எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, January 04, 2020

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 19

திருப்பாவைப் பாடல்கள் 19 க்கான பட முடிவு   திருப்பாவைப் பாடல்கள் 19 க்கான பட முடிவு

திருப்பாவைப் பாடல்கள் 19 க்கான பட முடிவு   திருப்பாவைப் பாடல்கள் 19 க்கான பட முடிவு


குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்!
மைத்தடங் கண்ணினாய்! நீ உன்மணாளனை
எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிறிவாற்ற கில்லாயேல்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்!
 
 விளக்குக் கோலம் க்கான பட முடிவு      விளக்குக் கோலம் க்கான பட முடிவு
   
குத்துவிளக்குக் கோலமும், பூக்களால் ஆன கோலமும் போடலாம்.

       விளக்குக் கோலம் க்கான பட முடிவு   விளக்குக் கோலம் க்கான பட முடிவு

படங்களுக்கு நன்றி கூகிளார்!

அன்னத் தூரிகை குறித்து ஒரு திரைப்படப் பாடலில் கூடக் கேட்டிருக்கோம். அத்தகைய அன்னத்தின் தூரிகை, நல்ல சுத்தமான இலவம்பஞ்சு, மயில் தூரிகை, பூக்கள், கோரை நார் ஆகியவற்றால் ஆன மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேல் நப்பின்னையுடன் வெகு அந்தரங்கமாக உறங்கிக் கொண்டிருந்த கண்ணனுக்கு கோபியரின் அழைப்புக் கேட்கிறது.  ஆனால் நப்பின்னை அவனை விட வேண்டுமே.  ஆகவே வாய் திறக்கவே இல்லையாம்.  ஆகையால் நேரடியாக நப்பின்னையையே அந்தப் பெண்கள் வேண்டுவதாக ஆண்டாள் சொல்கிறாள். மணாளனைப் பிரிய மனமில்லாமல் இருக்கும் நப்பின்னையைக் கண்ணனிடம் தாங்கள் வந்திருப்பதை எடுத்துச் சொல்லித் தங்களுக்கு அவன் அருட்பார்வை கிட்டுமாறு செய்ய வேண்டுகிறாள்.

நம் மனோபலத்தை ஒருமுகப்படுத்தி இறைவன் அருளை வேண்டுகையில் இல்வாழ்க்கையின் சுகங்கள் அவற்றிற்கு முட்டுக்கட்டை போடும்.  அவற்றைத் தாண்டிக் கொண்டு அத்தகைய எண்ணங்களை நம் மனதிலிருந்து மெல்ல மெல்ல அகற்றி அனைத்தும் நாராயணன் செயலே என நினைத்து ஒருமுகமாக அவனையே நினைக்க வேண்டும்.  அதற்கு அருள்பவளே பெருமானின் பத்தினியான சக்தி.   சக்தியை நல்ல முறையில் பிரயோகம் செய்ய வேண்டும்.

குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக்= இங்கே பகவானின் குழந்தைகளாக ஆண்டாள் தங்களை முன்னிறுத்துகிறாள். அப்பா, அம்மா நம்மைக் கவனிக்காமல் தூங்கினால் நாம எல்லாம் என்ன சொல்வோம்? எங்களைக் கவனிக்காமல் தூங்கறீங்களேனு கேட்க மாட்டோமா?? இங்கேயும் கண்ணனின் அநுகிரஹம் வேண்டுமெனில் அதற்கு முன்னார் தாயார் ஆன நப்பின்னைப் பிராட்டியின் அநுகிரஹம் தேவை. அவள் உடனே வந்து பக்தர்களுக்குத் தன் கருணா கடாக்ஷத்தைத் தரச் சித்தமாய் இருக்கிறாள் தான். ஆனால் இங்கே இருவருக்கும், நீ முந்தி, நான் முந்தி எனப்போட்டி வந்துவிடுகிறது போல! கண்ணன் அவளை எழுந்திருக்கவிடாமல் அவள் தோள்களைப் பற்றி அங்கேயே நிறுத்திவிட்டுத் தானே குழந்தை போலாகிறான். இங்கே கொங்கைகள் என மார்பகத்தைச் சுட்டி இருப்பது, தாயினும் பரிந்தூட்டும் அன்னையின் பெருமையைச் சுட்டுவதற்கே அன்றி வேறொரு பொருளில் அல்ல. ஆகவே கவனமுடன் பொருள் கொள்ளவேண்டும்.

குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் = அழகாய்க் குத்துவிளக்கு முத்துப் போல் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்க தந்தத்தினால் ஆன நான்கு கால்கள் பொருத்திய கட்டிலில்

மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக்= மெத் மெத்தென்ற பஞ்சால் நிரப்பப் பட்ட பட்டு மெத்தை போட்ட சயனத்தின் மேலே ஏறிப் படுத்துக்கொண்டு

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக்கிடந்த மலர்மார்பா!= அழகான மணம் பொருந்திய மலர்களைச் சூடிய நீண்ட கூந்தல் உடைய நப்பின்னைப் பிராட்டியின் மார்பின் மேல் படுத்துக்கொண்டு அவளை எழுந்திருக்கவிடாமல் செய்து கொண்டிருக்கும் தாமரை மலர்கள் அணிந்த மார்பை உடைய கண்ணனே!

வாய் திறவாய்= வாயைத் திறக்கமாட்டாயா?

மைத்தடங்கண்ணினாய்= அழகாய் மை எழுதப் பட்ட விழிகளால் உன் பார்வை ஒன்றாலேயே செய்யவேண்டிய கருணையைச் செய்யாமல் இருக்கிறாயே அம்மா!

நீ உன்மணாளனை
எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய்காண்= தாயே என்ன இது?? நீயே எழுந்து வந்து எங்களுக்கு அனுகிரஹம் செய்வாய் என நாங்கள் உன்னை வேண்டிக் காத்திருக்க நீயோ உன் மணாளன் ஆன அந்தப்பரம்பொருளையும் எழுந்திருக்க விடாமல் இருக்கின்றாயே? அம்மா என்ன இது? உன் கடைக்கண் பார்வையால் எங்களுக்கும் உன் கருணா கடாக்ஷம் கிட்டச் செய்வாய்!

எத்தனையேலும் பிறிவாற்ற கில்லாயேல்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்!= தாயே நீ உன் மணாளனைப் பிரிந்துவிடுவாய் என நினைக்கிறாயா? இல்லை அம்மா, இல்லை, நீயும் அவனும் சேர்ந்து வந்தே எங்களுக்கு வேண்டிய அநுகிரஹம் செய்யவேண்டும். உன்னிடம் சரணாகதி என நாங்கள் வந்தபின்னரும் எங்களுக்குப் பிரியமானதையே நீ செய்வாய் என்றல்லவோ நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாங்கள் உங்கள் இருவரின் குழந்தைகள் அன்றோ?

இங்கே ஆண்டாள் பகவானை மட்டுமின்றித் தாயாரின் கருணா கடாக்ஷமும் வேண்டும் எனச் சொல்கிறாள். இருவருமே பரபிரம்ம சொரூபமாய்க் கண்ட பட்டத்திரி சொல்வதோ

அவ்யக்தம் தே ஸ்வரூபம் துரதிகமதமம் தத்து ஸுத்தைகஸத்த்வம்
வ்யக்தஞ் சாப்யேததேவ ஸ்ப்புடமம்ருத ரஸாம்ப்போதி கல்லோலதுல்யம்
ஸர்வோத்க்ருஷ்டாமபீஷ்டாம் ததிஹ குணரஸேநைவ சித்தம் ஹரந்தீம்
முர்த்திம் தே ஸ்ம்ஸ்ரயேஹம் பவநபுரபதே பாஹிமாம் க்ருஷ்ண ரோகாத்

பகவானின் ரூபம் வெளிப்படையாகத் தோன்றாத ஒன்று. அத்தகைய ரூபத்தின் உண்மையான தத்துவத்தை அறிதல் கடினம். சுத்தமான ஸத்வமே பகவானின் ரூபம், அது ஸகுண ரூபம், தெள்ளத் தெளிவாய் விளங்கும் ரூபம். அனைத்து உயிர்களிலும் விளங்கும் ஜீவசக்தியான இந்த பிரம்மானந்த சாகரத்தின் ஒரு சின்ன அலையே இந்தக் கிருஷ்ண ரூபமாக வந்து வாய்த்திருக்கிறது. நாம் அனைவரும் மகிழவேண்டி வந்துள்ள இந்த கிருஷ்ணரூபத்தின் குணமாகிய ரஸம் நம் மனதைக் கவர்கின்றது. அதன் பல்வேறுவிதமான விளையாடல்களால் நம் மனம் மகிழ்கிறது. இந்தக் கிருஷ்ணத் திருமேநியை நான் வழிபடுகிறேன். ஏ, கிருஷ்ணா, பரந்தாமா நீயே சரணம், என்னை ஆட்கொண்டு காத்தருள்வாய்.





    

16 comments:

  1. கவனமாகப் பொருள் கொள்ள வேண்டிய விவரமும், இல்லற சுகங்களை மீறி இறைவனை அடைய வேண்டியதன் தாத்பர்யத்தையும் சொல்லியிருப்பது சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. மார்கழி குளிர்ல, நல்ல பஞ்ச சயனத்தில் படுத்துறங்கும்போது, எங்க அதிகாலைல எழுந்திருப்பது என்று தோன்றலையா ஸ்ரீராம்? (சென்னைல மார்கழியோ இல்லை பனிப்புயலோ எப்போதும் ஒரே சூடா இருக்கு)

      Delete
    2. நன்றி ஸ்ரீராம், திருப்பாவையின் உட்பொருளே பரிபூரண சரணாகதித் தத்துவம் தான்! நம்மை மறந்து நாம் கண்ணனிடம் ஐக்கியம் அடைந்து விட வேண்டும்.

      Delete
    3. சென்னையிலே அத்தனை குளிர் தெரியாது நெல்லைத்தமிழரே! திருச்சியில் குளிர், பனி மூடிக் காணப்படும். ஆனாலும் காலையில் சீக்கிரமே முழிப்பு வந்துடும். தூங்கணும்னு நினைச்சால் கூடப் படுத்திருக்க இயலாது!

      Delete
  2. மிக அழகான திருப்பாசுரம்...

    ஆண்டாள் திருவடிகள் போற்றி...

    ReplyDelete
  3. நன்று தொடர்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  4. அன்பு கீதாமா, பாடலை மிக அழகாகக் கையாண்டிருக்கிறீர்கள்.

    வெகு ஜாக்கிரதையாகப் பொருள் கொள்ள
    வேண்டிய பாசுரம்.
    பக்தர்களுக்கு அருள்வதில் பெருமாளும் தாயாரும் போட்டி
    போடும் அழகும்,
    குழந்தை அம்மா அப்பாவை அழைப்பதில் காட்டும் செல்லப் பிடிவாதமும்
    பளிச்சிடும் பாடல்.

    ஆனாளின் அழகு வார்த்தைகளுக்கு நிகரில்லை.
    நன்றி மா.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி வல்லி. நம் பார்வை நேராக இருந்தால் சரியான பொருளையே காண்போம்.

      Delete
  5. //கிருஷ்ணா, பரந்தாமா நீயே சரணம், என்னை ஆட்கொண்டு காத்தருள்வாய்.//

    அனைவரையும் காத்தருள வேண்டும் பரந்தாமன்.

    ReplyDelete
  6. நன்றாக எழுதியிருக்கீங்க. நல்ல பொருளோடு வந்திருக்கு. பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நெல்லைத்தமிழரே!

      Delete
  7. நல்லதொரு விளக்கம். தினம் தினம் உங்கள் விளக்கம் - அன்றைக்கன்றே படிக்க முடியாவிட்ட்டாலும் மெதுவாக வந்து படிக்க முடிவதில் மகிழ்ச்சி.

    ReplyDelete