எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 27, 2018

காவேரி ஓரம், கதை சொன்ன காலம்!


 இன்னிக்கு ஆடி வெள்ளிக்காக மாவிளக்குப் போடக் குலதெய்வம் கோயில் இருக்கும் பரவாக்கரைக்குப் போனோம். அங்கே மாவிளக்கைப்படம் எடுக்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க. பூசாரியிடம் கேட்டு அம்மனை மட்டும் கிளம்பும்போது படம் எடுத்தேன். மற்றப் படங்கள் கோயிலின் உட்பிரகாரத்தில் எடுக்கப்பட்டவை. கல்லணையிலிருந்து கிளம்பிக்கிழக்கு நோக்கிப் பாயும் காவிரியையும் ஓரளவுக்குப்படம் எடுத்திருக்கேன். காமிரா திடீர்னு திறக்கலை. ஆகவே அலைபேசி வழி தான்.குற்றம் குறை சொல்லும் தொ.நு.நி.க்களுக்கு எல்லாம் ஒரு பெரிய "ஓ" போட்டுடறேன்.
இது நம்ம நண்பரோட கோயில்.ஊருக்குள் நுழையும்போதே காணப்படுவார்.  முன்னெல்லாம் தினசரி குருக்கள் ஒருத்தர் வந்து சுத்தம் செய்து அபிஷேகம், அலங்காரம் செய்து நிவேதனமும் செய்வார். அவர் இப்போ இல்லை. ஆகவே என்னிக்கோ குருக்கள் வந்தால் தான் பிள்ளையாருக்குச் சாப்பாடு. நான் தவறாமல் என்னால் முடிந்த கொழுக்கட்டை கொண்டு போயிடுவேன். 

உள்ளே இருக்கார் நண்பர்


மாரியம்மன் கோயில் குளம்
 

அம்மன் அலங்காரத்தில்


கோயில் குளத்தில் காணப்படும் கொஞ்சம் நீர்


சென்ற முறை போயிட்டு வந்தப்போச் சொன்னேன். மாரியம்மன் கோயிலில் பிரகாரங்களுக்கு சிமென்ட் போட்டு ஷெட் ஒன்றும் போட்டிருக்காங்கனு! அந்த ஷெட் தான் இது. 

அறுவடை முடிந்த வயல்

இம்முறை கிளம்பும்போதே போக முடியுமா, முடியாத என்றெல்லாம் சந்தேகமாவே இருந்தது. காரணத்தைச் சொன்னால் உங்கள் எல்லோருக்குமே அலுப்பு வந்துடும்! இது என்ன எப்போப் பார்த்தாலும் புலம்பல்னு நினைப்பீங்க. எப்படியோ நேத்திக்கு எல்லாம் தயார் செய்துட்டு இன்னிக்குக் கிளம்பியே ஆகணும் என முடிவு எடுத்துட்டோம். இந்த வருஷம் ஆடி மாசத்தில் நல்ல நாட்களாக எந்த வெள்ளியும் அமையலை. இன்னிக்கும், அடுத்த வார வெள்ளியும் தவிர்த்து. இன்னிக்கு கிரகணம் என்பதால் கோயில் நடை எப்போச் சாத்துவாங்களோனு அதுவேறே கவலை. தொலைபேசிக் கேட்டுக் கொண்டோம்.

இங்கே என்னடான்னால் காலம்பர எழுந்திருக்கும்போதே தண்ணீர் வரலை! அந்த இரண்டு ப்ளாகிலும் நாங்க ரெண்டு பேர்தான் முழிச்சுட்டு இருந்தோம் போல! பாதுகாவலரிடம் இன்டெர்காம் மூலம் தொடர்பு கொண்டு சொன்னோம். பம்ப் சரியா வேலை செய்யலைனு சொல்லிட்டு இணைப்பை மாத்திக் கொடுத்தார். கொட்டியதோ பாருங்க தண்ணீர்! ஒரு மாதிரி நவாப்பழக் கலரில். சுமார் அரைமணி நேரம் எல்லாக் குழாய்களிலும் வண்ணத் தண்ணீர். எப்படியோ சமாளிச்சுக் காஃபி மட்டும் போட்டுக் குடிச்சுக் கையிலும் காஃபி, ஹார்லிக்ஸ் எடுத்துக் கொண்டோம். இம்முறை சமைத்து எடுத்துப் போகவில்லை. கும்பகோணத்தில் மங்களாம்பிகா ஓட்டலின் முன்னாள் அதிகார பூர்வ உரிமையாளர் வீட்டில் சாப்பாட்டுக்குச் சொல்லி இருந்தோம். இவங்க வெகு காலமாக மங்களாம்பிகா ஓட்டல் கும்பேஸ்வரர் கோயிலின் தென்பக்கம் ஓர் பழைய கட்டிடத்தில் நடத்தி வந்தனர். பெரியவர் இருந்தவரைக்கும் நல்லாவே ஓடியது. முக்கியமாய்ப் பசும்பால் காஃபி நல்லா இருக்கும். பெரியவர் காலம் ஆன பின்னர் அவர் மகனார் அதைத் தொடராமல் வேறு ஒருத்தருக்கு விற்று விட்டார். அவர் இதே பெயருடன் சில நாட்கள் அதே இடத்தில் நடத்திவிட்டுப் பின்னர் பத்தாண்டுகளுக்கு முன்னர் கும்பேஸ்வரர் சந்நிதி கோபுர வாயிலுக்கு அருகே உள்ள கடைத்தெருவில் மாற்றி விட்டார்கள். பெயர் என்னமோ மங்களாம்பிகா தான்! ஆனால் இப்போ நடத்தறவங்க வேறே! முன்னர் நடத்தியது வேறே.

மற்றவை தொடரும்!

44 comments:

 1. குரு பூர்ணிமா வாழ்த்துகள் கீதாமா. உங்க மனசில் இருக்கிற பகவான் ,உங்களை நடத்திச் செல்வார். உடம்பு முடியலைன்னு கேட்டாஆல் கவலையா இருக்கு.
  பார்த்துக்குங்கோம்மா.
  அந்த மாரியம்மன் காப்பாத்துவா. நம்ம பிள்ளையார் பாத்துப்பார்.
  மாமாவும் நீங்களும் பல்லாண்டு ,ஆச்சார்யா,பெரியவா கிருபைல நன்னா
  இருக்கனூம்.
  மாரியம்மன் குளத்தில் ஆடி மாசத்தில் நீர் இல்லாமல் இருக்கே
  அவளே நீர் வரவழைக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, அது என்னமோ தெரியலை. இந்தப் பெயின்டிங் பண்ணறாங்க இல்லையா இரண்டு மாசமா! அதிலேருந்து அது ஒத்துக்காமல் உடம்புப் படுத்தல்! குடியிருப்பு வளாகத்தின் வெளிப்புறச் சுவர்கள், ஜன்னல்கள், முக்கியக் கதவுகள், நடைபாதைகளின் பக்கவாட்டுச் சுவர்கள்னு எல்லா இடத்திலும் அடிச்சுட்டு இருக்காங்க. அது கொஞ்சம் கூட ஒத்துக்கலை. அந்த வாசனை சுவாசிச்சு சுவாசிச்சு மூக்கு வழியே வயிற்றைப் போய்த் தாக்கி இம்மாதமே இருமுறை வயிற்றுக் கோளாறு. அதன் காரணமாக வீசிங்! கடந்த மூன்று நாட்களாக விடாமல் வயிற்றுப் போக்கு! நேத்தி மத்தியானம் அங்கே போன இடத்தில் வெறும் மோர் சாதம் நாரத்தங்காயுடன் சாப்பிட்டேன். அதுக்கே 80 ரூபாய்! பின்னே! எனக்காகச் சமைத்து வைத்தது வீணாகி விட்டது அல்லவா? :))))

   Delete
  2. உண்மையிலேயே இவ்வளவு களேபரத்தில் மாரியம்மன் அருளால் தான் போயிட்டுத் திரும்ப முடிஞ்சது!

   Delete
 2. தொ.நு.நி - இதுக்கெல்லாம் பக்கத்துல டிக்‌ஷனரி போட்டுடுங்க. படிக்கறவங்கள்ல நிறைய பேருக்கு இது 'தொழில் நுட்ப நிபுணர்'னு தெரியுமான்னு தெரியலை

  ReplyDelete
  Replies
  1. நெ.த.????? Unknown????? ஏன் இப்படி ஒரு பெயர்? தொ.நு.நி. என்பது பழைய நேயர்களுக்கு நன்கு தெரியும். :)))) அதனால் அருஞ்சொற்பொருள் வேணாம். கீழே பாருங்க, அதிரடியே தெரிஞ்சு வைச்சிருக்காங்க! :))))

   Delete
 3. /அதிகார பூர்வ உரிமையாளர் வீட்டில் சாப்பாட்டுக்குச் சொல்லி இருந்தோம்// இப்போயும் அவங்க ஏதாவது ஹோட்டல் நடத்தறாங்களா இல்லை உங்களுக்குத் தெரிஞ்சவங்களா?

  தொடர் கதை (உணவே மருந்து, ஆன்மீகப் பயணம்) எழுதி எழுதி எல்லாமே 'தொடரும்'தானா?

  ReplyDelete
  Replies
  1. இப்போ அவங்க வீட்டளவில் சின்னதா மெஸ் நடத்தறாங்க. அங்கேயே உள்ள வேலைக்குச் செல்லும் குடும்பத்தோடு சேர்ந்து இல்லாதவர்களுக்காக! சுமார் ஐம்பது பேர் வரைக்கும் இருப்பாங்க போல. சாப்பாடு மட்டுமே. காலை ஆகாரம் எல்லாம் இல்லை. சாப்பாடு காலை ஒன்பது மணியில் இருந்து பதினோரு மணி வரை! வெளியூரிலிருந்து வருபவர்கள் ரொம்பத் தெரிந்தவர்களாக இருந்தால் மட்டுமே ஒத்துக் கொள்வாங்க. இல்லைனா இல்லை தான்! என் கணவரின் அத்தை அந்த ஊரில் இருந்ததாலும் அவர் அங்கேயே பாணாதுறைப் பள்ளியில் படிச்சதாலும் அவங்க அத்தை பிள்ளைகள் பெயர் சொன்னதும் புரிந்து கொண்டார். ஆனாலும் பதினோரு மணிக்கே வரணும்னு மாமியோட கண்டிஷன். அவசரம் அவசரமா எல்லாம் செய்தும் எங்களால் 11௩0க்கு முன் போக முடியலை. அதுக்குள்ளே தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன.

   Delete
  2. தொடர்ந்து உட்கார முடியலை நேத்து. அதோடப் பதிவும் ரொம்பப் பெரிசா இருக்கும். அதான் தொடரும்!

   Delete
 4. ஆடி வெள்ளிக்காக ஸ்பெஷலா? ஆயிரம் தடைகள் வந்தாலும் அசராமல் கோவில்!

  ReplyDelete
  Replies
  1. எப்போவுமே ஆடி வெள்ளி, தை வெள்ளியில் நல்ல நாள் பார்த்து மாவிளக்குப் போடுவது இரு வீட்டார் வழக்கம். அப்பா வீட்டில் வீட்டிலேயே போடுவார்கள். இங்கே மாமியார் வீட்டுப் பழக்கம் கோயிலில் போடுவது! அதைத் தவிரக் குழந்தை பிறந்து முதல் முதல் கோயிலுக்குப் போகும்போதும், மற்றச் சில பிரார்த்தனைகளிலும் மாவிளக்குப் போடுவோம்.

   Delete
 5. மங்களாம்பிகாளே துணை.
  தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க கில்லர்ஜி!

   Delete
 6. ///காவேரி ஓரம், கதை சொன்ன காலம்!///

  ஆங்ங்ங் கீசாக்கா கையும் களவுமா பிடிபட்டுவிட்டா அதிராவிடம்.. நான் காவேரி என்றேன் இல்ல அது காவிரி என்றீங்க.. இப்போ பாருங்கோ நீங்களே தலைப்பில காவேரி என்றிட்ட்டீங்க.. பூசோ கொக்கோ:)) காவேரியில கீசாக்கா வைத்தள்ளப்போவது ... வாணாம் மீ ஒண்ணும் ஜொள்ள மாட்டேன்ன் ஜாமீ:))

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரடி, அது ஜினிமாப் பாட்டு! அதிலே காவேரி ஓரம்னு தான் வரும். :)))) நதியைக் குறிக்கும்போது காவிரினு தான் சொல்லணுமாக்கும்.

   Delete
  2. காவிரி இல்லை காவேரி் என்பதற்குத் தானே நான் சிலப்பதிகாரப் பாடலை முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் மேற்கோள் காட்டினேன். அதிரடி அடித்துச் சொல்வது சரி.

   Delete
  3. //Rajesh Garga காவிரிதான். காவேரி என்பது பேச்சுவழக்கில் சிதைந்து வந்தது.//

   ஜேகே அண்ணாவின் கமென்டைப் பார்க்கச் சொல்லி இ.கொ.விடம் சொன்னதுக்கு அவர் கொடுத்த பதில் இது. இது குறித்து விரிவாகத் தெரியும் எனினும் பின்னர் சொல்கிறேன். இ.கொ.வையே இங்கே வந்து பதில் சொல்லச் சொல்லி இருக்கேன். அவர் வராரா என்னனு தெரியலை!

   Delete
  4. இன்று காவிரி காவேரி இரண்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். காவிரி காவேரி என இரு விதமாகவும் பழங்காலத்தில் இருந்தே புழங்கி இருக்கிறார்கள். சிலப்பதிகாரப் பாடலை மேற்கோள் காட்டியதாகச் சொல்லி இருக்கீங்க. அதுல காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேருவலன் திரிதலான் என புகார்க் காண்டத்தில் வரும், ஆனால் அதே சிலம்பில் அதே புகார்க்காண்டத்தில் நடந்தாய் வாழி காவேரி அப்படின்னு வருது.

   கா என்றால் வனம். வனங்களின் நடுவே விரிந்து ஓடுவதால் கா+விரி = காவிரி. ஆனால் அதைச் சொல்லும் பொழுது நெடிலாக நீட்டிச் சொல்வது இசைக்கு ஏற்றது என்பதால் தேவையான பொழுது அதனை நீட்டிக் காவேரி என்று சொல்வது சங்க காலத்தில் இருந்தே வழக்கம். அதனால் காவிரி காவேரி இரண்டும் ஏற்புடையதே.

   Delete
  5. http://sivamgss.blogspot.com/2013/07/blog-post_28.html// கொத்தனார் 2013 இல் சொன்னது இது! நாங்களும் போட்டு வாங்குவோமில்ல! இதுக்கு முன்னாடி சொன்னதும் இருக்கு! அதையும் தேடி எடுக்கிறேன். :))))))))

   Delete
  6. //Rajesh Garga கா+விரி =காவிரிதான் ஒரிஜினல்.ஆனால் காவேரியைத் தப்புன்னு சொல்லாதேஎன குருநாதர் சொல்லியதால் அதையும் சொல்லிட்டேன்.// கொத்தனாரோட சமாளிப்ஸ்ஸ்ஸ்! :))))))

   Delete
  7. உரைநடையில் காவிரி என்று எழுதுவதே அழகு. இசைக்கு தேவை எனும் பொழுது, மரபுக்கவிதைக்குத் தேவை எனும் பொழுது காவேரி என்று எழுதலாம். காவேரி என்பது காவிரி என்பதன் சிதைவே. கா+விரி = காவிரி என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது. ஆனா செய்யாதே என்றால் முதலில் அதைப் போய் செஞ்சுட்டு வரவங்க நீங்க என்பதால்... :))

   Delete
  8. //கா+விரி = காவிரி என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது. ஆனா செய்யாதே என்றால் முதலில் அதைப் போய் செஞ்சுட்டு வரவங்க நீங்க என்பதால்... :)) // அதானே, இதுக்குப் பேரு தான் "வேலிலே போற ஓணானை!" கதைனு சொல்லுவாங்க!வேணும், எனக்கு நல்லா வேணும்! வேணுங்கட்டைக்கு வேணும், வெங்கலங்கட்டைக்கு வேணும்! :)))))))))

   Delete
 7. //அங்கே மாவிளக்கைப்படம் எடுக்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க.//

  ஹையோ கடவுளே.. ஏன் கீசாக்காவுக்கு மட்டும் இபூடி ஆவுது?:) கோயிலில் ஆட்கள் குறைவோ?.. இப்போதெல்லாம் ஃபோன் பேசுவதுபோலவே படம் எடுத்திடலாமே.. அவர்கள் அவதானிக்கும் அளவுக்கா பெரிய கமெராமான் போல குனிஞ்சு நிமிர்ந்து செட் பண்ணியிருப்பீங்க கமெராவை:)) அதைப் பார்த்திட்டு பயத்தில ஓடி வந்து தடுத்திருப்பினம்:)) ஹையோ நேக்கு எதுக்கு கோயில் வம்ஸ்ஸ்:)) ஹா ஹா ஹா:).

  ReplyDelete
  Replies
  1. புனிதம் என்பதால் தடுக்கிறாங்க அதிரடி, வீட்டில் மாவிளக்குப் போட்டால் எடுக்கலாம். அம்மனை எடுக்கவே ரொம்ப யோசித்தார். பின்னர் அரைமனசாக வெளியே இருந்து எடுங்க. உள்ளே போகக் கூடாது நு சொல்லிட்டு எடுக்கச் சொன்னார். கோயிலில் நான் அலைபேசியில் பேசுவதை எல்லாம் வைச்சுக்கறதே இல்லை. பல சமயங்களில் கொண்டு போகும் ஸ்லோக புத்தகங்களைக் கூடப் படிக்க முடியறதில்லை.

   Delete
 8. ///காமிரா திடீர்னு திறக்கலை. ஆகவே அலைபேசி வழி தான்.குற்றம் குறை சொல்லும் தொ.நு.நி.க்களுக்கு எல்லாம் ஒரு பெரிய "ஓ" போட்டுடறேன்.///

  ஹா ஹா ஹா சே..சே.. கிசாக்காவால நிம்மதியா ஒரு படம் கூட எடுக்க முடியாமல் இருக்கே இந்த தொ நு நி களால:) ஹா ஹா ஹா.

  ReplyDelete
  Replies
  1. ஆமா, இல்ல, ஆளாளுக்கு இந்தத் தொ.நு.நி.க்கள் படுத்தும் பாடு இருக்கே! :)))))

   Delete
 9. கீசாக்கா நீங்க போகும் கோயில்களெல்லாம் ஏன் கைவிடப்பட்ட கோயில்களாகவே இருக்கே.. மிக ஊருக்குள் இருக்கும் கோயில்களோ? புனரைப்பு இல்லாதவையோ?.. அல்லது குலதெய்வம் கோயில்கள் இப்படித்தான் இருக்குமோ?.

  ///மாரியம்மன் கோயில் குளம்//

  ஓ காவிரி முட்டி விட்ட்டது ஆனா குளம் வறண்டிருக்கே..

  ReplyDelete
  Replies
  1. அதிரடி, நான் போகும் கோயில்கள்னு இல்லை. தஞ்சை, கும்பகோணம், மாயவரம் பக்கம் பல கோயில்களின் நிலை இப்படித் தான். இதே ஊரில் இருக்கும் சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும் கூடப் பாழடைந்து தான் இருந்தன. சிவன் கோயில் தொண்ணூறுகளில் எப்படி எப்படியோ முயற்சி எடுத்துப் புனர் உத்தாரணம் செய்யப்பட்டு இப்போ மறுபடி பாழடைய ஆரம்பிச்சிருக்கு. இன்னும் சொல்லப் போனால் அரசு நெல் சேகரிப்பு நிலையங்களாகப் பயன்படுத்திட்டு இருக்காங்க. ஊர்க்காரங்க யாரும் இதை எதிர்க்கவும் இல்லை. கோயிலுக்கென ஏதும் செய்வதும் இல்லை. எங்களைப் போல் பழைய ஆட்கள் சிலர் தான் பெருமளவில் முயன்று வரோம். அப்படித் தான் பெருமாள் கோயில் (எங்க மாமனார் குடும்பம் பரம்பரை அறங்காவலர்கள்) பெரு முயற்சி எடுத்து 2011 ஆம் ஆண்டு சுமார் 40 வருஷம் கழிச்சுக் கும்பாபிஷேகம் நடத்தி நாங்களே பட்டாசாரியார் போட்டு, அவருக்குச் சம்பளமும் நாங்களே கொடுத்து எல்லாம் செய்து வரோம். இருந்தாலும் சிவன் கோயிலுக்காகவும் செய்யணும். பார்ப்போம்.

   Delete
  2. குலதெய்வம் கோயில் நல்லாவே இருக்கு. மோசமான நிலையில் இருப்பது பிள்ளையார் தான். ஊருக்கு வெளியே இருப்பதால் அது பல தீயவர்களின் சொர்க்கமாக ஆகி இருக்கிறது. பலருக்கும் அது காமக்களியாட்டங்களுக்கும், மற்றும் குடிகாரர்களுக்கும் புகலிடம்! அங்கே காணப்படும் குப்பைகளை நாங்க ஒவ்வொரு முறை போகும்போதும் சுட்டிக் காட்டி சுத்தம் செய்யப் பணமும் கொடுத்து வருவோம். கொஞ்ச நாட்கள் தான்! மறுபடி பழைய நிலைமைக்கு ஆயிடும். ஒவ்வொரு வருஷமும் பிள்ளையார் சதுர்த்திக்கு எங்க பெண் அவங்க செலவில் எல்லா ஏற்பாடுகளும் செய்து பிள்ளையார் புறப்பாடும் செய்யப் பணம் அனுப்புவாள். அன்னிக்கு ஒரு நாள் கோயில் கொஞ்சம் சுத்தமாக இருக்கும்.

   Delete
 10. //காரணத்தைச் சொன்னால் உங்கள் எல்லோருக்குமே அலுப்பு வந்துடும்! இது என்ன எப்போப் பார்த்தாலும் புலம்பல்னு நினைப்பீங்க. //

  இருந்தாலும் பறவாயில்லை ஜொள்ளுங்கோ கீசாக்கா:) எங்களிடம் சொல்லாமல் படுத்தால் உங்களுக்கு நித்திரை வராதே ஹா ஹா ஹா.. எங்களுகும் பழகிடுச்சி:)

  // ஒரு மாதிரி நவாப்பழக் கலரில். சுமார் அரைமணி நேரம் எல்லாக் குழாய்களிலும் வண்ணத் தண்ணீர்.//

  ஹா ஹா ஹா அது நவாப்பயம் அல்ல:)) நாவப்பயம்:)) ஹா ஹா ஹா சரி சரி முறைக்காதீங்க:)) ஒருநாள் அதிரா வராமல் நிம்மதியா இருந்திருப்பீங்க எல்லோரும்:) இப்போ வந்திட்டனெல்லோ:))

  ReplyDelete
  Replies
  1. அதிரடி, மதுரைப்பக்கம் பேச்சு வழக்கில் அது நவாப்பழம் தான்! நாவல் பழம்னு எல்லாம் ஜொள்ளறதில்லை! அப்புறமா என்னோட உடம்பைப் பத்தி மேலே வல்லி கிட்டே சொல்லி இருக்கேன் பாருங்க! இன்னிக்குக்கொஞ்சம் பரவாயில்லை.

   Delete
  2. அதிரடி கீசாக்கா பிடிக்கிற முயலுக்கெல்லாம் மூன்று கால்தான். அதனாலெ ஆர்க்யூ பண்ணாதீங்கோ.வழுக்கி ஜேம்ஸில விழுந்துடுவீங்கோ.

   Delete
  3. அது என்னமோ தெரியலை! நான் ஆதாரபூர்வமாக உண்டு என்று சொல்வதைப் பலரும் இப்படித் தான் பிடிவாதம்னு நினைச்சுக்கறாங்க. அப்புறமா உண்மை தெரிஞ்சாலும், நீ சொன்னது சரியா இருக்குனு சொல்லுவதில்லை! என் நேரமா? முகராசியா? அல்லது எனக்குத் தான் சொல்லத் தெரியலையா? இது தான் உண்மைனு தெரிஞ்சதைத் தான் உண்மைனு சொல்லுவேன். உண்மை இல்லைனா இருக்கலாம் என்றே சொல்லுவேன். ஆனாலும் பிடிவாதம்னு ஒரு பெயர் வாங்கி இருக்கேன்! :)))))))))))

   Delete
 11. தொடருங்கள்...
  படங்களுக்கு என்ன குறை
  நன்றாகதான் வந்துள்ளது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அஜய் சுனில்கர் ஜோசஃப். ஊக்கப்படுத்தும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

   Delete
 12. எதுனால என்னோட கமென்ட் அன்நோன் என்று வந்திருக்கு தெரியலை. நேற்று கூகுள் மெயில் ஐடி புதுசா create பண்ணினேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. ஆனாலும் நீங்க தான் என்பதைப் புரிந்து கொண்டேன். :))))

   Delete
 13. அம்மனை எடுக்க விட்டவர்கள் மாவிளைக்கை எடுக்க கூடாது ஏன் சொன்னார்கள் என்று தெரியவில்லை.
  படங்களுடன் பதிவு, தலைப்பில் சினிமா பாடல் அசத்துங்க!
  நன்றாக இருக்கிரது படங்கள்.
  உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. முன்னால் எல்லாம் எடுத்திருக்கேன் கோமதி. இப்போ என்னமோ 2,3 முறையாக வேண்டாம் என்கின்றனர்.

   Delete
 14. அம்மன் படம் அழகு. மாவிளக்கு படம் எடுக்கக் கூடாது - சில இடங்களில் இப்படி மறுப்பதுண்டு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், நன்றி.

   Delete
 15. எப்படியோ தடங்கல் வந்தாலும் அதையும் தகர்த்து மாவிளக்கு ஏற்றிவிட்டு வந்துவிட்டீர்கள். எல்லாம் அம்பாளின் அருள்! படங்கள் அழகா இருக்குக்கா...

  குளம் ஏன் வறண்டு இருக்கு. காவிரியில் நீர் நன்றாகப் பாய்கிறதே. ஆறு பக்கம் இல்லையா? இல்லை அரிசிலாரில் தண்ணீர் இன்னும் வராததால் குளம் தண்ணீர் இல்லையோ...

  கோயில் அழகா இருக்கு அம்மன் செம அழகு!

  எங்கள் வீட்டிலும் தண்ணீர் நாவப்பழக் கலரில்தான் வரும் பல சமயங்களில் முதலில். அதனாலேயே எங்கள் வீட்டு பைப்புகள் எல்லாம் வாயைக் கட்டிக் கொண்டுதான் இருக்கும். நல்ல திக் பனியன் துணி கொண்டு கட்டி...ஃபில்டர் அதுதான். வேறு வழி.? தண்ணீ இல்லாதப்ப அந்தத் தண்ணிய வேஸ்ட் பண்ணலாமோ நு...

  இப்படி வருவதால் 3 அல்லது 4 மாதத்திற்கு ஒரு முறை எல்லா குழாய்களும் அடைத்துக் கொண்டு பைப்பு ஹஹஹஹஹனு மூச்சு விடும்!! ஹா ஹா ஹா ஹா...எல்லா குழாய்களையும் கழட்டி கறுப்பு மண் துகள்களை அகற்றணும் பளம்பர் வைத்து...அதனாலேயே வாட்டர் ஃபில்டரை மட்டும் ஆஃப் செய்து வைத்து விட்டு தண்ணீர் க்ளியரா வரும் போது ஆன் செய்துவிடுவது வழக்கம். இல்லைனா அந்த ஃபில்டர் மண் அடைந்து ஃபில்டெரில் தண்ணீர் வராதே...செலவு வைக்கும்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி/கீதா, ரொம்ப பிசியா இருக்கீங்க போல! அரிசிலாற்றில் இன்னும் தண்ணீர் வரலை. அங்கே வந்தால் தான் இந்தக் குளத்தில் கொஞ்சமானும் தண்ணீர் வரும். பூசாரியே குளத்தில் இறங்கிக் கொஞ்சம் கொஞ்சமாகச் சுத்தம் செய்து வருகிறார். ஊர்க்காரர்கள் யாரும் இப்படிக் கோயிலையும், குளங்களையும்,பிள்ளையார் கோயிலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள முயல்வதில்லை. நாங்க போகும்போது எங்களைச் செய்யச் சொல்லிப் பணம் கேட்பாங்க! பணம் கொடுத்துட்டு வந்தால் வேலை நடப்பதில்லை. :( பணத்தை வாங்கிக் கொண்டு டாஸ்மாக்குக்கு நடையைக் கட்டுவாங்க! :(

   Delete
  2. எங்க வளாகத்திலே ஆட்டோ பம்பிங். நீர்த்தொட்டியைச் சுத்தம் செய்யும்போது மட்டுமே கொஞ்சம் சிரமம் ஏற்படும். ஆனால் முன்னாடி அறிவிப்பு வந்துடும். இப்போ பம்பிங் செய்யும் கபாசிடர் வீணாகிப் போனதால் பிரச்னை! சரி பண்ணிட்டாங்க.

   Delete
 16. அருமையான அலசல்
  சிறந்த பதிவிது

  ReplyDelete