வானரப் படைகள் ராமரின் பாதுகாப்பைத் தேடி ஓடி வரவும், ராமர் வில்லைக் கையில் ஏந்திப் போருக்கு ஆயத்தம் ஆக, அவரைத் தடுத்த லட்சுமணன், தான் சென்று ராவணனை அழித்துவிடுவதாய்ச் சொல்கின்றான். ராமர், ராவணனின் வீரத்தை லட்சுமணனுக்கு எடுத்துச் சொல்லிக் கவனமாய்ச் சென்று போர் புரியும்படி சொல்லி அனுப்புகின்றார். ஆனால் அனுமனுக்கோ, தானே ராவணனை எதிர்க்க ஆவல். ஆகவே அனுமன் ராவணனை நெருங்கி, “ நீ பெற்றிருக்கும் வரத்தால் வானரர்களிடமிருந்து உனக்கு வரப் போகும் இந்த விபத்தைத் தடுப்பவர் எவரும் இல்லை. நான் என் கையால் கொடுக்கப் போகும் அடியில் நீ வீழ்ந்து போவது நிச்சயம்.” என்று கூவுகின்றார். ராவணனோ, சர்வ அலட்சியமாய் அனுமனை எதிர்க் கொள்ளத் தயாராய் இருப்பதாய்த் தெரிவிக்கின்றான். ராவணனுக்குத் தான் அவன் மகன் ஆன அட்சனை அழித்ததை நினைவு படுத்துகின்றார் அனுமன். ராவணனின் கோபம் பெருக்கெடுக்கின்றது. அனுமனை ஓங்கி அறைய, அனுமன் சுழன்றார். அனுமன் திரும்ப அடிக்க, அனுமனின் வீரத்தை ராவணன் பாராட்டுகின்றான். ஆனால் அனுமனோ, என்னுடைய இத்தகைய வீரம் கூட உன்னை வீழ்த்தவில்லையே என வருந்துகின்றார். அனுமனை மேலும் ஓங்கிக் குத்தி, நிலைகுலையச் செய்துவிட்டு நீலனைத் தேடிப் போகும் ராவணனை நீலனும் வீரத்தோடும், சமயோசிதத்தோடும் எதிர்த்துச் சண்டை போடுகின்றான். சற்றே தெளிந்த அனுமன் அங்கே வந்து நீலனுடன் சண்டை போடும் ராவணனை இப்போது எதிர்ப்பது முறை அல்ல என ஒதுங்கி நிற்க, ராவணனோ நீலனை வீழ்த்துகின்றான். நீலன் கீழே விழுந்தான் எனினும் உயிரிழக்கவில்லை.
ராவணன் அனுமனை நோக்கி மீண்டும் போக லட்சுமணன் அப்போது அங்கே வந்து, வானரப் படைகளை விட்டு விட்டு தன்னுடன் போர் புரிய வருமாறு கூவி அழைக்கின்றான். அவ்வாறே, லட்சுமணன் வந்திருப்பது தனக்கு அதிர்ஷ்டமே என எண்ணிய ராவணன், அதை அவனிடமும் கூறிவிட்டு அவனுடன் போருக்கு ஆயத்தம் ஆகின்றான். அம்பு மழை பொழிகின்றான் ராவணன். லட்சுமணனோ சர்வ சாதாரணமாக அவற்றை ஒதுக்கித் தள்ளுகின்றான். பிரம்மனால் அளிக்கப் பட்ட அஸ்திரத்தால் லட்சுமணனைத் தாக்க, சற்றே தடுமாறிய லட்சுமணன் சுதாரித்துக் கொண்டு ராவணனைத் தாக்க அவனும் தடுமாறுகின்றான். எனினும் வீரனாகையால் ,லட்சுமணனைப் போலவே அவனும் சீக்கிரமே தன்னை சுதாரித்துக் கொள்கின்றான். ரொம்பவும் பிரயத்தனம் செய்தும் லட்சுமணனை வீழ்த்த முடியாமல் தன் சக்தி வாய்ந்த வேலை லட்சுமணன் மீது ராவணன் எறிய லட்சுமணன் அதனால் மார்பில் அடிபட்டுக் கீழே வீழ்ந்தான். உடனே ராவணன் வந்து அவன் அருகில் கை வைத்துப் பார்த்து அவனைத் தூக்க முயற்சிக்க, ராவணனால் லட்சுமணனை அசைக்கக் கூட முடியவில்லை. இதைக் கண்ட அனுமன் மிக்க கோபத்துடன் வந்து ராவணனின் மார்பில் தன் முட்டியால் ஓங்கித் தாக்க ராவணன் ரத்தம் கக்க ஆரம்பித்துக் கீழேயும் வீழ்ந்தான். அனுமன் சர்வ அநாயாசமாக லட்சுமணனைத் தூக்கிக் கொண்டு ராமனிடம் விரைந்தார். (தான் கீழே வீழ்ந்த சமயம் லட்சுமணனுக்கு ஒரு நொடிக்கும் குறைவான நேரம், தன்னுடைய அம்சம் விஷ்ணுவுடையது என்ற எண்ணம் தோன்றியதாகவும், அதனாலேயே, ராவணனால் லட்சுமணனை அசைக்க முடியவில்லை என்றும் வால்மீகி சொல்கின்றார். அதே நேரம் அனுமனுக்கு இருந்த அளவு கடந்த அன்பு, மற்றும் பக்தியின் காரணமாய் அவனால் லட்சுமணனைத் தூக்க முடிந்ததாயும் சொல்கின்றார்.) ராவணனின் வேல் லட்சுமணன் வீழ்ந்ததும் உடனேயே அவனைச் சென்றடைந்து விட்டது.சற்று ஓய்வுக்குப் பின்னர் லட்சுமணன் சுயநினைவை அடைந்தாலும், ராவணனால் வானரசேனைக்கு ஏற்பட்ட அழிவைக் குறித்துக் கவலை அடைந்த ராமர், தானே போருக்கு ஆயத்தம் ஆகின்றார். அதற்குள் ராவணனும் அனுமனின் தாக்குதலில் இருந்து மீண்டு வந்து மறுபடியும் சண்டை போட ஆரம்பித்துவிட்டான். அனுமன் ராமனிடம், தன் தோள்களில் உட்கார்ந்த வண்ணம் ராவணனோடு போர் புரியும்படி வேண்டிக் கொள்ள ராமனும் அதற்கு இசைந்தார். அனுமன் தோள் மீது அமர்ந்த ராமர், ராவணனைப் பார்த்து, “ நில் அரக்கர்களில் புலியே, நில், என்னிடமிருந்து நீ தப்பிக்க முடியாது. நீ எந்தக் கடவுளின் உதவியை நாடினாலும் தப்ப மாட்டாய். உன் வேலால் தாக்கப் பட்ட என் தம்பி லட்சுமணன் மீண்டு எழுந்து புது வேகத்தோடு உன்னுடன் சண்டைக்கு ஆயத்தம் ஆகி வருகின்றான். நான் யாரென நினைத்தாய்?? உன் அரக்கர் கூட்டம் அனைத்தையும், ஜனஸ்தானத்தில் அழித்தவன் நான் என்பதை நீ நினைவில் கொள்வாய்.” என்று கூவினார். ராவணன் மிகுந்த கோபத்துடன், ராமரைக் கீழே தள்ளும் நோக்கத்துடன் அவரைத் தாங்கி நின்ற அனுமன் மீது தன் அம்புமழைகளைப் பொழிகின்றான். ராமரும் கோபத்துடன், ராவணனின் தேரைப் பொடிப் பொடியாக ஆக்குகின்றார். பின்னர் தன் அம்பு மழைகளினால் ராவணனை ஆயுதம் அற்றவனாய்ச் செய்கின்றார். அந்நிலையில் தன் சக்தியை இழந்து நின்ற ராவணனிடம் ராமர், “ என்னால் வீழ்த்தப்பட்டு உன் சக்தியை இழந்து நிற்கும் நீ இப்போது யுத்தம் செய்யும் நிலையில் இல்லை. உன்னுடன் இப்போது நான் யுத்தம் செய்வது முறையும் அல்ல. யுத்தகளத்தை விட்டு நீ வெளியேறலாம். நீ சென்று ஓய்வெடுத்துக் கொண்டு பின்னர் மீண்டும் வலிமையுடன் வில்லேந்தி வருவாய். அப்போது என் வலிமையைப் பூரணமாக நீ உணர்வாய்.” என்று சொல்லிவிடுகின்றார்.
பின் குறிப்பு: திரு எஸ்கே அவர்கள் இந்திரஜித்தின் நாகபாசத்தால் லட்சுமணன் மட்டுமே கட்டப்பட்டது பற்றியக் கம்பராமாயணப் பாடல் பற்றிக் கேட்டிருக்கின்றார். கம்பர் அவ்வாறு எழுதி இருந்தாலும் வால்மீகியில் இது பற்றி இல்லை. மேலும் முதற்போரில் ராமரோ, லட்சுமணரோ சண்டை இட்டதாகவே கம்பர் தெரிவிக்கவில்லை. பார்க்க: முதற்போர் புரி படலம், ராவணன் சண்டைக்கு ஆயத்தம் ஆகி வந்ததுமே ராமர் சண்டைக்கு வருவதாக கம்பர் தெரிவிக்கிறார். ஆனால் வால்மீகியோ முதற் போரிலேயே ராம, லட்சுமணர் பங்கு பற்றித் தெரிவித்திருப்பதோடல்லாமல், ராம, லட்சுமணர் இருவருமே, "நாராசங்கள்" என்னும் பாம்பு உருக்கொண்ட அம்புகளால் துளைக்கப் பட்டதாகவே முதல் போரில் சொல்லுகின்றார். இப்போது தான் கருடன் வருகின்றான். அதற்கடுத்த இரண்டாம் போரிலே இந்திரஜித் விடுத்த பிரம்ம்மாஸ்திரமும் இருவரையும் கட்டியதாகவே சொல்லுகின்றார் வால்மீகி. சஞ்சீவி மலை கொண்டு வரும் நிகழ்ச்சியும் இது சமயமே வரும். அதுபற்றிய கம்பர் குறிப்புகளும் மற்ற விளக்கங்களும் பின்னர் வரும். நன்றி.