ராமன் அளித்த கணையாழியைப் பெற்றுக் கொண்ட அனுமன், அங்கதன், மற்ற வானர வீரர்களுடனேயே தென் திசை நோக்கிப் பயணம் ஆனான். சுக்ரீவனால் வடக்கு, மேற்கு, கிழக்குத் திசைக்கு அனுப்பப் பட்டவர்கள் ஒவ்வொருவராய்த் திரும்பி வர ஆரம்பித்தனர். எல்லாரும் சுக்ரீவனால் சொல்லப் பட்ட அனைத்து இடங்களிலும் அலைந்து திரிந்த போதிலும் சீதையைக் கண்டு பிடிக்க முடியாதவர்களாய் ஏமாற்றத்துடன் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டவராய்த் திரும்பி வர ஆரம்பித்தனர். தென் திசைக்குச் சென்ற அனுமன், ஜாம்பவான், அங்கதன் போன்றோர் திரும்பி வராததால் ஒருவேளை அவர்கள் மூலமாய் நல்ல செய்தி கிட்டலாம் என்ற நம்பிக்கையும் இருந்தது. அனுமனோடு சேர்ந்து தென் திசையில் தேடுதல்களை நடத்தியவர்களும் வெற்றி காணமுடியாமல் மனச் சோர்வை அடைந்தனர். அப்போது மிக்க மனச் சோர்வு அடைந்த அவர்கள் தலைவன் ஆன அங்கதன் அனைவரையும் கூப்பிட்டு, வயதில் மூத்த வானரங்களுக்குத் தக்க மரியாதை செலுத்திவிட்டுப் பின்னர் சொல்லுவான்: ஒரு மாதம் ஆகியும் நம்மால் இன்னும் சீதையைக் கண்டு பிடிக்க முடியவில்லை. நாம் சுக்ரீவனிடம் இதை எப்படிச் சொல்லுவது? இரும்புக்கரம் கொண்டு நிர்வாகம் செய்து வரும் நம் மன்னர் இதை எப்படி ஒத்துக் கொள்ளுவார்? நம்மை எல்லாம் கடும் தண்டனைக்கு உள்ளாக்குவார் என்பதில் சந்தேகமே இல்லை. சுக்ரீவனிடம் நம் தோல்வியை ஒத்துக் கொண்டு மரணதண்டனை பெறுவதை விட நாம் இங்கேயே உணவு கொள்ளாமல் வடக்கிருந்து உயிர் விட்டு விடலாம் என ரொம்பவே மனம் சோர்வடைந்து பேசினான்
அவன் சொன்னதைக் கேட்ட மற்ற வானரங்களும் அதில் உள்ள உண்மையை உணர்ந்து கொண்டு அதை ஏற்றனர். தவறு செய்தவர்கள் நாம், தலைவன் முன்னிலையில் சென்றால் கட்டாயம் தண்டனை அடைவோம். அவ்வாறு தண்டனை அடைந்து நாம் உயிர் விடுவதை விட இங்கிருந்தே உயிரை விட்டு விடலாம்.என்று அனைவரும் மனம் சமாதானம் அடைந்து உயிர் விடத் தயார் ஆனார்கள். அனுமன் அனைத்தையும் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்தார். வாலி மைந்தன் ஆகிய திறமை மிக்க அங்கதன், சிற்றப்பன் மீது கொண்ட அச்சத்தாலும், வெறுப்பாலும் இவ்வாறு பேசுகின்றான். சுக்ரீவன் சொன்னதை அவன் செய்யும் வண்ணம் அவனை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராய்ப் பேசத் தொடங்கினார்."அங்கதா, உண்மையில் நீ சுக்ரீவனை விடச் சக்தி உள்ளவன். அண்ணன் அனுமதித்ததாலும், வயதில் மூத்தவன் என்பதாலும் சுக்ரீவன் ஆட்சி புரிகின்ற இந்தக் கிஷ்கிந்தைக்கு நீ நாளைக்கு அரசனாகப் போகின்றவன். இப்போது உன்னை ஆதரிக்கும் இந்த வானரர்கள் தொடர்ந்து ஆதரிப்பார்கள் என்பது என்ன நிச்சயம்? அனைவருக்கும் அவர்கள் மனைவி, மக்கள் நினைவுக்கு வந்தால் உன் பக்கம் திரும்பக் கூட மாட்டார்கள். ஆகவே நாம் கிஷ்கிந்தை திரும்பி நடந்தது, நடந்தபடிக் கூறுவோம்!" என்று சொல்கின்றார். எனினும் சுக்ரீவனிடம் அங்கதனுக்கு உள்ளூற உள்ள வெறுப்பும், பயமும் போகாததாலும், அரசனாகவேண்டும் என்பதற்காகவே தன் தகப்பனைக் கொல்ல ஏற்பாடு செய்தான் என்ற எண்ணம் முழுமையாக அவனை விட்டுப் பிரியாததாலும் அங்கதன் மற்ற வானரவீரர்களை அனுமனோடு போகச் சொல்லிவிட்டுத் தான் மட்டும் அங்கேயே உயிர் துறக்கப் போவதாய்ச் சொல்கின்றான். அங்கதனின் முடிவைக் கேட்ட விசுவாசம் மிக்க வானர வீரர்கள் வாலிமைந்தன் ஆன அவனைத் தாங்கள் தனியே விடமாட்டோம் எனச் சொல்லிவிட்டு அவர்களும் உயிர் விடத் தீர்மானித்தனர்.
அப்போது தங்களுக்குள்ளேயே ராமனின் சரிதத்தைப் பற்றியும், தற்சமயம் சீதை ராவணன் வசம் இருப்பதையும், இருக்குமிடம் தெரியாமல் தாங்கள் தவிப்பது பற்றியும் பேசிக் கொண்டனர். அது சமயம் அங்கே ஒரு மலைக்குகையில் வசித்து வந்த ஒரு வயதான கழுகு இவர்கள் பேச்சைக் கேட்டுவிட்டு, உரத்த குரலில், "யார் அது? ஜடாயு என என் தம்பியைப் பற்றிப் பேசுவது?" என்று கேட்க வானரர்கள் அனைவரும் அங்கே சென்று ஒரு வயதான கழுகு படுத்திருப்பதைக் கண்டனர். அந்தக் கழுகானது தான் ஜடாயுவின் மூத்த சகோதரன் சம்பாதி என்ற பேர் உள்ளவன் என்று சொல்கின்றது. தானும், ஜடாயுவும் தங்களில் யார் வல்லமை உள்ளவர்கள் என்றறியும் போட்டியில் சூரியனைச் சுற்றிப் பறக்கும் வேளையில், ஜடாயு களைத்துப் போய்விடவே, சூரிய கிரணங்களின் கொடுமையில் இருந்து ஜடாயுவைக் காக்க வேண்டித் தன் சிறகால் அவனைத் தான் மூடியதாகவும், அந்த வெப்பத்தில் தன் சிறகுகளை இழந்ததாயும், அது முதல் தன்னால் பறக்க முடியவில்லை எனவும் சொல்கின்றது. தான் அப்படிக் காத்த தன் தம்பியா இறந்துவிட்டான் எனக் கேட்டுவிட்டுத் துக்கத்தில் ஆழ்ந்தது. பின்னர் ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு, ஒரு நாள் தனது மகன் தனக்கு உணவு தேடிப் போயிருக்கும் நேரம் தன் மகன் கண்டதாய் ஒரு நிகழ்ச்சியைச் சொல்கின்றது. ஒளி பொருந்திய ஒரு பெண்மணியை ஒரு ராட்சசன் ஒரு விமானத்தில் ஏற்றிச் சென்றதாயும் அந்தப் பெண்ணின் அபயக் குரல் கேட்டுத் தான் வழி மறித்த போது அவன் வழி விடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளவே எதிர்த்துப் போரிடாமல் வழிவிட்டுவிட்டதாயும் சொன்னான் என் மகன் என்று அந்தச் சம்பாதிக் கழுகு வானர வீரர்களிடம் சொல்லியது. அது அநேகமாய் நீங்கள் சொல்லும் சீதை தேவியாய்த் தான் இருக்கும் என்றும் சொல்லியது.
*************************************************************************************குமரன் கூனியின் முதுகில் இருந்த உண்டிவில் பற்றிய சந்தேகத்தை எழுப்பி இருக்கின்றார். ஆழ்வார்கள் பாடலில் அது பற்றிய குறிப்புகள் இருப்பதாயும் தெரிவித்து இருக்கின்றார். ஆனால் வால்மீகியில் அது பற்றி எதுவும் இல்லை. ஆழ்வார்கள் காலம் கம்பருக்கு முன்னால் என்பதால் எனக்கும் கொஞ்சம் சந்தேகம் இருக்கின்றது. கொஞ்சம் ஆராய்ந்து பார்த்துவிட்டுத் தான் சொல்லவேண்டும். கபீரன்பன் வாலியின் பலத்தில் பாதி எதிராளிக்கு வந்து விடும் என்று சொல்லி இருப்பதும் வால்மீகியில் இல்லை. அது பற்றி வேந்தருக்கு நான் அளித்த பதில் இதோ!
இல்லை வேந்தரே, வாலி அம்மாதிரியான எந்த வரமும் பெற்றிருக்கவில்லை, வால்மீகியின் கூற்றுப்படி,! இந்திரனால் அளிக்கப் பட்ட சங்கிலி ஒன்றே அவன் கழுத்தை அலங்கரிக்கின்றது. அதுவும் வெற்றித் தேவதை என்றே கொண்டாடப் படுகின்றது. தான் உயிரை விட்டதும், சங்கிலியைக் கழற்றி சுக்ரீவன் எடுத்துக் கொள்ள நேர்ந்தால் அதன் சக்தி முழுமையும் கிடைக்காது எனத் தன் உயிர் ஊசலாடும்போதே அதைக் கழற்றித் தம்பிக்குக் கொடுக்கின்றான் வாலி. இதை அதிகம் விளக்கமாய் எழுதவில்லை, ஏற்கெனவே பதிவுகள் நீளம் என்றொரு புகார் இருப்பதால்! :))))))))))
No comments:
Post a Comment