எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 25, 2019

பவானியின் குடியிருப்பும் பஞ்ச கங்கை நதிக்கரை தரிசனமும்!

சளுக்கிய மன்னர்களால் விரிவுபடுத்திக் கட்டப்பட்ட இந்தக் கோயிலின் நான்கு வாசல்களும் கோட்டை வாசலைப் போலவே காணப்படுகின்றன. அம்பிகை மேற்கு நோக்கிக் காட்சி கொடுப்பதால் மேற்கு வாசல் மஹாத்வாரம் என அழைக்கப்படுகிறது. இந்த மேற்கு வாசலில் தான் நாம் முன்னர் பார்த்த தீபஸ்தம்பங்கள் காணப்படுகின்றன.  அம்பிகையின் பிரகாரத்தைச் சுற்றிலும் பரிவார தேவதைகள் உள்ளனர். அம்பிகையின் இருபக்கங்களிலும் மஹாகாளியும், சரஸ்வதியும் கோயில் கொண்டுள்ளனர்.

கருந்தூண்களால் ஆன கருடமண்டபத்தில் குடி கொண்டிருக்கும் கருடரைத் தாண்டினால் மஹாகணபதி அன்னையை நோக்கிய வண்ணம் காட்சி அளிக்கிறார். அவருக்கு நேர் எதிரே யுகம் யுகமாய் அனைவரையும் ரட்சிக்கும் அன்னையின் திருத்தோற்றம் நம் மனதையும் கண்களையும் நிறைக்கிறது.
அம்பிகை ஓர் சதுரமான பீடத்தின் மேலே நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறாள். காலம் காலமாய் நின்று கொண்டே இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அன்னையின்கால்கள் தான் வலிக்காதோ? அன்னையின் வடிவம் வடிக்கப்பட்டிருப்பது கிடைப்பதற்கரிய ரத்தினக்கல் என்கின்றனர். அதிசயத்திலும் அதிசயமாக ஆதிசேஷன் இங்கே அன்னைக்குக் குடை பிடிக்கிறான்.  நான்கு கரங்களுடன் காட்சி கொடுக்கும் அன்னை ஒன்றில் கதை தாங்கி அதை பூமியில் ஊன்றி இருக்கிறாள். இன்னொரு கரத்தில் மாதுளங்கனி.  இன்னொரு கரத்தில் அமுதசுரபியுடனும் நான்காவது கரத்தில் கேடயமும் வைத்திருக்கிறாள் மஹாலக்ஷ்மி. கோபுரம் மஹாராஷ்ட்ர சிற்பக்கலை என்பதை ஏற்கெனவே பார்த்துவிட்டோம். வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி தினங்களில் அம்பிகை உற்சவ மூர்த்தியாகக் கோயிலின் உள் பிரகாரங்களில் வலம் வருகிறாள். நவராத்திரி உற்சவம் கோலாகலமாக நடை பெறும்.
மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் சூரியன் தன் திசையைத் திருப்பும் முன்னர் அம்பிகையின் பாதங்களில் தன் கதிர்களால் நமஸ்கரிக்கிறான். அன்னைக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள ஓர் பலகணி வழியாக சூரியக் கதிர்கள் அன்னையின் பாதங்களில் விழும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது அன்னை சிறப்பு அலங்காரங்கள் இன்றி சூரியக்கதிர்களின் ஒளியைத் தன்னுள் தாங்கிக் காட்சி கொடுப்பாள். கூட்டம்கூட்டமாக மக்கள் அந்த சூரியக் கதிர்விழுவதையும் அன்னை பிரகாசிப்பதையும் பார்த்துச் செல்வார்களாம்.

மஹாலக்ஷ்மி கோயிலின் மேற்குப் பக்கம் சத்ரபதி மஹாராஜாக்கள் தர்பார் இருந்த மண்டபம் ஒன்றுக் கோட்டை போன்ற அமைப்புடன் காணப்படுகிறது. இங்கே சத்ரபதி ராஜாக்கள் தங்கள் தர்பார்களை நடத்தி வந்ததாய்ச் சொல்லப் படுகிறது.  இங்கே உள்ளே ஒரு பவானி அம்மன் கோயில் கொண்டிருக்கிறாள். அந்த அம்மனின் சந்நிதியில் அனைவரும் சந்தித்து ஆலோசனைகள் நடத்தி முடிவெடுப்பது அந்த நாட்களில் மிகவும் பிரபலமாக இருந்து வந்திருக்கிறது.  பற்பல கொண்டாட்டங்களையும் பற்பல அரசர்களின் மந்திராலோசனைகளையும் கண்ட அந்த நடு முற்றம் ஓர் கொலையையும் சந்தித்திருப்பதாகச் சொல்கின்றனர்.  தற்போதைய அலங்காரங்கள் ஆங்கிலேய ஆட்சியின் போது இருந்த ஒரு மஹாராஜாவின் சபாமண்டபத்தைப் போலவே காட்சி அளிக்கிறது. சத்ரபதிகளின் தொன்மை இப்போது காணப்படவில்லை. இந்தப் படங்களை நாம் ஏற்கெனவே பார்த்தோம்.இங்கு கோயில் கொண்டிருக்கும் பவானியைப் படம் எடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.  இந்த பவானி மண்டபத்திலிருந்து சுரங்கப்பாதை சஹ்யாத்ரி மலையில் உள்ள கோட்டைக்குச் செல்லுவதாகச் சொல்லப்படுகிறது. அந்தச் சுரங்கப்பாதையைக் கண்டு பிடித்ததாக யாரும் சொல்லவில்லை. 

1950 களில் இங்கே ஆட்சியில் இருந்ததாகச் சொல்லப்பட்ட ஷாஹூமஹராஜின் உருவச் சிலை இங்கே காணப்படுகிறது. 


நேர் எதிரே மக்கள் கூட்டம் நிறைந்து இருந்ததால் அந்தப்பக்கம் போய்ப் படம் எடுக்க முடியவில்லை! இரு மிருகங்களின் நடுவே ஷாஹூமஹராஜ்.  இப்போது கோலாப்பூர் ரயில் நிலையத்தின் பெயர் இவர் பெயரில் தான் மாற்றப்பட்டுள்ளது. இந்த பவானி கோயிலைப் பார்த்துவிட்டுப் பின்னர் மறுபடி வண்டியில் ஏரி அடுத்து எங்கே எனக் கேட்டதற்கு ஓட்டுநர் ஓர் ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றார்.  முக்கியமாய்க் கவனித்தது ஊரின் சுத்தம். எங்கும் சுத்தம், எதிலும் சுத்தம். தானாகவே பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கூட்டம் கூடினாலும் மக்கள் எங்குமே குப்பை போடவில்லை. ஊரெல்லாம் அமைதியாகவும் தெருக்களெல்லாம் சுத்தமாகவும் வாகனப் போக்குவரத்தும் நேராகவும் நடக்கிறது. தெருக்கள் மேடு, பள்ளங்கள் இல்லாமல் காட்சி அளித்தது. 

இது கோலாப்பூரின் பிரபலமான ஏரி! நாங்கள் கீழே இறங்காமல் வண்டியில் இருந்தே படம் மட்டும் எடுத்துக் கொண்டோம்.  ஏரிக்கரையில் இருந்து ஓர் கோயிலுக்குச் செல்லுவதாகக் கூறிய ஆட்டோ ஓட்டுநர் அழைத்துச் சென்றது ஓர் சிவன் கோயில்.
அது ஓர் அதிசயமான விசித்திரமான சிவன் கோயில். பொதுவாக சிவனுக்கு முன்னாலோ அல்லது லிங்கத்துக்கு முன்னாலோ காணப்படும் நந்தி இந்தக் கோயிலில் சிவனுக்குப் பின்னால் காட்சி கொடுக்கிறது.


இந்தக் கோயிலைப் பார்த்த பின்னரே நாங்கள் பஞ்சகங்கை நதிக்கரைக்குச் சென்றோம்.படங்கள் முன்னரே பகிர்ந்தாச்சு. இந்தப் பஞ்ச கங்கை நதிகள் எனப்படுவது கேசரி நதி, தும்பி நதி, துளசி நதி, போகவதி நதி, மற்ற ஆறுகளின் துணை நதிகள் என அனைத்தும் சேர்ந்தது ஆகும்.

நதிக்கரையில் காசியைப் போலவே பல சிறிய, பெரிய கோயில்கள் இருக்கின்றன. நாங்கள் சென்றபோது இந்தச் சிவலிங்கத்திற்கு வழிபாடுகள் நடத்திக் கொண்டிருந்தனர்.  மஹாலக்ஷ்மி எங்கெல்லாம் தனிக்கோயில்களில் குடி இருக்கிறாளோ அந்த இடங்கள் எல்லாம் காசிக்கு நிகரானவை எனச் சொல்லப்படுகிறது.  நிர்ப்பந்தம் காரணமாகக் காசியை விட்டுப் பிரிந்த அகத்தியர் மீண்டும் காசிக்குச் செல்ல முடியாமல் தவிக்கையில்  அம்பிகையால் பிரளய காலத்தில் காப்பாற்றப்பட்டுக் கோலாசுரனையும் அழித்த தலமான கரவீரபுரம் என்னும் கோல்ஹாப்பூரைக் காட்டி அங்கே போய் இருக்கச் சொன்னாராம் ஈசன். பல்வேறு கல்வெட்டுச் செய்திகளும் மிகவும் தொன்மையானதாகவும் கோல்ஹாப்பூரின் தொன்மையையும் குறிப்பிடுகிறது.
22 comments:

 1. கோவிலையும் அம்பிகையையும் பார்து விட்டு வந்து எப்படி இவ்வளவு ஞாபகமாக இன்ச் இஞ்சாக விவரிக்கிறீர்கள்? ஆச்சர்யம். சூரியக் கதிர் அலங்காரத்தில் அம்பிகை... படிக்கும்போதே சிலிர்க்கிறது.

  ReplyDelete
  Replies
  1. படித்தால் மறக்க வாய்ப்பு இருக்கு! காதால் கேட்டது அவ்வளவு சீக்கிரம் மறக்காது. அதோடு மாமாவிடமும் கேட்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்துப்பேன். சூரியக் கதிர் பற்றி ஆட்டோக்காரர் சொன்னது. ஜெய்ப்பூர், உதய்ப்பூர்,சிதோட்கட், துவாரகை, சோம்நாத்னு போனப்போ எல்லாம் வழிகாட்டிகளும், உள்ளூர் நண்பர்களும் விளக்கிக் கூறினார்கள். காசியில் நாங்க தங்கி இருந்த வீட்டு சாஸ்திரிகளின் பையர் வந்து விளக்கங்கள் கொடுத்தார். அதோடு படகோட்டியும் பிஹாரியாக இருந்தாலும் தமிழ் பேசினார். அவரும் சொல்லுவார். இப்படிக் கேட்டு மனதில் பதிய வைப்பது தான்!

   Delete
 2. படங்கள் கேமிராவா? அலைபேசியா? நன்றாயிருக்கிறது.

  ReplyDelete
 3. படங்களும் செய்திகளும் .பழைய வரலாறும் அருமை.

  //பவானி அம்மன் கோயில் கொண்டிருக்கிறாள். அந்த அம்மனின் சந்நிதியில் அனைவரும் சந்தித்து ஆலோசனைகள் நடத்தி முடிவெடுப்பது அந்த நாட்களில் மிகவும் பிரபலமாக இருந்து வந்திருக்கிறது. பற்பல கொண்டாட்டங்களையும் பற்பல அரசர்களின் மந்திராலோசனைகளையும் கண்ட அந்த நடு முற்றம் ஓர் கொலையையும் சந்தித்திருப்பதாகச் சொல்கின்றனர். //

  பவானி மராட்டியர்களின் குல்தெய்வம் போன்றவள் வெற்றியை அருள்பவள்.
  அரசர் காலத்தில் பகைகளும் கொலைகளும், நடக்கவில்லை என்றால்தான் அதிசயம் இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஆனால் இதைச் சொல்கையில் ஒரு கணம் அந்த தர்பார் நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்துக் கொண்டேன். அதே போல் நடு முற்றத்தில் நாட்டிய நிகழ்ச்சி நடப்பதாகவும் மேலே உப்பரிகையிலிருந்து ராணிகள், அரசகுமாரிகள் பார்ப்பதாகவும் நினைத்துப் பார்த்தேன். இப்போ அங்கெல்லாம் போக முடியாது. பவானியை தரிசனம் செய்துட்டு வெளியே வைத்திருக்கும் பாடம் செய்யப்பட்ட மிருகங்கள், ஷாஹ்ஜியின் உருவச் சிலையைப் பார்த்துட்டு வந்துடணும்.

   Delete
 4. படித்துறை கவித்துவமாக இருக்கு.

  சிவலிங்கத்தின் பின்புறம் நந்தி - இந்தப் படமும் சிறப்பா வந்திருக்கு

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி.

   Delete
 5. கீதாக்கா இனிய காலை வணக்கம்.

  படனள் அட்டகாசம். குறிப்பா ஏரி படங்கள் மிக அழகு அப்புறம் அந்தப் படித்துறைப் படமும்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி/கீதா, காலை வந்தீங்களா? நல்வரவும் வணக்கமும். பாராட்டுக்கு நன்றி.

   Delete
 6. சிவன் கோயில் மிக மிக வித்தியாசமாக அழகாவும் இருக்கிறது. இது செல்லவில்லை அப்போது. இந்த நீர்னிலைகள் எல்லாம் நினைவில் இருக்கிறது.

  கோயில் பற்றிய விவரணங்கள் மிகவும் சிறப்பு அக்கா. மிகப் பெரிய கோயில் கோட்டை போன்று இருக்கும். உள்ளே சென்று வரவே நேரமாகியது எல்லாம் நினைவில் இருக்கிறது.

  அது சரி கொலையும் நடந்ததா?

  அப்போதெல்லாம் ஊரைச் சுற்றி ராஜாக்களின் கோட்டைஎழுப்பியிருப்பாங்க அதற்குள் தானெ கோயில்கள் இருக்கும் இல்லையா? திருவனந்தபுரத்தில் கூட பார்த்தீங்கனா கிழக்கே கோட்டை, படிஙார கோட்டை நு உண்டு. கோட்டை சுவர் பெரிதாக இஉர்க்கும் நாங்கள் கோட்டைக்குள்ளும் இருந்தோம் கோட்டைக்கு வெளியே அடுத்துள்ள பகுதிகளிலும் தான் இருந்தோம். கோட்டைக்குள்ளேயே நிறைய ப பார்க்கலாம். இப்போது பலஉம் மாறி விட்டது அங்கு. கோட்டையின் அழகும் போய்விட்டது.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கோட்டைக்குள்ளே கொட்டாரத்தில் தான் என் தங்கை கணவருக்கு சஷ்டிஅப்தபூர்த்தி நடந்தது. பழைய ராஜா காலத்துக் கட்டிடம் என்பது பார்த்தாலே தெரிந்தது. நாலு கெட்டு வீடு எனப்படும் திருவட்டாறு கோட்டையைத் தான் முழுவதும் ஏறிப் பார்க்க முடியலை! ஆனால் உள்ளே நுழையும்போதே காவலர்கள் சொன்னார்கள். ஏற முடியலைனா முயற்சிக்காதீங்கனு!

   Delete
 7. நல்ல தரிசனம். அழகான புகைப்படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முனைவர் ஐயா!

   Delete
 8. படங்கள் மற்றும் விளக்கம் துல்லியம்.
  சிவன் கோவிலில் பின்புறம் நந்தி என்றதும் ஸ்ரீவாஞ்சியம் நினைவுக்கு வருகிறது. மகாவிஷ்ணுவிடம் கோபித்துக் கொண்டு பூமிக்கு வந்து விட்ட லட்சுமி தேவியை தேடி வரும் மஹாவிஷ்ணு, மைத்துனரான சிவபெருமானிடம் தன் மனைவியை தன்னோடு சேர்த்து வைக்க வேண்டுவதாகவும், சிவனின் கருத்தைக் கவர அவருக்கு பின்புறம் அமர்ந்து தவம் செய்ததாகவும், மஹாவிஷ்ணுவிற்கு அருளும் பொருட்டு சிவபெருமான், பின்புறம் திரும்பி விட்டதாகவும் அந்தக் கோவிலின் தலபுராணம் சொல்லும். அதனால் அந்தக் கோவிலில் முன்புறம் ஒரு நந்தியும்,பின்புறம் ஒரு நந்தியுமாக இரண்டு நந்திகள் உண்டு.
  மகாவிஷ்ணுவிடம் கோபித்துக்கொண்டு வந்த மஹாலக்ஷ்மி என்றுதானே கோலாப்பூரிலும் கதை தொடங்குகிறது?

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி, ஶ்ரீவாஞ்சியம் பார்த்திருக்கேன். அதைவிட ஶ்ரீவாஞ்சியம் ராமச்சந்திர பாகவதரின் அஷ்டபதி நாட்டிய நாடகம் பலமுறை பார்த்திருக்கேன். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

   Delete
 9. கங்கையின் தரிசனம் எங்களுக்கும் கிடைத்தது நன்றி.

  நேற்றே படித்தேனே கருத்துரை போட மறந்து விட்டேனோ...

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி. கருத்துக்கு நன்றி.

   Delete
 10. வணக்கம் சகோதரி

  கோவிலைப்பற்றிய நல்ல விரிவாகவும், அழகாகவும் விளக்கம் அளித்திருக்கிறீர்கள். காசியைப் போலவே இங்கும் பஞ்ச கங்கை நதியும், சிவனாரின் கோவிலும் இருப்பதால் காசிக்குப் போய் தரிசிக்கும் பலன் இங்கு வந்து தரிசித்தால் கிடைக்குமில்லையா? அனைத்துமே அழகான கோவிலாக இருக்கிறது.

  நதியின் படங்களும், அன்னை மஹாலக்ஷ்மி யின் படமும் சிவன் கோவில் படமும் மிக அழகு. சிவனுக்கு பின்புறம் வித்தியாசமாக இருந்த நந்திகேஷ்வரரின் படம், மற்றும் அனைத்து விபரங்களும் அறிந்து கொண்டேன்.

  கோட்டையின் நடுவில் கோவிலா? அந்த கால ராஜ குமாரிகள் தினமும் கோவில் தரிசனம் செய்ய வாக்காக இருக்க வேண்டியோ?

  /பற்பல கொண்டாட்டங்களையும் பற்பல அரசர்களின் மந்திராலோசனைகளையும் கண்ட அந்த நடு முற்றம் ஓர் கொலையையும் சந்தித்திருப்பதாகச் சொல்கின்றனர்/

  சரித்திரம் என்றுமே நிறைய தகவல்களையும் தன்னுள் அடக்கி வைத்திருப்பதுதான் இல்லையா? ஸ்வாரஸ்யமாக செல்கிறது பதிவு. தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, கோயிலே கோட்டை போலிருக்கிறது. அதைத் தவிர்த்தும் ஊரில் கோட்டைகள் உள்ளன. அரண்மனைகள் இருக்கின்றன. மலை மேலே கோட்டை உள்ளது. எல்லாவற்றுக்கும் போக முடியவில்லை.

   Delete
 11. ஆகா.. நல்ல பல தகவல்கள்.. அழகழகான படங்கள்..
  நமக்கும் தரிசனம் ஆயிற்று.. இல்லா விட்டால் எப்போது இங்கெல்லாம் செல்வது?...

  அழகான பதிவு.. வாழ்க நலம்...

  ReplyDelete
 12. வாங்க துரை, இந்தியாவுக்கு விடுமுறையில் வந்தால் இங்கெல்லாம் போவதற்கெனத் திட்டம் போட்டுக் கொள்ளுங்கள். கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete