ஆகவே மத்தியானம் சாப்பிட்டதும் இரண்டு பேருமே தபால் நிலையம் கிளம்பினோம். அவர் மட்டும் போவதாகத் தான் இருந்தது. ஆனால் சூழ்நிலை சரியில்லை என்பதால் இருவராக இருந்தால் ஒருவருக்கொருவர் ஆலோசனை கேட்டுக்கலாம். தபால் நிலையம் போய் அங்கே எங்கே பார்சல் வாங்குவாங்கனு தெரியாதேனு முழிச்சுட்டு இருக்கிறச்சே நாங்க போன ஆட்டோ ஓட்டுநரே என்ன வேலைனு கேட்டுட்டுக் கரெக்டாப் பார்சல் அனுப்பும் பகுதிக்கு நேரே ஆட்டோவை நிறுத்திட்டார். அங்கே வெளிநாட்டுப் பார்சல் வாங்கும் பகுதிக்குப் போய்க் கேட்டதற்கு உங்க பொருளைப் பக்கத்தில் உள்ள பாக்கிங் பகுதியில் பாக் செய்து வாருங்கள் என்று சொல்லி அனுப்பினார். என்ன ஆச்சரியம்! அங்கே மூட்டை மூட்டையாக வெளிநாட்டுக்குப் பார்சல் அனுப்பப் பைகளை வைத்துக் கொண்டு காத்திருந்தார்கள். அவர்களுக்கு முன்னே நாங்க கொண்டு போன சின்னப் பெட்டி ஒரு ஜுஜுபி! ஹிஹிஹி!
இரண்டு நபர்கள். ஒருவர் நாம் கொடுக்கும் பொருட்களை வாங்கி நல்ல தரமான அட்டைப்பெட்டியில் பொருட்களுக்குத் தகுந்தாற்போல் தேர்ந்தெடுத்து உள்ளே போட்டுச் சுற்றிலும் தெர்மோகோல் வைத்துப் பாதுகாப்புக் கொடுத்து அட்டைப்பெட்டிகளை நன்கு மூடி இந்தியத் தபால் துறையின் சீலோடு உள்ள டேப்பினால் ஒட்டி நன்கு கயிறு போட்டு நான்கு பக்கமும் கட்டித் தருகிறார். பக்கத்திலேயே கணினியில் உட்கார்ந்திருக்கும் இன்னொரு அதிகாரி, பார்சல் அனுப்புகிறவர்களிடம் அனுப்ப வேண்டிய விலாசம், அனுப்பும் நபர்களின் விலாசம் வாங்கிக் கணினியில் போட்டு அழகாகப் பிரின்ட் அவுட் எடுத்து அட்டைப்பெட்டியின் மேலே ஒட்டித் தருகிறார். மிகக் கச்சிதமான பாக்கிங்! நாம் அனுப்பும் அளவைப் பொறுத்தும் பாக்கிங் மெடரியலின் அளவைப் பொறுத்தும் பாக்கிங் சார்ஜ் வாங்குகின்றனர். நாங்க பார்த்தப்போ ஒருத்தர் பித்தளை அண்டாவையும் அதற்குள் துணிமணிகளையும் வைத்து, மொத்தம் 20 கிலோ வாஷிங்டனுக்கு அனுப்பக் கொண்டு வந்தார். அவருக்குப் பாக்கிங் சார்ஜ் மட்டும் 400 ரூ ஆயிற்று.
20 கிலோ எடைக்குக் குறைந்தது ஐந்தாயிரம் ஆகும் என்று அந்த அலுவலர் சொன்னார். இது தேவையா என்றும் கேட்டார். ஆனால் அவர் அனுப்பித் தான் ஆகணும் என்று சொல்லிட்டார். அங்கேயே விதம் விதமாக் கிடைக்குதே என நான் கூடச் சொன்னேன். அவர் கேட்கலை! இதுக்குள்ளே அந்த அதிகாரி பேசிக் கொண்டே எங்களோட சின்னப் பெட்டியை அழகாய்ப் பாக் செய்து அதன் மேல் விலாசங்களையும் ப்ரின்ட் அவுட் எடுத்து ஒட்டிக் கொடுத்தார். டிக்ளரேஷன் வேறே ஒட்டணுமாம். அது பணம் கட்டும் இடத்தில் கொடுப்பாங்க என்று சொல்லி விட்டு எங்களிடம் பாக்கிங் சார்ஜாக 25 ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டார். அவங்க இருவரும் மத்தியானச் சாப்பாடுக்குக் கூடப் போகவில்லை. ஏற்கெனவே இருந்தவர்களைத் தவிர்த்து இன்னும் நான்கு பேர் காத்துக் கொண்டு இருந்தார்கள். அனைவருக்கும் அந்த அதிகாரி தன் செலவில் சூப் வரவழைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். எங்களையும் கேட்டார். நாங்க அப்போத் தான் சாப்பிட்டுவிட்டுப் போயிருந்ததால் வேண்டாம்னு சொல்லிட்டோம்.
பின்னர் பணம் கட்டும் இடம் வந்து பாக்கிங்கை எடை போட்டு பதிவுத் தபாலில் அனுப்பச் செலுத்த வேண்டிய கட்டணமான 371 ரூபாயைக் கொடுத்து டிக்ளரேஷனில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு அவங்களுக்கு நன்றி சொல்லிவிட்டு வந்தோம். தபால் துறை நவீனமயமாக்கப்பட்டிருப்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம் தான் என்றாலும் இத்தகைய அரிய சேவையைக் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் செய்து வருவது மிகவும் பாராட்டுக்கு உரியது. சம்பளத்துக்காக வேலை செய்கிறோம் என்னும் நினைப்பில்லாமல் வரும் நபர்களிடம் அவங்க நஷ்டப்படாமல் இருக்கும்படியான ஆலோசனைகளையும் கூறி சேவையும் செய்வது மிக உயர்ந்த விஷயம். நாங்க எப்போவுமே கூரியரை விடத் தபால் சேவையையே நாடுவோம். குறித்த நேரத்தில் போயும் சேர்கிறது. இப்படியான நபர்களை நேரடியாகப் பாராட்டை உடனே தெரிவித்து அவர்களை மனம் மகிழச் செய்யலாம். தபால் துறை உண்மையிலேயே சேவை நோக்கோடு தான் செயல்படுகிறது என்பதைக் கிராமத் தபால் நிலையங்களில் அதிகம் காணலாம். குடும்ப விஷயங்களைக் கூடத் தபால் அதிகாரியிடம் பகிர்ந்து கொண்டு ஆலோசனைகள் கேட்கும் கிராமமக்கள் உண்டு.
அதோடு இல்லாமல் இத்தகையை அரிய சேவை திருச்சி போன்ற நகரங்களிலும் இருப்பது தெரியாமல் பலரும் சென்னை மாதிரி வசதி உண்டா என்கின்றனர். நாங்க இங்கே ஶ்ரீரங்கம் குடித்தனம் வந்தப்போ ஶ்ரீரங்கம் ஒரு கிராமம் அங்கெல்லாம் என்ன வசதி இருக்கும்னு எல்லோரும் கேலி பேசினாங்க. முக்கியமாய் மருத்துவ வசதி இல்லைனு சொல்வாங்க! ஆனால் இங்கேயும் ஃப்ரன்ட்லைன் மருத்துவமனையிலிருந்து அப்போலோ மருத்துவமனை வரை வந்திருக்கு! ஃப்ரன்ட்லைன் பல்லாண்டுகளாக இருந்து வருகிறது. ஏற்கெனவே காவேரி மருத்துவமனை பல சிறந்த முக்கியமான அறுவை சிகிச்சைகளுக்குப் பெயர் போனது. சென்னையில் இருக்கும் வாசன் கண் மருத்துவமனையும், அகர்வால் கண் மருத்துவமனையும் இங்கேயும் உள்ளது. என்றாலும் நாங்க போவது எங்க தெருவிலேயே இருக்கும் கண் மருத்துவரிடம் தான்! எல்லா முக்கிய நகரங்களும் மும்பை, கொல்கத்தா, தில்லி, ஹைதராபாத், பெண்களூரு, புவனேஸ்வர் போன்ற எல்லா நகரங்களும் இங்கிருந்து செல்லும்படி இணைக்கப்பட்டிருக்கிறது. சென்னை போய்க் கஷ்டப்பட வேண்டாம்.
ஆக முன்னேற்றம் என்பது இருக்கத் தான் செய்கிறது. நாம் தான் உணரவில்லை. சென்னையிலே மட்டும் எல்லா வசதிகளும் இருக்கிறாப்போல் நினைத்துக் கொண்டு அங்கேயே போய் மக்கள் கூட்டம் குவிந்து கொண்டு இருக்கிறது. நெரிசலில் அவதியும் படுகிறது. நெல்லைத் தமிழர் சென்னையில் ஆறில் ஒருத்தர் வெளியூர் என்று சொல்கிறார். அந்த அளவுக்குச்சென்னை நெரிசல் மிகுந்த நகராக மாறி விட்டது!















