எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, May 09, 2008

கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 39


சுக்ரீவன் கை கூப்பித் தொழுதும் கோபம் அடங்காத லட்சுமணனைத் தாரையே மீண்டும் சமாதானம் செய்கின்றாள். இந்த அரசும், சுக்ரீவன் மனைவியான ருமையும் அவனுக்குத் திரும்பக் கிடைத்ததற்கு ராமன் தான் காரணம் என்பதை சுக்ரீவன் மறக்கவில்லை என்றும், இத்தனை நாட்கள் கஷ்டப் பட்டுவிட்டு இப்போது சுகபோகம் அனுபவிக்கும்போது காலம் சென்றதைச் சற்றே மறந்துவிட்டான் எனவும், வானரர் படையைத் திரட்டுவதில் சுக்ரீவன் முனைந்திருப்பதாயும் சொல்கின்றாள். படை வந்து சேர்ந்ததும் உடனேயே சீதையைத் தேட ஆட்கள் அனுப்பப் படுவார்கள் எனவும் சொல்கின்றாள். பின்னர் சமாதானம் ஆன லட்சுமணனோடு, சுக்ரீவனும் ஏற்கெனவே வந்து சேர்ந்த படை வீரர்களோடு ராமனைக் காணச் சென்றனர். படைவீரர்களோடு வந்த சுக்ரீவனைப் பார்த்த ராமர் மனம் மகிழ்ந்து சுக்ரீவனைப் பார்த்து,"உன் உதவியோடு நான் எதிரியை வீழ்த்தி விடுவேன், சந்தேகம் இல்லை!" என்று கூறுகின்றார். மேலும், மேலும் வானரப் படைகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. சுக்ரீவன் மனைவியான ருமையின் தகப்பன் தாரன், தாரையின் தகப்பன் சுசேனன், ஹனுமனின் தந்தை கேசரி, போன்ற பெரும் வீரர்கள் தங்கள் தலைமையில் இருந்த பெரும் படைகளுடன் வந்து சேர்கின்றார்கள்.

ராமன் அனைவரையும் பார்த்துப் பேசத் தொடங்குகின்றார். "சீதை உயிருடன் இருக்கின்றாளா இல்லையா எனவே தெரியவில்லை. முதலில் அது அறியப் படவேண்டும், ராவணன் அவளை எங்கே கொண்டு சென்று வைத்திருக்கின்றான் என்பதும் அறியப் படவேண்டும். இவை தெரிந்ததும், நாம் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்ற முயற்சியில் இறங்கலாம்." என்று கூறிவிட்டு, சுக்ரீவனைப் பார்த்து இதற்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றார். சுக்ரீவனும் அது போலவே வினதன் என்பவனை அழைத்து கிழக்குப் பகுதிகளுக்குச் சென்று தேடுமாறும், எல்லாப் பகுதிகளுக்கும் சென்று தேடிவிட்டு ஒரே மாதத்தில் திரும்ப வந்து தகவல் தெரிவிக்கவில்லை எனில் மரண தண்டனை எனவும் சொல்கின்றான். பின்னர் அங்கதன் தலைமையில் அனுமன், நீலன் ஆகியோரைத் தென் பகுதிகளுக்குச் சென்று தேடுமாறு கூறுகின்றான், அதே நிபந்தனைகளுடன். வடக்கே செல்ல சதபலியையும், மேற்கே செல்ல சுஷேணனையும் நியமிக்கின்றான் சுக்ரீவன். எனினும் அனுமனிடம் மட்டுமே அதிக நம்பிக்கை வைக்கின்றான் சுக்ரீவன். அனுமனைப் பார்த்து அவன், "வாயு புத்திரன் ஆன நீ, ஆகாயம், நீர், மலைகள், பூமி போன்ற அனைத்து இடங்களிலும் சஞ்சாரம் செய்யும் வல்லமை உள்ளவன். உன் தகப்பன் ஆகிய வாயுவைப் போல் அந்த வேகத்துடன் கூடிய ஆற்றலையும் கொண்டவன் நீ. உன் பலத்துக்கு ஈடு இங்கு யாரும் இல்லை. மன உறுதியிலும், முன் யோசனையிலும் நீ நிகரற்றவன். உன் விவேகமும் பெயர் பெற்றது. அரச காரியங்களை நிறைவேற்றும் திறமையும், சாமர்த்தியமும் கொண்டவன் நீ. உன்னைத் தான் நான் நம்பி உள்ளேன்." என்று சொல்கின்றான்.

அனுமனைக் கண்டதில் இருந்தே ராமன் மனதிலும் அதே எண்ணங்கள் தோன்றிக் கொண்டிருந்தமையால், அவரும் மிக்க மன நிறைவுடன் தன் கையில் இருந்து தன் பெயர் கொண்ட ஒரு மோதிரத்தைக் கழற்றிக் கொடுக்கின்றார். "இந்த மோதிரத்தைப் பார்த்தால் சீதை நீ என்னிடம் இருந்து வந்திருக்கின்றாய் எனப் புரிந்து கொள்வாள். சுக்ரீவன் வார்த்தைகள் எனக்கு மிக்க நம்பிக்கை அளிக்கின்றது. வீரனே, வாயு புத்திரனே, நீ உன் வீரத்தினாலும், திறமையினாலும் எடுத்த காரியத்தை வெற்றிகரமாய் முடிப்பாய் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டு விட்டது." என்று கூறுகின்றார். மிகுந்த பணிவோடு அந்த மோதிரத்தை ராமனிடம் இருந்து பெற்றுக் கொண்ட அனுமன், அங்கதனோடு தென் திசை நோக்கிக் கிளம்புகின்றார். சுக்ரீவன் ஒவ்வொரு திசைக்கு ஒவ்வொருவர் தலைமையில் வானரப் படை வீரர்களை அனுப்பும்போது அந்தத் தளபதிகளிடம் அந்த அந்தத் திசைகளின் ஆறுகள், மலைகள், வனங்கள், சீதோஷ்ணங்கள், குடிமக்கள் ஆகியவற்றைப் பற்றி விவரமாய் எடுத்துக் கூறியதைக் கண்ட ராமர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். சுக்ரீவனிடம் இது பற்றிக் கேட்டபோது வாலியினால் துரத்தப் பட்ட தான் எங்கும் தங்க முடியாமல் உலகம் பூராவும் சுற்ற நேர்ந்தது பற்றியும் ஒவ்வொரு மூலைக்கும் சென்ற போது இந்த விவரங்கள் அனைத்தும் தெரிய வந்ததாயும், கடைசியில் ரிச்யமூக மலைக்கு வாலி வந்தால் அவன் தலை சுக்கு நூறாய் வெடிக்கும் எனத் தெரிந்து கொண்டு அங்கே வந்து தங்கியதாயும் எடுத்துக் கூறுகின்றான்.

பெருத்த ஆரவாரத்தோடு படை கிளம்புகின்றது. நாலா திக்குகளிலும் வானரங்கள் செல்கின்றனர்.
*************************************************************************************

வானரங்கள் சென்று சீதையைத் தேடுமுன்னர், சுக்ரீவன் வர்ணித்த நான்கு திசைகளிலும் நமக்கு முக்கியமான தென்பகுதியின் வர்ணனையைப் பார்ப்போம். அங்கதன் தலைமையில் சென்ற தென்பகுதி வீரர்களில், நீலன், அனுமன் போன்றவர் இருந்தனர் என்பதை ஏற்கெனவே கண்டோம். தென்பகுதியில் இருப்பவையாக சுக்ரீவன் சொன்னது:
விந்திய பர்வத மலைச்சாரல், நர்மதா நதி தீரம், கோதாவரி நதி தீரம், நகரங்களும், நாடுகளும், "மேகலா, அவந்தி, உத்கலம், தர்சனா, விதர்ப்பம், அஸ்வந்தி, ரிசிகா, பங்கம், கலிங்கம், ஆந்திரம், கெளசிகம், தண்டகாரண்யக் காடுகள், புந்திரம், சோழ, சேர நாடுகள், அயோமுகா மலை, காவேரி நதி தீரம், அகத்தியரின் இருப்பிடம் ஆன பொதிகை, பாண்டிய சாம்ராஜ்யம், தாமிரபரணி நதி தீரம், ஆகியன. இந்தப் பாண்டிய சாம்ராஜ்யம் என்பது சோழ, சேர நாடுகளைத் தாண்டி பெரிய அளவில் இருந்ததாயும் முத்துக்கள் அப்போதும் பெருமை பெற்றிருந்தன எனவும் தெரிய வருகின்றது.

அடுத்து வினதன் சென்ற கிழக்குப் பகுதியின் வர்ணனை:மலைகள், காடுகள்,பாகீரதி, சரயூ, கெளசிகீ, யமுனை, சரஸ்வதி, சிந்து, சோன், மாஹி, காலமாஹி. அரசு புரிந்த நாடுகள்: ப்ரம்ம மாலா, மாலவம், கோசலம், காசி, மகதம், புந்தரம், அங்கம், பட்டு உற்பத்தி ஆகும் இடம் எனவும் கூறுகின்றது. வெள்ளிச் சுரங்கம் இருந்ததாயும் கூறுகின்றது. மந்தரமலையில் இவை கிடைத்ததாய்ச் சொல்லும் வால்மீகியில் மேலும் செங்கடல் பற்றியும் சொல்லப் படுகின்றது. வெண்மையான பாற்கடல் இருந்ததாயும் சொல்கின்றது.

மேற்கே சென்ற சுஷேணன் செளராஷ்டிரம், பாலிகா, சுரா, பீமா, மலை சூழ்ந்த பகுதிகள், கடல் சூழ்ந்த பகுதிகள், மேற்குக் கடல் பகுதிகளும், பாலைவனங்களும் அங்கே கிடைக்கும் தேங்காய், பேரீச்சை போன்ற பழ வகைகள் பற்றியும் மரீசிப் பட்டினம் பற்றியும் சிந்து நதி அங்கே தான் கடலில் கலந்ததாயும் சொல்கின்றது.

வடக்கே சென்ற சதமாலி இமயமலைத் தொடர்களையும், அங்கே வசிக்கும் மிலேச்சர்கள் என்பவர்கள் பற்றியும் கூறுவதோடு மஞ்சள் நிறம் உள்ள சீனர்களையும் சொல்லி, அங்கேயும் தேடச் சொல்கின்றான் சுக்ரீவன். கைலை மலை பற்றியும் அது செல்லும் வழி பற்றிய விபரங்களும், (ராமாயண காலம் போல் தான் இப்போவும் கைலை செல்லும் வழி உள்ளது), நிலம் வளமற்றுப்பாசனத்துக்கு லாயக்கில்லாமல் பல மலைகள் தரிசாய்க் கிடப்பதையும், மனிதர் அங்கே அதிகம் வசிப்பதில்லை எனவும் கூறுகின்றது.

2 comments:

  1. //மஞ்சள் நிறம் உள்ள சீனர்களையும் சொல்லி, அங்கேயும் தேடச் சொல்கின்றான் சுக்ரீவன். //

    ஓ..ஆச்சர்யமா இருக்கே:)

    ReplyDelete