எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 19, 2008

கதை கதையாம் காரணமாம் ராமாயணம்,


கொஞ்சமே கொஞ்சம், கம்பரையும், அருணகிரியையும் பார்த்துவிட்டு மேலே தொடரலாம். ஏனெனில் பின்னால் வரக் கூடிய அக்னிப்ரவேச நிகழ்ச்சிகளுக்கும், தற்சமயம் வால்மீகியிலும் அனுமன் "கண்டேன் சீதையை" என்னும் வண்ணமே சொல்லி இருக்கின்றானா என்றும் தெரிந்து கொண்டே செல்லலாம் என்ற எண்ணம். பலருக்கும் கம்பராமாயணப் பரிச்சயமே உள்ளது என்று இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கின்றது. ஆகவே தான் சில சம்பவங்களையும், குறிப்புகளையும் வால்மீகி எழுதியபடி எழுதினால் கொஞ்சம் முரணாய்த் தோற்றம் அளிக்கின்றது. உதாரணமாய் ராவணன் - சீதை அசோகவனச் சந்திப்பின் போது ராவணன் சீதையிடம் ராமனைக் கொன்று விட்டு உன்னைக் கொண்டு வந்திருந்தேனானால், நீ உயிர் தரித்திருக்கமாட்டாய், நானும் உயிர் தரித்திருக்க மாட்டேன் என்று ராவணன் சொல்லுவதாய்க் கம்பர் சொல்லுகின்றார். அதனாலேயே வஞ்சகமாய் சீதையைக் கடத்திவந்ததாய்ச் சொல்லுவான். மேலும், லட்சுமணனைப் பழித்துப் பேசியது பற்றியும் வால்மீகி ராமாயணத்தில் சீதை வருந்துவதாய் எந்தத் தகவலும் இல்லை. ஆனால் கம்பர் அதுபற்றிக் குறிப்பிடுகின்றார்:
"என்னை, நாயகன், இளவலை, எண்ணலா வினையேன்
சொன்ன வார்த்தை கேட்டு, "அறிவு இலள்" எனத் துறந்தானோ!
முன்னை ஊழ்வினை முடிந்ததோ?" என்று என்று முறையால்
பன்னி, வாய் புலர்ந்து, உணர்வு தேய்ந்து ஆர் உயிர் பதைப்பாள்" என்று சீதை புலம்புவதைக் குறிப்பிடுகின்றார்.

சூடாமணியைத் தன் தலையில் இருந்தே சீதை கழற்றிக் கொடுப்பதாய் வால்மீகி கூறக் கம்பர் புடவைத் தலைப்பில் இருந்து அவிழ்த்துக் கொடுப்பதாயும், அனுமனைச் சிரஞ்சீவியாய் இருப்பாய் என்று ஆசீர்வதிப்பதாய்க் கூறுகின்றார். ஆனால் வால்மீகியில் அவ்வாறு இல்லை. வால்மீகிதான் மூலம் என்பதை நினைவில் இருத்திக் கொண்டு படிப்பது கொஞ்சம் வசதியாக இருக்கும். அருணகிரி நாதரும் சுந்தரகாண்டத்தைப் பற்றிய வர்ணனையில் தன் கதிர்காமத் திருப்புகழில் கீழ்க்கண்டவாறு சொல்கின்றார். "உடுக்கத் துகில்" என ஆரம்பிக்கும் அந்தத் திருப்புகழில் நாலாதிசைகளுக்கும் சுக்ரீவன் ஆட்களை அனுப்புவதைச் சொல்கின்றார் இவ்விதமாய்:
குடக்குச் சிலதூதர் தேடுக
வடக்குச் சிலதூதர் நாடுக
குணக்குச் சிலதூதர் தேடுக ...... வெனமேவிக் // இவ்விதம் மேற்குத் திசை, வடக்குத் திசை, கிழக்குத் திசையைக் குறிப்பிட்டுவிட்டுக் குறிப்பில் குறி காணும் மாருதி என அனுமனைச் சிறப்பித்தும் கூறுகின்றார். "இனித் தெற்கொரு தூது" என்பதை ஒரு உரை ஆசிரியர் இருவிதமாய்ப் பொருள் கொள்ளலாம் எனவும் சொல்கின்றார். இனி தென் பகுதிக்கு ஒரு தூது என்பதோடு அல்லாமல், ராமன் ஆஞ்சநேயனின் தூதைப் பற்றி, " இனித்து எற்காக ஒரு தூது" என்று தனக்காக அனுமன் மன மகிழ்ச்சியோடு செல்லுவதாய்க் கூறுவதாயும் ஒரு பொருள் சொல்லுகின்றார்.

//குறிப்பிற் குறிகாணு மாருதி
யினித்தெற் கொருதூது போவது
குறிப்பிற் குறிபோன போதிலும் ...... வரலாமோ//

அதே போல் சம்பாதி கொடுத்த குறிப்பின்படி சீதை இருக்குமிடம் தெரிந்தும், ஒரு கணம், ஒரே கணம் மண்டோதரியைச் சீதை என அனுமன் நினைத்துத் தடுமாறுவதையும், இங்கே "குறிப்பில் குறி போனபோதிலும்" என்ற வரிகள் சொல்லுவதாய்த் தெரிய வருகின்றது. பாடலின் கடைசியில், கடல் கடந்து சென்ற அனுமன், அசோகவனத்தில் சீதையைக் கண்டு, ராமனின் கணையாழியைக் கொடுத்து, சீதையிடம் இருந்து சூடாமணியைப் பெற்று வந்த தகவல்கள் சொல்லப் பட்டிருக்கின்றன.

//அடிக்குத் திரகார ராகிய
அரக்கர்க் கிளையாத தீரனு
மலைக்கப் புறமேவி மாதுறு ...... வனமேசென் //

எவருக்கும் அஞ்சாத அனுமன் மாது உறையும் வனமான அசோகவனம் செல்லுவதையும், அங்கே கணையாழி கொடுப்பதையும், இந்தத் திருப்புகழ் சுட்டிக் காட்டுகின்றது.

//றருட்பொற் றிருவாழி மோதிர
மளித்துற் றவர்மேல் மனோகர
மளித்துக் கதிர்காம மேவிய ...... பெருமாளே//

சீதை ராமனைத் தவிர, யாரையும் தீண்ட மாட்டேன் என்று அனுமனிடம் சொன்னதையும், ராவணன் பலவந்தமாய்த் தூக்கி வந்தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டுமாய்க்கேட்டுக்கொள்கின்றேன். இனி யுத்த காண்டம் தொடரும்.

திரும்பி ஒரு முறை அனைத்தையும் பார்த்துக் கொள்வதற்காக இந்தப் பதிவு. நன்றி.

2 comments:

 1. கீதாம்மா

  உங்கள் ராமாயணப் பதிவுகளில் பின்னூட்டத் தான் நேரமில்லை!
  அதுக்காகப் படிக்காமப் போய் விடுகிறேன்-னு தப்புக் கணக்கு போட்டுறாதீங்க!

  சென்னையில் இருந்து பூத(த்தாழ்வார்) கண்ணாடி வாங்கிக்கிட்டு வந்திருக்கேன்-ல! :-))

  நல்ல ஒப்புமைப் பதிவு கீதாம்மா!
  அருணகிரியார் பல திருப்புகழ்களில் ராமாவதார, கிருஷ்ணாவதார நிகழ்ச்சிகளை அள்ளித் தெளித்திருப்பார்!

  அதை நீங்களும் இடத்துக்குத் தக்கவாறு அழகா எடுத்தாண்டு இருக்கீங்க!

  பின்னாளில் வரப் போகும் அருணகிரியின் ஆழ்மனசு என்னும் என்னுடைய பதிவுக்கே உங்களின் இந்தத் தொடர் தான் ready reckoner ஆக இருக்கப் போவுது பாருங்க! :-))

  ReplyDelete
 2. திவா ஏதோ சொல்லியிருந்தாரேன்னு தேடிப் பிடிச்சு இங்க வந்தேன் :))

  ஆமாம், நானும் கூட பின்னூட்டமிடறதில்லையே தவிர படிக்கிறேன்...

  எனக்கு ஏதும் ஆழமா தெரியாதுங்கறதால கேள்வி கேட்பதில்லை...

  இனி வேணா உள்ளேன்ம்மா சொல்லிடவா :))

  ReplyDelete