எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, October 21, 2017

அதிராவின் சிந்தனையும் என் பதிலும்!

//எதுவும் சரியாப் புரியல்ல ... கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் எனத்தான் படிச்சோம்.. //

//அதனால கோயிலுக்குள் போய் விக்கிரங்களுக்கு அருகில் நின்று சேவை செய்தால் மட்டுமே கடவுளை நெருங்கலாம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...//

//அன்பு, கருணை... அடுத்தவர்கள் மேல் காட்டும் பாசம், நன்னடத்தை, அடுத்தவர் மனம் புண்படாமல் பேசுவது, மனச்சாட்சிக்குப் பயந்து வாழ்வது, முடிந்தவரை நல்ல விசயங்கள் செய்வது, பிறரைத் தூற்றாமை.... இப்படிச் செயல்கள் மூலம்தான் கடவுளை நெருங்க முடியும் அல்லது இப்படி இருப்போர் கடவுளாகத் தெரிவார்கள் என்பதே என் கருத்து.//

இங்கே

மேலே உள்ளவை தில்லையகத்து துளசிதரனின் பதிவில் அதிரா போட்டிருக்கும் கருத்து.  உயர்ந்த கருத்து என்றாலும் அதன் சாராம்சம் கடவுளை நெருங்குவதற்காகவே கோயில்களில் சேவை என்னும் பொருளில் வருகிறது. அப்படி இல்லை. அவங்க கடவுளைக் கண்டு கொண்டதாலேயே கோயில்களில் உள்ள விக்ரஹங்களை மனப்பூர்வமாகக் கடவுளின் உருவாக ஏற்றுக்கொண்டு அபிஷேஹ ஆராதனைகள், அலங்காரங்கள் செய்து அவர்களும் ஆனந்தம் அடைந்து நம்மையும் மகிழச் செய்கின்றனர். ஆனால் அதிரா அவர்கள் தன்னுள் "கடவுள்" இருப்பதைப் புரிந்து வைத்திருக்கிறார். அதனாலேயே அவருக்குக் கோயில் கட்டி விக்ரஹம் பிரதிஷ்டை செய்து அதை வழிபட ஒரு பூசாரி அல்லது அர்ச்சகர் ஏற்பாடு செய்வது குறித்துப் புரியவில்லை.

ஆனால் அவங்க சொல்வது மிகப் பெரிய விஷயம். அவரால் ஆழமாகச் சிந்திக்க முடிகிறது! எல்லோராலும் இயலுமா? சாமானியரால் புரிஞ்சுக்க முடியாத, ஏற்க முடியாத ஒரு விஷயம். கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்! உண்மை தான்! என்னைப் போன்ற பாமரர்கள்  அந்தத் தூணையும்   கடவுளாக நினைத்துக் கும்பிட ஆரம்பித்தால்? அதை விடுங்க! உண்மையில் கோயிலுக்குள்ளே போய் விக்ரஹங்களை ஆராதித்துச் சேவை செய்பவர் கடவுளை நெருங்கலாம் என்னும் காரணத்துக்காகவா போகிறார்? கடவுள் தான் நம்முள்ளே இருக்காரே! அப்புறமா எதுக்குப் போகணும்? ஏன் ஆராதிக்கணும்? கடவுள் தனி, நாம் தனி என நினைப்பவரா அவரும்? அப்படி எனில் அவரும் நம்மைப் போன்ற பாமரர் தானா?

கடவுளை நெருங்குவதற்காக அவர் வழிபாடுகள் செய்யப் போவதெனில் ஒவ்வொரு பக்தனும் கர்பகிரஹத்தின் உள்ளே போய் அல்லவா வழிபட்டு வரவேண்டும்? அப்படியா செய்கிறோம்? இல்லை! நாம் வெளியே நிற்கிறோம். கடவுளின் அருகே அல்லது விக்ரஹங்களின் அருகே செல்வது வேறு ஒருவர்! அவர் மட்டும் ஏன் போகணும்? அதான் அதிராவின் கேள்விக்குப் பொருள் என நினைக்கிறேன். அவர் தான் மட்டும் அருகே போய் வழிபாடு செய்து கடவுளின் அருகே போய்விட்டார் எனில் எல்லோருமே அதுக்குத் தான் முயல்வார்கள்.

அப்படி எல்லாம் இல்லை. கடவுள் தூணிலும் இருக்கிறான். துரும்பிலும் இருக்கிறான். உங்களுள்ளும், என்னுள்ளும் இன்னும் எல்லோருள்ளும் இருக்கிறான். கடவுள் நம்முள்ளே இருக்கிறான் என்பதை நம்மால் உணர முடியுமா? சரி, நமக்கு அது தெரியுது! ஆனால் பாமரர்களுக்கு? அவங்க புரிஞ்சுப்பாங்களா? கடவுளுக்கு என ஓர் உருவம் கொடுத்து, சிற்பமாகச் செய்து பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் செய்தால் தான் அவங்களுக்குத் திருப்தி!   இன்னும் சிவவாக்கியர் சொன்னாப்போல

நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே;
சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா!
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!
நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!

என்பது போல அதைக் கல் என நினைத்தால் கல் தான்; விக்ரஹம் கடவுள் என நினைத்தால் கடவுள். சிவவாக்கியரைப் போல் நாம் நம்முள்ளே நாதனைக் காண்கிறோமா? நமக்கு என ஒரு வெளிப்பாடு தேவைப்படுகிறது. ஒரு சார்புத் தன்மை தேவை! இது தான் நம் தெய்வம் என ஏதேனும் ஒன்றை பற்றிக்கொள்ள மனம் தேடுகிறது. பற்றுக்கோட்டைத் தேடி அலையும் இப்படியான பாமரர்களுக்குத் தான் கோயில், விக்ரஹங்கள் எல்லாம். அங்கே அந்த விக்ரஹங்களுக்கு உயிர் கொடுத்து, அலங்காரம் செய்வித்து, புனிதத்தன்மையைக் கொண்டு வந்து நமக்காகப் பிரார்த்தனைகள் செய்வதற்காகவும், நம்முடைய நன்மைகளைக் கருதி வேண்டிக் கொள்வதற்காகவும் தான் அங்கே அர்ச்சகர். அவர் தனக்காக எதுவும் செய்வதில்லை! தனக்காக எதுவும் பிரார்த்தித்துக் கொள்ளுவதில்லை! நம் போன்ற மூட பக்தர்களுக்காகவே அங்கே சேவை செய்ய வேண்டிக்காத்திருக்கிறார்.

நமக்குக் கோயிலுக்குச் செல்வதும் அங்கே போய் வேண்டிக் கொள்வதும் அப்போது தான் கடவுள் அருள் புரிவார் என நம்புவதும் தான் வாழ்க்கை! நம்பிக்கை தான் வாழ்க்கை! எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாத அறிய முடியாத மஹாசக்தியை உணரத் தான் முடியும்! அதன் இருப்பை எவ்வகையில் வெளிப்படுத்துவது? அதற்குத் தான் இவ்வகை வழி! இதன் மூலம் ஏதும் அறியாப் பாமரர்களுக்கு ஓர் வடிகால் கிடைக்கிறது. மனதில் நம்பிக்கை பிறக்கிறது. ஆகவே நம்மளவில் இந்தக் கோயில்களுக்கு எல்லாம் செல்வதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் செல்கிறவர்களின் நம்பிக்கையை நாம் தகர்க்க முடியாது!

கோயில்கள் ஒவ்வொன்றும் யோக முறைப்படி கட்டியவை! அந்தக் காலத்துக் கோயில்களைச் சொல்கிறேன். நம் உடம்பையே ஓர் கோயிலாகச் சொல்லுவார்கள்.
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற்பிரானுக்கு வாய் கோபுர வாயில்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளாமணி விளக்கே!" என்பது திருமூலர் வாக்கு! அதோடு இல்லை. இன்னும் சொல்கிறார்.

"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை நான் இருந்து ஓம்புகின்றேன்!" என்கிறார். நம் உடலே ஓர் கோயில் என்றும் சொல்கிறார். ஆகையால் உடம்பைப் பேண வேண்டிய அவசியத்தையும் கூறுகின்றார்.

உடம்பே ஆலயம் க்கான பட முடிவு
ஆகவே கோயில்கள் எல்லாம் வெறும் கட்டடங்கள் அல்ல. நாம் நம்முள்ளே காண வேண்டிய இறைவனைக் கோயிலில் முதலில் காண்பது தான் நம்முடைய ஞானம் ஆரம்பிக்கிறது என்பதன் அடிப்படை! இதிலிருந்து தான் படிப்படியாக நாம் நம்முள்ளே இருக்கும் சீவன் தான் சிவன் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அங்கே வழிபாடு நடத்துகிறவர்களும் இதைப் புரிந்து கொண்டு தான் செயலாற்ற வேண்டும். இந்தக் காலத்தில் இது எத்தனை பேரால் முடிகிறது என்பது கேள்விக்குறியே!  கோயில்களும் தேவை! அதில் வழிபாடுகள் நடத்த ஆட்களும் தேவை! ஆனால் அவர்கள் உண்மையாக இறை பக்தியுடன் சித்தத்தைச் சிவத்திலே ஒடுக்கி வழிபாடுகள் செய்பவராக இருக்க வேண்டும்.

இப்போக் கேரளத்திலே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அர்ச்சகர்களிலே ஒருவரான யது கிருஷ்ணன் என்பவர் தன் எட்டாம் வயதிலிருந்தே இறை பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். அவர் சம்ஸ்கிருதத்தில் முதுகலைப்படிப்புப் படித்ததோடு அநிருத தந்திரி என்பவரிடம் வேதம் பயின்றிருக்கிறார். இவர் கல்லூரிப்படிப்பையும் முடித்து மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்விலும் தேர்வாகி இருந்திருக்கிறார். எனினும் பெற்றோரும் இவரும் இந்த அர்ச்சகர் வேலையையே தேர்ந்தெடுத்திருக்கின்றனர். குருநாதர் மூலம் பெற்ற மந்திர உபதேசத்தை 50 லட்சம் முறை உச்சரித்து குருவின் கட்டளையை நிறைவேற்றி இருக்கிறார்.

இங்கே தமிழ்நாட்டில் எல்லா ஜாதியும் அர்ச்சகர் ஆகணும்னு சொல்றாங்க தான். ஆனால் சம்ஸ்கிருதம் கூடாது, ஹிந்தி கூடாது என்கிறார்கள். வேதப்படிப்பையும் கேலி செய்கின்றனர்.ஆகமம் கற்க சம்ஸ்கிருத அறிவு கொஞ்சமானும் தேவை. என்ன தான் மொழிபெயர்ப்புக்களில் கிடைத்தாலும் மூலத்தில் படிப்பது போல் வராது. ஆனால் இங்கே அது கூடாது என்கின்றனர். ஒரு பக்கம் சம்ஸ்கிருதப் படிப்பை பிராமணர்கள் மற்றவர்களுக்கு அளிக்க மறுத்தார்கள் என்று சொல்கின்றனர். இன்னொரு பக்கம் சம்ஸ்கிருதம் படிக்க மறுப்பவர்கள். சமஸ்கிருதம் என்னும் மொழிப்பாடமே தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது என்று எதிர்ப்போர்! ஆக எல்லா ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது என்பது எப்படி எனப் புரியவில்லை. ஆகம முறைப்படியான கோயில்களில் அந்த அந்த ஆகமப்படியே வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான உச்ச நீதிமன்ற ஆணை உள்ளது. இவை எல்லாவற்றையும் தாண்டி இதெல்லாம் நடக்க வேண்டும். நடைமுறைக்கு சாத்தியமா என்பது புரியவில்லை.    இவை எல்லாம் தமிழ்நாட்டில் நடப்பதற்கான சாத்தியங்களே கண்களில் படவில்லை! அப்படி நடந்தால் அனைவருக்கும் நல்லதே! யாரும் எதிர்க்கப் போவதில்லை. நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம். எல்லோருடைய மனங்களும் மாறப் பிரார்த்திப்போம். யதுகிருஷ்ணனைப் போன்ற இளைஞர்கள் இங்கே தமிழ்நாட்டில் மட்டும் இருக்க மாட்டார்களா என்ன? நம்பிக்கையுடன் தேடுவோம்.

அடுத்து அதிரா கடைசிப் பத்தியில் சொல்லி இருக்கிறாப்போல் அன்பு, பண்பு, கனிவான பேச்சு, நன்னடத்தை, ஒழுக்கம், பிறர் மனம் புண்படாமல் பேசுவது எல்லாமும் வேண்டும் தான்! அதிலும் அர்ச்சகர்களுக்குக் கட்டாயம் தேவைதான்! ஆனால் எல்லோரிடமும் இந்தக் குணங்கள் இருப்பது என்பது சாத்தியம் அல்ல என்றே நினைக்கிறேன்.  அர்ச்சகர்கள் பொதுவாகக் கோபம் கொள்வதில்லை என்பதைப் பார்த்திருந்தாலும் சிலர் கொஞ்சம் இல்லை நிறையவே கோபக் காரர்களாக இருக்கின்றனர். அப்படியும் பார்க்கத் தான் செய்கிறோம். ஆனால் கோயிலில் வழிபாடுகள் செய்கிறவர்கள் அனைவருமே கெட்டவர்கள் என்னும் எண்ணமும் கொள்ளக் கூடாது! எல்லோரிடமும் இரண்டும் கலந்தே இருக்கும்.   எல்லாவற்றுக்குமே இரண்டு பக்கம் உள்ளது. 

86 comments:

  1. விளக்கமான பதிவு ...அங்கும் பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் இங்கும் தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
    Replies
    1. பார்த்தீங்களோ பார்த்தீங்களோ.. கீதாக்கா... நான் ஜொன்னனே:).. எனக்கு எடிரி வெளில இல்ல... வீட்டுக்குள்ளயேதாஆஆன்....

      அதிராவுக்கு நல்ல திட்டு விழுந்திருக்குது... இதை வெடி கொழுத்திக் கொண்டாடுவோம் என பின்னங்கால் பிடரியில் அடிக்க:)... முதேஏஏஏஏல் ஆளா ஓடிவந்திருக்கிறா. கர்ர்ர்ர்ர்ர் என்னா ஒரு சந்தோசம்... அதிராவுக்கு ஆரும் திட்டுறாங்க என நினைச்சாலே:)...

      Delete
    2. ஹலோ அதிரா அப்பாவி :) இதில் கீதாக்கா எங்கே திட்டினாங்க :) திட்டியிருந்தா கண்டிப்பா BONFIRE கொண்டாடிருப்பேன் :) ஹாஹா
      இல்லைஅதிரா நான் அறிந்தது புரிந்தது குறைவே அதுவும் நான் இப்போ முழு நெவர் ரிட்டர்னிங் இந்தியன் எனக்கு அங்கே நடப்பது இப்படி பதிவுகள் மூலமே தெரியும்.

      ஒரு நல்ல செகரட்டரி என்னைபோலதான் இருக்கணும் :) உங்க பேரை பார்த்ததும் ஓடி வந்தேன் :)

      Delete
    3. வாங்க ஏஞ்சலின், முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
    4. ஹாஹாஹா, அதிரா, நானும் திட்டல்லை. ஏஞ்சலினும் திட்டலை! அவங்க ஆவலோடு உங்க பெயரைப் பார்த்துட்டு ஓடோடி வந்ததுக்கு பாராட்ட இல்ல செய்யணும்!:)

      Delete
    5. ஏஞ்சலின், அதிரா னு தலைப்புப் போட்டா எல்லோரும் வருவாங்கனு தான் தலைப்பை அப்படிப் போட்டிருக்கேன். :)

      Delete
    6. மீ ரிட்டேன்ன்ன்ன்ன்:)... என் செக்கரட்டறி கரீட்டாத்தான் வேர்க் பண்ணுறா:) இந்த மாதத்துடன் சலTஇயை வன் பவுண்ட்டால கூட்டி விடோணும்:)...

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர் கீதாக்காவும் வரவர ஸ்ரீராம் மாதிரியே சிந்திக்கிறீங்க தலைப்பைக் கவர்ச்சியாப்போட:)...

      Delete
    7. ஹாஹாஹா அப்பாவி அதிரா, தலைப்பைப்பார்த்துட்டுத் தான் போல! அதான் பாருங்க இதிலே எவ்வளவு கூட்டம்! :)

      Delete
  2. உங்கள் பதிவுக்கு வலு சேர்க்க இச்சுட்டியின் வாயிலாக என் பின்னூட்டம் நன்றி / http://gmbat1649.blogspot.com/2010/11/blog-post_13.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா, படிச்சிருக்கேன்!

      Delete
  3. ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ் நேக்கு தலைப்புப் பார்த்து லெக்ஸும் ஆடல்ல கான்ஸ்சும் ஓடல்ல... இதில கந்தசஷ்டி விரதம் வேறு மயங்காக் குறையா ஓடிவந்தேன்ன்ன்:)... வசமா மாட்டிட்டனோ கீதா அக்காவிடம்... நல்லாத் திட்டி தீர்த்திட்டா போல இது மைனஸ் வோட்டை விட மோசமா இருக்கப்போகுதே ஜாமீஈஈஈ என ஓடி வந்தேன்... அப்பூடி எதுவும் தப்பா இல்ல:).. அப்பாடாஆஆஆ... கீதாக்கா சத்து இருங்கோ... கொஞ்சத்தால வாறேன்ன்ன்:)..

    ReplyDelete
    Replies
    1. கீதாக்கா :) கீதாக்கா //சற்று இருங்கோ// என்று வாசிங்க :)
      பூனை அங்கிங்கே ஸ்பெல்லிங் மிஸ்டேக் போட்ருவாங்க

      Delete
    2. வாங்க அதிரா, கொஞ்சத்தாலே வாரேன்னு சொல்லிப் போய் எம்புட்டு நேரம் ஆச்சு! எங்கே ஆளைக் காணோம்?

      Delete
    3. ஏஞ்சலின், அதெல்லாம் திருத்தி வாசிப்போமுல்ல! பழகிப் போச்சே! :))))))

      Delete
    4. ஹா ஹா ஹா சத்து இருங்கோ என்பது, இந்திய நாடகங்களைப் பார்த்துக் கற்றுக்கொண்டதாக்கும் மற்றும்படி எழுத்துப் பிழை இல்லை அது:)...

      Delete
    5. அதிரா, அது சத்து இருங்கோ இல்லை! "செத்த இருங்கோ"னு சொல்வாங்க! பேச்சுத் தமிழ். "சித்த இருங்கோ!" என்றும் சொல்வதுண்டு.

      Delete
  4. விளக்கமான பதிவு... அங்கும் போய் படிக்கிறேன்.... கோயில் வடிவமைப்பு படம் அருமை.

    ஆஃபிஸில் தூங்குபவர்கள் மரியாதையின்றி நடப்பவர்கள் பற்றி ஜோக் படித்து சிரிப்பதில்லையா? அர்ச்சகருக்கு அது இறை பணியாயினும் பணியிடம் தானே? அவர்களும் மனிதர் தாமே?

    ReplyDelete
    Replies
    1. வாங்க மிகிமா! தில்லையகத்து க்ரோனிகல்ஸ் பதிவிலும் போய்ப் படிங்க. ஆஃபீஸ் ஜோக் படிச்சுச் சிரிப்பது என்பது வேறே. அர்ச்சகர்களுக்குக் கோயில், கர்ப்பகிரஹம் போன்றவை பணி இடம் அல்ல! இரண்டுக்கும் வேறுபாடு உண்டு! மற்ற ஊழியர்களுக்குத் தான் அது பணி இடம்! ஆனால் உள்ளே போய் இறைவன் திருவுரு முன்னர் நின்று அர்ச்சனை, ஆராதனைகள், அலங்காரங்கள் செய்பவர் இவை அன்றாடப் பணி என நினைத்தால் அங்கே தெய்வ சாந்நித்தியம் எனப்படும் புனிதம் தோன்றாது! அந்த நேரம் இறைவனை அவர்கள் தாம் பெற்ற ஓர் குழந்தையாகப் பார்த்து ஈடுபாட்டுடன் செய்பவர்களும் உண்டு. இறையுடன் ஒன்றிப் போய் அலங்கரித்துப் பார்த்து சந்தோஷிப்பவர்களும் உண்டு! எனக்குத் தெரிந்த ஓர் அர்ச்சகர் தன் நிலையையே மறந்து போய் அலங்காரங்களில் ஈடுபட்டுச் செய்வார். அவரைப் பார்த்தாலே வேறே எங்கேயோ இருக்கார் மனதளவில் என்பது புரியும்! உண்மையான ஈடுபாட்டுடன் செய்பவர்கள் அப்படித் தான் இறையுடன் ஒன்றிப் போவார்கள்.

      Delete
  5. சிவவாக்கியரும் பிற சித்தர்களும் சொன்னது பக்தியின் உச்சநிலை..அது எல்லோருக்கும் வாய்க்காது.. நம்மை போன்ற சாமானியர்களுக்கு உருவ வழிபாடு அவசியம்.. சிவ பூஜை செய்பவர்கள் திருமணமாகி இருக்க வேண்டும் என்ற விதி உண்டு. இது போல் பல கடினமான விதிமுறைகள் உண்டு...

    ReplyDelete
    Replies
    1. வாங்க எல்கே. உங்களை வரவழைக்க இம்மாதிரிப் பதிவுகள் போட வேண்டி இருக்கு பாருங்க! :) சித்தர்கள் மாதிரி எல்லாம் நம்மால் இருக்க முடியுமா? ஆத்மலிங்கத்தையே வழிபட்டவர்கள் அல்லவா! பல சித்தர்களும் இறை வடிவங்களை நம் போன்றவர்க்காகவே உருவாக்கி வைத்துள்ளனர். பழனி முருகனை போகர் உருவாக்கியது போல!

      Delete
  6. // ஆனால் கோயிலில் வழிபாடுகள் செய்கிறவர்கள் அனைவருமே கெட்டவர்கள் என்னும் எண்ணமும் கொள்ளக் கூடாது! எல்லோரிடமும் இரண்டும் கலந்தே இருக்கும்//

    அக்கா இந்தவரியை எடுத்துக்கறேன் உங்க அனுமதியோடு :) இது பற்றி ஒரு பதிவு போடணும் நான்
    எல்லாரும் மனுஷஷங்கதான் எல்லா மனுஷருக்கு கோபம் வெறுப்பு டென்சன் எல்லாமே இருக்கும் கடவுளுக்கே கோபம் வரும் பொது நாம் யார் என புரிய வைத்த வரிகள்

    ReplyDelete
    Replies
    1. தாராளமாய் எடுத்துக்கோங்க. பதிவு போட்டுட்டுச் சுட்டி கொடுங்க! வந்து படிக்கிறேன். கடவுளுக்குக் கோபம் வந்தால் நம்மை எல்லாம் பழிவாங்க மாட்டார்! அது நமக்கு ஓர் பயம் கலந்த பக்தி வரணும் என்பதற்காகப் பெரியவங்க சொன்னது! பலரும் அதைப் பிடித்துக் கொண்டு தொங்குகின்றனர். என்னைப் பொறுத்தவரை எல்லாக் கடவுளும் நண்பர்களே!

      Delete
    2. ஒரு பொதுவான நிலைப்பாடு என்னவெனில் ஆத்திகர்கள் எல்லோருமே போலி வேஷம் போடுவதாகவும் உள்ளூரக் கெட்டவர்களாகவும் வெளியே போலி பக்தியைக் காட்டி நடிப்பதாகவும் பலரும் நம்புவது தான்! நாத்திகர்களிலேயே நல்லவர்கள் உண்டு எனவும் அவர்களே மனிதத்தையும் மனிதனையும் மதிப்பார்கள் என்றும் மனிதருக்கு உதவிகள் செய்வார்கள் எனவும் சொல்கின்றனர்.

      Delete
    3. இதற்குப் பித்ருக்களுக்குச் செய்யும் கடமைகளைப் பலரும் உதாரணம் காட்டுகின்றனர். நாங்கல்லாம் செய்வதில்லை! அதனால் என்ன நடந்து விட்டது? அன்றைய தினம் நாங்க அநாதை ஆசிரமத்தில் சாப்பாடு போடறோம். துணிகள் கொடுக்கிறோம்! என்கின்றனர். ஆனால் நம் சநாதன தர்மம் இரண்டையுமே வலியுறுத்துகிறது. நீ அநாதைகளை ரக்ஷித்துக் கொண்டிரு. வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் பித்ருக்கள் வழிபாட்டையும் நிறுத்தாதே என்கிறது. நாம் செய்யும் வைதிகச் சடங்குகளைக் கேலி செய்யும் அரசியல்வாதிகள் அனைவருமே அவரவர் தலைவர்கள் இறந்த/பிறந்த நாட்களில் மலர் வளையங்கள், மலர்மாலைகள் போட்டு மரியாதை செய்வதோடு பல்வேறு விதமான உறுதிமொழிகளையும் எடுத்துக் கொள்கின்றனர். இது சரி எனில் நாம் செய்யும் பித்ருக்களுக்கான சடங்குகளும் சரியே!

      Delete
    4. ஆமாம்க்கா :) நம்பிக்கை இல்லை இல்லை என்று சொல்லிட்டே இருப்பாங்க ஆனா அவங்களுக்கு தெரியாம அவங்களே நல்லதை செய்றாங்க ..இங்கே atheist ஆலயம் வந்திருக்கு டிவியில் லண்டன் சிட்டில காமிச்சாங்க பார்த்தா எப்படி சர்ச்சில் சண்டே சர்வீஸ் செய்றோமோ அதே மாதிரி மியூசி ஆர்கன் பாட்டு அப்போ இவர்களும் worship எனும் வட்டத்தில் தானே வராங்க :)

      Delete
    5. ஆமாம், ஏஞ்சலின், ஆனால் அதை ஒத்துக்க மாட்டாங்க!

      Delete
  7. ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா பொயிண்ட்டுக்கு வந்திட்டேன்ன்ன்ன்... கீதாக்கா போஸ்ட்டில் என் இரண்டாவது பந்தியில், நான் அப்படிச் சொன்னதற்குக் காரணம்....

    அங்கே துளசி அண்ணன் சொல்லியிருந்தார்.. அந்த நடிகர் பிராமணராக ஆசைப்படுறாராம் ஏனெனில், அப்போதான் விக்கிரகங்களுக்கு அருகில் நெருங்கி பூஜை செய்தால் கடவுளை நெருங்கலாமோ என்னமோ என.... அதுக்குத்தான், அவருக்குத்தான் அந்தப்பதில் சொன்னேன்...
    ஏனெனில் அவரிடம் இருக்கும் கோடிகளை ஏழை மக்களுக்கு தானம் செய்தாலே கடவுள் போல தெரிவாரே... அதை எல்லாம் விட்டுப்போட்டு எதுக்கு இந்த விபரீத ஆசை எனச் சொன்னேன்.

    மற்றும்படி ஐயர், குருக்கள் நின்று தீபம் காட்டி மந்திரம் சொல்லும்போதுதானே நம்மை அறியாமலேயே ஒரு தெய்வீகத் தன்மை நமக்குள் வந்து விடுகிறது... எனக்கு அப்படி நேரங்களில் கண் கலங்கி அழுகை வந்துவிடும்...

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வது உண்மை! அவர் கிட்டே இருக்கும் பணத்தை தானம் செய்தாலே கடவுள் தான்! ஆனால் அந்த மனம் எல்லோருக்கும் வருவதில்லை!

      Delete
  8. இன்னுமொன்று கீதாக்கா, இக்காலத்திலும் ஐயர் எல்லோருமே பணிக்காகச் செய்யவில்லை... கடவுளுக்குச் சேவைதான் செய்கின்றனர் என்பதை நான் அடியோடு மறுக்கிறேன்..... ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்ததாம் ஆனா இக்காலத்தில் அப்படி இல்லை...

    இங்கே உங்களுக்குத் தெரியாது கீதாக்கா, ஐயரை ஒரு கொடியேற்றத் திருவிழாவுக்கு கூப்பிட்டால் , ரேட் பேசி விட்டுத்தானே வருகிறார்கள்.... அதிலும் சாதாரண பூசைக்கு இவ்வளவு... சங்கு வைத்து மந்திரம் சொல்வதெனில் இவ்வளவு... எனப் பேரம் பேசியே வருகிறார்கள்...
    எந்த ஐயரும், நான் கடவுளுக்குச் சேவை செய்கிறேன் கொடுப்பதைக் கொடுங்கள் எனச் சொல்வதில்லை.

    எங்கள் வீட்டுக்கு ஒரு தடவை ஒரு குருக்களை அழைத்திருந்தோம்... அப்போ அவரிடம் பூசைக்கு என்ன பொருட்கள் வாங்கி வைப்பது எனக் கேட்ட இடத்தில் சொன்னார்.... நம் வீட்டில் இங்கிலீசு மரக்கறிகள் சாப்பிட மாட்டோம் அதனால ஊர் மரக்கறிகளாகவே தேடி வாங்கி வையுங்கோ என.... இதெல்லாம் எந்தக் கணக்கில் எடுப்பது சொல்லுங்கோ?...

    அதுக்காக சேவை செய்யும் எண்ணத்தோடு யாரும் இல்லை எனச் சொல்ல வரவில்லை.... நல்ல உள்ளங்களும் உள்ளனர் ஆனால் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்போர் அதிகமாகி வருகின்றனர்...

    ReplyDelete
    Replies
    1. கொடியேற்றத் திருவிழா எனில் எங்கே அதிரா? அவர் தனியாக இதற்கென வருகிறாரா? அல்லது கோயிலில் வேலை செய்து கொண்டே அதே கோயிலின் திருவிழாக் கொடியேற்றத்திற்கு ரேட் பேசுகிறாரா? நம் வீட்டுக்கு வருவது எனில் கட்டாயம் ரேட் பேசுவார்கள். எங்க பையர் பேத்திக்கு ஆயுஷ்ஹோமம் செய்ய அங்கே ஹூஸ்டனில் அவர் வீட்டுக்கருகே இருக்கும் ஒருசிவன் கோயிலின் அர்ச்சகரை வரவழைத்தார். அந்த அர்ச்சகர் அவருக்குத் தனியாகப் பணம் கேட்டார்! அதோடு இல்லாமல் கோயிலில் வேலை செய்பவரை நாம் கூப்பிடுவதால் கோயில் நிர்வாகிகள் கோயிலுக்கெனத் தனியாகக் கட்டணம் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு விசேஷத்துக்கும் இவ்வளவு என! அதையும் கட்டணும்! மற்றபடி அர்ச்சகருக்குக் கொடுக்கும் பணத்தில் பேரம் பேசலாம் தான்! ஆனால் அங்கே யாரும் பேசுவதில்லை. கேட்பதைக்கொடுத்து விடுகிறார்கள்.

      Delete
    2. உங்கள் குருக்கள்/அர்ச்சகர் நாட்டுக்காய்கள் கேட்டது தவறில்லை! நம் ஊர்ப்பக்கம் எல்லாம் கோயில்களில் சமைப்பதற்கு நாட்டுக்காய்கள் தான் பயன்படுத்துவோம். அவர் சாப்பிட மாட்டாராக இருக்கும். எல்லாம் ஆங்கிலக் காய்களாகக் கொடுத்துவிட்டுப் பின்னர் அதைப் பயன்படுத்த முடியாமல் போவதற்கு முன்னாடியே சொல்வது நல்லது தானே! எங்க பொண்ணு இப்போவும் ஹூஸ்டனில் அவள் மாமனார் திதியன்று புரோகிதருக்கு அரிசி, பருப்பு, வெல்லம், வாழைக்காய், புடலங்காய், பாகல்காய், வாழைப்பழம், தேங்காய் போன்றவை கொடுத்து வருகிறாள். நம் நாட்டிலும் இன்னமும் பலர் முட்டைக்கோஸ், காரட், பீட்ரூட், நூல்கோல், டர்னிப், வெங்காய்ம், பூண்டு போன்றவை சாப்பிடுவதில்லை. தமிழ்நாட்டை விட குஜராத், ராஜஸ்தானில் இது அதிகம் காண முடியும். உருளைக்கிழங்கு கூடப் பலர் சாப்பிடுவதில்லை!

      Delete
  9. நல்ல பதிவு. ஊன்றிப் படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. கருத்து எதுவும் இல்லையா?

      Delete
  10. ஒரு தடவை நைனாதீவு நாகபூசணி அம்மன் கோயிலுக்கு மகனுக்கு 8,9 மாதக்குழந்தையாக இருந்தபோது போயிருந்தோம். அங்கு பூசை எல்லாம் முடிந்து சனம் வெளியேறியபின்,
    அங்கு ஒரு அழகாக நாகதம்பிரான் வாகனம் இருந்துது.. அதன் முன்னால் மகனை நிற்க விட்டுப் படமெடுத்தோம்... அப்போ அந்த வழியால வந்த ஒரு ஐயர், தானே மகனைத் தூக்கி வாகனத்தில் நிற்கவிட்டு இப்போ எடுங்கோ எனச் சொன்னார் .. சொல்லிவிட்டு அவர் போய் விட்டார்.. படமெடுக்கும்போது பின்னாலே இன்னொரு ஐயர் வந்தார்... வயசு குறைந்தவர் அவர் சொன்னார்... என்ன இப்படிச் செய்கிறீங்க இது தப்பு... உங்களுக்குத்தான் கூடாது என்றார்... எனக்கு மயக்கமே வந்து விட்டதுபோல இருந்துது... சந்தோசமே போய் விட்டது... நம்மில் எத் தப்பும் இல்லையே...

    அப்போ இதுக்கு பரிகாரம் தேடாமல் வரமாட்டேன் எனக் கணவரிடம் சொல்லிட்டேன்... கோயிலில் பெரிய குருக்கள் ஏனையோருக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார்...
    வகுப்பு முடியும்வரை வெயிட் பண்ணி, அவரிடம் போய் நடந்ததைச் சொன்னோம்... அவர் சிரித்துக்கொண்டே சொன்னார் அதெல்லாம் ஒன்றுமே தப்பில்லை... பயப்படாதீங்கோ அவர் சும்மா சொல்லிட்டார் என...

    பின்புதான் நிம்மதி ஆனோம்... இப்படி வயதில் குறைந்தோர்தான்.. அனைத்திலும் குழறுபடியாக நடக்கினமோ என்னமோ...

    ஹா ஹா ஹா நான் போஸ்ட்டுக்கு வெளியால போய் அலட்டுகிறேனோ...:).

    ReplyDelete
    Replies
    1. வாகனத்தில் நிற்க வைப்பதனால் எல்லாம் புனிதம் கெடாது. நாங்கல்லாம் சிறு குழந்தைகளாக இருக்கும்போது கோயில்களின் வாகன மண்டபத்தில் வாகனங்களுக்கிடையே கண்ணாமூச்சி ஆடி இருக்கோம். இதுக்கெல்லாம் கவலைப்பட்டுக் கேட்டுக் கொண்டிருப்பது பார்த்தால் நீங்க ரொம்பவே பயப்படுவீங்க போல இருக்கு! நானாக இருந்தால் சரிதான் போங்க! னு சொல்லிட்டு வந்துண்டே இருப்பேன். இதுவே எங்க மாமியார் எனில் உங்களைப் போல் தான் அதுக்குப் பரிகாரம் பண்ணணும்னு ஆரம்பிப்பாங்க! :)

      Delete
  11. மற்றும்படி உங்கள் கருத்தை முழுவதும் ஏற்கிறேன்... ஒரு குருக்கள் ஆவது என்பது ஒன்றும் சுலபமான விடயம் இல்லையே... சமஸ்கிருதம் ஒழுங்காப் படிச்சுப் பாஸ் ஆனால்தானே அவர் குருக்களாகி... கொடியேற்றம்... கும்பாபிஷேகம் எல்லாம் நடாத்த முடியும் இல்லை எனில் முடியாதே.. இந்தியாவில் இதுபற்றி என்ன போராட்டங்கள் நடக்கின்றன என எனக்கு எதுவுமே தெரிகாது, நான் இலங்கையை மனதில் வைத்தே கருத்திடுகிறேன்.

    நீங்கள் போட்டிருக்கும் படம் நானும் ஏற்கனவே பார்த்து வியந்திருக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. குருக்கள் ஆவது சுலபம் அல்ல! ஆகவே முதலில் பனிரண்டு வருடப் படிப்பையும் ஒழுங்கா முடிச்சுட்டுப் பின்னர் அவர் குருக்கள் ஆகலாம்! இந்தியாவில் எங்கும் போராட்டங்கள் இல்லை! கேரளா, தமிழ்நாடு தவிர்த்து! இதில் கேரளாவில் இப்போது இந்துக்கள் குறைந்திருக்கிறார்கள். இங்கே தமிழ்நாட்டில் தான் திராவிடர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் அவர்களும் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

      Delete
  12. கீதாக்கா நமக்குக் கோயில்கள் விக்கிரகங்கள் நிட்சயம் தேவைதான்... தூணிலும் இருப்பார் திரும்பிலும் இருப்பார் கடவுள் என நம் முன்னோர் சொன்னதுக்கு காரணம்...

    நம்போன்ற சாதாரண மக்களை நல்வழிப்படுத்தவே எனத்தான் நினைக்கிறேன்.. ஏனெலில் எதுக்குப் பயப்படாட்டிலும் பெரும்பான்மை மக்கள் கடவுளுக்குப் பயப்பிடுவார்கள்... அப்போ இப்படிச் சொன்னால்தான்... ஏனைய உயிரினங்கள்... மரங்கள் போன்றவற்றை கடவுளாக நினைத்து அன்பு பாராட்டுவார்கள்.

    மற்றும்படி நம்மைப் போன்ற சாதாரண மக்களால் தூணைப் பார்த்துக் கும்பிட்டு திருப்தி கொள்ளும் நிலை இன்னும் இல்லை என்பதால் மனதை ஒரு நிலைப் படுத்தக் கோயில் தேவை.
    நம் வீட்டுக்குள்ளேயே.. சமைப்பது சமையல் அறையில் , நித்திரை எனில் பெட் ரூமில், குளிப்பது பாத் ரூமில் இப்படி இருக்கும்போது, வணங்குவதற்கும் அதற்கென ஒரு இடம் தேவை.

    நேரம் கிடைக்கும்போது ஓடி ஓடிக் கொமெண்ட் போட்டுக்கொண்டிருக்கிறேன்...:)

    ReplyDelete
    Replies
    1. இது அதிராவுக்காக / ஒரு காண முடியாத சக்தியை நம்மில் பலரால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் விக்கிரக ஆராதனையின் முக்கிய காரணமாய் இருந்திருக்கவேண்டும். ஆண்டவனுக்கு நம்மில் ஒருவன் போல் உருவம் கற்பித்து அவனுக்கு ஏகப்பட்ட சக்தியையும் கொடுத்து காப்பவனாகக் கருதி வழிபடும்போது மன அமைதி கிடைக்கிறது. அழிப்பவனாகக் கருதி வழிபடும்போது தீய செயல் செய்வதை பயத்தால் செய்யாமலிருக்கச் செய்கிறது. கடவுளுக்கு ஏராளமான சக்தி உண்டு என்று நாம் நம்ப, அவனுக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களின் வெளிப்பாடுகளாக அறிவிக்கப்படுகிறோம். இன்னும் கடவுளை ராமனாகவும் கண்ணனாகவும், முருகனாகவும் கற்பிதம் செய்து அவர்களின் சக்திகளில் நம்பிக்கை வைத்து அவர்களை வழிபாடு செய்தால் நலம் பெறுவோம் எனும் நம்பிக்கை சிறு வயது முதலே வளர்க்கப்படுகிறது. தாயே மனிதனின் முதல் தெய்வம் என்று கருதப்படும் நம் நாட்டில், கடவுளை அன்னையின் வடிவத்திலும் வழிபடுகிறோம். சரஸ்வதியாக , லட்சுமியாக , பார்வதியாக, ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு சக்தியின் பிரதிபலிப்பாக வணங்க வளர்க்கப்படுகிறோம்.

      இந்தக் கடவுள்களின் சக்தியில் நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவே ஆயிரமாயிரம் கதைகளும் புனைவுகளும் ஏற்பட்டிருக்க வேண்டும்.

      சூனியமான இருண்ட அண்டத்தில் சூரியனின் ஒளியே வாழ்வின் ஆதாரமாக இருப்பதால் ஆதியில் சூரிய வழிபாடும், பிறகு உயிர் வாழப் பிரதானமான ஆகாயம் , காற்று , நீர் , மண் போன்றவைகளும் வழிபாட்டுக்கு உரியனவாயின /.

      Delete
    2. மிக அருமையான விளக்கம் ஐயா.. மிக்க நன்றி.... ஓல்ட் இஸ் கோல்ட் என்று சும்மாவா சொன்னார்கள்.

      Delete
    3. ஓடி ஓடிப் போட்ட கருத்துகள் அனைத்தும் அருமை! மரங்களையும் கடவுளாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்த காரணத்தினால் தான் மரங்கள் வெட்டுப்படாமல் பிழைக்கின்றன! இல்லை எனில் இவ்வளவு காலம் பொட்டல் காடாக ஆகி இருக்கும்!

      Delete
  13. மனதில் தெளிவான சிந்தனைகள் கொண்டவராக இருக்கிறீர்கள். அதனால் அவற்றை நன்றாக உங்களால் வெளிப்படுத்த முடிகிறது. (பாடம்) படித்துக் கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், ஹிஹிஹி, அதெல்லாம் இல்லை! குழப்பமான மனோநிலையில் தான் கடந்த இரு நாட்களாக! இணையம் மட்டுமில்லாமல் வேறு பல, சில பிரச்னைகள்! செய்திகள்! :)

      Delete
  14. ////அதிராவின் சிந்தனையும் என்பதிலும்////
    தலைப்பிலே சொற்பிழையோ பொருட் பிழையோ இருக்கின்றது:)..

    ReplyDelete
    Replies
    1. சில சமயம், ஏன் பல சமயங்களிலும் ஸ்பேஸ் தட்டினாலும் நகருவதில்லை. கீ போர்ட் பிரச்னையோ! தெரியலை! :) இந்த மடிக்கணினிக்கு இன்னும் ஒரு வயசு ஆகலை! அதுக்குள்ளே! :)

      Delete
  15. நல்ல பதிவு! ஆனால் தலைப்பில் ஒரு சிறிய தவறு. 'என் பதிலும்' என்பதற்கு பதிலாக 'என்பதிலும்' என்று தட்டச்சியிருக்கிறீர்கள். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியாத என்ன? ஸ்பேஸ் பாரை தட்ட மறந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கரெக்டாக் கண்டு பிடிச்சீங்க பானுமதி அக்கா....

      Delete
    2. பானுமதி, அதிரா, மேலே பதில் சொல்லி இருக்கேன் பாருங்க. உடனே திருத்தியும் விட்டேன். :)

      Delete
  16. அதிராவுக்கு அர்ச்சனையா? - ஆம், அப்பாவிக்கு அர்ச்சனை; அடாவடிகளுக்குப் பிரசாதம் - இதுதானே கோவில்களில் இப்போதெல்லாம் நடப்பது எனவும் தோன்றியது. பறக்கவிடாதே கற்பனைக்குதிரையை..படித்துப்பார் பதிவை என்றது மனம். வாசித்தேன்.

    அதிரா பதறும்படி ஏதுமில்லை. படித்துத் தெளிந்திட அவருக்கும் மற்றவருக்கும் பல சில விஷயங்கள்..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எனக்கும் சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கு என நினைச்சு பிரீஸ் ஆகிட்டேன் நான்:)...
      ஹா ஹா ஹா இல்ல தலைப்புப் பார்த்துத்தான் பதறி அடிச்சு ஓடி வந்தேன்:) படிச்ச பின்பு பதறவில்லை:)..

      அப்பாவியைத் திட்ட மாய்ட்டா:) கீதாக்கா...

      Delete
    2. வாங்க ஏகாந்தன், உங்கள் பதிவுகளுக்கு வந்து படித்தேன். ஆனால் கருத்திடவில்லை! ஃபாலோயர் ஆப்ஷனில் இமெயில் கொடுத்தால் வாங்கிக்க மறுக்கிறது! :)))) மற்றபடி இது குறித்து எழுத எழுத விஷயங்கள் மேலும் மேலும் வரும்! :)

      அதிரா, உங்களை ஏன் திட்டறேன்! :)

      Delete
  17. சரியாக, தெளிவாக அலசி காயப்போட்டு இருக்கிறீர்கள்.

    ஒவ்வொரு மனிதனும் தன்னுள்ளும் இறைவன் இருக்கிறான் என்று உணர்ந்து விட்டால் தவறுகள் துளியளவும் நடக்காது.

    மனிதனை மனிதன் வெட்டிச் சாய்ப்பானா ?

    அதிராவின் பதிலால் (நான் வியக்கேன்) இந்த பதிவு.
    நடக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! தவறுகள் அகங்காரத்தாலும் கோபம், மிதமிஞ்சிய ஆத்திரம் ஆகியவற்றால் நடக்கின்றன. என்ன தான் சொன்னாலும் அந்த நேரம் பொறுமை எல்லாம் பறந்துவிடுகிறதே! :(

      Delete
  18. எல்லாவற்றுக்குமே இரண்டு பக்கம் உள்ளது என்று கூறிய விதம் அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவர் ஐயா! உண்மை தானே!

      Delete
  19. சாமி சிலைகளைப் பற்றியும் அங்குள்ள அர்ச்சகர்கள் பற்றியும் எனக்கு தெரிந்து புரிந்த சில விஷயங்களை இங்கே சொல்லுகிறேன்.


    தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று சொல்லிவிட்டு கோயிலில் சாமி சிலை எதற்கென்றால் கோயிலில் உள்ள சாமி சிலைகள் நம்மனதை ஒரு நிலைப்படுத்த தேவைப்படுகிறது. நாம் புதிதாக மெடிடேஷன் செய்யும் போது மனசை ஒருநிலைபடுத்து படுத்து என்று சொன்னால் நம்மால் எளிதாக ஒரு நிலைப்படுத்த முடியாது அப்போது என்ன செய்வார்கள் ஒரு சிறு பொருளை அல்லது விளக்கின் ஒளியை.... அல்லது சுவற்றில் ஒரு டாட் வைத்து அதையே பார்த்து கொண்டு மனதை ஒரு நிலைப்படுத்து என்று சொல்லும் போது நம் மனதை மிக எளிதாக ஒரு நிலை படுத்த முடிகிறது அது போலத்தான் கோவிலில் சென்று சாமி சிலையை பார்த்து கும்பிடும் போது நாம் அப்படியே சாமியிடம் ஒன்றி போய்விடும் ஒரு உணர்வு ஏற்படுகிறது அதற்காகத்தான் கோவில் ஒன்று கட்டப்பட்டு அங்கு சாமி சிலைகளும் வைக்கப்பட்டு இருக்கிறது


    மற்ற மதங்களில் சிலை வழிபாடு இல்லாமல் இருக்கிறதே என்றால் அந்த மதத்தினர் மெடிடேஷனில் அடுத்த கட்டத்தில் உள்ளவர்களை போல ஒளியோ டாட் அல்லதுஒரு பொருள் இல்லாமல் தங்களால் மனதை ஒரு நிலைப்படுத்த முடியும் என்று கருதி செயல்படுகிறார்கள் அவ்வளவுதான் வித்தியாசம் என்பது என் கருத்து


    அடுத்து அர்ச்சகர் என்று வரும் போது கோயிலில் அவர்கள் நமக்கு உதவுவதற்காகவே அவர்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டவர்கள்,

    அன்றைய காலக்கட்டங்களில் அவர்களின் தேவைகளை மற்றவர்கள் கவனித்து கொண்டார்கள் ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மற்றவர்கள் உதவமுன் வராததால் அவர்களுக்கு வாயும் வயிறும் இருப்பதால் அவர்களில் சிலர் இன்று மாறியிருக்கிறார்கள் இதற்கு அவர்களை குற்றம் சொல்ல நமக்கு தகுதியில்லை.

    அர்ச்சகர்கள் இல்லாவிட்டால் அந்த இடங்களில் பொதுமக்கள் பலர் வந்து அதை சந்தைகடையாக்கிவிடுவார்கள். உதாரணமாக எல்லோருக்கும் நன்றாக சமைக்க தெரிந்தாலும் ஒரு உணவை சமைக்கும் போது ஒருவர் மட்டுமே அதில் ஈடுபட வேண்டும் பலரும் சேர்ந்து அந்த உணவை தயாரிக்க நினைத்தால் ஆளுக்கு ஆள் அதில் தேவையான பொருடகளை போட்டு கடைசியில் அது சாப்பிட முடியாத அளவிற்கு போய்விடும் அதுபோல அர்ச்சகர் இல்லாவிட்டால் அந்த இடம் பாழ்பட்டுவிடும் என்பது என் கருத்து


    எழுத எழுத நிறைய விஷயங்கள் மனதுள் எழுகிறது,,,,,ஆனால் அது பதிவாகிவிடும் என்பதால் இதோடு நிறுத்தி கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. அர்ச்சகர்கள் நமக்கு உதவி செய்ய மட்டுமல்ல! கடவுளையும் நம்மையும் இணைக்கும் உறவின் பாலமாகவும் செயல்படுகிறார்கள். அதோடு அவர்களுக்கு உண்மையாகவே இறை உணர்வு மனசில் இல்லை எனில் கோயில்களில் வழிபாடுகள் செய்ய முடியாது! கர்பகிரஹத்தில் ஒரு நிமிஷம் கூட நிற்க முடியாது! மற்றபடி உங்கள் கோணமும் சரியானதே!

      Delete
  20. நல்ல விளக்கமான பதிவு. ஆனாலும் நம் மனது, மருத்துவர்கள் சேவை உணர்வு கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதுபோல அர்ச்சகர்கள்/பூசாரிகளும் கடவுள் உணர்வு (அதாவது எல்லா பக்தர்களையும் ஒன்றேபோல் நடத்துவது, கடவுள் உணர்வில் இருப்பது) கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

    எனக்கு பல கோவில்களில் அர்ச்சகர்களிடமட்டுமல்ல, அங்கு வரும் பக்தர்களிடமும் கடவுள் உணர்வு நிறைய இருப்பதை அனுபவித்திருக்கிறேன். (சமீபத்தில் அல்லிக்கேணி கோவிலில் ஒருவர் எங்கள் எல்லோரையும் பிரசாதம் வாங்கிக்கொள்ளக் கூப்பிட்டார். அவரிடம், இது தனியார் வழங்கும் வேண்டுதல் பிரசாதமா, அப்படி என்றால் பெற்றுக்கொள்வதில்லை என்று சொன்னதற்கு, இது ஆலயப் பிரசாதம்தான் என்று சொல்லி எங்களை வரிசையில் வந்து பெற்றுக்கொள்ளச் சொன்னார். அவரின் initiative ரொம்ப நிறைவாக இருந்தது. இன்னொன்று, ஆலயப் பணியாளர்களுக்கு (கர்ப்பக் கிரகத்தின் வாயிலில் இருப்பவர்களுக்கு) எல்லா பக்தர்களுக்கும் தரிசனம் செய்துதரும் கடமை இருக்கிறது, அதனால் அவர்கள், 'நகருங்கள் நகருங்கள்' என்று அழுத்தமாக நம்மை நகர்த்துவதிலேயே குறியாக இருப்பார்கள். திருப்பதியில் கிட்டத்தட்ட நம்மை கையால் பிடித்துத் தள்ளிவிடுவார்கள். அது நமக்குக் கோபத்தை உண்டாக்கினாலும், அவர்கள் செய்வது பொது நன்மைகருதி, என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நெ தமிழன்... நான் நினைப்பது அர்ச்சகர்களை விட, நம் போன்ற பொது மக்களே கடவுளுக்கு அதிகம் சேவை செய்கின்றனர்...
      பூசை பண்ணுவது மட்டும்தானே அர்ச்சகர் வேலை, ஆனால் தொண்டர்கள் அடியார்கள் எனும் பெயரில் எந்த வருமானமும் இல்லாமல் வொலண்டியராக நம் மக்கள் கோயிலில் செய்யும் சேவைதானே மிகப் பெரியது என நினைப்பேன்.

      Delete
    2. இல்லை அதிரா... கோவிலில், கடவுளர்களுக்கு அலங்காரம் செய்வது என்பது பெரிய பணி. வீதியுலா வரும் உற்சவருக்கும் இதேபோன்று நிறைய அலங்காரம், அதனை சரியாகப் பொருத்துதல் போன்று பல பணிகளைச் செய்யவேண்டும். (அதற்கான நகைகள் போன்றவை எடுத்துத் தருவது அதிகாரிகளின் பணி. பூசைகள் எல்லாம் முடிந்தவுடன், கோவில் சாத்தப்படுவதற்கு முன்பு, எல்லாவற்றையும் கழற்றி அதிகாரிகளிடம் ஒப்படைப்பதும் அர்ச்சகர்கள் பணி)

      பல கோவில்களில், அர்ச்சகர்களே, பிரசாதமும் தயாரிக்கவேண்டியிருக்கும். இது எல்லாவற்றையும்விட, அவர்களுக்கு நெறிமுறைகளும் அதிகம் (பிரதிமையைத் தொடுவதால் பாவம் சேரும், அதற்காக அவர்களுக்குப் பிராயச்சித்த தியானங்கள் உண்டு என்று நினைக்கிறேன்)

      மற்றபடி நிறைய தொண்டுள்ளம் கொண்டவர்கள் (பொதுமக்கள் அல்லர்), இந்தப் பணிகளில், எதை எதைச் செய்யலாமோ அதையெல்லாம் செய்வர். (பூ அலங்காரம், விழா முடிந்தபின்பு சுத்தம் செய்தல் போன்றவை)

      Delete
    3. ஒரு முறை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மதியம் மணி இரண்டாகியும் ஒரு அர்ச்சகர் வீட்டுக்கு வராததால் அழைக்கப் பட்டார் அப்போது அவர் இன்று வருமானம் போதவில்லை அதனால் தாமத மாகும் என்றார்

      Delete
    4. இதுபற்றிப் பேசப் பேச நிறையத் தகவல்கள் வந்து கொண்டிருக்கு... ஒவ்வொருவரின் கருத்துக்களைப் படிக்கும்போதும் இதுவும் சரிதானே என மனம் ஏற்றுக்கொள்கிறது... நீங்க சொல்வதிலும் நிறைய நியாயம் இருக்கிறது... நெ தமிழன்.

      என் மாமா ஒருவர் சொன்னார், அதிரா ஒரு இரண்டு நிமிடம் தீபத்தைக் கையில் ஏந்திக்கொண்டு மூலஸ்தானத்தில் நிண்டு பார்... உன்னால் முடியவே முடியாது... அப்போ யோசிச்சுப் பார், ஒரு ஐயர் எவ்வளவு நேரமா மூலஸ்தானத்தில்... நிற்கிறார் தெரியுமோ? அது எவ்ளோ கஸ்டம் என....

      யோசித்துப் பார்த்தேன், சில கோயில்களில் மூலஸ்தானம் ஏதோ குகைக்குள் இருப்பது போலிருக்கும்... அதுக்குள் போய் நின்று பூஜை செய்வதற்கு எவ்வளவு தைரியமும் மனப் பக்குவமும் வேணும்... எதுவும் சொல்வது சுலபம் .. செய்து பார்க்கும்போதுதான் அதன் கஸ்டம் புரியும்.

      சிலபேர் செய்யும் அட்டூழியங்களால் சிலநேரம் எல்லோரிலும் எரிச்சல் வந்து விடுகிறது நமக்கு.. இதுதான் உண்மை.

      அதுசரி கீதாக்கா எங்கின போயிட்டா?:)... என்னைப்போல கட்டிலுக்குக் கிழ ஒளிச்சிருந்து வோச்சிங்கோ?.. ஹா ஹா ஹா வெளில வாங்கோ கீதாக்கா..:).

      Delete
    5. அதிரா, பதில்கள் வெளிவருவதிலிருந்தே நான் இணையத்தில் இருப்பது தெரிஞ்சிருக்கணுமே! :) ஒவ்வொருத்தர் சொல்வதையும் பார்த்துக் கொண்டும் படித்துக் கொண்டும் இருக்கேன். அதோடு இல்லாமல் இரண்டு நாட்களாக இணையம் பிரச்னை பண்ணுது! இரண்டு முறை பதில் கொடுத்து வெளியாகவில்லை. எழுதினது போன இடமும் தெரியலை! ஆகவே கொஞ்சம் பொறுத்துக்கலாம் என்னும் எண்ணம்!

      Delete
    6. ஜிஎம்பி ஐயா, மீனாக்ஷி கோயில் பனிரண்டில் இருந்து பனிரண்டரைக்குள் நடை சார்த்தி விடுவார்கள். தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம். பின்னர் மாலை நாலு மணிக்குத் தான் திறப்பார்கள். அந்த பட்டர் எதற்காக இரண்டு மணி வரை காத்திருந்தாரோ தெரியாது! மேலும் கிடைக்கும் வருமானத்தை அப்படியே பட்டர் எடுத்துச் செல்ல முடியாது! அறநிலையத் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதிலே அறநிலையத்துறைக்கான பங்கு போக மீதமே பட்டருக்கு வந்து சேரும். இதனால் தான் பலரும் தனிப்பட்ட முறையில் அர்ச்சகர்கள்/குருக்கள்/பட்டர்கள்/பட்டாசாரியார்களுக்குப் பணம் கொடுப்பார்கள். ஆகவே ஒரு பட்டருக்கு வருமானம் இல்லை என்பதெல்லாம் ஏற்கும்படியாக இல்லை. உள்ளே வழிபாடு செய்யும் அத்தியான பட்டரைத் தவிர்த்து ஐந்து பேர் அர்ச்சனை, ஆராதனைகள் செய்வார்கள். மூலஸ்தானத்தில் விக்ரஹத்தைத் தொட்டு வழிபாடு செய்வது அத்யானபட்டர் மட்டுமே! அவருக்கு உதவுபவர் ஒருத்தர் தனியாக இருப்பார். இரண்டு மணிக்கெல்லாம் கோயில் கடைகளில் பிரகாரங்களில் தான் மக்கள் கூட்டம் இருக்கும். சந்நிதி திறக்கப்படாது!

      Delete
    7. கீதாமேடம் நீங்கள் சொல்வது சரியே மதுரை தொடர்பயணம் என்னும் பதிவில் எழுதி இருந்தேன் நேரம் பற்றிய நினைவு தவறாக வந்து விட்டது ஆனால் நிகழ்ச்சி சரியே

      Delete
    8. நன்றி ஜிஎம்பி சார்!

      Delete
    9. நெல்லைத்தமிழன், அர்ச்சகர்கள் மட்டுமல்ல பல பக்தர்களும் இறைஉணர்வோடு தான் கோயிலுக்கு வருகின்றனர். ஆனால் அங்கே இந்த அறநிலையத் துறை ஊழியர்களால் விஐபிக்களுக்குக் கொடுக்கப்படும் தனிப்பட்ட மரியாதை, ஆரவாரமான வரவேற்பு, அவர்கள் தரிசனம் செய்யும் வரை பக்தர்களைக் காத்துக் கொண்டிருக்கச் செய்தல் போன்றவற்றால் அந்த பக்தி உணர்வு போய்விடுகிறது. அதோடு பிரசாதம் என்பது மடப்பள்ளியிலிருந்து நேரே மூலஸ்தானம் சென்று பின்னர் விநியோகிக்கப்படுவது! அது இன்று பல கோயில்களிலும் குறைந்து விட்டது. வெளியே ஒப்பந்ததாரர்களிடம் கட்டணம் நிர்ணயித்துச் செய்யச் சொல்லி வாங்கி அதைத் தான் பிரசாத ஸ்டால்களில் விற்கின்றனர். அழகர் கோயில் போனப்போ நாங்க மடப்பள்ளியில் தோசை கேட்டதற்கு நீங்க "தளிகை" ஏற்பாடு செய்தால் அதில் வரும்! இங்கே செய்வதை நாங்க கொடுத்தால் அலுவலகத்துக்குத் தெரிந்து போனால் பிரச்னை ஆயிடும் என்று சொன்னார்கள். அதே காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் மடப்பள்ளியிலிருந்து பெருமாளுக்குப் போய்ச் செய்த நிவேதனம் ஆன காஞ்சிபுரம் இட்லியை ஒரு பட்டாசாரியார் அவருக்குக் கிடைத்த பங்கிலிருந்து ஊழியர்கள் அறியாமல் பக்தர்களுக்கு விநியோகம் செய்தார். இது நடந்தது சில ஆண்டுகள் முன்னர். இப்போது இன்னமும் கண்டிப்புக்கள் இருக்கலாம்.

      Delete
    10. (பிரதிமையைத் தொடுவதால் பாவம் சேரும், அதற்காக அவர்களுக்குப் பிராயச்சித்த தியானங்கள் உண்டு என்று நினைக்கிறேன்)// நெல்லைத் தமிழன், நான் வேறே மாதிரி கேள்விப் பட்டதால் இது குறித்துத் தெளிவாகப் புரிந்து கொண்டு பதில் சொல்லணும்! மற்றபடி அது கர்பகிரஹத்தில் இருக்கும் மூர்த்தமானாலும் சரி, உற்சவர் ஆனாலும் சரி அலங்காரம் செய்ய சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். நகைகள் விஷயத்திலும் கவனம் தேவை! சிதம்பரத்தில் அன்றாடம் நடராஜர் சந்நிதியில்கணக்கு ஒப்புவிக்கும் வழக்கம் உண்டு!

      Delete
    11. கட்டணம் நிர்ணயித்துச் செய்யச் சொல்லி வாங்கி அதைத் தான் பிரசாத ஸ்டால்களில் விற்கின்றனர். - ஆமாம் கீதா சாம்பசிவம் மேடம். ஆனாலும் கோவிலில் பிரசாதம் வாங்கிச் சாப்பிடுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். திருவல்லிக்கேணி சென்றால் நிச்சயம் சிலவற்றை வாங்குவேன் (இந்த முறை எதிர்பாராத விதமாக சர்க்கரைப் பொங்கல் நல்லா இருந்தது. புதிதாக பெரிய லட்டு 30ரூ போட்டிருந்தார்கள்). ஸ்ரீரங்கத்தில், பிரசாத ஸ்டாலில் விற்பனை செய்யப்படுவது எதுவுமே எனக்குப் பிடித்ததில்லை. பிரசாத ஸ்டாலின் பக்கத்தில் விற்கும் தயிர்சாதம், ச.பொங்கல் போன்றவற்றை 'பிரசாதம்' என மனதில் நினைப்பதால் வாங்குவேன். (தயிர் சாதத்துக்கு உகந்த ஊறுகாய் கொடுக்கக்கூடாதா? நார்த்தை ஊறுகாயா?) திரு ஆனைக்காவில் பிரசாதம் மனதிற்குப் பிடிக்காததால் வாங்கவில்லை.

      அழகர் கோவிலில் தோசை கிடைக்காதா? அதற்காகவே நான் அழகர் கோவிலுக்குச் செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் (தரிசனமும் முக்கியம், பிரசாதமும் முக்கியம்தானே). கச்சி வரதர் சன்னிதியிலும் இந்தக் கதைதானா?

      ஸ்ரீரங்கத்தில் ஒரு முறை அதிகாலை தரிசனத்துக்கு (விசுவரூபம்), கோவில் ஊழியர் ஒருவர் நல்ல இடத்தில் நான் நிற்பதற்கு (பணம் கட்டித்தான் போனேன்) வழி செய்து அதற்காக சிறிய தொகை பெற்றுக்கொண்டார். மனதில் சஞ்சலம் இருந்தாலும், விசுவரூப தரிசனம் கிடைத்ததே என்று மகிழ்ச்சிதான். இதுபோலத்தான் திருப்பதியிலும்.

      Delete
    12. ஶ்ரீரங்கத்தில் "பிரசாதம்" வேணும்னா காலை எட்டரையிலிருந்து பத்துக்குள்ளாகப் பெருமாளைப் பார்க்க வந்தால் எதிரே கிளி மண்டபம், அர்ஜுன மண்டபத்தில் பட்டாசாரியார்கள் கூடையில் பிரசாதத்துடன் உட்கார்ந்திருப்பார்கள். வாங்கிக்கலாம். விலைக்குத் தான் கொடுப்பார்கள். மதியம் எனில் பனிரண்டரையிலிருந்து ஒன்றரைக்குள்ளாக மடப்பள்ளி வாசலிலேயே பட்டாசாரியார்கள் தோசை, வடை, புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம் போன்றவை கொடுப்பார்கள். தயிர்சாதத்துக்கு ஊறுகாயெல்லாம் இல்லை! அப்படியே சாப்பிட்டாலும் நன்றாகவே இருக்கும்! இவை ஒரிஜினல் கலப்படமில்லாத பிரசாதங்கள்! அதே போல் மாலை இரண்டரையிலிருந்து மூன்றரை அல்லது நான்குக்குள்ளாகச் சில சமயங்களில் அபூர்வமாக சூடான அப்பம் கிடைக்கும்! தரிசனம் முடிச்சுக் கீழே இறங்கும் வழியிலேயே கொடுப்பாங்க! இது இலவசம்! ஏனெனில் சந்நிதிக்கருகேயே கொடுப்பதால் பொதுமக்களுக்கு எனச் சில நாட்கள் கொடுக்கிறது! மாலை ஐந்தரையிலிருந்து ஏழுமணிக்குள்ளாக மீண்டும் கிளி மண்டபம், அர்ஜுனமண்டபத்தில் வடை, தோசை, அப்பம், அதிரசம், போன்றவை கிடைக்கும். இவை விலைக்கு! விலை எல்லாம் அதிகமாக இருக்காது! இப்போக் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகிவிட்டபடியால் சமீபத்திய நிலவரம் தெரியலை! :)

      Delete
    13. அடுத்த தடவை ஸ்ரீரங்கம் வரும்போது, பெருமாளுக்கே, 'இவன் என்னைப் பார்க்க வரானா இல்லை பிரசாதம் வாங்க வரானா' என்ற சந்தேகம் வரும் அளவு நீங்கள் சொன்ன நேரத்தில் தரிசனம் செய்துவிட்டு பிரசாதம் வாங்க முயற்சிக்கிறேன். (கிளி மண்டபம் இடதுபக்கம் இருக்கு. அர்ஜுன மண்டபம் எங்க இருக்கு?.. மடப்பள்ளியும் எங்க இருக்கு?)

      Delete
    14. கிளி மண்டபம் என்பது நாம் சுவாமியைத் தரிசிக்கும்/ தரிசித்த பின்னர் கீழே இறங்கும் படிக்கட்டுகளுக்கு எதிரே உள்ளது. அருகில் உள்ள மண்டபம் அர்ஜுன மண்டபம்! அங்கே தான் துலுக்க நாச்சியார் இருப்பாள்! தங்க விமான தரிசனமும் அங்கிருந்து தான் முன்னர் பார்ப்போம். இப்போ அந்த வழியில் போக முடியாது. இது தரிசனம் முடிந்து இடப்பக்கமாக நாம் தொண்டைமான் மேடு போகும் போது நமக்கு வலப்பக்கம் வரும் மண்டபம். தொண்டைமான் மேடு ஏறி இறங்கினதும் வலப்பக்கமாகப் போனால் பிராகாரம் வரும். அந்தப் பிரகாரத்தில் தான் மடப்பள்ளி இருக்கு! மடப்பள்ளியிலிருந்து கொஞ்சம் தள்ளி அன்னமூர்த்தி சந்நிதியும் இருக்கு. அன்னமூர்த்தி சந்நிதியில் திரும்பினால் கொடிமரம் பக்கம்/ நாம் தரிசனச் சீட்டு வாங்கும் இடம் வரும். அங்கிருந்து கம்பத்தடி ஆஞ்சநேயரையும் கொடிமரத்தையும் வணங்கிவிட்டு வெளியே வந்தால் தாயார் சந்நிதிக்குப் போகும் வழி! பாட்டரி கார் கிடைச்சால் உங்க அதிர்ஷ்டம்!

      Delete
  21. தெளிவான பதிவு எஸ் அவர்களும் மனிதர்கள்தான் கோபம் வரும் எரிச்சலும் வரலாம் கூட்ட நெரிசலில் கர்ப்பக்கிரத்தில் வேர்வை வழிய நின்று பூஜை செய்வதில் சிலசமயம் நெடு நேரமானால் வருவது இயல்பு
    என்ன கடவுளை வைத்து பிசினஸ் செய்யாமல் இருந்தால் மட்டும் போதும் காசுக்குத்தான் விபூதி என்ற நிலைக்கு கூட வந்தச்சு தேடிவரும் பகதர்கள் வாயில்விழுந்து எழாமல் கடவுளையும் திட்ட வைக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்
    மற்றபடி நீங்க சொல்வதை நானும் ஏற்று கொள்கிறேன் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று பேத்தாமல் ஒரு விஷயம் வேண்டுமென்றால் அதற்குண்டான வழிமுறைகளையும் கல்வி என்ற நோக்கத்தில் சமஸ்கிருதத்தையும் ஆகமவிதிகளையும் கற்று கொண்டு இதில் இறங்குவது நல்லது தான் தமிழில் அர்ச்சனை செய்வதால் கேட்பவர் அனைவர்க்கும் புரியும்,புரிய வேண்டுமென்றும் என்பதற்க்காவே எதிர்ப்புகள் இருக்கின்றன இருந்தும் எந்த பணிக்கு போனாலும் அந்த பணிக்கு உண்டான விஷயத்தை முழுவதும் அறிந்திருப்பதும் ஒரு சவால் தானே
    கடவுள் என்பதே =கட +உள் உன்னில் தேடு கடவுளை
    கோவில்களை இப்படியும் பார்க்கலாம் பல நல்ல சுயநலமற்ற ஆன்மாக்கள் கால் பதித்த இடம் அந்த நல்ல உள்ளங்களின் வைப்பிரேஷன் அங்கு இருக்கலாம் நம்மை ஆசிர்வதிக்கலாம் நம் வேண்டுதலுக்கு செவி சாய்க்கலாம்
    கடைசியாக ஆதிராவுக்கு ஒரு ஜெ தோழி உனக்காக உன் பெயரில் பதிவே வந்திடுச்சுடோய்

    ReplyDelete
    Replies
    1. கடவுளை வைத்துச் செய்யப்படும் வியாபாரங்களைத் திருச்செந்தூர், பழநி ஆகிய கோயில்களில் காணலாம். இங்கே ஶ்ரீரங்கம் கோயிலிலும் வியாபாரம் நடந்தாலும் எப்படியோ தரிசனம் கிடைச்சுடும். ஆனால் திருச்செந்தூர், பழனி ஆகிய கோயில்களில் தரிசனம் என்பதே கடினம்! :( மற்றபடி எனக்குத் தெரிந்து மதுரை மீனாக்ஷி கோயில் கோடி அர்ச்சனைக் கமிட்டிக்காரர்கள் நான் சிறு வயதாக இருக்கும்போதிலிருந்தே தமிழில் அர்ச்சனைகள் செய்து வந்தார்கள்! சம்ஸ்கிருதமும் செய்யப்படும். தமிழிலும் செய்யப்படும். கோடி அர்ச்சனை மட்டும் கட்டாயமாய்த் தமிழில் தான்!

      Delete
  22. இணையம் மறுபடி மறுபடி படுத்தல்! :(

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உங்களுக்கு நெட் நேக்குக் கொம்பியூட்டர்:) மீயும் எவ்ளோ கஸ்டப்பட்டு மொபைல் கொமெண்ட்ஸ் எல்லோ கொடுத்துக்கொண்டிருக்கிறேன்:)..

      Delete
    2. இன்னிக்குக் காலங்கார்த்தாலே இருந்து படுத்தித் தள்ளியது இணையம்! வேடிக்கை என்னன்னா மொபைலில் இருக்கு! கணினி, ஐபாடில் வரலை! :)

      Delete
  23. "உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
    உடம்பினை நான் இருந்து ஓம்புகின்றேன்!" - இதுவும் ஒரு காரணம், உடம்பிலே திருநீறு பூசிக்கொள்வது (திருமண் தரித்துக்கொள்வது). அந்த Bபாவம் மனதில் வந்துவிட்டால், மனிதன் தன் அடுத்த உயர்வான நிலையை வாழும்போதே எய்தமுடியும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நெ.த. இது குறித்தும் எழுதணும். உங்க ஊர் போய்ச் சேர்ந்தாச்சா? பத்துநாட்கள் குடும்பத்தோடு இருந்துவிட்டுத் தனியா இருப்பது கஷ்டம் தான்! இதுவும் கடந்து போகும்!

      Delete
    2. இங்கு வந்து ரெண்டு நாள்தான் ஆகிறது. இன்னும் செட்டில் ஆகவில்லை. (அதற்குள் எங்கள்பிளாக் ஆசிரியர்களில் ஒருவரைச் சந்தித்துவிட்டேன்) விடுமுறை தினங்கள் ஆனதால் திருப்பதியோ ஸ்ரீரங்கமோ இந்த முறை தரிசனத்துக்குச் செல்லவில்லை.

      Delete
  24. மிக மிக அருமையான தெளிவான பதிவு கீதா.
    நம் கோவில்களில் , சென்னையில் சொல்கிறேன்,
    பலப்பல விதமான அர்ச்சகர்களைப் பார்த்தாச்சு. கபாலீஸ்வரர் கோவிலில் மட்டும் நிம்மதி பரிபூரணம்.
    மற்ற கோவில்கள், அந்தந்த மனிதர்களைப் பொறுத்தது.

    திருப்பதி போகும் எண்ணத்தைக் கைவிட்டதே அங்கு நடைபெறும் தள்ளு சமாசாரத்தில்.
    காலில் வலுவும் இல்லை.
    வி ஐபி பிரச்சினைகள் வேறு.
    இங்கு அப்படி வேறுபாடுகள் பட்டர்களிடம் இல்லை.
    இன்னும் தெளிவு வரட்டும்.
    அதிரா வழியாக அற்புதப் பதிவு கிடைத்தது கீதா மா. அதிராவுக்கும் உங்களுக்கும் மிக நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, உங்க கருத்துக்கு மிக்க நன்றி. நாங்க கடைசியாத் திருப்பதி போனது 2007 ஆம் ஆண்டில்! அப்போ நடந்த தள்ளுமுள்ளில் நான் கீழே விழ அதுக்கப்புறமா ஒரு பயம்! பையர் போனபோது கூட எங்களை அழைத்துச் செல்ல மறுத்துவிட்டார். ஆனால் இப்போப் போகணும்னு ஒரு ஆசை! மூத்த குடிமக்களுக்குச் சலுகைகள் கொடுப்பதால்! அதுவும் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி வேறே! இதுக்கு முன்னே நாங்க நாயுடுவின் ஆட்சிக்காலம் (ஒன்றுபட்ட ஆந்திராவாக இருந்தப்போ) திருப்பதி போனப்போ வெகு எளிதாகவும் சுலபமாகவும் தரிசனம் கிடைக்கப் பெற்றோம். அந்த முறை திருமலையின் மேலே எல்லாம் கூடச் சென்று வர முடிந்தது!

      Delete
  25. கீதாக்கா... ஏதோ நேற்றுத்தான் நவராத்திரி எப்போ ஆரம்பம் என அமளிப்பட்டமாதிரி இருக்கு... அதுக்குள் கந்தசஷ்டி பாரணையும் வந்துவிட்டது... எப்படிப் பறக்கிறது காலம்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரா, மீள் வருகைக்கு நன்றி. இதோ கொஞ்ச நாட்களில் கார்த்திகையும் வந்துடும்! :)

      Delete
  26. சகோதரி கீதா சாம்பசிவம்/கீதாக்கா மிக மிகத் தெளிவான, விளக்கமான, அழகான பதிவு என்றால் வந்த கருத்துகளும் ஒவ்வொன்றும் அருமை. சிந்திக்க வைக்கிறது. யாருடைய கருத்தையும் புறம் தள்ள முடியாத அளவு அவரவர் அனுபவங்கள், அதனால் விளைந்த கண்ணோட்டங்கள், சிந்தனைகள் என்று மிக அருமை. இங்கு எல்லோருமே எல்லா கருத்துகளையும் சொல்லிவிட்டதால் வேறு இல்லை.

    தமிழ்நாட்டில் நீங்கள் சொல்லியிருப்பது போல் யதுகிருஷ்ணன் போல் வருவது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே. நல்லதேநடக்கட்டும் என்று பிரார்த்திப்போம். அது போல் இறைவன் என்பவர் நமக்குத் தோழரே அவர் பனிஷ்மென்ட் எதுவும் கொடுக்கமாட்டார். அதைப் பலரும் புரிந்து கொள்ளாததால்தான் என்ன இது இறைவன் எதுவும் செய்ய மாட்டேன்றார் என்று கேள்வி எழுப்புவதும், சாடுவதும் நடக்கிறது. நல்லது நடந்தால் கண்டு கொள்ளாமல் கெட்டது நடந்துவிட்டால் இறைவனே இல்லை என்பதும்...இத்தனை அநீதிகள் நடக்குதே இறைவன் எங்கு போனான் என்று கேட்பதும்....
    இறைவனைப் புரிந்து கொள்வது என்பது அத்தனை எளிதல்லவே! மனித மனங்கள்! இறைவனை ஒவ்வொரு நிமிடமும் நாம் நேசித்தால் இது போன்றவை எழாது! அந்தப் புரிதலும் கிடைப்பது அரிதுதான்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசிதரன். அனைவரின் சிந்தனைப் பகிர்வும் மிக அருமை தான். தாமதமாக வந்தாலும் கருத்திட்டமைக்கு நன்றி.

      கீதா, நீங்கள் சொல்வது போல் இறைவனைக் குற்றம் சொல்வது முழுத் தப்பு! மற்றவரை நேசிப்பதும் இறைத் தன்மையில் ஒன்றே என்பதைப் புரிந்து கொண்டால் போதும்.

      Delete