டாக்டர் எஸ்கே அவர்களுக்கு, அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்து காப்பாற்றினான் ராம, லட்சுமணர்களை என்று கம்பன் எழுதி இருப்பது பொய்யாய்ப் போயிற்றே என்று கேட்கின்றார். நான் எழுதுவது முழுக்க வால்மீகி சொல்லி இருப்பதை மட்டுமே. நடு நடுவில் கம்பனையும், திருப்புகழையும் மேற்கோள் காட்டி வந்தேன். அதுவே அதிகம் இடம்பெறுவதாய்ச் சொன்னதின் பேரில் நிறுத்திவிட்டேன், (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்). இப்போ மீண்டும் சிறு மேற்கோள் காட்டினால் கொஞ்சம் புரியும். கம்பன் நிச்சயமாய் வால்மீகி போல் உள்ளதை உள்ளபடிக்கு எழுதவில்லை. கொஞ்சம் கற்பனைகளும் உண்டு. மேலும், கம்பர் காலத்தில் ராமர் தெய்வமாகவும், அவதார புருஷனாகவும் மாறிவிட்டார். ஆகவே அதற்கேற்றபடி அவர் சில இடங்களில் மாற்றியுள்ளார். அதில் இந்தப் போர் நடக்கும் காலமும் ஒன்று. இந்தப் போரைப் பற்றிக் கம்பராமாயணத்தில் எந்தக் குறிப்பும் கிடையாது. அங்கதன் தூதுக்குப் பின்னர் ஆரம்பிக்கும், "முதற்போர் புரி படலம்" ராமன் ஆணை இடுவதையும், அதன் பேரில் அகழியைத் தூர்த்து, வானரப் படை உள்புகுந்து,காவல் இருந்த அரக்கர் படைகளை வீழ்த்துவதும், பின்னர் வானரப்படையுடன் பொருத, அரக்கர் படை வெளிவருதலும், சொல்லுகின்றார்.
"ஆய காலை அனைத்துலகும் தரும்
நாயகன் முகம் நாலும் நடந்தென
மேய சேனை விரிகடல் விண்குலாம்
வாயிலூடு புறப்பட்டு வந்ததே" முதற் போர் புரிப் படலம் செய்யுள் எண் 993
என்று அரக்கர் படையின் ஆரவாரப் புறப்பாட்டைத் தெரிவிக்கின்றார். பின்னர் சுக்ரீவன் போர் செய்வதையும், ராட்சதன் ஆன வச்சிரமுட்டி என்பவனை சுக்ரீவன் அழிப்பதையும் சொல்லும் கம்பர், ஒவ்வொரு வாயிலிலும் நடக்கும் போரையும் வர்ணிக்கின்றார்.
கிழக்கு வாயில் சண்டையை விவரிக்கும் கம்பர், பின்னர் நீலன் "பிரஹஸ்தனை" வீழ்த்துவதையும், வால்மீகி சொல்லுவதற்குச் சற்று முன்னால் நடந்ததாய்த் தெரிவிக்கின்றார். ஆனால் இந்தப் போரில் அங்கதன், அனுமன், சுக்ரீவன் போன்ற வானர வீரர்கள் தவிர, இந்திரஜித் வந்ததோ, அவன் ராம, லட்சுமணர்களை "நாகபாசத்தால்" கட்டியதோ கடைசிவரையில் இல்லை, பிரஹஸ்தன் இறந்ததும் கோபம் கொண்ட ராவணன் போருக்குத் தயார் ஆவதும், அது கேட்டு ராமர் போருக்கு வருவதும் என்றே குறிப்பிடுகின்றார்.
"வென்றி வேற் கை நிருதர் வெகுண்டெழ
தென் திசைப் பெருவாயிலில் சேர்ந்துழி
பொன்றினான் அச்சு பாரிசன் போயினார்
இன்று போன இடம் அறியோம் என்றார்." செய்யுள் எண் 1041
"கீழை வாயிலில் கிளர் நிருதப் படை
ஊழி நாளினும் வெற்றி கொண்டுற்ற நின்
ஆழி அன்ன அனீகத் தலைமகன்
பூழியான் உயிர் புக்கது விண் என்றார்" முதற்போர் புரிப் படலம் செய்யுள் எண் 1042
என்று சண்டையைப் பற்றி அரக்கர்கள் ராவணனிடம் தெரிவிப்பதாய்க் கூறும் கம்பர், இதைக் கேட்டு வெகுண்டெழுந்த ராவணன் போருக்குத் தயார் ஆவதைச் சொல்கின்றார்.
"என்ற வார்த்தை எரிபுகு நெய்யெனச்
சென்று சிந்தை புகுதலும் சீற்றத் தீ
கன்று கண்ணின் வழிச்சுடர் கான்றிட
நின்று நின்று நெடிது உயிர்த்தான் அரோ." முதற்போர் புரி படலம் செய்யுள் எண் 1043
என்று தன் அரக்கப் படையின் தோல்வியைக் கேட்டுப் பெருமூச்சு விட்டு மனம் வருந்திய ராவணன், போருக்குத் தயார் ஆவதை, கம்பர்
"சுட்டது இந்திரன் வாழ்வை கடைமுறை
பட்டது இங்கோர் குரங்கு படுக்க என்று
இட்ட வெஞ்சொல் எரியினில் என் செவி
சுட்டது என்னுடை நெஞ்சையும் சுட்டதால்" செய்யுள் எண் 1048
என்று தன் அருமை அமைச்சன் பிரகஸ்தனின் மரணச் செய்தி தன்னைத் துன்புறுத்துவதையும்,
"மண்டுகின்ற செருவின் வழக்கெலாம்
கண்டு நின்று கயிலை இடந்தவன்
புண்திறந்தன கண்ணினன் பொங்கினான்
திண் திறல் நெடுந்தேர் தெரிந்து ஏறினான். முதற் போர் புரி படலம் செய்யுள் எண்:1051
"ஆயிரம் பரி பூண்டது அதிர் குரல்
மாயிருங்கடல் போன்றது வானவர்
தேயம் எங்கும் திரிந்தது திண் திறல்
சாய இந்திரனே பண்டு தந்தது" செய்யுள் எண் 1052
என ராவணன் போருக்குப் புறப்படுவதை வர்ணிக்கின்றார். இதன் பின்னரே வானரத் தூதர் வந்து ராமனிடம், ராவணன் போருக்கு வந்திருப்பதைத் தெரிவிப்பதாய்ச் சொல்கின்றார்.
"ஓதுறு கருங்கடற்கொத்த தானையான்
தீது உறு சிறு தொழில் அரக்கன் சீற்றத்தால்
போது உறு பெருங்களம் புகுந்துளான் எனத்
தூதுவர் நாயகற்கு அறியச் சொல்லினார்." முதற்போர் புரி படலம், செய்யுள் எண் 1064
என்று தூதுவர்கள் ராமனிடம் தெரிவிப்பதாயும்,
"ஆங்கு அவன் அமர்த் தொழிற்கணுகினான் என
வாங்கினென் சீதை என்னும் வன்மையால்
தீங்குறு பிரிவினால் தேய்ந்த தேய்வு அற
வீங்கின இராகவன் வீரத் தோள்களே" செய்யுள் எண்: 1065
என்று ராமன் போருக்குப் புறப்படுவதையும்,
அதுவரையில் ராமன் போர்க்களம் புகவில்லை என்னும் எண்ணம் தோன்றும்படியாகவும் எழுதி உள்ளார். அவர் தெரிவிப்பது, பின்னர் வரும் சஞ்சீவி மலையை அனுமன் கொண்டு வரும் காட்சியின் போது நடக்கும் சண்டை பற்றி மட்டுமே. ஆனால் அதற்கு முன்னாலேயே ராம, லட்சுமணர்களை இந்திரஜித் நாகபாசத்தால் கட்டுவது பற்றிக் கம்பர் ஒரு இடத்திலும் சொல்லவில்லை. அதனாலேயே முரண்பாடு இருப்பது போலும், கம்பர் சொன்னது பொய்யா எனவும் எஸ்கே அவர்களுக்குச் சந்தேகம் தோன்றுகின்றது. சஞ்சீவி மலையை அனுமன் கொண்டு வருவது பின்னால் வரும். அப்போதும் கம்பனை மேற்கோள் காட்டப் படும். விளக்கம் கொடுக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.