லட்சுமணன், சீதையின் கால் ஆபரணத்தைப் பற்றி மட்டுமே தான் அறிந்திருந்ததாய்ச் சொன்னதன் தாத்பரியத்தை விளங்கச் சொல்லுமாறு திரு திவா கேட்டுக் கொண்டதன் பேரில் அதைச் சொல்லிவிட்டு இன்றைய பகுதிக்குப் போகலாம். லட்சுமணன் சீதையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவன் அல்ல. எப்போதுமே அவளின் கால்களைப் பார்த்தே பேசும் வழக்கம் உள்ளவன். அவன் மட்டுமல்ல, ராமனின் மற்றைய சகோதரர்களும் அவ்வாறே, தங்கள் அண்ணன் மனைவியான சீதையைத் தங்கள் தாய்க்கும் மேலாய் மதிப்பதாலும், பிற பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற நற்பண்பு அரசகுமாரர்களிடம் இருந்தமையாலும், அவன் சீதையின் கால்களை மட்டுமே பார்த்திருந்தான். ஆகவே தான் அவனுக்கு அவள் கால்களின் கொலுசு மட்டுமே அடையாளம் காண முடிந்தது. அவளின் கைவளைகள், கழுத்தின் மாலைகள், தலையின் ஆபரணம்
உள்ளிட்ட மற்ற ஆபரணங்கள் தெரியவில்லை. இனி, வாலியைப் பற்றியும், அவன் பலத்தைக் குறித்தும் சுக்ரீவன் ராமனிடம் கூறியதும், அத்தகைய வாலியை ராமனால் வெல்ல முடியுமா என சந்தேகம் கொண்டதும் பற்றிப் பார்ப்போம்.
*************************************************************************************
கிழக்கு, மேற்காகவோ, வடக்கு, தெற்காகவோ பல கடல்களைத் தாண்டிச் செல்லும்போது கூட வாலி களைப்படையாமல் இருந்து வந்தான். எருமை உருவம் கொண்ட துந்துபி என்னும் அரக்கன் ஒருவன் ஒரு சமயம் தான் கொண்ட மமதையால், சமுத்திர ராஜனைச் சண்டைக்கு இழுக்க, சமுத்திர ராஜனோ, ஹிமவானிடம் சண்டை போட்டு ஜெயிக்குமாறு சொல்லி அனுப்புகின்றான். ஹிமவானோ, துந்துபியை ஜெயிக்கத் தன்னால் முடியாது எனச் சொல்லி, இந்திரன் மகன் ஆன வாலியை ஜெயிக்குமாறு சொல்லி அனுப்புகின்றான். வாலியைச் சண்டைக்கு இழுத்த துந்துபியைத் தரையில் அடித்துக் கொல்கின்றான், மிக மிக அனாயாசமாய். அவன் உடலைச் சுழற்றித் தூக்கி எறிய அது வெகு தூரம் அப்பால் போய் மதங்க முனிவரின் ஆசிரமத்தில் போய் விழுகின்றது. முனிவர் புனிதமான தன் ஆசிரமம் இவ்வாறு பாழ்பட்டதைப் பார்த்து, மனம் நொந்தார். தன் தவ வலிமையால் இம்மாதிரியான காரியத்தைச் செய்து ஆசிரமத்தைப் பாழ்படுத்தியது ஒரு வானரன் என்பதைப் புரிந்து கொண்டு, அவன் இனி இந்த ஆசிரமத்துக்குள் காலடி எடுத்து வைத்தால் அந்தக் கணமே இறப்பான் எனவும், அவனுக்கு உதவி செய்பவர்களும் உடனே இந்தக் காட்டை விட்டு அகலவில்லை எனில் அடுத்த கணமே கல்லாகிவிடுவர் எனவும் சபிக்கின்றார். பின்னர் இந்த விஷயம் தெரிந்து வாலி, அங்கே வந்து முனிவரின் மன்னிப்பைக் கோரக் காத்து நின்றும் முனிவர் வாலியை மன்னிக்க மறுத்துவிட்டார். சாபம் பலித்துவிடும் என்ற பயத்தால் வாலியும் உடனே திரும்பிவிட்டான். அன்றிலிருந்து இந்தப் பக்கம் அவன் வருவதில்லை. ஆகவே அவன் விரோதம் வந்ததும் எங்கும் தங்க இடம் இல்லாமல் இருந்த நான் இந்த ரிச்யமூக மலைப்பகுதியைத் தேர்ந்தெடுத்தேன். இங்கு நான் தைரியமாக வசிக்க முடிகின்றது.
பின்னர் அந்தப் பகுதியில் விழுந்து கிடந்த துந்துபியின் உடலைக் காட்டுகின்றான் சுக்ரீவன் ராமனுக்கு. வாலியின் திறமைகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்த சுக்ரீவனுக்கு, ராமனின் பலத்திலும், திறமையில் சந்தேகம் ஏற்பட்டிருப்பதைப் புரிந்து கொண்ட லட்சுமணன், "ராமன் என்ன செய்தால் அவர் திறமையை நீ நம்புவாய்?" எனக் கேட்க, சுக்ரீவன் அங்கே இருந்த ஏழு மரங்களை ஒரே அம்பினால் ராமனைத் துளைத்துக் காட்டச் சொல்கின்றான். இந்த மரங்களை ஒவ்வொன்றாய் வாலி துளத்தான். ராமன் அவனை விடப் பலசாலி என்றால் ஒரே அம்பினால் இந்த மரங்களைத் துளைக்க வேண்டும் எனச் சொல்கின்றான். ராமன் சிரித்துக் கொண்டே தன் கால் கட்டை விரலினால் துந்துபியின் உடலை ஒரு நெம்பு, நெம்பித் தள்ள அந்த உடல் வெகுதூரம் போய் விழுகின்றது. எனினும் நம்பாத சுக்ரீவன் ஏழு மரங்களையும் துளைத்தால் தான் தனக்கு நம்பிக்கை வரும் எனச் சொல்ல, அவ்வாறே ராமர் ஒரே அம்பினால் ஏழு மரங்களையும் துளைத்தெடுக்கின்றார். அம்பானது ஏழு மரங்களையும் துளைத்தெடுத்துவிட்டுப் பின்னர் ராமனிடமே திரும்பி வந்தது. மனம் மகிழ்ந்த சுக்ரீவனை, கிஷ்கிந்தை சென்று வாலியைச் சண்டைக்கு அழைக்குமாறு கூற, சுக்ரீவனும் அவ்வாறே, கிஷ்கிந்தையை அடைந்து வாலியைச் சண்டைக்குக் கூப்பிடுகின்றான். இருவரும் கடுமையாகச் சண்டை போடுகின்றனர். எனினும் கடைசியில் வாலியே ஜெயிக்கின்றான். தப்பி ஓடினான் சுக்ரீவன். அவனைத் துரத்தி வந்த வாலி, அவன் ரிச்யமூக பர்வதத்தில், மதங்க முனிவரின் ஆசிரமத்தை அணுகவும், உள்ளே போகாமல் மீண்டும் கிஷ்கிந்தை திரும்பினான். *
மன வருத்தத்துடன் வந்த சுக்ரீவனைப் பார்த்த ராமர், நீங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருப்பதால் என்னால் அடையாளம் காண முடியவில்லை. என்னுடைய அம்பினால் நான் உன்னையே கொன்றுவிட்டால் என்ன செய்வது? ஆகவே நீ மீண்டும் வாலியைச் சண்டைக்கு இழுப்பாய்! சண்டை போடும்போது "கஜபுஷ்பி" என்னும் இந்த மலர்க்கொடியக் கழுத்தில் கட்டிக் கொள்." என்று கூறிவிட்டு, லட்சுமணனைப் பார்த்து, கஜபுஷ்பி மலர்க்கொடியைச் சுக்ரீவன் கழுத்தில் கட்டச் சொல்கின்றார். பின்னர் மீண்டும் சுக்ரீவன் கிஷ்கிந்தை போய் வாலியைச் சண்டைக்கு இழுக்க, வாலி மிகுந்த கோபத்துடன் கிளம்புகின்றான். அவன் மனைவியான தாரை தடுக்கின்றாள். ஒரு முறை அல்ல, பலமுறை தோற்று ஓடிப் போன சுக்ரீவன், இப்போது உடனே வந்திருக்கின்றான் எனில், தக்க காரணம் இருக்கவேண்டும், ஆகவே அவன் தகுந்த துணை இல்லாமல் வந்திருக்க மாட்டான் என நினைக்கின்றேன். அங்கதன் காட்டுப் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த போது, இக்ஷ்வாகு குலத்தைச் சேர்ந்த இரு அரசகுமாரர்கள், சுக்ரீவனைத் தங்கள் நண்பனாய் ஏற்றுக் கொண்டதாய்ச் செய்தி கிடைத்ததாம். அந்த ராமன் ஒரு பெரும் வீரனாம், அவனை நாம் விரோதித்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் சுக்ரீவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிட்டு, அவனுடன் நட்புப் பாராட்டுவதே நல்லது. ராமனும் தங்களுக்கு நண்பன் ஆவான். என யோசனை சொல்கின்றாள்.
ஆனால் வாலி அதைக் கேட்காமல் சண்டைக்கு வருகின்றான். சுக்ரீவனுடைய கர்வத்தைத் தான் நான் அழிக்கப் பார்க்கிறேன், அவனை அல்ல எனக் கூறிவிட்டு மீண்டும் சுக்ரீவனுடன் போருக்கு ஆயத்தம் ஆகின்றான். இரு மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு ஏற்படும் இடி முழக்கம் போலவும், மின்னல்கள் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்வது போலவும் பயங்கர சப்தத்துடனும், ஆவேசத்துடனும் இருவரும் போரிட்டனர். இருவரும் சமபலம் கொண்டவர்களே எனினும், எதிராளியின் பலத்தில் பாதி பலம் பெற்றுவிடும் வாலியின் பலத்துக்கு முன்னர் சுக்ரீவன் கை தாழ்ந்தது. ராமர் சரியான தருணத்துக்குக் காத்திருந்தார். கொடிய பாம்பை ஒத்த ஒரு அம்பை எடுத்துத் தன் வில்லிலே பொருத்திவிட்டு நாணை ஏற்றி, அம்பை விடுவிக்கும்போது, காட்டுப் பறவைகளும், மிருகங்களும் பயந்து ஓடினவாம். அத்தகைய கொடிய அம்பி, சக்தி வாய்ந்த அந்த அம்பு, வாலியை அவன் மார்பிலே தாக்கியது. வாலி தரையில் வீழ்ந்தான். வலியினால் கதறினான். இந்திரனால் அளிக்கப் பட்ட தங்கச் சங்கிலி அவன் மார்பை அலங்கரித்துக் கொண்டு அவன் உயிரைக் காத்துக் கொண்டிருந்தது. அம்பு வந்த இடம் நோக்கித் திரும்பிய அவன் ராமனும், லட்சுமணனும் தன்னை நோக்கி வருவதைக் கண்டான். ராமனிடம் கடுமையான சொற்களைப் பேசத் தொடங்கினான்.
"தசரதன் மகன் ராமனா நீ? என்ன காரியம் செய்துவிட்டாய்? யுத்தகளத்தில் நான் உன்னை எதிர்த்து நிற்காதபோது என்னை நீ கொல்ல முயன்ற காரணத்தால், உன் குலம் பெருமை அடைந்ததா? உனக்குப் பெருமையா? உன்னை அனைவரும் மேன்மையானவன், கருணை மிக்கவன், வீரன், மக்களுக்கு நன்மையே செய்பவன், எப்போது எதைச் செய்யவேண்டுமோ, அப்போது அதைச் செய்பவன் என்றெல்லாம் கூறுகின்றனரே? உன்னுடைய குலப்பெருமையை நினைத்தும், உன்னுடைய மேன்மையான குணத்தில் நம்பிக்கை வைத்தும், தாரை தடுத்தும் கேளாமல் இந்தப் போர் புரிய வந்தேனே? வானர இனத்தைச் சேர்ந்த என்னோடு உனக்கு என்ன பகை? நற்குணங்கள் நிரம்பியதாக நடித்திருக்கின்றாய் நீ. உன் நற்குணங்கள் அனைத்தும் நீ போட்டுக் கொண்ட முகமூடி. பாவம் செய்துவிட்டாயே? மனம் போன போக்கில் அம்பை விடும் நீயும் ஒரு அரசனா? அந்தக் குலத்துக்கே தீங்கிழைத்து விட்டாயே? ஒரு குற்றமும் செய்யாத என் மேல் அம்பை விட்டுக் கொல்ல முயன்ற நீ இப்போது அதற்கு என்ன நியாயம் சொல்லப் போகின்றாய்?" என்று கேட்டான் வாலி.
மேலும் சொல்கின்றான்: தர்மச் சங்கிலியை அறுத்துவிட்டு, நன்னெறிக்கட்டுகளைத் தளர்த்திவிட்டு, நியாயம் என்ற அங்குசத்தையும் அலட்சியம் செய்துவிட்டு,மதம் பிடித்த ஒரு யானை போல் நடந்து கொண்டுவிட்ட ராமன் என்பவன் என்னை கொன்றுவிட்டானே? உனக்கு என்ன வேண்டும்? உன் மனைவி சீதை தானே?என்னிடம் சொல்லி இருந்தால் நான் ஒரே நாளில் கொண்டு வந்து சேர்த்திருப்பேனே? ராவணனைக் கழுத்தில் சுருக்குப் போட்டு இழுத்து வந்திருப்பேனே? சுக்ரீவன் எப்படியும் எனக்குப் பின்னர் இந்த ராஜ்யத்தை அடைய வேண்டியவேன். ஆனால் அதற்காக அதர்மமாய் நீ என்னை கொன்றது எவ்வகையில் நியாயம்?" என்று கடுமையாக ராமரைப் பார்த்துக் கேட்கின்றான் வாலி. ராமர் சொல்கின்றார்:" நான் உன்னை ஏன் கொன்றேன் என்பதை நீ ஆச்சாரியர்களாய் அங்கீகரிக்கப் பட்டவர்கள், தர்மநுட்பம் அறிந்தவர்கள் ஆகியோரைக் கேட்கவேண்டும். என்னை நீ தூஷிப்பதில் அர்த்தமே இல்லை. இந்த மலைகள், வனங்கள், நதிகள் கொண்ட இந்தப் பூமியும், மனிதர்களும், மிருகங்கள், பறவைகள் ஆகிய அனைத்து இனங்களும் இக்ஷ்வாகு குலமாகிய எங்கள் குலத்து மன்னர்களின் அதிகாரத்துக்கு உட்பட்டவை> பரதன் நேர்வழியில் சென்று பூமியை நிர்வகித்து வருகின்றான். நாங்கள் பரதனின் ஆக்ஞைக்கு உட்பட்டு இந்தக் காட்டு நிர்வாகங்களில் ஈடுபட்டுக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம். நீ தர்மம் தவறி இழிசெயல் புரிந்துவிட்டு, என்ன என்று என்னையே கேட்கின்றாயே? உன் தம்பி மனைவி உனக்கு மருமகள் அல்லவா? அவளை நீ உன் மனைவியாய்க் கொள்ளலாமா? ஒரு மருமகள் என்பவள் மகளுக்கும் மேலானவள் அல்லவா? அப்படிப் பட்ட ஒரு பெண்ணின் மானத்தை நீ அவள் சம்மதம் துளியும் இல்லாமல், அவள் கணவனிடமிருந்து அவளை அபகரித்துச் சூறையாடலாமா? மகள், சகோதரி, சகோதரன் மனைவி ஆகியோரைக் கற்பழிப்பவர்களுக்குத் தண்டனை மரணமே!" என்று சொல்லும் ராமர் மேலும் சொல்லுவார்:
சுக்ரீவனுக்கு நான் வாக்களித்து இருக்கின்றேன் அவனைக் காப்பதாய். அந்த வாக்கை நான் நிறைவேற்ற வேண்டும். மேலும் குற்றங்கள் செய்தவர்கள் யாராய் இருந்தாலும், அரசனின் தண்டனையை அனுபவித்துவிட்டால் அந்தப் பாவத்தில் இருந்து நீங்கியவர்கள் ஆவார்கள். ஆனால் நீயோ, தண்டனையும் அனுபவிக்கவில்லை, மன்னிப்பும் கோரவில்லை. ஆகவே இவ்வகையில் பார்த்தாலும் உன்னைத் தண்டித்தது சரியே! மேலும் நீயோ ஒரு வானரன். அரசகுலத்தைச் சேர்ந்த நானோ வேட்டையாடி மிருகங்களைக் கொல்லும் சுபாவம் உள்ளவன், அந்த வகையில் பார்த்தாலும் மிருக இனத்தைச் சார்ந்த உன்னை நான் கொன்றது சரியே! " எனக் கூற, வாலி, சற்றே அமைதி அடைந்து, ராமரை இரு கை கூப்பித் தொழுது,"நான் உங்களை மேலும் குறை கூறவில்லை, ஆனால் என் மகன் அங்கதன் ஒரு குழந்தை, அப்பாவி, அவனை நீங்கள் பாதுகாக்கவேண்டும், பரதனிடமும், லட்சுமணனிடமும், சத்ருக்கனனிடமும் காட்டும் அன்பை சுக்ரீவனுக்கும் அளித்து, அவனும் என் மகன் அங்கதை நன்கு பார்த்துக் கொள்ளுமாறும், செய்யவேண்டும். என் மனைவியான தாரையை சுக்ரீவன் அவமரியாதையாக நடத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்."என வேண்ட, ராமன் அவன் மனதில் என்ன குறை இருந்தாலும் சொல்லுமாறு வேண்டுகின்றார்.
ராமரை இகழ்ந்து பேசியதற்குத் தன்னை மன்னிக்குமாறு கூறிய வாலி மூர்ச்சை அடைகின்றான். வாலி தோற்றுவிட்டதை அறிந்த தாரை அலறிக்கொண்டு ஓடி வருகின்றாள். ராமர் செய்த இந்தச் செயலுக்காகத் தாரையும் பலவாறு இகழ்ந்து பேசுகின்றாள். சுக்ரீவனைப்பார்த்து, நீ இனி சந்தோஷமாய் இருக்கலாம் என்று மனம் வெதும்பிச் சொல்லிச் சொல்லி அழுகின்றாள் தாரை. கணவனிடம் உன் மனதுக்குப்பிடிக்காமல் நான் நடந்து கொண்டிருந்தால் என்னை மன்னித்துவிடு என்று கூறிவிட்டுக் கதறி அழ, அனுமன் சமாதானம் செய்கின்றார் தாரையை. ஆனாலும் நிம்மதி அடையாத தாரை, வாலி இருக்கும்போது தனக்குக் கிடைத்த கெளரவம் இப்போது கிடைக்குமா எனச் சொல்லி, இனி அனைத்தும் சுக்ரீவன் வசமே, அவனே முடிவு செய்யட்டும் எனவும் கூறி அழுகின்றாள். மயக்கத்தில் இருந்து கண்விழித்த வாலி, தன் கழுத்துச் சங்கிலியைக் கழற்றிச் சுக்ரீவனிடம் கொடுத்துவிட்டு, தாரையை வெகு நுட்பமான அறிவு படைத்தவள் என்றும் எல்லாக் காரியங்களையும் எளிதில் புரிந்து கொள்பவள் என்றும், இனி சுக்ரீவன் அனைத்திலும் அவள் சொன்னபடி கேட்டு நடக்கவேண்டும் எனவும், கூறிவிட்டு அங்கதனை பெற்ற மகன் போலப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுத் தன் சங்கிலியில் வெற்றி தேவதை குடி இருப்பதாயும், இறந்த பின்னர் இந்தச் சங்கிலியை அணிந்தால் அந்தச் சக்தி போய்விடும் எனவும் இப்போதே அணிந்து கொள்ளுமாறும் கூறி இந்திரன் அளித்த சங்கிலியை சுக்ரீவனுக்கு அளித்துவிட்டு ஆசிகள் பல கூறிவிட்டு இவ்வுலகில் இருந்து நிரந்தரமாய் விடைபெறுகின்றான் வாலி.
உன்னைத் தண்டித்தது சரியே! மேலும் நீயோ ஒரு வானரன். அரசகுலத்தைச் சேர்ந்த நானோ வேட்டையாடி மிருகங்களைக் கொல்லும் சுபாவம் உள்ளவன், அந்த வகையில் பார்த்தாலும் மிருக இனத்தைச் சார்ந்த உன்னை நான் கொன்றது சரியே
ReplyDeleteதான் வந்த காரியத்தை மறந்து விட்டு வேறுமாதிரி நடந்ததால் ராமர் வாலியை தன்டிக்க நேர்ந்தது.திரு.கீரன் அவர்கள் இப்படி கூறுவார்.
ஒரு நாடகத்தில் நடிப்பவர் தன்னுடைய வசனத்தையும் பாத்திரத்தையும் மறந்து விட்டு தன் மனம்போனபடி நடந்தால் நாடகத்தை இயக்க்குபவர் அவரை லைட்டை அணைத்துவிட்டு மறைமுகமக அந்த நடிகரை கதையிலிருந்து வெளியேர்ரிவிடுவார் .அதைத்தான் ராமரும் செய்தார்