
அவனைக் கண்ட ராவணன், என்ன ஆயிற்று?ஏன் இவ்வளவு அலங்கோலமான நிலை உனக்கு? என விசாரிக்கின்றான். சுகனும் விரிவாகவே பதில் கூறினான். விண்ணில் இருந்தே தகவல் தெரிவித்த தன்னை வானரர்கள் படுத்திய பாட்டையும், இறக்கைகளை அறுத்ததையும், பலவாறாகத் துன்புறுத்தியதையும், அவர்களோடு பேச்சு, வார்த்தை கூட வாய்ப்பில்லை என்பதையும் தெரிவித்தான். சுக்ரீவன் உதவியோடு ராமன், சீதையைக் காப்பாற்றி அழைத்துச் செல்ல இலங்கை வந்துள்ளான். கடலில் பாலம் கட்டப் பட்டது. அந்தப் பாலம் வழியாக எண்ணிலடங்காத வானரப்படை இங்கே வந்துவிட்டது. நமது பாதுகாப்பு அரண்களை உடைத்துக் கொண்டு அவர்கள் வரும்முன்னரே, சீதையை அவர்களிடம் ஒப்படைத்துவிடுவோம், அல்லது சமாதானம் தேவையில்லை எனில் யுத்தம் செய்வதா எனத் தீர்மானியுங்கள் என்று கூறுகின்றான்.
ராவணன் கோபமுற்று தேவாதி தேவர்களும், கந்தர்வர்களும், அசுரர்களும், சேர்ந்து எதிர்த்தாலும் கூட சீதையை நான் திரும்ப அனுப்புவது என்பது இல்லை. ராமனின் உடலை என் அம்புகள் துளைத்து எடுக்கும் நேரத்தை நான் எதிர்பார்த்திருக்கின்றேன். அந்தக் காட்சியைக் கண்டால் தான் என் இதயம் நிறைவு அடையும். நட்சத்திரங்கள் சூரியனால் ஒளி இழந்து காணப்படுவதைப் போலவே, ராமனும், அவன் படையும் என் முன்னும், என் படைகள் முன்பும் ஒளி இழந்து காண்கின்றனர். கடலைப் போன்ற ஆழமான என்கோபத்தையும், காற்றைப் போல் வலுவான என் பலத்தையும் உணராமல் அந்த ராமன் என்னோடு மோத வந்துள்ளான். பாம்புகளை ஒத்த என் அம்புகள் ராமனின் உடலில் விஷம் போல் பாயப்போவது திண்ணம். இந்திரனோ, கருடனோ, எமனோ, குபேரனோ யாராக இருந்தாலும் யுத்த களத்தில் என்னை ஜெயிப்பது என்பது கஷ்டம். “ என்றெல்லாம் கூறிய ராவணன், தன் அமைச்சன் ஆகிய சாரணன் என்பவனைப் பார்த்து, வானரப்படை எவ்வாறு கடல் கடந்தது என்பது ஒருபுறம் இருக்கட்டும். படையின் எண்ணிக்கையையும், பலத்தையும் எவரும் அறியாமல் நாம் அறிய வேண்டும். நீங்கள் சுகனோடு சென்று எவரும் அறியாமல் வேறு உரு எடுத்துக் கொண்டு சென்று அறிந்து வாருங்கள் எனச் சொல்லவே, சாரணனும், சுகனும், வானர உரு எடுத்துக் கொண்டு சென்றால் வானரப்படையின் பலத்தை அறிய முடியும் என நினைத்து, வானர உரு எடுத்துக் கொண்டு செல்கின்றனர்.

வானரப்படைக்குள் புகுந்த அவ்விருவரும் படையின் எண்ணிக்கையையும், அதன் பலத்தையும் பார்த்துவிட்டுத் திகைத்து நிற்கையில் விபீஷணன் அவர்களைப் பார்த்துவிட்டான். அவனுக்கு அவர்களின் உண்மையான வடிவமும், வந்த காரணமும் புலனாக, இருவரையும் பிடித்துக் கொண்டு ராமனின் முன்னே கொண்டு சென்று நிறுத்தினான். இருவரும் ராவணனின் அமைச்சர்கள். ஒற்றர்களாய் இங்கே வந்திருக்கின்றனர் என்று சொல்லவே, இருவரும் பயந்து போய் நம் கதை இன்றோடு முடிந்தது என நினைத்து, ராமன் முன் இரு கை கூப்பி
நின்று தாங்கள் வந்த காரணத்தையும், ராவணனால் அனுப்பப் பட்டதையும் சொன்னார்கள்.
இதைக் கேட்ட ராமர் மனம் விட்டுச் சிரித்த வண்ணம், நீங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டாயிற்று. இன்னுமும் எங்களையும் பார்த்து இன்னார் எனத் தெரிந்து கொண்டாயிற்று. உங்கள் காரியம் முடிவடைந்து விட்டது அல்லவா?ஆகவே நீங்கள் உங்கள் அரசனிடம் திரும்பிச் செல்லுங்கள், இன்னமும் ஏதும் தெரிந்து கொள்ள மிச்சம் இருந்தால் திரும்பி வாருங்கள்,. இல்லை எனில் படையை மீண்டும்,மீண்டும் சுற்றிப் பாருங்கள். துணைக்கு விபிஷணனையும் அழைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் காட்டச் சொல்கின்றேன். ஆயுதங்கள் இல்லாமல் சிறைப்பட்டிருக்கும் உங்களை நாங்கள் கொல்வது சரியல்ல என்று சொல்லிவிட்டு வானர வீரர்களைப் பார்த்து இவர்களை விடுதலை செய்து விடுங்கள், ஒற்றர்கள் தான் எனினும் உயிரோடு போகட்டும். என்று சொல்கின்றார்.
பின்னர் அவர்கள் இருவரையும் பார்த்து, ராவணனிடம் நான் சொல்கின்ற வார்த்தைகளைத் தெரிவிக்க வேண்டும். உன் பலம், உன்னுடைய உறவின் பலம், படையின் பலம் போன்றவற்றை நம்பி சீதையை அபகரித்து வந்துள்ளாய். அந்த பலத்தை அழிக்கும் நேரம் வந்தாகிவிட்டது. என்னுடைய கோபத்திற்கு இலக்காகிவிட்ட உன் படைகளும், உன் இலங்கையும், நீயும் அழிவது திண்ணம்.” என்று ராவணனிடம் சொல்லுமாறு கூறுகின்றார். ராமரைப் பலவாறு வாழ்த்திவிட்டுச் சென்ற இருவரும் ராவணனைப் போய் அடைந்தார்கள். ராமனை வெல்வது கடினம் என்றும் அவன் ஒருவனே போதும், என்றாலும் மேலும் வானரப்படைகள் வந்துள்ளன. அவற்றின் திறமையைப் பார்த்தால் அந்த வானரப்படையை வெல்வதும் கடினம் என்றே தோன்றுகின்றது. சமாதானமாய்ப் போய்விடுவதே நல்லது என்று ராவணனுக்கு எடுத்து உரைக்கின்றார்கள். ஆனால் ராவணன் அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுகின்றான். படையின் அனைத்து விபரங்களையும் கேட்கின்றான். உடனேயே ராவணனின் மாளிகையின் மேல்தட்டுக்குப் போய், படைகளின் எண்ணிக்கைப் பலத்தையும், வீரர்களையும் காட்டி, அவர்கள் பலத்தையும் பற்றிச் சொல்லி, அவனுக்கு அனைவரையும் காட்டுகின்றனர் இருவரும்.
No comments:
Post a Comment