
ராமர் சமுத்திர ராஜனைக் கூப்பிட்டு, “ஏ, சமுத்திர ராஜனே, உன்னை வற்றச்செய்துவிடுவது எனக்கு மிக எளிதான ஒன்று. வற்றச் செய்த பின்னர் இந்தக் கடலின் மணற்பரப்பில் நடந்து செல்ல இந்த வானரசேனைக்கு அத்தனை கஷ்டமாய் இருக்காது. என்னுடைய சக்தி பற்றி நீ அறிய மாட்டாய். இன்று நீ என் மூலம் பெரும்துன்பத்தை அனுபவிக்கப் போகின்றாய்.” என்று அறை கூவல் விடுத்தார். பின்னர் பிரம்மாஸ்திரத்தின் சக்தியை ஓர் அம்பில் ஏற்றி, அதை வில்லிலே பூட்டி, அதி பயங்கரமான ஓசையுடன் நாணேற்றினார் ராமர். ஏழு உலகும் குலுங்க, பூமி அதிர, இருள் சூழ, சூரிய, சந்திரர் நிலை தடுமாற, காலம் கூட ஒரு கணம் செயலற்று நிற்க, காற்று பேய்க்காற்றாய் மாறி வீச ஆரம்பிக்க, மரங்கள் சரிய, மலைகள் நொறுங்க, பேரிடி அண்டசராசரமும் நடுங்கும் வண்ணம் இடிக்க, மின்னல் ஒளி கண்ணைப் பறித்தது. விலங்குகள் அனைத்தும் பீதியில் ஓலமிட, பிரளயமே வந்துவிட்டதோ என்னும்படிக்குக் கடல் பொங்கி, நுரைத்துச் சுழித்துக் கொந்தளித்து, வேகம் தாங்க மாட்டாமல் கரையை வந்து வேகத்துடன் மோதியது. கல்லால் ஆன சிலை போல உறுதியுடனும், திடத்துடனும், அசையாமல் உட்கார்ந்திருந்தார் ராமர். கிழக்கே இருந்து, சூரியன் உதிப்பது போன்ற தோற்றத்தோடு மெல்ல, மெல்ல சமுத்திரத்தில் இருந்து சமுத்திர ராஜன் எழுந்தான். பல்வேறு விதமான நதிகளால் சூழப்பட்டவனாயும், அந்த நதிகளுக்கு அர்ப்பணிக்கப் பட்ட பூக்களினால் ஆன மாலைகளை அணிந்தவனாயும், ஒளி வீசிக் கொண்டும், காட்சி அளித்த சமுத்திர ராஜன், தன்னிரு கைகளையும் கூப்பிக் கொண்டு, ராமனை வணங்கிவிட்டுப் பேச ஆரம்பித்தான்.
“ராமா, பூமி, காற்று, ஆகாயம், நீர், நெருப்பு இவை எல்லாம் தங்கள் தன்மையில் நிலைத்திருக்கும் பண்புள்ளவை. நீ அறிய மாட்டாயா???? கடலின் ஆழத்தை அறிய முடியாமையும், அதில் நீந்திச் சென்று அக்கரையை அடைய முடியாமையும் இயற்கையின் இந்த விதிக்கு மாறுபட்டவை அல்லவே. மாறாக நடந்தால் இயற்கையின் விதியில் இருந்து நான் நழுவியவன் ஆவேனே? எனினும் என்னைக் கடக்கும் வகையை நான் சுட்டிக் காட்டுகின்றேன். நான் கர்வமாய் இருந்தது என் தவறுதான். அதன் காரணமாய் இந்தக் கடல் நீர் வற்ற நான் காரணமாய் ஆகக் கூடாது. உன்னுடைய இந்தப் பெரும்படை செல்லும் வழியை நான் சொல்லுகின்றேன்.” என்று பணிவோடு கூறவும், ராமர் உடனேயே வில்லில் பூட்டி நாணேற்றிய இந்த அஸ்திரத்தை நான் என்ன செய்ய முடியும்? இதை எங்கே செலுத்தட்டும்?” என்று சமுத்திர ராஜனையே கேட்கின்றார். சமுத்திர ராஜன், எனக்கு வடக்கே திருமசூல்யம் என்ற புண்ணிய ஸ்தலம் இருக்கின்றது. ஆனால் அங்கே அதிகம் பாவம் செய்தவர்களே வருகின்றனர். உன்னுடைய அம்பை நீ அந்த இடத்தில் செலுத்தினால் என்னுடைய நீரை மிகவும் கெட்டவர்கள் பயன்படுத்தாமல் இருக்கலாம்.” என்று கூற ராமரும் அவ்வாறே ஏவிய அம்பை அங்கே செலுத்துகின்றார். அந்தப் பகுதி மறுகாந்தாரம் என்ற பெயர் பெற்று, ராமரின் வில்லில் இருந்து கிளம்பிய அம்பின் வலிமையால் சகல வளங்களும் பெற்றது. பின்னர் சமுத்திர ராஜன் ராமனிடம், “தேவதச்சனாகிய விஸ்வகர்மாவின் மகன் நளன், தந்தையிடமிருந்து வரம் பெற்றவன். என் மீது பேரன்பு கொண்டவன். அவன் என் மீது ஒரு பாலம் கட்டட்டும். நான் அதைத் தாங்குகின்றேன்.” என்று வாக்களித்தான்.

உடனேயே அங்கே இருந்த நளன் எழுந்து, “ என்னால் இக்காரியம் குறைவின்றிச் செய்து தரப்படும். எனினும் சமுத்திர ராஜன் நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான். உம்முடைய தண்டனைக்குப் பயந்தே அவன் இப்போது இவ்விதம் இணங்கி வருகின்றான். உம்முடைய குலத்து மன்னனாகிய சகரனால் தோற்றுவிக்கப் பட்ட உம்மிடம் அவன் நன்றி இவ்வளவே. வானர வீரர்களால் அணை கட்டுவதற்கு வேண்டிய பொருட்கள் கொண்டு வரப்படட்டும். நான் அணை கட்டி அக்கரை போக வழி செய்கின்றேன்.” என்று சொல்கின்றான்.

அக்கம்பக்கத்தில் உள்ள காடுகளில் தேடுதல் வேட்டைகள் நிகழ்த்தி வானர வீரர்கள் பெரிய மரங்களை வேரோடு பிடுங்கிக் கொண்டு வருகின்றனர். பெரும்பாறைகள் தகர்க்கப் பட்டன. சமுத்திரக் கரையை வந்தடைகின்றன. கொண்டு வரப்பட்ட பெரும்பாறைகளை ஒரே நேர்க்கோட்டில் வைக்கக் கயிறுகள் பயன்படுத்தப் பட்டன. இப்படியாக நளன் சொன்னபடிக்குப் பாறைகளை சமுத்திரத்தில் நிலை நிறுத்தியும், அவற்றின் மீது மரங்களை நிறுத்தியும், எண்ணிலடங்கா வானரர்கள் பாலம் கட்டும் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு சில நாட்களில் பாலம் கட்டும் வேலையும் முடிந்தது. விண்ணில் இருந்து தேவர்களும், தவ முனிவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும் இதைப் பார்க்கக் கூடி நின்றார்கள். நேர் வகிடு எடுத்த பெண்ணின் கூந்தல் போல் சமுத்திரத்துக்கு நடுவில் பாலம் தெரிந்ததாம்.

அந்தப் பாலத்தின் மீது ஏறிக் கொண்டு வானர சேனை கடக்கத் தொடங்கியது. ராமனை, அனுமனும், லட்சுமணனை, அங்கதனும் தங்கள் தோளில் ஏற்றிச் செல்லவேண்டும் என்ற சுக்ரீவனின் ஆவலும் நிறைவேற்றப் பட்டது. மெல்ல, மெல்ல சமுத்திரத்தைக் கடந்து அக்கரை சென்ற வானரப் படை சுக்ரீவனின் கட்டளைப்படி அங்கேயே முகாமிட்டது. ராமருக்கு இலங்கை அழியப் போகின்றது என்பதை முன்கூட்டியே உணர்த்தும் வண்ணமான துர் சகுனங்கள் பல தோன்றுகின்றன. அதை அவர் லட்சுமணனுடன் கூடி விவாதிக்கின்றார். பின்னர் இலங்கை நகரை நோக்கி முன்னேற படைக்குக் கட்டளை பிறப்பிக்கும்படி சுக்ரீவனுக்குச் சொல்ல ராமனின் ஆணைப்படி வானரப்படை முன்னேறியது. விண்ணை முட்டும் வெற்றிக் கோஷங்கள் எழுப்பிக் கொண்டு சென்ற வானரப்படையின் கூச்சலில் இலங்கை நகரே அதிர்ந்தது. முரசுகள் பெரும் முழக்கம் செய்தன. பேரிகைகள் முழங்கின. எங்கும் ஒரே உற்சாகம், ஜெயகோஷம், இவற்றுக்கு நடுவில் இலங்கை நகரும் கண்ணுக்குப் புலன் ஆகியது. உடனே ராமர் யார், யார், எந்த, எந்தப் பக்கம் தலைமை தாங்க வேண்டும், எங்கே நிற்க வேண்டும், படையின் அணிவகுப்பு எவ்வாறு இருக்க வேண்டும், என்பதை எல்லாம் எடுத்து உரைத்தார். வானரப் படையினருக்கு இருந்த உற்சாகத்தில் உடனேயே இலங்கைக்குள் சென்று, இலங்கையை நாசம் செய்ய வேண்டும் என்று துடித்தனர். சுக்ரீவனிடம் ராமர், நாம் நமது படையின் அணிவகுப்பைக் கூடத் தீர்மானித்துவிட்டோம், ஆகவே, ராவணனின் ஒற்றனை விடுதலை செய்துவிடலாம். என்று கூறவே, சுகன் விடுவிக்கப் பட்டு ராவணன் அரண்மனை நோக்கி விரைந்தான்.
No comments:
Post a Comment