எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 26, 2008

கதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 52 (விபிஷண சரணாகதி) - யுத்த காண்டம்பல்வகை ஆயுதங்களுடன், மாபெரும் போர் வீரனைப் போன்ற தோற்றத்துடன் காணப்பட்ட விபீஷணனையும், அவன் நண்பர்கள் நால்வரையும் பார்த்து சுக்ரீவன் சிந்தனையில் ஆழ்ந்தான். அனுமனையும், மற்றவர்களையும் பார்த்துப் பின்னர் இவன் இந்த நால்வரோடு இங்கே வந்திருப்பதைப் பார்த்தால் நம் அனைவரையும் கொல்லவே வந்திருக்கின்றான் என்றே தோன்றுகின்றது என்று சொல்கின்றான். அப்போது உரத்த குரலில் விபீஷணன், அரக்கர் குலத் தலைவன் ஆன ராவணன் என்ற பெயர் கொண்ட , தீய நடத்தை படைத்த மன்னன், இலங்கையின் அரசன் ஆக இருக்கின்றான். அவன் எனக்கு மூத்த அண்ணன்.நான் அவனின் இளைய சகோதரன். அந்த ராவணன், ராமனின் மனைவியான சீதையை ஜனஸ்தானத்தில் இருந்து ஜடாயு என்னும் கழுகரசனைக் கொன்றுவிட்டு அபகரித்து வந்துவிட்டான். அவளை அசோகவனத்தில் அரக்கியர்கள் நடுவில் சிறை வைத்துள்ளான். நான் அவனிடம் பலமுறைகள் வாதம் புரிந்து சீதையைத் திருப்பி அனுப்பச் சொல்லிப் பார்த்தேன். ஆனால் அவன் திரும்ப அனுப்பச் சம்மதிக்கவில்லை. அவனுக்கும், அவன் குடும்பத்துக்கும், குடிமக்களுக்கும், நாட்டுக்கும், அரக்கர் குலத்துக்கும் நன்மையையே நினைத்த என்னை அவன் இழிவாகப் பேசிவிட்டான். அடிமை போல் நடத்திவிட்டான். என் மனைவி, மக்களை அங்கேயே விட்டு விட்டு இங்கே உங்களிடம் அடைக்கலம் தேடி வந்துள்ளேன். ஈரேழு பதினாலு உலகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கக் கூடிய வல்லமை படைத்த ராமனிடம் சென்று விபீஷணன் வந்திருக்கின்றான் என்று அறிவியுங்கள் என்று சொல்கின்றான்.

அனுமன் சமுத்திரத்தைக் கடக்க அவ்வளவு கஷ்டப் பட்டபோது, நினைத்த நேரத்தில் நினைத்த உருவை எடுக்கக் கூடிய வல்லமை பெற்றிருந்த அரக்கர் குல இளவல், தான் பெற்றிருந்த வரங்களின் மகிமையாலும், தவ வலிமையாலும் வான் வழியே வந்து ராமனைச் “சரணம்” என்று அடைந்தான். அப்போது சுக்ரீவனும், மற்றவர்களும் விபீஷணன் சொன்னதைக் கேட்டுக் கொண்டு ராமனிடம் சென்று, ராவணனின் ஆள் ஒருவன் நான்கு பேரோடு வந்திருக்கின்றான். அவன் நடத்தை எவ்வாறிருக்குமோ என்று சந்தேகமாகவே இருக்கின்றது. பிறர் கண்ணுக்குக் கூடத் தெரியாமல் சஞ்சரிக்கக் கூடிய அரக்கர் குலத்தவன் ஒருவன் இங்கே வந்துள்ளான் என்பது சற்றே கவலை அளிக்கக் கூடியதாய் உள்ளது. ஒருவேளை அந்த ராவணனின் ஒற்றர்களில் ஒருவனாயும் இருக்கலாமோ? நாம் கவனமாய் இருக்கவேண்டும். நம்மிடையே பிளவை உண்டு பண்ணி விடுவானோ என்றும் அஞ்சுகின்றேன். எதிரியான அரக்கர்களில் ஒருவன் நமக்கு உதவி செய்கின்றேன் என்று வந்திருப்பது சற்றும் ஏற்கத் தக்கது அல்ல. நம் பலவீனத்தைத் தெரிந்து கொண்டு நம்மைத் தாக்கவும் முற்படலாம். அவனைச் சிறைப்படுத்துவதே சிறந்தது.” என்று சொல்கின்றார் வானர அரசன் ஆன சுக்ரீவன்.

ராமர் இதை எல்லாம் கேட்டுவிட்டு மற்ற வானரர்களிடம் சுக்ரீவன் சொன்னதை நீங்கள் அனைவரும் கேட்டீர்கள். தன்னை நம்பியவர்களுக்கு நம் மனதைத் திறந்து பேசுவதும், ஆலோசனை சொல்வதும் நண்பர்களின் லட்சணம், அழகு. ஆகவே நீங்கள் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள், என்று கேட்கின்றார். வானரர்களில் பலரும் ராமனைப் பார்த்து, உங்கள் இஷ்டம் எதுவோ அப்படியே செய்யுங்கள். உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்று பணிவோடு சொல்கின்றனர். இவர்களில் அங்கதன் எழுந்து, நாம் நன்கு ஆராய்ந்து, கலந்து பேசி, இவனை ஏற்பதால் நமக்கு நன்மை உறுதி எனத் தெரிந்தால் ஏற்போம், இல்லை எனில் வேண்டாம் என்று சொல்கின்றான். சரபன் என்ற இன்னொரு வானரன் ஒற்றன் ஒருவனை அனுப்பி விபீஷணனைச் சோதித்துவிட்டு அனுமதிக்கலாம் என்று கூறுகின்றான். ஜாம்பவானோ, இவனை நம்பக் கூடாது. ராவணனிடமிருந்து வந்துள்ளான், இவனை எவ்வாறு நம்புவது என்று சொல்கின்றார். மைந்தன், கொஞ்சம் கொஞ்சமாய் விசாரிப்போம், இவன் எப்படிப் பட்டவன் என்பது புரியும். பின்னர் முடிவுக்கு வரலாம் என்று சொல்கின்றான். அனௌமன் எழுந்து இரு கையையும் கூப்பிக் கொண்டு சொல்லுவார்:” இங்கே பேசிய அனைவர் கருத்திலும் நான் தவறு காண்கின்றேன். அனைவரும் அறிவிற் சிறந்தவர்களே ஆயினும் இவ்விஷயத்தில் நீங்கள் சொல்லும் எந்தக் கருத்தும் உதவாது. விபீஷணனை ஒற்றனை அனுப்பித் தெரிந்து கொள்ள முயன்றால் அவனுக்குக் கோபம் வரக் கூடும். நான் அனுப்பியதன் காரணமும் அவனுக்குப் புரியாமல் போகாது. நன்மை நாடி வந்திருந்தானானால் மனம் புண்படும், அல்லாமல் தீமை நாடி வந்திருந்தானானால், இன்னும் அதிக மோசமாய் நடந்து கொள்ளுவான். இம்முயற்சி பலனளிக்காது. ஆனால் என்னைப் பொறுத்த வரையில் விபீஷணன் அமைதியாகவும், சாந்தமாகவும் காணப்படுகின்றான். ஆகையால் அவனால் நமக்கு நன்மையே ஏற்படும். பேச்சிலும் தெளிவும், மன உறுதியும் காணப்படுகின்றது. கெட்ட நோக்கத்தினால் வந்தவனுக்கு இவ்வளவு தெளிவும், மன உறுதியும் காணப்படாது. அனைத்தையும் யோசித்தே அவன் இங்கு வந்திருக்க வேண்டும். ராவணனை விட தாங்கள் மேம்பட்டவர் என்பது அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும்.. இலங்கை தாக்கப் படும் என்பதையும் அறிந்து கொண்டிருக்கின்றான். மேலும் வாலிக்கு நேர்ந்த கதியையும் அறிந்து வைத்துள்ளான். சுக்ரீவன் உங்களோடு இருக்கின்றார் என்பதையும் தெரிந்து வைத்துக் கொண்டே இனிமேல் இங்கே வந்து சேருவதே உசிதம் என்றே வந்திருக்கின்றார். ஏற்கத் தக்கவன் ஆன அவனை ஏற்பது நமக்கு நன்மை பயக்கும். இதுவே என் கருத்து.” என்று சொல்லி அமர்கின்றார்.

அனுமன் சொன்னதைக் கேட்ட ராமனுக்கும் மனம் மகிழ்ச்சி அடைந்தது. தானும் அவ்வாறே நினைத்ததாய்ச் சொன்ன அவர் மேலும் சொன்னார்:” அனைவரும் என்னுடைய நன்மையைக் கருதியே பேசினீர்கள் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை. முதலில் ஒரு விஷயம் தெளிவாய்ச் சொல்கின்றேன். என்னிடம் “சரணாகதி” என்று சரண் அடைந்தவனை நான் எக்காரணம் கொண்டும் நிராகரிக்க மாட்டேன். அவன் தீயவனாகவே இருந்தாலும்.” என்று சொல்ல சுக்ரீவனும், மற்ற வானரர்களும் மனம் சமாதானம் அடையவில்லை. சுக்ரீவன் சொல்கின்றான்:” தன் சொந்த சகோதரனையே ஆபத்தில் விட்டுவிட்டு ஓடி வந்து விட்ட இவன் வேறு யாரைத் தான் காட்டிக் கொடுக்க மாட்டான்?” என்று சொல்லவே, ராமர் சிரித்துக் கொண்டே சொல்கின்றார்:” விபீஷணன் உலக இயல்புப் படியே இங்கே வந்துள்ளான். ஒரு அரசனுக்கு ஆபத்து நேரிடும் போது அவன் உறவினர்கள் எவ்வாறேனும், அவனைத் தாக்கி நாட்டைக் கைப்பற்றவே முயல்கின்றனர். இவன் அம்மாதிரியே இங்கே வந்திருக்கின்றான். இவனுக்கு ராஜ்யத்தின் மீது ஆசை வந்துள்ளது. அரக்கர்களிடையே அச்சம் தோன்றிவிட்டதை இவன் வரவு நமக்கு உணர்த்துகின்றது. இவன் இங்கே வந்திருப்பதால் அரக்கர்களிடையே பெரும் பிளவும் உண்டாகலாம். சுக்ரீவா, எல்லா சகோதரர்களும் பரதனைப் போன்றவர்கள் அல்ல. எல்லா மகன்களும் ராமனைப் போன்றவர்கள் அல்ல. எல்லா நண்பர்களும் சுக்ரீவனைப் போன்றவர்கள் அல்ல. “ என்று சொல்கின்றார். சுக்ரீவனும் ராமனைப் பார்த்து, மீண்டும், மீண்டும் விபீஷணன் கொல்லப் பட வேண்டியவன் என்ற கருத்தை வலியுறுத்துகின்றான். ராமர் அவன் கூறியதைப் பற்றி நன்கு யோசித்துவிட்டுப் பின்னர் சொல்கின்றார்:” விபீஷணன் தீயவனாகவே இருந்தாலும் என்னால் அவனை அழிக்க முடியும். மேலும் தனக்குக் கெடுதல் செய்த வேடனிடம்கூட ஒரு புறா அன்பு காட்டியதை நாம் அறிந்துள்ளோம். அதையும் நினைத்துப்பார்க்க வேண்டும். மேலும் நம்மிடம் அடைக்கலம் என்று கை கூப்பி, பாதிகாப்பு வேண்டி வந்துவிட்டவன் விரோதியே ஆனாலும் அவனைப் பாதுக்கக்கவேண்டியது நம் கடமை. அவனைத் தாக்கக் கூடாது. நம் உயிரைக் கொடுத்தாவது அவனைக் காக்க வேண்டும், இது நம் கடமை. மேலும் அடைக்கலம் என்று வந்தவனைப் பாதுகாக்க முடியாமல் அவன் அழிக்கப் பட்டால் நாம் செய்த புண்ணியம் எல்லாம் அழிந்தவனைச் சேர்ந்து நமக்குப்பாவமே வந்து சேரும். சுக்ரீவா! “இனி நான் உன்னுடையவன்” என்று கூறிக் கொண்டு இனியும் யார் வந்தாலும், அவர்களை நான் ஏற்றுக் கொண்டு இறுதி வரை காப்பாற்றுவது என் விரதம். ராவணனாகவே இருந்தாலும் சரி! போய் அவனை அழைத்து வா, “அபயம் என்று வந்தவனைக் காக்க நான் தயாராகிவிட்டேன் என்று சொல்.” என்று சொல்கின்றார்.

சுக்ரீவனும் ராமன் சொல்வதில் உள்ள நியாயத்தையும், தர்மத்தையும் உணர்ந்து, தர்மத்தில் இருந்து சற்றும் பிறழாமல் ராமர் நடந்து கொள்வதைப் பாராட்டி விட்டுத் தானும், விபீஷணனை அழைத்துவர ஏற்பாடு செய்வதாய்ச் சொல்லுகின்றான். விபீஷணன், விண்ணில் இருந்து இறங்கி, ராமனிடம் வந்து இரு கை கூப்பி நமஸ்கரித்து, ராவணனின் இளைய சகோதரன் ஆன நான் உங்களை நாடி வந்துவிட்டேன். என்னுடையது என்று சொல்லக் கூடிய அனைத்தையும் துறந்து உங்களை நாடி நீங்களே சரணம் என்று வந்துள்ளேன்,” என்று கூறுகின்றான்.

ராமன் உடனே விபீஷணனைப் பார்த்து அரக்கர்களின் பலம், பலவீனம், ஆகியவற்றை உள்ளது உள்ளபடிக்கு எடுத்து உரைப்பாய், என்று கேட்க விபீஷணனும் அவ்வாறே சொல்கின்றான்:”, பிரம்மன் அளித்த வரம் காரணமாய், கந்தர்வர்கள், நாகர்கள், , பறவைகள் , என்று படைக்கப் பட்ட எந்த ஜீவராசியாலும் ராவணனைக் கொல்வது என்பது முடியாது. ராவணனுக்கு இளையவனும், எனக்கு மூத்தவனும் ஆன கும்பகர்ணன் பலம் சொல்லி முடியாது. தேவேந்திரனை எதிர்க்கும் வல்லமை படைத்தவன். கைலை மலையில் குபேரனின் படைத்தலைவனை வீழ்த்திய பிரஹஸ்தன் ராவணனின் படைத் தளபதி. வில்லாளியும், எதிரிகளின் கண்ணுக்குத் தெரியாமல் போரிடக் கூடிய வல்லமை பெற்றவனும் தேவேந்திரனைச் சிறை எடுத்தவனும் ஆகிய இந்திரஜித் ராவணனின் மைந்தன். இன்னும் மஹோதரன், மஹாபார்சவன், அகம்பனன் ஆகியோரும் முக்கியமானவர்களே. இவர்களைத் தவிர, எண்ணிலடங்கா அரக்கர் படையும் உள்ளது. அனைவருக்கும் மாமிசமும், ரத்தமுமே உணவு. அவர்கள் உதவியோடு மூவுலகையும் ராவணன் எதிர்த்தான். தேவர்களையும் யுத்தத்தில் வென்றவனே கெடுமதியாளன் ஆன ராவணன்.” என்று சொல்கின்றான்.

ராமர் உடனேயே ராவணனின் வரங்கள் பற்றி அறிந்திருப்பதால் நீ கூறியவை அனைத்தும் உண்மையே எனத் தெரிய வருகின்றது. ராவணனையும், அவனைச் சார்ந்தவர்களையும் கொன்றுவிட்டு உனக்கே இலங்கையின் முடியைச் சூட்டுகின்றேன். பாதாளத்தில் போய்ப் புகுந்தாலும், பிரம்மாவே வந்து அடைக்கலம் கொடுத்தாலும் ராவணன் என்னிடமிருந்து தப்பிக்க முடியாது. என் மூன்று சகோதரர்களின் புகழ் மீதும் ஆணையிட்டுச் சொல்கின்றேன். இந்த அரக்கர்களை ஒழிக்காமல் அயோத்திக்குத் திரும்ப மாட்டேன்.” என்று சொல்கின்றார். விபீஷணனும் அவரை வணங்கிவிட்டு அரக்கர்களை வெல்லும் வழியையும், இலங்கையைத் தாக்கவும் வழியைத் தான் கூறுவதாயும், அரக்கர் படையைப் பிளந்து கொண்டு உள்ளே நுழைந்து தாக்க உதவுவதாயும் சொல்கின்றான். பின்னர் ராமன் முக மலர்ச்சியுடனும், மகிழ்வுடனும் லட்சுமணனைப் பார்த்து, சமுத்திரத்தில் இருந்து நீர் எடுத்து வரச் சொல்கின்றார். விபீஷணனுக்கு அரக்கர் மன்னனாய் இப்போதே அபிஷேகம் செய்து வை என்றும் சொல்கின்றார். உடனேயே இதைச் செயல் படுத்துமாறும் லட்சுமணனைச் சொல்ல அவனும் உடனேயே சென்று சமுத்திரத்தில் இருந்து நீர் எடுத்து வந்து வானரர்கள் அனைவர் முன்னிலையிலும் ராமரின் கட்டளைப்படி விபீஷணனுக்கு அபிஷேகம் செய்து வைக்கின்றான். வானரர்கள் அனைவரும் நன்று, நன்று, என்று கோஷமிட்டுக் கொண்டாடினார்கள். விபீஷணனிடம் தங்கள் கவலையை அனுமனும், சுக்ரீவனும் தெரிவிக்கின்றார்கள். இத்தனை பெரிய வானரப் படை சமுத்திரத்தைக் கடந்து செல்வது எவ்வாறு? எவ்வாறு அணுகினால் சமுத்திரத்தைக் கடக்க முடியும்? என்று யோசனை கேட்கின்றார்கள்.

2 comments:

 1. உண்மையிலேயே மிக அருமையான எழுத்து.

  இல்லத்தில் உங்களின் எழுத்துக்களை...
  குறிப்பாக இராமாயணத்தொடரை தொடர்ந்தும், (விரும்பி) வாசித்து வருகிறேன்.

  உங்கள் வலைப்பூவை இன்றுதான் காண வாய்த்தது.

  இதை வாசிக்கவும்,
  பின்னூட்டமிடவும்...
  கிடைத்த இந்த சந்தர்ப்பம்,
  என் வாழ்வின் பெரும் பாக்கியம்.

  தொடர்ந்து மேன்மேலும் எழுத வாழ்த்துக்கள்.

  ReplyDelete