எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, April 16, 2019

பயணம் தொடருகிறது!

ஒவ்வொரு முறை விமானப்பயணத்திலும் நான் கவனித்து வருவது மத்தியதர, அல்லது அடித்தட்டு மத்தியதர மக்களும் இப்போதெல்லாம் விமானப் பயணங்களை விரும்புவது தான். அதற்கு முக்கியக் காரணம் விமானப் பயணச் சீட்டுகள் போட்டியின் காரணமாக விலை குறைக்கப்படுவதே. தங்களுக்கேற்ற சௌகரியமான நாளில் விமானப் பயணத்துக்கான சீட்டு விலை குறைவாக இருக்கையிலேயே குழுவாகவோ, குடும்பமாகவோ சுற்றுலாவுக்கு முன் பதிவு செய்து விடுகின்றனர். அதிலும் கடந்த ஐந்தாறு வருடங்களில் இது அதிகமாகவே தென்பட்டு வருகிறது. அதே போல் இம்முறையும் சாமானிய மக்கள் விமானத்தில் அதிகம் காணப்பட்டனர். அதனால் உணவு விற்பனை குறைவு என்றே சொல்ல வேண்டும். பணம் படைத்தவர்கள், மேல் தட்டு மத்தியதர வர்க்கம் எனில் விலையைப் பார்க்காமல் வாங்குவார்கள். மற்றவர்களிடம் அது எடுபடாதே! அநேகமாக அனைவரும் உணவை வீட்டில் இருந்தே கொண்டு வந்து சாப்பிட்டனர். திருச்சி விமான நிலையத்தில் இட்லி, சாம்பார் மணம் ஊரைத் தூக்கியது. என்றாலும் நாங்கள் வாங்கவில்லை!  போகும்போது எங்களுக்கு இரட்டை இருக்கையாக அமைந்து விட்டது. அந்த விமானமே இருபக்கமும் இரட்டை இருக்கைகளாகக் கொண்டது தான். திருச்சி விமான நிலையத்தில் சென்னை செல்லும் விமானத்துக்காகக் காத்திருக்கையிலேயே ஒரு குறிப்பிடத்தக்க நபர், இளைஞர்  2,3 நண்பர்களுடனும் ஒரு பெண்ணுடனும் வந்திருந்தார். அவரும் சென்னை செல்கிறார் என்பது புரிந்தது. எங்கேயோ பார்த்த முகம்! ஆனால் புரிஞ்சுக்கலை. நான் அவங்களையே பார்த்த வண்ணம் யோசனையில் இருக்க நம்ம ரங்க்ஸ் என்னைத் தன் கையால் தட்டினார்.

என்ன என்பதைப் போல் நான் பார்க்க மெல்லக் கிசுகிசுவென்று அதான் அந்த நடிகர்! அந்தப் பெண்ணும் அந்த நடிகை! என்றார். எனக்குக் கோபம் வந்தது. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எந்த நடிகை, எந்த நடிகர்! சொன்னால் தானே தெரியும். அந்தப் பெண்ணும் அந்தப் பையரும் சிரித்துச் சிரித்து சுற்றுவட்டாரப் பிரக்ஞையே இல்லாமல் பேசிக் கொண்டிருந்தனர். இவர் என்னிடம் மறுபடி சொல்ல வரும்போது கொஞ்சம் யோசனையுடன், "ஆர்யாவோ" என்றவர் தலையை ஆட்டிக் கொண்டு, "இல்லை, இல்லை, இது ஜீவா! ஆமாம் அவரே தான்!" என்றார். நான் ஙே!!!!!!!!! "ஜீவா" என்னும் பெயரில் ஒரு நடிகர் இருக்காரா? அந்தப் பெண்? என்று கேட்டவர் , அந்தப் பெண் தான் சீரியலில் எல்லாம் வருவாளே! என்றார். எந்த சீரியல்? கேட்டால் சொல்லத் தெரியவேண்டாமோ! சீரியல் கதையையும் சொல்லத் தெரியலை. எனக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்திருக்கும் நினைவு தான்! நடிகை என்பது புரிந்தது. இங்கே திருச்சியில் ஏதேனும் படப்பிடிப்புக்கு வந்துட்டு திரும்பிப் போறாங்க போல என நினைத்துக் கொண்டேன்.

அதன் பின்னர் விமான நிலைய நுழைவாயிலில் விமானத்துக்காகக் காத்திருக்கையில் நடிகை குயிலி அங்குமிங்குமாகப் போய் வந்தார். அதான் இப்படினு பார்த்தால் சென்னையிலிருந்து பெண்களூரோ அல்லது வேறே ஏதோ ஊருக்கோ போகும் விமானத்தில் ஏறுவதற்காக வடிவேலுவுடன் செத்துச் செத்துப் பிழைப்பாரே அந்த நடிகர் வரிசையில் சிலருடன் நின்று கொண்டிருந்தார்.  இவர்களைத் தவிர நடிகர் பவன் கல்யாண் (எனக்கு இவரை அடையாளமெல்லாம் தெரியலை. நம்ம ரங்க்ஸ் சொன்னது தான். கல்யாண் குமார் பிள்ளை என்று காட்டினார்.) பெண்களூருக்கோ எங்கேயோ போய்க் கொண்டிருக்கையில் நாங்க இருந்த நுழைவாயிலுக்குத் தான் வந்து விமானம் ஏற வரிசையில் நின்றார். இவர்  ரம்யா கிருஷ்ணனுடன் கூட ஏதோ ஒரு சீரியலில் நடித்திருப்பது நினைவுக்கு வந்தது. இவங்க தரிசனம் எல்லாம் முடிஞ்சு தான் நாங்க புனே செல்ல விமானம் ஏறி வழியில் திருமலா-திருப்பதி தரிசனமும் கிடைத்தது! :)))))

விமானம் சரியான நேரத்துக்குப் புனே போய்ச் சேர்ந்தது. பனிரண்டு மணிக்குள்ளாகப் போய் விட்டோம். இரவு பத்து மணிக்குத் தான் கோல்ஹாப்பூருக்கு ரயில். அதுவரை இங்கே தான் பொழுதைக் கழிக்கணும். யோசனையுடன் சாமான்கள் பெற்றுக்கொள்ளும் பெல்டுக்கு வந்து எங்கள் சாமான்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு ட்ராலியில் வைத்த வண்ணம் வெளியே வந்தோம். முன் பதிவு ஆட்டோக்கான வரிசைக்கு வந்து உணவு பற்றி விசாரித்ததில் அங்கேயே பக்கத்தில் தென்னிந்திய உணவு விடுதி இருப்பதாகச் சொன்னார்கள். பின்னர் நாங்கள் புனே ரயில் நிலையம் போகணும் என்றதும் அங்கேயே ரயில் நிலையம் எதிரில் "சாகர்" என்னும் உணவகம் இருப்பதாகவும் உணவு மிகப் பிரமாதமாக இருக்கும் எனவும் சொன்னார்கள். கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு இங்கே உணவு உண்டு விட்டுப் போவதற்குப் பதிலாக சாகரிலேயே உணவு உண்டுவிட்டுப் பின்னர் யோசிக்கலாம் எனச்சென்றோம்.  135 ரூ தான் ஆட்டோவிற்கு விமானநிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்ல வாங்கினார்கள். முதலில் பக்கத்தில் இருக்கும் வேறோர் ஓட்டலில் இறங்கச் சொன்ன ஆட்டோக்காரர் என்னுடைய கண்டிப்பான மறுப்பால் ரயில் நிலையம் எதிரே உள்ள சாகரிலேயே நிறுத்தினார்.

வடமாநிலங்களிலேயே முக்கியமாய் மஹாராஷ்டிராவில் தெருவிலிருந்து/சாலையிலிருந்து சுமார் பத்துப் படிகளாவது மேலே ஏறித் தான் நாம் செல்ல வேண்டிய ஓட்டலுக்கோ, அல்லது தங்குமிடங்களுக்கோ, வீடுகள் சிலவற்றிற்கோ செல்லும்படி இருக்கிறது. அதே போல் இந்த சாகர் ஓட்டலும் பத்துப் படிகள் மேலே ஏறித் தான் போனோம். உள்ளே போகச் சொன்னார்கள். உள்ளே ஏசி அறை போலும். அங்கே வரும்படி அழைத்தனர். உள்ளே சென்றோம். உணவு மெனு கார்டு கொடுத்தார்கள். நல்ல பசி என்பதால் சப்பாத்தியும் பைங்கன் பர்த்தாவும் தேர்வு செய்தோம். சப்பாத்தி கிடைக்காது என்றும் நான் அல்லது ரொட்டி கிடைக்கும் எனவும் சொன்னார்கள். ரொட்டி எனில் கொஞ்சம் கனமாக கிட்டத்தட்ட நான் போல், நெருப்பில் சுட்டிருப்பார்கள். ஆனால் கோதுமை மாவில் செய்வது. நான் முழுக்க முழுக்க மைதாவில் செய்திருப்பார்கள். நாங்க ரொட்டியே சொன்னோம். பைங்கன் பர்த்தா சுவை நன்றாக இருந்தது என்றாலும் அவ்வளவு காரம் என்னால் சாப்பிட முடியவில்லை. பச்சை மிளகாயை தாராளமாக அள்ளித் தெளித்திருந்தார்கள். மும்பையில் போரிவிலியில் மைத்துனர் இருந்தபோது சமோசா வாங்கி வருவார்கள். அதோடு கூட பச்சை மிளகாயும் எலுமிச்சை ரசத்தில் , உப்பு, மிளகாய்த் தூளோடு ஊறியதை வதக்கிக் கொடுத்திருப்பார்கள். நம்மால் எல்லாம் அந்தப் பச்சை மிளகாயைச் சாப்பிட முடியாது! நான் தூக்கிப் போட்டுடுவேன். அவங்கல்லாம் ரொட்டிக்கே பச்சை மிளகாய் தொட்டுக் கொண்டு சாப்பிடுகின்றனர்.  அதன் பின்னர் சாஸ் என அழைக்கப்படும் மோர் (கிட்டத்தட்ட நம்ம ஊர் மசாலா மோர் போன்றது. ஆனால் நல்ல கெட்டியாக க்ரீமோடு இருக்கும்.) சாப்பிட்டோம். கை கழுவ பிங்கர் பவுல்ஸும் கொடுத்தார்கள்.

அங்கிருந்து கிளம்பிய போது அங்கேயே தங்க அறை கிடைத்தால் வசதி எனத் தோன்றவே அங்கே கேட்டதற்குப் பக்கத்தில் கேட்கச் சொன்னார்கள். உடனே பக்கத்தில் போனோம். அதற்கும் படிகள் மயம் தான்! அங்கே இடித்து வேறே கட்டிக் கொண்டிருந்தனர். ஆகவே அங்கே இருந்த வரவேற்பாளர் இப்போ இந்தப் படிகள் ஏறவே உங்களுக்குச் சிரமமாக இருக்கு. அறைகள் மேலே தான் இருக்கின்றன. 2000 ரூபாய்க்கு மேல் வாடகை! நான் ஏசி தான். ஏசி எனில் 2,500 ரூபாய் வாடகை. உங்களால் ஏறி இறங்க முடியுமா? லிஃப்ட் இன்னும் பொருத்தவில்லை என்றார். லிஃப்ட் பொருத்தினாலும் பொருத்தாவிட்டாலும் ஏசி இல்லா அறைக்கு வாடகை ஜாஸ்தி எனத் தோன்றியதால் வேண்டாம்னு வந்துட்டோம். அதோடு காலை உணவு காம்ப்ளிமென்ட்ரி கிடையாது. நம்ம கொடைக்கானலிலேயே தமிழ்நாடு ஓட்டலில் தங்கினால் காலை உணவு காம்ளிமென்ட்ரி. டோக்கன் கொடுத்துடுவாங்க. அதோடு அறைக்கு ரூம் செர்வீஸும் உண்டு என்பதோடு எப்போதும் வெந்நீர் வரும். அதைச் சொல்லச் சொல்லக் கேட்காமல் நாங்க பூம்பாறை போனப்போ வேறே ஓட்டலில் தங்கிட்டு அவதிப்பட்டது தனிக்கதை! அதைப் பின்னொரு நாள் வைச்சுப்போம். இந்த ஓட்டலில் அறை வேண்டாம்னு வெளியே வந்ததும் ரொம்ப நேரமா எங்களையே கவனித்துக் கொண்டிருந்த ஓர் ஆட்டோக்காரர் தான் ஓர் லாட்ஜுக்குக் கூட்டிச் செல்வதாகச் சொன்னார்.

புனே ரயில் நிலையத்தில் நாங்க முன்பதிவு செய்திருந்த டார்மிட்டரிக்குச் செல்லும் நேரம் நெருங்கிவிடவே நான் அங்கே போகணும் என்றேன். எதிரே தான் ரயில் நிலையம். ஆனால் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு சாலையைக் கடக்க இயலாது! நடுவே சென்டர் மீடியன். ஒருவழிப்பாதை வேறே. சுற்றிக் கொண்டு தான் வரணும். அதனால் இந்த ஆட்டோக்காரரைக் கேட்க அவரோ தான் அழைத்துச் செல்லும் லாட்ஜுக்குத் தான் முதலில் போகணும்னு பிடிவாதம் பிடிக்க நான் கொஞ்சம் கடுமையாகவே அறை எங்களுக்கு சனிக்கிழமை தான் தேவை. இன்னிக்கு இரவு ரயிலில் நாங்க கோலாப்பூர் போவதால் ரயில் நிலையத்திலேயே டார்மிடரியில் புக் செய்திருக்கோம். முடிஞ்சால் ரயில் நிலையத்திற்குக் கொண்டு விடு! என்று சொல்லி விட்டேன். முணுமுணுத்துக் கொண்டே ரயில் நிலையத்திற்குக் கொண்டு விட்டார் அந்த ஆடோ ஓட்டுநர். தங்குமிடம் எங்கே எனக் கேட்டுக் கொண்டு பெட்டிகளையும், பையையும் தூக்கிக் கொண்டு மேலேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ ஏறினோம். அங்கிருந்த பொறுப்பாளரிடம் எங்களுடைய டார்மிடரி ரசீதைக் காட்டி எங்களுக்கான படுக்கைக்குச் சென்றோம். நான்கு பக்கமும் மரத்தடுப்புக்களால் தடுக்கப்பட்டு கிட்டத்தட்டப் பத்துக்குப் பத்து அறை போலவே அது இருந்தது. அங்கே போய்ப் பெட்டிகளை வைத்துவிட்டுப் படுத்துக் கொண்டோம்.

மாலை அங்கே தேநீரோ, காஃபியோ வரும் என நினைத்தால் எதுவும் வருவதில்லை. இதற்கு முன்னால் ரயில்வே தங்குமிடத்தில் தங்கும்போதெல்லாம் காஃபி, தேநீர், தினசரி ஆகியவை இலவசமாகக் கொடுத்து வந்திருக்கின்றனர். அதோடு நம்ம ரங்க்ஸ் இங்கேயே அறை  கிடைத்தால் தங்கிவிட்டுத் திரும்பும்போது இங்கிருந்தே விமானநிலையம் செல்லலாம் என யோசித்தார். உடனே ரயில்வே அலுவலக அதிகாரியைப் போய்ப் பார்த்தால் அவர் இப்போதெல்லாம் இந்தத் தங்குமிடம் ஒதுக்குவதை நாங்கள் செய்வதில்லை. ஐ.ஆர்.சி.டி.சி. நேரிடையாகச் செய்கிறது. மேலும் இருவருக்காக எல்லாம் இப்போது அறைகள் கொடுப்பதில்லை. குறைந்த பட்சம் ஒரு குடும்பம் அல்லது 3,4 பேர் இருக்க வேண்டும். இருவருக்குக் கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள் என்று சொல்லிவிட்டார். சரினு அங்கே இருந்த காஃபி ஸ்டாலில் தேநீர் கேட்டு வாங்கி வந்தார். அதைக் குடித்தால்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கோகோ பவுடர் போட்ட காஃபி! குமட்டிக் கொண்டு வந்தது. கொஞ்சம் வெளியே போய் வரலாம்னு கிளம்பினோம். அப்படியே திரும்பி வரச்சே இரவு உணவை முடிச்சுக்கலாம்னு எண்ணம். மறுபடி அதே லாட்ஜுக்குப் போய் அறைக்கு விண்ணப்பித்தால் காலை இருந்தவர் இப்போ இல்லை. இப்போ அறை வாடகை ஏசி இல்லாததற்கே 2500 ரூபாய் எனவும் அதுவும் இரண்டு பேருக்குக் கொடுக்க முடியாது எனவும் சொல்லி விட்டார். கறாராகப் பேசினார்.

பக்கத்தில் உள்ள சாகர் ஓட்டலுக்குப் போய் ஆளுக்கு ஒரு பாதம் மில்க் ஷேக் சாப்பிட்டோம். ஆனை விலை, குதிரை விலை கூடக் கொஞ்சம் இறங்கி இருக்கும் போல! அங்கிருந்து அறைக்கு என்ன செய்வது என யோசித்த வண்ணமே நடந்தால் மறுபடி மேலே முட்டிக் கொண்டது அதே ஆட்டோக்காரர். கிட்டத்தட்ட எங்களைத் தூக்கிப் போட்டுக்கொள்ளாத குறையாய் அந்த ஆள் தூக்கிப் போட்டுக் கொண்டு பறந்தார்.  வழியெல்லாம் இது கேஈஎம் ஆஸ்பத்திரி, இது அந்தப் பேட்டை, இது இந்தப் பேட்டை என நம்மவர் புனே குறித்த பழங்கால நினைவுகளில் ஆழ ஆட்டோ மங்கள்வார்ப்பேட்டையில் ஓர் ஓட்டல் முன் வந்து நின்றது.

53 comments:

  1. திருபரங்குன்றத்தில் (கார்த்திகைக்கு) முருகனை தரிசனம் செய்து விட்டு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது ஒரு நடிகரைப் பார்த்தேன் , அவர் பேர் தெரியாது, நாடகம், சினிமாவில் வில்லன், போலீஸ் உயர் அதிகாரியாக எல்லாம் வருவார், பெரிய மீசை வைத்தவர். அவரை பார்த்து சிரித்தேன், வணக்கம் வைத்தார், பதிலுக்கு வணங்கினேன், ஓட்டலில் நிறைய பேர் அவருடன் படம் எடுத்துக் கொண்டார்கள். விஜயகாந்த் கட்சியை சேர்ந்தவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து இருக்கிறார்.

    பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டேன் இவர் பெயர் என்ன?
    சட் என்று நினைவுக்கு வரவில்லை என்று
    மீசை ராஜேந்திரன் என்றார்.


    திருமலை , திருப்பதி தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.

    //அதே ஆட்டோக்காரர். கிட்டத்தட்ட எங்களைத் தூக்கிப் போட்டுக்கொள்ளாத குறையாய் அந்த ஆள் தூக்கிப் போட்டுக் கொண்டு பறந்தார். //

    அவருக்கு கமிஷன் கிடைக்குமே! அந்த அறை உங்களுக்கு பிடித்து தங்கினால் அல்லவா அவருக்கு கமிஷன் கிடைக்கும், தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, முதல் வருகைக்கு நன்றி. மீசை ராஜேந்திரன்? கேள்விப் பட்டதே இல்லையே! பார்த்திருக்கேனானும் தெரியலை! சமீபத்திய அதுவும் கடந்த பத்துவருடங்களாகப் படங்களை அதிகம் பார்க்காததால் நடிக, நடிகையரே தெரியவில்லை. விஜய், சூர்யா, அஜித்துக்குப் பின்னர் வந்த நடிகர்களையே புரிஞ்சுக்க முடியலை! :))))

      ஆமாம், ஆட்டோக்காரருக்குக் கமிஷன் கிடைக்கும் தான். அதை எதிர்பார்த்துத் தானே திருநெல்வேலியில் ஓர் மோசமான ஆட்டோக்காரர் எங்களை சுமாரான ஓர் லாட்ஜுக்குக் கூட்டிப் போய்விட்டார்! :(

      Delete
    2. நெல்லையைக் குறை சொல்லாதீர்கள். அது நெல்லைத்தமிழனையும் குறை சொன்னதுபோல....ஹாஹா

      Delete
    3. மதுரையே இப்போ மாறிப் போச்சு! நெல்லையைச் சொன்னால் என்னவாம்? :)))))

      Delete
  2. படியேறி ஹோட்டலா. ஏறி இறங்கியே ஜீரணம் ஆகிவிடும்.

    இத்தனை சிரமங்களுக்கு நடுவில்
    அம்பாள், பாண்டுரங்கன் தரிசனம் ஒன்றுதான் மனதுக்கு திருப்தி. தங்கள் பொறுமையைப்
    பாராட்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வல்லி. குறைந்தது 10படிகளாவது இருக்கு! பொறுமை எல்லாம் இல்லை. வேறே வழியே இல்லையே! எங்கே போனாலும் இதே கதி தான்!

      Delete
  3. //வழியில் திருமலா-திருப்பதி தரிசனமும்// - அப்போ நடிகைகள் தரிசனத்துக்குப் பிறகு பெருமாள் தரிசனமா? நல்லது.... மாமா ரொம்ப அட்வான்ஸ்ட் ஆக இருக்காரே. நான் அவர்கிட்ட கயிலாய யாத்திரை, சிவன் கோவில்கள் இந்த மாதிரி டாபிக்தான் பேசணும்னு நினைத்தேன் (ஹாஹா.. அவர்கிட்ட சொல்லி எனக்கு டியூஷன் எடுக்கச் சொல்லிடாதீங்க-சீரியல்கள், நடிக நடிகையர் பற்றி)

    ReplyDelete
    Replies
    1. கயிலை யாத்திரை, சிவன் கோயில், பதஞ்சலி ஸ்தோத்திரம் இதெல்லாம் என்னுடன் பேசலாம். இஃகி,இஃகி! அவர் முன்னெல்லாம் நிறைய சினிமா பார்த்துட்டு இருந்தார். இப்போக் குறைச்சிருக்கார்! :))))

      Delete
  4. //அவ்வளவு காரம் என்னால் சாப்பிட முடியவில்லை. // - படிக்கும்போதே ரொட்டியையும் பைங்கன் பர்த்தாவையும் சாப்பிட்ட மாதிரி நாக்கில் நீர். இங்க விவி புரத்துல அக்கி ரொட்டியும் பைங்கன் பர்த்தாவும் (அது என்ன பர்த்தா? பைங்கன் என்பது பெண்ணா?), அதில் பாதி கத்திரிக்காயை நீளவாக்கில் வேகவைத்துக் கொடுத்திருந்தார்கள்..சாப்பிட்டேன்... அருமையா இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் இப்படியுமாக தங்களது பயண அனுபவங்களைச் சொல்ல நாங்களும் அந்த சுழலுக்குள்!....

      இஃகி..இஃகி..

      Delete
    2. நெல்லை அது இங்க எண்ணேகயி நு சொல்றது. அக்கி ரொட்டிக்கு பெரும்பாலும் அதான் சைட் டிஷ். கூர்க் ஃபேமஸ்.

      கீதா

      Delete
    3. நெல்லை பைங்கன் பர்த்தா ஸ்மாஷ்ட் கத்தரிக்காயைத்தான் அப்படிச் சொல்லறாங்க....பஞ்சாபி டிஷ்.பைங்கன் நா கத்தரிக்காய். பர்த்தா என்றால் ப்யூரி/ஸ்மாஷ்டு/ மசித்தது என்று பொருள்.

      நம்ம ஊர்லயும் சுட்டக் கத்தரிக்காயில் டிஷஸ் செய்யறதுண்டே

      கீதா

      Delete
    4. //எண்ணேகயி நு சொல்றது// - அப்படியா கீதா ரங்கன்? கூட வந்திருந்த இருவருக்கும் கத்தரி அலர்ஜி. அதனால் முழு கத்தரியையும் நான் சாப்பிட்டேன். வெண்ணெய்போல இருந்தது.

      கத்தரிக்கா கறி, கூட்டு போன்றவை ஓகே. கொத்சுலாம் எனக்குப் பிடிப்பதில்லை (அரிசி உப்புமா காம்பினேஷன்)

      Delete
    5. இந்த அக்கி ரொட்டியை ஒரு தரமாவது சுவைக்கணும்னு இருக்கேன். வேடிக்கை என்னன்னா அம்பத்தூரில் எங்க வீட்டில் குடியிருந்தவங்க பெங்களூரிலேயே வளர்ந்தவங்க. இந்த அக்கி ரொட்டி அடிக்கடி பண்ணுவாங்க. ஆனால் கண்ணிலேயே காட்டியதில்லை. ஒரு நாள் பண்ணிட்டுப் படங்கள் எடுத்துப் போடறேன். எண்ணெ கயி? எண்ணெய்க் கறியா? முழுக்கத்திரிக்காய் வதக்கல்?

      Delete
    6. துரை, வாங்க, வாங்க! அதிகம் சுழல் எல்லாம் இல்லை.

      Delete
  5. நல்லவேளை.... புனேயிலும் உங்களுக்குன்னு ஒரு ஆட்டோக்காரர் அகப்பட்டு, நெல்லை பெயரைக் காப்பாற்றிவிட்டார்...

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  6. திருமலா-திருப்பதி தரிசனத்துக்கு முன்பு நீங்க தரிசித்தவர்கள் ரொம்பப் பிரமாதமானவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜி, நிஜம்மாச் சொல்றேன். நான் அப்போ உங்களைத் தான் நினைத்தேன். :)

      Delete
  7. என்ன என்பதைப் போல் நான் பார்க்க மெல்லக் கிசுகிசுவென்று அதான் அந்த நடிகர்! அந்தப் பெண்ணும் அந்த நடிகை! என்றார். எனக்குக் கோபம் வந்தது. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எந்த நடிகை, எந்த நடிகர்! சொன்னால் தானே தெரியும். //

    ஹா ஹா ஹா ஹா ஹாஹ் ஆ...சிரிச்சு முடில அக்கா. அதுக்கு அடுத்த வரிகளும் வாசிச்சு சிரிச்சு ஹையோ...மாமாவும் நீங்களும் பேசினது செம ஸ்வாரஸ்யம்....ஹூம் இருந்தாலும் சீரியல் நடிகைனு சொல்லிட்டு அவர் யார்னு தெரியாம....ஹா ஹா ஹா ஹா அது சரி ஜீவா இப்ப சீரியல்ல நடிக்கத் தொடங்கிட்டாரா? மார்க்கெட் போச்சோ?!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கீசா மேடம் மட்டும் ஸ்மார்ட்டா இருந்திருந்தாங்கன்னா (சினி உலகத்தில்) நமக்கு இப்போ காசிப் கிடைச்சிருக்கும்... அந்தப் பெண் யாரோ.. ஜீவா திருமணமானவரல்லவா?.......

      Delete
    2. தி/கீதா, அவங்க ஏதோ துணை நடிகைனு நினைக்கிறேன். பெயர் எல்லாம் நினைவில் வரலை. பல சினிமா நடிகைகள் சீரியைலும் நடிக்கிறாங்களே! ஜீவாவைப் படங்களிலேயே நான் அதிகம் பார்த்ததில்லை. சீரியல்லே நடிக்கிறாரா இல்லையானு எப்படிச் சொல்ல! மார்க்கெட் எங்கே போயிருக்கும்? அதது இருக்கும் இடத்தில் இருக்கும்!

      Delete
    3. நெல்லை, எனக்கு அந்தக் கவலை இல்லை!

      Delete
  8. மாமாக்கு செம அப்டேட்டடா இருக்கார்!!! ஹா ஹா ஹா ஹா ஹா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, சிரிப்பொலி, ஆதித்யா சிரிப்பு சானல் எல்லாம் அடிக்கடி பார்ப்பார். இப்போல்லாம் வராது. அதெல்லாம் பணம் கட்டணுமே! அதனால் எடுத்துட்டோம்! :)))))

      Delete
  9. இப்ப என் மண்டை குடையுது...வடிவேலுவுடன் செத்து செத்துப் பிழைக்கும் நடிகர் யார்? பவன் கல்யாண் யார்? இப்படினு...இவங்க தரிசனத்துக்குப் பிறகு// ஹிஹிஹி அதனால என்ன?!!! ஹிஹிஹி...கோபுரம் பார்க்கும் போது எல்லாருக்காகவும் தானே பிரார்த்தனை ..!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, அந்த நடிகர் வடிவேலுவுடன் நடித்த சில, பல நகைச்சுவைக் காட்சிகளை நானும் பார்த்திருக்கேன். ஏதோ ஒரு படத்தில் பைத்தியமாக நடிப்பார். அவர் பைத்தியம்னு தெரியாமல் வடிவேலு போய்ப் பேச்சுக் கொடுத்து மாட்டிப்பார்! பவன் கல்யாண் கல்யாண் குமாரின் மகன். அப்படித் தான் நானும் அறிவேன்.

      Delete
    2. ஆனால் இவர் சிரஞ்சீவியின் தம்பி என விக்கி சொல்கிறது. படத்திலேயும் வேறே மாதிரி இருக்கார். அப்போக் கல்யாண் குமாரின் மகன் பெயர் பவன்கல்யாண் இல்லைனு நினைக்கிறேன்.

      Delete
    3. கல்யாண் குமாரின் மகன் பெயர் பரத் கல்யாண். ஏதோ ஒரு கல்யாண். எனக்கு அதிலே குழப்பம் வந்து பெயரை மாத்திட்டேன். :))))

      Delete
  10. ரோட்டி ஆமாம் கனமா இருக்கும் ஆனாலும் கோதுமை..பொதுவாவே வட இந்தியாவில் நான் பார்த்த வரை சப்பாத்தியே கூட கொஞ்சம் கனமாகத்தான் செய்கிறார்கள் அல்லது மிகச் சின்ன வட்ட வடிவமாகத்தான் செய்கிறார்கள். நானும் வீட்டில் அப்படித்தான் செய்கிறேன் யாராவது மெலிதாக வேண்டும் என்றால் மட்டுமே மிக மெலிதாகச் செய்யறேன்.

    பைங்கன் பர்த்தா ஆஹா! சாப்பிடணும் போல இருக்குதே! எங்க வீட்டுல நல்ல போணியாகும். எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்...

    ஆமாம் அங்க எல்லாம் மிளகாய் எ மி ரசத்துல காரமா ஊறப் போட்டுக் கொடுக்கறாங்க. சமோசாவுடன்...கட்லட்டிற்குக் கூட. பூனாவில்தான் என் மச்சினர் குடும்பம். நான் நிறைய போயிருக்கிறேன். சமீபத்தில்தான் போக முடியவில்லை.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ருமாலி ரொட்டி தான் மிகவும் மெலிதாக இருக்கும். நான் தேவைக்கேற்ப மெலிதாகவும், சிறிதே கனமாகவும் செய்வேன். கனமாக இருந்தால் நன்றாக உப்பும்.

      Delete
  11. புனா வில் கொஞ்சம் கஷ்டப்பட்டிவிட்டீங்களோ?

    சாகர் உணவகம் கொஞ்சம் ஃபேமஸ்தான் அங்கு. நிறைய ப்ராஞ்சஸ் உண்டு.

    இங்கு பங்களூரிலும் சாகர் இருக்கிறது ஆனால் அந்த சாகரின் ப்ரான்ச்தானா என்று தெரியலை..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கஷ்டமெல்லாம் படவில்லை. சாகர் உணவகம் பெண்களூரில் பசவங்குடி? எங்கேனு நினைவில் இல்லை. நாங்களும் சாப்பிட்டோம். டிஃபன் பரவாயில்லை ரகம். காஃபி நன்றாக இருந்தது.

      Delete
  12. உங்கள் தேஜஸ் ரயில் பயணம் பற்றி வாசித்தேன் கிட்டத்தட்ட ஃப்ளைட் போல இருக்கிறது. பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. பார்ப்போம்.

    உங்களின் பயணக் குறிப்புகளை வாசித்தேன். கோலாப்பூர் பயணம் படங்களும் பார்த்தேன் பெரிய கோட்டை போன்று இருக்கிறது. கோவில்தானோ அது?

    இந்தப் பதிவும் வாசித்தேன் சகோதரி. ஓ இப்போது ரயில் நிலையத்தில் டார்மிட்டரி தானா? அறை வசதிகள் இல்லையா? ஒரு நான்கு வருடம் முன்பு நாங்கள் ஒரு தனி ரூம் புக் செய்ய முடிந்ததே. ஏசி அறை, ஏசி இல்லாத அறை என்றெல்லாம் இருந்ததே. காட்பாடியில் கூட 5 வருடம் முன்பு புக் செய்து தங்கினோம். ஏசி அறை இருவர் மட்டும். அது போல திருவாரூரில் ஒரு ரூம் ஆனால் நாங்கள் 6 பேர். இது புக்கிங்க் செய்ய முடியவில்லை. அங்கு சென்றுதான் புக் செய்தோம். ஷோரனூரிலும் இரு ரூம் புக் செய்து தங்கினோம்.

    ஆனால் இப்போது உங்கள் பதிவிலிருந்து தெரிகிறது அந்த சேவை இப்போது இல்லை என்று தெரிகிறது.

    தொடர்கிறோம்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன். கோலாப்பூர்ப் பயணம் குறித்து விரிவாக இன்னும் எழுதலை. கோயில், கோட்டை, அரண்மனை எல்லாமும் இருக்கிறது. ரயில் நிலையத்தில் அறைகள், டார்மிடரி எல்லாமும் வழக்கம் போல் உள்ளன. ஆனால் ரயில்வேயே நேரிடையாக நாம் போய்க் கேட்டால் முன்னெல்லாம் கொடுப்பார்கள். அந்த மாதிரி இப்போக் கொடுப்பதில்லை. ஆன்லைனில் தான் அறைகள், டார்மிடரி உட்பட முன்பதிவு செய்யணும். அறைகள் கொடுக்கிறாங்க. ஆனால் குடும்பமாக இருக்கணுமாம். குறைந்தது 3 நபர்கள் இருக்கணுமாம். இரண்டு பேர் மட்டும், கணவன், மனைவி மட்டும் எனில் அவங்களுக்குக் குடும்பமாகத்தெரியவில்லை. நாங்களும் அடிக்கடி ரயில்வே ரிடையரிங் ரூமில் அறை எடுத்துத் தங்கி இருக்கோம். 2015 ஆம் ஆண்டில் கூடத் திருவனந்தபுரம் வந்தப்போ ரயில்வே ரிடையரிங் ரூமில் தான் தங்கினோம். இன்னும் திருச்சி, தஞ்சை போன்ற ஊர்களில் எல்லாம் தங்கி இருக்கோம். நாக்பூரில் தங்கி இருக்கோம்.

      Delete
    2. Railway Retiring Rooms booking via online only. We cannot contact the Station Master directly and ask for the room.

      Delete
  13. பல சுற்றுலாத் தலங்கள், இரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் பகுதியில் இருக்கும் ஆட்டோ/கார் ஓட்டுனர்கள் இப்படி தங்குமிடம் அழைத்துச் சென்று கமிஷன் வாங்குவார்கள். முன்னரே பதிவு செய்து விட்டோம் என்று சொன்னால் சிலருக்குக் கோபம் வரும்!

    பயணம் பற்றிய விவரங்களை மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பல இடங்களில் நாங்கள் முன்பதிவு செய்து விட்டதாகச் சொல்லி விடுவோம். ஏற்கெனவே இணையம் மூலம் பார்த்த லாட்ஜுக்குக் கூட்டிப்போகச் சொல்லுவோம். ஆனால் அதெல்லாம் எல்லா நேரங்களிலும் சரியாக வரவில்லை.

      Delete
  14. திருமலை திருப்பதி தரிசனத்துக்கு முன் ஏகப்பட்ட நடிகை நடிகையர் தரிசனம் போல! பவன் கல்யாண் கல்யாண்குமார் மகனா? யார், நெஞ்சம் மறப்பதில்லை கல்யாண்குமாரா? ஆனால் பவன் கல்யாண் ஆந்திர நடிகர் இல்லையோ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், நீங்க சொல்வது சரியே! பவன் கல்யாண் ஆந்திர நடிகர். நான் பரத் கல்யாணைப் பவன் கல்யாண் எனச் சொல்லி விட்டேன். நெஞ்சம் மறப்பதில்லை கல்யாண் குமாரின் மகனே தான்!

      Delete
    2. வளர்ப்பு மகன்

      Delete
    3. ஓ பரத் கல்யாண் கல்யாண் குமாரின் வளர்ப்பு மகனா?எனக்கு இந்தச் செய்தி புதியது!

      Delete
  15. மதியமே எங்காவது தங்கிவிட்டு, எங்காவது சுற்றி பார்த்திருக்கலாமே... அந்த ஆட்டோக்காரர் உங்களுக்கு ஆஸ்தான ஆட்டோக்காரர் ஆகிவிட்டார் போல...

    ReplyDelete
    Replies
    1. நாங்க புனேக்கு விமானத்தில் வந்து சேர்ந்தது பனிரண்டு மணிக்கு. அங்கிருந்து ஆட்டோ மூலம் ரயில்வே ஸ்டேஷன் வந்து உணவு சாப்பிட்டு விட்டு ரயில்வே டார்மிடரிக்குப் போகையில் இரண்டு மணி. புனே நாங்கள் ஏற்கெனவே பார்த்த ஊர் தான். அதிலும் நம்ம ரங்க்ஸ் அங்கே பத்தாண்டுகள் இருந்திருக்கார்! ஆகவே சுற்றிப் பார்க்கும் எண்ணமே இல்லை. நாலு மணி வரை ஓய்வு எடுத்துக் கொண்டு பின்னர் திரும்பி வந்ததும் தங்குவதற்காக அறை தேடினோம்.

      Delete
  16. உங்கள்பயண அனுபவங்களில் முக்கியமாய் தெரிவது உண்ண உணவு தங்கு மிடமும் தான் நிறையவே கஷ்டங்களை அனுபவிக்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்ண உணவும் கிடைக்காமல் இல்லை. தங்குமிடமும் கிடைக்காமல் இல்லை. கஷ்டங்களும் இல்லை. திரும்பி வரும்போது அறை வேண்டும் என்பதால் அறை தேடினோம். பதிவை மறுபடி படித்துப் பாருங்கள். சாகர் ஓட்டலில் நல்ல உணவாகவே சாப்பிட்டோம். காரம் தேவைப்படுபவர்களுக்கு அது சரியாக இருக்கும். எனக்குக் காரம் ஒத்துக்காது. லஸ்ஸி, பாதாம் மில்க் ஷேக் போன்றவை அங்கே நன்றாகவே இருந்தது.

      Delete
  17. நடிக, நடிகைபற்றி உங்க ரங்க்ஸ் நெறய தெரிஞ்சு வச்சிருக்காரு.. அவர நீங்க சரியா புரிஞ்சுவச்சிக்கிறது நல்லது! திருப்பதி-திருமலா தரிசனம், பூனே போவதற்கு முன்னால்! மேலிருந்து ப்லெஸ்ஸிங்..

    பூனேயில் காரசாரமாக பர்த்தா கெடச்சா, நன்னா ரொட்டியோடு சேத்து உள்ளே தள்ளவேண்டியதுதானே! எப்பப் பாத்தாலும் பாதாம் மில்க்கையும், ஐஸ் க்ரீமையுமையா தேடமுடியும்?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, வாங்க ஏகாந்தன், நடிக, நடிகையர் குறித்த அறிவு மட்டும் எனக்கு பூஜ்யம் இல்லை. அவங்களைக் கண்டு பிடிப்பதிலும்! ஹெஹெஹெஹெ! நேற்றுப் பார்த்த நடிகரோட முகமோ, நடிகையோட முகமோ இன்னிக்கு மறக்கும். இப்போல்லாம் சீரியல் நடிக, நடிகையின் முகம் நினைவில் வந்துடுது! ஆனால் அதிலும் எக்கச்சக்கமான குழப்பம். திருமணம் ஆகி 25 அல்லது 26 வருஷமே ஆன ஒருத்தருக்கு 25 வயசில் பையர்! ஒத்துக்கலாம். ஆனால் அந்தப் பையருக்கு முன்னால் இரு பெண்கள் ஒருத்திக்கு ஏழு, எட்டு வயசு இருக்கும், இன்னொருத்திக்கு எட்டு மாசம் இருக்கும். காணாமல் போறாங்க. அவங்க காணாமல் போயும் 25 வருஷம் ஆகிறதாம். அப்போ மூத்த பெண்ணுக்கே 33 வயசு ஆகிவிடலையோ? ஆனால் கதைப்படி இல்லை! ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ என்று விழித்துக் கொண்டு இதை எல்லாம் கேட்டு அவரைத் தொந்திரவு செய்வேன். லாஜிக் பார்க்காதேனு திட்டுகிறார்! என்னத்தைச் சொல்ல! :))))))

      Delete
    2. பர்த்தா தொட்டுக் கொண்டு தான் ரொட்டியோடு சாப்பிட்டேன்/டோம்/ ஆனால் எனக்கு அந்தக் காரம் வயிற்றில் வலியும் அசிடிடியும் வந்துடும். பிரயாணம் சௌகரியமாக இருக்கணுமே! ஆகவே கொஞ்சம் போல் தொட்டுக் கொண்டேன். மிச்சம் வீணாகத் தான் போனது! 150 ரூபாய் என நம்மவர் முணுமுணுப்பு! மருத்துவருக்கு 1500 ரூ கொடுக்கும்படி ஆகுமே என பதில் சொன்னேன்! ஐஸ்க்ரீம் எங்கே வேண்டுமானாலும் கிடைச்சுடுது! இந்த பாதாம் மில்க் ஷேக் தான் எல்லா இடங்களிலும் கிடைக்கிறதில்லை. புனே சாகரில் கிடைச்சது! :)))))

      Delete
    3. வணக்கம் சகோதரி

      பயண அனுபவம் மிக நன்றாக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். சென்ற பகுதியையும் படித்து ரசித்தேன்.எனக்கு ஒரு வாரமாக வலைத்தளம் வர இயலவில்லையாததால் தங்கள் பதிவுகளை மொத்தமாக படிக்கிறேன். வான் வெளியிலிருந்தே திருமலை தரிசனம், பெருமாள் தரிசனம் என சிறப்பாக கிடைத்திருக்கிறது தங்களுக்கு. புனேயில் நீண்ட வருடங்கள் இருந்தமையால் தங்களுக்கு எல்லா இடங்களும் தெரிந்திருக்கிறது. புதிதாக (எங்களைப் போல்) செல்பவர்களை ஆட்டோக்காரர் அங்குமிங்கும் அலைக்கழித்து பார்த்திருப்பார்களோ என்னவோ? எப்பபோதேனும் செல்ல சந்தர்ப்பம் கிடைத்தால் தங்கள் பதிவு உபகாரமாய் இருக்கும்.

      இங்கும் சாகர் ஹோட்டல்களில் எப்போதோ குழந்தைகளுடன் வெளியில் செல்லும் போது சாப்பிட்டுள்ளேன். பயணத்தின் போது நல்ல உணவு கிடைக்கவில்லையென்றால் கஸ்டந்தான். வயிறு பிரச்சனை செய்ய ஆரம்பித்து விட்டால் பயணம் இனிமை தராது. வாஸ்தவம்தான். இனியும் தங்கள் பிரயாணங்களுடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. வாங்க கமலா, உங்களுக்கு நேரம் கிடைக்கையில் வாங்க! அவசரமே இல்லை. புனேயில் நான் இருந்ததில்லை. அவர் தான் இருந்திருக்கார். நாங்க 2009-10 ஆம் வருடம் ஔரங்காபாத் சென்ற போது நான் புனே போகவில்லை என்பதால் ஔரங்காபாதிலிருந்து புனே வந்து அங்கே ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டுப் பின்னர் சென்னை வந்தோம். எனக்கு எப்போதுமே வயிறு வீட்டில் கூடப் பிரச்னை பண்ணும்.எனக்காகத் தான் ஔவையார் இந்தப் பாடலையே பாடி இருக்கிறார் என நினைப்பேன். "ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்! இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்! ஒரு நாளும் என் நோவறியா இடும்பை கூர் என் வயிறே! உன்னோடு வாழ்தல் அரிது! " இதான் என் நிலைமை, எப்போதும்.

      Delete
    5. வணக்கம் சகோதரி

      /எனக்காகத் தான் ஔவையார் இந்தப் பாடலையே பாடி இருக்கிறார் என நினைப்பேன். "ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்! இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்! ஒரு நாளும் என் நோவறியா இடும்பை கூர் என் வயிறே! உன்னோடு வாழ்தல் அரிது! " இதான் என் நிலைமை, எப்போதும்./

      ஹா ஹா ஹா. தாங்கள் கூறுவது உண்மைதான். ஒளவையார் வயிறு படுத்தும் பாட்டை உணர்ந்துதான் கூறியுள்ளாரோ என்னவோ? எனக்கும் அப்படித்தான்.. காலம் முழுக்க வீட்டு சாப்பாடு சாப்பிடுகிறோமே.. எங்காவது பிரயாணத்தின் போது வேறு வித்தியாசமாக ஏதாவது சாப்பிடலாம் என்று சிறிது ஆசைப்பட்டு விட்டால் போதும்.! ஒரு வேளைக்கு உதவி வாய் மூடி மெளனமாகயிருக்கும் வயிறு இரண்டாவது பொழுதில் போர் கொடியை கையில் தூக்கி விடும்.. அப்புறமென்ன.! என்னுடன் வரும் அனைவரும் சாப்பிட நான் கண்களால் மட்டுமே தரிசித்துக் கொள்வேன். "உனக்கு இதெல்லாம் ஒத்துக் கொள்ளவில்லையென்றால் இரண்டு இட்லி மட்டும் எடுத்துக்கொள்" என்பார்கள். அவர்களையே பார்த்து கொண்டு எதுவும் சாப்பிடாது வெறுமனே அமர்ந்திருந்தால் அவர்களுக்கு கண்பட்டு விடுமாம்... ஹா ஹா ஹா ஹா. ஆனால், என்ன இருந்தாலும் வீட்டு சாப்பாட்டிற்கு நிகர் வீட்டு சாப்பாடுதான்.! என்று அப்போது நினைத்துக் கொள்வேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    6. வாங்க கமலா, மீள் வருகைக்கு நன்றி. நாங்க குடும்பத்தோடு போனால் தான் எனக்கு அதிகம் பிரச்னை! சாப்பாடு வேண்டாம் எனில் புரிஞ்சுக்கறவங்க இல்லை. நாங்க இரண்டு பேர் மட்டும் போனால் அநேகமாக் காலை ஆகாரம் ஏதேனும் எடுத்துக் கொண்டு மதியம் எதுவும் சாப்பிட மாட்டேன். அல்லது காலையில் ஜூஸ், பழங்கள், பிஸ்கட் எனச் சாப்பிட்டு விட்டு மதியம் சிம்பிளாக ரொட்டி, தால் எனச் சாப்பிட்டுப்பேன். அநேகமாக ஏதேனும் ஒரு வேளை தான். எங்க வீட்டிலே இந்தக் கண் படும் என்பதெல்லாம் வராது! ஆனால் கோவம் வரும். அதுவும் பிள்ளை இருந்தார்னா அவருக்கு ரொம்பவே கோபம் வரும். ஏதாவது சாப்பிடும்மா என வற்புறுத்துவார்.

      Delete