எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 19, 2006

113. புவனங்களை ஆளும் சர்வாங்க சுந்தரி

கும்பகோணத்திற்குக் கிழக்கே அரிசிலாற்றின் தென்கரையில் கூந்தலூர் என்ற கிராமம் உள்ளது. அங்கிருந்து அரிசிலாற்றுப் பாலத்தைக் கடந்து சற்று வடக்கே போனால் "கருவிலி" என்ற பெயர் கொண்ட ஊர் வரும். இதற்குக் கும்பகோணத்திலிருந்து வடமட்டம் என்ற ஊர் வந்து அங்கிருந்து "பரவாக்கரை" என்ற ஊர் ஒரு கி.மீட்டரில் உள்ளது. அந்த ஊரில் இருந்தும் முட்டையாற்றுப் பாலத்தைக் கடந்து சுமார் ஒரு மைல் வந்தும் வரலாம். இந்த இரண்டு ஆறுகளுக்கு நடுவில் அமைந்த ஊர் தான் "கருவிலி". நான் கல்யாணம் ஆகி முதல் முதல் வந்த ஊர். உண்மையில் பூர்வீகம் "பரவாக்கரை" தான் என்றாலும் என் மாமனாரின் பங்கு நிலங்கள் இந்த ஊரைச் சுற்றி அமைந்த காரணத்தாலும், அந்த நாளில், மழை பெய்யும்போது முட்டையாற்றில் வெள்ளம் வந்து உடைப்பு ஏற்பட்டு இங்கே வந்து சரிவரக் கவனிக்க முடியவில்லை என்பதாலும் இங்கேயும் ஒரு வீடு இருந்ததாலும் இங்கே வந்தனர் என்று சொல்வார்கள். ஆனால் இன்னும் நாங்கள் குலதெய்வம் என்று பரவாக்கரை மாரி அம்மனைத் தான் வழிபடுகிறோம். இப்போது சற்று கருவிலியைப் பற்றி.

முன்பு எல்லாம் நாங்கள் மூங்கில் பாலத்தில் தான் ஆற்றைக் கடக்க வேண்டும். அதுவும் மழை நாளிலும்,ஆற்றில் தண்ணீர் வந்து விட்டாலும் மாட்டு வண்டியை அவிழ்த்து மாட்டை விரட்டி விடுவார்கள். மாடு நீந்திப் போய்விடும். வண்டியை ஆட்கள் ஆற்றில் தள்ளிக் கொண்டு போய் கரையில் ஏற்றி விடுவார்கள். இப்போ கல்பாலம் வந்து விட்டது. கொஞ்சமும் சிரமம் இல்லாமல் கார் முதல் லாரி வரை போகலாம். போகும் வழி எல்லாம் மூங்கில் தோப்புக்களும், தென்னந்தோப்புக்களும் சூழ்ந்து நின்று வயல்களைப் பாதுகாக்கும். ஆற்றில் தண்ணீர் வந்ததும் ஊர்ப்பக்கம் போனால் வாய்க்காலில் நாற்று மாலைகள் மிதந்து வரும் காட்சியைப் பார்க்கலாம். இப்போது டீக்கடையில் இருந்து பாட்டுச் சத்தமும், அங்கங்கே டீ.விக்களின் சத்தமும் கேட்க ஆரம்பித்துள்ளது. இது முன்னேற்றத்திற்கான பாதை என்றாலும் ஊரின் ஜீவன் எங்கோ போய் விட்டதாக எனக்குத் தோன்றுகிறது.

எல்லாவற்றையும் கடந்து போனால் ஊருக்குள் போகும்போதே அக்ரஹாரம் வரும். சில வீடுகளே உள்ள அக்ரஹாரம். நாங்கள் இருந்த போதே 4 வீடுகளில் தான் எங்கள் சொந்தக்காரர் இருந்தனர். தற்போது கோவில் குருக்களைத் தவிர யாரும் இல்லை. அக்ரஹாரத்தில் நுழையும் போதே நமக்கு வலப்பக்கமாக ஆஞ்சனேயர் கோயில். ஆஞ்சனேயரைத் தரிசித்துவிட்டு உள்ளே போனால் அக்ரஹாரத்தின் முடிவில் சிவ ஆலயம்.

சோழ நாட்டுப் பாணியில் கருவறையில் விமானம் பெரிதாக உள்ள மாதிரிக் கட்டப்பட்ட கோயில். மிகப் பழைமை வாய்ந்த கோவில். நான் திருமணம் ஆன புதிதில் கோவிலுக்குப் போனால் குருக்கள் மாமாவைத் தவிர யாருமே இருக்க மாட்டார்கள். அவர் கோவில் திறக்கும் சமயம் கேட்டுக் கொண்டு போய் விட்டு வருவோம். ஸ்வாமிக்கு விளக்கேற்றி சாதம் நைவேத்தியம் செய்தாலே பெரிது. சுற்றுச் சுவர் எல்லாம் இடிந்து ஸ்வாமி சன்னதிக்கு வடக்கே அம்மன் சன்னதிக்குப் போகும் பாதை எல்லாம் புதர் மண்டிக் கிடக்கும். திரு பரணீதரன் அவர்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி தொடங்கப்பட்டு பாதியில் நின்று விட்டதாக ஆனந்தவிகடனில் எழுதி இருக்கிறார். அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு 97 ஏப்ரலில் கும்பாபிஷேஹம் நடைபெற்றது. காரணகர்த்தாக்கள் கல்கி திரு வைத்தியநாதனும், அவர் தம்பி திரு கிருஷ்ணமூர்த்தியும் ஆவார்கள். இருவருக்கும் பூர்வீகம் இந்த ஊர்தான். ஆனால் அவர்கள் பல வருடங்களுக்கு முன்னே சென்னை சென்று பின் திரு கிருஷ்ணமூர்த்தி டெல்லியும் சென்று "மாருதி உத்யோக்" பொறுப்பையும் ஏற்றதும், பின் Steel Authority பொறுப்பும் சேர்ந்து கொள்ள ஊரைப் பற்றி மறந்தே போனார்.

திடீரென இந்த ஊர் ஆஞ்சனேயர் கனவில் வந்து கோவில் திருப்பணியைப் பற்றி நினைவு படுத்தினதாய்ச் சொல்கிறார்கள். சிலர் ஊர்க்காரர் ஒருத்தருக்கு ஆஞ்சனேயர் வந்ததாயும் சொல்கிறார்கள். எப்படியோ கோவிலுக்கு வந்தது புது வாழ்வு. பரம்பரை தர்மகர்த்தாக்களான இவர்கள் குடும்பம் பொறுப்பை ஏற்றதும் ஐயன் புதுப் பொலிவினையும், அன்னை அலங்காரத்தையும் பெற்றனர்.

தேவாரப்பாடல் பெற்ற தலம் இது.அப்பர் தன் பதிகங்களிலே இந்தத் தலத்தைக் "கருவிலிக் கொட்டிட்டை" என்றே அழைக்கிறார். திரிபுரம் எரித்த எம்பெருமான் ஆடிய பல்வேறு வகை நடனங்களிலே "கொட்டிட்டை" ஒருவகை என்பதாகவும், அதனையே ஈசன் இங்கு தாண்டவமாக ஆடினார் என்பதும் செவிவழிச் செய்தி. கோயிலின் பெயர் "கொட்டிட்டை" என்பது. அப்பர் தன் பாடலிலே,
"உய்யுமாறிது கேண்மினுலகத்தீர்
பைகொள் பரம்பரையான் படையார் மழுக்
கையினானுரை கின்ற கருவிலிக்
கொய்கொள் பூம்பொழிற் கொட்ட்டிட்டை சேர்மினே!" என்றும்,

"நில்லா வாழ்வு நிலைபெறுமென்றெண்ணிப்
பொல்லாவாறு செயப் புரியாது நீர்
கல்லாரும் மதிள் சூழ்தண் கருவிலிக்
கொலேறூர்பவன் கொட்டிட்டை சேர்மினே! " என்றும் இத்தலத்தைச் சிறப்பித்துப் பாடி உள்ளார்.

சற்குணன் என்ற சோழ அரசன் மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்து இத்தலத்து ஈசனைத் துதித்து மோட்சம் பெற்றான். "கருவிலி" என்ற பெயரே "இனி ஒரு தாயின் கருவிலே உதிக்க வேண்டாம்," என்னும் மோட்சத்தைக் கொடுக்கும்படியான நிலையைக் குறிக்கும். இந்தக் கோவில் சற்குணேஸ்வரரும், சர்வாங்க சுந்தரியையும் தரிசித்தால் அந்தப் பேறு கிடைக்கும் என்பதையே உணர்த்துகிறது. மிகப் பெரிய லிங்கம். கோவில் மிகப் பழைய கோவில். ஆயிரம் வருடங்களுக்கு மேல் இருக்கும். மிகப் பெரிய அம்பாள். பார்த்தால் நிச்சயம் திகைப்பாக இருக்கும். அப்படி அம்மன் உங்கள் எதிரில் நின்று பேசுவாள்,. நாம் கூப்பிட்டால் "என்ன, இதோ வந்துட்டேன்," என்பது போன்ற சிரித்த முகத்துடன் நிற்பதைப் பார்த்தால் இவள் சர்வாங்க சுந்தரி என்பதற்கு வேறு அடையாளமே வேண்டாம் என்று தோன்றும். அண்ணலின் கவனத்தைத் தன் பக்கம் இழுப்பதற்கு அன்னை உலகத்து அழகை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தாளாம் இங்கே, பக்கத்தில் ஓர் ஊரில் சில காலம் இருந்த அம்பிகை பின் இங்கு வந்து சர்வாங்க சுந்தரியாக இறைவனின் முன் நின்றாளாம். இவளைத் தரிசித்த இளம்பெண்களின் கல்யாணம் உடனே ஆகிவிடுகிறது என்றும், குழந்தை இல்லாதவர்க்குக் குழந்தை பிறக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

கோயிலின் எதிரே யமதீர்த்தம். நன்றாகச் செப்பனிடப்பட்டு வட இந்தியப் பாணியில் "கங்கையைச் சடையில் கொண்ட ஈசனின்" சிற்பம் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது.

கோவிலில் இன்னும் ராஜகோபுரம் கிடையாது. உள்ளே நுழைந்ததுமே ராஜகோபுர அமைப்புக்கு முன்னேயே நந்தி எம்பெருமான் வீற்றிருக்கிறார். தற்சமயம் ராஜகோபுரம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. "கொடு கொட்டி"த் தாளம் போட்டு ஆடும் நடராஜர் சிலை பல வருடங்களுக்கு முன்னாலேயே களவாடப்பட்டு இப்போது வெளிநாட்டில் இருக்கிறது. 6 மாதங்களுக்கு முன்னால் தான் புதிய நடராஜர் சிலை ஸ்வாமி சன்னதியிலேயே பிரதிஷ்டை செய்து இருக்கிறார்கள். முன்னால் இருந்த சிலை அம்மன் சன்னதியில் இருந்தது என்று என் கணவர் சொல்லித் தெரிந்து கொண்டேன். ஸ்வாமி சன்னதி தூய்மையுடன் இருக்கிறது. ஆடிக் களைப்படைந்த ஈசன் "சிவனே" என்று உட்கார்ந்து கொண்டு விட்டதாலோ என்னவோ தெரியவில்லை. மனதிலும் இனம் புரியாத அமைதி. சான்னித்தியம் பரிபூர்ணம். நன்றாய் உணர முடியும்.

வடக்கே தனியாய் அம்மன் சன்னதி. அம்மனைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். குறைந்தது 51/2 அடி உயரத்தில் இருக்கும் அம்மன் உலகத்து அழகை எல்லாம் உள்ளடக்கி நிற்கிறாள்.

"உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்குமதோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே!" என அம்பாள் எல்லாம் சிவப்பாக மலர்மாலை கூடச் சிவப்புச் செம்பருத்தி மாலையுடன், சிவப்புப் புடவை, சிவப்பு மூக்குத்தியுடன் காட்சி அளித்தாள்.

கோவிலில் நவக்ரஹத்திற்குத் தனிச் சன்னதி இல்லை. யாருக்கும் காரணம் தெரியவில்லை. மிகப் பழைய இந்தக் கோயில் சோழ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்ததை இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.முதலாம் ராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டுக்கள் நிறைய இருக்கின்றன. யாராவது ஆராய்ச்சி செய்தால் கண்டு பிடிக்கலாம். ஆனால் உண்மையில் இந்தக் கோவிலைக் கட்டியவர் யார் என ஆராய்ச்சி நடக்கவில்லை. தருமபுர ஆதீனத்தின் நூல்களில் இங்கே இந்திரன் உள்ளிட்ட ருத்ர கணங்கள் வழிபட்டு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. கோயிலின் பல ஏக்கர் விஸ்தீரண நிலங்களில் தற்சமயம் மிகுந்த முயற்சிக்குப் பின் பாமாயில் சாகுபடி நடைபெற்று வருகிறது. காஞ்சி பரமாச்சார்யாள் இந்த ஊருக்கு வருகை தந்த சமயம் இங்கே அம்மன் சன்னதியில் கேட்பாரற்றுக் கிடந்த ஐம்பொன் மேருவைக் கண்டுபிடித்துக் காஞ்சியில் காமாட்சி அம்மன் சன்னதியில் பத்திரப்படுத்தி உள்ளதாகச் சொல்கிறார்கள். பிரஹாரங்களில் உள்ள சிற்பங்களைக் கண்டால் அந்தக் காலத்தில் இருந்த உன்னதமான நிலைக்குச் சான்று. சில சிற்பங்கள் கை உடைந்தும் காட்சி அளிக்கின்றன. எல்லாம் செப்பனிடுகிறார்கள்.

திரு வைத்தியநாதன், திரு கிருஷ்ணமூர்த்தி இருவரின் பாட்டியும், என் மாமனாரின் பாட்டியும் உடன் பிறந்த சகோதரிகள். அக்காவைப் பரவக்கரையிலும், ஒரு மைல் தள்ளித் தங்கையைக் கருவிலியிலும் கொடுத்தாராம் அவர்கள் தந்தை. அக்கா, தங்கையின் பூர்வீகம் நாச்சியார் கோவில். தற்சமயம் கோவிலில் நித்தியப்படி பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது. இந்தக் கோவிலைப் பற்றிக் கல்கி பத்திரிகையிலும், மங்கையர் மலர் பத்திரிகையிலும் ஜெயா டி.வியிலும் அடிக்கடி வரும்.

17 comments:

 1. fully packed with minute as well as good info! i will try to visit all these temples in my older days.
  (ithula ulkuthu ethuvum illai!) :)

  ReplyDelete
 2. இது ரொம்பப் பெரிசாக வந்து விட்டது. படிக்கச் சிரமமாக இருந்தால் மன்னிக்கவும். முக்கியமா ஆப்பு அம்பி, நாரதி வேதா போன்ற வயசானவங்க படிக்க முடியாமல் திணறுவாங்க, அதான் முன்னாலேயே சொல்லிட்டேன்.

  ReplyDelete
 3. grrrrrrrrrrrrr, peter peter peter உள்குத்து இல்லையா? இது எல்லாம் பார்க்க வயசு ஒண்ணும் தேவை இல்லை. அது கூடப் புரியலை, அசடு வழியுது, பாருங்க overflow ஆகப் போகுது.

  ReplyDelete
 4. நல்ல தகவல் தந்து இருக்கீங்க. அந்த ஊர் நமக்கு கொஞ்சம் தூரம் அதனால நேரம் கிடைக்கிறப்போ அங்கே போக முயற்சி செய்யறே. இன்னிக்கு போட்ட பதிவுகளிலே எனதுதான் பெரிசுன்னு நினைச்சேன். நீங்க என்னடான்னா பக்கம் பக்கமா எழுதி தள்ளி இருக்கீங்க என்னுடைய (சின்ன)பதிவு

  ReplyDelete
 5. ஏனுங்க நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாமோ...

  ReplyDelete
 6. புவனங்களை ஆளும் சர்வாங்க சுந்தரி -கீதா சாம்பசிவம்.
  தலைப்பு-பாத்தாலே ஏதோ தனக்கு தானே பட்டம் குடுத்துகிட்ட
  மாதிரியில்ல இருக்கு, நிரந்தர தலவலி கீதாக்கா.
  சும்மா .. உகு எல்லாம் கிடையாது.

  ReplyDelete
 7. நம்ம கோவில்களில் புதைந்து கிடக்கும் கல்வெட்டுகளின் பெருமை நமது மக்களுக்கு தெரிவது இல்லை.எல்லா கல்வெட்களையும் படிஎடுத்து பிரசுரிக்க நமது தொல்பொருள் துறையினரிடம் ஆள் பலமும் இல்லை பண பலமும் இல்லை.

  இதே போல் நிறைய கோவில்களை வெளி கொணர்வதற்கு எனது வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. கருவிலியின் விளக்கம் மிக அருமை! ஆமா இது கொஞ்சம் பெரிய பதிவுதான்!

  ReplyDelete
 9. geetha.. neenga kovil paththi ezhuthum poathivukalukku thaniya link yethum sidela koduththa romba nalla irukkum.. maththapadi packed with 100% bakthi...

  ReplyDelete
 10. விவசாயி, உங்க பதிவை வந்து படிச்சுட்டுப் பின்னூட்டம் இடறேன். சின்னப் பதிவு தானே, பார்க்கலாம்,(இதிலேயும் போட்டியா?) :D

  ReplyDelete
 11. இதுவே நிறைய விஷயங்களைக் குறைக்கும்படி ஆகி விட்டது சிவா, மேலும் குறிப்புக்கள் எழுதி வைத்துக் கொள்ளாததாலும் நினைவு படுத்தி எழுதும்போது நீளம் ஆகி விடுகிறதைத் தவிர்க்க முடியவில்லை, இரண்டு பதிவாப் போட்டிருக்கலாமோ?

  ReplyDelete
 12. ஹி,ஹி,ஹி,ஹி, பெருசு, கரெக்டா கண்ணிலே விளக்கெண்ணை ஊத்திக்கிட்டு வந்து இருக்கீங்க. தமிழ் மணத்திலே நம்ம புகழ் பரவி இருக்கா, அதான் விளம்பரமா இருக்கட்டும்னு விட்டிருக்காங்க! :D

  ReplyDelete
 13. முதல் வரவுக்கு நன்றி திரு சாமி, உங்கள் பாராட்டுக்கும் நன்றி. உண்மையில் நாம் செய்ய வேண்டியதும், செய்யாமல் விட்டிருப்பதும் நிறையவே இருக்கின்றன.

  ReplyDelete
 14. இந்தியத் தேவதைக்கு,
  ரொம்ப நன்றி. பெரிய பதிவா இருந்தாலும் படிச்சுக் கருத்து சொன்னதுக்கு.

  ReplyDelete
 15. கார்த்திக்,
  ரொம்ப நாளா என் மனசிலே இருந்தது. நீங்க சொல்றீங்க, பார்க்கலாம் சரியா வருதானு!

  ReplyDelete
 16. விரிவான பதிவு. விவரங்களை அள்ளித்தரும் பதிவு.இந்த அளவுக்கு ஆலயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வெளியிடும் உங்களுக்கு "ஆலயமணி" என்ற பட்டத்தைத் தருகிறேன்.

  ReplyDelete
 17. ரொம்ப நன்றி, தி.ரா.ச. அவர்களே, ஆனாலும் பட்டமெல்லாம் ரொம்ப ஓவரா இல்லை? :D (ஹி,ஹி,ஹி, பட்டமெல்லாம் நல்லாவே இருக்கு, முதலில் அம்பிகிட்டே போய்ச் சொல்லணும். அப்போதான் தூக்கம் வரும்)

  ReplyDelete