எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 06, 2020

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 21!

திருப்பாவைப் படங்கள் 21 க்கான பட முடிவு   திருப்பாவைப் படங்கள் 21 க்கான பட முடிவு


திருப்பாவை  21 க்கான பட முடிவு  திருப்பாவை  21 க்கான பட முடிவு



மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 21!
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுராய்!
ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலேழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!


காமதேனுக்  கோலம் க்கான பட முடிவு   காமதேனுக்  கோலம் க்கான பட முடிவு

 சூரிய சந்திரர் கோலம் க்கான பட முடிவு  சூரிய சந்திரர் கோலம் க்கான பட முடிவு

கோலங்கள், படங்களுக்கு நன்றி கூகிளார்!

மீண்டும் பசுக்களைக் குறிக்கும் பாடல்.  அதிலும் எப்போது கலங்களை எடுத்துக் கறந்தாலும் மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள். ஆகவே காமதேனுக் கோலமோ, பசுவும் கன்றுமாகவோ கோலம் போடலாம்.

உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே என பெருமானைக் கூறுகிறாள் ஆண்டாள். இருளை நீக்கும் ஆதவனைப் போல் நம் மனமாகிய காட்டில்  எந்நேரமும் காணப்படும்  துர் எண்ணங்களாகிய இருட்டை அங்கே பெருமானைக் குடியேற்றுவதன் மூலம் ஒளி பொருந்தியதாக மாற்றலாம்.  இதயத்தினுள் சுடராக ஒளிவீசிப் பிரகாசிப்பவன் பெருமானே.  அதை அறியாமல் நாம் மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கிறோம்.  உலகினில் தோற்றமாய் நின்றவன் நம்முள்ளும் சுடராய் ஒளி வீசுகிறான். அவன் திருவடிகளைப் புகழ்ந்து பாட வேண்டும். அதுவும் எப்படி?  எதிரிகள் கண்ணனின் பலத்தைக் கண்டு அவனுக்கு சேவை செய்ய வேண்டி அவனடிகளைப் பணிந்து வணங்குவது போலவா?  அவர்கள் அடி பணிவதில் அச்சம் கலந்திருக்கிறது கண்ணா!  எங்களுக்கு என்ன அச்சம்?

நாங்கள் உன்னைக் கட்டி இருப்பது எங்கள் பக்தியாகிய அன்பெனும் கயிற்றினால்.  இதற்கு தாமோதரனாகிய நீ கட்டுப்பட்டே தீர வேண்டும்.  உன்னிடம் நாங்கள் எங்களை ஒப்படைத்து விட்டோம்.  நீ எங்களை ஒதுக்க முடியாது.  அதே போல் நீயன்றி நாங்களும் இல்லை.  உன்னில் நாங்களும், எங்களில் நீயும் ஐக்கியம் ஆகிவிட்டோம். உன்னைப் புகழ்ந்து ஏத்துவது ஒன்றே எங்கள் வேலை.


இது வரைக்கும் பிராட்டியையும், பரமாத்மாவையும் சேர்த்து எழுப்பினாங்க. இப்போப் பிராட்டி எழுந்து வந்துவிடுகிறாள் போலும். ஆகையால் இந்தப் பாசுரம் பிராட்டியும் சேர்ந்தே பகவானை எழுப்பியதாய் ஐதீகம்.

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்= ஏற்கெனவேயே நந்தகோபன் வீட்டுப் பசுக்களின் எண்ணிக்கையை எண்ணிமுடியாது என்பதைப் பார்த்தோம். இங்கே அவைகள் அனைத்தும் கறக்கும் பாலைப் பற்றிச் சொல்லி இருக்கிறது. எத்தனை பாத்திரங்கள் எடுத்து வந்தாலும் அவை எல்லாமே நிரம்பி வழியும்படியாகப் பாலைச் சொரியுமாம் பசுக்கள். அவற்றை வள்ளல் பெரும்பசுக்கள் என்கிறாள். அப்படி பாலைப் பொழியும் பசுவைப்போல நீயும் உன் கருணை மழையைப்பால் போல் எங்கள் மேல் சொரிந்துவிடு என் அப்பா என்றே கேட்கிறாள்.

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்றமுடையாய்! பெரியாய்! = இவ்வளவு பெருந்தன்மை பொருந்திய நந்தகோபனின் மகனே, நீ எங்களை மறந்தாயோ? நீயல்லவோ இந்த உலகின் படைத்துக் காத்து, ரக்ஷித்து என அனைத்தையும் இடைவிடாது செய்து வருகிறாய்?? அதிலே நீ சற்றேனும் அயரவில்லையே? உற்சாகமாய்ச் செய்து வருகிறாயே? நீ எவ்வளவு பெரியவன்?? இவ்வுலகில் முதன் முதல் தோன்றியவனே நீயன்றோ. எண்ணி அடங்க முடியாத அநாதிகாலம் தொட்டே இருக்கும் எப்போது தோன்றினாய் என்றே சொல்லமுடியாதபடி இருக்கும் பெரியவனே.

உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலேழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்= ஏ பரம்பொருளே, ஜோதிவடிவானவனே, நீ இருக்கிறாய் என்பதை எல்லாரும் சொல்கிறார்கள் என்று மட்டும் நாங்கள் நம்பவில்லை. நீயே எங்கள் மத்தியில் வந்து எங்கள் குலத்தில் வந்து தோன்றினாயே? நாங்கள் அணுகுதற்கு எளிமையாக எங்களிடையே வந்து தோன்றிய அருள் பெரும் சுடர் வடிவானவனே. துயிலில் இருந்து எழுந்திரு. மாற்றார்களான அரக்கர்கள் கூட உன்னெதிரில் தங்கள் வலிமையைத் தொலைத்துவிட்டு உன்னிடமே அடைக்கலம் ஆகின்றனரே. அவர்களையும் நீ உன் அடிபணியச் செய்தாயே.

ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!= உன் சத்ருக்கள் உன்னை எதிர்த்தாலும் கடைசியில் உன் வீரத்துக்கு அடிபணிந்து உன்னிடமே அடைக்கலம் ஆனார்கள். உன் பக்தர்களான நாங்களோ உன் குணத்துக்கு, உன் பெருமைக்கு, உன் கருணைக்குத் தோற்றுப் போய் உன்னிடம் நீயே சரண் என்று வந்திருக்கிறோம். உன்னையே நாங்கள் எந்நாளும் போற்றிப் பாடி வந்திருக்கிறோம். உன்னை நினையாமல் எங்களால் இருக்கமுடியாது. உன் புகழைப்பாடாமல் இருக்க இயலாது.

பட்டத்திரி கண்ணன் புகழை எவ்வாறு கூறுகிறார் என்றால் அவன் எல்லையற்றவன், அனைத்துக்கும் அப்பாற்பட்டவன் என்கிறார்.

யத்து த்ரைலோக்ய ரூபம் தததபி ச ததோ நிர்க்கதோநந்த ஸுத்த
ஞாநாத்மா வர்த்தஸே த்வம் தவ கலு மஹிமா ஸோபி தாவாந் கிமந்யத்
ஸ்தோகஸ்தே பாக ஏவாகிலபுவநதயா த்ருஸ்யதே த்ர்யம்ஸ்கல்பம்
பூயிஷ்ட்டம் ஸாந்த்ர மோதாத்முகமுபரி ததோ பாதி தஸ்மை நமஸ்தே

எல்லையில்லாதவனே, இந்த மூவுலகின் ரூபமே நீர்தானே, இன்னும் இம்மூவுலகுக்கும் அப்பாற்பட்டு பரிசுத்த ஞான ஸ்வரூபியும் நீரன்றோ. உம்முடைய இந்த மஹிமை சாமானியமானதா? உமது இந்த திவ்ய ரூபத்தின் ஒரு சிறுதுளியே இந்தப்ப்ரபஞ்சமாய்ப் பரிணமித்திருக்கிறது. மற்றப் பாகங்கள் அனைத்துமே பரமாநந்த ஸ்வரூபமாக அனைத்துக்கும் அப்பால் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது. உம்மை நமஸ்கரிக்கிறேன்.










   

14 comments:

  1. அச்சத்துடன் மட்டுமல்ல, எதிர்பார்ப்பில்லாமலும் பணிவது சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

      Delete
  2. மாற்றாதே பால் சொரியும்
    வள்ளல் பெரும் பசுக்கள்....

    அத்தகைய பசுக்களைக் காட்டும்
    கோதை நாச்சியார் திருவடிகள் போற்றி...

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி துரை!

      Delete
  3. இன்றைய பகிர்வுக்கு நன்றி தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி கில்லர்ஜி!

      Delete
  4. மிக மிக அழகாக ஒரு உபன்யாசத்தைப் படிப்பது போல இருக்கிறது கீதா மா.
    சொல்லி இருக்கும் அழகு மிக அருமை. ஸ்ரீராமானுஜரைக் குறித்து இந்தப் பாடலுக்கு விளக்கம் சொல்வார்கள்.இத்தனைக்கும் நம் கோதைக்குப் பிற்பட்டவர்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  5. //உன்னில் நாங்களும், எங்களில் நீயும் ஐக்கியம் ஆகிவிட்டோம். உன்னைப் புகழ்ந்து ஏத்துவது ஒன்றே எங்கள் வேலை.//
    இந்த வரிகள் மகரிஷியின் பாடலை நினைவு படுத்துகிறது.
    உன்னில் அவன், அவனில் நீ அவன் யார் நீயார் பிரிவேது?

    //பரமாநந்த ஸ்வரூபமாக அனைத்துக்கும் அப்பால் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது. உம்மை நமஸ்கரிக்கிறேன்.//
    சரண் அடைகிறோம் பரமாத்மா.
    அவனை மறந்தால் நீசிறியோன் அவனை அறிந்தால் நீபெரியோன்.

    ReplyDelete
    Replies
    1. ரசனையான கருத்துக்கு நன்றி கோமதி!

      Delete
  6. ஒரே ஒரு முறை வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீ ரங்கம் சென்றிருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி சார், நான் மதுரையில் நிறையப் பார்த்திருக்கேன். ஸ்ரீரங்கத்தில் ஒரு முறை தான் பார்க்க முடிந்தது. அதுவே பெரிய விஷயம்.

      Delete
  7. இன்றைக்கு திருவரங்கமே வைகுண்ட ஏகாதசி வைபவத்தில் பிசி. உங்கள் பதிவு மிகவும் நன்று. தொடரட்டும் பாசுர அமுதம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட்! ஆமாம், வீடியோக்களும், படங்களுமாகக் குழுமங்களில் அனுப்பித் தள்ளிட்டாங்க! :) நேரே போனால் கூட இத்தனை பார்க்க முடியாது!

      Delete