எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 15, 2006

107. ஸ்ரீசக்ர ராஜ தனயே

அனைத்துக்கும் ஆதாரமான சக்தி வடிவானவள் "ஆதி பராசக்தி" என்று அழைக்கப் படுகிறாள்.எல்லாவற்றிற்கும் ஆதாரமான சக்தியைத் தாய் வடிவில் வழிபடுகிறோம். அந்த சக்தியின் வடிவே ஸ்ரீ லலிதா ஆகும். இவ்வுலகை ஆளும் பரம்பொருளின் சக்திகள் எல்லாம் இணைந்த வடிவே ஆயிரம் நாமங்களால் போற்றித் துதிக்கப் படும் ஸ்ரீ லலிதாம்பிகை. ஆதி பராசக்தியான ஸ்ரீ லலிதாம்பிகை ஸ்ரீ சக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து அபய, வரத, ஹஸ்த முத்திரையுடன் அருளாட்சி நடத்தி வரும் இடம் "திருமீயச்சூர்" என்னும் ஊராகும். இது கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் போகும் வழியில் பேரளம் ரயில்வே ஸ்டேஷனுக்கு மேற்கே 1 கி.மீ தூரத்தில் இருக்கிறது.

இந்தத் "திருமீயச்சூர்" தலத்தில் தான் தீவிர கம்யூனிஸ்ட்டாக இருந்த என் பெரியப்பா மாப்பிள்ளை திரு சந்திரசேகரன் அவர்கள் இறை வழிக்குத் திரும்பினார். அந்த விதத்திலும் இது எங்களுக்கு ஒரு முக்கியமான க்ஷேத்திரம் ஆகும். தற்சமயம் "மயன்" என்ற பெயரில் குமுதம் "பக்தி" யில் மாவட்டம், மாவட்டமாகக் கோயில்களுக்குப் போய் வந்து எழுதிக் கொண்டு இருக்கிறார். அப்படிப்பட்ட கோயிலைத் தரிசிக்க வேண்டும் என்ற பேராவல் வெகு நாட்களாக எனக்கு இருந்து வந்தது. தற்சமயம் நிறைவேறியது. கும்பகோணத்தில் இருந்து திரு நள்ளாறு போகும் வழியில் சற்று மேற்கே திரும்பி இந்த ஊருக்குப் போனோம்.

உள்ளே போனால் இரண்டு கோயில்கள் இருக்கின்றன. ஒன்று லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாதஸ்வாமி கோயில், (மெயின் கோயில்), மற்றது மின்னும் மேகலை என்னும் அம்பாளுடன் கூடிய ஸகல புவனேஸ்வரரின் இளங்கோயில் ஆகும். சோழர் காலக் கட்டடக் கலையின் சிறப்புக்கள் கொண்ட இந்தக் கோயிலின் பேரழகு வாய்ந்த சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். செம்பியன் மாதேவி, மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியவர்களால் திருப்பணி நடத்தப் பட்டதற்குச் சான்றுகள் இருக்கின்றன. தேவாரப் பாடல் பெற்ற தலங்களிலும் ஒன்று. கணவன், மனைவி ஒற்றுமைக்குச் சிறந்த சான்று இந்தக் கோயில். ஒருவர் சினம் கொண்டால் மற்றவர் மெளனத்தால் அச்சினத்தை வெல்வதே சிறந்தது என்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்தது. இன்றைக்கும் மனவேற்றுமைப் பட்ட கணவன், மனைவியர் இங்கே வந்து வேண்டிக் கொண்டு சேர்ந்து வாழ்வது பற்றிச் சொல்கிறார்கள்.

காசியபரின் மனைவிகளான கர்த்துரு, வினதை இருவரும் குழந்தை இல்லாமல் இறைவனை வேண்ட இறைவன் இருவருக்கும் ஒரு முட்டையைக் கொடுக்கிறார். இருவரும் அதைப் பாதுகாத்துப் பூஜை செய்து வர வினதையின் முட்டையில் இருந்து ஒரு பக்ஷி வெளி வருகிறது. "இதென்ன" என்று வியந்த வினதையிடம் இறைவன், "இந்தப் புத்திரன் மஹாவிஷ்ணுவிற்கு வாஹனமாய் உலகு எங்கும் பிரகாசிப்பான், கருடன் என்ற பெயரில்." என ஆசீர்வதிக்கிறார். கர்த்துரு ஏக்கத்தில் தன் முட்டையை அவசரப்பட்டு உடைக்க தலை முதல் இடுப்பு வரை மட்டும் வளர்ந்த ஒரு அங்கஹீனக் குழந்தை பிறக்கிறது.

வருந்திய கர்த்துரு இறைவனை வேண்ட அவர் அக்குழந்தை "சூரியனுக்குச் சாரதியாக உலகு எங்கும் பிரகாசிப்பான்." என்று வரம் கொடுக்கிறார். அங்கஹீனன் ஆன அவனால் இறைவனைத் தரிசனம் செய்ய முடியாது என்று சூரியன் அவனைக் கேலி செய்கிறான். தொல்லைகள் கொடுக்கிறான். மனம் வருந்திய அருணன் இறைவனை வேண்ட இறைவன் சூரியனை "உன் மேனி கிருஷ்ண வர்ணமாகப் போகக் கடவது" என சபிக்கிறார். உலகம் இருண்டு போனதைப் பார்த்த ஜெகன்மாதா அவன் சாபம் விமோசனம் அடைய இறைவனை வேண்ட அவர் கூறுகிறார்."அருணனின் தவ பலத்தாலும், சூரியன் ஏழு மாத காலம் பூஜை செய்தாலும் பழைய நிலை அடையலாம்" என்கிறார். தன் சாப விமோசனத்திற்காக இத்தலம் வந்து சூரியன் வழிபட, தன் கருமை நிறம் மாறாது போகவே வருந்தி, "ஹே மிகுரா" எனக் கதறத் தங்கள் ஏகாந்தத்தைக் கலைத்த சூரியனை அம்பாள் சபிக்க முற்படுகிறாள். இறைவன் தடுத்து "நீ சாபம் இட்டால் உலகம் மறுபடி இருண்டு போகும். உலகத்தின் நன்மைக்காக நீ பரம சாந்தையாகத் தவம் இருப்பாயாக." என்று கூறுகிறார். சூரியனுக்குச் சாப விமோசனம் கிடைக்கிறது. சாந்த தேவதையான அம்பிகையின் திருவாயில் இருந்து "வசினீ" என்ற வாக்தேவதைகள் தோன்றி அவர்கள் மூலம் மலர்ந்ததுவே ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் என்று கூறுகிறார்கள்.

அம்பாளே அருளியதால் அவர்தம் பெயர் கொண்டு "லலிதா சஹஸ்ரநாமம்" என்னும் பெயர் கொண்டு விளங்கியதாகச் சொல்கிறார்கள். அம்பாளிடம் இருந்து நேரே ஸ்ரீஹயகிரீவ முனியும் அவரிடம் இருந்து அகத்தியரும் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் உபதேசம் பெற்றதும் இவ்வூரில் தான். அம்பிகையை வழிபடச் சிறந்த இடம் என அகத்தியர் தன் மனைவி லோபாமுத்திரையுடன் வந்து வழிபடும் சமயம் அம்பிகை நவரத்தினங்களாகக் காட்சி அளிக்கிறாள். அப்போது அந்தக் காணற்கரிய காட்சியை அகத்தியர் தன் "லலிதா நவரத்தின மாலை"யின் மூலம் பதிவு செய்திருக்கிறார். சூரியன், அருணன், கர்த்துரு, வினதை, அகத்தியர் தவிர யமனும் ஸ்ரீலலிதையையும், மேகநாத ஸ்வாமியையும், 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கும் சங்குகள் 1008-ஐக் கொண்டு சங்காபிஷேஹம் செய்து வழிபட்டிருக்கிறான். இந்தக் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான ஸ்ரீலலிதையின் பெருமையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. இதற்குச் சாட்சியாக 1999-ல் பங்களூரில் உள்ள வைணவக் குடும்பத்தைச் சேர்ந்த மைதிலி என்ற பெண்மணியிடம் அம்பாள் கனவில் வந்து தனக்குக் கொலுசு செய்து அணிவிக்குமாறு கட்டளையிடக் கோவிலைத் தேடிக் கண்டுபிடித்து அப்பெண்மணி கொலுசு செய்து அணிவித்திருக்கிறார்.

கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுங்கனவான தவம்
பெற்றும் தெரியார் நிலையென்னில் அவர் பெருகும் பிழை என் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப் பகைவர்க்கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய் மாதா ஜயஓம் லலிதாம்பிகையே, மாதா ஜயஓம் லலிதாம்பிகையே, மாதா ஜயஓம் லலிதாம்பிகையே!

14 comments:

 1. சுதந்திர தின நல்வாழ்த்துகள் கீதா.
  நல்ல கோவில். நல்ல தாயார்.

  தம்பதிகள் ஒற்றுமைக்கு துணை புரியும் கோவிலா?

  புது தகவல்.
  தெரிந்தவர்களுக்கு சொல்லலாம்.

  ReplyDelete
 2. சுதந்திர தின வாழ்த்துக்கள் வள்ளி, இத்தனை நேரம் என்னோட ப்ளாக் எனக்கே திறக்க வரலை.
  அம்பிகையின் அருள் என்றும் துணை நிற்கும். அதுவும் அந்த ஸ்ரீலலிதை உண்மையிலேயே மிகவும் சக்தி வாய்ந்தவள்.

  ReplyDelete
 3. நன்றி!!நன்றி!!ஆன்மீக பணி தொடரட்டும்!!
  நான் திரு மயனை திருக்கடவூரில் சந்தித்து நீண்ட நேரம் உரையாற்றினேன்!அவரிடம் இருந்து தமிழக கோவில் வரலாறு,அரியப் புகைப்படங்களை பெற அழைத்தார்!!நீங்களே அப்பணியை செய்ய அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்!!

  ReplyDelete
 4. அவருடைய விலாசம் மெயிலில் அனுப்புகிறேன். நான் கேட்பதை விடத் தாங்கள் நேரில் கேட்டுப் பெறுவதை அவர் மிகவும் விரும்புவார். மிகச் சிறந்தச் சித்திரக்காரரும் கூட. தொலைபேசி நம்பரும் தருகிறேன்.

  ReplyDelete
 5. வள்ளி, உங்களோட பதிவு (நாச்சியார் பதிவு) இங்கிருந்தும் திறக்கவில்லை, தமிழ் மணத்தில் இருந்தும் திறக்க முடியவில்லை. நாளை முயற்சி செய்து பார்க்கிறேன். உங்கள் பதிவுக்கு வந்து வாழ்த்துச் சொல்ல முடியவில்லை.

  ReplyDelete
 6. ஆன்மீகபணி செய்யும் நிலை வந்துவிட்டால் இன்பநிலை தானே வந்து எய்யும்.அற்புதமான பதிவு, தெளிவான விளக்கம். படித்தவுடனேயே சென்று பார்க்க தூண்டும் பதிவு. தொடரட்டும் பணி.

  ReplyDelete
 7. ரொம்ப நன்றி திரு தி.ரா.ச. சார், கட்டாயம் அம்பிகையைத் தரிசனம் செய்து வாருங்கள். பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத வடிவுடன் விளங்குகிறாள்.

  ReplyDelete
 8. நல்ல பதிவுங்க. வழக்கம் போல இந்த கோவிலுக்கும் நான் போனது இல்லை. சரி விடுங்க. இந்த தடவை எல்லாத்தையும் மொத்தமாக போயி பாத்துட்டா போகுது.
  :)
  சுகந்திர தின நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. மிக அருமை! லலிதா சஹஸ்ரனாமமுக்கு இப்படி ஒரு பிண்ணணியா? உங்களுடைய பதிவு ரொம்ப நல்லா இருக்கு! தொடரட்டும் தங்கள் பணி!

  ReplyDelete
 10. அருமையான பதிவு. என் தம்பி ஷ்ரி லலிதையின் அதி தீவிர பக்தன். ஷ்ரி சக்ர பூஜை செய்ய உபதேசம் வாங்கி உள்ளான். நானும் தற்பொழுது அவனிடம் லலிதா சஹ்ஸ்ர நாமம் படித்து வருகிறேன். இந்த ஊரை பற்றி அவனிடம் சொல்கிறேன்.

  ReplyDelete
 11. சிவா,
  நாகைப்பட்டினம் கோயிலுக்குப் போயிருக்கீங்க தானே? :D
  தாமதமான சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. இந்தியத் தேவதையே,
  வாங்க புதுசா இருக்கீங்க, முதல் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 13. இந்தியத் தேவதையே,
  வாங்க புதுசா இருக்கீங்க, முதல் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 14. அம்பி,
  உங்க தம்பியையும் வலைப்பதிவு ஆரம்பிக்கச் சொல்லுங்க, ஒரு கை பார்க்கலாம்.
  பாராட்டுக்கு நன்றி.

  ReplyDelete