தன்னால் ராம, லட்சுமணர்கள் வீழ்த்தப் பட்டதைப் பார்த்த இந்திரஜித்திற்கு மனதில் மகிழ்ச்சி பொங்கியது. நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்யும் போது, எதுவும் செய்ய இயலாமல் தவித்துக் கொண்டிருந்த இந்திரஜித், இப்போது தன்னை மறைத்துக் கொண்டு செயல்பட்டதின் மூலம் சகோதரர்கள் இருவரையும் வீழ்த்திவிட்டது குறித்து மேலும் மகிழ்ந்தான். இன்னும், இன்னும் என அம்புகளைப் பொழிந்த வண்ணம், "தேவேந்திரனால் கூட என்னை நெருங்க முடியாது. அப்படி இருக்க நீங்கள் இருவரும் என்னைக் கொல்ல எண்ணுவது நடக்கும் காரியமா?" என்று கூவினான். நாராசங்கள் என்ற பெயருடைய அந்த அம்புக் கூட்டங்களால் முதலில் ராமரின் உடல் துளைக்கப்பட அவர் மீழே வீழ்ந்தார். வில் கையில் இருந்து நழுவியது. இதக் கண்ட லட்சுமணனுக்குத் தன்னுடைய உயிரே உடலை விட்டுப் பிரிவது போல் மனம் தளர்ந்து, உடல் சோர்வுற்றது. இனி தன் உயிர் என்னவானால் என்ன என்று அவன் மனம் எண்ண அவனும் தரையில் சாய்ந்தான். இருவரையும் வானர வீரர்கள் சுற்றிக் கூடி நின்றனர். உடலில் ஒரு விரல் அளவு கூட இடைவெளி இல்லாமல் எங்கும் அம்புகள் துளைத்து, ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. மூச்சுவிடத் திணறிக் கொண்டிருந்த இரு சகோதரர்களையும் பார்த்து வானரப் படைத் தலைவர்களும், மற்ற வீரர்களும் கவலையுடன் யோசிக்க இந்திரஜித் மறுபடியும் கூவினான். எத்தனை நன்கு கவனித்துப் பார்த்தாலும் அவன் இருக்குமிடம் தெரியவில்லை. ஆனால் அவன் குரல் மட்டும் நன்கு கேட்டது அனைவருக்கும்.
"கர, தூஷணர்களை வென்றுவிட்ட பெருமையில் இருந்த இந்த இரு மனிதர்களும், தேவேந்திரனையே வென்ற என்னால் தோற்கடிக்கப் பட்டு தரையில் வீழ்த்தப் பட்டனர். இவர்கள் இருவரையும் என்னுடைய அம்புகளில் இருந்து விடுவிக்க யாராலும் முடியாது. சாத்திரங்கள் கற்றறிந்த, வேத மந்திரங்கள் அறிந்த ரிஷிகளாலோ, அல்லது தேவர்களாலோ, யாராலும் முடியாது. இவர்களை வீழ்த்தியதன் மூலம் பெரும் துன்பக் கடலில் மூழ்கி இருந்த என் தந்தை காப்பாற்றப் பட்டார். இலங்கையை அழிப்போன் என்று வந்த இவர்களை நான் வீழ்த்தியதன் மூலம் வானரக் கூட்டத்தின் பெருமைகளும், மேகங்கள் கலைவது போலக் கலைந்துவிட்டது." என்று உற்சாகக் கூச்சல் போட்டுக் கொண்டு, மேன் மேலும் அம்புகளை வானரப் படை இருக்குமிடம் நோக்கி ஏவுகின்றான். அரக்கர்கள் மனம் மகிழ, வானரப் படை வீரர்களுக்குப் பெரும் காயங்கள் ஏற்படுகின்றது. ராம, லட்சுமணர்கள் இறந்துவிட்டனரோ என்ற முடிவுக்கு வந்த சுக்ரீவனை விபீஷணன் தேற்றுகின்றான். மந்திர, ஜபங்களைச் செய்து கையில் நீர் எடுத்துக் கொண்டு அந்த மந்திர நீரால் சுக்ரீவன் முகத்தைக் கழுவி விட்டு, வானரப் படையை மேன்மேலும் ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றான். தன்னம்பிக்கையை இழக்கவேண்டாம், ராமரோ, லட்சுமணனோ இறந்திருக்க மாட்டார்கள், முகத்தில் ஒளி குன்றவில்லை எனவும் ஆறுதல் சொல்கின்றான். அரக்கர்களோ தாங்கள் ஜெயித்துவிட்டதாகவே ராவணனிடம் சென்று சொல்ல, இந்திரஜித்தும் அங்கே சென்று தன் தந்தையிடம் நடந்த விபரங்களைத் தெரிவிக்கின்றான். மனம் மகிழ்ந்த ராவணன் இந்திரஜித்தைப் பாராட்டிக் கொண்டாடுகின்றான்.
உடனேயே சீதையைக் காத்து நின்ற அரக்கிகளை அழைத்து வருமாறு கட்டளை இடுகின்றான். அவர்களிடம், சீதையிடம் சென்று, ராம, லட்சுமணர்கள் இந்திரஜித்தால் கொல்லப் பட்டனர் என்ற செய்தியைத் தெரிவிக்குமாறு கூறுகின்றான். அவளைப் புஷ்பக விமானத்தில் அமரச் செய்து அழைத்துச் சென்று யுத்தகளத்தில் வீழ்ந்து கிடக்கும் அந்த இரு இளவரசர்களையும் காட்டச் சொல்கின்றான். பின்னர் வேறு வழியில்லாத சீதை என்னை நாடி வருவாள் எனக் கோஷம் போடுகின்றான் தசகண்டன். சீதை அந்தப் படியே புஷ்பக விமானத்தில் ஏற்றப் பட்டு யுத்தகளத்துக்கு அழைத்துச் செல்லப் படுகின்றாள். வானரக் கூட்டங்கள் அழிக்கப் பட்டு, ராமரும், லட்சுமணனும் தரையில் வீழ்ந்து கிடப்பதை சீதை கண்டாள். தன்னுடைய அங்க, லட்சணங்களைக் கண்ட ஜோதிடர்களும், ஆரூடக்க் காரர்களும், தனக்குப் பட்டமகிஷியாகும், லட்சணம் இருப்பதாய்க் கூறியது பொய்த்துவிட்டதே எனவும், தான் விதவை ஆகிவிட்டோமே என ஜோதிடத்தின் மேலும், அந்த ஜோசியர்கள் சொன்னது எல்லாம் பொய் என்றும் கூறிப் புலம்புகின்றாள் சீதை. அப்போது திரிஜடை, "கலங்க வேண்டாம் சீதை, ராமரோ, லட்சுமணரோ இறக்கவில்லை, அவர்கள் முகம் ஒளி பொருந்தியே காணப் படுகின்றது. மேலும் தலைவர்கள் இறந்து விட்டதால் ஏற்படும் குழப்பம் எதுவும் வானரப் படையிடம் காணப்படவில்லை. அமைதியாக மேற்கொண்டு செய்யும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இறக்கவில்லை, நீ அமைதியாக இரு. இவர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று என் மனம் சொல்கின்றது. உன் மனதைத் தேற்றிக் கொண்டு தைரியமாய் இருப்பாயாக." என்று சொல்கின்றாள்.
அப்படியே இருப்பதாய் இரு கையும் கூப்பிக்கொண்டு சீதை அவளை வேண்ட புஷ்பகம் மீண்டும் அசோக வனத்துக்கே திரும்புகின்றது. அரை மயக்கத்தில் இருந்த ராம, லட்சுமணர்களில், சற்றே கண்விழிக்க முடிந்த ராமர், தன் அன்புக்கு உகந்த சகோதரன், தன்னோடு சேர்ந்து தரையில் வீழ்ந்து கிடப்பதைக் காண்கின்றார். அவர் மனம் லட்சுமணனைப் பெற்றெடுத்த தாயான சுமித்திரையின் மனம் என்ன பாடுபடும் இதைக் கண்டால் என்று யோசிக்கின்றது. தனக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லி வந்து, தன்னைத் தேற்றிய லட்சுமணன் இப்போது விழுந்து கிடப்பதைக் கண்டதும் அவர் மனம் துடிக்கின்றது. லட்சுமணனைப் பின் தொடர்ந்து தானும் யமனுலகுக்குச் செல்லவேண்டியதே என்று மனம் நொந்து சொல்கின்றார். சுக்ரீவனுக்காவது கிஷ்கிந்தைக்கு அரசுப் பட்டம் கட்டியாயிற்று. ஆனால் விபீஷணனுக்குக்கொடுத்த வாக்கைக் காக்க முடியவில்லையே?? இப்படி வீழ்ந்து கிடக்கின்றோமே என மனம் பதறுகின்றார் ராமர். அங்கே அப்போது வந்த விபீஷணனைக் கண்ட வானர வீரர்கள் இந்திரஜித்தோ எனக் கலக்கமுற, அவர்களை நிறுத்திய விபீஷணன், சுக்ரீவனிடம் படையை அணிவகுத்து நின்று எதிர்த்துப் போரிடக் கட்டளை இடுமாறு கூறுகின்றான். எனினும் தன்னாலன்றோ ராம, லட்சுமணர்கள் இவ்விதம் வீழ்ந்து கிடப்பது என எண்ணித் தவிக்கின்றான். ராவணன் ஆசை நிறைவேறிவிடுமோ எனக் கலக்கம் அடைகின்றான். இவர்களை எழுப்புவது எவ்வாறு என் அவன் சுக்ரீவனிடம் ஆலோசனை செய்கின்றான். தன் ம்ந்திர நீரினால் இருவர் கண்களையும் துடைக்கின்றான். சுக்ரீவன் தன் மாமனாராகிய சுஷேணனைப் பார்த்து, "ராம, லட்சுமணர்களை கிஷ்கிந்தை கொண்டு சேர்க்கும் படியும், தான் இருந்து ராவணனையும், அவன் குடும்பம், மகன், சகோதரர் போன்றோரையும், மற்ற அரக்கர்களையும் அழித்துவிட்டு, சீதையை மீட்டுக் கொண்டு வருவதாயும் தெரிவிக்கின்றான். சுஷேணன் சொல்கின்றான்:தேவாசுர யுத்தம் நடந்த போது அதை நானும் கண்டிருக்கின்றேன். அப்போது அசுரர்கள் தங்களை நன்கு மறைத்துக் கொண்டு போரு புரிந்த வண்ணமாக தேவர்களுக்கு மீண்டும், மீண்டும் அழிவை ஏற்படுத்தினார்கள். அப்போது தேவகுருவாகியவரும், மஹரிஷியும் ஆன பிரஹஸ்பதியானவர் சில மந்திரங்களை ஓதி, துதிகளைப் புரிந்து, சில மருந்துகளைத் தயாரித்து, அவற்றின் மூலம் தேவர்களை உயிர்ப்பித்து வந்தார். அந்த மருந்துகள் இப்போதும் பாற்கடலில் கிடைக்கின்றது. சம்பாதி, பனஸன் ஆகியோர் தலைமையில் சில வானரர்கள் சென்று அந்த மருந்துகளைக் கொண்டு வரவேண்டும். பாற்கடலில் இருந்து எழும் இரு மலைகள் ஆன, சந்திரம், துரோணம் ஆகியவற்றில், "சஞ்சீவகரணி" என்னும் அற்புத மருந்து, இறந்தவர்களைக் கூடப் பிழைக்க வைக்கும், ஆற்றல் பொருந்திய மூலிகையும், விசால்யம் என்னும் அம்புகளால் படும் காயங்களை இருந்த இடம் தெரியாமல் போக்கும் சக்தி வாய்ந்த மூலிகையும் கிடைக்கும். அவை கொண்டுவரப்படவேண்டும். அனுமன் நினைத்தால் அவை நம் கையில் கிடைத்துவிடும், ராம, லட்சுமணர் எழுந்து விடுவார்கள் என்று சொல்கின்றான்.
அப்போது ஆகாயத்தில் பெருத்த ஓசை ஒன்று கேட்டது. இடி, இடித்தது, மின்னல்கள் பளீரிட்டன. அண்ட, பகிரண்டமும் நடுங்கும்படியான பேரோசை கேட்டது. கடல் கொந்தளித்தது. மலைகள் ஆட்டம் கண்டன. மேகங்கள் ஒன்றுக்கொன்று மோதும் ஓசையில் உலகே நடுங்கியது. பூமி பிளந்துவிட்டதோ என்னும்படியான எண்ணம் ஏற்பட்டது. இத்தகைய மாற்றங்கள் எதனால் ஏற்படுகின்றது என அனைவரும் அதிசயித்துப் பார்க்கும்போது, காற்று பலமாக வீசத் தொடங்கியது. ஊழிப்பெருங்காற்றோ, புயலோ, இது என்ன இவ்வாறு காற்று? எனக் கலங்கும் வேளையில் கருடன் வானில் தோன்றினான். ஊழித் தீயே காற்றின் வேகத்தோடு பறந்து வருவது போன்ற செந்நிறத் தோற்றத்தில் வானம் மட்டுமின்றி, பூமியும் சிவந்தது.
No comments:
Post a Comment