எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 19, 2019

அரங்கன் வந்தான்!

இன்று மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். ஆனாலும் காலை வேளை தொலைக்காட்சி போடவில்லை. பின்னால் காட்டும்போது தான் பார்க்கணும். ஏனெனில் இங்கே அரங்கன் வருகிறன். அவனைப் பார்க்கத் தயாராகணும்.


தெருவில் எங்க வளாகத்துக்கு எதிரே உள்ள பக்கம் அரங்கன் வருகிறான்


இன்னிக்குச் சித்ரா பௌர்ணமி என்பதால் அம்மாமண்டபத்தில் கஜேந்திர மோக்ஷம் விமரிசையாக மாலை வேளை அம்மாமண்டபம் படித்துறைக்குச் சற்றுத் தள்ளி நடைபெறும். அதற்காக ஒவ்வொரு வருடமும் நம்பெருமாள் அம்மாமண்டபம் வந்து அன்று முழுவதும் தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து மாலை கஜேந்திர மோக்ஷம் முடிந்து இரவு திரும்புவார். நேற்றிலிருந்தே பரபரப்புடன் அரங்கன் வரும் நேரம் குறித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். இன்று காலை பத்தரை மணி போல் வரலாம் என்று தகவல் கிடைத்ததால் காலை அரை மணி நேரம் மட்டுமே கணினியில் உட்கார்ந்துவிட்டுப் பின்னர் வீட்டு வேலைகளைக் கவனித்துவிட்டுக் குளித்து முடித்துக் கஞ்சி குடித்து அரங்கனைக் காணத் தயார் ஆனேன்.


வெளியே சென்றிருந்த நம்ம ரங்க்ஸ் அங்கிருந்து தொலைபேசியில் அழைத்து அரங்கன் வீட்டுக்கருகே உள்ள மண்டகப்படிக்கு வந்துவிட்டதாகவும் சீக்கிரம் கீழே போகும்படியும் சொன்னார். அதன் மேல் அடுப்பில் போட்டிருந்த பருப்பைப் பின்னர் வந்து வேக வைக்கலாம் என அடுப்பை அணைத்துவிட்டுக் கீழே இறங்கினேன். பாதுகாவலர் இன்னும் அரை மணி ஆகும் என்றார். அதற்குள்ளாக அரங்கனை எதிர்கொண்டு பார்த்தவர்  ஒருத்தர் கிட்டே வந்துவிட்டதாகச் சொன்னார். ஒன்பதே முக்காலுக்கெல்லாம் குடை வந்தது. ஆகவே குடியிருப்பு வளாகத்துக்கு வெளியே சென்று நின்று கொண்டேன். பக்கத்து மண்டகப்படிக்குப் போகலை! அங்கே போனால் ஒரே தள்ளுமுள்ளாக இருக்கிறது என்பதால் போகவில்லை. மேலும் அரங்கனை உள்ளே கொண்டு போய்த் திருப்பி வைத்துப் பின்னர் வெளியே தூக்கி வருகையில் ரொம்பவே தள்ளு, முள்ளாக இருக்கும்.


 ஆனால் இம்முறை அந்த மண்டகப்படிக் காரங்களே அதிகமாய் இல்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை. அரங்கன் வந்து விட்டான். எங்க வளாகத்தின் பக்கமாய் வந்து மண்டகப்படிக்கு உள்ளே திரும்புவான் என நினைத்தால் கிழக்கே சாலையின் அந்தக் கோடிக்குக் கொண்டு போய்ப் பல்லக்கைப் பின்னர் மண்டகப்படிக்குத் திருப்பினார்கள்.  தெருவை வேறு இப்போது அகலப்படுத்தி இருக்கிறார்கள் என்பதால் அரங்கன் தள்ளியே இருந்தான். ஆகவே அருகிருந்து அரங்கனைப் பார்க்க முடியலையே என மண்டகப்படிக்குள் நுழைந்தேன். உள்ளே கூட்டம் இருந்ததாலும் அரங்கனுடன் வந்த பாரிசாரகர்கள் இருந்ததாலும் அருகில் செல்ல முடியவில்லை.  முடிந்த வரை படம் எடுத்தேன். வெயிலின் காரணமாக இரு பக்கமும் தடுப்பு வேறே போட்டிருந்ததால் உள்ளே வெளிச்சம் அதிகம் இல்லை. அரங்கன் மிக எளிமையான அலங்காரத்தில் சாதாரணமான ஒரு தங்கக்கிரீடத்தோடு எளிமையான உடைகளோடு சேவை சாதித்தான்.

அரங்கன் அங்கிருந்து கிளம்புகையில் அவன் பல்லக்கிற்கும் எனக்கும் இரண்டடி தூரமே! ஆனாலும் அப்போப் படம் எடுக்கத் தோன்றவில்லை. காமிரா ஆனிலேயே இருக்க அரங்கனையே மெய்ம்மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். "ஏன், படம் எடுக்கலையா?" என அரங்கன் கேட்பது போலவும், "உன்னைப் பார்ப்பது தானே முக்கியம். அதை விடப் படம் எடுத்துப் போட்டுப் பெயர் வாங்குவது பெரிய விஷயமா? இவ்வளவு கிட்டே உன் முகத்துச் சிரிப்பும், முகவாய்க்கட்டைச் சுருக்கமும், வாய்க்குள் நீ சிரிப்பதும் படம் எடுத்தால் என்னால் கவனித்துப் பார்த்து ரசிக்க முடியுமா? அந்த அழகு தான் கண்ணில் படுமா?  படம் எடுப்பதிலே புத்தி போகாமல் உன்னைப் பார்ப்பதிலே புத்தி போயிற்றே!  இப்போ நீ தான் முக்கியம். உன் அழகைப் பார்ப்பது தான் முக்கியம்!"என மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.திரும்பி வரும்போது கண் முன்னே அழகிய மணவாளனாக இருந்து நம்பெருமாளாக ஆனவனின் அழகிய முகமே கண்ணெதிரே!


36 comments:

 1. கடைசி வரிகள்ரியல்லி டிவைன்!
  விஸ்வநாதன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி விஸ்வா. உண்மையில்கிட்டே வரும்போது செல்லில் படம் எடுக்கத் தயாராகக் காமிராவை ஆன் செய்து கையிலேயே வைத்திருந்தேன். ஆனால் எடுக்கத் தோன்றவில்லை.

   Delete
  2. நான் சில மாதங்களுக்கு முன், ஒப்பிலியப்பன் கோவிலில் சிரவணத்தின்போது, அந்தச் சமயத்தில் அவனிடம் ஒரு வேண்டுகோள் வைக்கணும்னு நினைத்துக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் நாகஸ்வர மேளக்காரர்கள் வாசித்த பாடல் என் பெண்ணை நினைவுபடுத்தி, அவளுக்காகப் ப்ரார்த்தித்துக்கொண்டேன். எனக்கு ஒன்றும் கேட்க சந்தர்ப்பமில்லாமல் போயிடுத்து.

   நம் மனத்தைக் கவர்வதும் வேறு ஒன்றிலும் மனம் செல்லாமல் பார்த்துக்கொள்வதும் அவனது லீலைதான்.

   Delete
  3. பல சமயங்களிலும் பிரார்த்திக்க நினைத்துப் போனால் எதுவுமே தோன்றுவதில்லை. கிடைக்கும் நேரத்தில் அரங்கன் முகத்தையோ அல்லது போகிற கோயிலின் கடவுள் முகத்தையோ பார்த்தாலே போதும் எனத் தோன்றும்.

   Delete
 2. //திரும்பி வரும்போது கண் முன்னே அழகிய மணவாளனாக இருந்து நம்பெருமாளாக ஆனவனின் அழகிய முகமே கண்ணெதிரே!//

  அது தான் வேண்டும்! வேறு என்ன வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், கோமதி! எத்தனையோ மக்களின் மனதைப் பித்துப் பிடித்துப் போகச் செய்தவர் இல்லையா!

   Delete
 3. அரங்கனிடம் இவ்வளவு விசயம் பேசி நேரத்தை வீணடிப்பதைவிட ஒருநொடி கேமராவை சொடுக்கி எங்களுக்கும் அருள் பாவித்து இருக்கலாமே...

  என்று நண்பர் நெல்லைத்தமிழன் வந்து கேட்ககூடும்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, காமிரா எடுத்துச் செல்லவில்லை. செல் தான்! தயாராக இருந்தும் நம்பெருமாள் முகத்தையும் அந்தக்குறுஞ்சிரிப்பையும் பார்த்ததும் எதுவும் தோன்றவில்லை.

   Delete
  2. கீதா சாம்பசிவம் மேடம்.... திருப்பதியில் சாத்துமுறை சேவை முடிந்தபிறகு (அதாவது குலசேகரன் படி வரையில் சென்று தரிசனம் செய்யலாம். அன்றைக்கு படிக்கு வெளிப்புற கார்னரில் மூன்று ஆச்சார்யார்கள் நின்றுகொண்டிருக்க, பெருமாளை தரிசனம் செய்தகையோடு வெளியில் வந்து அங்கு இருக்கும் இன்னொரு சன்னிதியில் தீர்த்தமும் சடாரியும் கொடுத்தார்கள் (இது யோக நரசிம்மர் சன்னிதி அருகில்) பிறகு படிகளிலிருந்து கீழிறங்கும்போது-பிரகாரத்தில், மலையப்பன் தாயாரோடு பல்லக்கில் வந்து அங்கு நின்றார். நான், அடுத்தது எனது ஆச்சார்யர், அதற்கு அடுத்தது பல்லக்கு. பல்லக்கின்மேல் தொட்டுவிடும் தூரத்தில் மலையப்ப சுவாமி.... அவன் முகத்தையே பார்த்து மெய்மறந்தேன். அப்போ வேறு எதுவும் தோன்றாது. (அதுதான் முதல் முதலில் மிகக் கிட்டக்க மலையப்பஸ்வாமியை தரிசிக்கிறேன்).

   மனம் ஒன்றிவிட்டால், கேமரா மற்ற எதிலும் மனம் செல்லாது.

   Delete
  3. கையில் காமிராவை ஆன் செய்தே வைத்திருந்ததைக் கூட எங்க குடியிருப்பு வளாகப் பையர் ஒருத்தர் சொல்லித் தான் பின்னர் அதை அணைத்து வைத்தேன்.

   Delete
 4. வணக்கம் சகோதரி

  அருமையான அரங்கனின் தரிசனம்.படங்கள் அழகு. இறைவனை கிட்ட இருந்து பார்க்கும் போது அதை விட வேறு ஏது மகிழ்ச்சி? நீங்கள் எழுதியதை படிக்கும் போது உங்களின் பக்தி உணர்வுதான் எனக்குள்ளும் எழுந்தது. அரங்கின் தரிசனம் மனதாற கிடைக்கப் பெற்றேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, படங்கள் சுமாராக வந்திருந்தாலும் பாராட்டிய உங்கள் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி. அரங்கன் தரிசனத்தை விடப் படம் எடுப்பது பெரிய விஷயமா என்னும் எண்ணம் மனதில் வந்ததால் கிட்டே வந்தப்போவும் படம் எடுக்கவில்லை. கிடைத்தற்கரிய தரிசனம்.

   Delete
 5. அரங்கனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். கஜேந்திர மோக்ஷம் இதுவரை பார்த்ததில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், நானும் கஜேந்திர மோக்ஷம் பார்த்தது இல்லை. மாலை ஏழு மணி அளவில் நடக்கும் என்றார்கள். போனதில்லை.

   Delete
 6. கடைசி வரிகள்... அசத்தி விட்டீர்கள். ஆனாலும் உங்கள் கண்கள் கண்ட காட்சியை எங்களுக்குக் கிடைக்காமல் போனதே...!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஶ்ரீராம், இப்போத் தான் "மத்யமர்" குழுவில் செந்தில்ராம் பழனி என்பவரின் அழகர் ஆற்றில் இறங்கிய வைபவம் பற்றிய வர்ணனை படித்தேன். அதில் அரங்கனைக் கும்பிடுப்வர்கள் எல்லாம் ராணுவ ஒழுங்கோடு கட்டுப்பாடுடன் இருப்பார்கள் என்றும் அழகனுக்கு அப்படி இல்லை என்றும் அவனைத் தங்கள் சொந்தமாக எண்ணுவார்கள் என்றும் சொல்லி இருந்தார். எனக்கென்னமோ இங்கே அரங்கனிடமும் சொந்தம் என்னும் உணர்வே வருகிறது. நம் வீட்டில் ஒருவர் ஒரு ஓரமாக உட்கார்ந்து நம் செயல்களைக் கண்காணித்துக் கொண்டு குறுஞ்சிரிப்புடன் இருந்தால் எப்படி இருக்கும்! அதே அனுபவம் தான் அரங்கனிடமும் ஏற்படுகிறது. அவன் பார்க்கிறான்; எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறான்; புரிந்து கொள்கிறான். என்றே தோன்றுகிறது.

   Delete
  2. கீசா மேடம்... இந்த உணர்வு ஒரு சிலருக்குத்தான் (அவன் குழாமைத் தவிர்த்த மற்றவர்கள்-அதாவது அவனருகில் நின்று பணிவிடை செய்பவர்களைத் தவிர மற்றவர்கள்) வரும். நீங்கள் கொடுத்துவைத்தவர்கள். நீங்கள் இதுபோல எழுதும்போது, ரஞ்சனி நாராயணன் அவர்கள், அவரது சகோதரி இந்தத் தெருவில் சேவித்துவிட்டு விடுவிடுவென அடுத்த தெருவிலும் நம்பெருமாளைச் சேவிப்பதற்குச் செல்வார், என எப்போதோ எழுதியிருந்தது என் நினைவில் வரும். இது மாதிரி பக்தி உணர்வு எல்லோருக்கும் வருவதில்லை, அதில் நானும் ஒருவன்...

   Delete
  3. அப்படி எல்லாம் சொல்ல முடியாது நெல்லைத் தமிழரே, அனைவருக்கும் அவரவர் கோணத்தில் ஏதாவது ஒரு மாதிரியான உணர்வு இருக்கத் தான் செய்யும்.

   Delete
 7. அரங்கன் வந்து நீங்கள் அனுபவித்ததை எங்களுக்குக்
  கொடுத்ததே போதும் கீதா.

  உங்கள் கண் வழியே அவனைத் தரிசித்த பாக்கியம் கிடைத்தது.
  உங்கள் அனுபவமே கோடி பெறும். நன்றி கீதா.
  படங்கள் வெகு அழகு.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வல்லி. அரங்கனைக் காணக் கிடைத்ததும் ஓர் பாக்கியம் தான்!

   Delete
 8. ஓம் ஹரி ஓம்....

  அழகு..
  அவன் அழகு..
  அழகுக்கு அழகு..
  அவன் ஒருவனே பேரழகு...

  ஓம் ஹரி ஓம்..

  ReplyDelete
  Replies
  1. ஆம் துரை, இரண்டு மூன்று நாட்களாகவே எங்கே சென்றாலும் மீனாக்ஷியின் கடைக்கண் பார்வை குறித்தும், அழகனின் அருள் பார்வை குறித்தும், அரங்கனின் குறும்புப் பார்வை குறித்துமே படிக்க நேரிட்டது. நேரிடுகிறது.

   Delete
 9. பார்த்ததை, உணர்ந்ததைப் பகிர்ந்த விதம் அருமை. இறைவனைப் பற்றிய நினைவுகள் என்றும் நமக்கு வழிகாட்டும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முனைவர் ஐயா!

   Delete
 10. கீதாக்கா கடைசி பாரால நீங்க அரங்கனோடு பேசியது செம!! மிகவும் ரசித்தேன். அதானே அத்தனை பக்கத்துல பார்க்கும் போது வேறு என்ன தோன்றும்? வேண்டிக் கொள்ள எல்லாம் தோன்றவே தோன்றாது..

  செம ரசித்தேன் அக்கா...

  போட்டோ எடுக்கலையானு கேட்டார் இல்லையா..."சரி சரி இப்ப பேசிவிடுகிறேன் அப்புறம் நீ ஃப்ரீ ஆனதும் நாம தனியா ஃபோட்டோ ஷூட் வைச்சுக்கலாம்னு ஹா ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி/கீதா, வலை உலகை ஒரு கலக்குக் கலக்கிட்டீங்க! வாழ்த்துகள். என் ரசனையை நீங்கள் ரசித்ததுக்கும் நன்றி. உண்மையில் பல சமயங்களில் படம் எடுக்கவே மனசு வராது! பார்த்துக் கொண்டே நிற்கத் தோன்றும்.

   Delete
 11. நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரி. அரங்கனின் அழகைக் கண்டவர்கள் மெய் மறப்பது உண்மை. 'தோள் கண்டார் தோளே கண்டார், தொடுகழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃகுதே ..' என்னும் கம்பன் பாடலுக்கு முட்டிலும் பொருத்தமான அழகு அவனுடையது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி! நீங்க சொல்லுவது சரியே! அதனால் தான் பெயரே அழகிய மணவாளன் என்று இருந்திருக்கிறது.

   Delete
 12. எங்கே நெல்லைத் தமிழர்? பிரசாதம் இல்லைனது வரலை போல! :)))))

  ReplyDelete
  Replies
  1. இடுகையைக் காணவே இல்லை கீசா மேடம்.... புது இடுகையில் நீங்கள் குறிப்பிட்டிருந்தபோதும் புரிந்துகொள்ளவில்லை. அரங்கன் இன்றைக்குத்தான் படிக்குமாறு வைத்திருக்கிறான்.

   Delete
  2. நல்லது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 13. இந்த இடுகையைக் காண விட்டிருக்கிறேன். உங்கள் அடுத்த இடுகை படித்தபோதும் முந்தின இடுகை படிக்கவில்லை என்று தோன்றலை. ஏனெனில், நீங்க பயணக் கட்டுரைதானே எழுதிக்கிட்டிருந்தீங்க. அதன் தொடர்ச்சி இருக்கவும், வேறு இடுகை வந்திருக்கும் என நினைக்கவில்லை.

  அலைக்கழிக்காமல், அவன் தரிசனம் உங்களுக்குக் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. அதுவே ஒரு நல்ல சகுனமல்லவா, புத்தாண்டின் ஆரம்பத்தில்...

  ReplyDelete
  Replies
  1. இந்த ஊருக்கு வந்ததில் இருந்து ஒவ்வொரு வருஷமும் சித்திரா பௌர்ணமிக்கும், ஆடிப்பெருக்குக்கும் அரங்கன் வருகையைப் பார்த்து ஆனந்தித்துக் கொண்டே இருக்கோம். நடுவில் கோயிலுக்கு எல்லாம் போனால் அங்கே எல்லாம் பார்க்கிறோம் தான்! ஆனால் இது நம்மை அவனே தேடி வந்து கொடுக்கும் காட்சி அல்லவா?

   Delete
  2. பேசாம உங்கள் வீட்டை அல்லது உங்கள் பில்டிங்கில் உள்ள வீட்டை ஃபர்னிஷ்ட் செர்வீஸ் ரூமாக மாற்றிடுங்க. நாங்கள்லாம் வந்தா தங்கி அரங்கனை தரிசிக்கலாம். உங்களுக்கும் வாடகை வந்துவிடும். ஹாஹா.

   Delete
 14. //பாரிசாரகர்கள் // - நாங்க பரிசாரகன் என்று சொல்லுவது, பந்தியில் உணவைப் பரிமாறுபவர்களை, அல்லது தயாரிப்பவர்களையும் அவ்வாறு அழைப்பார்கள், அவரும் உணவு பரிமாறுவதால்னு நினைக்கிறேன்.

  நீங்கள் எதை நினைத்து அரங்கன் சேவை செய்பவர்களை பாரிசாரகர்கள் என்று எழுதியிருக்கீங்க? அவங்க 'கைங்கர்யபரர்கள்' இல்லையா? அல்லது வேறு பெயர் உண்டா?

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்லும் உணவு பரிமாறுபவர்கள் அல்ல இவர்கள். அரங்கன் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.இவர்களைப் பாரிசாரகர்கள்/பரிசனங்கள் என அழைப்பார்கள் என்பதைச் சில புத்தகங்கள், ஶ்ரீவேணுகோபாலனின் திருவரங்கன் உலா ஆகியவற்றின் மூலம் தெரிந்து கொண்டு பயன்படுத்தி வருகிறேன்.

   Delete