன் திருவடிகள் போற்றி.. போற்றி..

    ReplyDelete
  4. ஆஹா வள்ளியைச் சொல்லமாட்டேன் முதலில் தெய்வானையைத்தான் சொல்வேன் எனச் சொல்லிட்டீங்களே.. வள்ளி கோச்சுக்கப்போறா:))... உஅடனே அதிராவைப்போல நேர்த்தி வையுங்கோ.. வள்ளிக்கு வைர மூக்குத்தி போடுவேன் என:))...

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹாஹா, முந்தைய பதிவுகளை எல்லாம் நீங்க படிக்க மாட்டீங்க! அவையும் கந்தனைப் பற்றியவையே!

      Delete
  5. கோயிலில் கந்தசஷ்டி முடிஞ்சு சூரன்போருக்கு அடுத்தநாள் என நினைக்கிறேன் திருக்கல்யாண வைபவம் நடக்கும்.. 2,3 தடவைகள் ஊரில் இருந்தபோது பார்த்திருக்கிறேன் கீசாக்கா. அத்தோடு மேடை நாடகமாக “வள்ளி திருமணம்” பார்த்தேன் சூப்பராக இருந்தது.. அதில் ஒரு கட்டம், கிழவன் வேசம் போட்டுப் போய் வள்ளியைக் கேட்பார், அப்போ வயதாகிவிட்டது என வள்ளி சொல்லுவா.. அதுக்கு..
    “தாடி நரைச்சாலென்ன
    மீசை நரைச்சாலென்ன
    ஆசை நரைக்க..வில்லையடீஈஈஈஈ.. வள்ளீஈஈஈஈஈஈஈ”.. இப்படிப் பாட்டாகப் பாடுவார் முருகன் ஹா ஹா ஹா.

    ReplyDelete
    Replies
    1. நான் படித்த திருப்பாவை/திருவெம்பாவை வகுப்பில் வருடா வருடம் வள்ளி திருமணம் நாட்டிய நாடகம் போடுவாங்க! மதுரையிலே இருந்தவரைக்கும் பார்த்திருக்கேன்.

      Delete
  6. என்ன ஒரு கலெக்ஷன்?  எப்போது படித்தீர்களோ...  அருமையாய் நினைவில் வைத்துத் தருகிறீர்கள்.  வெவ்வேறு வெர்ஷன்களையும் தருகிறீர்கள்.

    "வள்ளிக்கணவன் பெயரைக் கொஞ்சம் சொல்லதா தம்பி..."  சீர்காழி குரலில் பாடல் மனதில் ஒலிக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஶ்ரீராம். இதை எழுதினது பனிரண்டு வருடங்கள் முன்னர். ஒரு மாமாங்கம்! :)

      Delete
  7. காலை வணக்கம் சகோதரி

    நல்ல விளக்கமான பதிவு. உங்கள் அருமையான எழுத்துக்களில் முருகனின் திருமணங்களின் அர்த்தம் நன்று. அறிந்த கதை என்றாலும், உங்களின் படிப்பறிவு அனுபவங்களினால், அவை சுவை கூடுகின்றன. நாட்டுப்புற பாடல்கள் அருமை. வள்ளி திருமணக் கதையையும் தொடர ஆவலுடன் காத்திருக்கிறேன். தெய்வானை வள்ளி சமேதராய் அருள் புரியும் ஸ்ரீ முருகப் பெருமான் அனைவரையும் காக்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா. தொடர்ந்து வந்து படித்துக் கருத்துக் கூறுவதற்கு மிக்க நன்றி.

      Delete
  8. படிக்கும்போது நிகழ்விடத்திற்கு சென்றதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.

    ReplyDelete
  9. மிக அருமையாக இருக்கிறது பதிவு.
    வள்ளி தினைப்புனத்தை காவல் காக்க வருவதும், கந்தன் அங்கு வருவதும் நாடகமாக ந்டித்து காட்டப்படுவது மிகவும் அதிகம்.

    கந்தசஷ்டி சமயம் வித்தம்மா அவர்கள் கந்தசஷ்டி சமயம் கோவையில் நடத்தி காட்டுவார்கள் . கந்தன் பிறப்பு, வளர்ப்பு, வள்ளித்திருமணம் எல்லாம் மிக அருமையாக நடித்து காட்டப்படும்.

    நாட்டுபுறபாடல் பகிர்வு நன்றாக இருக்கிறது.

    வள்ளி தினைப்புனைத்தை காக்க பரண்மேல் ஏறி கவன் கற்களை வீசி பறவைகளை , மிருகங்களையும் விரட்டியதே பாடலாக அழகாய் பாடப்படும்.

    அதை கேட்க வருகிறேன், மான் வந்ததா என்று கேட்டு வரும் கந்தனை காண வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு! மனம் வேதனையில் இருக்கு. நீங்கள் மனோபலத்துடன் மீண்டும் பதிவுகள் எழுத வரவேண்டும் என அந்த முருகனை மனமாரப் பிரார்த்திக்கிறேன்.

      Delete
  10. கீதாக்கா ஆமாம் விஜய் சிவா ரொம்ப நன்றாக உணர்வு பூர்வமாகப் பாடுவார். கேட்டிருக்கிறேன்.

    எங்கள் ஊர்பக்கம் திருவிழாவில் நாட்டிய நாடகத்தில் பெரும்பாலும் வள்ளி திருமணம் தான் இடம் பெரும். நன்றாக இருக்கும்.

    பாடல்களும் ரொம்ப சிறப்பாக இருக்கும்.

    சூப்பர் கீதாக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, விஜய் சிவாவின் பாரதி பாடல்களும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். வள்ளி திருமணம் கடைசியா மதுரையில் ஓர் கோயில் திருவிழாவின் போது தெருக்கூத்தாகப் பார்த்தது.

      Delete
  11. தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஒரு சில பார்டர் கிராமங்களில் வள்ளி முருகன் கல்யாணம் தெருக்கூத்து பாணியில் நடத்துவதுண்டு. பார்த்ததில்லை ஆனால் கேட்டதுண்டு. நிறைய தகவல்கள் அறிகிறேன் உங்கள் பதிவில்

    தொடர்கிறேன்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசிதரன்.

      Delete
  12. கீதாக்கா வள்ளி முருகன் திருமணம் எங்கள் ஊர்ப்பகுதியில் நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில் பார்வதிபுரம் கிராமம் தாண்டி தக்கலை போகும் வழியில் குமாரகோயில் என்று வரும். மலை வெள்ளிமலை. அங்குதான் நடந்தது என்று சொல்லுவதுண்டு. குமாரகோயில் அருமையான இயற்கைச் சூழலுக்கு நடுவில் அமைந்த கோயில்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நாங்க நாகர்கோயில் போயிருந்தப்போ இந்தக் கிராமம் பற்றி யாரும் சொல்லலை! இனி சமயம் வாய்க்குமானு தெரியலை. ரயில் பாதையில் வரும்போது பார்த்த மாதிரியும் நினைவில் இல்லை.

      Delete