ராமனுடன் சேர்ந்து சுவேல மலை மீது பல வானரர்களும் ஏறினார்கள். இலங்கை போருக்குத் தயாராகிக் கொண்டிருந்த காட்சி அங்கிருந்து கண்ணில் பட்டது. மாலை நேரம் முடிந்து இரவில் அங்கேயே ஓய்வெடுத்த வானரப் படை மறுநாள் காலையில், திரிகூட மலையின் மீது ஆகாயத்தில் இருந்து தொங்க விடப்பட்டது போன்ற பேரழகோடு காட்சி அளித்த இலங்கையைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு உயரமான இடத்தில் ராவணன் நின்று கொண்டிருப்பதை ராமர் கவனித்தார். ராவணனின், கம்பீரத்தையும், தேஜஸையும், வீரத்தோற்றத்தையும் கண்டு ராமர் வியந்து கொண்டிருந்த நேரத்தில், சுக்ரீவனுக்கு ராவணன் பேரில் கடுங்கோபம் ஏற்படுகின்றது. உடனேயே அந்த மலைச் சிகரத்தில் இருந்து ராவணனை நோக்கித் தாவினான். "உன்னைக் கொன்று விடுவேன், விடமாட்டேன்" என்று கூவிய வண்ணம் தாவிய சுக்ரீவனின் தாக்குதலினால் ராவணனின் கிரீடம் தலையில் இருந்து கீழே விழுந்து உருண்டோடியது. ராவணன் மிகுந்த கோபத்துடன் எதிர்த் தாக்குதல் நடத்தினான். தரை மீது சுக்ரீவனைத் தூக்கி வீசி அடித்தான். பதிலுக்கு சுக்ரீவனும் ராவணனை வீசி எறிய இருவருக்கும் பயங்கரமாக யுத்தம் நடந்தது. கடுமையான சண்டையால் கொஞ்சம் மனம் தளர்ந்த ராவணன் தன் மாயாசக்தியைப் பிரயோகிக்க முடிவு செய்தான். அதற்குள் இதை உணர்ந்த சுக்ரீவன் ஆகாயத்தில் தாவி, இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான், ராமர் சுக்ரீவனை, நீ ஒரு அரசனாக இருந்து கொண்டு இம்மாதிரியான காரியங்களைச் சொல்லாமலும், யாருடனும் கலந்து ஆலோசிக்காமலும் செய்யலாமா??? உனக்கு ஏதானும் நேர்ந்திருந்தால்???? அதன் பின்னரும் யாரைப் பற்றியாவது நான் யோசனை செய்ய முடியுமா??? ராவணன் படைகளையும், அவனையும் நாசம் செய்து விட்டு, உன் மகன் ஆன அங்கதனையும், இலங்கை மன்னனாக விபீஷணனையும், என் தம்பி பரதனையும் முறையே சிம்மாசனத்தில் அமர்த்தி விட்டு நான் உயிரை விட்டிருப்பேன் என்று சொல்லிவிட்டு, இனியும் இம்மாதிரியான காரியங்களை யாரையும் கேட்காமல் செய்யாதே என்று கூறுகின்றார்.
பின்னர் லட்சுமணனும், விபீஷணனும், சுக்ரீவன், அனுமன், நீலன், ஜாம்பவான் ஆகியோருடன் பின் தொடர, ராமர் வானரப் படையை முன்னேறிச் செல்லக் கட்டளை பிறப்பித்துவிட்டுத் தானும் தொடர்ந்து முன்னேற ஆரம்பித்தார். ராம, லட்சுமணர்கள் ராவணனால் பாதுகாக்கப் பட்ட வடக்கு வாயிலை அடைந்தனர். மற்றவர்கள் தங்களுக்குக் குறிப்பிடப் பட்ட வாயிலை நோக்கிச் சென்று காற்றுக் கூடப் புக முடியாத அளவுக்கு இலங்கையைச் சூழ்ந்து கொண்டு, யுத்தம் தொடங்கும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அப்போது மீண்டும் ஒரு முறை ஆலோசனைகள் செய்த ராமர் அங்கதனை அழைத்து, ராவணனிடம் சென்று, எச்சரிக்கை கொடுக்குமாறு சொல்லித் தூது அனுப்புகின்றார். ராவணன் செய்த பாவங்களுக்கெல்லாம் முடிவு கட்டிவிட்டு அவன் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டிய வேளை நெருங்கிவிட்டதென்றும், சீதையை ஒப்படைத்துவிட்டு, பாதுகாப்பைக் கோரவேண்டும் என்றும், விபீஷணன் இலங்கை அரசனாய் முடிசூட்டப் படுவான் என்றும், நீ ஒத்துழைக்கவில்லை எனில் உன் உயிர் என் கையில் என்றும் சொல்லி அனுப்புகின்றார். மண்ணோடு மண்ணாக ஆக்கிவிடுவதாயும் சொல்லி அனுப்புகின்றார். அங்கதன் அவ்வாறே ராமனின் உத்தரவை ஏற்று ராவணனின் அரண்மனை அடைகின்றான்.
அங்கதன் கூறிய செய்தியைக் கேட்ட ராவணன் கோபத்துடன் அங்கதனைச் சிறைப் பிடிக்குமாறு உத்திரவிட, அங்கதனை நான்கு அரக்கர்கள் பிடிக்கின்றார்கள். தன் வலிமையை அவர்கள் உணரவேண்டி தானாகவே அவர்களிடம் சிறைப்பட்ட அங்கதன், பின்னர் நால்வரையும், குருவிகளைத் தூக்கிச் செல்வது போல் தூக்கிக் கொண்டு அரண்மனையின் உப்பரிகையை அடைந்து, அங்கிருந்து அவர்களை உதறிக் கீழேதள்ள, அவர்கள் கீழேவிழுந்தார்கள். உப்பரிகையை இடித்துத் தள்ளிவிட்டு அங்கதன் ஆகாயத்தில் தாவி, ராமர் இருக்குமிடம் போய்ச் சேர்ந்தான். ராமரின் அனைத்துப் படைகளும் முன்னேறி இலங்கையைப் பரி பூரணமாய் முற்றுகை இட்டன. நான்கு பக்கங்களிலும் கோட்டையை ஒட்டிக் கோட்டைச் சுவர்கள் போல் அடைத்துக் கொண்டு வந்து விட்ட வானரப் படையைக் கண்ட அரக்கர்கள், ராவணனிடம் ஓடிப் போய் இலங்கை முற்றுகைக்கு ஆளாகி விட்டது என்னும் தகவலைத் தெரிவிக்கின்றனர். ராவணன் வானர சேனை எவ்வாறு அழிப்பது என யோசனையில் ஆழ்ந்தான். ஆனால் ராமரோ எனில் தாமதம் செய்யாமல் எதிரிகளைத் தாக்குவோம் என உத்தரவு பிறப்பிக்கின்றார். கையில் கிடைத்த பாறைகள், பெரிய மரங்கள், மலைகளைப் பெயர்த்தெடுத்த கற்கள், சிறு மலைகள், குன்றுகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு வானரப் படை இலங்கையைத் தாக்க ஆரம்பித்தது. தாக்குதல் முழு அளவில் ஆரம்பித்தது.
வானரப் படையும், அதன் தலைவர்களும் அவரவருக்கு உரிய இடத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டனர். உள்ளே இலங்கை நகரிலும், ராவணன் படை வீரர்களை ஊக்குவித்து அனுப்பி வைக்கின்றான். சங்க முழக்கம் கேட்கின்றது. போர்ப் பேரிகை ஒலிக்கின்றது. எக்காளங்கள் ஊதப் படுகின்றன. அரக்கர்கள் ராவணனுக்கு ஜெயம் என்ற கோஷத்தோடு எதிர்த் தாக்குதலுக்குத் தயாராகி வருகின்றனர். தேர்களிலும், யானைகள் மீதிலும், குதிரைகள் மீதிலும் அரக்கர் படைகள் வருகின்றன. இந்திரஜித் அங்கதனையும், சம்பாதி, ப்ரஜங்கனையும், அனுமான், ஜம்புமாலியையும், விபீஷணன், சத்ருக்கனன் என்பவனையும், நீலன் நிகும்பனையும், சுக்ரீவன் ப்ரக்சனையும், லட்சுமணன், விருபாஷனையும் எதிர்க்கின்றனர். எண்ணற்ற வானர வீரர்களின் உடல்கள் கீழே விழுகின்றன. அதே போல் அரக்கர்களின் உடல்களும் வெட்டித் தள்ளப் படுகின்றன. ரத்த வெள்ளத்தில் உடல்கள் மிதந்து செல்கின்றன. சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னரும் கூட அரக்கர்கள் வலிமையுடனேயே வானரவீரர்களைத் தாக்குகின்றனர்.
தன்னைத் தாக்கிய இந்திரஜித்தின் தேரோட்டியும், தேர்க்குதிரைகளும் அங்கதனால் கொல்லப் படுகின்றனர். இந்திரஜித் களைப்புடன் போர்க்களத்தை விட்டு அகலுகின்றான். ராமர், லட்சுமணர், சுக்ரீவன், விபீஷணன் போன்றோர் அவனைப் போற்றினார்கள். அங்கதனால் துன்புறுத்தப் பட்ட இந்திரஜித்தோ கோபம் மிகக் கொண்டு தன்னுடைய மாயாவி யுத்தத்தில் இறங்கிவிட்டான். தன்னை மறைத்துக் கொண்டு, ராம, லட்சுமணர்களை அம்பு உருக் கொண்ட விஷப் பாம்புகளால் தாக்கினான். மனித சக்திகளை மீறிய சக்தி கொண்ட இந்திரஜித் தன்னுடைய இந்த அம்புகளால் ராமனையும், லட்சுமணனையும் கட்டிவிட்டான். சகோதரர்கள் இருவரும் மயங்கிக் கீழே விழுந்தனர். அம்பு உருக் கொண்ட பாம்புகளால் அவர்கள் உடல் துளைக்கப் பட்டது. ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. வானரப் படை செய்வதறியாது கலங்கி நின்றது.
**************************************************************************************
பெரும்பாலனவர்கள் இந்த ராமாயணத்தைப் படிப்பதில்லை. சிலர் தெரிந்த கதைதானே என்றும், வேறு சிலர் பத்துப் பதினைந்துக்கு மேல் படிக்க முடியவில்லை என்றும் சொல்கின்றனர். எனினும் உத்தர ராமாயணம் வரையிலும் பூராவும் எழுதி முடிக்கவே திட்டம்!!! ஆனால் நம்மில் பெரும்பாலோர் வால்மீகியின் மூலக் கதையை முழுதும் படித்திருக்க மாட்டோம், பெரும்பாலோருக்குத் தெரிந்தது கம்பரும், மற்றச் சில சுருக்கமான ராமாயணங்களுமே/ ஆனால் இது முழுக்க, முழுக்க வால்மீகியின் மூலத்தையே எடுத்துச் சொல்லும் ஒரு முயற்சி. அதற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய கம்பரை நன்கு அறிந்தவர்கள் அறிந்தது எல்லாம் ராமன் ஒரு அவதாரம் என்றே. ஏனெனில் கம்பர் ராமாயணம் பூராவுமே ராமரை ஒரு அவதாரம் என்றே குறிப்பிடுகின்றார். அதனாலேயே வாலி வதம் பற்றிய கேள்விகளும், சீதையின் அக்னிப் ப்ரவேசம் பற்றிய கேள்விகளும் எழுகின்றன.வாலியைக் கண்டு ராவணன் அஞ்சினான். வாலி ராவணனை வென்றிருக்கின்றான். ராவணன் பயந்த ஒரே ஆள் வாலி மட்டுமே. அத்தகைய வீரம் பொருந்திய வாலி, சீதையை, ராவணன் தூக்கிக் கொண்டு சென்ற போது, வாலியின் நாட்டின் வழியாகவே சென்ற போதும் அதைத் தடுத்து நிறுத்தவில்லை என்பதைத் திருமதி ஜெயஸ்ரீ அவர்கள் தம் பதிவில் சுட்டிக் காட்டி உள்ளார். அவரின் இந்த வாதம் ஓரளவு ஏற்கக் கூடியதே! ஏனெனில், தன்னை வீழ்த்தியதும், வாலியே ராமனிடம் சொல்கின்றான்:"தர்மச் சங்கிலியை அறுத்துவிட்டு, நன்னெறிக்கட்டுகளைத் தளர்த்திவிட்டு, நியாயம் என்ற அங்குசத்தையும் அலட்சியம் செய்துவிட்டு,மதம் பிடித்த ஒரு யானை போல் நடந்து கொண்டுவிட்ட ராமன் என்பவன் என்னை கொன்றுவிட்டானே? உனக்கு என்ன வேண்டும்? உன் மனைவி சீதை தானே?என்னிடம் சொல்லி இருந்தால் நான் ஒரே நாளில் கொண்டு வந்து சேர்த்திருப்பேனே? ராவணனைக் கழுத்தில் சுருக்குப் போட்டு இழுத்து வந்திருப்பேனே?" என்று ராமனைப் பார்த்துக் கேட்கின்றான். ஆகவே வாலி ராவணனைத் தடுக்காததின் காரணமாகவே ராமர் கொன்றிருக்கலாம் என்பது திருமதி ஜெயஸ்ரீயின் கூற்று. jeyasri
ஆனால் வால்மீகியோ தான் அறிந்த ஒரு மனிதனின் வாழ்க்கையையே தான் அறிந்தும், கேட்டும், பார்த்தும் தெரிந்து கொண்ட வரையில் எழுதி இருக்கின்றார். ஆகவே, ராமர் அவ்வாறு நடந்து கொண்டதிலோ, அல்லது சீதையோ, ராமரோ கைகேயியைக் குறை கூறிப் பேசும்போதோ சற்றும் யாருடைய கோபத்தையுமோ, அல்லது, பேச்சுக்களையோ கூட்டியோ, குறைத்தோ சொல்லவில்லை.ராமரோ, அல்லது சீதையோ இப்படி எல்லாம் பேசி இருப்பார்களா என்று போன அத்தியாயத்தைப் படித்தவர்கள் நினைக்கலாம். சாதாரண மானுடப் பெண்ணாக வாழ்ந்த சீதையும் சரி, ராமரும் சரி இப்படித் தான் பேசுவார்கள், பேச முடியும், என்பதை நினவில் கொள்ள வேண்டும்.
மேலும் அரசன் ஆனவன் எவ்வாறு தர்மம், கடமை, நீதி, நேர்மை, நியாயம் பொருந்தியவனாய் இருக்க வேண்டும் என்பதிலும் கடுமை காட்டியே வருகின்றது ராமாயணம் பூராவும். ராவணன் ஒரு வீரனாக இருந்தும், தன் குடி மக்களுக்கு நன்மையே செய்து வந்தும், அவன் தர்மத்தில் இருந்து தவறியதாலேயே அவனுக்கு இந்த வகையில் மரணம் ஏற்படுகின்றது. ஆகவே ஆட்சி புரிவோருக்கு ஒழுக்கம் என்பது முக்கியத் தேவையாக இருந்து வந்திருக்கின்றது என்பது நன்கு விளங்குகின்றது. அதை ஒட்டியே தோன்றி இருக்கும், "மன்னன் எவ்வழி, அவ்வழி மக்கள்" என்னும் கூற்று. ஒவ்வொருத்தரின் பிறப்புக்கும், இறப்புக்கும் தகுந்த காரணங்களையும் சொல்லி வருகின்றது இந்த ராமாயணக் கதை. அவரவர்கள் செய்யும் பாவத்துக்குத் தக்க தீய பலனும், செய்யும் புண்ணியங்களுக்குத் தக்க நற்பலனையும் கொடுத்தாலும் அவரவர்களுக்கு என்று விதிக்கப் பட்ட விதியை யாராக இருந்தாலும் மீற முடியாது. விதியின் பலனை அனுபவித்தே தீரவேண்டும் என்றும் சொல்கின்றது. தமிழில் இவ்வாறு ஊழ்வினையைச் சுட்டிக் காட்டும் காப்பியம் "சிலப்பதிகாரம்".
No comments:
Post a Comment