
ராவணனுக்கு ஒவ்வொருவரின் பலத்தையும், நன்கு புரியும் வண்ணம் எடுத்துக் கூறுகின்றனர், சுகனும், சாரணனும். அனுமனையும் சுட்டிக் காட்டி அவன் ஏற்கெனவே இலங்கைக்கு விளைத்திருக்கும் நாசத்தையும், அவன் ஒருவனாலேயே இலங்கையை அழிக்க முடியும் என்பதையும் நினைவில் கொள்ளுமாறும் கூறிவிட்டு, ராமனையும் காட்டுகின்றனர். சீதையின் கணவன் ஆன இந்த ராமனைப் பாருங்கள், தாமரைக்கண்ணன் ஆன இந்த ராமனை விடுத்து சீதை மற்றொருவரை மனதிலும் நினைப்பாளா? மேலும் பிரம்மாஸ்திரத்தை நன்கு கற்றறிந்ததோடு, வேதங்கள அனைத்தையும் அறிந்தவர். இவரின் அம்புகள் ஆகாயத்தையும் பிளக்கும் சக்தி வாய்ந்தவை என்று சொல்லிவிட்டு, அவருடன் இணை பிரியாமல் இருக்கும் லட்சுமணனையும் ராவணனுக்குக் காட்டுகின்றனர். ராமனின் நலனைத் தன் நலனாக நினைக்கும் இந்த லட்சுமணன் இருக்கும்வரையில் ராமனை யாராலும் வெல்ல முடியாது என்று கூறுகின்றனர். விபீஷணனையும் காட்டி, அவனுக்கு ராம, லட்சுமணர்கள் இலங்கை அரசனாக முடிசூட்டியதையும் சொல்கின்றனர். இவ்விதம் சொல்லிவிட்டு சுக்ரீவனையும், அவன் தலைமையில் வந்திருக்கும் வானரப்படைகளையும் காட்டி அதன் எண்ணிக்கையைச் சொல்வது கஷ்டம் என்றும் தெரிவிக்கின்றனர்.
அனைத்தையும் பார்த்தும், கேட்டும் கூட ராவணனின் மனம் அசைந்து கொடுக்கவில்லை. திரும்பத் திரும்ப அறிவுறுத்தப் பட்டதால் கொஞ்சம் கவலை அடைந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருவரையும் கோபத்தோடு பார்த்து, "எதிரிகளைப் புகழ்ந்து பேசும் இத்தகைய அமைச்சர்களைப் பெற்ற நான் உங்களைக் கொல்லவேண்டும், ஆனால் கொல்லாமல் விடுகின்றேன். ஏனெனில் இன்று வரை விசுவாசத்தோடு நீங்கள் வேலை செய்து வந்த காரணத்தாலேயே கொல்லாமல் விடுகின்றேன். உங்கள் நன்றி கெட்ட தன்மையே உங்களைக் கொன்றுவிட்டது." என்று சொல்லிக் கடுமையான வார்த்தைகளால் இருவரையும் கண்டிக்க, இருவரும் ராவணனை வெற்றி பெற வாழ்த்திவிட்டு அங்கிருந்து வெளியேறுகின்றனர். ராவணன் பின்னர் மஹோதரன் என்பவனை அழைத்து, வேறு நல்ல ஒற்றர்களை அழைத்து வரும்படி ஆணை இடுகின்றான். அந்த ஒற்றர்களிடம் ராமனின் திட்டம், எங்கே, எப்போது, எந்த இடத்தில் இருந்து எவ்வாறு தாக்கப் போகின்றான்? மற்றும் ராமனின், லட்சுமணனின் பழக்க, வழக்கங்கள், சாப்பாட்டு முறைகள், தூங்கும் நேரம், செய்யும் ஆலோசனைகள் அனைத்தையும் அறிந்து வந்து சொல்லுமாறு பணிக்கின்றான். ஆனால் இந்த ஒற்றர்களையும் விபீஷணன் சரியாக அடையாளம் கண்டு கொள்ள, ராமரோ இவர்களையும் விடுவிக்குமாறு கட்டளை இடுகின்றார். வானரர்களோ இவர்களையும் விடாமல் துன்புறுத்தவே, ஒருவழியாகத் தப்பித்த அவர்கள் ராவணனைச் சென்று அடைந்து, நடந்தவற்றைக் கூறிவிட்டு, சீதையை ஒப்படைத்து விடுங்கள், இல்லை எனில் யுத்தம் தான் என்று சொல்ல, ராவணனோ, சீதையை மீண்டும் அனுப்புவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று சொல்லி விட்டு, வானரப்படையின் விபரங்களைக் கேட்டு அறிந்து கொள்கின்றான். உடனடியாகத் தன் மற்ற சகோதரர்களை அழைத்து அடுத்துத் தான் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பேசி முடிவு செய்து கொள்கின்றான் ராவணன். பின்னர் அரண்மனைக்குள் சென்று மந்திர, தந்திரங்களில் தேர்ந்தவன் ஆன வித்யுத்ஜிஹ்வா என்பவனை அழைக்கின்றான்.

அவனிடம் ராமனின் தலையைப் போல் ஒரு தலையை உருவாக்கிக் கொண்டு வரச் சொல்கின்றான். அத்துடன் சிறப்பு வாய்ந்த வில்லும், அம்புகளும் கூடவே எடுத்துவரச் சொல்கின்றான். உடனேயே வித்யுத்ஜிஹ்வா அவற்றை உருவாக்க ராவணன் அவனுக்குப் பரிசளித்துவிட்டு அவற்றை எடுத்துக் கொண்டு சீதை இருக்கும் அசோகவனம் நோக்கி விரைகின்றான். தந்திரத்தால் எவ்வாறேனும் சீதையின் மனதைக் கவரவேண்டும் என நினைத்த ராவணன் சீதையிடம் சென்று, ஏற்கெனவே துன்பத்தில் மூழ்கி இருந்த அவளிடம் பேசத் தொடங்குகின்றான். "ஏ சீதா, நான் எவ்வளவோ சொல்லியும், ராமன் நினைவாகவே இருந்து வந்த உனக்கு ஒரு துக்கச் செய்தி, ராமன் என்னால் கொல்லப் பட்டான். உன்னுடைய நம்பிக்கை என்னும் ஆணிவேர் அறுக்கப் பட்டுவிட்டது. எந்த ராமனை நம்பி, நீ என்னை நிராகரித்தாயோ அந்த ராமன் யுத்தத்தில் கொல்லப் பட்டான். இனியாவது நீ என் மனைவியாவாய்! என்னைத் தாக்குவதற்கு என்று சுக்ரீவனால் திரட்டப்பட்ட பெரும்படையோடு, என் கடற்கரைப் பகுதியை ராமன் அடைந்தான். படைவீரர்கள் அனைவரும் களைப்பினாலும், கடும் பயணத்தினாலும் தூங்கி விட்டனர். என்னுடைய ஒற்றர்கள் நள்ளிரவில் அங்கே சென்று விபரங்களைத் திரட்டிக் கொண்டு வந்தனர். பின்னர் பிரஹச்தன் தலைமையில் சென்ற என்னுடைய பெரும்படையானது ராமனையும், லட்சுமணனையும், பெரும்படையோடு வந்த மற்ற வீரர்களையும் அழித்து, ஒழித்துவிட்டது. ராமனின் தலை பிரஹஸ்தனின் வாளால் துண்டிக்கப் பட்டது. விபீஷணன் சிறை எடுக்கப் பட்டான். லட்சுமணன் செய்வதறியாது ஓடி விட்டான். சுக்ரீவன் காலொடிந்து விழுந்தான். அனுமனோ எனில் கொல்லப் பட்டான். ஜாம்பவானும் கீழே விழ்ந்தான். மற்ற வானரர்கள் பயத்தில் கடலில் குதித்தி உயிரை விட்டு விட்டனர்." என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த அரக்கிகளில் ஒருத்தியிடம் சீதையின் காதில் விழுமாறு கீழ்கண்டவாறு சொல்கின்றான்.
"இந்த யுத்தத்தை நேரில் பார்த்துக் கொடுஞ்செயல்கள் பல புரிந்த வித்யுத்ஜிஹ்வாவை இங்கே வரச் சொல். உடனேயே கொல்லப் பட்ட ராமனின் குருதி வாய்ந்த தலையையும் கொண்டுவரச் சொல்." எனச் சொல்ல , வித்யுத்ஜிஹ்வா, கையில் வில், அம்புகளுடனும், அவனால் செய்யப் பட்ட போலி ராமர் தலையுடனும் அங்கே வந்து சேர்ந்தான். ராவணன், சீதையைப் பார்த்து, "பெண்ணே, வில்லைப் பார்த்தாயா? ராமனின் வில் இது. அந்த மானிடனைக் கொன்ற பின்னர் பிரஹஸ்தன் இந்த வில்லையும் எடுத்து வந்துவிட்டான். இனி நீ என் ஆசைக்கு இணங்குவதே நன்று.' எனக் கூறினான். சீதை அந்தத் தலையைப் பார்த்தாள். துக்கம் தாங்க முடியாமல் "ஓஓ" வென்று கதறி அழுதாள்.
//அந்த ஒற்றர்களிடம் ராமனின் திட்டம், எங்கே, எப்போது, எந்த இடத்தில் இருந்து எவ்வாறு தாக்கப் போகின்றான்? மற்றும் ராமனின், லட்சுமணனின் பழக்க, வழக்கங்கள், சாப்பாட்டு முறைகள், தூங்கும் நேரம், செய்யும் ஆலோசனைகள் அனைத்தையும் அறிந்து வந்து சொல்லுமாறு பணிக்கின்றான்//
ReplyDeleteயப்பாடா! எவ்ளோ யோசிச்சு இருக்காங்க!