எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 12, 2020

மார்கழித்திங்கள், மதி நிறைந்த நன்னாள் 27

 திருப்பாவைப் படங்கள் 27க்கான பட முடிவுகள்  திருப்பாவைப் படங்கள் 27க்கான பட முடிவுகள்


திருப்பாவைப் படங்கள் 27க்கான பட முடிவுகள்


 
கூடாரை வெல்லுஞ் சீர்க் கோவிந்தா! உன்றன்னைப்
பாடிப்பறைகொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனையப் பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பால்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!


 பொங்கல் பானைக் கோலம்க்கான பட முடிவுகள்    பொங்கல் பானைக் கோலம்க்கான பட முடிவுகள்
                                                                                                                                                               

 பொங்கல் பானைக் கோலம்க்கான பட முடிவுகள்   


படங்கள், கோலங்களுக்கு நன்றி கூகிளார்!

இன்று விரதம் முடிந்து நெய், பால் சேர்த்துப் பொங்கல் படைத்து அனைவரும் பகிர்ந்து உண்ணும் நாள். ஆகையால் பொங்கல்பானைக் கோலம் போடலாம்.  பொங்கல் இன்னும் பண்ணவில்லை.  பண்ணினால் படம் எடுத்துப் போடுகிறேன். :)  இன்றைய தினம் மதுரைப் பக்கமெல்லாம் கூடாரவல்லித் திருநாள் என்று விழாவாக நடக்கும். அனைவருமே இன்று சர்க்கரைப் பொங்கல் செய்து நிவேதனம் செய்து அனைவருக்கும் கொடுத்து உண்பார்கள்.

கூடாரை வெல்லும் என்பது இங்கே நாம் நம்முடன் சேர்க்கக் கூடாதவரான தீயோரைக் குறிக்கும்.  அதோடு நம்மிடம் இருக்கக் கூடாதனவான தீய எண்ணங்களையும் குறிக்கும். இவற்றை வெல்ல வேண்டுமானால் கண்ணன் அருள் வேண்டும்.  அவன் அனைத்தையும் கடந்தவன்.  அனைத்தையும் வென்றவன்.  ஆகவே அந்த கோவிந்தனைப் பாடிப் புகழ்ந்து ஏத்தினோமானால் நமக்கு அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும்.  கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவளையம் எனப்படும் அணிகலன், காதில் அணியும் தோடு, செவிப்பூ, காலுக்கு அணியும் பாடகம் எனப்படும் அணிகள் அனைத்தும் கிடைக்கும்.  இங்கே கைகளினால் தாளம் போட்டுக் கொண்டு, தோளுக்கு மேல் கைகளை உயர்த்திப் பெருமானைக் கும்பிட்டு, நாவினால் அவன் நாமாவைத் துதித்து, காதுகளினால் அவன் நாமாவைக் கேட்டு, கால்களினால் அவன் இருக்குமிடம் சென்று அவனையே சரணம் என அடைந்து முக்தி பெறுவதைக் குறிக்கும்.

அதோடு பால் சோற்றில் மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோர் என்பது அனைவருமாகச் சேர்ந்து இறைவனின் பிரசாதத்தைப் பகிர்ந்து உண்பதையும் குறிக்கும்.  அதே சமயம் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமன் திருவடியை நினைத்து அவனையே சரணம் என அடைந்தோமானால் நமக்கு அமிர்தமே கிட்டும்.  அந்த அமிர்தத்தையும் நாம் நம்முடன் கூட வரும் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டே பருக வேண்டும். என்ன தான் இவ்வுலகத்து சுகங்களான உணவு, உடை, பொருட்செல்வம் எல்லாம் அடைந்தாலும் கடைசியில் கண்ணன் திருவடிகளைச் சரணடைவதே நித்திய சுகம் என்கிறாள் ஆண்டாள்.



மனதுக்கு மிகவும் மகிழ்வைத் தரும் பாடல் இது. இந்தப் பாடலைப் பாடியபோது நோன்பு முடிகிறது. அதுவரையிலும், நெய்யுண்ணாமல், பாலுண்ணாமல், நாட்காலும் நீராடி, மையிட்டு எழுதாமல், மலரிட்டு முடியாமல் இருந்த பெண்கள் இப்போது நெய்யும், பாலும் சேர்த்து கூடவே இனிப்பான வெல்லமும் சேர்த்து அக்கார அடிசில் செய்து கண்ணனுக்கு மட்டுமல்லாமல் அவர்களும் உண்டு, நமக்கும் கொடுக்கிறார்கள். கண்ணனின் பிரசாதம் அல்லவோ?? ஆகவே அனைவருமாய்க் கூடி இருந்து குளிரவேண்டும் என்கிறாள் ஆண்டாள். எது கொடுத்தாலும், என்ன கிடைத்தாலும் மனது திருப்தி அடையாது. போதும் என்ற வார்த்தை வாயில் இருந்து வராது. ஆனால் போதும்னு நாமே சொல்லும்படி வைப்பது ஒருவருக்கு அன்னம் படைக்கும்போதுதான். வயிறு கொள்ளும் அளவுக்குத் தானே உண்ணமுடியும்?? அதிகம் உண்ண முடியாதே? ஆகவே உண்பவர்கள் வெகு விரைவில் போதும் திருப்தி என்று சொல்லிவிடுவார்கள். அவர்கள் வயிறைப்போல் அப்போது மனமும் குளிர்ந்து இருக்குமல்லவா?? அதான் கூடி இருந்து குளிர்ந்து அநுபவிப்பது.

இந்தப் பொங்கலையும் பாவம் ஆண்டாளுக்கு அவள் காலத்திலே பண்ணி கண்ணனுக்குக் கொடுக்க அவளுக்கும் கொடுத்து வைக்கலை. கண்ணனுக்கும் கிடைக்கவில்லை. அதுவும் அழகர் மலை நம்பிக்கு. திருமாலிருஞ்சோலையின் பரமசாமிக்கு. அதுக்காக எத்தனை நூற்றாண்டுகள் காத்திருந்தார்கள் இருவரும். ஆண்டாள் தரப்போகிறாள் என்று வருஷா வருஷம் அழகர்மலைக்கள்ளர் எதிர்பார்க்க, ஆண்டாளோ ஒவ்வொரு வருஷமும் பாடலைத் தவிர வேறேதும் கொடுக்காமல் இருக்க, ஏமாந்து போய்க்கொண்டிருந்தார் திருமாலிருஞ்சோலை நம்பி. கடைசியில் இங்கேயும் ஆண்டாளுக்கு உதவிக்கு வந்தவர் ஸ்ரீராமாநுஜர் தான். முன்னொரு பாடலில் செந்தாமரைக்கையால் சீரார் வளை ஒலிப்ப அவர் கண்ட ஆண்டாளைத் தம் சகோதரியாக ஏற்றுக்கொண்ட ஸ்ரீராமாநுஜர் அவளின் நாச்சியார் திருமொழியின் இந்தப் பாடலைப் படித்துப் பார்த்து மனம் உருகினார்.

"ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் (9:6)
நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ ?

அழகான மணம் வீசும் மலர்கள் நிறைந்த பொழில்கள் நிரம்பிய மாலிருஞ்சோலை நம்பியான எம்பெருமானுக்கு நான் நூறு தடாவில் வெண்ணெயும், நூறு தடா நிறைய அக்கார அடிசிலும் வைப்பதாய்ச் சொன்னாளாம். நூறு தடா என்பது நூறு அண்டாக்கள். இப்போதும் ( இப்போவுமானு தெரியலையே?) மதுரையில் பெரிய கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு அண்டாவில் தான் சாதம் வடிப்பார்கள். பெரிய பெரிய அண்டாக்களில் சாதம் வடித்துக் காடாத்துணி அல்லது வெள்ளை கதர் வேட்டியைக் கஞ்சி வடிய வாயில் கட்டி வடிய வைப்பார்கள். அந்தப் பழக்கம் ஆண்டாள் காலத்திலும் இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. அம்மாதிரி நூறு அண்டாக்கள் நிறைய வெண்ணெயும், நூறு அண்டாக்கள் நிறைய அக்கார அடிசிலும் படைப்பதாய் வேண்டிக்கொண்டாளாம். பல ஆண்டுகள் நிறைவேறாமல் இருந்த இந்தப்பிரார்த்தனையைப் பற்றிப் படித்த ஸ்ரீராமாநுஜர் தாம் திருமாலிருஞ்சோலை சென்ற போது அங்கே உள்ள நம்பிக்கு ஆண்டாளின் பெயரில் நூறு தடா வெண்ணெயும், நூறு தடா அக்கார அடிசிலும் சமைக்கச் சொல்லிப் படைத்து வழிபட்டார்.

பின்னர் அவர் சென்றது ஸ்ரீவில்லிபுத்தூருக்கு. அங்கே ஆண்டாளின் தனிக்கோயிலுக்குப் போனபோது, "வாருமையா, என் அண்ணாரே!" என்ற இனிமையான குரல் கேட்க, ஸ்ரீராமாநுஜரும், கூட வந்த சீடர்களும் குரல் எங்கிருந்து வருகிறதெனப் பார்க்க. மூலஸ்தானத்தில் இருந்த ஆண்டாள் விக்ரஹம் அவர்கள் கண்ணெதிரே நடந்து வந்து நின்று, மீண்டும், " வாருமையா என் அண்ணாரே", என அழைக்க, பின்னர் புரிந்ததாம் ஸ்ரீராமாநுஜருக்குத் தாம் ஆண்டாளின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு அவளுக்காக நிறைவேற்றிக் கொடுத்ததால் ஆண்டாளுக்கே அண்ணனாகிவிட்ட கதை! அது முதல் திருமாலிருஞ்சோலை மட்டுமில்லாமல் தென்மாவட்டங்கள் அனைத்திலும், முக்கியமாய்ப் பாண்டியநாட்டுப் பெருமாள் கோயில்கள் அனைத்திலும் இந்தக் கூடாரைவல்லித் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப் படும். அன்று எல்லாக் கோயில்களிலும் நெய் சொட்டும் சர்க்கரைப் பொங்கல் தான் நிவேதனம். இன்னிக்கு எங்க வீட்டிலும்! :D ஆண்டாள் பிறந்த வீட்டுக்கு இதைத் தொடர்ந்து வருவதாகவும் ஐதீகம். இப்போது பாடலின் பொருளைப் பார்ப்போமா?

கூடாரை வெல்லுஞ் சீர்க் கோவிந்தா! உன்றன்னைப்
பாடிப்பறைகொண்டு யாம் பெறு சம்மானம்= கண்ணனோ நம் வேண்டுகோளுக்கு இணங்கி வந்துவிட்டான். அவன் சாதாரணமானவன் அல்ல. கூடாரை அதாவது மனதினால் அவனைக் கூடாதவர்களையும் அவன் வென்று ஆட்கொள்ளுவான். அவர்களும் ஒருவிதத்தில் கண்ணனைத் தானே நினைக்கின்றனர். அவன் அடியார்களான நாம் பக்தியினால் நினைக்கிறோம் எனில் அவர்கள் கண்ணனிடம் கொண்ட வெறுப்பால், அவனை எவ்வாறு வெல்வது என நினைக்கின்றனர். ஆனாலும் அவர்களையும் வென்று ஆட்கொள்கிறான் கண்ணன். அதுவும் இவனோ பசுக்களையும் ரக்ஷிக்கும் கோவிந்தன். வாயில்லா ஜீவன்களை ரக்ஷிப்பவன் வாய் பேசும் நம்மிடம் உள்ள மூடத்தனத்தைக் கண்டு நம்மை வெறுப்பானா? மாட்டான்! பசுக்கள் அவனிடம் போய் எங்களை ரக்ஷிப்பாய் என்றா கேட்டன? இல்லையே? ஆகவே இவனுக்குத் தொழிலே இது தான் ரக்ஷகன் இவன்.

அத்தகைய கோவிந்தனைப் பாடி நாம் அடைவது வெறும் முக்தி தானா?? இந்த நாடே அல்லவோ நம்மைப் புகழும்? உண்மைதானே? எப்போவோ ஆண்டாள் எழுதி வைச்ச இந்தப் பாடல்களின் மூலம் ஆண்டாளின் புகழ் பரவித்தானே இருக்கிறது?? நாடு புகழும் பரிசு வேறு என்ன வேண்டும்? எதுவும் வேண்டாம். ஆனாலும் ஆண்டாள் ஒரு பெரிய லிஸ்டே வைத்திருக்கிறாளே?

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனையப் பல்கலனும் யாமணிவோம்=சூடகம் என்னும் கைவளை, தோள்களில் பூட்டிக்கொள்ளும் தோள்வளை, காதில் அணியும் தோடு, மேல் செவியில் போட்டுக்கொள்ளும் செவிப்பூ போன்றவையும் கால்களில் அணியும் பாடகம் என்னும் அணியும் அணிந்து கொள்வார்களாம். கண்ணன் வரலை, வரலைனு காத்திருந்தது போய்க் கண்ணனும் வந்துவிட்டான். நோன்பும் முடிந்துவிட்டது. நிவேதனமாய்ச் சர்க்கரைப் பொங்கலும் பொங்கியாகிவிட்டது. குளித்து ஆடை அணிய நல்ல பட்டாடை வேண்டுமே? ஆகவே கண்ணனிடம் ஒவ்வொன்றாய்க் கேட்கிறாள் ஆண்டாள்.

வெளிப்படையாக இவை அணிகலன்கள் என்று தோன்றினாலும் உள்பொருளாக கைவளையல் கைக்குப் போடும் காப்பாகவும், தோள்வளைகள் என்பது வைணவர்கள் தங்கள் கைகளில் குத்திக்கொள்ளும் சங்கு, சக்ர முத்திரைகளாகவும், காதில் தோடாக அணிவது எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணாய என்பதாயும் செவிப்பூவும் இரண்டு மந்திரங்களாயும் பாடகம் என்பது புகழ்ந்து கூறும் ஸ்லோகங்களாகவும் கூறுவர். ஆகவே இத்தனையும் கண்ணன் தங்களுக்குக் கொடுக்கவேண்டும் என ஆண்டாள் எதிர்பார்த்ததில் வியப்பில்லையே?

ஆடையுடுப்போம் அதன் பின்னே பால்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!= அணிகலன்கள் மட்டும் போதுமா?? ஆடை வேண்டாமா? ஆயிற்று, குளித்தாயிற்று, கண்ணனைப் புகழ்ந்து பாடிக்கொண்டே இருக்கிறோம். ஆடைகள் அணிந்து அணிகலன்கள் அணியவேண்டியதுதான் பாக்கி. கண்ணனுக்குச் சாற்றிய துணிகளே இவர்களுக்குப் பிரசாதமாய்க் கிடைத்தாலும் சரி. இங்கே வெளிப்படையாய் ஆடை என்பது உள்பொருளில் கண்ணன் ஞானத்தை ஆடையாக அவர்கள் அறியாமைக்குக் கொடுக்கவேண்டும் என்றே கேட்கிறாள். இத்தனைக்கும் பின்னரே பால்சோற்றை மூட நெய்பெய்து, மூட நெய் பெய்து என்றால், அந்தப் பால் சோறு முழுதும் முழுகுமாறு நெய்யைக் கொட்டி, பின்னே? நூறு தடா வெண்ணெய் என்றால் சும்மாவா? அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்றால் கையால் அள்ளிச் சாப்பிடவேண்டும். என்னதான் ஸ்பூன் நாகரீகம் என்றாலும் கை நம்ம கை, பிறர் பயன்படுத்த முடியாத ஒன்று. நாம் மட்டுமே பயன்படுத்துவோம் நம்ம கைகளை. ஸ்பூனெல்லாம் அப்படி இல்லை. அந்தக் கைகளால் எடுத்துச் சாப்பிடும்போது முழங்கை வழியாய் நெய்யும், பாலும் வழிய வேண்டுமாம்.

சமைச்சதும் அவ்வளவு பெரியதாக. சாப்பிடுவதும் அவ்வளவு பெரியதாக. அதும் ஒருத்தர் ரெண்டு பேரெல்லாம் இல்லை. எல்லாருமாய்க் கூடி இருந்து குளிர்ந்து, சளசளனு உற்சாகப் பேச்சுப் பேசிக்கொண்டே சாப்பிடலாம் என்கிறாள். இங்கே உட்பொருளாகப் பாலும், நெய்யும், வெல்லமும், அரிசியும் கலந்த சோறு எவ்வாறு இனிக்குமோ அவ்வாறு கண்ணனின் கனியமுதில் நாமும் ஒன்றாய்க் கலந்து அவனருளாலே அவனோடு இணைந்து நித்ய சூரிகளாய்க் கூடி இருப்போம், இன்புற்று மகிழ்வோம் என்கிறாள் ஆண்டாள். இவ்வாறு கூடி இருப்பதை பட்டத்திரி என்ன சொல்றார்னு பார்ப்போமா?

பரமாத்மாவின் சொரூபமே சத்தியம் வேறொன்றும் இல்லை என்கிறார்.

ஸத்யம் ஸுத்தம் விபுத்தம் ஜயதி தவ வபுர்நித்யமுக்தம் நிரீஹம்
நிர்த்வந்த்வம் நிர்விகாரம் நிகில குணகண வ்யஞ்ஹநாதார பூதம்
நிர்மூலம் நிர்மலம் த்ந்நிரவதி மஹி மோல்லாஸி ந்ரிலீனம்ந்தள்
நிஸ்ஸங்காநாம் முநீநாம் நிருபம பரமாநந்த ஸாந்த்ர ப்ரகாஸம்

பரம சத்தியமான சொரூபம் உம்முடையது. சுத்தமான விழிப்புடன் கூடிய சொரூபம். மேலும் வெற்றியும் உமது சொரூபத்துக்கே. என்றாலும் எந்தவித பந்தங்களும் இல்லாதது. எந்தவிதமான ஆசைகளோ, வேட்கைகளோ அற்றது. எவரோடும், எதனோடு ஒப்பிட்டுக்கூற இயலாத ஒன்று. என்றும் மாறாத்தன்மை கொண்டது. அனைத்துக்கும் ஆதாரமானது, முக்கியமாய் அனைத்து குணகணங்களுக்கும், அவற்றின் அடையாளங்களுக்கும் ஆதாரம் அதுவே. காரணம் ஏதும் இல்லாதது. மாசு இல்லாத அளவற்ற மஹிமை கொண்டது. பற்றற்ற ரிஷிகளின் மனதிலும், முனிவர்களின் மனதிலும் நிச்சலனமாய் உள்ளது. எந்நேரமும் நிகரற்றப் பரமாநந்தத்தில் பிரகாசிக்கிறது. இத்தகைய பரமாத்மாவின் சொரூபத்தின் சிறப்புக்கு ஈடும் இல்லை, இணையும் இல்லை.


22 comments:

  1. ஆண்டாளுக்கு ராமானுஜர் அண்ணனான கதை சுவாரச்யமாகப் படித்தேன்.  ஆம், இன்று கூடாரவல்லி கொண்டாடப்படும்.  ஆனால் நாங்கள் விரதம் இல்லாமலேயே பொங்கல் செய்து கொண்டாடி விடுகிறோம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், இந்த நிகழ்வை வேளுக்குடி சொல்லிக் கேட்கணும். அருமையா இருக்கும். முன்னால் கேபிள் மட்டும் இருந்தப்போ சென்னை/ஸ்ரீரங்கத்தில் தினமும் திருப்பாவை/திருவெம்பாவை பொழிப்புரை கேட்போம். இங்கே கேட்பதில்லை. அதோடு ஸ்ரீரங்கத்தில் இப்போக் கேபிள் இல்லையே, செட் டாப் பாக்ஸ் வந்ததும் கட்டணச் சானல்கள்/கட்டணம் இல்லாச் சானல்கள்னு குறிப்பாத் தேர்ந்தெடுத்திருக்கோம். ஆனால் பொதிகை கேட்கலாம்.

      Delete
  2. விளக்கங்கள் அருமை.  நாராயணீயம் செய்தவர்தான் பட்டத்திரி என்று அறிந்ததிலிருந்து அவருடைய விளக்கங்களை மனம் தானாகவே சேங்காலிபுரம் அனந்த்தராம தீக்ஷிதர் குரலில் / ராகத்தில் வாசிக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், சேங்காலிபுரம் நாராயணீயம் நான் நேரிலேயே கேட்டிருக்கேன். மதுரையில் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தான் வந்து தங்கிச் சொல்லுவார்.

      Delete
    2. தைப்பொங்கலுக்குக் கட்டியம் இந்நாள்..

      கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் அருளால்
      கூடும் நலங்கள் கோடியெனப் பெருகட்டும்...

      கோவிந்தோ.. கோவிந்த...

      Delete
    3. நன்றி துரை!

      Delete
  3. உங்களுக்கு ஒரு கேள்வி.

    பிராமணர்கள் சாதம் என்றுதான் சொல்வார்கள், இல்லைனா பொங்கல்.

    கடும் சொல் சொல்லும்போதுதான் சோறு என்ற வார்த்தையே வரும் (சும்மா கதை பேசாம சோத்தைப் போடு, சோத்தைக் கொட்டிக்கறான் பாரு என்பது போன்று)

    இங்கு ஆண்டாள் பால் சோறு என்று ஏன் சொல்கிறாள்? அது நம் வழக்கத்திலிருந்து மறைந்து விட்டதா?

    ReplyDelete
    Replies
    1. சோறு தான் சரியான வார்த்தை என்பார்கள் நெ.த. அன்னம் என்பது வடமொழி வார்த்தை. சாதம் பின்னாட்களில் வந்தது. இப்போது நாற்றம் என்னும் அழகிய சொல்லின் பொருள் மாறிப்போனது போல் சோறு, குட்டன், மயிர் என்னும் சொற்களும் கெட்ட வார்த்தையாக மாறிப் போய்விட்டன. குட்டனோ கேரளாவுக்குக் கடத்தப்பட்டு விட்டான்! :( இன்னும் சொல்லப் போனால், நம்மோட சிறப்பு "ழ"கரத்துக்கே மலையாள நண்பர்கள் உரிமை கொண்டாடுவார்கள். பலரிடமும் நான் சண்டை போட்டிருக்கேன், இது தமிழுக்கு உரியது என!

      Delete
    2. நான் கேட்ட இந்தக் கேள்விக்கு (10 வயதில்).. உண்ணும் சோறு தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்ற பாசுரத்துக்கு... என் பெரியப்பா, நம்மாழ்வார் காரி மாறன் வேளாளர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அப்படி என்றார். அப்போ அந்த வயதில் பால் சோறு என்பதைச் சொல்லி மீண்டும் கேட்கத் தோணலை.

      உங்கள் விளக்கம் அர்த்தமுள்ளது. பிறகு வருகிறேன் (அப்படீன்னா இன்னும் கேள்வி இருக்குன்னு அர்த்தம்)

      Delete
    3. ஆமாம், நெல்லைத் தமிழரே, "மயிர்" என்னும் சொல்லைத் திருஞானசம்பந்தர் தேவாரங்களில் பார்க்கலாம். அவ்வளவு சகஜமாகப் புழங்கி இருக்கிறார்கள். இப்போதைய நாட்களில் வசைச்சொல்லாகவும் கெட்ட அர்த்தத்தோடும் மாறி விட்டது. அதிலும் பெண்கள் "தலைமயிர்" என்றாலே அதைப் பார்த்துக் கேலி செய்பவர்கள் நிறைய உண்டு. மற்றப் பெண்கள் ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்கொண்டு கண் ஜாடை காட்டிச்சிரிப்பார்கள். சொந்த அனுபவம். :)))))))

      Delete
  4. இராமானுசரின் நூறு தடா அக்கார அடிசிலை எத்தனை முறை படித்தாலும் தித்திப்பு

    நல்ல எழுதியிருக்கீங்க. இடுகை முழுவதும் ரசித்தேன்.

    இன்று அவனருள் இருந்தால் அனந்த பத்மனாபன் தரிசனமும் நெய் பாயசமும் கிட்டும் என நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. மனதில் எதுவும் வேண்டாமல் நினைக்காமல், எதிர்பார்க்காமல் இறை தரிசனத்துக்குனு மட்டும் செல்லுங்கள். எல்லாம் தானாகக் கிடைக்கும். எனக்குப் பல முறை அனுபவம்!

      Delete
    2. இன்று நினைத்துப் பார்க்க முடியாத தரிசனம். எல்லா சன்னிதிகளிலும் பிரசாதம். பிறகு 4 நெய் பாயச டப்பாவும் வாங்கிக் கொண்டேன்

      Delete
    3. சந்தோஷம். நெய்ப்பாயாச டப்பா வாங்கீனீங்க, சரிதான். ஆனால் அது கோயில் மடப்பள்ளியில் செய்யப்பட்டதா? ஒப்பந்த அடிப்படையில் செய்யப்பட்டு விற்பதா? மடப்பள்ளியில் வாங்கினால் தான் பிரசாதம்.

      Delete
  5. தொடர்ந்து வருகிறேன் நன்று.

    ReplyDelete
    Replies
    1. நன்ரி கில்லர்ஜி!

      Delete
  6. எத்தனை தடவை படித்தாலும் அலுக்காதது ஸ்ரீ ராமானுஜ ஆண்டாள்
    சரிதம்.விவரமாக நீங்கள் எழுதியதே மகிழ்ச்சி.

    கூடாரை வெல்லும் கோவிந்தன் நாமம் வாழ்க.
    நூறு தடா யக்ஞம் அஹோபிலத்தில் நடந்த போது சேலையூர் சென்று பங்கெடுத்துக் கொண்டோம். பணம் கட்டியவர்களுக்கு வெள்ளி தடா சிறிய அளவில் கொடுத்தார்கள். ந்ருசிம்ஹனின் கருணையில் அந்த வருடம் பையர்களின் திருமணம் நடந்தது.
    எல்லாம் அவன் அருள்.

    ஆண்டாள் சொல்படி அனைவரும் ஒற்றுமையாகக் கூடி
    பங்கு போட்டுக்கொண்டு உண்ணும் போது இறைவன் அங்கே வந்து விடுகிறான்.
    ஸ்ரீ தீக்ஷிதரை நினைவு கொண்டது அருமை. நானும்
    அவருடைய கதா காலட்சேபங்கள் உணர்ச்சி பூர்வமாக மனதில் தங்கும்.
    மிக நன்றி கீதா மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, நாராயணீயம் என்றாலே அனந்தராம தீக்ஷிதர் தானே நினைவில் வருவார். நூறு தடா யக்ஞம் நடந்த விஷயம் எனக்குப் புதிது! தெரிந்திருந்தால் பங்கெடுத்திருப்போம். கொடுப்பினை வேண்டுமே!

      Delete
  7. //" வாருமையா என் அண்ணாரே", என அழைக்க, பின்னர் புரிந்ததாம் ஸ்ரீராமாநுஜருக்குத் தாம் ஆண்டாளின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு அவளுக்காக நிறைவேற்றிக் கொடுத்ததால் ஆண்டாளுக்கே அண்ணனாகிவிட்ட கதை!//

    எத்தனை முறை படித்து இருந்தாலும் படிக்கும் போது சிலிர்த்து போகிறது.
    அருமையான விளக்கம்.
    அவன் அருளால் அவனோடு இணைந்து இருப்போம்.
    படங்கள், கோலங்கள், விளக்கம் எல்லாம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. "பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!" என்று சொல்லுவார்களே கோமதி! இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் வந்த பாடல் அது என்பதால் இதையும் சொல்லி இருக்காங்க போல! கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி

      Delete
  8. விரிவான விளக்கம்.

    தொடர்கிறேன்.

    ReplyDelete