எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, December 18, 2019

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள்! 2

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள்! 2
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்கு (ச்)
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும், பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

 மலர்க்கோலம் க்கான பட முடிவு


இறைவனை அர்ச்சிக்கப் பூக்கள் தேவை.  ஆகவே இன்று பூஜைக்கு உகந்த மலர்க்கோலம் போடலாம்.

நோன்பு எப்படி இருக்கவேண்டும் என்னும் விதிமுறைகளை இங்கே ஆண்டாள் சொல்கிறாள்.  எந்நேரமும் ஈஸ்வர தியானமாக அந்தப் பாற்கடலுக்குள் யோகநித்திரை செய்து கொண்டிருக்கும் பரந்தாமனின் திருவடிகளை அடையவேண்டுமெனில் தினந்தோறும் நீராடித் தூய்மையாக இருந்தால் மட்டும் போதாது.  மையிட்டுக் கொள்ளாமல் பூக்களைச் சூடாமல், செய்யக்கூடாதவற்றைச் செய்யாமல், தீய சொற்களைச் சொல்லாமல், தீய செயல்களைச் செய்யாமல் ஞானியர்க்கும், மற்றும் இல்லாதவர்க்கும் அவரவருக்கு வேண்டியவற்றை தானம் செய்தும் இவ்வுலகம் உய்யுமாறு மட்டுமின்றி நம்மால் மற்றவரும் மனம் உகந்து மகிழ்ச்சியுடன் இருக்குமாறும் மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கண்ணன் பிறப்பு க்கான பட முடிவு

வையத்து வாழ்வீர்காள் என்று விளிக்கும் ஆண்டாள் இவ்வுலக வாழ்க்கையைப் பெரிதாகக் கூறுகிறாள். இங்கே இவ்விதம் கூறுவதன் காரணம் பரமனோ பூமியில் வந்து ராமனாக அவதரித்து மனித வாழ்க்கையில் உள்ள எல்லாக் கஷ்டங்களையும் அநுபவித்திருக்கிறான். அதே போல் கண்ணனாக வந்து ஒரு சின்னஞ்சிறு குழந்தை எப்படி எல்லாம் பெற்ற தாய்க்கும், தந்தைக்கும் ஆநந்தத்தைத் தருமோ அப்படிக் கொடுத்திருக்கிறான்.அதோடு மட்டுமா?? கோபிகைகளின் தாபத்தைத் தீர்க்கிறான். ஒவ்வொரு கோபியும் கண்ணனைத் தங்களுடனேயே இருக்கிறவனாய்க் காண்கின்றார்கள். ஒருத்தியிடம் விளையாடினால், இன்னொருத்தியிடம் கோவிக்கிறான். மற்றொருத்திக்கு மாடுகறக்க உதவினால், வேறொருத்தியின் மாடுகளை மேய்க்கிறான். ராதையுடனோ கேட்கவே வேண்டாம். புல்லாங்குழலை ஊதிக்கொண்டு ஆடிப் பாடிக் களிக்கிறான்.அவனுடைய ராஸக்ரீடையின் முதல் ரஸிகேஸ்வரியாக ராதையும் இருக்கிறாள். இப்படி அந்தப் பரந்தாமனே வைகுந்தம் வேண்டாம், பூமிக்கு வந்தால் அங்கே என் அடியார்களோடு ஆடிப்பாடிக்கொண்டு அவர்கள் சொன்னவண்ணம் கேட்டுக்கொண்டு இருக்கிறதே சுகம் என்று ஓடோடி வந்துவிடுகிறான் அல்லவா?அதனாலேயோ என்னமோ ஆண்டாள், வையத்து வாழ்வீர்காள் என்று கூப்பிடுகிறாள்.

ராசக்ரீடை க்கான பட முடிவு

மேலே அவள் கூறுவது எல்லாம் விரத நியமங்கள். விரதம் இருப்பது என்பது வெறும் வயிற்றுக்கு உண்ணாமல் பட்டினி இருப்பது மட்டுமல்ல. உடல் மட்டுமில்லாமல் உள்ளத் தூய்மையும் பெறவேண்டும். அதற்கு ஆண்டாள் சொல்லும் விரத நியமங்களைப் பாருங்கள்:

பாற்கடலில் பையத் துயிலுகிறானாம் பரமன்.

பாற்கடல் க்கான பட முடிவு

பாற்கடலில் அவன் என்ன தூக்கம் தூங்குகிறான்?? அது யோக நித்திரை அல்லவா?? கீழே ஆதிசேஷன் எதுக்கு? குண்டலினி எப்படி உறங்குகிறதோ அதைச் சுட்டத் தானே. ஐந்து இந்திரியங்களையும் ஐந்து முகங்களாய்க் கொண்ட ஆதிசேஷன் மேல் ஆண்டவன் யோகநித்திரை கொண்டிருக்கிறான். ஆக நம் மனம், வாக்கு, காயம் அனைத்துக்கும் அதிபதியான அவன் பைய=மெல்லத் தான் துயிலுகிறானாம். அடியாருக்கெல்லாம் ஓடோடி வந்து அருள் செய்யும் பரமன் மெல்லத் தானே தூங்க முடியும்??

அவனுடைய திருவடித் தாமரைகளை நினைந்து பாடுவோம் என்னும் ஆண்டாள், நோன்பு நூற்கும் நியமங்களாய் நெய்யுண்ணோம், பாலுண்ணோம், என்றும் நெய்க்கும், பாலுக்கும் தடை விதிக்கிறாள். ஆஹா, இது என்ன??? கண்ணனுக்குப் ப்ரீதி நெய்யும், பாலும் தானே? ஆமாம், கோகுலத்திலும் நெய்யும், பாலும் தானே ஓடும்??ஆம், ஆனால் அதை நாம் தான் உண்ணக் கூடாது. கண்ணனுக்கு அர்ப்பணிக்கவேண்டும். தூய்மையான உள்ளத்தோடு நெய்யும், பாலும் சேர்க்காமல் நம்மிடம் இருப்பதை அந்தக் கண்ணனுக்கே எனக் கொடுத்துவிடுவோம். இங்கே பாற்கடலில் இருக்கும் பரமனைப் பார்த்த கண்களுக்கு அதன் பின்னரும் உணவில் நாட்டம் இருக்குமா என்றும் கொள்ளலாம்.

ஆண்டாள் திருப்பாவை பாடல் க்கான பட முடிவு

பெண்களாகிய நாம் ஆடை, ஆபரணங்களால் அலங்கரித்துக்கொள்வதில் நாட்டம் உடையவர்கள். ஆனால் இப்போது கண்ணனுக்காக அதையும் நாம் தியாகம் செய்யவேண்டும். காலை சீக்கிரமே எழுந்து குளித்து, கண் மை இட்டு கண்களில் எழுதாமல், மலர்களால் நம்மை அலங்கரித்துக்கொள்ளாமல், நெய், பால் சேர்க்காமல் உணவு அருந்தி அந்தப்பரமனின் திருவடி தரிசனத்தை நினைத்து அவன் புகழ் பாடிக்கொண்டிருப்போம். இப்படி இருக்கும் நாட்களில் நாம் செய்யாதன எதுவும் செய்யோம். அதாவது நற்செயல்களையே செய்யவேண்டும், நல் எண்ணங்களையே சிந்திக்கவேண்டும். நல் வார்த்தைகளையே கூறவேண்டும். தீங்கு நினையாமல் இருக்கவேண்டும். நல் சொற்களைப் பேசவேண்டும், தீய சொற்களைப் பேசக் கூடாது. இதைத் தான் ஆண்டாள் தீக்குறளைச் சென்றோதோம் என்கிறாள். உடல் மட்டும் சுத்தமாய் இருப்பது விரதம் இல்லை, உடலோடு மனமும் சேர்ந்து சுத்தமாக இருக்கவேண்டும். அர்ப்பணிப்பு உணர்வோடு ஆண்டவனிடம் நம்மையே நாம் அர்ப்பணித்தால் அவன் நமக்கு மோக்ஷத்தைக் கொடுப்பான்.

ஆண்டாள் திருப்பாவை பாடல் க்கான பட முடிவு

அது மட்டும் போதாது. ஐயமும், பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி என்று மேலும் சொல்கிறாள். ஐயம் என்பது ரிஷிகள், துறவிகள் , பிரமசரிய விரதம் இருக்கும் பிரமசாரிகள் போன்றோருக்குப் போடும் பிக்ஷை என்று கூறலாம். ஐயம் இங்கே சந்தேகம் என்ற பொருளில் வரவில்லை. "ஐயமிட்டு உண்" என்பதும் உயர்ந்ததொரு கருத்தைத் தான் கூறுகிறது. துறவிகள், ரிஷிகள், முனிவர்கள், பிரமசாரிகள் போன்றோருக்கு நாம் தினமும் பிக்ஷை அளிக்கவேண்டும். அவர்களைத் தேடிப் போயாவது அளித்தல் நம் கடமை என்பார்கள். பிரமசாரிகள் பிக்ஷை எடுத்தே உண்ணவேண்டும் என்பது ஒரு காலகட்டத்தில் கட்டாயமாய் இருந்தது. ஒரு முறை பிக்ஷை கேட்ட வீட்டில் மறுமுறை போயும் கேட்கக் கூடாது. அதே போல் ஒரு வீட்டில் கேட்டுக்கொண்டே நிற்கக் கூடாது என அதற்கும் பல நியமங்கள் உண்டு. அத்தகையதொரு உயர்ந்த தருமத்தை நாம் தேடிப் போய்ச் செய்யவேண்டும் என்கிறாள் ஆண்டாள். பொதுவாய் பிக்ஷையையே கேவலமாய் எண்ணும் இந்தக் காலத்தில் இதென்ன ஐயமும், பிச்சையும்னு இரண்டு தரமும் ஒண்ணையே சொல்லி இருக்காளேனு தோணும்.

மேற்கண்டவர்கள் மட்டுமின்றி ஏழைகள் இருப்பார்களே அவங்களுக்கு உணவு அளிப்பதைத் தான் இரண்டாம் முறை சொல்லி இருக்கும் பிச்சை என்ற வார்த்தை குறிக்கும். ஏழைகள், முதியவர்கள் என்று சாப்பிட உணவில்லாமல் பிச்சை கேட்டு வரும் நபர்களுக்கும் நம்மிடம் இருப்பதைக் கொடுக்கவேண்டும் என்கிறாள் ஆண்டாள். இவை எல்லாத்தையும் கொடுத்துவிட்டால் நாம் உய்யுமாறு கண்ணன் அருள் நமக்குக் கிடைக்கும். நாம் அனைவரும் உவப்புடன் இருப்போம் பெண்களே.இங்கும் அதே பக்தி தான். ஆனால் இது கொஞ்சம் மாறுபட்டது. நாராயண பட்டத்திரி கண்ணனை வேண்டுகிறார் இவ்விதம்:

"பவத்பக்திஸ் தாவத் ப்ரமுக மதுரா த்வத்குண ரஸாத்
கிமப்யாரூடா சேத் அகில பரிதாப ப்ரசமநீ
புநஸ்சாந்தே ஸ்வாந்தே விமல பரிபோதோதய மிலந்
மஹாநந்தாத்வைதம் திஸதி கிமத; ப்ரார்த்யம் அபரம்"

பரமனின் செலுத்தும் பக்தியானது அவனுடைய கருணையால் அடியார்களுக்கு என ஓடோடி வந்து அருளும் தயாள குணத்தால் இனிமையாக இருப்பதாயும், அனைவரின் மனத் தாபங்களையும் அடியோடு அகற்றும் சக்தி படைத்தும், உள்ளத்தில் ஞாநத்தை உண்டாக்குவதாயும், கடைசியின் அவனோடு ஒன்றாய்க் கலக்கும் பேரானந்தத்தைத் தருவதாயும் இருக்கிறதாம். அதோடு மட்டுமா?? அவன் இருக்குமிடம் வைகுந்தம் என்றாலும் இங்கே பட்டத்திரியோ க்ஷேத்திராடனம் செய்யவேண்டும் என்றும் ஆசை கொள்கிறார். வாத நோயால் பீடிக்கப் பட்டவருக்கு க்ஷேத்திராடனம் செய்யவேண்டுமாம்.

நாராயணீயம் க்கான பட முடிவு

""விதூய க்லேஸாந் மே குரு சரணயுக்மம் த்ருத ரஸம்
பவத்க்ஷேத்ர ப்ராப்தெள கரமபி ச தே பூஜந விதெள
பவந்மூர்த்யாலோகே நயநம் அத தே பாததுலஸீ
பரிக்ராணே க்க்ராணம் ஸ்ரவணமபி தே சாருசரிதே"

பக்திக் கடலில் மூழ்கித் திளைக்கும் பட்டத்திரி தன் கால்கள் பகவானின் திவ்ய க்ஷேத்திரங்களைத் தவிர மற்ற இடங்களுக்குச் செல்லவேண்டாம் எனவும், கைகள் பகவானின் வழிபாட்டையே செய்யவேண்டும் எனவும், நாசிகள் பகவானுக்கு அர்ப்பணம் துளசியைத் தவிர மற்றப் பொருட்களின் மணத்தை நுகரவேண்டாம் எனவும், கண்கள் எப்போதும் அந்த திவ்ய மங்கள சொரூபத்தையே காணவேண்டும் எனவும், காதுகள் பகவானின் சரித்திரத்தை அல்லாது மற்றவற்றைக் கேட்கவேண்டாம் என்றும் விதியைச் செய்யுமாறு பகவானை வேண்டிக் கொள்கிறார். ஆண்டாளோ நாமே கட்டுப்பாடாக இருக்கவேண்டும் என்று கூற, பட்டத்திரியோ, பகவான் கிட்டேயே போய் என் மனம், நா, கண், காது, மூக்கு, கைகள், கால்கள் என அனைத்தையும் வேறொரு விஷயத்தை நினையாமல், காணாமல், பேசாமல், கேட்காமல், நுகராமல், நடக்காமல், செய்யாமல் இருக்கும்படி நீயே அருள் புரிந்துவிடு என் அப்பனே எனக் கேட்டுவிடுகிறார். இது கொஞ்சம் யதார்த்தமாய்த் தெரியுது எனக்கு. பட்டத்திரி என்னை மாதிரி ஆளோ??

மார்கழி 2 ஆம் நாளுக்கான பதிவு இது. படங்கள் முன்னர் போட்டவை அல்ல. புதியன! மற்றபடி எழுதி இருப்பது முன்னால் எழுதியவை தான்! தொடர்ந்து போடக் கண்ணனின் ஆதரவும் அவன் அருளும் வேண்டும். ஓம் நமோ நாராயணாயா! படங்களுக்கு நன்றி கூகிளார்
    

15 comments:

 1. படித்தேன், ரசித்தேன்.

  ReplyDelete
 2. தொடர்ந்து வருகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி

   Delete
 3. பதிவு நன்றாக இருக்கிறது.
  படங்கள் அருமை.
  தொடர்ந்து போடக் கண்ணனின் ஆதரவும், அவன் அருளும் கிடைக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. அனைத்தையும் வேறொரு விஷயத்தை நினையாமல், காணாமல், பேசாமல், கேட்காமல், நுகராமல், நடக்காமல், செய்யாமல் இருக்கும்படி நீயே அருள் புரிந்துவிடு என் அப்பனே எனக் கேட்டுவிடுகிறார்.....  முழு சரணாகதி...

  அனைத்தும் மிக சிறப்பு ..

  ReplyDelete
 5. அத்தனை பக்தியையும் பார்த்தாகிவிட்டது. பட்டத்திரியைப் பற்றிச் சொன்னது இன்னமும் உகக்கிறது.
  என்ன ஒரு சொல்லாற்றல் இந்தக் கோதைக்கு. அத்தனையும் பெற்று எல்லோரும் வளமாக இருப்போம். மிக நல்ல பதிவு கீதாமா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி. இதெல்லாம் படிக்கப் படிக்க இன்பம் தான். ஆனால் நடைமுறையில் தான் வரமாட்டேன் என்கிறது.

   Delete
 6. மிக அழகாக இரண்டாவது பாசுரத்தை அலசியிருக்கிறீர்கள்.

  இரண்டுவித தானங்களையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  ஆந்தனையும் கைகாட்டி - ஆகும் தனையும் கை காட்டி - நம்மால் முடிந்த அளவு இடவேண்டும் என்பது உட்பொருள்.

  தீக்குறளைச் சென்று ஓதோம் - இதற்கு, பெருமான் கண்ணனிடத்திலே, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிப் பேசக்கூடாது என்றும் பொருள் கூறுவர். பகவானிடத்தில், அந்தப் பெண் இப்படிப்பட்டவள், நானே உனக்குப் ப்ரீதியானவள், இவள் இப்படிப்பட்டவள் என்றெல்லாம் குற்றங்குறைகளைச் சொல்லக்கூடாது என்பது பொருள் என்பர்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நெல்லைத்தமிழரே!

   Delete
 7. வணக்கம் சகோதரி

  நல்ல பதிவு. பக்தியோடு இருப்பது வேறு..! பக்தியில் மூழ்கி மற்றவற்றை மறந்து உன்னருள் ஒன்றுதான் வேண்டுமென நினைத்திருப்பது வேறு..! என்ற தத்துவத்தை தங்கள் பதிவு அழகாக விளக்குகிறது. ஸ்ரீ ஆண்டாளின் அழகான பாசுரங்களைப் பாடி மகிழ்ந்தேன். விளக்கங்கள் அருமை. பட்டத்திரியின் பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது. "இந்த மாதிரி முழு நம்பிக்கையை இறைவனிடம் வைக்க எனக்கு இன்னும் எத்தனை பிறவிகளோ?" என்ற எண்ணம் வருகிறது. அழகான படங்கள். அருமையான பதிவு. படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 8. மார்கழி திங்கள் படிக்கப்படிக்க நன்று.

  ReplyDelete