எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, November 03, 2016

கனவுகளுக்குப் பலன் உண்டா?

கனவுகள் குறித்து எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் எழுதி இருக்கார். எனக்குக் கனவுகள் வருதா இல்லையானு தெரியலை. ஆனாலும் ராத்திரி தூக்கத்தில் கனவா, விழிப்பா என்று தெரியாத சில சமயங்களில் என்னோட அம்மா வருவது நிஜம் போல் இருக்கும். அதே போல் வீட்டில் விசேஷங்கள் சமயத்தில் என் மாமனார் வயிற்றைத் தடவிக் கொண்டு வந்து சாப்பிடக் கேட்பது போல் வரும். அதுவும் நிஜம் என்றே தோன்றும். மாமனார் சாப்பாட்டில் மிகவும் பிரியம் உள்ளவர்! நன்றாகவும் சாப்பிடுவார்.  சட்டுனு விழிப்பு வரக் கனவா, நிஜமா என்ற குழப்பம் தான் மிஞ்சும். பல சமயங்களிலும் இரவுத் தூக்கத்தில் அலறுகிறேன் என்று வீட்டில் அனைவரும் சொல்கின்றனர். இது குறித்து எங்க பேத்தி வரைக்கும் சொல்லிச் சிரிக்கும் ஒன்று. இப்போப் புதுசாப் பிறந்திருக்கும் பேத்திக்குத் தான் தெரியாது! ஹிஹிஹி! எழுப்பிக் கேட்டால் பதில் சொல்லத் தெரியாது. இப்போல்லாம் ரங்க்ஸுக்குப் பழகிடுச்சா கத்தினாக் கத்தட்டும் னு விட்டுடுறார்! :) காலையில் சொல்வார். நான் "ஙே!" கத்தினதே நினைவில் இருக்காது.

பொதுவாகக் கனவுகளில் யானை வந்தாலோ, யானை துரத்தினாலோ பிள்ளையாருக்கு நேர்ந்து கொண்டதைச் செய்யலைனே சொல்வாங்க. அதே போல் பாம்பு வந்தால் முருகனுக்கும் செய்ய வேண்டும் என்பார்கள். கர்ப்பிணிப் பெண்கள் கனவில் பூக்கள் வந்தாலோ, பூக்களைப் பெற்றுக்கொள்வதாக வந்தாலோ பெண் குழந்தை பிறக்கும் என்றும், பழங்கள் முக்கியமாக வாழைப்பழம் தாராக வந்தாலோ ஆண் குழந்தை பிறக்கும் என்றும் சொல்வார்கள். வாழை மரம் தார் போட்டிருப்பதைப் போலக் கனவு வந்தால் வீட்டில் குழந்தையே பிறக்காதவங்களுக்குக் குழந்தை பிறக்கப் போவதாகச் சொல்வார்கள்.  இதுக்குனு வாழைப்பழத்தையோ, பூவையோ நினைச்சுட்டுப் படுத்துக்க முடியுமா என்ன? அதுவா வரணும்!  எங்க பையரை வயிற்றில் நான் சுமந்தப்போ கனவிலா, நினைவிலா அரைகுறை மயக்கமானு தெரியாது. வெற்றிலை, பாக்கு, பழத்துடன் பூவை வைத்துக் கொடுப்பதாகவே தோன்றும். சொன்னால் எல்லோரும் இரட்டைக் குழந்தை ஆணும், பெண்ணுமாகப் பிறக்கும் என்றார்கள். அப்போல்லாம் ஸ்கான் செய்து பார்ப்பதெல்லாம் இல்லை! ஆனால் பிறந்தது என்னமோ பையர் மட்டும் தான்! பெண் குழந்தை தான் பிறக்கும் என்று அடிச்சுச் சொன்னவங்க அசடு வழிஞ்சாங்க!

காக்கை வந்தால் அல்லது துரத்தினால் ஏழரைச் சனி என்றும் காக்கை ஓடினால் சனி விட்டது என்றும் சொல்வார்கள். என்றாலும் பலருக்கும் வாழ்க்கையில் சிரமங்கள், சங்கடங்கள் இருக்குத் தான். தொலைக்காட்சியில் பிசாசுப் படம் பார்க்கிற அன்னிக்கு ரங்க்ஸ் என்னிடம் ராத்திரி தூக்கத்திலே கத்தப்போறே அப்படினு எச்சரிப்பார். ஹிஹிஹி, அன்னிக்கு ராத்திரி தான் நல்லாத் தூங்கி இருப்பேன்! ஒரு வேளை பேய், பிசாசு வந்தால் நல்லாத் தூக்கம் வருமோ என்னமோ! ஆனால் சினிமாவில் பேயையும், பிசாசையும் பார்த்தால் சிரிப்புத் தான் வருது! பயமே வரதில்லை! இறந்து போனவர்கள் கனவில் வந்தால் அதை நல்லது என்றும் ஆசீர்வாதங்கள் கிடைத்தது என்றும் சொன்னாலும் விட்டுப் போன பித்ருக்கடன் இருந்தால் அதை முடிக்கணும் என்றும் சொல்வார்கள். இப்போதெல்லாம் யாரும் இதை நம்புவதில்லை.  ஆக மொத்தம் கனவுகள் அவற்றின் பலன்கள் என்று பலரும் புத்தகம் போட்டுக் காசு பார்த்திருக்கிறார்களே தவிர அவற்றில் உண்மை எது பொய் எது என்று புரிவதில்லை. கனவை விட நம் உள்ளுணர்வு சொல்வது மட்டுமே என்னைப் பொறுத்தவரையில் சரியாக இருக்கிறது.  

31 comments:

  1. முடிவில் சொன்னது உண்மை அம்மா....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் டிடி, பலரும் அதை ஆதரிக்கின்றனர். :) வரவுக்கு நன்றி.

      Delete
  2. கனவை விட உள்ளுணர்வு - இது உண்மை. அது எப்படி உள்ளுணர்வு என்று ஒன்று நம்மை வழி'நடத்துகிறது என்று நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். (அது சரி.. ரங்க்ஸ்க்கு பேயைக் கண்டால் பயமில்லையோ? அது எப்படி பயப்படுவார்?)

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, எனக்கும் பேயைக் கண்டால் பயமே இல்லை நெ.தல. :))))) உங்க உ.கு. புரியாதா என்ன? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    2. உள்குத்துல்லாம் இல்லை. பூஜை பண்ணுபவர் பேயைப்பார்த்து ஏன் பயப்படப்போறார்னு சொன்னால் நீங்க நம்பவா போறீங்க? :))

      Delete
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))

      Delete
  3. சில நேரங்களில் நமது நினைவோட்டங்கள் கனவில் வரும் என்பார்கள் எது எப்படியோ சொல்லி வைத்ததுபோல் எனது மனைவி இறந்த தினம் மற்றும் எங்கள் திருமண தினம் இரண்டுக்கும் அன்று எனது கனவில் வந்து விடுவாள் ஒருவேளை நான் அன்று முழுவதும் அவளுக்காக உண்ணாவிரதம் இருப்பேன் சாப்பிட்டு விடக்கூடாது என்ற காரணத்தால் நாள் முழுவதும் நினைவை அதிலேயே செலுத்துவேன்.
    மற்ற தினங்களும் அவள் நினைவு வந்தாலும் அது முக்கியத்துவம் இல்லாதது.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லி இருப்பது நெகிழ வைக்கிறது. உங்கள் மனைவியோடு எப்படி ஒத்து வாழ்ந்திருந்தால் அவங்களும் சரியாச் சொல்லி வைச்ச மாதிரி வருவாங்க என்பது நன்றாகப் புரிகிறது. அவங்களுக்குக் கொடுத்து வைக்கலையா, உங்களுக்கா என்று புரியவில்லை. மொத்தத்தில் கொடுமை தான்! :(

      Delete
  4. இப்போதெல்லாம் பின்னூட்டம் போடுவதற்கு பதில் பதிவாகப் போட்டு விடுகிறீர்கள் போல....!

    :))

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நம் எண்ணங்களை நம் பதிவிலே எழுதுவது தானே நல்லது! :))))) பதிவின் பெயரே "எண்ணங்கள்" தானே! :)

      Delete
  5. தூக்கத்தில் கத்துவதற்கும் கனவுக்கும் சம்பந்தம் உண்டா? பயங்கரக் கனவுகள் வந்தால்தான் கத்துவோமா?

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம், அது என்னமோ இரண்டு பின்னூட்டங்களுக்கு பதில் கொடுத்ததுமே கன்ஃப்ளிக்டிங் எரர்னு வந்துடுது! :)

      நான் தூக்கத்தில் ஏன் கத்தறேன்னு எனக்கே புரியலை! புரியாத புதிர் தான். ஆனால் அரை விழிப்பாய் இருக்கும் சமயங்களில் காலில் தசைப்பிடிப்பு வந்து கத்துவேன். எழுந்தும் உட்கார முடியாது. படுக்கவும் முடியாது! தர்ம சங்கடமாக இருக்கும்! அரை மணி நேரத்துக்கு நீடிக்கும். மருந்து சாப்பிட்டு வருவதில் இப்போதெல்லாம் பரவாயில்லை. வந்தாலும் சில நிமிடங்களுக்குள் சரியாகி விடுகிறது. :)

      Delete
  6. சில கனவுகள் உண்மையில் பலித்தும் கூட இருக்கு! டியுசன் எடுக்கையில் விடை வராத ஒரு கணக்கிற்கு கனவில் விடை கிடைத்தது! நல்லதொரு பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம், பாடத்திலே அவ்வளவு ஈடுபாடு! :) என் தம்பி, எங்க பையர் எல்லோரும் தூக்கத்திலேயே பாடங்களைச் சொல்லுவார்கள்! :)

      Delete
  7. உங்கள் கடைசி வரிக்கு என் வோட்டும்!

    ReplyDelete
    Replies
    1. எல்லோருடைய ஓட்டும் அதற்குத் தான்!

      Delete
  8. ஆனால் கனவு வரும் போது நிஜம் போலவே தோன்றும். 'குப்'என்று வியர்த்து விழிப்புத் தட்டும். வயதாவதால் தோன்றும் குழப்பமும் பயமுமே காரணமாயிருக்கும் என்று எண்ணிக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. என்னைப் பொறுத்தவரையிலும் தூங்க ஆரம்பித்ததும் தூங்கும் முதல் தூக்க நேரத்தில் எந்தவிதமான தொந்திரவும் இருப்பதில்லை. இரண்டு, இரண்டரை மணிக்கப்புறமாத் தூங்குவதில் தான் குழப்பம், அரை குறை நினைவுகள், கனவு போன்ற தோற்றங்கள் எல்லாம்! ஆகவே அதைக் கனவுனு சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன். :)

      Delete
  9. நமது ஆழ் மனங்களில் உள்ள சில விடை தெரியாத கேள்விகளுக்கு கனவில் பதில் கிடைக்கும். தளிர் சுரேஷ் சொன்னது போல கணித மேதை ராமானுஜம் அப்படித்தான் பல தேற்றங்களை கண்டுபிடித்தார். ஆக கடைசி வரியை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன்.. கனவுகளால் பலன் உண்டு. அய்யா அப்துல் கலாம் கூறியது போன்று கனவு காணுங்கள்.

    ஆமாம் உங்கள் மாமனார் வயிற்றைத் தடவிக்கொண்டு கனவில் வருவதாக சொல்கிறீர்களே? சிராத்தம் எல்லாம் சரியாக செய்கிறீர்களோ? அவருக்கு பிடித்த பலகாரங்களை அவர் நினைவு நாளில் படைத்துப் பாருங்கள்.

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. //ஆக கடைசி வரியை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன்..// No problem. :)))

      //ஆமாம் உங்கள் மாமனார் வயிற்றைத் தடவிக்கொண்டு கனவில் வருவதாக சொல்கிறீர்களே? சிராத்தம் எல்லாம் சரியாக செய்கிறீர்களோ? அவருக்கு பிடித்த பலகாரங்களை அவர் நினைவு நாளில் படைத்துப் பாருங்கள்.//

      Hahahahahahahaa! :)))))

      Delete
    2. காலையில் அவசரமாக கணினியை மூட வேண்டிய நேரம்! ஆகவே பதில் சொல்ல முடியவில்லை.

      உள்ளுணர்வு என்பது எனக்கு மட்டுமில்லை, பலருக்கும் வேலை செய்கிறது. செய்திருக்கிறது என்பதை ஒத்துக் கொண்டுள்ளார்கள்.

      எங்க மாமனாருக்கு நாங்க இமயமலையின் திருக்கயிலையில் இருந்து தெற்கே கன்யாகுமரி வரைக்கும் போன ஊர்களில் எல்லாம் தர்ப்பணம் கொடுத்திருக்கோம். முக்கியமான ஊர்களில் இப்போதும் செல்ல நேர்ந்தால் கொடுக்கிறோம். காசிக்குப் போயாச்சுனு எல்லாம் சாக்குச் சொல்லாமல் வருடா வருடம் சிராத்தம் செய்து வருகிறோம். மஹாளயம் செய்கிறோம். மாசாந்திரத் தர்ப்பணங்கள், அமாவாசைத் தர்ப்பணங்கள் தனி! :)

      அவர் நன்கு சாப்பிடுவார் என்பதால் வீட்டு விசேஷங்களின் போது அவர் இருந்தப்போ செய்த அளவுக்கும் இப்போது செய்யும் அளவுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும். இதைத் தெரிந்தவர்கள் சுட்டிக்காட்டுவார்கள். சில சமயங்களில் எங்களுக்கே தோன்றும்! அப்போது அவர் நினைவு வருவதால் சொப்பனத்தில் வருகிறார் என்று நினைக்கிறேன். ஆனால் எப்போதாவது தான்! என் அம்மாவும் எப்போதாவது வந்து கவலைப்படாதேனு சொல்லுவா! மற்றபடி நான் காணும் கனவுகள்னு எதையும் குறிப்பாச் சொல்ல முடியலை! :)

      Delete
    3. அப்புறமா கலாம் சொன்ன கனவு! நினைவிலேயே காணவேண்டிய கனவுகள் அவை எல்லாம். நனவாக வடிவம் பெற வேண்டியவைகள். இப்போ நான் சொல்லி இருக்கிறமாதிரியோ, ஶ்ரீராமுக்கு வந்தாப்போலயே வெட்டிக் கனவுகள் இல்லை. விழித்திருக்கும்போதே காணவேண்டிய கனவுகள் அவை எல்லாம். ஆகவே அது இதிலே வரவே வராது! :)))))

      Delete
  10. கனவுகள் பத்தி நிறைய்ய விஷயங்கள் இருக்கு. பாம்பு கனவில் வந்தால் நெகட்டிவிட்டின்னு சொல்வோம். அந்த மாதிரி. நம்ம உள் உணர்வு பத்தினதுன்னு சொல்லியிருப்பது கூட சரிதான். ஒரு விஷயத்தை நாம மனசுல போட்டு குழப்பிகிட்டு இருப்போம். அதுக்கான விடை கனவு மாதிரி வரும்னு சொல்வாங்க. எங்க புதுக்கோட்டை ராஜா கனவுல ப்ரகதாம்பாள் வந்து பதில் சொல்லி தான் ராஜ்ய பரிபாலனம் ஆச்சுன்னு சொல்வாங்க. என் எண்ணத்தை சொன்னேன். :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க புதுகை, கனவுகள் குறித்த புத்தகமே இருக்கு! இன்னிக்கு இங்கே அறிவிப்பில்லாத மின் வெட்டா? கணினிக்கு வர முடியலையே, சும்மாத்தானே இருக்கோம்னு அந்தப் புத்தகத்தைத் தான் தேடினேன். கிடைக்கலை. :) தொலைஞ்சு போச்சுனு நினைக்கிறேன். :) புதுக்கோட்டை ப்ரகதாம்பாள் குறித்த கனவைப் பற்றிப் படிச்சிருக்கேன்.

      Delete
  11. கனவுகளுக்கு நேரம் இல்லை என்று ஒரு பின்னூட்டம் எழுதி இருந்தேனே காணாமல் போச்.....!

    ReplyDelete
    Replies
    1. என்னோட பதிவிலே கொடுத்திருந்தீங்களா? வரலையே! இதான் வந்திருக்கு! :(

      Delete
  12. கனவை விட நம் உள்ளுணர்வு சொல்வது மட்டுமே என்னைப் பொறுத்தவரையில் சரியாக இருக்கிறது.//

    உண்மை நீங்கள் சொல்வது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கோமதி அரசு. இதனால் தான் எப்போதுமே சிந்தனைப்போக்கு தாறுமாறாக இருக்கக் கூடாது என்பார்கள். சரியான நேரான பார்வையிலே சிந்தனை இருக்க வற்புறுத்துவார்கள். என்றாலும் இந்த மனம் ஒரு குரங்கு. கண்டதையும் நினைக்கிறது! :(

      Delete
  13. உள்ளுணர்வு சொல்வதுமட்டுமே உங்களைப்பொறுத்தவரை சரியாக இருக்கலாம். உள்ளுணர்வை யாராலும் எளிதாக அலட்சியப்படுத்த முடியாதுதான். ஆனால் கனவுகளைப்பற்றிக் கவலைப்படாது இருக்க முடிகிறதா?

    கனவுகள்பற்றிய கில்லர்ஜியின் அனுபவம் மனதை பாதிக்கிறது.

    சினிமாவில் பேயைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது என்கிறீர்கள். சரிதான் இந்தியப் படங்களில் பேயைப் பார்த்தால் சிரிக்காதவர்களுக்கும் சிரிப்பு புட்டுக்கிட்டுத்தான் வரும். ஆனால் நீங்கள் கொஞ்சம் சீரியசான, திறன்பட எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்களைப் பார்த்ததில்லை என நினைக்கிறேன். உதாரணமாக: The Exorcist, The Omen, A nightmare on Elm Street, Cat people போன்ற படங்களை இரவில், முடிந்தால் தனியாக இருக்கையில், பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் - சிரிப்பு வருது என்று. இத்தகைய படங்கள் சில அமானுஷ்ய நிகழ்வுகளின் அடிப்படையில், திறன்படைத்த இயக்குனர்களால்ஸ்பெஷலிஸ்ட்டுகளால் எடுக்கப்பட்டு சிறப்பாகத் தயாரிக்கப்பட்டவை. அந்த குறிப்பிட்ட வகைமையில் சிறந்த படங்களில் சில மேற்கண்டவை. ஹாலிவுட்டில் எல்லாமே பிரமாதம் என நான் சொல்லவில்லை. அங்கேயும் அச்சுப்பிச்சுகளுக்கும், மசாலாக்களுக்கும் குறைவில்லை.

    ReplyDelete
    Replies
    1. கனவுகள் நினைவில் நிற்காததால் அவற்றைக் குறித்து எதுவும் தோன்றுவதில்லை திரு ஏகாந்தன் அவர்களே! மற்றபடி பலரும் கனவுகள் பலித்ததாகவே சொல்கின்றனர். கில்லர்ஜியின் அனுபவங்கள் என் மனதையும் பாதித்திருப்பதை என் பதிலில் சொல்லி இருக்கேனே! :) மேலும் நீங்கள் குறிப்பிட்ட ஆங்கிலப் படங்களில் முதல் இரண்டும் புத்தக வடிவில் படித்ததால் திரைப்படம் பார்ப்பதில் ஆர்வம் இருக்கவில்லை. மற்றவை பார்த்தது இல்லை. என்றாலும் திரைப்படம் என்பது மனதில் பதிந்து விடுவதால் கொஞ்சம் தூக்கிவாரிப் போட வைத்தாலும் பல படங்களும் திகிலைக் கொடுப்பதில்லை. முக்கியமாய்த் தமிழ்ப்படங்கள் சிரிப்புத் தான் வருகிறது. வீணை பாலச்சந்தர் எடுத்த அந்த நாள், நடு இரவில், பொம்மை போல் இப்போதைய திகில் படங்கள் இருப்பதில்லை! :) ஏவிஎம்மின் அதே கண்கள் கொஞ்சம் பரவாயில்லை ரகம். :) மற்றபடி என் வழி தனி ஈஈஈஈஈஈஈஈஈ வழினு தான் சொல்லிக்கணும். ஊரோடு ஒத்து வாழ் என்பதே என் அகராதியில் இல்லைனே நினைக்கிறேன். ஹிஹிஹிஹிஹி! அருமையான பின்னூட்டத்துக்கு நன்றி.

      Delete
  14. கனவுகள் இல்லாமல் நான் தூங்கியதே கிடையாது, கீதா. மதியத் தூக்கத்தில் கூடக் கனவு வரும் சில கனவுகள் மட்டுமே நினைவில் இருக்கும். அதிகமாக வருவது என்றால் மேலிருந்து கீழே இறங்குவது போன்ற கனவுகள். எப்படி இறங்கப்போகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே இறங்கிவிடுவேன். அதேபோல ரயிலில் செல்வது போல கனவுகள் வரும். ரயில் கண்ணுக்குத் தெரியாது. ஆனால் நான் போய்க்கொண்டே இருப்பேன். எழுந்துடன் நினைத்தால் சிரிப்பு வரும்.

    கனவுகள் பற்றி அதிகம் யோசிப்பது இல்லை. நம் அடிமனதில் படிந்திருக்கும் எண்ணங்கள் தான் இப்படி கனவாக வருகின்றன என்கிறார்கள்.

    ReplyDelete