எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, August 16, 2006

108. ஐயனை ஆரத் தழுவிய அன்னை

பொதுவாகவே நான் கோவில்களுக்கோ அல்லது சரித்திரப் பிரசித்தி பெற்ற இடங்களுக்கோ சென்றால் அதன் பூரா வரலாற்றையும் தெரிந்து கொள்ள கூடியவரை முயற்சி செய்வேன். இப்போது வலை பதிய ஆரம்பித்ததும் அது ஜாஸ்தி ஆகி விட்டது. இப்போ நாம் போகப் போற கோயில் கும்பகோணத்தில் இருந்து கிட்டேதான் இருக்கிறது. அன்று காலை நவக்கிரஹக் கோயில், மற்றக் கோயில் என்று ஏறி இறங்கியதில் மிகக் களைத்துப் போயிருந்த நான் சாயங்காலம் எங்கேயும் போக வேண்டாம் என்று தான் முடிவு செய்து இருந்தேன், ஆனால் எங்கள் ஆட்டோ டிரைவர் விடவில்லை. இவ்வளவு தூரம் வந்து விட்டுப் பட்டீஸ்வரம் துர்கையைப் பார்க்காமல் போவதா என்று சற்று நேரம் கழித்து வருகிறேன் என்று 5-30-க்கு வந்து எங்களை அழைத்துச் சென்று விட்டார். போனதும் தான் தெரிந்தது எவ்வளவு பெரிய விஷயத்தை நழுவ விட இருந்தேன் என்று.

கும்பகோணத்தின் புறநகர்ப் பகுதியாக இன்று மாறி இருக்கும் பட்டீஸ்வரம் கும்பகோணம் நகரில் இருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் உள்ளது. திருவலஞ்சுழியும், ஸ்வாமிமலையும் போய் விட்டுத் திரும்பும் வழியில் சற்றுத் தென்மேற்கே வந்து பட்டீஸ்வரம் போனோம். காமதேனுவும் அதன் மகள்களான நந்தினியும், பட்டியும் பூஜித்த தலம். அதுவும் பட்டி தன் பாலைப் பொழிந்து பூஜித்த காரணத்தால் அவள் பெயரிலேயே "பட்டீஸ்வரம்" என்ற பெயர் கொண்டது. வடமொழியில் தேனுபுரம் என்ற பெயர் கொண்ட இந்தக் கோயிலின் சுயம்பு லிங்கம் ஆன மூலவர் "தேனுபுரீஸ்வரர்" என்று அழைக்கப் படுகிறார். மார்க்கண்டேயர் பூஜித்த தலமும் கூட. அன்னை ஞானாம்பிகை. வசிஷ்டர் விஸ்வாமித்திரருக்குப் "பிரம்ம ரிஷி"ப் பட்டம் கொடுத்த தலம். மேலும் "திருச் சத்தி முற்றத்தில்" இருந்து வந்த ஞான சம்மந்தப் பெருமானுக்கு இந்தக் கோயில் தேனுபுரீஸ்வரர் ஞானசம்மந்தரை வெயிலின் கொடுமை தாக்காமல் இருக்க முத்துப் பந்தல் அனுப்பி வைத்து இருக்கிறார். ஞானசம்மந்தர் முத்துப் பந்தலில் வரும் அழகைத் தன் கண்ணால் காண வேண்டி நந்தியை விலகி இருக்கும்படித் தேனுபுரீஸ்வரர் பணித்தாராம். திருக்கோயிலின் ஐந்து நந்திகளுமே "சற்றே விலகி இருக்கும் பிள்ளை" களாக இருக்கின்றன. ராமேஸ்வரத்தில் ராமநாதரைப் பிரதிஷ்டை செய்த ராமர் இங்கும் வந்து வில்முனையால் கோடிதீர்த்தத்தை உண்டாக்கி வழிபட்டதாக வரலாறு.

உயர்ந்த பாணமான மூலவரையும், அம்மனையும் நிதானமாகத் தரிசனம் செய்ய முடிகிறது. காரணம் கூட்டம் எல்லாம் துர்க்கை சன்னதியில்தான். திருப்பணி செய்த கோவிந்த தீட்சிதர் சிலையையும் காட்டுகிறார்கள். ஸ்வாமி சன்னதிப் பிரஹாரத்தில் உள்ள பைரவர் சன்னதியின் பைரவர் நிஜமாகவே ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கிறார். கண்ணையும் கருத்தையும் கவரும் அழகு வாய்ந்த சிற்பம். மற்றக் கோவில்களில் சிறு சிற்பமாகக் காணப்படும் காவல் தெய்வமான பைரவர் இங்கே நிஜமான ஒரு ஆள் போல இருக்கிறார். அந்தச் சன்னிதியின் குருக்கள் எங்களைக் கூப்பிட்டுத் தரிசனம் செய்து வைத்தார்.

வடக்குக் கோபுர வாயிலில் துர்க்கை அம்மன் அருள் பாலிக்கிறாள். இவளும் அண்ணாந்து பார்க்கும் உயரம் கொண்டிருக்கிறாள். பக்தர்கள் கூட்டம் எல்லாம் இங்குதான். தற்சமயம் கோவிலின் நுழைவாயிலே வடக்குக் கோபுர வாயிலாக மாறி விட்டிருக்கிறது.எட்டுக்கைகளுடன் அருள் பாலிக்கும் அன்னை வேண்டியவர்களுக்கு வேண்டியதை அள்ளித் தருகிறாள். அதனால்தான் கூட்டம் தாங்கவில்லை என்கிறார்கள்.

இங்கிருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே "சத்தி முற்றம்" உள்ளது. உண்மையில் திருஞானசம்மந்தர் முதலில் இங்கே வந்துவிட்டுத்தான் தேனுபுரீஸ்வரர் அனுப்பிய முத்துப்பந்தலில் "பட்டீஸ்வரம்" சென்றிருக்கிறார். முத்துப்பந்தல் விழா ஆனி மாதம் நடைபெற்றிருக்கிறது. திருநாவுக்கரசர் இங்கே வந்துவிட்டு தழுவக் கொழுந்தீஸ்வரரை வணங்கிச் சென்ற பின் தான் திருநல்லூர் சென்று திருவடி தீட்சை பெற்றிருக்கிறார்.மனைவியைப் பிரிந்து பாண்டிய நாடு சென்ற புலவர் ஒருவர் நாரையின் மூலம் தூது விட்ட
"நாராய்! நாராய்!, செங்கால் நாராய்!" என்ற பாடலை எழுதிய சத்திமுற்றப்புலவர் இந்த ஊர்தான்.

வேத ஆகமங்களின் பொருள் தெரிய ஆசை கொண்ட அன்னை அண்ணலை வேண்ட அண்ணலும் கூறுகிறார். தன் பக்தியின் மூலம் உலகத்தோர்க்கு "பக்தியே முக்திக்கு வித்து" என உணர்த்த எண்ணிய அன்னை சக்தி வனம் வந்து ஒற்றைக்காலில் கடுந்தவம் செய்கிறாள். அன்னையின் தவத்தையும், பக்தியையும் உலகத்தோர்க்கு உணர்த்த எண்ணிய அண்ணல் அன்னையைச் சோதிக்க எண்ணி அனல் பிழம்பாக வருகிறார். ஞானாம்பிகையான அன்னை தன் ஞானத்தால் வந்தது தன் பதியே என உணர்ந்து அந்தப் பரஞ்சோதியை, எல்லை இல்லாப் பரம்பொருளைத் தன் கைகளால் கட்டிக் குழைய அண்ணல் அன்னைக்கு அருள் பாலிக்கிறார். அன்னை கட்டித் தழுவிய நிலையிலேயே ஒரு தனி சன்னதி மூலவருக்கு இடப்பக்கம் உள்ளது. அதன் பின்னாலேயே அன்னை ஒற்றைக் காலில் தவம் இருந்த கோலத்தையும் கண்டு களிக்கலாம். மூலவர் கருவறையில் "சிவக்கொழுந்தீஸ்வரர்" ஆக அருள் பாலிக்கிறார். திருமேனியில், தீச்சுடர்கள் தெரிகின்றன. தெரியாதவர்கள் குருக்களிடம் கேட்டால் தீப ஆராதனை செய்து காட்டுகிறார். ஆனால் நன்றாகப் பார்க்கும் வண்ணம் மூன்று சுடர்கள் புடைத்துத் தெரிகின்றன. அன்னை பெரியநாயகியாகத் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள்.

திருமணம் ஆகாதவர்களும், விதிவசத்தால் பிரிந்து போன தம்பதியரும் தழுவக்குழைந்த அன்னைக்கும் , ஈசனுக்கும் சிறப்புப் பூஜை செய்து வழிபடுகின்றனர். அன்னை தழுவி முத்தமிட்டதால் "சக்தி முத்தம்" என்பது மருவி "சத்தி முற்றம்" என்று ஆகி இருக்கிறது. எங்கும் காணக் கிடைக்காத இந்தக் காட்சியை நான் பார்க்க வில்லை என்றால் நிச்சயம் வருந்தி இருப்பேன். என்னை விடாப்பிடியாக இழுத்துக் கொண்டு போன என் கணவருக்கும் இந்தக் கோயிலைப் பற்றிச் சொல்லி எங்கள் ஆவலைத் தூண்டி விட்ட ஆட்டோ டிரைவர் ரவிக்கும் தான் என் நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.

இங்கிருந்து வரும் வழியில் தான் தாராபுரம் இருக்கிறது, என்றாலும் நேரம் ஆகிவிட்டபடியால் போக முடியவில்லை. பட்டீஸ்வரத்தில் இருந்து சற்றுத் தூரத்தில் தான் பழையாறையும் இருக்கிறது. கோவில் சீக்கிரம் மூடி விடுவார்கள் என்பதால் இங்கே எல்லாம் போக முடியவில்லை. வரும் வழியில் "சோழன் மாளிகை" என்றபெயரில் ஒரு ஊர் வருகிறது. அங்கே சோழன் மாளிகை இருந்த இடத்தையும், சில வருடங்களுக்கு முன் வரை சுற்றுச்சுவர் மட்டுமாவது இருந்த இடம் தற்சமயம் மண்ணோடு மண்ணாகி விட்டதையும் டிரைவர் காட்டினார்.

13 comments:

  1. தமிழ் மணமும் ஆன்மீக மணமும் பின்னிப் பிணைந்து என் நெஞ்சகலா நிற்கின்றதே. இப்போது தெரிகிறதா நான் ஏன் பட்டீஸ்வரத்தைப்பற்றிச் சொன்னேன் என்று. நமது கிரிகெட் வீரர்கள்போல் நீங்களும் நூறு தாண்டியவுடன் நன்றாகவே பரிமளிக்கிறீர்கள்.இது ஆலயதரிசனம் மட்டும் அல்ல ஒரு
    ஆத்ம தரிசனமும்கூட.

    திருமணம் ஆகாதவர்களும், தழுவக்குழைந்த அன்னைக்கும் , ஈசனுக்கும் சிறப்புப் பூஜை செய்து வழிபடுகின்றனர்.
    அம்பி நோட் செய்து வைத்துக்கொள்ளூங்கள்.

    ஆமாம் அங்கே யாரும் உங்களுக்கு சொல்லவேயில்லையா அம்பியை ஒரு 45 நாள் அந்த கோவிலிலேயே தங்கியிருந்து விரதம் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று

    எங்கும் காணக் கிடைக்காத இந்தக் காட்சியை நான் பார்க்க வில்லை என்றால் நிச்சயம் வருந்தி இருப்பேன். என்னை விடாப்பிடியாக இழுத்துக் கொண்டு போன என் கணவருக்கும் இந்தக் கோயிலைப் பற்றிச் சொல்லி எங்கள் ஆவலைத் தூண்டி விட்ட ஆட்டோ டிரைவர் ரவிக்கும் தான் என் நன்றியைத் தெரிவிக்க வேண்டும்

    இப்போதவது தெரிகிறதா நானும் அம்பியும் ஏன் சாம்பு சாரை சப்போர்ட் பண்ணுகிறோம் என்று.நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்

    ReplyDelete
  2. இவ்வளவு விவரத்தையும் யாருங்க சொல்றாங்க உங்களுக்கு!

    நமக்கெல்லாம் கோயிலுக்கு போனோமா, மூணு சுத்து சுத்துனோமா, விழுந்து எந்திரிச்சோமா அவ்ளோதான் முடிஞ்சுது நம்மளோட தரிசனம்.

    உங்கள மாதிரி லென்ஸ் வச்சு பாக்க இன்னும் வயசு ஆகணும் :-))

    நம்ம வீட்டுப்பக்கம் வந்து பதில் சொல்லிட்டு போறது!

    ReplyDelete
  3. அப்பாடா, இப்போ நிம்மதி ஆச்சா உங்களுக்கும் உங்க சிஷ்யப் பிள்ளைக்கும்,? எப்படியோ இரண்டு பேரும் என் கணவரை சப்போர்ட் செய்ய நானே தான் ஒரு வழி கொடுக்கிறேன். இல்லையா? :D
    அம்பிக்குக் கல்யாணம் ஆகலைனு எவ்வளவு கவலை? அம்பி, தயாரா இருங்க உங்களுக்காக தி.ரா.ச. அவர்கள் இருக்கிறார்.(பெண் பார்க்க)

    ReplyDelete
  4. தம்பி,
    கோவில்களுக்குக் கூட்டம் இல்லாத நேரம் போனோம் ஆனால் எல்லாருமே சொல்வாங்க. நாங்க போறது அப்படித்தான். இதுக்கு வயசு ம்ஹூம் (மறுபடி மறுபடி நினைவு படுத்தறீங்க! )இலவச விளம்பர ஆலோசகர் வேலை கொடுக்க நினைச்சேன், இப்போ யோசிக்கணும்.

    ReplyDelete
  5. //மற்றக் கோயில் என்று ஏறி இறங்கியதில் மிகக் களைத்துப் போயிருந்த நான் //

    vayasaanale appadi thaan. :)

    As usual, good info and good narration.
    @TRC sir, 45 days naan kovilula viradham irunthaa inga en Pjt Manager kaali avathaaram eduthu ennai samkaaram panniduvaa! :)

    //உங்கள மாதிரி லென்ஸ் வச்சு பாக்க இன்னும் வயசு ஆகணும் //
    @thambi, he hee, oru vaasagam naalum summa thiruvasagamaa sonnenga. very good, very good, keep it up :)

    Geeth madam, ippavavathu saambu maama kitta sandai podaama irukeengalaa illaiyaa? aprom, durgai kanna kuthidum. :)

    ReplyDelete
  6. அம்பி, ஆப்பு அம்பி, இனிமேல் இந்தப் பேர் தான் உங்களுக்கு, என்னோட பதிவைப் பாருங்க. ஒரு பத்து நாள் கோவில் கோவிலா ஏறி இறங்கினா எல்லாருக்கும் களைப்பு வரும். இதுக்கும் வயசுக்கும் சம்மந்தமே இல்லை. ம்ஹூம் நான் இன்னும் சின்னப் பொண்ணு தான் அதான் சளைக்காமல் உங்களுக்குப் பதில் கொடுக்கிறேனே தெரியலை?

    ReplyDelete
  7. Hmmm sema narration...Appadiyae Bakthi Manam sottradhu..I have to tell about this Kovil to my Mom.Thanx MAAMI.

    ReplyDelete
  8. வேதா, நீங்க போன கோவில்களைப் பார்த்தால் நான் போனதை விட ஜாஸ்தி இருக்கும் போல இருக்கிறதே? அப்போ உங்க வயசு? ஹி,ஹி,ஹி, சும்மாத் தான் ஊதி விடறேன்.

    ReplyDelete
  9. கமல்,
    நற நற நற நற நற நற நற

    ReplyDelete
  10. மிகத் தெளிவாக விரிவாக எழுதியிருக்கிறீர்கள் கீதாம்மா. மிக்க நன்றி.

    ReplyDelete
  11. 108வது பதிவிற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி, குமரன். கூடிய விரைவில் ஆன்மீகம் தனியாகப் பிரிக்கப் படும். அந்தப் பதிவிற்குத் தவறாமல் வாருங்கள்.

    ReplyDelete
  13. அடுத்த முறை கட்டாயம் இந்தக் கோவிலை நினைவில் வைத்துக்கொள்கிறேன். கூடவே தேனுபுரீஸ்வரரையும் இன்னொரு முறை தரிசனம் செய்யணும்.

    ReplyDelete