
ராவணனை எதிர்க்க முடியாத மாரீசன் பணிந்து விடுகின்றான். ராவணன், தனக்கு இந்த வேலையை முடித்துக் கொடுத்த பின்னர் மாரீசன் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம் எனச் சொல்லுகின்றான். மேலும் என் அமைச்சர்களின் வேலையை நீ செய்ய வேண்டாம் எனவும் அவன் சொல்கின்றான். பின்னர் ராவணனுடைய தேரில் இருவரும் ஏறிக் கொள்ள பஞ்சவடி வந்தடைந்தனர் இருவரும். ராமனின் ஆசிரமம் அருகே வந்ததும், ராவணன், மாரீசனுக்கு ராமனின் ஆசிரமத்தை அடையாளம் காட்டி, "நான் சொன்னபடி நடந்து கொண்டாயானால் உனக்கு நல்லது, அப்படியே நடந்து கொள்வாயாக!" எனச் சொல்கின்றான். மாரீசன் தங்க மானாய் உருவெடுத்தான், நவ ரத்தினங்களால் இழைக்கப் பட்ட கொம்புகள், அந்த மானின் அழகைச் சொல்லி முடியாது, மூக்கின் மேல் ஒரு மாணிக்கம் ஒளி வீசியது! வயிற்றுப் பகுதியிலோ விலை உயர்ந்த வைரங்கள்! உடலெங்கும் வெள்ளியால் ஆன புள்ளிகள். புள்ளிமானா? கலைமானா? மொத்தத்தில் அந்த மாதிரியான மானை எங்குமே காணமுடியாது. அப்படிப் பட்ட ஓர் அற்புத மான் அது! ஆனால் என்ன ஆச்சரியம்? துள்ளிக் குதிக்கின்றதே? இதோ இங்கே ஓடுகின்றது? இது என்ன? திடீரெனக் காணோம்? ஓ, அங்கே ஒளி வீசுகின்றதே, அதுதான் மான் மறைந்திருக்கும் இடமோ? சூரியப் பிரகாசத்தை விடப் பிரகாசமாய், கோடி சூரியப் பிரகாசம் என்பார்களே, அது இதுதானோ? இவ்விதமெல்லாம் எண்ணினாள் சீதை அந்த மானைப் பார்த்ததும். அவள் கொண்ட உற்சாகத்துக்கு ஒரு அளவே இல்லை. மீண்டும், மீண்டும் அந்த மானைக் கண்டு மன மகிழ்வு அடைந்த அவள், ராமனைக் கூவி அழைத்தாள், "பிரபுவே, வாருங்கள், இங்கே விரைந்து வந்து இந்த அதிசயத்தைக் காணுங்கள்!" எனக் கூப்பிடுகின்றாள்.
அவள் கூக்குரலைக் கேட்டுவிட்டு ராம, லட்சுமணர் இருவருமே அங்கே வருகின்றனர். சந்தேக புத்தி கொண்ட லட்சுமணனுக்கு உடனேயே இதில் ஏதோ சூது என மனதில் படுகின்றது. வெளிப்படையாகத் தன் அண்ணனிடம் சொல்லவும் சொல்கின்றான். மேலும் இது மாரீசனாக இருக்குமோ என்ற எண்ணமும் அவனுக்கு உதிக்கின்றது. ஆனால் அதற்குள் சீதை, ராமனிடம் அந்த மானைத் தனக்குப் பிடித்துத் தருமாறு வேண்டுகின்றாள். அயோத்தி திரும்பும் வேளையில் அங்கே அந்தப் புரத்தை இது அழகு செய்யும் எனவும் சொல்கின்றாள். ராமரும் அந்த மாய மானின் வசப்பட்டவராகவே காணப் பட்டார். அவரும் லட்சுமணனிடம், "லட்சுமணா, நீ சீதைக்குக் காவல் இருப்பாயாக. இந்த மானை நான் பிடித்து வருகின்றேன். உண்மையிலேயே அற்புதம் ஆன இதை நான் பிடித்தல் எவ்வகையிலும் நியாயமே! அப்படியே நீ சொல்வது போல் இந்த மான் ஒரு அசுரனாக இருந்தால், அப்பொழுதும், இந்த மானை நான் பிடித்துக் கொல்வது முறையாகவும் இருக்கும் அல்லவா? நான் உயிரோடு பிடிக்கின்றேன், அல்லது அந்த மானைக் கொன்று விடுகின்றேன். நீ சீதைக்குத் துணையாக இங்கேயே இருப்பாய், ஜடாயுவும் உனக்கு உதவியாக இருப்பார். நான் விரைவில் வருகின்றேன்." என்று சொல்லிவிட்டு மானைத் துரத்திக் கொண்டு சென்றார்.

ராமரால் துரத்தப்பட்ட மான் அவரை அங்கும் இங்கும் அலைக்கழித்தது. ஒரு நேரம் நின்று கொண்டிருக்கும், ராமர் அருகில் போகும்வரை பேசாது இருந்துவிட்டுப் பின்னர் ஓடி விடும். ஒரு நேரம் மறைந்து இருந்து ராமரையே கவனிக்கும், ஒரு நேரம் கவனிக்காது போல் பாசாங்கு காட்டும். ராமர் பின் தொடருவது சர்வ நிச்சயம் ஆனதும் ஓடி மறைந்து கொள்ளும். இப்படியே போக்குக் காட்டிக் கொண்டிருக்க ராமர் கடைசியில் அலுப்பும், கோபமும் கொண்டு, தன் வில்லில் இருந்து ஓர் அம்பை எய்த அது அந்த மானைத் துளைத்தது. மாரீசன் சுயவுருவை அடைந்தான். எனினும் அத்தகைய நிலையிலும் தன் நினைவை இழக்காமல், ராவணனுக்கு உதவும் எண்ணத்துடன், "ஓ, சீதா, ஓ,லட்சுமணா!" என ராமனின் குரலில் கதறி ஓலமிட்டுவிட்டுப் பின்னர் உயிரையும் விட்டான். ராமனுக்கு லட்சுமணன் செய்த எச்சரிக்கை நினைவில் வந்தது. உடனே ஆசிரமம் திரும்பவேண்டும் என எண்ணிக்கொண்டே விரைவில் பர்ணசாலையை நோக்கி விரைந்தார். இந்த ஓலக் குரலைக் கேட்ட சீதை பதறினாள். ஆனால் லட்சுமணனோ பதறவில்லை. சற்றும் கலங்காமல் லட்சுமணன் நிற்க, சீதை அவனைப் பார்த்து, உடனே சென்று என்ன நடந்தது என அறிந்து வரச் சொல்கின்றாள். லட்சுமணன் அவளைத் தனியே விட மறுத்து விட்டு, ஜனஸ்தானத்து ராட்சதர்களை அண்ணன் வெற்றி கொண்டதால் அவர்கள் செய்யும் சூழ்ச்சி இது என்றும் கூறுகின்றான், ஆனால், சீதை ஒரு சாதாரணப் பெண் போல் அவனை இழித்தும், தூற்றியும் பலவாறு பேசுகின்றாள். அண்ணன் இல்லாத போது அவன் மனைவியை நீ அடைய நினைக்கின்றாயே, நீ உத்தமனா? உன்னை நம்பி உன் அண்ணன் என்னை ஒப்படைத்துவிட்டுப் போயிருக்கின்றாரே? அல்லது பரதனின் துர்ப்போதனையால் இவ்விதம் செய்கின்றாயா? ராமருக்கு மட்டும் ஏதாவது நடந்து அதன் பின்னரும் நான் உயிர் வாழ்ந்திருப்பேனா? உன் எண்ணம் ஈடேறாது." என்கின்றாள்.


மனம் நொந்த லட்சுமணன், "இந்தக் காட்டில் உள்ள அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் சாட்சியாக நான் பேசுவது சத்தியம். வீணே என் மீது அவநம்பிக்கை கொண்டு ஒரு சாதாரணப் பெண்போல் தாங்கள் இப்போது இயற்கையின் வசத்தினாலும், கோபம், துக்கம் போன்றவைகளின் வசத்தினாலும் என்னை இழிவாய்ப் பேசிவிட்டீர்கள். ஆனால் இது அழிவுக்கு அறிகுறி, நீங்கள் என் தாய்க்குச் சமம் ஆனவர்கள். கெட்ட சகுனங்களாகக் காண்கின்றேனே? என்ன செய்வது? தேவி, நான் இப்போது உங்களைத் தனியே விட்டுச் சென்றேன் என்றால் திரும்பக் காண்பேனா என்ற சந்தேகம் என் மனதில் மூண்டு விட்டதே?" என்று கதறுகின்றான். எனினும் புறப்பட ஆயத்தம் ஆகின்றான். சீதையை எவ்வளவோ சமாதானம் செய்ய நினைத்தும் ஒன்றும் முடியாமல் அவளை இரு கரம்கூப்பி வணங்கிவிட்டுக் கிளம்புகின்றான் இளவல். நேரமும் வாய்த்தது, வேளையும் நெருங்கிவிட்டது. காத்திருப்பானா ராவணன், வந்தான் ராவணன் ஒரு துறவி வேடம் தரித்து. காஷாய உடை, தலையிலே சடாமுடி, மரத்தினால் ஆன காலணிகள், கையிலே கமண்டலம், அவன் வருகையினால் பயந்து சூரிய, சந்திரர் விண்ணிலே தோன்றவில்லையோ என்னும் வண்ணம் காட்டிலே இருள் சூழ்ந்ததாம், அப்போது. காற்றுக் கூடப் பயத்தால் வீசவில்லை, மரங்களின் "மர்மர" சப்தம் கேட்கவில்லை, கோதாவரி கூடப் பயத்தால் தன் வேகத்தை மட்டுப் படுத்திக் கொண்டாளோ?
வாசலிலே வேத கோஷங்கள் கேட்கின்றதே? அழுதுகொண்டிருந்த சீதையைக் கண்ட ராவணன், மிகவும் தயவான குரலில், "அம்மா, நீ யார், யார் மனைவி, ஏன் அழுகின்றாய்? இப்படிப் பட்ட பேரழகுப் பெண்ணான நீ இந்தக் காட்டில் ஏன் இருக்கின்றாய்? ராட்சதர்கள் நடமாடும் இடமாயிற்றே இது?" என வினவுகின்றான். சீதையும் தன் கதையைக் கூறுகின்றாள். தானும், தன் கணவரும், பிதுர்வாக்ய பரிபாலனத்துக்காக வேண்டி காட்டுக்கு வர நேர்ந்ததையும், சொல்கின்றாள். உடனேயே ராவணன் அவளை நோக்கி, " நான் ராட்சதர் தலைவன் ஆகிய ராவணன் என்போன். இலங்கை என் தலைநகரம், என் முந்தைய மனைவிமார்களையும் பார்த்துவிட்டு இப்போது உன்னையும் பார்க்கும்போது அவர்களால் என் மனதில் மகிழ்ச்சியே உண்டாகவில்லை என எண்ணுகின்றேன். நீ என்னுடன் வந்துவிடு, சகல செளபாக்கியங்களுடன் உன்னை நான் வைத்திருக்கின்றேன் கிளம்பு, இலங்கை செல்லலாம்." எனச் சொல்கின்றான். கோபம் கொண்ட சீதை, ராமனுக்கும், ராவணனுக்கும்,மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்று கூறுகின்றாள். நீ என்னை உன் மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதன் மூலம் அழிவைத் தேடிக் கொள்கின்றாய்," என்றும் சொல்கின்றாள்.

ராவணன் மிகுந்த கோபத்தோடு, தந்தை சொன்னார் என்ற உடனேயே ராஜ்யத்தைத் துறந்து வந்ததில் இருந்தே உன் கணவன் கோழை எனவும், பலமில்லாதவன் என்பதும் புலனாகவில்லையா? இல்லை எனில் பரதனை எவ்வாறு உன் மாமன் ஆகிய தசரதன் தேர்ந்தெடுக்கின்றான். இத்தகைய மனிதன் ஒருவனால் நீ அடையப் போகும் சுகம் தான் என்ன? என் பலத்தை நீ அறிய மாட்டாய் என்று கூறிவிட்டுத் தன் சுயவுருவை அடைகின்றான். சீதையிடம் நான் உன்னை வற்புறுத்த மாட்டேன், எனினும் உன் கணவனை நான் மேன்மை அடைந்தவன் என்பதை உணர்வாய். ஒரு ராஜ்யத்தைத் தனது எனத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல், ஒரு பெண்ணின் வார்த்தைக்காகத் தன் சொந்தம், பந்தம், குடிமக்கள் அனைவரையும் விட்டுவிட்டு ஒரு மனிதன் காட்டில் வந்து ஜீவிக்கின்றான் என்றால் அவனை என்ன சொல்லுவது? அவன் உனக்கு ஏற்றவனே அல்ல, வா என்னுடன்!" என்று கூறிவிட்டுச் சீதையைத் தன் இடது கையினால் கூந்தலையும், தன்னுடைய வலது கையால் அவள் கால்களையும் பிடித்துத் தூக்கித் தன் புஷ்பக விமானத்தில் அவளை அமர்த்தினான். புஷ்பகம் பறக்க ஆரம்பித்தது. சீதை உரக்கப்பரிதாபமாகத் தன் கணவன் பெயரைச் சொல்லி, " ஓஓஓஓஓ ராமா" என்று அலறினாள். காட்டில் உள்ள மிருகங்கள் எல்லாம், அவனிடம் அஞ்சியது போல் ஓடி மறைய,தேவதைகள் பயத்துடன் ஒளிந்து கொள்ள, சூரியனும், சந்திரனும் மறையக் காற்று, அசைவின்றி நின்று போக காடே ஸ்தம்பித்தது.
புஷ்பகம் விண்ணில் கிளம்பியது.
ஸோ வால்மீகிபடி தொட்டு தூக்கித்தான் போனான் இல்லையா? லக்ஷ்மன் ரேகாவும் வால்மீகில இல்லை. சரி.
ReplyDelete//, சீதை ஒரு சாதாரணப் பெண் போல் அவனை இழித்தும், தூற்றியும் பலவாறு பேசுகின்றாள்.//
ReplyDeleteஅதென்ன "சாதாரண பெண் போல்"....அவதாரத்தில் அன்னை தன்னை எங்கும் காண்பித்துக் கொள்ளவில்லையே?
//லக்ஷ்மன் ரேகா//
ReplyDeleteஇது கடந்த 8-10 வருடங்களுக்குள்ளான ப்ராடெக்ட்... :)
anbu nanbaruku,
ReplyDeleteஸ்ரீராமனின் ஒருதார மண வாழ்க்கைக்கு ஆதாரம் கேட்டு ஒரு இசுலாமியர் கேள்வி எழுப்பி உள்ளார்! ( ஆர்குட் - தமிழ் ஹிந்து விவாத தளம்.) கமபன் இயற்றியுள்ள பாடல்களில் ராமனின் இல்வாழ்கை குறித்து சொன்ன பாடல்கள் எவை என்பதை குறிப்பிட்டு அனுப்பினால் நன்றி உடையவனாக இருப்பேன்!
தாங்கள் அந்த விவாததில் கலந்து கொள்ள முடிந்தாலும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே! உங்கள் ஈமெயில் id வழங்கினால் உங்களுக்கு அழைப்பு விடுகிறேன்! if the presence scholars like u there, may help those people to make understand our culture.
my id : rajesh14031972@gmail.com
நன்றி,
கண்ணா.