எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, January 02, 2020

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 17

திருப்பாவைப் பாடல்கள் 17 க்கான பட முடிவு  திருப்பாவைப் பாடல்கள் 17 க்கான பட முடிவு


திருப்பாவைப் பாடல்கள் 17 க்கான பட முடிவு  திருப்பாவைப் பாடல்கள் 17 க்கான பட முடிவு


அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்த கோபாலா! எழுந்திராய்!
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்!
அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த
உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்!
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!

குத்து விளக்குக் கோலம் க்கான பட முடிவு   குத்து விளக்குக் கோலம் க்கான பட முடிவு
பொங்கல் பானை கோலம் போடலாம்.  ஏனெனில் இங்கே தண்ணீரும், சோறும் கொடுத்து அறம் செய்யும் நந்தகோபன் என அழைப்பதிலிருந்து அன்னதானத்தின் முக்கியத்துவம் புரியவருகிறது.  அந்தக் காலத்திலேயே நந்தகோபன் அனைவரும் திருப்தி என்னும் அளவுக்கு உணவளித்து தர்மம் செய்திருக்கிறான்.  அவன் மனைவியான யசோதையைக் குல விளக்கு என அழைக்கிறாள்.  குத்துவிளக்குக் கோலமும் போடலாம்.

                 பொங்கல் பானை கோலம், க்கான பட முடிவு  பொங்கல் பானை கோலம், க்கான பட முடிவு

ஓங்கி உலகளந்த உத்தமன் என்று வாமன அவதாரத்தைப் பாடிய ஆண்டாள் மீண்டும் இங்கு வாமனனாய் வந்து திரிவிக்கிரமனாய் மாறி உலகளந்த பெருமானைக் குறித்துப் பாடி இருக்கிறாள்.  மஹாபலி தான் நல்லாட்சி புரிவதால் கர்வம் கொண்டு மூவுலகையும் அடக்கி ஆள முற்படவே அவனை கர்வபங்கம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.பக்தி இருந்தால் மட்டும் போதாது. கர்வம் கொள்ளக் கூடாது.  இங்கே கண்ணனின் மூத்தவன் ஆன  பலதேவனையும் அழைத்துக் கண்ணனோடு நீயும் எழுந்திரு என்கிறாள்.

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்த கோபாலா! எழுந்திராய்!= அம்பரம் என்றால் வானம் என்ற பொருள் மட்டுமில்லாமல் கடல், ஆடை, படுக்குமிடம் என்றும் வருகிறது. இங்கே எது பொருத்தம் என்று பார்த்தால் ஆடை பொருந்தும்னு நினைக்கிறேன். நந்தகோபன் அறம் செய்கிறானாம். அதுவும் எப்படிப்பட்ட அறம்? ஆடை, ஆபரணங்கள், தண்ணீர்ப் பந்தல் வைத்தல், பசித்தவருக்குச் சோறு அளித்தல் என பலவகைப்பட்ட தானங்களையும் அளிக்கிறான். அதுவும் மனிதருக்கு முக்கியமான நீர், உணவு, ஆடை மூன்றையும் அளிக்கிறான். இப்படிப்பட்ட திவ்யமான கொடைகளைச் செய்யும் நந்தகோபனே , எழுந்திரப்பா என்கிறாள் ஆண்டாள்.

கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்!= ஆயர்குடிப் பெண்கள் அனைவருமே வஞ்சிக்கொடி போன்ற மென்மையான தேகம் படைத்தவர்கள் அவர்கள் அனைவரிலும் கொழுந்தைப்போன்ற மிக மென்மையான தேகம் படைத்த யசோதையே, அவளை குல விளக்கு என்றும் கூறுகிறாள். ஆயர் குலமே அவளால் பெருமை அடைந்ததன்றோ? ஆயர் குலத்து விளக்கான கண்ணனைப் பாலூட்டித் தாலாட்டி, குளிப்பாட்டிச் சீராட்டி வளர்த்தவள் அன்றோ? பெற்றவள் ஆன தேவகிக்கும் கிடைக்காத மாபெரும் பேறைப் பெற்றவள் குலவிளக்கல்லாமல் வேறு என்ன? எங்கள் பெருமாட்டியே, யசோதா, அதென்ன அறிவுறாய்?? கண்ணனின் தாயல்லவா அவள்? கண்ணன் அவளுக்கு எத்தனை முக்கியம்? அத்தகைய கண்ணனை ஆயர்குலப் பெண்களுக்காகத் தரச் சொல்லிக் கேட்கிறாள். எங்கள் கஷ்டத்தைப் பெண்ணான நீயே புரிந்து கொள்ளவேண்டாமா தாயே! கண்ணனை எங்களோடு அனுப்பி வைப்பாய்!

அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த
உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்!= இங்கே வரும் அம்பரம் வானத்தையே சுட்டும். அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த உம்பர்கோமான் என்கிறாள் ஆண்டாள். மஹாபலியிடம் தானம் கேட்ட கதை ஏற்கெனவே பார்த்தோம் அல்லவா? தானம் தந்தேன் என்று மஹாபலி தாரை வார்க்கும் நீரைப் பெற்றுக்கொள்ளும் முன்னே ஒரு காலானது விண்ணையும் தாண்டி ஏழு உலகங்களையும் தாண்டி வளர்ந்து கொண்டே செல்கிறது. இப்படி ஓங்கிக் காலை வைத்து உலகளந்த உத்தமன் என்று கூறுகிறாள் ஆண்டாள். அத்தகைய உத்தமனே எழுந்திரப்பா! என்கிறாள். ஆனால் கண்ணனோ பலராமன் அருகே படுத்திருக்க அண்ணனைக் கட்டிக்கொண்டல்லவோ படுத்திருக்கிறான்?? அடடா? மறந்துட்டோமே,

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!=கருநீல நிறக் கண்ணனை அணைத்துப் படுத்திருக்கும் பலராமனோ சிவந்த நிறம் படைத்தவன். செம்பொன்னைப் போல் சிவந்த அவன் திருப்பாதங்களைப் பார்த்துக்கொண்டே அத்தகைய பொலிவு படைத்த பாதங்களை உடைய பலராமா, பலதேவரே, எங்கள் செல்வரே, உன் தம்பியோடு தூங்குகிறாயே? தம்பியையும் எழுப்பிட்டு நீயும் எழுந்திரப்பா என்கிறாள்.

இங்கே கண்ணனே உண்ணும் உணவு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை என ஏற்கெனவே ஆழ்வார் கூறியபடி கண்ணனே எங்களுக்கு ஆடை, கண்ணனே எங்களுக்குச் சோறு, கண்ணனே எங்களுக்குத் தண்ணீர் என்று கூறி இருப்பதாயும் பொருள் கொள்ளலாம். இப்படி அனைத்திலும் கண்ணனைக் காணும் ஆண்டாளைப்போல் பட்டத்திரி கூறுவது:

த்ரைலோக்யம் பாவயந்தம் த்ரிகுணமயமிதம் த்ரயக்ஷரஸ்யைக வாச்யம்
த்ரீஸாநாமைக்ய ரூபம் த்ரிபிரபி நிகமைர் கீயமாந ஸ்வரூபம்
திஸ்ரோவஸ்த்தா விதந்தம் த்ரியுகஜநிஜுஷம் த்ரிக்ரமாக்ராந்த விஸ்வம்
த்ரைகால்யே பேதஹீநம் த்ரிபிரஹமநிசம் யோக பேதைர்பஜே த்வாம்

மஹாவிஷ்ணுவே முக்குணங்களின் வடிவானவர். மூவுலகையும் அவரே தோற்றுவிக்கிறார். ஓங்காரப் பொருளும் அவரே. மும்மூர்த்திகளும் அவருள்ளே அடக்கம். மூன்று வேதங்களும் அவரைப் போற்றுகின்றன. மூன்று அவஸ்தைகளையும் அவரே அறிவார். மூன்று யுகங்களிலும் அடுத்தடுத்து அவதரிப்பவரும் அவரே. இவரே மூன்று அடிகளால் இவ்வுலகையும் அளந்தார். மூன்று காலங்களிலும் மாறுபடாதவர் இவரே. இப்படி மூன்று என்ற எண்ணிக்கையுடன் கூடிய இவருக்கு என் மூன்று யோகங்களாலும் நமஸ்காரம்.

படங்களுக்கு நன்றி கூகிளார்!

8 comments:

  1. படித்தேன், தெரிந்து கொன்டேன்.

    ReplyDelete
  2. 17ம் நாள் பாடலுக்கு விளக்கம் அருமை.படங்கள் அருமை.கோலம் நல்ல தேர்வு.

    ReplyDelete
  3. கடைசி பத்தியைப் படிக்கும்போது நாங்கள் அண்மையில் காஞ்சீபுரத்தில் பார்த்த உலகளந்த பெருமாள் கண்முன் வந்து நின்றதை உணர்ந்தேன். (மிகவும் அருமையான பிரம்மாண்டமான மூலவர்) மிகவும் சிறப்பு.

    ReplyDelete
  4. அன்பு கீதாமா அருமையான விளக்கமான உரை.

    ஒவ்வொருக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லி
    உய்ர்ந்த கருத்துகளைச் சொல்லி இருக்கிறீர்கள்.
    நந்தகோபனும் யசோதையும் செய்த தர்மங்கள்
    கண்ணனை அவர்களிடம் சேர்த்தது.
    வரப் போகும் மாமியார்,மாமனாரிடம் ஆண்டாளின் பக்தி அழகு.
    மூன்று வேதம் ,மும்மூர்த்தி என்று பட்டத்ரி உணர்ந்து பேசுவது

    மிக மியக் அருமை. கோலங்கள் பழைய நினைவுகளை மீட்கின்றன.
    அம்மாவின் கோலப்புத்தகம் நினைவில் ஆடுகிறது. நன்றி கீதாமா.

    ReplyDelete
  5. தொடர்கிறேன் நன்று...

    ReplyDelete
  6. விளக்கிலிருந்து விளக்காக
    விளக்கங்கள் தோன்றுகின்றன...

    க்ருஷ்ண தரிசனம் இனிமை..
    மகிழ்ச்சி.. நன்றி...

    ReplyDelete
  7. கருத்துத் தெரிவித்திருக்கும் ஸ்ரீராம், கோமதி அரசு, முனைவர் ஜம்புலிங்கம், வல்லி சிம்ஹன், துரை செல்வராஜு, கில்லர்ஜி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. தனியாகச் சொல்ல முடியலை. மன்னிக்கவும். _/\_

    ReplyDelete
  8. பாசுரத்திற்கான விளக்கம் சிறப்பு. வழமை போல தேர்ந்தெடுத்துத் தந்த படங்களும் நன்று.

    தொடர்கிறேன்.

    ReplyDelete