ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான்தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
கோலங்கள், படங்களுக்கு நன்றி கூகிளார்
நெருப்பன்ன நின்ற நெடுமாலைக் குறிக்கும் விதமாக ஒளி வீசிப் பிரகாசிக்கும் தீபக்கோலங்களைப் போடலாம். இங்கே கிருஷ்ணாவதாரத்தின் முக்கிய நிகழ்வு சுட்டிக் காட்டப்படுகிறது. தேவகியின் வயிற்றில் பிறந்து உடனேயே கோகுலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு யசோதையின் மகனாய் வளர்ந்த கண்ணனின் பிறப்பைச் சகிக்க முடியா கம்சனின் தீமைகளை அடக்கி ஒடுக்குவதற்காகக் கண்ணன் நெருப்பென்னும்படி நெடுமாலாக நின்றானாம். சாதாரணமாக சிவனையே நெருப்புப் பிழம்பு, ஜோதியாய் நின்றவன் என்போம் அல்லவா? இங்கே கண்ணனையும் சுட்டி இருப்பதில் இருந்து அரியும், சிவனும் ஒண்ணு என்னும் தத்துவம் மறைமுகமாய்ச் சுட்டிக் காட்டப்படுகிறது. அதோடு பக்தர்களின் பக்தியைக் கண்டு அவர்களுக்கு சேவகம் செய்யவும் ஆண்டவன் கீழே இறங்கி வந்துவிடுகிறானாம். பக்தியின் பெருமை அவ்வளவு உயர்ந்தது.
ஶ்ரீயாகிய "திரு"வையே தன்னில் ஒரு அங்கமாய்க் கொண்டவனுக்கு, தன் மார்பில் இடம் அளித்தவனுக்குச் செல்வத்துக்குப் பஞ்சம் ஏது? அத்தகைய உயர்ந்த செல்வத்தைக் கொண்டவனின் செல்வச் சிறப்பையும், பக்தர்களுக்கு அருளும் பெருமானின் சேவகக் குணத்தையும் புகழ்ந்து பாடினால் நம் வருத்தம் தீர்ந்து மகிழ்ச்சியுடன் இருப்போம்.
இங்கே செல்வம் எனக் குறிப்பிடப்படுவது சொத்து, சுகத்தைக் குறிப்பனவல்ல. அளவற்ற எடுக்க எடுக்கக் குறையாத ஞானச் செல்வத்தையே குறிப்பிடுகிறாள் ஆண்டாள். இறைவனுக்கு மாறாத அன்பு செலுத்தினாலே போதும் என்பது இதன் உட்கருத்து.
இங்கே கண்ணன் தேவகி வயிற்றில் பிறந்து யசோதையிடம் வளர்ந்ததை ஆண்டாள் சுட்டுகிறாள்.
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்= தேவகியின் எட்டாவது குழந்தைதான் கம்சனுக்கு யமன் என்பது முன்பே தீர்மானித்த ஒன்று. என்றாலும் கம்சனோ தேவகிக்கு முதலில் வரிசையாய்ப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்று விடுகிறான். அதன் பின்னரே பலராமனின் பிறப்பும் மாற்றப்பட்டு ரோகிணியிடம் போகிறது. கண்ணனோ பத்துமாதங்களும் தேவகி சுமந்து பெற்ற பிள்ளை. இந்தப் பிள்ளை தான் பிறந்து தங்களை ரக்ஷிக்கப் போகிறான். தங்கள் குலவிளக்கு இந்தப் பிள்ளைதான் என்பது தேவகிக்கும் தெரியும்.
ஆகவே அவள் பிள்ளையைக் காக்கத் துடித்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. பிறந்ததோ சிறைச்சாலை. அதுவும் துணைக்கு எவரும் இல்லாத நடு இரவு நேரம். கொட்டும் மழை. யமுனையோ பிரவாஹம் எடுத்து ஓடுகிறது. இந்நிலையில் தேவகி குழந்தையைப் பெற்றெடுக்க அந்தக் குழந்தையை உடனேயே ஒளித்து வளர்க்கத் திட்டமிட்ட பெற்றோர் பெற்ற தாயிடமிருந்து சற்றும் கருணையைக் காட்டிக்கொள்ளாமல் துறக்கத் தீர்மானித்து, அந்தக் குழந்தையைக் கூடையில் வைத்துத் தலையில் சுமந்து சென்ற வசுதேவர் கோகுலத்தில் நந்தனிடம் ஒப்படைக்கிறார்.
இங்கே தான் அந்த மற்றொருத்தி வருகிறாள். மற்றொருத்தி வேறு யாரும் இல்லை. இவ்வுலகிலேயே மிகவும் புண்ணியம் செய்து அந்தப் பரமாத்மாவையே குழந்தையாகப் பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டி, கடிந்து, அலங்கரித்து, ஓடி, விளையாடி அதன் ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு சிணுங்கலையும், ஒவ்வொரு விளையாட்டையும் அநுபவித்து அநுபவித்து வளர்த்த யசோதை ஆவாள்.
உண்மையாகவே அவளை நினைத்தால் பிரமனும், இந்திரனும் மட்டுமல்ல எந்தத் தாயாருக்குமே மனதில் பொறாமை உண்டாகும். அத்தகைய பாக்கியம் செய்த புண்ணியவதியான யசோதையிடம் போய்ச் சேர்கிறான் கண்ணன்.
தேவகியின் வயிற்றில் பிறந்து யசோதையிடம் வளர்ந்து,
தரிக்கிலானாகித் தான்தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே= கம்சனுக்கோ எவ்வாறோ தெரிந்து விடுகிறது. குழந்தை பிழைத்து எங்கேயோ வளர்கிறது என்று. யோகமாயையே பெண் குழந்தையாய் தேவகியிடம் கிடந்து கம்சனுக்கு உண்மையை உணர்த்திவிட்டு மறைகிறாள். அதோடு யசோதைக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்ற விபரமும் தெரியவருகிறது. கம்சனுக்கு உடலும் , உள்ளமும் ஒரு இடத்தில் தரிக்கவில்லை. எப்படியானும் ஏதானும் தீங்கைச் செய்து அந்தக் குழந்தையை அழிக்கவேண்டும். அப்போதுதான் தான் உயிருடன் இருக்கலாம் என்று நினைத்தான். இப்படி நினைந்து நினைந்து அவன் உடல் மட்டுமில்லாமல் உள்ளமும் பற்றி எரிந்ததாம்.
அதோடு யோகமாயா பிறந்திருப்பது சாதாரணக் குழந்தை அல்ல, சாக்ஷாத் அந்தப் பரம்பொருளே என்றும் கூறுகிறாளா? இந்த எண்ணம் அவன் மனதில் நெருப்பைப் போல் பற்றி எரிகிறது. நெடுமாலே வந்து நம்மை அழிக்க வந்துவிட்டானே என்று அவன் உருவமே நெருப்பாய்த் தெரிகிறது கம்சனுக்கு.
உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி= உன்னைப் பெறவேண்டி உன்னோடு நாங்கள் இணையவேண்டி, நீ எங்களுக்கு மோக்ஷத்தை அளிக்க வேண்டி உன்னை நாடி வந்திருக்கிறோம் எங்கள் கண்ணா, பிராட்டியான திரு தங்கும்படியான செல்வமாக எங்களுக்கு நீ இருக்கிறாய், உனக்கும் அவளுக்கும் நாங்கள் சேவகம் செய்து எங்கள் அன்பையும், பக்தியையும் காட்டி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!= இதுவரை நாங்கள் எடுத்த பிறவிகளின் கர்மவினைகள் தீர்ந்து அதன் மூலம் ஏற்பட்ட வருத்தமும் தீர்ந்து நிலையான செல்வமாகிய மோக்ஷத்தைப் பெற்று மகிழ்ந்து இருப்போம்.
கண்ணனே மிகப் பெரிய செல்வம் என்று ஆண்டாள் கூறி அவனைப் புகழ்ந்து பாடுவது அதனினும் பெருஞ்செல்வம் என்று கூறுகிறாள். இதை பட்டத்திரி எப்படிச் சொல்கிறார் என்று பார்ப்போமா?
நம் சரீரத்தில் இருக்கும் அளப்பரிய மோகத்தை நீக்கினாலேயே இறைவனின் திருவடிகளில் மனம் ஒன்றும் என்று கூறுகிறார்.
ஹீ ஹீ மே தேஹமோஹம் த்யஜ பவநபுராதீஸ யத்ப்ரேம ஹேதோ:
கேஹே வித்தே கலத்ராதிஷூச விவஸிதாஸ் த்வத்பதம் விஸ்மரந்தி:
ஸோயம் வஹ்நே: ஸுநோ வா ப்ரமிஹ பரத: ஸாம்ப்ரதஞ் சாக்ஷிகர்ண:
த்வக்ஜிஹ்வாத்யா விகர்ஷந்த்யவஸமத இத: கோபி ந த்வத்பதாப்ஜே
பரம்பொருளே, எனக்கு சரீரத்தின் மீது ஏற்படும் அதீதமான மோகத்தை நீக்கி அருளும். இந்த அதீதமான மோஹத்தால் மனிதர்கள் தம் வயமிழந்து பெண்ணாசையாலும், மனைவியர் மேலுள்ள ஆசையாலும் வீட்டிலும் மற்றப்பொருட்கள் மீதும் அதிக ஆசையை வைத்துக்கொண்டு உம்முடைய திருவடிகளை நினைப்பதையே மறந்து விடுகின்றனர். ஆனால் இந்த உடலோ இறந்த பின்னர் நெருப்புக்கோ அல்லது நாய், நரிகளுக்கோ உணவாகிறது. உயிருடன் இருக்கும்போது இந்த உடலை, மற்ற இந்திரியங்களான, கண், காது, மூக்கு, நாக்கு, கை, கால்கள் போன்றவை அங்குமிங்கும் இழுக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் சேர்ந்து என்னை உம்மிடம் இழுத்துவரவில்லையே, அந்தோ பரிதாபம்! உம்மிடம் என்னை இழுத்துவரச் செய்யும்.
படித்தேன், சுவைத்தேன். ரசித்தேன்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்.
Deleteபட்டத்திரி சொல்லி இருக்கும் பொருளை நான் அடிக்கடி யோசிப்பேன். எனவே எனக்கு மிகவும் இன்றைய அந்தப் பகுதி பிடித்திருந்தது.
ReplyDeleteயோசனை ஆழமாகப் போனால் எல்லாமும் மாறுமே! அதுக்கும் நேரம் வரவேண்டும்.
Deleteநன்று தொடர்கிறேன்....
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Deleteகண்ணன் பிறப்பும் ,மாயை வந்து வானில்
ReplyDeleteதோன்றுவதும் மறக்க முடியாத காட்சிகள்.
அன்பு கீதாமா, வெறுப்பில் வெந்தாலும் கண்ணன் கையால் மாண்டான்
கம்சன்.
மாலின் மேன்மையும் திருவின் அருளும் சேர்ந்தால் அடைய முடியாதது ஒன்றும் இல்லை.
அருமையான விளக்கங்கள்.
ஆமாம், வல்லி, கம்சனுக்கும் மோக்ஷமே கிட்டி இருக்கும் கண்ணன் அருளால்! நான் அதிகம் ரசிக்கும் பாசுரம் இது.
Delete
ReplyDeleteகண்ணனே மிகப் பெரிய செல்வம் என்று ஆண்டாள் கூறி அவனைப் புகழ்ந்து பாடுவது அதனினும் பெருஞ்செல்வம் என்று கூறுகிறாள்//
கண்ணனே நினைக்கும் பேறே பெரிய செல்வம் தான் எல்லோருக்கும் அவ்ர அருள் கிடைத்து விட்டால் வேறு செல்வம் எதற்கு!
வாங்க கோமதி அரசு! ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteஇன்று கோவிலில் பிள்ளைகள் விளக்கும் கோலம் தான் எல்லா இடங்களிலும் போட்டார்கள்.
ReplyDeleteஅப்படியா? நல்லது.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஇன்றைய திருப்பாவை பாசரப் பாடலுக்கு அருமையாய் விளக்கம் தந்திருக்கிறீர்கள். அத்தனையும் படித்து ரசித்தேன். கண்ணனின் அருளையே பெருஞ்செல்வமாக நினைத்து அவனுடன் கலந்து விடும். பக்குவமுள்ள மனதை பெற வேண்டுமென மனம் விழைகிறது. அதற்கான நேரத்தையும் அவன்தான் தந்தருள வேண்டும். அருமையான பதிவு.
பட்டத்திரி அவர்களின் பக்தி உரைகளும் இன்றைக்கு பொருத்தமாக உள்ளது. உடல் மேல், ஐம்புலன்கள்மேல் அதிகமாக பற்று வைக்கிறோம் எனத்தான் தோன்றுகிறது. இல்லையென்றால் இந்த பாழும் உடம்பு சற்று படுத்தினாலும், வைத்தியம் பார்த்து சரியாக்க நினைப்போமா? இருபது நாட்களாக நான் பொருட்படுத்தாமல், பற்று வைக்காமல் இருந்தாலும், வலிகளை அதிகப்படுத்தி என்னை மருந்து மாயம் என எடுத்துக் கொண்டு கவனிக்க வைக்கிறதே.. இந்த பாழும் உடல். அதனால் உங்களின் சென்ற பக்திப் பதிவுகளுக்கு தொடர்ந்து வர இயலவில்லை. எனவே மன்னிக்கவும். இனித் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, உடல்நலம் சரியில்லை என்பது தெரியாது, காணோமேனு நினைச்சேன். ஆனால் யாரையும் கேட்கத் தோன்றவில்லை. இப்போப் பரவாயில்லையா? உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். பதிவுக்கு மெதுவா வந்தால் போதும். பொதுவாக இத்தகைய பதிவுகளுக்குக் கருத்துக்கள் வருவது குறைவே! அதிலும் நான் ராமாயணம் எழுதிட்டு இருந்தப்போப் பல நாட்கள் ஒரு கருத்துக் கூட வராமல் இருந்திருக்கிறது. ஆகவே கருத்துக்கள் அதிகம் வரலை என்பதை நான் ரொம்பப் பெரிசா எடுத்துக்கறதில்லை ஆனாலும் உங்களைப் போன்ற தினம் வருபவர் வரலையே எனத் தோன்றும். அதான் காணோமேனு தேடினேன். உடல் நலத்தைப் பார்த்துக்கொண்டு முடிஞ்சப்போ வாருங்கள்.
Deleteசிறப்பான விளக்கம். தொடரட்டும் பாசுர அமுதம்.
ReplyDelete