துயருற்றிருந்த சீதையின் முன்னர் தாம் திடீரெனப் போனால் விளையும் விளைவுகளை எல்லாம் புத்திமான் ஆன அனுமன் நன்கு யோசித்துத் தெளிந்தார். "நாமோ ஒரு வானரன். தற்சமயம் உருவோ சிறியதாய் இருக்கின்றோம். பேருருவை எடுத்துச் சென்றாலும் சீதை பயப்படுவாள். அவளுக்குத் தாம் ராமனிடமிருந்துதான் வந்திருக்கின்றோம் எனத் தெளியவும் வேண்டுமே? ஆகவே, நாம் நடந்த கதையை ஒருவாறு நாம் அறிந்தது, அறிந்தபடி சொன்னோமானால், முதலில் சீதையின் நம்பிக்கையைப் பெறலாம். ஆகவே ராமனின் சரித்திரத்தைச் சொல்லலாம் என நினைத்துச் சொல்ல ஆரம்பிக்கின்றார், மிருதுவான குரலில். தசரதகுமாரன் ஆன ராமன், மிகச் சிறந்த வில்லாளி, மனிதர்களில் உத்தமர், தர்மத்தின் காவலர், என ஆரம்பித்து, மிகச் சுருக்கமாய் ராமன் பட்டாபிஷேகம் தடைப்பட்டு, ராமன் வனம் வர நேரிட்ட கதையையும், பின்னர் சீதை அபகரிக்கப் பட்டு, தற்சமயம் சீதையைத் தேடி வருவதையும், அதன் காரணமாகவே தான் கடல் தாண்டியதையும் சொல்லி முடித்தார். சீதைக்குத் தாள முடியாத வியப்பு. சொல்லுவது என்னமோ தன் வாழ்க்கைச் சரித்திரம் தான். ஆனால் சொல்வது யார்? தான் பார்க்காத சில சம்பவங்களும் இருக்கின்றனவே? தான் அமர்ந்திருந்த மரத்தை அண்ணாந்து பார்க்கின்றாள் சீதை. ஒரு வானரம் மரத்தின் மீது வெண்ணிற ஆடை அணிந்து அமர்ந்திருப்பது கண்ணில் படுகின்றது. கனவோ இது? என மயங்கினாள். வானரம் தன்னிடம் பேசியதா? எப்படி? ஒருவேளை இது அரக்கிகளின் சதியோ? அல்லது ராவணன் தன்னை அடையச்செய்யும் மற்றொரு வகைத் தந்திரமோ? யோசனையுடனேயே மீண்டும் மரத்தின் மேலே பார்த்தாள் சீதை.
உடனேயே அங்கிருந்து கீழே இறங்கிய அனுமன் தன் இருகைகளையும் கூப்பிக் கொண்டு சீதைக்கு வணக்கம் தெரிவித்து வணங்கி நின்று, "குற்றமற்ற பெண்மணியே, நீ யார்? ராவணனால் கடத்தி வரப்பட்ட ராமனின் மனைவி சீதை நீதானா? எனில் அதை என்னிடம் சொல்லு! உனக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகட்டும்" எனச் சொல்கின்றார். சீதை மனம் மகிழ்ச்சி அடைந்து, "தசரதன் மருமகளும், ஜனகனின் மகளும், ராமனின் மனைவியும் ஆன சீதை நான் தான்." என்றுசொல்லிவிட்டு, அயோத்தியை நீங்கியதில் இருந்து நடந்த நிகழ்வுகளையும், தான் கடத்தி வரப்பட்டதையும் சொல்கின்றாள். அனுமன் மனம் மகிழ்ந்து, நெகிழ்வுடன், "ராமசாமியின் தூதனாய்த் தான் நான் வந்திருக்கின்றேன். ராமன் நலமே. உங்களைப் பற்றிய கவலையன்றி வேறே ஒரு கஷ்டமும் இல்லை அவருக்கு. லட்சுமணனும் நலமே. உங்கள் கஷ்டத்தின் போது காப்பாற்ற முடியவில்லை என்ற வருத்தமே அவருக்கு." என்று சொல்லிக் கொண்டே அனுமன் சீதையை நெருங்க, சீதைக்கு மீண்டும் சந்தேகம் வருகின்றது. ஒருவேளை ராவணனோ என. ஆகவே எதற்கும் அமைதி காக்கலாம் என அமைதி காக்கின்றாள். சீதையின் சந்தேகத்தைப் புரிந்து கொண்ட அனுமன் தான் ராமனின் நட்பைப் பெற்ற வானர அரசன் சுக்ரீவனின் நண்பன், அமைச்சன், ராமனின் சார்பாகவே தான் இங்கே வந்திருப்பதையும் சொல்ல, ஒரு வானரம் எவ்வாறு கடல் தாண்ட முடியும் எனச் சந்தேகப் படும் சீதையிடம் நடந்த விபரங்களைக் கூறுகின்றார் அனுமன். ராம, லட்சுமணர்களின் தோற்றத்தைப்பற்றியும், அவர்களின் சோகத்தைப் பற்றியும், சுக்ரீவனுடன் ஏற்பட்ட நட்பு பற்றியும், வாலி வதம் பற்றியும் விவரிக்கின்றார் அனுமன். சீதையின் மனதில் நம்பிக்கை பிறக்கின்றது.
சீதைக்கு முழுமையான நம்பிக்கை ஏற்படுத்தும் எண்ணத்துடன் அனுமன், "நான் ஒரு வானரன், ராமனின் தூதன். இதோ ராமன் பெயர் கொண்ட மோதிரம். இந்த மோதிரத்தை உங்களுக்கு அடையாளமாய் ராமன் என்னிடம் கொடுத்தார். மங்களம் உண்டாகட்டும், உங்கள் அனைத்துத் துன்பங்களும் பறந்தோடட்டும்."என்று கூறிவிட்டு அனுமன், ராமனின் மோதிரத்தை சீதையிடம் அளித்தார். அந்த மோதிரத்தைக் கண்ட சீதைக்கு ராமனையே நேரில் காண்பது போலிருந்தது. மனமகிழ்வோடு அனுமனைப் பார்த்து, "அப்பனே! அரக்கர்களின் இந்தக் கோட்டைக்குள் நீ உட்புகுந்து என்னைப் பார்த்து இதைச் சேர்ப்பித்ததில் இருந்தே உன்னுடைய துணிவும், வலிமையும், அறிவும் நன்கு புலப்படுகின்றது. மழைநீரைத் தாண்டி வரும் சாதாரண மனிதன் போல் நீ பெருங்கடலைத் தாண்டி இங்கே வந்துள்ளாய். உன் சக்தியைப் புரிந்து கொள்ளாமல் ராமன் உன்னை இங்கே அனுப்பவில்லை என்று தெரிந்து கொண்டேன். ராமன் நலம் என்ற செய்தி கேட்டு மகிழும் அதே நேரம் ராமன் ஏன் இன்னும் வந்து என்னை மீட்கவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துன்பத்திற்கு இன்னும் முடிவுகாலம் வரவில்லை போலிருக்கின்றது. போகட்டும், ராமர் மற்றக் கடமைகளைச் சரிவர ஆற்றுகின்றாரா? என் பிரிவினால் மற்றக் கடமைகளுக்குப் பாதிப்பு ஒன்றும் இல்லையே? நண்பர்கள் அவரை மதிக்கின்றார்கள் அல்லவா/ என் மாமியார்கள் ஆன கோசலை, சுமித்திரை, பரதன் ஆகியோரிடமிருந்து அவர்கள் நலன் பற்றிய செய்திகள் வருகின்றனவா? என்னை எப்போது ராமன் மீட்டுச்செல்வார்? லட்சுமணனும் உடன் வந்து அரக்கர்களை அழிப்பான் அல்லவா? " என்றெல்லாம் கேட்க அனுமனும் பதில் சொல்கின்றார்.
"தாங்கள் இங்கே இருக்கும் செய்தி இன்னும் ராமருக்குத் தெரியாத காரணத்தினாலேயே இன்னும் வந்து உங்களை மீட்கவில்லை. பெரும்படையுடன் வந்து உங்களை மீட்டுச் செல்லுவார். உறக்கத்தில் கூட உங்களையே நினைத்துக் கொண்டிருக்கின்றார் ராமர். வேறு சிந்தனை இல்லாமல் இருக்கின்றார்." என்று சொல்லவும், சீதை பெருமிதம் கொண்டாள். "எனக்குப் பெருமை அளித்தாலும், இந்தச் சிந்தனை மட்டுமே ராமனுக்கு இருக்கிறது என்பது கொஞ்சம் கவலையாகவும் இருக்கின்றது. ராவணன் ஒரு வருடமே கெடு வைத்திருந்தான். அந்தக் கெடுவும் இப்போது முடியப் போகின்றது. ராமன் விரைந்து செயல்படவில்லை எனில் அதற்குள் என் உயிர் பிரிந்துவிடும் என ராமனிடம் நீ எடுத்துச் சொல்வாய். விபீஷணன், ராவணனின் தம்பி, என்னை ராமனிடம் திரும்பச் சேர்க்குமாறு பலமுறை எடுத்துச் சொல்லியும் ராவணன் மறுத்துவிட்டான். மேலும் ஓர் கற்றறிந்த நன்னடத்தை பொருந்திய அரக்கன் ஆன "அவிந்த்யன்" என்பவனும் ராவணனுக்கு எடுத்துச் சொன்னான். ராவணன் அவனையும் மதிக்கவில்லை." என்று சொல்லவே, அனுமன் அவளைத் தன் தோளில் அமரச் சொல்லிவிட்டுத் தான் தூக்கிச் சென்று கடலைக் கடந்து ராமனிடம் சேர்ப்பிப்பதாயும் தன்னை நம்புமாறும் கூறுகின்றான். தன்னுடைய வேகத்துக்கு ஈடு கொடுத்துத் தன்னைத் தொடர்ந்து வரக் கூடியவன் இந்த இலங்கையில் இல்லை எனவும் சொல்கின்றான். அதைக் கேட்ட சீதை, மகிழ்ச்சி அளிக்கக் கூடிய வார்த்தைகளையே சொல்லும் அனுமனின் இத்தனை சிறிய உருவைப் பார்த்து சந்தேகம் கொண்டு கேட்கின்றாள்."இத்தனை சிறிய உருப்படைத்த நீ எவ்வாறு கடலைக் கடப்பாய், அதுவும் என்னையும் சுமந்து கொண்டு?" என்று கேட்கின்றாள்
உடனேயே அனுமனின் விஸ்வரூபம் காண நேரிடுகின்றது அவளுக்கு. நினைத்தபோது, நினைத்த வடிவைத் தான் எடுக்க முடியும் என சீதைக்குக் காட்ட வேண்டி, விண்ணுக்கும், மண்ணுக்குமாய் வளர்ந்து நிற்கின்றார் ஆஞ்சநேயர், வானர வீரன், வாயுகுமாரன், மங்களங்களை அள்ளித் தரும் சுந்தரன். மேலும், மேலும், மேலும் வளர்ந்து கொண்டே போகும் அந்த அனுமனின் விசுவரூபத்தைக் கண்டு வியக்கின்றாள் வைதேஹி. அனுமன் சொல்கின்றான். "அம்மையே, உங்களை மட்டுமல்ல, இந்த நகரையும், நகரோடு உள்ள மக்களையும், ராவணனையும், அனைவரையும் சுமக்கக் கூடிய வல்லமை படைத்தவனே நான். ஆக்வே தாங்கள் தயங்க வேண்டாம். உடனே என்னுடன் வருவீர்களாக.' என்று கூப்பிடுகின்றான். அனுமனின் விசுவரூபத்தைக் கண்டு வியந்த ஜானகி, "அப்பா, இப்போது நன்கு புரிகின்றது. ஒரு சாதாரண வானரன் எவ்வாறு கடல் தாண்ட முடியும் என நான் நினைத்தது, தவறு என்று தெரிந்து கொண்டேன். ஆனால், காற்றை விடக் கடினமாயும், வேகமாயும் பறக்கும் உன்னுடைய வேகத்தை என்னால் தாங்க முடியுமா? வழியில் அரக்கர்கள் பின் தொடர்ந்தால், என்னையும் சுமந்துகொண்டு அவர்களோடு நீ எவ்விதம் சண்டை போடுவாய்? உன் முதுகிலிருந்து நான் நழுவி விழுந்தாலும் விழலாம், அல்லது அரக்கர்கள் ஜெயித்தால் என்னைக் கொன்றாலும் கொல்லலாம். இப்படி எல்லாம் நடந்தால் உன்னுடைய முயற்சி வீணாகிவிடுமே? மேலும் ராமனின் பெருமைக்கும் இது களங்கம் அல்லவோ? அதுவும் தவிர, வேறொரு முக்கியமான விஷயமும் இருக்கின்றதே, ராமனைத் தவிர, வேறு யாரையும் நான் தீண்ட மாட்டேன். அப்படி எனில் ராவணனோடு வந்தது எப்படி என்கின்றாயா? அது பலவந்தமாய் அவன் இழுத்துக் கொண்டு வந்ததால், நான் வேறு வழி அறியாமல் இருந்துவிட்டேன். இப்போது நான் உன் முதுகில் ஏறிக் கொண்டு எவ்வாறு வருவேன்,அறிந்தே வரமுடியாது. ராமன் இங்கே வந்து அரக்கர்களோடு சண்டையிட்டுவிட்டு, அவர்களைத் தோற்கடித்து, ராவணனையும் வென்று என்னை அழைத்துச் செல்வதே சிறப்பானது, அவருக்கும், எனக்கும். ஆகவே அவரிடம் சென்று சொல்லி, சீக்கிரம் இங்கே வந்து இவர்களைத் தோற்கடித்துவிட்டு என்னை அழைத்துச் செல்லச் சொல்வாயாக!" என்கின்றாள் ஜானகி.
No comments:
Post a Comment